Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரகு, ஒரு பள்ளி மாணவனின் கதை

Advertisement

Joyram

New member
Member
பால் குடித்து கெரஸினும் குடித்த குழந்தை

ரகு அப்போது இரண்டு வயது குழந்தை. (பின்ன இரண்டு வயதில் கிழவனாகவே இருப்பான் ). அப்போதெல்லாம் கெரசின் ஸ்டவ் தானே. ரகுவுக்கு கெரசின் வாசனை என்றால் மிகவும் பிடிக்கும். (உயர்ந்து இப்போது உயர்ந்த மனிதனாகிய பின்னும் இப்போது கூட கெரசின் வாசனை அவனுக்கு பிடிக்கும் தான். குறிப்பாக கெரசின் ஸ்டவ்வை அணைக்கையில் வரும் அந்த ஒரு நறுமணம் எவ்வளவு சுகமாக இருக்கும் தெரியுமா மூக்குக்கு! (அட, ரகுவின் மூக்குக்கு, உங்க மூக்குக்கு என்று சொல்லவில்லை. மூக்குக்கு மேல் கோபம் வேண்டாம் ). ஒரு முறை சமயலறையில் கொஞ்சம் கெரசினுடன் ஒரு க்ளாசில் காக்கடா(கெரசின் ஸ்டாவை பத்த வைக்க பயன்படுத்தும் சின்ன வலைகள் கொண்ட கைக்கருவி) இருந்தது. அப்போது பக்கத்தில் யாரும் இல்லை. குழந்தை ரகு காக்கடாவை வாயில் வைத்து சுவைக்க ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் வாந்தி எடுத்தான். அப்போது தான் அவன் அம்மா காக்கடா ரகு கையில் இருப்பதை கவனத்தினாள். உடனே அவன் பெரிய அண்ணனுக்கு ( அவன் அப்பாவின் முதல் சம்சாரத்தின் பெரிய மகன்) ரகுவின் தாய் இதை சொல்லி உடனே அவனுடன் ரகுவை குடும்ப டாக்டரிடம் கூடி சென்றார்கள். அவரிடம் நேரத்தில் ரகுவின் உடல் கொஞ்சம் நீலம் பூத்துவிட்டது . அந்த டாக்டர் அவன் அம்மாவிடம் " நீங்கள் பயம் கொள்ளாமல் , கொஞ்சம் கூட தாமதிக்காமல் உடனே இவனை அரசாங்க பெரிய ஆஸ்பத்திரிக்கு கூடி செல்லுங்கள்" என்று சொன்னவுடன் பதைத்துப்போன அவன் அம்மா பெரிய அண்ணனுடன் ஒரு ஆட்டோ எடுத்துக்கொண்டு ரகுவை அரசாங்க பெரிய ஆஸ்பத்திரி கூட்டி சென்றார்கள். அவனை எமெர்சென்சி ( emergency ) பிரிவில் அட்மிட் செய்து அங்கே டாக்டர் ஒருவர் அவனை சோதித்து விட்டு பின்னர் கொஞ்சம் மயக்க மருந்து கொடுத்துவிட்டு அதன் பிறகு ஒரு சிறிய டியூபை அவன் வயிற்றுக்குள் அனுப்பி உள்ளிருந்த கொஞ்சம் கெரஸினை வெளியே எடுத்தாராம். அதன் பிறகு இரண்டு மணிக்கு பிறகு தான் ரகு கண் திறந்து பார்த்தான். இந்த நேரத்தில் அவனுக்கு என்ன ஆகுமோ என்று அவன் அம்மாவும் பெரிய அண்ணனும் மிகவும் கவலையாய் இருந்தார்கள். ரகுவுக்கு எப்படி தெரியும் கெரசின் குடிப்பது ஒரு சின் (sin) என்று? (கெரசின் குடிப்பது ஸின் ஆனால் ஜின் குடிப்பது ஸின் இல்லை என்று சொல்லும் சில தண்ணீர்பட்ட அறிவாளிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் )

