Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ராஜா ராணி - 15

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
காதல் 15:

அன்று மாலை ராஜ்நந்தன் வீடு திரும்பிய போது ஆறரை மணி. வீட்டுக்குள் நுழைந்தவனின் கண்கள் வழக்கம்போலவே மனைவியைத் தேடின.

“மது…மதும்ம்மா…” என அழைக்க அவளை எங்கும் காணவில்லை.

சோர்வாக இருந்தவனுக்கு மனைவி வீட்டில் இல்லாது இருக்க, அது அதீத சோர்வைத் தர, அப்படியே அயர்ச்சியுடன் சோஃபாவில் சாய்ந்தான். அவளின் எண்ணுக்கு முயற்சிக்க அவள் எடுக்கவே இல்லை.

அமைதியாய் வாசலை நோக்கிய வண்ணம் அமர்ந்திருந்தான். ஆனால் அமைதி எல்லாம் எவ்வளவு நேரத்திற்கு…??

மதுரவசனி மாமியாரின் அழைப்புக்கு இணங்க, அவரைப் பார்க்க அவர்கள் இல்லத்துக்குச் சென்று விட்டு, நேரம் போவதே தெரியாமல் பேச்சில் இருந்து விட்டு அரக்கப் பறக்க ஓடி வந்தாள்.

அவள் கால் டாக்சி பிடித்து, இருந்த வாகன நெரிசலில் வீடு வர தாமதம் ஆகிற்று. ராஜா எப்போதும் வீடு திரும்ப ஏழுக்கு மேல் ஆகும். மதியம் வந்து அவளோடு சாப்பிட்டு விட்டுச் செல்பவன் இரவில் தாமதமாக வருவதால், இன்று அவன் சாப்பிட்டு விட்டுச் சென்றப் பின்னே அவள் மாமியார் வீட்டிற்குச் சென்றாள்.

ராஜாவிடம் சொல்லாமல் சென்றதால் அவன் வருவதற்குள் வீடு திரும்ப எண்ண, பார்த்தால் அவளது கெட்ட நேரம் அவன் அவளுக்கு முன்பே வந்து சட்டமாக அமர்ந்திருக்கக் கண்டவள்,

“என்னங்க… சீக்கிரம் வந்துட்டீங்களா…? ஒரு நிமிஷம்….நான் வரேன்..” என அறைக்குள் நுழையப் போனவளைத் தடுத்தவன்,

“உனக்கு நான் என்ன சொல்லியிருக்கேன்…. நான் வரும்போது வீட்டில இருக்கனும்னு சொல்லியிருக்கேன் இல்லையா..? என்றான் அதட்டலாக.

இதே அவன் கொஞ்சம் அமைதியாகக் கேட்டிருந்தால் மதுவும் அமைதியாகப் பதில் தந்திருப்பாளோ என்னவோ அவன் அப்படி அதட்டி கேட்கவும் அவளுக்கும் கோபம் வர,

“அதுக்காக இந்த நாலு சுவத்தைப் பார்த்துட்டேவா இருக்க முடியும்…?” என்றாள் அவனுக்குக் குறையாதக் கோபத்தோடு.

“நாலு சுவத்தைப் பார்க்கச் சொல்லல.. ஆனா நான் வர நேரத்துல நீ வீட்டுல இருக்கனும் இல்லையா…? அரை மணி நேரமா நீ இல்லாம டென்ஷன்ல இருக்கேன் நான்…. போன் செஞ்சா எடுக்க மாட்ட மது நீ..” என்றான் கடுப்புடன்.

“கார்ல சத்தம் கேட்கல.. இந்த ஊர் ட்ராஃபிக்ல நான் மாட்டிக்கிட்டேன்… அதுக்கு எதுக்கு வந்தவுடனே நிக்க வைச்சு கேள்வி கேட்கிறீங்க…?”

“அப்படி எங்க போன நீ..?”

“அத்த வீட்டுக்குப் போனேன்…”

“அங்க போகாதன்னு சொன்னா நீ கேட்க மாட்ட இல்ல.. எனக்கு வேண்டாம்னு நான் நினைக்கறவங்க உனக்கு வேணுமா… போனது தான் போனேன்… சொல்ல மாட்டியா நீ…. ஒரே தலைவலி…. நீ வேற வீட்டில இல்ல…” என மீண்டும் எரிந்து விழ

“என்ன சும்மா டென்ஷன் ஆகுறீங்க… எனக்கு எல்லாரும் வேணும்.. சும்மா வீட்டுக்குள் அடைஞ்சு கிடக்க முடியாது.. கல்யாணத்துக்கு முன்னாடி எங்க வீட்ல தான் இப்படி ரூல்ஸ் போட்டு டார்ச்சர்னா இப்ப நீங்களும் என்னை அடிமை மாதிரி நடத்துறீங்க…” எனக் கோபத்தில் கத்தினாள் மதுரவசனி.

ஒருவர் கோபத்தில் தகிக்கும் சமயம் அடுத்தவர் தணிந்து செல்ல வேண்டும் இல்லாவிடில் கோபம் தணியாமல் தகித்து அழிவையே தரும். இங்கும் ஒருவரும் விட்டுக்கொடுக்காமல் நீயா நானா என்று சண்டையிட துவங்கினர்.

அதீத அன்பின் காரணமாய் அவளைக் காணாத தவிப்பில் ஏக்கத்தில் அவன் பேசினான். ஆனால் அவளுக்கோ அது அடிமைத்தனமாய்த் தோன்றியது.

‘அடிமை’ என்று வார்த்தை ராஜாவுக்கு ஆத்திரத்தைக் கிளப்ப,

“என்னடி அடிமை… எல்லாம் உன்னிஷ்டத்துக்குத் தானே இருக்கு… என்ன அடிமைன்னு கேட்கிறேன்.. உன்னை ராணி மாதிரி தானே நான் பார்த்துக்கிறேன்..” என்றான் உணர்ச்சி மிகுதியில்.

ஆனால் அது புரிய வேண்டியவளுக்குப் புரியவில்லையே..!

சிறுவயதிலிருந்துப் பெண்பிள்ளை என்பதால் வீட்டில் ஆண்மக்களுக்குக் கிடைத்த சுதந்திரம் கிடைக்காமல், தன் ஆசைகளைப் பூட்டியே வைத்துப் பழகி, அது கிடைக்கப் போராடி வாழ்ந்தவளுக்குத் திருமணத்துக்குப் பின்னும் கணவனின் அடக்குமுறைப் பிடிக்காமல் போனது. அவன் அவள் மீது காட்டும் அதிகமான உரிமையுணர்வு, கட்டுப்பாட்டை அவள் வெறுத்தாள்.

