Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாப்பிள்ளைக்கு வந்த யோகமடா‌ - 2

Advertisement

Viswadevi

Active member
Member
Friends Thanks for your lovely comments ? and support ❤️

1738


மா.வ.யோ - 2

அத்தியாயம் - 2

நந்தன் தன்னுடைய ஏமாற்றத்தை ஏற்க முடியாமல், அந்த பால்கனியில் நடை பயின்று கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு, அந்த பரந்து விரிந்த தோட்டத்தில், அவள் அடிக்கும் லூட்டிக்காக காத்திருக்க…

'அவளோ, பழசையெல்லாம் மறந்து விட்டாள் போலும்…' ம் என மனதிற்குள் நினைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டான். ஆனால் அவளுடைய துள்ளல், துடிப்பையெல்லாம் அவன் தான் கொன்று விட்டிருந்தான். அதை வசதியாக மறந்து விட்டிருந்தான்.

அவனது எண்ணவோட்டத்தை தடை செய்வது போல, அவனது கையிலிருந்த ஐ ஃபோன் இசைத்தது.

பழைய நினைவுகளில் இருந்து மீண்டவன், தன் ஃபோனில் கவனத்தை செலுத்த… மாம் காலிங் என மினுமினுத்தது.

அதைப் பார்த்தவன், புருவ சுழிப்புடன் எதுக்கு மாம் கால் பண்ணுறாங்க என்று யோசனையுடன் ஆன் செய்ய…

அந்தப்புறமிருந்தோ, "கண்ணா… உனக்காக எல்லோரும் வெயிட் பண்ணுறாங்க… சாப்பிட வாப்பா…" என ஜானகி கூற…

அதைக் கேட்டவுடன் பதறி மணியைப் பார்க்க… ஒன்பது ஆகி பத்து நிமிடம் கடந்து இருந்தது.

ஓ… காட்… என தலையில் தட்டிக் கொண்டவன்… விறுவிறுவென அறைக்குள் நுழைந்தான், பின் கீழே இறங்கினான்.

அவர்கள் வீட்டின் ரூல், அனைவரும் காலை உணவு ஒன்றாக அருந்த வேண்டும். அதனால் சரியாக ஒன்பது மணிக்கு ஆஜராக வேண்டும். சற்று தாமதம் ஆனாலும் அவரது தந்தைக்கு கோபம் வந்துவிடும்.

எல்லாவற்றிலும் பர்ஃபெக்டா இருக்கும் நந்தன், அதை சரியாக கடைப் பிடிக்க… திருமணம் ஆனதிலிருந்து அவனின் கோட்பாடுகளும் ஆட்டம் காண ஆரம்பித்தது‌.

அவனின் சகி, ஒரு நாளும் நேரத்தோடு எழுந்தது இல்லை. இவனும் ஒவ்வொரு நாளும் இந்த வீட்டின் ரூல்ஸ்ஸை சொல்லி, சீக்கிரம் எழுந்திருக்குமாறுக் கூற…

அவளோ, சரி சரி என தலையாட்டிவிட்டு, தன்போக்கில் தாமதமாகத் தான் எழுவாள்.

திருமணம் முடிந்து, மறுவீடு சடங்கு, உறவினர் வீட்டு விருந்து எல்லாம் முடிந்து, வீட்டில் இருக்கும் பதினைந்து நாட்களாக, இருவரும் தாமதமாக தான் காலை உணவிற்கு செல்வது.

வீட்டில் உள்ளவர்களின் கேலிப் பார்வை சகிக்க முடியாமல், ஹரிணியிடம் சண்டையும் போட்டாயிற்று… ஆனாலும் அவள் பழக்கத்தை மாத்தவே இல்லை.

இன்றாவது நேரத்தோடு செல்வோம் என்றுப் பார்த்தால், கனவில் மூழ்கிவிட்டோம், என்று நினைத்தவன் படிகளில் தடதடவென இறங்க…

இவனது வேகத்தைப் பார்த்து, எல்லோரும் அவனை விசித்திரமாகப் பார்த்தனர்.

அவர்களது பார்வையை அலட்சியம் செய்து விட்டு, தன் தந்தையின் அருகே அமர்ந்தவன்… "சாரி டேட்." என முணுமுணுக்க…

கோபத்தோடு ஏதோ கூற வந்த சதாசிவம் அவனது முகத்தைப் பார்த்தவுடன் அடக்கிக்கொண்டு அமைதியாக உணவு அருந்த ஆரம்பித்தார்.

அப்பாடா என ஜானகி பெருமூச்சு விட்டுக் கொண்டாள். கிருஷ்ணா எதையும் கவனித்துக் கொள்ளாமல் அமைதியாக இருக்க… யாமினியோ, சும்மா இராமல், நந்தனை வம்பிழுக்க ஆரம்பித்தாள்.