முதல் வகுப்பில் வாங்கிய கிள்ளுகள்

ஆறு வயதில் தான் ரகுவை முதல் வகுப்பில் சேர்த்தார்கள் ( அப்போதெல்லாம் இந்த LKG , UKG எல்லாம் இல்லை. அதெல்லாம் வீட்டிலேயே தான். ஐந்து வயது வரை வீட்டில் சுதந்திர பறவையாக இல்லாவிட்டாலும் சேட்டை பையனாக வீட்டிலேயே பொழுதை கழித்தான் ரகு ). அவன் அண்ணன் இரண்டாவது படித்துக்கொண்டிருந்தான் அதே பள்ளியில். அப்போது அடிக்கடி நிகழ்ந்து வந்த ஒரு சுவையான சம்பவம் என்னவென்றால் அண்ணனுடன் தான் ரகு பள்ளி சென்று வருவான் . ரகு அண்ணனுடன் மௌனமாக செல்லவேண்டும். ஏதாவது என் வாய் திறந்து பேசினால் அவன் ரகுவை கிள்ளி விடுவான். ஆமாம், நெஜம்தானுங்க. அதுவும் அப்பப்போ நல்லா நறுக்குன்னு கிள்ளி உட்டுடுவான். ரகு அவன் அண்ணனுக்கு ஒரு கிள்ளு கீரை போல. அதனால் தானோ அடிக்கடி அவனை கிள்ளி விட்டு கொண்டிருப்பான். ரகு , பாவம், அண்ணனிடம் பயந்து கொண்டு குறைவாக அவனுடன் பேசியும் அதிகமாக கிள்ளுங்கள் வாங்கி வந்தான். (உங்களுக்கு கூட சின்ன வயதில் நிச்சயம் இந்த மாதிரி ஏதாவது கிள்ளு அனுபவம் நிச்சயமாக இருக்கும்). ரகுவின் நல்ல காலம் , அவனை வகுப்பில் ஆசிரியர் ஒரு முறை கூட கிள்ளியது இல்லை , அடித்ததும் இல்லை.(ஒன்றும் அறியாத சின்ன பிள்ளையை யார் தாங்க அடிப்பாங்க?). இப்போதும் அண்ணன் ரகுவை கையால் இல்லாமல் சொல்லால் எப்போதேனும் கிள்ளி விடுவான், வருடத்தில் ஓரிரு முறை, ரகு குடும்பத்தினர் சந்திக்கையில். ரகு தம்பி அவன் அண்ணன் என்ற பெருமிதம் அவனுக்கு எப்போதும் உண்டு. எனவே அண்ணன் சொல்வதை தம்பி கேட்கவேண்டும் என்பதில் அவன் மிகவும் கறார்.