‘அடக்குமுறையின் போது சுதந்திரமாய் இரு’ என்ற கூற்றிற்கேற்ப, அவள் வெடிக்க, அது ராஜாவின் காதல் உணர்வுகளை அடிவாங்கச் செய்தது. பொக்கிஷமாகப் போற்றிப் பாதுக்காக்கும் மனைவி அவன் காட்டும் அன்பை அடிமைத்தனம் என்று சொல்வதை அவனால் தாங்க முடியவில்லை.

மதுரவசனிக்கோ அவன் இருக்கும் நேரம் உணராத தனிமை, அவன் இல்லா நேரங்களில் எல்லா வேலைகளையும் செய்துக் கொண்டு சுயத்தை இழந்து தனியாகத் தனிமையில் இருப்பதை மனச்சோர்வைத் தர, அவளும் வெடித்தாள்.

அவள் வீட்டு ஆண்கள் எல்லாரும் இரவில் தான் வீடு திரும்புவர். அப்போது அவர்களிடம் பேச நினைத்தால் கூட சிறிது நேரமே பேச அனுமதிப்பான் ராஜா. போன வாரம் அவள் தங்கை ப்ரியாவுக்குப் பிறந்த நாள் பரிசு வாங்க அவள் கடைக்குச் சென்று தாமதமாய் வீடு திரும்ப, அதற்கும் அவன் சண்டையிட, இவள் தான் சமாதானமாகப் போக வேண்டி இருந்தது.

இப்படி அவள் பிறந்த வீட்டுக்குப் பேசவும், வெளியே செல்லவும் என ஒவ்வொன்றிருக்கும் அவனிடம் அனுமதி கேட்டு, அவளுக்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையை, அதுவும் அவள் சிறுவயது லட்சியத்தைக் கூடக் கணவனுக்காக, அவனின் அன்பிற்காக துறந்தவளை ஒவ்வொன்றிருக்கும் இப்படி நடத்துவது மதுரவசனியை வெகுவாக பாதிக்க, ஏற்கனவே காலையில் இருந்து சமையல் செய்து, விரைவாக மாமியார் வீடு செல்ல வேண்டும், பின்னர் இவனுக்காக சீக்கிரம் திரும்ப வேண்டும் என்ற அலைச்சல் எல்லாம் உடலையும் சோர்வுறச் செய்ய, அது மனச்சோர்வையும் தர என்றும் இல்லாமல் அதிகமாக கணவனிடம் வார்த்தையை விட்டாள்.

“சும்மா எல்லாத்துக்கும் உங்க பெர்மிஷன் கேட்கனுமா நான்..? நான் மனுஷி இல்லை… எனக்கும் ஆசாபாசம் எல்லாம் இருக்காதா…? உங்களுக்காக என் லட்சியம்..… சின்ன வயசிலர்ந்து பிஸீனஸ் செய்யனும்.. நானும் தனியா ரன் பண்ணனும்னு ஆசைப்பட்டேன்… ஆனா உங்களுக்காக நான் அதையெல்லாம் விட்டேன்…. அதைக் கொஞ்சம் கூடப் புரிஞ்சிக்காம.. எப்பவும் உங்க சந்தோஷம் தான் முக்கியம் இல்ல.. உங்க மனசுபடி நான் நடக்கனும்… நீங்க என் மனசு படி நடக்க மாட்டிங்க.. இல்ல…? என்ன ராணி மாதிரி நடத்துறீங்க.? தங்கக் கூண்டில இருக்கக் கிளி சந்தோஷமா இருக்குமா..? ராணி மாதிரி நீங்க நடத்துனா போதுமா… நான் உணர வேண்டாமா…? நான் அப்படி உணரலங்க…” என்று கத்தி விட்டுக் கதவை அடைத்து அறையினுள் சென்றாள்.

அவள் கதவை அடைக்க, ராஜாவுக்கு இங்கே மனம் அடைத்துக் கொண்டது. காதலையும் கட்டுப்பாட்டையும் இங்கே தான் குழப்பிக் கொள்கிறோமா இல்லை மனைவி குழம்புகிறாளா எனப் புரியவில்லை. ஆனால் மதுவே அவனிடம் பிடிவாதமாக வேலைக்குப் போக வேண்டும் என்று சொல்லியிருந்தால் அவன் நிச்சயமாக அவள் ஆசையை நிறைவேற்றி இருப்பான்.

அதை செய்யத் தவறிவிட்டாள் மதுரவசனி. கணவனின் காதலில் சுகமாய் நனையும்போது தோன்றாத எண்ணங்கள் அவன் இல்லா சமயம் தோன்றி அவள் மனதை வாட்டியதின் விளைவு தான் இச்சண்டை.
மதுரவசனி கோபத்தில் கத்தினாலும் சிறிது நேரம் கழித்து அவள் மனம் கணவனுக்காக வருந்த ஆரம்பித்தது. என்னதான் கோபம் இருந்தாலும் அவளுக்கும் ராஜாவின் மீது குறையாதப் பேரன்பும் பெருங்காதலும் உண்டல்லோ..??

‘அதிகமாகப் பேசி விட்டோம்’ என உணர்ந்தவள் அவனைப் பார்க்க விழைந்து ஹாலுக்கு விரைய, அவனோ வீட்டைப் பூட்டி விட்டு வெளியேச் சென்று விட்டான்.

மனதின் புகைச்சல் அவனது வேகத்தில் தெரிந்தது. காரில் வெகு தூரம் சென்றவனுக்கு வாழ்வு எவ்வளவு தூரம் செல்லும் என தெரியவில்லை. மதுரவசனியை நோக வைத்து விட்டோம் என மனம் ஒரு புறம் வருந்தினாலும் தன் காதலை அவள் வலிக்க வலிக்க வார்த்தைகளால் அடித்ததை அவனால் தாங்க முடியவில்லை.

வலி வேதனையெல்லாம் கோபமாகி அவனை அமைதியிழக்கச் செய்தது. அடுத்த நாள் ஒரு நிகழ்ச்சிக்காக அவன் ஆஸ்திரேலியா செல்ல வேண்டும். அதனால் மனைவியை பிரிய வேண்டுமே என்ற மன உளைச்சலோடு வீட்டிற்கு வந்துப் பார்த்தால் மதுரவசனி இல்லாத தனிமை மனதைத் தாக்க, அவளைக் கண்டதும் வார்த்தைத் தடிக்க இப்போது கோபத்தில் தகிக்கிறான்.

வெகு நேரம் சுற்றி விட்டு வீட்டை அடைந்து விட, அங்கே மதுரவசனி கையில் அவள் அலைப்பேசியை வைத்து வண்ணம் சோஃபாவில் தூங்கிப்போயிருந்தாள்.

