Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ராஜா ராணி - 1

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
? ராஜா ராணி

காதல் 1 :

“ நித்யானந்தா சச்சிதானந்தா
ஹரி ஹரி ஹரி ஓம் நாராயணா
நாராயணா சாய் நாராயணா
ஹரி ஹரி ஹரி ஓம் நாராயணா
ப்ரேம ஸ்வரூப்பா ப்ரேமனந்தா
ஹரி ஹரி ஹரி ஓம் நாராயணா…”

என்று இனிமையான இறைவனின் துதி பாடும் இசை ஒரு பக்கம் மனதுக்கு இதம் தரும் வகையில் சாமி ரூமில் ஒலிக்க, அதற்கு நேர்மாறாக அந்த பெரிய வீட்டின் திண்ணையில் பஞ்சாயத்து நடந்துக் கொண்டிருந்தது.

ஆமாம்..!

பஞ்சாயத்துதான்…! அப்படித்தான் அந்த வீட்டின் இன்றைய தலைமுறையினர் சொல்வார்கள்.

அந்த வீட்டில் யாரெனும் தவறுச் செய்தால் திண்ணையில் தான் அவர்களை வைத்து விசாரிப்பார் அந்த வீட்டின் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவரும் அந்த குடும்பத்தின் ஆலவிழுதுமான மதுரவல்லி ஸ்ரீனிவாசன்.

மதுரவல்லி பேரப்பிள்ளைகளைப் பொருத்த வரையில் தலைவலி. குடும்பத்தின் தலைவி. அவரது கணவர் ஸ்ரீனிவாசன் ஏழு ஆண்டுகளுக்கு முன் இறைவனடி சேர்ந்து விட்டார். அவர் இருந்த போதும் சரி அவர் இறந்த பின்னும் சரி அந்த குடும்பத்தின் குடுமி அவர் கையில் தான்.

சோழ வள நாட்டின் தலை நகரான தஞ்சாவூரில் அமைந்துள்ளது அவர்களது வீடு ஸ்ரீ நிவாசம். ஸ்ரீ குரூப்ஸ் தஞ்சையின் தன்னிகரற்ற ஒர் குழுமம், ஸ்ரீ காபி, ஸ்ரீ சில்க்ஸ், ஸ்ரீ கிரானைட்ஸ், ஸ்ரீ கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்று அவர்கள் குடும்பம் பல துறைகளில் முன்னிலை வகிக்கிறது.

மதுரவல்லியின் முன் முகத்தைத் தொங்கப் போட்டு நின்றன அந்த வீட்டின் வாரிசுகள் ஸ்ரீஆயுஷ் மற்றும் திருவமுதன்.

அவர்களின் எதிரில் பயத்தோடு நின்றிருந்தனர் அவர்களது தாய்மார்கள் ஹரிணியும் மோகனாவும்.

“எதுக்கு உன்னை காசு கட்டிப் படிக்க வைக்கிறது…..? இப்படி முட்டையும் மூணு மார்க்கும் வாங்கிட்டு வரதுக்கா….. என் புள்ளைங்கக் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு கொட்டினா…… நீங்க நோகாம இருந்துட்டு படிக்க கூட வலிக்குது…..” என்று சத்தமாகக் கேட்டார் மதுரவல்லி.

அவர் சொல்வதும் சரிதான். ஒரே நாளில் உருவானவர்கள் அல்ல அவரது குடும்பம். அவரின் தியாகம், கணவரின் கடின உழைப்பு, பிள்ளைகளின் பொறுப்பு எல்லாம் சேர்ந்ததுதான் அவர்களது நிறுவனம்.

“அவன் தான் சின்னவன்… உனக்கு என்னடா… அமுதா……. இன்னும் இரண்டு வருசத்துல பத்தாங்களாஸ் எழுதனும்… அந்த நினைப்பு இருக்காடா… உங்கப்பன்லாம் எப்படிப் படிப்பான் தெரியுமா…. அவன் தங்க மெடலு……… இப்படியே போனா.. எங்க உருப்புடுவடா நீன்னு….?” என்று பெரியவனை அதட்டினார்.