நாலாவது வகுப்பில் பாட வாய்ப்பு பெற்ற ரகு

ரகுக்கு சினிமா பாடல்கள் என்றால் மிகவும் விருப்பம். அவன் வீட்டில் அந்த வருடம் தான் வானொலி பேட்டி வாங்கினார்கள். அதற்கு முன்பு ரகு அக்கம் பக்கத்துக்கு வீட்டில் வானொலியில் திரைகானம் ஒலிக்கும்போது வெளியே ஓடி சென்று காது கொடுத்து கேட்பான். அவன் நான்காவது வகுப்பு படிக்கையில் ஒரு நாள் வெளியே நல்ல மழை பெய்தது. எனவே அன்று மதியம் பள்ளி விடுமுறை என்று அறிவிப்பு வந்ததும் அவன் வகுப்பாசிரியர் அவர் மாணவர்களிடம் " இன்னும் 45 நிமிடங்களில் நீங்கள் சந்தோஷமாக வீட்டிற்கு செல்லலாம். மதியம் பள்ளி விடுமுறை. நடுவில் மழை விட்டிருக்கும்போது நனையாமல் பத்திரமாக வீடு போய் சேருங்கள்." என்று சொன்னவுடன் எல்லா மாணவர்களும் கை தட்டி மகிழ்ந்தார்கள். அப்போதிருந்த நிலையில் பாடம் நடத்துவது உசிதம் அல்ல என்று உணர்ந்த வகுப்பாசிரியர் " இருப்பது இன்னும் 35 நிமிடங்கள் தான். இப்போது உங்களில் யார் யார் இங்கு வந்து வகுப்பின் முன்பு பாட விரும்புகிறீர்கள்?" என்று கேட்டபோது மாணவர்கள் ஆனந்த கூக்குரலிட்டனர் .சிலர் கையை தூக்கினார்கள் ( அடிப்பதற்கு இல்லைங்க, நான் பாடுகிறேன் என்று தெரிவிக்க ). மூன்று மாணவர்கள் சென்று பக்தி மற்றும் திரை இசை பாடல்களை பேசி பாடினர். வகுப்பாசிரியர் ரகுவை பார்த்து " இவ்வளவு உற்சாகமாக தாளம் தட்டி கொண்டு ரசிக்கிறாயே, நீயும் வந்து ஒரு பாடல் பாடலாமே." என்றவுடன் ஊக்கம் கொண்ட ரகு உடனடியாக சென்று ஒரு திரை பாடலை பாடினான். ஆசிரியர் உட்பட மாணவர்கள் அனைவரும் அந்த பாடலை ரசித்து அவனை கை தட்டி பாராட்டினார்கள். அப்போது சிறிய அளவில் உதித்து மறைந்த இசை என்னும் ஒளி ரகுவிடம் மீண்டும் அவன் 30 வயதானவுடன் தான் ஒளிர்ந்தது. நான்காம் வகுப்பில் பாடிய பின்னர் ஏனோ ரகு பாடுவதை விரும்பவில்லை. ஆனால் பாடல்களை விரும்பி கேட்பான். பின்னாட்களில் அவன் படிப்பை முடித்து உத்தியோகம் பார்க்கும் போது அவனுடைய ஒரு மராட்டிய நண்பர் ரகுவிடம் நல்ல குரல் ஒளிந்திருப்பதை எப்படியோ கண்டு கொண்டு, அவனுக்கு கொஞ்சம் பயிற்சி கொடுத்து, அவனை மீண்டும் மேடையில் பாட வைத்தார். அதன் பின்னர் ரகு அவ்வப்போது நடக்கும் அலுவலக நிகழ்ச்சிகளில் பாடி வந்தான்.( கூட்டத்தை கூட்டவும் , கலைக்கவும்)

கணக்கில் புளி
அவன் ஆறாம் வகுப்பு படிக்கையில் ஆங்கில ஆசிரியர் அனைத்து மாணவர்களிடமும் தினமும் நாலு வரி நோட் புத்தகத்தில் ஏதாவது ஆங்கில புத்தகத்திலிருந்து ஒரு பக்கம் ஆங்கிலம் அழகாக எழுதி வர சொல்லுவார். ரகு பலமுறை பொறுமை இல்லாமல் அந்த நாலு வரி நோட் புக்கிலும் வேகவேகமாக ஆங்கிலத்தை கிறுக்கி எழுதி எடுத்து செல்வான். ஆங்கில ஆசிரியர் மறந்து போய் எப்போவாவது குட் என்று போட்டிருக்காரே தவிர bad என்றோ என்னை அதற்காக திட்டியதோ இல்லை. அதனால் தான் போலிருக்கு ரகுவின் கையெழுத்து அவனுக்கே அவ்வப்போது புரியாத மாதிரி.

கணக்கில் 98 மதிப்பெண்கள் பெற்றான் ( ஹி ஹி ஹி, கோட்டை விட்டான்)

கணக்குக்கும் ரகுக்கும் எப்போதுமே ஒரு இனம்புரியாத நேசமும் பகைமையும். ஏழாவது வகுப்பு படிக்கையில் ஒரு பரீட்சையில் கணக்கில் நூற்றுக்கு இரண்டு மதிப்பெண்கள் பெரும் பேரை அவன் பெற்றான். அந்த முறை ரிப்போர்ட் கார்டை அவன் அப்பாவிடம் காட்டியபோது, பளார் பளார் என்று கன்னத்தில் இரண்டு கிடைத்தது( நல்ல வேளை, ரகு பத்து மதிப்பெண்கள் வாங்கியிருந்தால் பத்து அறையல்லவா விழுந்திருக்கும், அதிலும் ரகுவுக்கு அதிருஷ்டம், இரண்டே மதிப்பெண்கள் வாங்கியதால் ). ரகு இந்த ரகசியத்தை அவனுடைய நெருங்கிய ஒரு சில நண்பர்களுக்கு மட்டுமே சொன்னான். அப்போது அவன் நண்பனிடம் சொல்வான்" டேய், நான் 2 மார்க் கணக்கில் வாங்கியதை யாரிடமும் சொல்லாதே, அப்புறம் என் மானம் டைட்டானிக் கப்பல் ஏறிடும். அப்புறம் அதோடு மூழ்கி போய்விடும். எதற்காக இந்த வம்பெல்லாம்?. அதன் பிறகு கூட உயர் நிலை பள்ளியில் கணக்கில் ரகு 60 மதிப்பெண்கள் தாண்டியது கிடையாது. ஆனால் PUC (PRE UNIVERSITY COURSE ) படிக்கையில் ரகு கணக்கில் 200 க்கு 190 எடுத்ததும் உண்மை தானுங்க.