"என்ன கொழுந்தனாரே, இன்னைக்கும் லேட்டா?. தங்கச்சி தான் இல்லையே, அப்புறம் என்ன? " என நமட்டு சிரிப்புடன் வம்பிழுக்க...

நந்தனோ, வந்த கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, தன் தாயையும், தந்தையும் பார்க்க… அவர்களோ, சிரிப்பை அடக்கிக் கொண்டு கண்டும் காணாததுப் போல் உணவருந்திக் கொண்டிருந்தனர்.

ஏதாவது யாமினியை சொல்லுவோம் என்றால், அவ்வளவுதான் தன் தந்தை சாமியாடிடுவார். அவருடைய தங்கைப் பெண், இந்த வீட்டிற்கு வாழ வந்த மகாலட்சுமி. யாரும் அவளை ஒரு வார்த்தை சொல்லி விட முடியாது.

சரி தான் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு எடத்தை காலி செய்வோம் என்றுப் பார்த்தால், அதற்கு விடாமல் கொழுந்தனாரே சட்னியை நகர்த்துங்க… கொழுந்தனாரே சாம்பாரை நகர்த்துங்க... என்று அவனுக்கு பிடிக்காது என்று தெரிந்து கொழுந்தனாரேவில் அழுத்தம் கொடுத்து, அட்டகாசம் செய்து கொண்டிருந்தாள்.

அருகில் அமர்ந்து இருந்த தன் அண்ணனைப் பார்த்தான். இந்த உலகத்திலே அதிமுக்கியமான வேலை உணவு அருந்துவது தான் என்பதுபோல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

மெல்ல அவனருகில் குனிந்து," டேய் கிருஷ்ணா, உன் பொண்டாட்டிய கொஞ்சம் வாயைமூடச் சொல்லு… அப்புறம் கோபத்துல எதாவது சொல்லிடப் போறேன்."

"டேய் நந்தா… அவ உனக்கு அண்ணி டா..‌. கொஞ்சம் மரியாதை கொடுடா…"

"கிருஷ்ணா, என்னோட இரண்டு வருடம் பெரியவன் நீ, உன்னையே பேர் சொல்லி தான் கூப்பிடுறேன்.

உன் பொண்டாட்டி என்னைய விட சின்னவ... அப்படியெல்லாம் மரியாதை தர முடியாது. அதுவும் இல்லாமல் உனக்கு மனைவி ஆவதற்கு முன்பே எனக்கு அத்தை மகள். நான் எப்போதும் வா, போ‌ என்று தான் பேசுவேன்.இப்ப உனக்காக எல்லாம் என்னோட பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியாது."

"ஓஹோ… அப்ப யாமினிக்கிட்ட மட்டும், ஏன் கொழுந்தனாரு என்று மரியாதை இருக்கா என்று சண்டை போட்ட? அதனால் தானே அவ, இன்னமும் உன்னை வம்பு இழுக்குறா? அதுமட்டுமா, வாகினியோட அவ சண்டை போடும் போது நீ ஏன் தம்பி தலையிட்ட? உனக்கு இரண்டு பேரும் ஒன்று தானே?"
என கிருஷ்ணன் சராமாரியாக கேள்விக் கணைத் தொடுக்க…

நந்தன் ஒன்றும் கூறாமல் அதிர்ந்து பார்க்க…

கிருஷ்ணாவோ, " என்ன பார்க்கிற… நானும் ஆரம்பத்தில் இப்படி தலையிட்டு தான், நிறைய பிரச்சினைகளை சந்தித்தேன். இப்போ தான் எனக்கே புரியுது. உனக்கும் போகப் போக புரியும். இப்போ டைமாயிடுச்சு, கடைக்கு கிளம்பு‌." என…

யோசனையுடன் இருந்த நந்தன், சுற்றிலும் பார்க்க…

எல்லோரும் எப்போதோ, எழுந்து சென்றிருந்தனர். தங்களுக்குள்ளே இருவரும் மெதுவாக பேசிக் கொண்டிருப்பதைக் பார்த்து, இவர்களை திருத்த முடியாது என சதாசிவம் தலையில் அடித்துக் கொண்டு செல்ல…

ஜானகியோ, இவர்கள் இருவரையும் புரியாத பார்வைப் பார்த்துக் கொண்டே தன் கணவரின் பின்னால் சென்றார்.

யாமினியும், வாகினியும் சிரித்துக் கொண்டே அந்த இடத்தை காலி செய்தனர்.

யாரும் இல்லாததை கண்ட நந்தன், தோளைத் குலுக்கிக் கொண்டு தனதறைக்கு சென்றான். அவனுக்கு நிறைய யோசிக்க வேண்டிருந்தது.‌ ஆனால் இப்போது அதற்கு நேரம் இல்லை, கடைக்கு தாமதம் ஆகிவிட்டது என்று அரக்க பறக்க கிளம்பினான்.