அதன்பின் தனது இளைய மருமகள் மோகனாவிடம் திரும்பியவர், “இங்க பாரு…. மோகனா….. நீ எப்பப் பாத்தாலும் கதை புஸ்தகத்தை எடுத்து வைச்சுப் படிக்கிற… வேண்டாம்னு நான் சொல்லல…. அதே மாதிரி உன் புள்ளையும் அவன் பாடப்புஸ்தகத்தை எடுத்துப் படிக்கிறானானு பாரு… பார்த்தியா அவன் மார்க்க… எல்லாத்திலேயும் அறுபது தாண்டல… பத்தாக்குறைக்குக் கணக்குல கோட்டு…. மூணு மார்க் வாங்கிருக்கான்…” எனச் சொல்ல

“சரிங்க அத்தை.. நான் இவன கவனிச்சிக்கிறேன்….” என்றார் உள்குத்துடன்.

அவரது கவனிக்கிறேன் என்பதின் பொருள் உணர்ந்த மகனோ தாயை உண்மையான மோகினியைப் பார்ப்பது போல் பயத்தோடு பார்த்தான். போன முறை இப்படி கவனிக்கிறேன் என்று சொல்லி அழைத்துப் போன தாயார் நன்றாகச் சாத்தி எடுத்து விட்டார். உண்மையில் தனது தாத்தா ஏன் மோகனா என்று பெயர் வைத்தார் என்பதை அன்றுதான் உணர்ந்தான் அமுதன்.

பின்னே…! தர்ம அடியாயிற்றே…!!

அதன்பின் பேரனின் மனைவியான ஹரிணியை அனல் கக்கும் பார்வை பார்த்தவர்,

“உன் மனசில நீ என்ன நினைச்சிட்டு இருக்க…. ஹரிணி….. எப்ப பார்த்தாலும் செல்ஃபோனும் கையுமா இருக்க….. நீ கெட்டதும் இல்லாம சின்னப் புள்ளையும் சேர்த்துக் கெடுக்கிற…. நீ…. ஆயுஷ்….. என்னடான்னா செல்போன்ல விளையாடிக்கிட்டே இருக்கான்….. இதெல்லாம் சரியில்ல... உங்க அம்மா கிட்டப் போன் பண்ணிச் சொல்லனுமா… என்ன….?...” என மிரட்டும் தொனியில் கேட்க

ஹரிணி அரண்டு போய்விட்டாள். அவள் தந்தை கணேஷ் மிகவும் சாது.மகளென்றால் கொள்ளைப் பிரியம்.ஆனால் தாய் தீபாவோ ஒளி தரும் தீபமாகவும் இருப்பார் அதே நேரம் கோபம் வந்தால் எரிக்கும் தழலாகவும் இருப்பார். அதுவும் மதுரவல்லி தீபாவின் பெரியம்மா. பெரியம்மாவின் குடும்பம் என்பதால் தான் ஹரிணி ஸ்ரீராமை விரும்பியப் போது அதை அரேஞ்ச் மேரேஜாக நடத்திக் கொடுத்தார்.

அதே சமயம் மதுரவல்லியிடம் கெட்டப் பெயர் எடுக்கக் கூடாது என்பது ஹரிணிக்கு தீபா இட்டக் கட்டளை. புகுந்த வீட்டில் பெண்கள் நற்பெயர் எடுக்க வேண்டுமென்பது தாய்மார்களின் அவா அன்றோ…?

தாயின் கண்டிப்பை அறிந்தவள் உடனே அப்ரூவராக மாறி ,

“ஆத்தா…… சாரி ஆத்தா… நான்.. இனிமே இவனுக்குப் போன் தர மாட்டேன்…. ஒழுங்கா இவன் படிப்பான்.. அடுத்த தடவ க்ளாஸ் ப்ர்ஸ்ட் வந்துடுவான்….. அம்மா கிட்டச் சொல்லிடாதீங்க…..” எனப் பவ்யமாய் சொல்லிவிட்டு தன் மகனை இழுத்துக் கொண்டு போனாள். மோகனாவும் அவ்விடம் விட்டு அகல, திருவமுதன் தாயின் பின்னால் போக, மதுரம் போட்ட அதட்டலில் அப்படியே நின்று விட்டான்.

