Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மழைக்கால மேகங்கள்!- 9

Advertisement

praveenraj

Well-known member
Member
"ஹே சரு எப்போ வந்த?" என்று கேட்ட வண்ணனைக் கண்டவள் தன் மனதில் இருப்பதை வெளிப்படையாகக் கேட்டும் விட்டாள்.

"அடுத்து என்ன பண்றதா இருக்கீங்க வேன்?"

"இப்போ தான் குளிச்சிட்டு வந்தேன். அடுத்தென்ன கொஞ்ச நேரம் டிவி பார்த்துட்டு சாப்பிட்டு தூங்குறது தான்..." என்றவனை நட்புடன் முறைத்தாள் சரிதா.

"என்ன கிண்டலா? நான் இப்போ என்ன பண்ணப் போறேன்னு கேக்கல. உன்னோட அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? நீயும் இங்க வந்து ஒரு மாசம் கடந்திடுச்சி. எனக்குத் தெரிஞ்சு காலையில எட்டு மணிக்கு எழுந்திருக்கற பிறகு ரெஃப்ரெஷ் ஆகிட்டு நல்லா அம்மா செஞ்சு வெக்கும் சாப்பாட்டை ஒரு பிடி பிடிச்சிட்டு தோட்டத்துக்குப் போயிடுற. மதியம் வரை அங்க பொழுதை ஓட்டிட்டு திரும்ப வீட்டுக்கு வந்து சாப்பிட்டு ஒரு தூக்கம். அப்பறோம் சாயுங்காலம் ஒரு குளியல். எதிர் வீட்டு சூர்யாவுக்கு கொஞ்ச நேரம் மேத்ஸ் சொல்லிக்கொடுக்குற. சாரி சாரி சொல்லிக் கொடுத்த. இப்போ ரெண்டு நாளா அதும் இல்ல. ஆனா வண்ணா எனக்குத் தெரிஞ்சு இந்த நிமிஷம் தன் வாழ்க்கையை செமயா என்ஜாய் பண்ணுற ஒரே ஆள் நீ தான்ப்பா. நான் ஏன் வண்ணனா பிறந்திருக்கக்கூடாது?" என்று மோவாயில் விரல் வைத்து பாசாங்கு செய்தாள் சரிதா.

"தாங்க மாட்ட... செத்துடுவ" என்று ஆனந்தம் மம்மூட்டி போல வண்ணன் பேச அதில் சிரித்தாள் சரிதா.

"எல்லோரும் ஊருக்கு வந்தா வெய்ட் போடுவாங்க. ஆனா நான் வெய்ட் குறைச்சிட்டு இருக்கேன் சரு. காலையில நாலு கிலோமீட்டர் நடக்குறேன். சாயுங்காலம் அரைமணிநேரம் ஸ்விம் பண்ணுறேன். எங்க என் உடம்பு குறைஞ்சிருக்கா சொல்லு?"

"நோ கமெண்ட்ஸ்" என்றவளை முறைத்தவன்,

"சீரியஸா கொறஞ்சிருக்கு. நான் வேணுனா என் பழைய பேண்ட் போட்டுக் காட்டுறேன். அட்லீஸ்ட் என் ஆறுதலுக்காகவாது எஸ் சொல்லியிருக்கலாமில்ல?" என்று அதை எண்ணி கவலை கொண்டான்.

"உன் கூடப் பேசுனாலே நான் சொல்ல வந்ததை மறந்திடுறேன். ஆக்சுவல்லி எனக்கு உன் ஹெல்ப் வேணும். வர சனிக்கிழமை நம்ம ஊர்ல ஐ கேம்ப் நடக்க போகுது. ஒரு பிரபலமான ஃபௌண்டேஷன் இங்க வந்து எல்லோருக்கும் ஃப்ரீயா கண் செக் பண்ணி டிஸ்கவுன்ட்ல டிரீட்மென்ட் பண்ணுறாங்க. சின்ன சின்ன பிரச்சனைக்கெல்லாம் ஃப்ரீ தான். கேட்டராக்ட் போன்ற ஆப்ரேஷனை எழுபது சதவீத டிஸ்கவுன்ட்ல பண்ணித்தறாங்க. அதிலும் குறிப்பா ஸ்கூல் போற பசங்களுக்கு தான் ஃபர்ஸ்ட் ப்ரிபரென்ஸ். இந்த சுத்துவட்டாரத்துல இருக்குற எல்லோரையும் வரச் சொல்லி தண்டோரா போடச்சொல்லி இருக்கேன். அதுக்கு நிறைய வாலண்டீர்ஸ் (தன்னார்வலர்கள்) தேவை. சோ சாரும் வந்தா நல்லாயிருக்கும்..." என்றவள் அவன் பதிலுக்காகக் காத்திருந்தாள்.