அவனது அலைப்பேசியை வீட்டிலேயே விட்டுச் சென்றதால் அவளால் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை. மனைவியின் நிலை கண்டவனின் மனம் கோபத்தில் கனன்றாலும் அவளைத் தூக்கிச் சென்று மெத்தையில் படுக்க வைத்தான்.

மறு நாள் காலையில் எழுந்தவுடன் அமைதியாக அவன் வேலைகளைப் பார்த்தவன், மதுரவசனியிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. பேச அவன் திமிர் இடம் கொடுக்கவில்லை. எதுக்காகவும் வாழ்வில் நிலை இறங்கக் கூடாதென்ற அவனது பிடிவாதமும் வைராக்கியமும் அவனுக்குத் தூபம் போட்டன.

அவன் ப்ரட்டை எடுத்து டோஸ்ட் செய்து, சாப்பிட்டு விட்டு ,ஒரு பையில் அவன் துணிகள் எல்லாம் பேக் செய்தவனைக் கண்டு,

“எங்க கிளம்பிட்டீங்க நீங்க..?” என மது கேட்க, அவளை முறைத்தவன்

“உங்கிட்ட சொல்லனும்னு எனக்கு அவசியம் இல்ல…” என்றபடி வீட்டை விட்டு வெளியேறப் போனவன் ,

அவனின் செயலில் திகைத்து நின்றவளைக் கண்டு ,

“மது…. நம்ம பிரச்சனை நமக்குள்ள இருக்கனும்…சும்மா ஊரெல்லாம் சொல்லாத… ரகுவுக்குப் போன் செய்ற வேலையெல்லாம் வைச்சிக்காத… நான் ஆஸ்திரேலியா போறேன் ஒரு கான்சர்ட்… என் மனசு சரியானுதும் தான் வருவேன்..” என்றவன் விரைந்து சென்று விட்டான். அவள் பதில் பேசும் முன் அவன் சென்று விட,

மனம் நொறுங்க அப்படியே தரையில் அமர்ந்தாள் மதுரவசனி. எப்படி அவளை சுற்றி வருபவன் இன்று இப்படி நடந்து கொள்கிறான் என. அவள் பேசியது சற்றே அதிகப்படி என அவளுக்குத் தெரியும். ஆனாலும் அவன் காதல் அவனது கோபத்தைத் தணிக்கும் என அவள் நம்ப, அவளுக்கே அவனது கோபம் கண்டு அதிர்ச்சி தான்.
 
ராஜா ஆஸ்திரேலியா சென்றதும் அவன் இல்லாத தனிமை அதிகம் வாட்ட, மனம் சுணங்கினாள் மதுரவசனி. எப்போதுமே அவள் பிறந்ததிலிருந்து அவள் வீட்டில் ஜனக்கட்டு அதிகம் தான். வேலைக்கு வந்த பின்பு கூட ஹம்சா அவளுடன் தான் தங்கியிருந்தாள். அதனால் அவளுக்கு தனியாக இருக்கும் சூழ்னிலை வரவில்லை. ஆனால் ராஜா வேலைக்குச் சென்று விட்டால் அவள் தனியாக இருப்பதே அவள் உள்ளத்துச் சோர்வை அதிகரிக்கச் செய்ய, அதுவே ஒரு கட்டத்தில் கோபமாய் உருமாறி வெடித்தது.

ஆஸ்திரேலியாவில் இருந்த ராஜாவுக்கு மனம் அமைதியின்றி அலைப்பாய்ந்தது. மதுவின் வார்த்தைகளே மனதில் திரும்பத் திரும்ப அசரீரியாக ஒலித்தது.

“ராணி மாதிரி நீங்க நடத்துனா போதுமா… நான் உணர வேண்டாமா…? நான் அப்படி உணரலங்க…”

“நான் அவளை அப்படித்தானே நடத்துகிறேன்.. ஆனால் அது ஏன் அவளுக்குப் புரியவில்லை. நான் அவ கூட நிறைய நேரம் இருக்கனும்னு தானே ஆசைப்பட்டேன்… அவளை எனக்கு அவ்வளவு பிடிக்குமே… அவ கேட்டா நான் எதையுமே இல்லன்னு சொல்ல மாட்டேன்னே… ஏன் அவ ராணி மாதிரி உணரல… எனக்கு சர்வமா அவ இருக்க மாதிரி அவளுக்கு நான் ஏன் இல்ல.. ஒரு வேளை நான் அதெல்லாம் உணர்த்த தவறிட்டேனா…??” என்று மனதிற்குள்ளாக பேசினான்.

கள் குடித்தவன் மீண்டும் மீண்டும் கள்ளையே நாடிப் போதைக்கு அடிமையாவது போல், ராஜ் நந்தனும் மனைவியின் நினைவை ஒதுக்க வேண்டுமென்று நினைத்து அது முடியாமல் அவன் தலைவியையே நினைத்து நினைத்துப் போதையில் தவித்தான்.

அவள் பெயரில் மட்டும் போதையில்லை. அவள் நினைவு கூடப் போதை தான் என்று உணர்ந்தான் அவன்.

இருந்தும் அவனது பிடிவாதக் குணம் தலைத்தூக்கியது. என் மீதே தவறு இருந்தாலும் கூட அவளாகத் தான் என்னிடம் வர வேண்டும். என்னை என் தவறோடு அவள் ஏற்க வேண்டும். யாரிடமும் அது என்னுயிர் மனைவியாக இருந்தாலும் கூடச் சுயத்தை இழந்து நான் அவளிடம் மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று முடிவு செய்துக் கொண்டான்.

ஆனால் அதே சுயகௌரவம் தன்னில் பாதியான அவன் மனைவிக்கும் இருக்கும் என அவன் நினைக்கவில்லை.

கணவனைப் பிரிந்தவளுக்கு மாமியாரின் வீட்டிற்குச் செல்லவும் மனமில்லை. அங்கே சென்றால் அவன் கோபத்தீயை இன்னும் பற்றியெரியச் செய்யும் என்பதை அறிந்தவள், தனியாக இருக்கப் பிடிக்காமல் தஞ்சாவூருக்குப் புறப்பட்டாள்.

ராஜ் நந்தன் வெளியூர் போயிருப்பதாகவும் அதனால் பிறந்த வீட்டை பார்த்து விட்டுச் செல்ல வந்ததாகவும் கூற, அவர்களுக்கும் வெகு மாதங்கள் கழித்து வந்த மகளை சீராட்டினர்.

உடல் சோர்வு தாக்க, சிறிது நேரம் பிறந்த வீட்டினரோடு அளாவி விட்டு உறங்கச் சென்ற மது மீண்டும் எழுந்த போது தடுமாறி மயங்கி விழ, குடும்பம் மொத்தமும் பதற,

பார்த்தால் ஜீனியர் ராஜாவோ மதுவோ உதயம் என்ற செய்திக் கேட்டு குடும்பம் மொத்தம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க, உடனே சுந்தர் ராஜனிடம் போன் போட்டு இந்த விஷயத்தை ரவிச்சந்திரன் பகிர, ஸ்ரீராம் ராஜ் நந்தனுக்கு வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பினான்.