ஆங்கிலத்தில் 74 மதிப்பெண்கள் ஆனால் கிடைத்தது 78 மதிப்பெண்கள்

ரகு எட்டாவது வகுப்பில் படித்துக்கொண்டிருக்கையில் ஒரு தேர்வில் மிதிப்பிடப்பட்ட ஆங்கில பதில் தாளை ஆங்கில ஆசிரியர் வகுப்பில் எல்லா மாணவர்களுக்கும் கொடுத்தார். ரகுக்கு தரப்பட்ட மதிப்பெண்கள் 78 . வழக்கமாக செய்வது போல் எல்லோரும் அவரவர் பதில் தாள்களில் ஒவ்வொரு பதிலுக்கும் இடைப்பட்ட மதிப்பெண்களை கூட்டி பார்த்து மொத்தம் கொடுத்த மதிப்பெண்களுடன் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்தார்கள். ராகுவும் பார்த்தான். ஆனால் ஒவ்வொரு பதிலுக்கும் கொடுத்த மதிப்பெண்களை கூட்டியபோது 74 மதிப்பெண்களே வந்தது. இரண்டு முறை மீண்டும் மதிப்பெண்களை கூட்டி பார்த்ததில் ஆசிரியர் தவறுதலாக 74 க்கு பதில் 78 என்று கொடுத்துவிட்டார் என்று ரகுக்கு தெரிந்தது. அவன் வகுப்பில் இன்னொரு மாணவன் அந்த தேர்வில் 76 மதிப்பெண்கள் வாங்கி இருந்தான். அவன் தான் பொதுவாக அனைத்து பாடங்களிலும் முதலாவதாக வருவான். இதனால் அவன் மேல் ரகுவுக்கு ஒரு பொறாமை இருந்து வந்தது. ரகு ஆசிரியரிடம் அவர் மறதியில் செய்த தவற்றை சொல்லியிருந்தால் அவன் வகுப்பில் இரண்டாவது உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றவனாக இருந்திருப்பான். ஆனால் ரகு வேண்டும் என்றே அவர் தவறாக கொடுத்த மதிப்பெண்களை பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டு விட்டான். எனவே அந்த முறை ரகு தான் ஆங்கில பாடத்தில் அதிகம் மதிப்பெண்கள் பெற்றதாக புகழப்பட்டான். முதலாவதாக எப்போதும் வரும் மாணவன் அவனுக்கு வாழ்த்துக்கள் கூறினான். " என்னையே தூக்கி சாப்பிட்டு விட்டாயே?" என்று அவனை தட்டி கொடுத்தான். அந்த நேரத்தில் ரகு ஒன்றும் சொல்லாமல் மௌனம் சாதித்து விட்டான். அந்த வருடமும் சென்றுவிட்டது. அதன் பிறகு 11 ஆம் வகுப்பு பொது தேர்வும் முடிந்தது. அப்போது ரகுக்கு ஆங்கிலத்தில் 52 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்தது. எப்போதும் ரகு ஆங்கிலத்தில் 60 க்கு மேல்தான் வாங்குவான். எட்டாம் வகுப்பில் அவன் செய்த மேற்குறிய தவறு சரியான நேரத்தில் ரகுவை தண்டித்து விட்டது. அதன் பிறகு பட்ட படிப்பும் முடித்தான். இப்போதும் எட்டாம் வகுப்பில் அவன் செய்த அந்த தவறை நினைக்கையில் ரகு வெட்கத்தால் முகம் குனிவான் .