"நான் வரேன் சரிதா. உண்மையைச் சொல்லனும்னா எனக்கு இதெல்லாம் ரொம்ப புதுசு. என் காலேஜ்ல இருந்தே இது மாதிரி நிறைய நடக்கும். ஆனா இதுல எல்லாம் கலந்துக்காம ஒரு கேங்க் இருக்குமில்ல? அதுல நான் இருப்பேன். சோசியல் சர்வீஸுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். அநேகமா இது தான் என்னோட 'வாத்தியாரே ஃபர்ஸ்ட் மர்டரு' மொமெண்ட். ஐ அம் கமிங்..."

"வரும் கூட்டத்தைப் பொறுத்து லேட்டும் ஆகலாம். அப்பறோம் பாதியில எஸ் ஆகக் கூடாது பார்த்துக்கோ?"

"இவ்வளவு தான் என் மேல உனக்கிருக்கும் நம்பிக்கையா? உன்கூட வந்து நீ திரும்ப வீட்டுக்கு வரும் வரை உன் கூடவே இருப்பேன். சொன்ன சொல் மாறமாட்டான் இந்தக் கோட்டைச்சாமி" என்று வண்ணன் சொன்ன தொனியில் சரிதாவுக்கு சிரிப்பும் வந்தது.

"அப்பறோம் அடுத்த சனிக்கிழமை என்ன நாளுனு ஞாபகமிருக்கா?" என்றவளுக்கு இல்லை என்பதை உரைக்கும் விதமாய் ஒரு குழம்பிய பாவனையை வெளிக்காட்டினான் வண்ணன்.

"சென்னையில அந்த ஆர்பனேஜ் நடத்தும் ஃபங்ஷன் இருக்கு. நீங்க கண்டிப்பா வரணும் மிஸ்டர் வண்ணன். இது அந்த என்.ஜி.ஓ மெம்பரா நான் வைக்கும் அழைப்பு. அண்ட் நான் மட்டும் தனியா சென்னை போகணும். வெள்ளிக்கிழமை ஸ்கூல்ல ஒரு மீட்டிங் இருக்காம். எவ்வளவு கேட்டும் லீவ் கிடைக்கல. சோ எனக்குத் துணையா நீ வருவியா வண்ணா? இது ஒரு ஃப்ரண்டா நான் வைக்கும் கோரிக்கை..." என்றாள் சரிதா. அவனை விளையாட்டுக்குச் சீண்ட எண்ணி தான் மிக ஃபார்மலாய் அவனை அழைத்தாள். ஆனால் அதைக் கேட்டதும் வண்ணன் அன்றைய தன் நடவடிக்கையை எண்ணி வருத்தமடைய அதைக் காணப் பிடிக்காமல் இன்-ஃபார்மல் அழைப்பையும் அவனிடம் வைத்தாள்.

அதுவரை அவனிடமிருந்த சிரிப்பு மெல்ல மறைந்து ஒரு இறுக்கம் உண்டானது.

"வண்ணா ஐ வாஸ் ஜஸ்ட் கிட்டிங். இதுக்குப் போய் உம்முனு இருக்க? சியர் அப் மேன். உன்னால முடிஞ்சா இன்னும் சில வாலண்டீர்ஸ ஏற்பாடு செய். நான் கிளம்புறேன்" என்று அவள் சென்று விட்டாள்.