மதுரவசனிக்கும் பெருமகிழ்வு. குழந்தை வர வேண்டும் என்று ராஜா எவ்வளவு விரும்பினான் என்று அறிந்தவள் ஆயிற்றே அதனால் அவள் இன்பக்கடலில் திளைத்தாள்.

ராஜாவுக்கு மதுரவசனி தன்னிடம் சொல்லாமல் பிறந்த வீட்டிற்குச் சென்றது கடுப்புதான் என்றாலும் குழந்தை விஷயம் அனைத்தையும் மறக்கச் செய்ய, நிகழ்ச்சி முடிந்த அடுத்த நிமிடத்தில் கிளம்பி இந்தியா வந்தவன் நேரே அடுத்த விமானம் ஏறித் திருச்சிராப்பள்ளி வந்து சேர்ந்தவன் தஞ்சாவூருக்கு வாடகைக் காரில் வந்து இறங்கினான்.

அவனைக் கண்டதும் மோகனா ,

“மாப்பிள்ளை வாங்க…. வாங்க….. அக்கா…. மாப்பிள்ளைத் தம்பி வந்திருக்கார்…” என்று பரபரக்க வீடே ஒரே நிமிடத்தில் கூடி அவனை உபசரிக்க,

மதுரவசனியைப் பார்க்கத் துடித்த மனதை அடக்கவியலாமல் அவன் கண்கள் தவிக்க, அதை வெளிக்காட்டாமல் கெத்தாக இருப்பது போல் காட்டிக் கொள்ளப் பிரயர்த்தனப்பட்டான் ராஜ் நந்தன். தன் மனம் அவளைத் தேடுவதை அவளிடம் காட்டுவது அவனது கௌரவத்துக்கு இழுக்காகக் கருதினான்.

மனைவியைப் பார்க்க வேண்டும் என்று தவியாய் தவித்தவன் குழந்தை என்ற ஒற்றைக் காரணம் கிடைக்க ஓடோடி வந்து விட்டான். ஆனால் அவளுக்காக தான் வந்தேன் என ஒப்புக்கொள்ளப் பிடிவாதம் இடம் தரவில்லை.

அவனும் மனைவியை கண்ணீல் காட்டுவார்கள் என்று காலத்தை ஓட்டித் தள்ள, பலகாரமாக வந்து அவன் முன் அடுக்கி உபசரிக்க, ஒரு கட்டத்தில் ,

ஹரிணியிடம் “ஏன் மா…மது எங்க…?” எனக் கேட்க

“அவ ரூம்ல இருக்கா அண்ணா… காலையில் இருந்து ஒரே வாமிட்… அதான் தூங்கிட்டு இருக்கா…” என்று சொல்ல, அடுத்த நொடி வேகமாக மாடியில் இருக்கும் அவள் அறைக்குச் செல்ல, அப்போதுதான் மதுரவசனி எழுந்து முகம் கழுவி விட்டுக் கண்ணாடி முன் நின்றுப் பொட்டு வைத்தாள்.

கண்ணாடியில் பின்னாடி நின்ற கணவனின் பிம்பம் தெரிய, மனதுக்குள் ஆனந்த அலையடிக்க, அவனைப் பிரிந்த ஏக்கம் கண்களைக் கலங்கச் செய்ய, அவனைப் பின்னால் திரும்பி நின்று நோக்க,
கதவைச் சாத்தி விட்டு, மனைவியை நெருங்கியவனோ அவளின் நிலையைக் கண்டாலும் அவள் பேசிய பேச்சும் அவனிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்குக் கிளம்பி வந்ததும் ஒரு கோபத்தை தோற்றுவிக்க, பிடிவாதமாக அப்படியே அழுத்தமாக வாய் மூடி நின்றான்.

அவன் கோபம் உணர்ந்தாலும் அவன் அவளைத் தேடி வந்ததே அவளுக்குப் போதுமானதாக இருக்க,

“சாரி…நந்து” என்றபடி அவள் கண்ணீரோடு நிற்க, அவன் அசையவில்லை. அப்படியே ஆதரவாக அவன் தோளில் சாய்ந்து அவள் அழ,

“கன்னத்தில் முத்தத்தின் ஈரம்
அது காயவில்லை
கண்களின் ஏன் இந்த கண்ணீர்
அது யாராலே ..?
காதலன் மடியில் பூத்தால் ஒரு பூப்போலே
மன்னவனே உன் விழியால் பெண்விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்து விட்டால் ஆராரிரோ பாடு”

பொங்கி வரும் கோபத்தைப் பெருகி வரும் காதல் அடக்க,மனைவியை அவன் கைகள் தாமாகத் தழுவிக்கொள்ள,

“சாரி… எனக்கு அன்னிக்கு ரொம்ப டயர்ட்… ஏதோ கோபத்துல.. அப்படி பேசிட்டேன்பா… மன்னிச்சிடுங்க…. ரொம்ப தேங்க்ஸ்….. என்னைப் பார்க்க வந்ததுக்கு” என மன்னிப்பை வேண்ட

அதுவரையில் வாய் திறவாமல் இருந்தவன் இப்போது வேண்டுமென்றே, “நான் உன்னைப் பார்க்க வரல.. என் குழந்தையைப் பார்க்க தான் வந்தேன்…” என்றான் விரைப்பாக.

அவனின் பிடிவாதம் உணர்ந்தவள், அவனின் கன்னத்தைக் கிள்ளி,

“சாருக்கு இன்னும் கோபம் போகல போல… நீங்க மட்டும் பாவமே நம்ம பொண்டாட்டி… தனியா விட்டு ஆஸ்திரேலியா போறோமேன்னு பார்த்தீங்களா…? ஆனாலும் நான் பேசினது தப்பு தான்… ஏன் நீங்க மட்டும் முன்னாடி எங்கிட்டக் கோவப்பட்டதே இல்லையா.. ஆனா நான் மறக்கல…” எனச் சொல்ல

“மறந்தவ எப்படி டி இப்ப சொல்ற..?” எனக் கடுப்போடு கேட்க

“சாரி… அது அப்ப இருந்த டென்ஷன்… உங்களுக்குத் தெரியாம அத்த வீட்டுக்குப் போக நினைச்சேன்…. வந்தா மாட்டிக்கிட்டேன்…. அரை மணி நேரம் நான் இல்லாம தனியா இருக்க உங்களுக்கு முடியல.. அப்போ காலையில் இருந்து நான் தனியா இருப்பேனே நான் பாவம் இல்லையா…? சும்மா எல்லாத்துக்கும் ஹிட்லர் மாதிரி செஞ்சா…. கோவம் வராதா…?”