அப்போதே நந்தன் யோசித்திருந்தால், மேலும், மேலும் அவனது வாழ்க்கையில் பிரச்சனை வந்திருக்காது.

நந்தன் டி. நகரில் உள்ள மெயின் ப்ராஞ்ச் நகைக்கடைக்கு சென்று, தனது வழக்கமான வேலைகளில் கவனத்தை செலுத்தினான். அவ்வப்போது வேறு கிளைகளில் உள்ள கடைகளையும், தனது ஃபோனில் உள்ள வெப் கேமரா மூலம் மேற்பார்வை பார்த்துக் கொள்வான்‌.

கடைக்கு சென்று விட்டால், அவனுக்கு வேறு எதிலும் கவனம் செல்லாது. அங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாக கவனிக்க வேண்டும். சிறிய அலட்சியமும், பேரிழப்புக்கு வழிவகுக்கும் என்பதால், ரொம்ப கவனமாக இருப்பான். அநாவசியமாக யாரு ஃபோன் செய்தாலும் அவனுக்கு பிடிக்காது‌. அதற்கு தகுந்தாற்போல் குடும்பத்தினர் நடந்துக் கொள்வார்கள்.

இங்கோ, தூங்கி எழுந்த ஹரிணி வீட்டை ரெண்டாக்கிக் கொண்டிருந்தாள். அவள் அரவிந்த் மேல் கொண்ட கோபத்தையெல்லாம் மறந்து விட்டு, மங்கையை சமைக்க விடாமல் படுத்திக் கொண்டிருந்தாள்.

தூங்கி எழுந்தவள், முகம் கழுவிக் கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தாள்.

அங்கு பிசியாக சமைத்துக் கொண்டிருந்த மங்கையைப் பார்த்து, "மா ...நான் சமைக்கவா?"

மகளின் கேள்வியில் முகமெல்லாம் விகசிக்க… "ஏன் டா தங்கம், இங்க இருக்கும் போது கிச்சன் பக்கமே வரமாட்டே‌…இப்போ என்னவென்றால் சமைக்கிறேன் என்று சொல்லுற… அங்கப் போன கொஞ்சம் நாளில் சமையல் எல்லாம் கத்துக்கிட்டியா?. அண்ணி செம்ம பாஸ்ட் தான் போல… "

"அம்மா… அத்தையெல்லாம் ஒன்றும் சொல்லித் தரவில்லை. நான் யூட்யூப் பார்த்து தான் செய்யப் போறேன் என சிணுங்க…"

"சரிடா… என்ன செய்யலாம் என்று இருக்க …"

"அதுமா, நூடுல்ஸ் செய்யலாம் என்று இருக்கிறேன்."

அது வரை சமையல் செய்வதை விட்டுவிட்டு, தன் மகளிடம் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தவரை நொந்து நூடுல்ஸ்ஸாகினாள் ஹரிணி.

"என்னமா ஒன்றும் கூறாமல் போறீங்க?."

"பாப்பா… எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு… இப்ப என்ன தொந்தரவு செய்யாதே… நான் சமைச்சிட்டு போனதுக்கப்புறம் நீ, லதாவை உதவிக்கு வச்சிக்கிட்டு என்ன வேண்டும் என்றாலும் செய்… இப்போ என்னை ஆள விடு."

"என்னம்மா, இப்படி பண்றீங்களே… என் சமையல் திறமையை நிரூபிக்க விடமாட்டேங்கிறீங்களே," என்றுக் கூறியவள், அங்கிருந்த மேடையில் ஏறி அமர்ந்து கொண்டு, அருகிலிருந்த வெங்காயத்தை எடுத்து தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தாள்.

திடீரென்று ஞாபகம் வந்தவளாக
"மா… அப்பா, அண்ணா எல்லாம் எங்கே?" என வினவ.

"கடைக்கு போயிட்டாங்க டா…"

"ஓ… அப்பா, லேட்டா தானே மா கடைக்கு போவாங்க… இன்னைக்கு ஏன் சீக்கிரம் போயிட்டாங்க… எங்கேயும் பர்ச்சேஸ்க்கு போறாங்களா?"

" அதெல்லாம் இல்லம்மா… ரொம்ப நாள் பிறகு, இப்ப தானே கொஞ்ச நாளாக கடைத் திறக்கிறார்கள்‌. நிறைய பாதுகாப்பு இஸ்யூஸ்ஸெல்லாம் இருக்கு… அதனால் அப்பாவும் இப்பவெல்லாம் காலையிலேயே நேரத்தோடு அண்ணன் கூடவே சென்றுவிடுகிறார்."