அதற்கடுத்த இரண்டாம் நாளில் தான் வண்ணன் அதைக் கவனித்தான். தினமும் சரவணனுடன் அமர்ந்து வீட்டுப் பாடம் எழுதும் சூர்யா கடந்த நான்கு தினங்களாக தூரிகாவுடன் கோவிலில் அவள் நடத்தும் கடைக்குச் சென்றுவிடுகிறான். முதலிரண்டு நாட்கள் இதைப் பற்றி அவளிடம் ஏதும் கேட்காத சரவணன் கூட மூன்றாம் நாள் தூரிகாவிடம் இதைப் பற்றிக் கேட்டுவிட,

"ஆமா அந்தக் கோவிலுக்கு என்ன திருப்பதி ஏழுமலையான் போலவா கூட்டம் வருது? நானே முக்கால் வாசி நேரம் கடையில சும்மா தான் உட்கார்ந்திருக்கேன். அதான் இவனையும் என் கூடவே கூட்டிட்டுப் போறேன். இவனுக்கும் ஹோம் ஒர்க் முடிச்ச மாதிரி ஆச்சு எனக்கும் டைம் பாஸ் ஆன மாதிரி ஆச்சு..." என்று சொன்ன தூரிகாவின் பேச்சில் அவளையும் அறியாமல் தடுமாற்றம் ஏற்பட்டது.

"அம்மாடி, உனக்கும் அந்தத் தம்பிக்கும் என்னமா பிரச்சனை?" என்று வெளிப்படையாகவே சரவணன் கேட்டுவிட,

"எங்க அவர் கூடச் சேர்ந்து இவனும் அவரை மாதிரியே" என்று தூரிகா முடிக்கும் முன்னே,

"தூரிகா! என்ன பேச்சிது? எதை வெச்சு அந்தத் தம்பியை நீ இப்படிக் குறைவா எடைபோடுற? அந்தத் தம்பி நல்லாப் படிச்சிருக்கு. நல்ல வேலையிலயும் இருந்திருக்கு. நல்ல புத்திசாலியான..."

"அப்பா, பெத்த அம்மாவையே புரிஞ்சிக்காம அவங்களை ஒழுங்கா மதிக்காத அந்த மனுஷன் மாதிரி நாளைக்கு என் பையனும் வளர்ந்திடக் கூடாது. போதுமா?" என்றவள் சூர்யாவை இழுத்துக்கொண்டு சென்றுவிட தன் வீட்டுத் திண்ணையில் இருந்த வண்ணனின் செவிகளில் இந்த வார்த்தை தெளிவாகவே விழுந்தது. சரவணன் தான் தற்போது தர்மசங்கடமான சூழலில் தள்ளப்பட்டார். இவனோ அவளுடன் சேர்த்து இவரையும் முறைத்தவாறு சென்றான்.

ஏனோ வண்ணனைப் பற்றி நினைக்கும் போதே அன்று குடித்துவிட்டு அவள் முன் நின்ற அவனது கோலம் தான் அவளுக்கு நினைவுக்கு வந்தது.

அங்கே வண்ணனோ தன்னை அவமானப்படுத்திய தூரிகாவை பழிதீர்க்க வேண்டுமென்று ஆவேசமாக யோசித்தான். அப்போது தான் அவன் சிந்தையில் அந்தக் கேள்வியே தோன்றியது. இதுநாள் வரை இதைப் பற்றி தனக்கு ஏன் எந்தச் சந்தேகமும் எழவில்லை என்று தன்னையே கடிந்துகொண்டவன் அவனது சந்தேகத்திற்கு விடை தேடி அலைந்துக் கொண்டிருந்தான். இதைப் பற்றி யாரிடம் எப்படிக் கேட்பது என்று யோசிக்க சூர்யாவின் வகுப்புத் தோழனான விக்னேஷ் அவன் கண்ணில் பட்டுவிட அவனை தனியே அழைத்தவன் சிறிது பேச்சுக் கொடுத்து விட்டு தன் சந்தேகத்தைக் கேட்டும் விட்டான்.