“ஏன் டி.. இப்ப தெளிவா பேசுற இந்த வாய்… அப்போ எங்க போச்சு.. எனக்கு ரொம்பப் போர் அடிக்குதுங்க… எனக்கு வேலைக்குப் போகனும்னு பிடிவாதமா நின்னியா… நான் சொன்னதும் உன்னை யாருடி தலை ஆட்ட சொன்னா..? நான் ஹிட்லரா உன்னை..” என அப்படியே அவளை இறுக்கி அணைக்க,

“அய்யோ…பாப்பா…” என அவள் அலற,

“சாரி…சாரி..” என்றபடி அவன் சில அடித் தூரம் போக, மதுரவசனி வாய் விட்டுச் சிரிக்க

“என்னடி ஏன் இப்படி சிரிக்கிற…?” என ராஜா முறைக்க

“பின்ன…இப்படி ஜெர்க் அடிச்சா…?” எனக் கிண்டலடிக்க

“உன்னை…” என்றபடி அவளை நெருங்கிக் கட்டிலில் அமர்ந்தவன் ,

“இங்க பாரு மது… உனக்காக தான் நான் எல்லாமே செய்றேன் டா.. அது ஏன் உனக்குப் புரிய மாட்டேங்குது…. நீ எனக்காகன்னு பார்த்து உன் மனசைப் பூட்டி வைச்சிக்காத…. எதுவா இருந்தாலும் மனசைத் தொறந்து பேசு.. நான் கஷ்டப்படுவேன்னு முதல்ல சொல்லாம இருக்க… பின்னாடி ஒரு நாள் அது உன் மனசைக் குடைஞ்சு பெருசா வெடிக்கும்போது அதை தாங்கற சக்தி எனக்கில்ல மதும்மா…” என மென்மையாக அதே நேரம் வருத்தமாகச் சொல்ல,

“சாரிங்க…இனி இப்படி செய்ய மாட்டேன்….” என்று மனதார உரைக்க

“செஞ்சுதான் பாரேன்…” என அவன் மிரட்ட

“செய்ய மாட்டேன்…” என அவள் அவன் தோள் சாய,

“சரி சரி…” என்றவன் அவளை அப்படியே சாய்த்து அவள் வயிற்றில் முத்தமிட்டவனின் விழிகளில் நீர் நிறைந்து அவள் மென்வயிற்றில் விழ,

“என்னங்க..” என்றபடி மதுரவசனி எழுந்திருக்க,

“ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டி. நமக்காக ஒரு குழந்தை.. என்னோட ரத்தம்.. என்னோட முதல் ரத்த உறவு.. நீ என்னதான் என் சொந்தமா இருந்தாலும் என் குழந்தை மாதிரி ஆகாதுல்ல… இட் இஸ் வெரி வெரி ஷ்பெஷல் டூ மீ….” என்றான் நெகிழ்வாக.

“அப்ப என்ன விட குழந்தை முக்கியமா…?” என மது முறைப்போடு கேட்க

“ஆமா…” என்றான் உடனே.

அதில் அவள் முகம் சுணங்க,
“நீ மட்டும் என்னவாம்..என்னை விட உன் வீட்டாளுங்க முக்கியமான்னு கேட்டா…. எனக்கு எல்லாரும் வேணும் தானே சொல்வ… அது மாதிரி எனக்கு என் குழந்தை தான் முதல்ல… நெக்ஸ்ட் தான் நீ…” என்றான் அவளைக் கடுப்பேத்தும் விதமாக.

“அப்போ போங்க.. உங்க குழந்தையையே கொஞ்சிக்கோங்க..”

“கண்டிப்பா… மாட்டேனா சொல்வேன்… இன்னும் எட்டு மாசம் தான்.. அதுக்கு அப்புறம் பார் என் புள்ளையை இளவரசனோ இல்ல இளவரசி மாதிரியோ வளர்க்கிறேன்… நீதான் என்னோட ராணி இல்லன்னு சொல்லிட்ட..” என்று குத்திக்காட்ட,
“உங்களுக்கு நான் சொல்ல வரது புரியல.. புரிஞ்சிக்க நீங்க முயற்சி செய்யல… அதுக்கு உங்க ஈகோ இடம் கொடுக்கல… என்ன தான் அக்கறையோ அன்போ காட்டினாலோ எல்லாருக்கும் ஒரு சுயம் இருக்கும்.. சுயமா முடிவு அது தப்போ சரியோ எடுக்க விருப்பம் இருக்கும்.. ஆனா என் விஷயத்துல நீங்களே எல்லாமே எடுக்கிறீங்க… அது எனக்குப் பிடிக்கல. உங்களுக்குப் புரியல..” என்றபடி அவள் அறைக்கதவைத் திறக்கப் போக

“புரிய வேண்டாம் விடு…இப்ப இந்த சந்தோஷம் உலகத்துல எனக்கு ரொம்பப் பெருசு…. அதை அனுபவிக்க விடு…” என்றவன் அவளை அணைத்துக் கொள்ள,

மதுரவசனிக்கோ ‘இவன் இப்போதும் என்னை உணரவில்லை. என் நிலை இவனுக்குப் புரியவில்லை. காதலாக இருந்தாலும் கூட என்னிடம் இவன் மன்னிப்புக் கேட்கத் தயங்குகிறான். என்னிடம் ஏன் இந்த பிடிவாதம்…? என்னிடமே இவ்வளவு வீம்பு என்றால் அத்தை மாமாவிடம் இவன் வீம்பு குறையவே குறையாது’ என்று தோன்றியது.

இருவரும் மாலையில் தேநீர் பருகி விட்டு ஹாலில் அமர்ந்திருக்க, வீட்டு ஆட்கள் அனைவரும் மாப்பிள்ளையின் வரவை ஒட்டிச் சீக்கிரமே வந்து ராஜாவோடு பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது ப்ரியா ஓடி வந்து ,
“அக்கா… நீ வீணை வாசிச்சு ரொம்ப நாள் ஆகுது… இன்னிக்கு வாசிச்சுக் காமியேன்…” என்று ஆசையாகக் கேட்க

ராஜாவோ, “ஹே…! நீ வீணை வாசிப்பியா…?” என்று கேட்டான் கிசுகிசுப்பாய்.