“ஏய்…… அமுதா… நீ எங்கப் போற…. நான் போன தரம் சொன்னது ஞாபகமில்ல உனக்கு……”

அந்த வாலுக்கா ஞாபகம் இல்லை.. இருந்தும் மழுப்பலாக “என்ன ஆத்தா….” என்று முகத்தைச் சுருக்கி…. தலையில் கை வைத்து யோசிப்பது போல் செய்தான்.

“ம்ம்…. அடுத்த தரவ பாஸ் பண்ணலன்னா….. நம்ம தோட்டத்துத் தென்னை மரத்துக்கு தண்ணித் தூக்கித் தெனைக்கும் நீதான் ஊத்தனும்னு சொன்னேன்…. பேராண்டி தினமும் வல்லாரைக் கீரை சாப்பிடுறவ டா படுவா.... உன் தகிடத் தத்தம்லாம் பலிக்காதுடா…”

“ஆத்தா.. ப்ளீஸ்…. ஆத்தா… அடுத்தத் தடவக் கண்டிப்பா பாஸ் பண்ணிடுவேன் ஆத்தா…. இந்த தடவ விட்டுடு ஆத்தா… இருபத்தைஞ்சு மரத்துக்கு ஊத்துன்னா நான் நாளைக்குப் ஸ்கூல் போக முடியாது ஆத்தா…..” என அவரின் கீழ் உட்கார்ந்துக் கெஞ்ச ,

அவர் அசராமல், “சரி அப்போ… போய்… அந்த கொல்லையில புல் அறுத்துட்டு வாடா…. நம்ம கஸ்தூரிக்குப் போட….” என அடுத்த குண்டைப் போட

“அய்யோ…. ஆத்தா புல் அறுக்கிறதா…. கையெல்லாம் எரியும்… நான் அரிக்கறப் புல்ல கஸ்தூரிக்கு எப்படிப் பத்தும்.. நம்ம பாட்ஷாக்குக் கூட பத்தாது….” என்றான்

கஸ்தூரி அவர்கள் வீட்டின் பசு. பாட்ஷா பசுவின் கன்னுக்குட்டி. சிறுவனான அவன் கொண்டு வரும் புல் அந்த கஸ்தூரிக்குப் பத்தாது என்பதை மதுரமும் அறிவார்.

“படிக்கிறத விட இதெல்லாம் கஷ்டம்னு தெரியுதுல்ல… அப்புறம் ஏன் படிக்க வலிக்குது ராசா உனக்கு… ஒழுங்கு மரியாதையா நான் சொன்னதுல்ல எதாவது ஒன்ன செய்யுற… போ… எல்லாத்துக்கும் ஒரு தடவத் தான் மன்னிக்க முடியும்…… அடுத்த தடவ பாஸ் பண்ணு… ஆனா இந்த தடவ செஞ்ச தப்புக்குத் தண்டனையை அனுபவி…..” என்றார் உத்தரவிடும் குரலில்.

அந்த குரலில் சொல்லிவிட்டால் சொன்னது சொன்னதுதான் என்பதை வீட்டில் உள்ள அனைவரும் அறிவர். வேறு வழியின்றி தென்னை மரத்துக்குத் தண்ணீர் தூக்கி ஊற்றப் போனான்.

அடுத்து தனது மூத்த மருமகள் சுலோச்சனாவை அழைத்தவர் ,

“எங்கே உன் செல்லப் புள்ளையைக் காணோம்…. ஆபிஸ் பக்கம் வரலன்னா நாளைக்கு அவனுக்கு வீட்ல சோறுக் கிடையாதுன்னு சொல்லிவை.. ராமும் அவன மாறிதான….. அவன் பொறுப்பா இருக்கான்… இவனுக்கு என்ன நோவுதாம்…… எல்லாம் நீ கொடுக்கிற இடம்…”

“அப்புறம்… உன் மருமகளைக் கொஞ்சம் கண்டிச்சு வை…. என்ன புள்ள வளர்கிறா அவ… ஃபோனும் கையுமாதான் சுத்துறா… ஆயுஷ் போனத் தடவ ஐஞ்சாவது மார்க் வாங்கினான்… இப்போ பதினைஞ்சாவது மார்க்… என் வீட்டு வாரிசு…. இப்படித்தான் படிக்கிறதா… ஒழுங்கா எல்லாத்தையும் கவனி சுலோ..” என அவருக்கும் டோஸ் விட்டு அனுப்பினார்.