"ஆமா விக்னேஷ் நானும் ரொம்ப நாளாவே கேட்கணும்னு இருந்தேன். இந்த சூர்யாவோட வீட்ல அவன் அம்மாவும் தாத்தாவும் தானே இருக்காங்க. அவனோட அப்பா எங்க இருக்காங்க? உனக்கு அதைப் பத்தித் தெரியுமா?" என்றதும்,

"ஓ உங்களுக்குத் தெரியாதா? அவனுக்கு அப்பா இல்ல. அவங்க அப்பா செத்துப் போயிட்டாராம். அவன் பொறக்கறதுக்கு முன்னாடியே அவர் சாமி கிட்டப் போயிட்டாராம். அவனுக்கு ஒரு பாட்டி இருந்தாங்க. அவங்களும் சில வருஷத்துக்கு முன்னால செத்துப் போயிட்டாங்க. அவன் கிட்ட அப்பாவைப் பத்திக் கேக்காதீங்க. அவன் அழுவான். ஸ்கூல்ல பசங்கலாம் அவனுக்கு அப்பா இல்லைனு சொல்லி சில சமயம் வெறுப்பேத்துவாங்க. ஆனா அவன் ரொம்ப நல்லவன். எனக்கு அவன் பெஸ்ட் ஃப்ரண்ட்..." என்று விக்னேஷ் சொன்னதும் வண்ணன் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்துப் போனான். இருபத்தி ஒன்பது வயதடைந்த அவனே தன்னுடன் இருபத்தி ஒரு வருடம் வாழ்ந்த தந்தையை எண்ணி மருகும் போது பிறந்ததில் இருந்தே தந்தையின் முகத்தைக் காணாமல் அவரின் பாசத்தை உணராமல் வளரும் சூர்யாவை நினைக்கையிலே வண்ணனுக்கு அவன் மீதொரு அனுதாபம் ஏற்பட்டது. அதும் தூரிகா போலொரு தாயுடன் அவன் வளர்கிறான் என்று நினைக்கையில் அவனுக்கு சூர்யா மீது மேலும் கழிவிரக்கம் உண்டானது. ஆனால் அதே நேரம் இந்தச் சின்ன வயதில் கணவனை இழந்து குழந்தையுடன் வாழும் அவளை நினைக்கையில் ஒரு கணம் கிரிஜா பட்ட கஷ்டங்கள் எல்லாம் அவன் கண் முன்னே வந்து போனது. இப்போது யோசிக்கையில் ஏன் தன் அன்னை தூரிகாவிற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று புரிந்தாலும் தன்னைப் பற்றி முழுவதும் தெரியாமலே தன் மீது அவள் கொண்டிருக்கும் தவறான கற்பிதங்களை யோசிக்கையில் அவனுக்கு ஆத்திரமும் வந்தது. இன்னும் ஆழ்ந்து யோசிக்கையில் இதன் பொருட்டே சூர்யாவை தன்னுடன் அவள் ஒன்ற விட மறுக்கிறாள் என்று புரியவும் வண்ணன் மேலும் சினங்கொண்டான். அதே நேரம் அவள் எண்ணுமளவுக்கு தான் அவ்வளவு மோசமான மகனா என்ற கேள்வியும் அவன் சிந்தையில் உலாவத் தொடங்கியது.
ஒருமுறை கூட கிரிஜாவிற்கு தானொரு நல்ல மகனாக நடந்துகொள்ள வில்லையோ என்ற குழப்பத்துடன் வீடு திரும்பினான் பொன்வண்ணன்.