“ம்ம்..” என அவள் சொல்ல

“இப்ப வாசி மது…” என ராஜ் நந்தன் சொல்ல,

“ஆமா… வாசி மது..” என்று ஹரிணி உரைக்க,

“மது உனக்குன்னு தானே வாங்கின வீணை… நீ மீட்டிக் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு.. இன்னிக்கு வாசிடி ராஜாத்தி..” என மதுரவல்லியும் சொல்ல,


“சரி” என்று அவளும் வாசித்தாள்.அவள் வீணையில் மீட்டிய இசையில் மொத்தக் குடும்பமும் கட்டுண்டு கிடந்தது என்றால் ராஜாவோ மயங்கிப் போனான்.

கணவன் மேல் தனக்கிருக்கும் காதலை உணர்த்திடும் நோக்கில்,

“காதல் கணவா…!
உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே…!!
தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே சத்தியம் சத்தியம் இது சத்தியம்….!
ஒரு குழந்தை போலே…ஒரு வைரம் போலே தூய்மையான என் சத்தியம் புனிதமானது.
…………………………………………………………………………

உனது உயிரை எனது வயிற்றில் ஊற்றிக் கொள்வேன்
உனது வீரம் எனது சோரம் பிள்ளைக்குத் தருவேன்…
……………………………………………………….
உன் கனவுகள் நிஜமாக எனையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீள என்னுயிர் தருவேன்…!!”

என இசை மீட்ட, அந்த உணர்வில் இருந்து வெளிவர ராஜாவுக்கு வெகு நேரம் பிடித்தது. மதுரவசனியின் காதலில் கட்டுண்டு கிடந்தான். அவன் கண்ணில் நீர் நிறைய அவளைப் பார்க்க, அவளோ அவனை காதலோடும் கனிவோடும் பார்த்தாள்.

குடும்பம் மொத்தமும் அவளைப் பாராட்ட, ஆயூஷ் ஓடி வந்து அவள் மடியில் குதித்து அமர வர,

“ஹே…! ஹே..!உட்காராத….” என்றபடிக் குழந்தையை அவன் மடியில் தாங்க, அனைவரும் அவனை குறுகுறுவென பார்க்க, சங்கடமாக உணர்ந்தாலும் ,

“இல்ல.. அது மது…. கன்சீவா இருக்கா இல்லை…. தம்பி வயித்துல குதிச்சிட்டா.. அதான்..” என்று சொல்ல ஹரிணி எதாவது தவறாக எடுத்துக் கொள்வாளோ என்று நினைத்த சுலோச்சனா உடனே,

“மாப்பிள்ளை சொல்றதும் சரிதான்… குழந்தைக்குத் தெரியாது இல்லை.. நாம தான் பார்த்து சாக்கிரதையா இருக்கனும்… என்ன ஹனிமா…?” என்று சொல்ல
ஹரிணியோ புன்னகையோடு “ஆமா அத்த.. அது சரிதான்… இவன் துள்ளுற துள்ளு தான் எனக்குத் தெரியுமே… இப்பவே அண்ணா மதுவை இப்படி பார்த்துக்கிறார்னா இன்னும் கொஞ்சம் மாசம் ஆனப் பின்னாடி மதுவைக் கையில தூக்கிட்டு தான் சுத்துவார்..” என்று இயல்பாகப் பேசினாள்.

தன் குழந்தையை ராஜா தூக்க வேண்டாம் என்று சொன்னதால் அவள் கோபித்திருப்பாளோ என்று ஹரிணியை மன்னிப்பு வேண்டி மதுரவசனி பார்வை பார்க்க, ஹரிணியோ புன்னகையோடு மதுவைப் பார்த்துக் கண்ணடித்தாள். அதில் மதுவின் முகமும் இயல்பானது.

ஹரிணி சொன்னதுக்கு அனைவரும் சிரிக்க, மதுவோ ராஜ் நந்தனைக் கர்வமாக ஒரு பார்வைப் பார்த்தாள்.

“என்ன பார்வை இது..?” என அவன் கேட்க

“இல்ல.. அண்ணி ஏதோ கிண்டலுக்கு சொல்றதா நினைக்கிறாங்க… ஆனா எனக்குத் தானே தெரியும். நீங்க உண்மையிலே அப்படி செய்ற ஆள்னு..” என்று பெருமையாகச் சொல்ல

இதழ்க்கடையில் சிரிக்காமல் சேமித்த வண்ணம் இருந்த குறுஞ்சிரிப்போடு ,
“தெரிஞ்சா சரிதான்..” என்றான் ராஜாவும்.

“நான் அத்தைக் கிட்ட தான் போவேன்…” என்று ராஜாவின் மடியில் இருந்த ஆயுஷ் அழத்துவங்க,

ஹரிணியோ “அம்மாட்ட வா… நீ… அத்தைக்கு உடம்பு சரியில்ல..” எனக் கை நீட்ட,

அவள் கையை அடித்தக் குழந்தை, “நான் வர மாட்டேன்…. போ.. அத்தட்டப் போகனும்..” என அழ,

“நோ…நோ..அழாத டா…குட்டிப்பையா…” என்றபடி குழந்தையைத் தூக்கிப் போட்டுப் பிடிக்க ஆயுஷ் கிளுக்கிச் சிரிக்க, குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியே சென்றவன் வெகு நேரம் ஏதேதோ பேசிக்கொண்டு குழந்தையை சமாதானம் செய்ய, குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் அவனைப் பார்த்தனர்.

பூம்பொழில் மகிழ்வோடு “மதும்மா…நீ ரொம்பக் கொடுத்து வைச்சவ டா..” என தாயாய் மகிழ்ச்சிக் கொள்ள

“ஆமா.. நம்ம வீட்டு ஆளுங்க எல்லாம் குழந்தை சிரிச்சாதான் கையில் வாங்கி கொஞ்சுவாங்க.. அழுதா நம்மக்கிட்டக் கொடுத்திட்டுப் போய்டுவாங்க… ஆனா மாப்பிள்ளை அவரே குழந்தைக்கு ஏத்த மாதிரி பேசி சமாதானப்படுத்துறார்.. மதுவுக்குக் குழந்தையைப் பார்த்துக்கிற கவலையில்ல” என்று சொன்னார் மோகனா.

இவர்கள் பேசிக்கொண்டு இருக்க, வெளியே வந்த ஸ்ரீராம்,

“மாப்பிள்ளை..என்ன சொல்றான் இந்த வாலு..?” என

“சாருக்கு… பெரிய எஞ்சினியர் ஆகனுமாம்.. பறக்கிற கார் செய்யனுமாம்…” என்று ராஜா புன்னகையோடு சொல்ல
“ மாப்பிள்ளை முதல்ல இவனை இறக்கி விடுங்க.. என் பொண்டாட்டி நீங்க இவனை சமாளிச்சதைப் பார்த்து என்னை முறைக்கிறா… ஏன்னா எனக்கு இப்படிப் பேசி சமாளிக்கத் தெரியாது… எங்க வீட்டில உங்களைப் புகழ்ந்துட்டு எங்களை நல்லா இந்த பொம்பளைங்க திட்டுறாங்க..” எனச் சிரிக்க

“ஹா ஹா. .சரி சரி மச்சான்.. ஃபீல் பண்ணாதீங்க… ஆயூஷ்..அப்பாட்ட போறியா…?”