சமையலறைக்குள் நடந்த அந்த மாநாட்டில் குமுறிக்கொண்டிருந்தார் மோகனா. மாமியாரிடம் திட்டு வாங்கியப் பின் எப்போதும் இப்படி சமையலறைக்குள் சென்று தங்களுக்குள் புலம்புவது அவர்களது வாடிக்கை.

“அவனால நான் திட்டு வாங்கிறேன் அக்கா… மேக்ஸ் போட்டாதான் என்னவாம்… அவனுக்கு… அட்லீஸ்ட் பாஸ் மார்காவது வாங்க வேண்டாம்.. இப்போ அத்தைக்கிட்ட அரைப்பட்டது போதாதுன்னு உங்க கொழுந்தன் வேற வந்து கரிச்சிக் கொட்டுவாரு….” எனக் கேரட்டை வாணலியில் கொட்டியவாறே தனது ஆதங்கத்தையும் கொட்டினார்.

“இன்னும் வத்சன் வரல… அவன் எவ்வளவு மார்க் வாங்கிருக்கானோ தெரியல… பன்னிரெண்டாவது வேற… அடுத்தக் கோட்டா எனக்குத்தான்….” எனத் தேங்காயைத் துருவிக் கொண்டே புலம்பினார் பூம்பொழில், மதுரத்தின் இரண்டாவது மருமகள்.

மதுரவல்லியின் மூத்த மகன் ஸ்ரீரவிச்சந்திரன். அவரது மனைவி சுலோச்சனா. அவர்களுக்கு இரண்டு மகன்கள் மூத்தவன் ஸ்ரீராம்.அவன் மனைவிதான் ஹரிணி. ஸ்ரீஆயுஷ் அவர்களின் வாரிசு. மதுரவல்லியின் கொள்ளுப் பேரன்.

ஸ்ரீராமின் தம்பி ஸ்ரீசரண். இருபத்தைந்து வயது புதிய தலைமுறை இளைஞன். எம்.பி.ஏ முடித்து விட்டுச் சுற்றும் வேலையில்லா பட்டதாரி. உண்மையில் வேலைக்குச் செல்ல விரும்பாதப் பட்டதாரி.

இரண்டாமவர் மதுரத்தின் செல்லப் பிள்ளை சிவச்சந்திரன். அவரது துணைவி பூம்பொழில். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள். மூத்தவள் மஹாலஷ்மி. அவளுக்கு திருமணமாகி தற்போது ஐந்து மாதமாக இருக்கிறாள். அடுத்து மதுரவசனி. கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கிறாள். அவளது தம்பி ஸ்ரீவத்சன். பன்னிரெண்டாவது படிக்கும் மாணவன்.

அடுத்து மதுரத்தின் சின்ன மகன் கார்த்திக்கேயன். அவர்தான் மோகனாவின் கணவர். அந்த வீட்டில் முதல் வாரிசுகளுக்கு ஸ்ரீ என்று தொடங்கும் பெயரை வைப்பது வழக்கம். தமிழ்க்கடவுளின் பெயரை வைத்திருப்பதாலோ என்னவோ கார்த்திக்கேயனுக்குத் தமிழ்ப்பற்று அதிகம். ஆகையினாலே தனது மகனுக்கு ஸ்ரீ என்று பொருள் படும்படியாகத் திருவமுதன் என்று பெயரைச் சூட்டினார். திருவமுதனுக்கு ஒரு தங்கை ப்ரியா.

“நீயாவது பரவாயில்ல பொழில்… என்னைப் பாரு… பேரன் படிக்காததுக்கெல்லாம் திட்டு விழுது….” என நொந்துக் கொண்டார் சுலோச்சனா.

அப்போது “அத்தை…………..” என முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு உள்ளே வந்தாள் அவரது மருமகள் ஹரிணி.

“அத்தை… அம்மாக்கிட்ட ஆத்தா சொல்லிடுவாங்களா…”

“உனக்கு உன் கவலை…” என மோகனா சொல்ல

“ப்ச்… போங்க மோகி அத்தை…. அம்மா பத்தி உங்களுக்குத் தெரியாது….. ஆத்தாவுக்கு மேல சாமியாடுவாங்க….”