சூர்யாவைப் பற்றி அறிந்துகொண்ட வண்ணனுக்கு அடுத்த இரண்டு நாட்கள் முழுவதும் ஆழ்ந்த யோசனைகளிலே கடந்தது. முன்பெல்லாம் எதற்கும் கவலை படாமல் வருவதை வரும் போதே பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தவன் இங்கு வந்ததில் இருந்தே எப்போதும் ஏதாவது ஒன்றைப் பற்றிய யோசனையிலே நாட்களைக் கடத்துகிறான். அதிலும் குறிப்பாக இந்த இரண்டு நாட்களில் அவனிடம் நிறைய மாற்றங்களைக் கண்ட கிரிஜாவுக்குத் தான் வண்ணனைப் பற்றிய கவலை எழுந்தது. என்ன தான் தாயும் மகனும் பேசிக்கொள்ளா விட்டாலும் அவனது கவலை தோய்ந்த முகம் கிரிஜாவையும் கவலைக்கு உட்படுத்தியது. அவருக்கும் அவன் இங்கு வெட்டியாகப் பொழுதைக் கழிப்பதில் விருப்பமில்லை தான். ஆனால் கோவைக்குச் சென்றானேயானால் மீண்டும் பழையபடி மாறிவிடுவானோ என்ற பயமும் அவருள் இருந்தது. அது போக முப்பதை நெருங்கும் அவனுக்கு விரைவில் ஒரு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் யோசித்தார். திருமணம் என்றதும் அவருக்கும் நிஹாரிகாவின் முகம் தான் முதலில் வந்து போனது. அவருக்குத் தெரிந்தே வண்ணன் அவரிடம் உரிமையாகக் கேட்ட ஒரே விஷயம் நிஹாரிகாவுடனான திருமணம் தானே? ஆனால் அதைக் கூட அவனுக்கு நடத்திக் கொடுக்க முடியாத நிலைக்குத் தான் தள்ளப்பட்டுவிட்டோமே என்று நினைக்கையில் அவருக்கும் வருத்தம் தான்.

முன்பு தூரிகாவை வண்ணனுக்குத் திருமணம் செய்து வைக்கும் எண்ணத்தில் தான் அவரும் இருந்தார். அது வண்ணனும் கல்லூரி பயின்று கொண்டிருந்த காலம். இப்போது சூர்யாவுடன் அவள் தனித்துக் கஷ்டப்படுவதையும் அவளது எதிர்காலத்தை எண்ணி தன்னிடம் சரணவன் புலம்பும் வேளையிலும் கூட மின்னல் கீற்றென அவருக்குள் அந்த எண்ணம் வந்து மறையும். ஆனால் இதை வண்ணன் எப்படி எடுத்துக் கொள்வான் என்று நினைக்கையில் அந்த எண்ணம் கானலாகி போய்விடும்.

இன்றைக்கு இருக்கும் சூழலில் சரிதாவை வண்ணனுக்கு ஜோடியாக நினைத்துப் பார்க்கும் போது அவருக்கு அதொரு நிறைவைத் தருகிறது என்றால் அது பொய்யில்லை.
வெள்ளிக்கிழமை மாலை சரிதாவுடன் வெளியே சென்றவன் இரவு வீடு திரும்பவே பத்தைக் கடந்திருந்தது. நாளை நடக்கவிருக்கும் ஐ கேம்ப்பிற்காக வெள்ளிமலை பஞ்சாயத்தில் பேசி வெள்ளிமலை அரசுப் பள்ளியில் அனுமதி பெற்று அந்த கேம்பசை கேம்ப் நடத்துவதற்காக மாற்றம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. உள்ளூர் என்பதால் அனைத்துப் பொறுப்புகளையும் சரிதாவிடம் ஒப்படைத்த அந்த ஒருங்கிணைப்பாளர்கள் சென்றுவிட அவளுக்காக உடனிருந்து உதவினான் வண்ணன்.

"சரு, ஏன் நீ இப்படி இருக்க? எல்லோரும் உன் தலையிலே மொளகாய் அரைக்கிறாங்க. இது உனக்குப் புரியுதா இல்லையா? பத்து ஆகிடுச்சே ஒரு பொண்ணு கிட்ட எல்லா வேலையும் கொடுத்திட்டுப் போறோமே அவங்களோட சூழ்நிலை என்னனு கூடவா யாரும் யோசிக்க மாட்டாங்க?" என்று வண்ணன் கேட்டதும் ஒருகணம் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் சரிதா. அப்பார்வையின் அர்த்தத்தை முதலில் விளங்கிக்கொள்ள முடியாதவனுக்கு பின்பு புரிய,

"கொஞ்ச நாளுக்கு முன்னாடி வரை நீயும் அப்படித்தானே இருந்தனு நீ நினைக்குறது புரியுது. இருந்தாலும் திஸ் இஸ் நாட் ஃபேர் தெரியுமா?"