பைத்தியத்திற்கு வைத்தியம் பார்த்த பைத்தியம்

“டேய் பைத்தியம், இன்று என்ன விசேஷம்? புது ஆடை அணிந்திருக்கிறாயே?" என்று ரகுவிடம் கேட்டார் அவனது தமிழ் ஆசிரியர் செல்வம். ரகு சொன்னான் " அது ஒன்றுமில்லை. எனது திருமண நாள் இன்று" என்று கூறியபோது ஒன்பதாவது வகுப்பு 'பி' பிரிவில் உள்ள மாணவர்கள் அனைவரும் வாய்விட்டு சிரித்தனர் .செல்வம் " உனக்கு பைத்தியம் என்று பெயர் வைத்தது சரியாகத்தான் உள்ளது. பதினான்கு வயதான உனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டதா" என்று கேலியாக கேட்டார். ரகு தாமதிக்காமல் பதில் தந்தான் " சார், மிகவும் தெளிந்த அறிவும் மனமும் படைத்த நான் ஒரு பைத்தியம் என்றால் எனக்கு ஏன் திருமணம் ஆகி இருக்கக்கூடாது?". செல்வம் விடவில்லை"பைத்தியத்தை எல்லாம் எந்த பெண் கல்யாணம் செய்து கொள்வாள்?" என்றபோது ரகு நிதானமாக பணிவுடன் கேட்டான் " சார், மன்னிக்கவும், உங்களுக்கு கல்யாணம் ஆகி விட்டது தானே?". வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவரும் மிரண்ட விழிகளுடன் செல்வம் சாரை பார்த்தனர். செல்வம் " அதிகம் பேசாதே ரோஷம் இல்லாத பைத்தியமே. ஒரு அரை பளாரென்று கொடுத்தால் உன் கன்னம் வீங்கிவிடும், ஜாக்கிரதை " என்று எச்சரித்தார். அவர் வகுப்பு முடிந்தவுடன் அந்த வகுப்பில் இருந்த மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டு ரகுவை வியந்து பாராட்டினார்கள். ஒரு மாணவன் சொன்னான் " செல்வம் வாத்தியாருக்கு மிகவும் வாய் துடுக்கு. எவரையும் வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார். இன்று நீ அவரிடம் கேட்ட கேள்வி அவருக்கு நிச்சயம் ஒரு படிப்பினையாக இருக்கும்". இந்த நிகழ்ச்சிக்கு பின் செல்வம் வாத்தியார் ரகுவிடம் ஒருமுறை கூட முகம் கொடுத்து பேசவில்லை.
முன்பு ஒருமுறை செல்வம் ரகுவிடம் கிண்டலாக " எங்கே வாழை பழம் என்பதை உச்சரி பார்க்கலாம்" என்று கேட்டபோது ரகு " வாடா பழம் " என்று சொன்ன நகைச்சுவையை பல மாணவர்கள் அடக்கி சிரித்து வாசித்தாலும், செல்வத்திற்கு அது சினத்தைத்தான் வரவழைத்தது. அப்போது தான் அவர் முதன் முறையாக ரகுவை பார்த்து " டேய் பைத்தியம், வாயை மூடு. இனி நீ வாயை திறந்தால் பிரம்பால் பிளந்து விடுவேன்" என்று கர்ஜனை செய்யாத குரலில் சொன்னார். இதன் பிறகு அவர் செல்வதை " பைத்தியம்" என்று தான் அழைத்து வந்தார். ஆனால் மேற்கூறிய நிகழ்ச்சிக்குப்பின் செல்வம் வாத்தியாரின் நடவடிக்கைகளில் கொஞ்சம் வித்தியாசம் ஏற்பட்டது. அவரது தலைக்கனம் கொஞ்சம் குறைந்து விட்டதாக மாணவர்கள் பரவலாக பேசிக்கொண்டனர்.