மோகனாவோ, “அதான் தெரியுமே.. உங்க அம்மா தீப்பொறி தீபான்னு…. இரண்டாம் மதுரவல்லியாச்சே…” என மனதிற்குள் சொல்லிக்கொண்டார்.

“நீ கவலைப்படாத ஹரிணிம்மா.. நான் தீபா கிட்டப் பேசறேன்.. அத்தை எப்போவும் ஒரு வாய்ப்புக் கொடுப்பாங்க….. உன்னை மாட்டி விடமாட்டாங்க… ஆனாலும்…. நீயும் ஆயுஷ் கிட்டப் போனக் கொடுக்காதா…” என சுலோச்சனா அறிவுறுத்த

“நான் என்னத்த செய்றது… ஃபோனைக் காமிச்சாதான் இவன் சாப்பிடுறான்… க்ளாஷ் ஆஃப் க்ளான்ஸ் விளையாட விட்டாதான் ஹொம்வொர்க் செய்வேன்னு சொல்றான்…. உங்க பேரன் எங்க என் பேச்ச கேட்கிறான்…?” என்று அலுத்துப் போனக் குரலில் சொன்னாள் ஹரிணி.

“ஹரிணி… அதெல்லாம் குழந்தைங்க அப்படிதான் இருப்பாங்க…. டெய்லி ஓடி விளையாண்டா தானா பசிக்க ஆரம்பிச்சிடும்… அவன விளையாட விடு….. நீயும் போனும் கையுமா அத்தை முன்னாடி இருக்காத…” என்றார் பூம்பொழில்.

“சரிங்க அத்தை…” என்று தலையாட்டி விட்டுச் சென்றாள் ஹரிணி.

கல்லூரி விட்டு வீட்டுக்குள் நுழைந்த மதுரவசனி வீட்டில் நிலவிய அமைதியைக் கண்டு அதிசயித்து, தனது அறையில் பையை வைத்து விட்டு, சமையல் கட்டிற்குள் நுழைந்தாள்.

“அட மகளிர் அணி இங்க தான் இருக்கீங்களா…? என்ன வீட்டில யாரையுமே காணோம்… ஆத்தா கோவிலுக்குப் போயிருக்கும்… மத்தவங்களாம் எங்க…?” என்றவள் அங்கிருந்தக் கடலை உருண்டையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.
 
அப்போதுதான் செய்திருந்த கடலை உருண்டை. சூட்டையும் மீறிச் சுவையாக இருக்க,

“வாரே வா……. பெரியம்மா….. அருமை போங்க… நான் சம்பாரிச்சு உங்க கைக்கு கண்டிப்பா வளையல் போடுவேன்… கடலை உருண்டை ஆவ்சம்…” என உருண்டையை வாயில் அரைத்துக் கொண்டே ரசனையோடு சொல்ல,

மோகனாவோ “ஏன் மது… நான் கூட நேத்தைக்கு லட்டு செஞ்சேனே.. ஒரு வார்த்தை சொன்னியா நீ… போ…” எனக் கோபிக்க

“அய்யோ சித்தி அது லட்டா… ஐ அம்… சாரி… நான் பூந்தின்னு நினைச்சேன்…. தூள் தூளாதான் அமுதன் கொண்டு வந்து கொடுத்தான்….. அதனால நான் சாப்பிடவே இல்லை….”

“பாருங்க அக்கா… இவள….” என மோகனா பூம்பொழிலிடம் சொல்ல,

“என்ன செய்றது மோகனா…. அவ என் சமையலையே குறை சொல்லுவா….. உன் சமையலை…. மட்டும் விட்டு வைப்பாளா என்ன…?”

“தோடா… நீங்க நல்லா சமைச்சா… நான் எதுக்குக் குறை சொல்றேன்….. பெரியம்மா சமையல நான் எதாவது சொல்றேனா என்ன…?...என் நாக்கு எப்போவும் பொய் சொல்லாது” என்றாள் வெளியே நாக்கைத் துறுத்திக் கெத்தாக.
“இப்படி எங்க சமையல குறை சொல்றல்ல… பாரு… நாளைக்கு உன் புருஷனும் உன்னோட சமையல குறைச் சொல்லப்போறான்…..” என மோகனா வம்பிழுக்க,

“நீ வேணும்னா பாரு மோகனா… மதுக்கு ஒரு நள மகாராஜாதான் புருஷனா வருவான்.. அவனே என் செல்லத்துக்குச் சமைச்சுப் போடுவான்…..” என சுலோ மகளுக்கு சப்போர்ட்டாய் வர ,

“என் செல்லக் கண்ணம்மா…” என அவள் கன்னம் கிள்ளினாள் மதுரவசனி.