"வண்ணா, ஒரு வேலையை நாம கடமைக்குனு செய்யாம ஆத்மார்த்தமா நேசிச்சு செஞ்சா அது நமக்கு கொடுக்கும் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது தெரியுமா? ஐ லவ் திஸ். சோ எனக்கு இதுல எந்த ப்ராப்ளேமும் இல்ல..."

"வீட்ல அப்பாவும் தம்பியும் தனியா இருப்பாங்களே. அவங்களைப் பத்திய நினைப்பு இருக்கா மேடம்?"

"ஆக்சுவல்லா அவங்களுக்கும் இது பழகிடுச்சு. தூரி கடையில டிபன் வாங்கி அவங்க சாப்பிட்டு எனக்கும் வெச்சிருப்பாங்க. சோ அது பிரச்சனை இல்ல?"

"பெர்முடா ட்ரைஏங்கில் கேள்விப்பட்டிருக்கியா சரு?"

"அந்தப் பகுதியில போற கப்பல் விமானம் எல்லாம் மாயமாகிடுச்சினு ஒரு மித் இருக்கு. விஞ்ஞான வளர்ச்சியிலயும் விடை தெரியாத இருக்குற மர்மத்துல அதுவும் ஒன்னுன்னு சொல்லுவாங்க. அவ்வளவு தான் எனக்குத் தெரியும்"

"ஆக்சுவல்லி அது மித் இல்ல. நிறைய சயின்டிபிக் காரணங்களைக் கண்டு பிடிச்சிட்டாங்க. எப்படி இருந்தாலும் அது ஒரு டேஞ்சர் ஏரியா தான். அந்த முக்கோணம் போல தான் நம்ம மூணு பேர் வாழ்க்கையும் இருக்கு. நீ நான் தூரிகா. மூணு பேருமே சிங்கிள் பேரெண்டோட இருக்கோம். சூர்யாவையும் இதுல சேர்த்துக்கணும்..."

"இப்போ எதுக்கு இதைச் சொன்ன?"

"நம்ம மூணு பேர் லைஃப்பையும் யோசிச்சேன். அப்போ நமக்குள்ள இருக்குற ஒரு ஒற்றுமையை வெச்சு கோர்த்தா ஒரு முக்கோணம் உண்டாக்குமில்ல. அதைச் சொன்னேன்"

"அப்படிப் பார்த்தா இந்த முக்கோணத்துல நான் வரமாட்டேன் வண்ணா..." என்று சரிதா சொல்ல அவள் சொல்ல வருவதன் காரணத்தை வண்ணனும் புரிந்துகொண்டான்.

"சாரி சரு, உன்னை ஹர்ட் பண்ணனும்னு நான் இதைச் சொல்லல..." என்றவனுக்கு,

"எல்லாம் அவரவர் தலைவிதி. எனக்கு தூரிகாவை அவ்வளவு பிடிக்கும் தெரியுமா. அவங்க மேல எனக்கு அவ்வளவு மரியாதை இருக்கு. எங்க அம்மாவை எல்லாம் அவங்க கூட கம்பேர் பண்ணாத. காலையில ரெடியா இரு..." என்று அவள் சென்றுவிட வண்ணன் தான் தேவையில்லாமல் பேசி அவளை வருந்தவைத்து விட்டோமோ என்று வருந்தினான்.
மறுநாள் கேம்ப் வெற்றிகரமாகவே நடந்து முடிந்தது. நீண்ட நாட்கள் கழித்து தன்னுடைய ஒரு நாளை உபயோகரமாகச் செலவளித்தான் வண்ணன். அங்கு வரும் வயதானவர்களை எல்லாம் அழைத்து வந்து அவர்களுக்கு உடனிருந்து உதவி அனுப்பிவைத்து என்று அன்று முழுவதும் அவனுக்கு நிற்கவே நேரமில்லாமல் போனது. அந்த கேம்பிற்கு வந்த அரசி கிரிஜா தேனு ஆகியோர் கூட வண்ணனை ஆச்சர்யமாகப் பார்த்தனர். புன்சிரிப்புடன் சலித்துக்கொள்ளாமல் வந்தவர்களை எல்லாம் அவன் அணுகிய விதமே அவன் மாற்றத்தை அவர்களுக்குப் படம் பிடித்துக் காட்டியது.