ஓ… என்றவள்," மா நெக்ஸ்ட் வீக் என் பர்த்டே வருதே ஷாப்பிங் போகலாமா"என தாயைப் பார்த்து வினவ…

"நீ அண்ணாவோடப் போ… அம்மாக்கு உன்னோட ஷாப்பிங் வருமளவிற்கு பொறுமை இல்லைடா…"

"அம்மா… " என்று முறைத்தவள், பிறகு" நீ ஒன்னும் வர வேண்டாம். நான் எங்க அண்ணனோடவேப் போயிக்கிறேன்".

"சரிடா… என்னோட வேலை முடிந்து விட்டது, நீ சமைக்கலையா?"என புன்சிரிப்புடன் வினவ...

"நான் இன்னொரு நாளைக்கு மேகியை சமைத்து சாப்பிட்டுக்கிறேன். இப்ப என்ன டிபன் இருக்கிறதோ, அதை எடுத்து வை மா… இதோ அண்ணணுக்கு ஃபோன் பண்ணிட்டு வந்துடுறேன்." என்றவள் துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடினாள்.

அப்பாடா என்ற மங்கை, மகள் சொன்னப்படி, அவளுக்கு டிபன் எடுத்து வைத்தாள் நிம்மதியாக...

உள்ளே சென்றவளோ, ஃபோனை எடுத்து தன் அண்ணனுக்கு கால் செய்ய…

அரவிந்தோ, தங்கையிடமிருந்து ஃபோன் வரவும் பதறியடித்து, ஹலோ என…

ஹரிணி, தன் வழக்கம் போல, " டேய் அண்ணா."என அன்பாக அழைக்க…

அவளது அழைப்பில், அரவிந்தனது பதற்றம் குறைந்து புன்னகை மலர, "சொல்லுடா குட்டிமா… என்ன இந்த நேரத்தில ஃபோன் பண்ணியிருக்க… டிஃபன் சாப்பிட்டியா?" என.

"இதோ,இப்ப தான் டிபன் சாப்பிட போறேன். அதற்கு முன்னாடி நான் எதுக்கு போன் பண்ணேன் என்று சொல்லிடுறேன்
எனக்கு பர்த்டே வரப்போகுது தெரியும்ல… அதுக்கு ட்ரெஸ் வாங்கணும், அப்புறம் சில குர்தி, டாப்ஸ், ஜீன்ஸ் எல்லாம் வாங்கணும்ணா… ஈவினிங் ஷாப்பிங் பண்ணலாம்ணா… ப்ளீஸ்ணா… "

"அதுக்கு ஏன் இப்படிக் கெஞ்சுற… உனக்கு எப்போ வரணும் தோனுதோ, அப்ப ட்ரைவரோட நம்ம கடைக்கு வா… உனக்கு வேண்டியது எல்லாம் வாங்கிட்டு போ.‌‌.. இதுக்கு ஏன் பர்மிஷன் கேட்க்குற…"

காதிலிருந்து ஃபோனை எடுத்து முறைத்தவள், பின் தலையை தட்டிக்கொண்டு, மீண்டும் ஃபோனை காதிற்கு கொடுத்தவள்," ஐயோ! அண்ணா… நான் நம்ம கடைக்கு வரல, ஏதாவது ஷாப்பிங் மால் போகலாம்ணா…"

"ஏன் டா… எப்பவும் நம்ம கடைக்கு தானே வருவ? இப்போ என்ன புதுசா ஷாப்பிங் மால் போகணும் என்று சொல்லுற?" அரவிந்த் சந்தேகத்துடன் கேட்க…

"அது வந்துணா… நான் நல்ல கடையில் பர்ச்சேஸ் செய்யணும்னு நினைக்கிறேன், அது தப்பா? ஏன் உன்னுடைய கார்டை ரொம்ப தேச்சிடுவேன் என்று பயப்படுறீயா…
பயப்படாதே மேன் என்னோட கார்டையும் எடுத்து வரேன்."என்றுக் கூறி பேச்சை மாற்ற‌…

அரவிந்தும் சிரித்துக் கொண்டே, "ஓகே, ஓகே. ஈவினிங் சிக்ஸ்'ஓ க்ளாக் ரெடியா இரு… நான் வந்துடுறேன்… இப்போ வேலை இருக்கு, பை."என வைத்து விட….

இங்கு ஹரிணியோ, அப்பாடா என பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.
இதுநாள் வரை தந்தையின் கடை என உரிமையோடு சென்று வந்தாள்.

ஆனால் இன்றோ, தன் கணவருக்கும் உரிமை உள்ள கடையில், உரிமையாக எடுத்துக் கொள்ள மனம் வரவில்லை.
அவள் தயக்கத்துடன் இருக்க… அவன் கணவனோ, இவளது தயக்கத்தைக் கண்டு கோபத்தில் குதிக்கப் போகிறான்.

தொடரும்…..
 
Top