சுலோச்சனாவுக்கு இரண்டும் ஆண்மக்களாய்ப் போனதால் அவருக்கு மது என்றால் பிரியம் ஜாஸ்தி. மூத்தவள் மகாலஷ்மி பிறந்தப் போது அவரது மகன் ஸ்ரீசரணும் சிறியவன் என்பதால் அவனைக் கவனிப்பதிலேயே அவர் நேரம் போய் விட, அதுக்கடுத்துப் பிறந்த மது அவருக்கு செல்லமாகிப் போனாள்.

“நள மகாராஜா வேண்டாம்….. அவன் தமயந்தியை விட்டுப் பிரிஞ்சே இருப்பான்….” என மோகனா அவசரமாக சொல்ல,

“எனக்கு எந்த ராஜாவும் வேண்டாம்….” என்றாள் அவசரமாக.

“ஏன் மது…?” என சுலோ கேட்க

அவள் என்ன சொல்வதென்று தெரியாமல் இருக்க ,

“நீங்க எல்லாரும் பாருங்க நம்ம மதுக்கு ஒரு ராஜா வரனா….. இல்லயான்னு…?” என மோகனா சிரிக்க,
அப்போது முனகலோடு, “நான் கஷ்டப்பட்டுட்டு வரேன்… நீங்கல்லாம் ஜாலியா இருக்கீங்களா…..” என அரை ட்ராயரும் கையில்லாப் பனியனும் மொத்தமாக வியர்வையில் நனைந்திருக்க, நடக்கவே முடியாமல் வந்து நின்றான் திருவமுதன்.

“ஏய்.. அமுதா… என்னடா பண்ணினா… இன்னிக்கு…..?”

“போ.. அக்கா…. அந்த கிழவி……” என்றவனை சுலோவின் குரல் அதட்டியது.

“அமுதா…. பெரியவங்கள…. அப்படிச் சொல்லக்கூடாது…”

“சரி பெரிம்மா… ஆத்தா நான் மேக்ஸ்ல ஃபெயில்னு என்னை தென்னை மரத்துக்கெல்லாம் தண்ணி ஊத்த வைச்சிடுச்சு….. காலெல்லாம் வலிக்குது….. முதுகுப் பெண்டு நிமிந்துப் போச்சு….” என்றான் வலி மிகுந்த குரலில், அப்படியே தரையிலேயே அமர்ந்து விட்டான் வலி தாளாமல்.

கிட்டத் தட்ட இருபத்தைந்து மரங்களுக்கு இரண்டு குடம் விதம் ஐம்பது குடம் தண்ணீர் தூக்கி ஊத்தி இருப்பான் அமுதன். அவனது வயதுக்கு அது சற்றே அதிகப்படி தான்.

“விடுடா…. நாங்க வாங்காததையா நீ வாங்கினா…?..சரண் அண்ணால்லாம் இதை விட நிறையா வாங்கியிருக்கான்… நீ வா நான் சொல்லித் தரேன்… உனக்கு…”
“ஆமா மது… அதை முதல்ல செய்…. வத்சன் வந்துட்டானா…. அவன் எவ்வளவு மார்க்….?” எனப் பூம்பொழில் கேட்க

“உங்க அருமை மகன்…. டியுசன் போயிருக்கான்… மார்க் நான் கேட்டாலும் அப்படியே உடனே சொல்லிடுவான் நீங்க வேற…. போங்கம்மா…”

“அண்ணா நல்ல மார்க் தான் வாங்கிருப்பான்… இல்லனா கூட ஆத்தாவை அவன் சமாளிச்சிடுவான்…” என்றான் அமுதன்.