சங்கரசரவணனிற்கும் சில மாதங்களாக பார்வையில் கோளாறு ஏற்பட்டிருக்க அதை மகளிடம் தெரிவிக்கலாம் என்று பல முறை முயன்றிருக்கிறார் தான். ஆனால் அவளே தனியாளாக உணவகத்தையும் கவனித்து(அவள் கடையில் அவள் தான் சமைக்க வேண்டும்) பூமாலை தொடுத்து சூர்யாவையும் கவனித்து கஷ்டப்படுவதைக் காண்கையில் அவளுக்கு மேலும் சிரமம் கொடுக்க விரும்பாமல் மறைத்து விட்டார். சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு ஏற்பட்ட விபத்தை ஒழுங்காக கவனிக்காத காரணத்தால் ஆறு மாதத்திற்கு முன்பு கிணற்றில் விழுந்தவருக்கு முன்பு போலிருந்த நடையும் பாதிக்கப்பட்டது. தூரியும் அவரை மருத்துவர்களிடம் காட்டிவிட்டாள் தான்.

அதற்கெல்லாம் சரிவராமல் இருந்தது ஒரு நாட்டு வைத்தியரிடம் காட்டியதும் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. இவரையும் மற்றவர்கள் போலவே தான் வண்ணன் பாவித்து அவருக்கு உதவினான். தன்னுடைய முறை வரும் வரை காத்திருந்தவரின் கவனத்தை மொத்தமாக ஈர்த்தான் வண்ணன். அவன் செய்கையையே கவனித்தவருக்கு தன் மகள் எண்ணுமளவுக்கு வண்ணன் மோசமில்லை என்ற எண்ணம் மட்டும் திண்ணமாய் இருந்தது.

இரவு அன்று உதவிய அனைவர்க்கும் தூரிகாவின் உணவகத்திலே உணவு சொல்லியிருக்க நீண்ட நாட்கள் கழித்து தன் சமவயதை ஒத்த பலருடன் அமர்ந்து கதை பேசியவாறு உணவுண்டான் வண்ணன். அவர்களில் பலர் சரிதாவின் நண்பர்கள் என்பதால் அவனுக்கும் நண்பர்களாக மாறியிருந்தனர்.

அவர்கள் தங்களுக்குள் தங்களின் படிப்பைப் பற்றியும் வேலையைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்க அப்போது அங்கே வந்த ஒருவரைக் கண்டு தூரிகா அதிகப்படியாக அவரைக் கவனிக்க அப்போது வண்ணன் தான் பணி செய்த சஞ்சீவி கன்ஸ்ட்ரக்சன்ஸ் பற்றி உரைத்தவன் தற்போது அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டதாகச் சொல்ல அவர் இவனையே சில வினாடிகள் உற்று நோக்கினார்.

அவரது பார்வையின் பொருள் உணர்ந்தவளாக அவனைப் பற்றி மேலோட்டமாக அனைத்தையும் தெரிவித்தாள்.