பள்ளியில் படிக்கும்போது ரகுவிற்கு நண்பர்கள் சிலரே. அவன் யாரிடமும் அதிகம் நெருங்கி பழக மாட்டான். சிறிதே பேசினாலும் நகைச்சுவை உணர்வுடன் பேசுவான். மனதளவில் யாருக்கும் களங்கம் நினைக்காதவன். வீட்டில் அம்மா அப்பாவுக்கு மிகவும் அடங்கி நடப்பவன். படிப்பில் மிகவும் புத்திசாலி என்று சொல்லமுடியாது.ஆயினும் அவ்வப்போது சில பாடங்களில் அவன் வகுப்பில் முதலாகவும் வருவான். ஆங்கிலம், சரித்திரம் மற்றும் பூகோள பாடங்களில் அவனுக்கு அதிக விருப்பம்.
அவன் அப்பா மிகவும் கண்டிப்பானவர். பள்ளியிலிருந்து வீடு திரும்பிய பின் வெளியே எங்கும் அவன் செல்லக்கூடாது. அப்படி சென்றதை அறிந்தால் அவன் அப்பா அவனை இரன்டு அரை கொடுத்து திட்டி விடுவார். அரை வாங்க பயந்து அறையை விட்டு வெளியே செல்லாமல் இருப்பான் ரகு. இந்த திட்டும் அரையும் அவனுக்கு மட்டும் அல்ல அவனது இரண்டு அண்ணன்களுக்கும் பொருந்தும். குறிப்பாக அவனது இளைய அண்ணன் அப்பாவிடம் அதிகமாக அடிகளும் திட்டுகளும் வாங்குவான். காரணம் அவன் ஏதாவது ஒரு குசும்புத்தனம் செய்து கொண்டே இருப்பான். ஒரு முறை வீட்டிற்கு அவன் அப்பாவின் நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் குரல் கொஞ்சம் விசித்திரமாக இருக்கும். அதாவது ஆண் குரலும் பெண் குரலும் அவர் குரலில் கலந்திருக்கும். அந்த இரட்டை குரல் மனிதர் ரகுவின் அப்பாவுடன் பேசும்பொழுது ரகு மற்றும் அவன் அண்ணன் அக்கா எல்லாருக்குமே அடக்க முடியாத சிரிப்பு. அவனுடைய அப்பா, அவர் நண்பர், இந்த மூவர் எல்லோரும் இருந்தது ஒரே அறையில் தான். ஆனால் ஒரு திரை ஒன்று நடுவில் போடப்பட்டு அந்த அறை இரண்டாக செய்யப்பட்டிருந்தது. ரகு அவன் அண்ணன் அக்கா மூவரும் திரைக்கு இந்த பக்கம். எனவே அந்த இரட்டை குரல் மனிதருக்கு இவர்கள் யாரென்று தெரிய வாய்ப்பில்லை. அந்த மனிதர் அவர்கள் சிரித்ததை கேட்டாரோ இல்லையோ என்று தெரியாது. ஏனெனில் அவர் தொடர்ந்து ஆண் பெண் இருவர் குரலையும் கலந்து ரகுவின் அப்பாவுடன் நிறைய பேசினார். கொஞ்ச நேரத்திற்கு பிறகு அவன் அம்மா அவருக்கு பலகாரம் காபி கொடுத்தாள். அதை சாப்பிட்டுவிட்டு " ரொம்ப ருசியாக இருந்தது " என்று இரண்டு குரல்களில் ரகுவின் அம்மாவை பாராட்டிவிட்டு அந்த நல்ல மனிதர் புறப்பட்டு போய்விட்டார். அவர் சென்ற உடனேயே அப்பா ரகுவின் அண்ணனை கூப்பிட்டார். பளார் பளார் என்று இரண்டு அரை கொடுத்து " வீட்டை தேடி வந்து என் நல்ல நண்பர் ஒருவர் என்னை விசாரிக்கையில் அந்த பக்கத்தில் இருந்து அவரை கிண்டலடித்து சிரிக்கிறாயா?" என்று திட்டினார். ரகுவின் அண்ணன் " நாங்கள் மூவரும் தான் சிரித்தோம் என்று" சொன்னதை அவர் காதில் போட்டுக்கொள்ளவில்லை. ரகுவும் அவன் அக்காவும் அவர்கள் அப்பாவிடமிருந்து அன்று தப்பித்தனர். அப்போது மட்டும் இல்லை, செய்த செய்யாத பல விஷயங்களுக்கு ரகுவின் அண்ணன் தான் அவர்கள் அப்பாவிடம் அதிகம் அடிகள் வாங்குவான். இது, சின்ன வயதில் ரகுவை அடிக்கடி கிள்ளி விட்டதிற்கு பலனாக இருக்கலாம் என்று ரகு நினைத்துக்கொள்வான்.