மோகனா, “..இப்படி சாக்குப் போக்குச் சொல்லாம…. முன்னாடியே படிக்கறதுக்கு என்ன… அவனும் இந்த வீட்டு பையன் தானே..….” எனப் பொரும,

“அம்மா…… நீ பேசாத…… ஏற்கனவே வலியில இருக்கேன்…..” எனக் கத்த,

“விடு மோகனா….. நீ வேற… ஏன்… அவனத் திட்டுற… நீ வா அமுதா… நான் வென்னீர் வைச்சிருக்கேன்…. வந்து குளிச்சிட்டு ரெஸ்ட் எடு…..” எனக் கரிசனமாய் சொன்னார் பூம்பொழில்.

அமுதனும் அவர் சொல் கேட்டுக் குளிக்கப் போனான். அதன்பின் அவரவர் அவரவர் வேலைகளைப் பார்க்கச் சென்றனர்.
 

இரவு ஏழு மணி…

‘வணக்கம்.. இன்றைய முக்கிய செய்திகள்..’ என்ற செய்தி வாசிப்பாளினியின் குரல் அந்த ஹாலை நிறைத்திருக்க, மதுரவல்லி தனது பிரம்பு நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்திருந்தார்.

மதுரவல்லி மற்ற வயசான பாட்டிமார்களைப் போல், டீவி சீரியல்களில் கவனம் வைக்க மாட்டார். பல தொழில் சாம்ராஜ்யங்களைக் கட்டிக் காத்த கணவரின் மனைவியாய் அனைத்து விசயங்களையும் அறிந்து வைத்திருப்பார். படிக்காவிட்டாலும் பிள்ளைகளுக்குத் தொழிலில் அறிவுரைக் கூறுவார். அவர் எப்போதுமே தனக்கென்று பாராது தனது பிள்ளைகளை மட்டுமே உலகம் என்று எண்ணி வாழ்பவர்.

தொலைக்காட்சியில் விளம்பர இடைவெளிப் போட, ரவிச்சந்திரனிடம் திரும்பியவர் ,

“பெரியவனே… நாளைக்கு மதிக்குப் போன் போட்டு மஹாவை அழைச்சிட்டு வரச் சொல்லு…. ஐஞ்சு மாசம் ஆகிடுச்சுல…. இந்த வாரம் ஒரு நல்ல நாள் பார்த்து மருந்துக் கொடுக்கனும்….”

“சரிங்கம்மா.. நான் மாப்பிள்ளைக் கிட்டச் சொல்லிடுறேன்மா…..”

மஹாலஷ்மி தனது கணவன் மதியழகனோடு திருச்சியில் வசிக்கிறாள். மதியழகன் சொந்தமாக ஒரு கட்டுமான நிறுவனம் வைத்திருக்கிறான்.

அவர்கள் பேசியதை மாடியிலிருந்து கேட்ட ஸ்ரீசரண் ,

“ம்ம்… நாளைக்கு அவ வந்தான்னா நமக்குப் போடுற சோறு கட்…..”
“ஆமாடா… சரண்… சும்மாவே அவளுக்குக் கவனிப்பு எக்ஸ்ட்ராவா இருக்கும்… இப்போ… மாசமா இருக்கா… எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா கவனிப்புதான் டா…”

“ஹம்ம்…. விடுடி… நமக்கென்ன இதெல்லாம் புதுசா…. என்ன… நம்ம ரெண்டு பேரும் இந்த வீட்ல ஒப்புக்குச் சப்பாணி தானே…..” என வருத்தமாய் சொல்ல ,

அவர்களின் வருத்தம் இன்று நேற்று இல்லை. அவர்களுக்கு விவரம் தெரிந்த நாள் முதலாய் இருப்பதுதான்.

எப்போதுமே வீட்டின் முதல் வாரிசுகளுக்குத் தனி மரியாதை உண்டு. அதன்படியே ஸ்ரீராம் கொண்டாடப்பட்டான். அவனுக்கு அடுத்தப் பிறந்த ஸ்ரீசரண் கொஞ்சம் வாலுத்தனமாக இருந்தமையால் அவனை மதுரவல்லி கொஞ்சம் அடக்கியே வைப்பார். திட்டிக் கொண்டே அவர் இருக்க, இவன் திட்டு வாங்கிக் கொண்டே இருந்தான்.