"தூரிகா நீ ஃப்ரீயா இருந்தா ஒருநாள் அந்தத் தம்பியை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வா மா..." என்றவர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் சென்றுவிட்டார். திடீரென அவர் அவ்வாறு உரைக்க தூரிகாவுக்கும் எதுவும் விளங்கவில்லை. வெள்ளி மலையை விட்டு சில கிலோமீட்டரில் இருக்கும் ஒரு ஊரில் தான் அவர் வசிக்கிறார். அவர் பெயர் வரதராஜன். வயது சுமார் எழுபது இருக்கும். இன்றைக்கு இந்தச் சுத்து வட்டாரத்தில் இருக்கும் அனைத்து கட்டிடங்களும் அனேகமாக அவர் வடிவமைத்துக் கொடுத்ததாகவே இருக்கும். பி.டபிள்யு.டி எனப்படும் பொதுப்பணித் துறையில் ஏ.இ ஸ்கொயராக(அசிஸ்டன்ட் என்ஜினீயர்) பணிபுரிந்து ஓய்வுக்காலத்தில் இருக்கிறார். மகனும் மகளும் அமெரிக்காவில் இருக்க மனைவி இருந்தவரை சில காலம் அங்கே கழித்தவர் தான். மனைவி இறந்தபிறகு அவருக்கு அங்கே இருக்க பிடிக்கவில்லை. பிள்ளைகளுக்கு இங்கே வருவதில் உடன்பாடில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் இவராகவே இங்கே வந்து விட்டார். தான் வாங்கியிருந்த தோட்டத்தின் நடுவே ஒரு வீடு கட்டிக்கொண்டு அதிலே தனக்கென்று ஒரு அலுவலகம் அமைத்து தூரிகாவின் சமையலில் நாட்களை ஓட்டிக்கொண்டுள்ளார். இந்த ஊரில் தூரிகா அதிகம் மதிக்கும் நபர்களில் இரண்டாவது முக்கியமானவர். முதலாம் நபர் யாரென்று நான் சொல்ல வேண்டுமா? இன்றைக்கும் கட்டிட பிளானுக்காக அவரைத் தேடி வருபவர்கள் ஏராளம். அதற்கென்று நான்கைந்து நபர்களை வைத்து பணி செய்துகொண்டுள்ளார். அவரிடம் பணிபுரியும் ஷாஜஹான் தான் அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தான். ஆனால் அவரிடம் பணி செய்வதை பெரும்பாலான இளைஞர்கள் விரும்ப மாட்டார்கள். அதற்கான காரணத்தைப் பிறகு பார்க்கலாம்.
ஏற்கனவே அவனுக்கும் தனக்கும் இருக்கும் வாய்க்கா தகராறில் மேற்கொண்டு அவன் கையைப் பிடித்து இழுக்க தூரிகா தயாராக இல்லை. அதே நேரம் அவனுக்கு இங்கு பணி கிடைத்துவிட்டால் கிரிஜாவுக்கு சற்று ஆறுதல் கிடைக்கும் என்று எண்ணினாள் தூரிகா. ஆனால் வண்ணனுக்கு இருக்கும் ஏட்டிடியூட் அவனது வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கடந்து வரதராஜனுடன் பணிபுரிய ஒப்புக்கொண்டு இங்கேயே வசிக்க வண்ணன் சம்மதிப்பானா என்பது பில்லியன் டாலர் கேள்வியாக அவள் முன்னே விரிந்தது.
வரதராஜன் சென்ற சில நிமிடங்களில் ஒரு புல்லட் அவள் கடையின் முன்பு வந்து நின்றது. அதைக் கண்டதும் சரவணனுக்கு மனம் பதைபதைக்க அதிலிருந்து இறங்கியவனோ தூரிகாவை நோக்கி வந்தான்.

அவனைக் கண்டதும் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விக்கத்து நின்றாள் தூரிகா. அவனை மூர்த்தி என்று சொல்வதைக் காட்டிலும் கந்துவட்டி மூர்த்தி என்று அழைத்தாள் பொருத்தமாக இருக்கும். தூரிகாவின் கழுத்தின் மேல் தொங்கும் மற்றோரு கத்தி தான் அவன். அவன் ஒன்றும் கொடூரமான மனசாட்சியற்ற வட்டிக்காரன் எல்லாம் இல்லை. ஆனால் தூரிகாவோ அவனிடம் மீள முடியாதபடியான ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறாள். இது சரவணனுக்கே தெரியாது என்பது தான் கொடுமை.
(மழை வருமோ?)
 
My father was AE in Vellimalai around 1979-80 before I was born. Never been there, but have seen it in his photos.
 
Top