“நோ மாமா… நான் அத்தைக்கிட்ட போறேன்.. அத்தை வயித்துல இருக்க பாப்பா கிட்டப் பேச போறேன்.” என்று சொன்ன குழந்தையை ஸ்ரீராம் அதிர்ச்சியாகப் பார்க்க

“குழந்தைகளுக்கு புரியுற மாதிரி சொன்னா புரிஞ்சிப்பாங்க மச்சான்.. மறைக்க மறைக்க தான் என்ன இருக்குன்னு ஆர்வம் அதிகமாகும்… இப்ப நான் அத்தை வயித்துல ஒரு அழகான பாப்பா இருக்கு.. நீ உட்கார்ந்தா அதுக்கு வலிக்கும்னு… சொன்னேன்.. அவனும் சமத்தாக் கேட்டுக்கிட்டான்…” என்று சொல்லி ராஜா புன்னகைக்க,

ஸ்ரீராமும் புன்னகையோடு குழந்தையை அழைத்துச் சென்றான்.

இரவில் அனைவரும் உணவு உண்ணும் நேரம் அமுதன் படித்துக் கொண்டிருந்தவன் திடீரென,

“ஏன்மா… இந்த அசோகருக்கு அறிவில்லையாம்மா… போருக்கு போறதுக்கு முன்னாடியே இழப்பு வரும்னு தெரியலையா… போர்ல ஜெயிச்சா ஊருக்குப் போகாம.. ஏன் மாறினார்..?” எனக் கேட்க

மோகனாவோ, “எங்கிட்ட சொல்லிட்டா டா அவர் மாறினார்.. என்னைக் கேட்கிற… உங்கப்பாவே எங்கிட்ட சொல்லிட்டு எதுவும் செய்ய மாட்டார்… இருக்கறதைப் படி” என முனக

“என்னடி என் புள்ளைய இழுக்கிற…? என மதுரவல்லி ஒரு அதட்டுப் போட்டுவிட்டு,

“டேய் அமுதா…. அசோகர் சந்திரகுப்த மௌரியரோட பேரன்… அவர் பொறந்தப்போ ரொம்ப குச்சியா… ஊதினா பறக்கற போல இருந்தாராம்.. அவரை யாருக்குமே பிடிக்கலயாம்…. அரசனா கம்பீரமா தான் இருக்கனும்.. ஆனா அவர் அப்படி இல்லையே…” என மதுரவல்லி கதை சொல்லத் துவங்க, அமுதன் புத்தகத்தை எடுத்துக் கொண்டு மதுரவல்லியின் அருகில் வந்தான்.

பெண்கள் அனைவரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு, சமையல்கட்டில் பாத்திரங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.
 
“இப்ப சொல்லு ஆத்தா.. அப்படி ஒட்டடக் குச்சியா இருந்த அசோகர் எப்படி சக்ரவர்த்தி சாம்ராட் அசோகரா ஆனாரு…?” என்றான் ஆர்வமாய்.

“ராசா… அவருக்கு அடிக்கடி கைவலி கழுத்து வலினு ரொம்ப நோவு… எப்பவும் போர்வைக்குள்ளேயே சுருண்டு கிடக்க ,யாருக்கும் அவர் அப்பா பிந்துசாரர்க்கும் பிடிக்காம போச்சு.. பின்ன வயசுப்புள்ளனா சுறுசுறுன்னு இருக்கனும்ல… மந்தமா இருக்கலாமா.. ஒரு ராஜா.. அசோகருக்கு இதனால் ரொம்ப மன வருத்தமாகிப் போச்சு.. அப்புறம் என்னை எல்லாரும் இப்படி பரிகாசம் செஞ்சு ரேக்காறாவோளே(கிண்டல்) அவங்களை சும்மா விடுறதான்னு… போர்வையைச் சுருட்டி எரிஞ்சிட்டு வாளை சுத்தினார்.. வாள் அவரோட ஆறாவது விரல் போல அவரோடு ஒட்டிக்கிச்சு.. அதுக்கு அப்புறம் என்ன… அவர் கிண்டல் செஞ்சவங்களை எல்லாம் சிறையில அடைச்சாராம்..”

“அப்புறம்.. என்ன ஆச்சு ஆத்தா?” என்றான் ஆர்வமாக அமுதன். கூடவே ப்ரியா, ஆயூஷும் வந்து அமர்ந்திருந்தனர். ராஜாவும் அமைதியாக அவர் சொல்வதைக் கேட்டிருந்தான்.

ஸ்ரீராம் ஃபைல்ஸை பார்க்க வேண்டி அவன் அறைக்குச் சென்று விட, மற்ற மூன்று மகன்களும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஸ்ரீவத்சனும் பன்னிரெண்டாம் வகுப்பு என்பதால் அவன் அறைக்குள் புகுந்துப் படிக்கத் தொடங்கினான்.

மதுரவசனி கையில் பாலை வைத்துக் கொண்டு குடிக்க முடியாமல் தவிப்போடு அமர்ந்திருக்க,

ராஜா, “கதை சொல்றாங்க இல்ல.. கேட்டுட்டே குடி.. எங்க ஆத்தாவும் இப்படி தான் தெனைக்கும் கதை சொல்லும்..” என்று இயல்புப் போல் சொல்லி விட்டுக் கதையைக் கவனிக்கலானான்.

பேரப்பிள்ளைகளின் ஆர்வம் கண்டு மதுரவல்லியும் கதையைத் தொடர்ந்தார்.
“அப்படியே அவர் பெரிய மாவீரர் ஆகிட்டார்… அவரைக் கண்டாலே எல்லாரும் பயப்பட ஆரம்பிச்சாங்க… இப்படித்தான் அசோகர் வீர தீரமிக்க ராஜாவானார்.. ஆனால் ஏன் நம்ம அசோகரை மட்டும் இன்னும் ஞாபகத்துல வைச்சிருக்கோம்..”

“ஏன் ஆத்தா.?” என்று ப்ரியா கேட்க

“ஏனா… எல்லா அரசருமே இப்படித்தான் பெரிய போர் வீரர்களா இருந்தாங்க.. ஆனா அசோகர் அப்படி இல்லை… கலிங்கப் போர் அவர் வாழ்க்கையை மாதிச்சு… எல்லாருக்கும் ஒரு நாள் வரும்.. நம்ம வாழ்க்கையை மாத்தி நல்லபடியா அமைச்சிக்க… அப்படித்தான் அவருக்கு லட்சக்கணக்கான மக்களோட இறப்பைப் பார்த்து இரக்கம் வந்துச்சு.. போரோட நோக்கம் வெற்றிதான்.. ஆனால் அதை எல்லா அரசரும் தான் செய்வாங்க… வெட்டு.. குத்து ரத்தம்.. போர்..!! இப்படியா என்னோட வாழ்க்கையையும் மக்கள் பேசனும்னு நினைச்சார்..”