பத்தாவது படிக்கையில் இரண்டு ஜுரம்

பத்தாவது படிக்கையில் ரகுவுக்கு இரண்டு ஜுரங்கள் வந்தது. ஒன்று விடலை பருவ காதல் ஜுரம். இன்னொன்று typhoid ஜுரம். ரகுவின் இல்லத்தில் ஒரு வேலைக்கார பெண்மணி பணிக்கு சேர்ந்தாள். அவள் அவ்வப்போது அவள் 16 வயது பெண்ணை ரகு வீட்டிற்கு அனுப்பி வீட்டை கூட்டுவது, பாத்திரம் தேய்ப்பது போன்ற வேலைகளை செய்ய சொல்வாள். அனேகமாக ரகு தனியாக ஒரு அறையில் படித்துக்கொண்டிருக்கும்போது தான் அந்த இளம்பெண் அவன் அறையை பெருக்க வருவாள். ரகுவும் அவளும் ஓரிரண்டு வார்த்தைகள் பேசிக்கொள்வார்கள். கொஞ்ச நாட்கள் கழித்து ரகு அவளை தொட்டு தொட்டு பேச ஆரம்பித்தான். அந்த பெண்ணும் அதை பொருட்படுத்தவில்லை. அவ்வப்போது ரகு அவள் கையை பிடித்து இழுப்பான்.அவள் செல்லமாக அவனிடமிருந்து தப்பி ஓடுவாள். இப்படியாக இந்த இரண்டு சிறிசுகளும் சில்மிஷங்கள் சில செய்து வந்தன.

பத்தாவது வகுப்பு ஆண்டின் இறுதி தேர்வுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் ரகுவுக்கு டைபாய்டு ஜுரம் வந்து மூன்று வாரங்கள் அவன் பள்ளி செல்லவில்லை. அதன் பிறகு அவன் பள்ளி செல்ல துவங்கினான். சில நாட்களிலேயே இறுதி ஆண்டு தேர்வு நடை பெற்றது. ரகு சுமாராக தான் பரீட்சை எழுதினான். அப்போதெல்லாம் தேர்வின் முடிவு ஒரு தபால் அட்டை ( post card ) மூலம் வீட்டுக்கு அனுப்பப்படும். ஏப்ரல் மாதம் ரகு வீட்டிற்கு ஒரு தபால் கார்டு வந்தது. அதில் "Detained " என்ற முத்திரை கண்டு ரகு உள்பட அவன் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ந்து போய்விட்டார்கள். குறிப்பாக அவன் தந்தை ரகுவை மிகவும் கடிந்து கொண்டார். ரகு சொன்னான் " அப்பா நான் fail ஆகும் அளவுக்கு நிச்சயம் தேர்வுகளை எழுதவில்லை. நாம் பள்ளிக்கூடம் சென்று விசாரிக்கலாம்." என்று சொன்னதை முழுமனதில்லாமல் கேட்ட அவன் தந்தை "சரி இன்றே உன் பள்ளிக்கு சென்று விசாரிக்கலாம்" என்று சொன்னார். அதை போல ரகுவை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றார். அங்கே காரியாலயத்தில் உள்ள ஒருவர் தலைமை ஆசிரியர் அறைக்கு சென்று ரகுவின் தேர்தல் முடிவை பற்றி விசாரித்து வந்தார். அவர் சொன்னார் " நல்ல செய்தி தான் உங்க பையனுக்கு. அவன் இறுதி தேர்வில் பாஸ் செய்து விட்டான். ஆனால் அவன் மூன்று வாரங்களுக்கு மேல் அனுமதி பெறாத விடுப்பில் இருந்ததால் அவனுக்கு "detained " என்ற முத்திரை இட்டு அனுப்பிவிட்டோம். " இதை கேட்டவுடன் ரகுவின் முகத்தில் தனியாக ஒரு புன்னகையும் உற்சாகமும் பிறந்தது. அவன் அப்பா அவரிடம் " என் மகன் டைபாய்டு காய்ச்சலினால்தான் மூன்று வாரம் விடுமுறை எடுத்தான். இதை அவன் வகுப்பு ஆசிரியருக்கு கூட அவன் தெரிவித்து விட்டான். சரி, இப்போது இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் " என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர் " இதற்கான மருத்துவ அத்தாட்சி பாத்திரத்தை நீங்கள் இந்த அலுவலகத்திற்கு இந்த வார கடைசிக்குள் கொடுக்க வேண்டும்" என்றார். அதன் படியே ராகுவிற்கு சிகிச்சை செய்த மருத்துவரிடம் தேவையான அத்தாட்சி பாத்திரத்தை பெற்று அதை பள்ளியில் ஒப்படைத்தவுடன் கையுடன் "Promoted " என்று முத்திரையுடன் ஒரு போஸ்ட் கார்டை கொடுத்துவிட்டனர். வீட்டில் இதை சொன்னவுடன் அவன் அம்மா அன்று ரவா கேசரி செய்து அனைவருக்கும் கொடுத்தாள். கேசரியை அதிகம் உண்டவன் ரகு தான். அதில் கொஞ்சம் கேசரியை அவன் வீடு இளம் வேலைக்காரிக்கு ரகு தன் கையாலேயே கொடுத்து மகிழ்ந்தான். அதற்கு அவளும் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சும் பரிசை கொடுத்தாள். (அட ச்சே, இதையெல்லாம் எதுக்கு சொல்லவேண்டும் இப்போது, அந்த பருவத்தில் அதெல்லாம் அப்படித்தான் நடக்கும், ஆமாம் தானே?)