அடுத்து மதுரவசனி. தனது இரண்டாவது மகனுக்கு முதல் குழந்தை பெண்ணாய்ப் போனதில் வருத்தமடைந்த மதுரவல்லி, வீட்டின் பெண் செல்வம் என்றெண்ணி அக்குழந்தைக்கு மகாலஷ்மி எனப் பெயரிட்டார். அடுத்தப் பிள்ளையாவது ஆணாகப் பிறக்க வேண்டும் என அனைவரும் விரும்ப, அந்த எண்ணம் பொய்க்கும்படியாகப் பூமியில் ஜனித்தாள் மதுரவசனி.

வாரிசு என்றாலே ஆண் என்ற எண்ணம் சமூகத்தில் ஆழ வேரூன்றிப் போய் விட்டது. மதுவுக்கு அடுத்து மிகுந்த எதிர்ப்பார்ப்போடு பிறந்ததாலோ என்னவோ அவள் தம்பி ஸ்ரீவத்சன் பாட்டியின் செல்லப்பேரனாகிப் போனான்.

அதனாலேயே ஸ்ரீவத்சனை சரணுக்கும் மதுவுக்கும் பிடிக்காமல் போய்விட்டது. சின்ன வயதிலேயிருந்தே ஒரு காழ்ப்புணர்ச்சி அவர்களுக்குள்.
 
ஸ்ரீராமும் மகாலஷ்மியும் பாட்டிச் சொல் தட்டாதப் பேரப்பிள்ளைகள்.
அதற்கு மாறாக சரணும் மதுவும் சின்ன வயதிலிருந்தே பாட்டியிடம் எதிர்த்துப் பேசி, எப்போதும் அவரின் வெறுப்புக்கு ஆளான ஜீவராசிகள்.

“டேய்…. என்ன அண்ணா நீ… நோ பீலீங்க்ஸ்… சரி அதை விடு… எப்போ… உனக்கு ஆபிஸ் போற ஐடியாடா…. இன்னிக்குப் பெரியம்மாக்கு டோஸாம்….”

“போடி…. அங்க போனா… ராம்…. மாறி செய்யு…… ராமைக் கேட்டு செய்னுப் படுத்துவாங்க…. இதுங்க…….கூடல்லாம் என்னால வொர்க் செய்ய முடியாது..” என மறுக்க

“அப்போ… இப்படி ஊரைச் சுத்திட்டு இருக்கப் போறியாடா……?”

“இல்லடி… இந்த பர்த்டே அன்னிலேர்ந்தாவது ஆபிஸ் போகனும்…. இல்லனா அம்மா அழுவுற அழுகையில நம்ம வயலுக்குத் தண்ணிப் பாய்ச்சவே தேவையிருக்காது……”

“சரி… நீ என்ன செய்யப் போற…?”
“ஹம்ம்…. இன்னும் ஒரு மாசத்துல எக்சாம் முடிஞ்சிடும்…. அதுக்கு அப்புறம்… நானும் சில கம்பெனிக்கு அப்ளை பண்ணிருக்கேன் டா…..”

“ஆத்தா உன்னை வேலைக்கு அனுப்ப ஒத்துக்கும்னு நினைக்கிறியா டி……?”

“அனுப்பாம….?” என்றாள் புருவம் உயர்த்தி.

“இங்க பாரு சரண்…. இத்தனை நாள் அவங்கப் பேச்சை நான் கேட்டேன்ல…. எனக்குப் பிடிச்ச…… ஜர்னலிசம் கூடப் படிக்க விடல… பொம்புள புள்ள…. பத்திரிக்கைல வேலைப் பார்த்தா பிரச்சனை வரும்னு சொல்லித் தடுத்தாச்சு…. இப்போ… வேலைக்கும் போக விட மாட்டாங்களா….. நெவர்… சரண்…. என்னால நம்ம அம்மா மாறில்லாம் வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடக்க முடியாது… மஹா மாறிப் புருசனுக்குச் சேவை செஞ்சிட்டு குழந்தைப் பெத்துட்டு நல்ல மக, நல்ல மருமகன்னு செர்டிஃபிகேட்லாம் எனக்கு வேண்டாம்... ஒரு வாழ்க்கை அதை நான் என் இஷ்டத்துக்கு வாழ ஆசைப்படுறேன்….” என்றாள் உறுதியோடு.

ஆனால் அவள் வாழ்வை செதுக்க வேறு ஒருவன் சிற்பியாய் இருப்பதை அவள் மறந்து போனாள்…!!
 
Top