இப்படி ஆத்தா கதைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மதுரவசனி பாலைக் குடித்து விட்டுப் படுக்கச் செல்ல, ராஜாவோ கதை கேட்டு விட்டு வருவதாகச் சொன்னான்.

“என்னைப் பார்த்து பயந்தா போதுமா…? இதுவா என்னோட சாதனை…? முன்னாடி என்னைப் பார்த்துப் பரிகாசிச்சாங்க… இப்ப பயப்படுறாங்க.. ரத்த நிறத்தில் மாறிப்போன வாளைப் பார்த்தார்.. அதுவா கம்பீரம்..? என்னை வெறுத்தவங்களை நான் வெறுக்கலாம்… அவங்களை அழிக்கலாம்…”

“வெறுக்கறவங்களை அழிக்கலாம்.. ஆனா வெறுப்பை அழிக்க முடியுமா..? வெறுக்கறவங்களை அழிக்கிறத விட வெறுப்பை அழிக்கக் கஷ்டம் இல்லையா…? எல்லாரும் நம்மைப் பார்த்துப் பயப்படுறது எளிது.. ஆனா நேசிப்பது கஷ்டம் இல்லையா…? போர் செய்ய ஒரு நிமிசம் போதும்.. ஆனா சமாதானம்…. அது கஷ்டம்.. ஆனால் எல்லாரையும் அன்பால் வெல்ல முடியும்… அப்புறம் இதை உணர்ந்த அசோகர் ஒரு முடிவு எடுத்தார்..”

“என்ன முடிவு..?” என்றான் ராஜ் நந்தன்.

“மாப்பிள்ளைத் தம்பி நீங்களுமா கேட்கிறீங்க..?” என்றார் மதுரவல்லி.

“ஆமா ஆத்தா.. கதை நல்லா இருக்கு.. எங்க ஆத்தா கூட இப்படி தான் கதை சொல்வாங்க.,,”

“அதுக்கு அப்புறம் அசோகர்… என்னோட வாளை மட்டுமில்ல.. என்னோட கருத்தையும் நான் யார் மேலயும் திணிக்க மாட்டேன்… என்னோடு முரண்படுகிறவர்களை நான் வரவேற்பேன். பலவீனமானவர்களை என் நாடு அரவணைக்கும்.. அப்படின்னு சொல்லி வாளைத் தூக்கிப் போட்டார்.. கடைசி வரைக்கும் எடுக்கல…. அதனால் தான் அவரோட அன்பு காட்டுற குணத்தால தான் அவரோட புகழ் நிலைச்சு நிக்குது….” என்று கதையை முடித்தவர்,

“சரி பிள்ளைங்களா.. நாழி ஆவுது.. போய் வெள்ளனுமே படுங்க… இனிமேலாவது யார்கிட்டையும் சண்டைப் போடக்கூடாது… சரியா… அன்பா இருந்தா தான் அசோகர் மாதிரி வர முடியும்… சரியா…. படிச்சா மட்டும் போதாது.. அதன்படி நடக்கனும்…” என்றார் மதுரவல்லி.
அமுதனோ “ஆத்தா.. எனக்கு நாளைக்கு இந்த கொஸ்டின் தான் டெஸ்ட்.. இப்ப புரிஞ்சிடுச்சு… எங்க மிஸ்… டக்குனு மாறிட்டாரு சொன்னாங்க.. இந்த கதையெல்லாம் தெரியல… நீயே பேசாம டீச்சர் ஆகியிருக்கலாம் ஆத்தா.. நான் நாளைக்கு இந்த கதையை க்ளாஸ்ல சொல்லி நல்ல பேர் வாங்கிடுவேன்… இப்பப் படிச்சிட்டு நான் தூங்கப்போறேன்..” என்றான் நல்ல பிள்ளையாய்.

ராஜாவும் தூங்கப் போனான். படியேறும் போது அவன் மனதில் ஆத்தா சொன்ன வார்த்தைகளே ஒலித்தன.

“என்னோட கருத்தையும் நான் யார் மேலயும் திணிக்க மாட்டேன்..
வெறுக்கறவங்களை அழிக்கலாம்.. ஆனா வெறுப்பை அழிக்க முடியுமா..?”

இந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதில் ஒலித்தன.. மதுரவசனி சொன்னது போல் தன் கருத்தை அவள் மேல் திணிப்பது கூடத் தவறுதானோ என்று சிந்திக்கத் தொடங்கினான். அசோகருக்கே அந்த நிலை என்றால் நான் சாதாரண மனிதன். நான் ஏன் என்னை வளர்த்த என் தாய் தந்தையோடு இன்னமும் பிடிவாதமாகப் பேசாமல் இருக்கிறேன். ஏன் இப்படி வெறுப்பை சுமக்கிறேன்..? எனஒ பலவாறு யோசனை செய்த வண்ணம் மெத்தையில் விழுந்தான்.

மனைவியைக் கண்டதும் அவள் மாலையில் அவனுக்காக உருகி வீணை மீட்டியது நினைவில் வர அவள் நெற்றியில் முத்தம் வைத்தவன்
“ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மது… அப்பாவாகப் போறேன் இல்லையா.. இப்ப ஒரு அமைதி இருக்கு மனசுல… உனக்கு என்ன வேணுமோ கேளுடா..” என்றான் காதலுடன்.

“என்ன கேட்டாலும் தருவீங்களா…?அப்புறம் மாட்டேன்னு சொன்னா…”

“ நான் கொடுத்த வாக்கைக் காப்பாத்துவேன் மது…” என்றான் அழுத்தமாக.


“எனக்கு நம்ம எல்லாரும்… அத்தை வீட்டுக்கே போய் பழையபடி ஒன்னா இருக்கனும்னு ஆசை….நிறைவேத்துவீங்களா..?” என்றாள் கேள்வியாய்.

அவள் கேள்வியில் அவன் உடல் ஒரு கணம் இறுகிப் போனது. ராஜ் நந்தன் மனைவியைக் கூர்மையாகக் குற்றம் சாட்டும் பார்வைப் பார்த்தான்.

ஆட்டம் தொடரும்…!!!


This is a beautiful rendition....My favorite????


இது எபில வர song...veena portion.


Happiee readinggg:love::love::love::love:

thanksss alll
 
Top