பதினொன்றில் ரகுவுக்கு ஒரு அதிர்ச்சி

பள்ளியின் இறுதி ஆண்டு ரகுவுக்கு. அப்போது 11 ஆம் வகுப்பு என்றால் பொது தேர்வு. எனவே முதலிலிருந்தே ரகு நன்கு படிக்க தொடங்கினான். ஆனாலும் இளம் வேலைக்கார பெண்ணிடம் கொஞ்சம் சின்ன சின்ன சரசங்கள் செய்த வண்ணம் இருந்தான். ஒரு முறை ரகு அவளின் கையை பிடித்து இழுக்கையில் அவன் அக்கா அதை பார்த்துவிட்டு " நடக்கட்டும், நடக்கட்டும்" என்று குரல் கொடுத்து சென்றாள். இதன் பிறகு இந்த இருவருக்கும் இடையே உரசல் குறைய ஆரம்பித்தது. சொல்லி வைத்தாற்போல் அந்த வேலைக்காரி அவள் வீட்டை மாற்றி கொண்டு வேறு ஒரு இடம் சென்றதால் ரகு வீட்டிற்கு அவளும் அவள் மகளும் வருவது நின்றுவிட்டது. இளம் வேலைக்கார பெண்ணை பார்க்காமல் ரகுவுக்கு உள்ளுக்குள் ஒரு மன வருத்தம். ஒரு வழியாக அவளை மறந்து அவன் படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினான். இருப்பினும் அவனால் எப்போதும்போல படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அதன் விளைவு அவன் 11 ஆம் வகுப்பு பொது தேர்வில் 67 % மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அவன் விருப்ப பாடம் ஆங்கிலத்தில் 52 மற்றும் கணிதத்தில் 51 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றான். இதனால் அவனுக்கு PUC இல் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. புதிதாக துவங்கிய ஒரு தனியார் கல்லூரில் அவன் PUC படித்து முடித்தான். PUC தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் அவனுக்கு அவன் எதிர்பார்த்த கல்லூரியில் பட்டபடிப்புக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே அவன் ஒரு அரசாங்க கலை கல்லூரியில் பி.காம் பட்ட படிப்பு முடித்தான்.

ஒட்டுமொத்தமாக அவன் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு பற்றி அவனிடம் யாரேனும் கேட்டால் " பள்ளி எனக்கு கிடைத்த ஒரு கரும்புள்ளி. கல்லூரி எனக்கு கிடைத்த ஒரு சோம்பேறி" என்பான். சில குறிப்பிட்ட நண்பர்களிடம் இதையும் சிரித்துக்கொண்டும் வெறுத்துக்கொண்டும் சொல்வான் " பள்ளி படிப்புக்கு பதிலாக நான் பள்ளி அறை சென்று காதல் பாடம் கற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். கல்லூரி படிப்புக்கு பதிலாக நான் ஒரு நகைச்சுவை நடிகனாக வேடமிட்டிருந்தாலும் கொஞ்சம் உபயோகமாக இருந்திருக்கும்"
 
Top