Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ராஜா ராணி - 19

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
காதல் 19:

ஸ்விட்சர்லாந்து..

அந்த உயர்தர நட்சத்திர விடுதியில் உள்ள ஹனிமூன் சூட்டில் தன் மனைவிக்காகக் காத்திருந்தான் தீபன். வெளியே தெரிந்த அழகிய காட்சிகளைக் கண் மூலமாக தன்னுள்ளே வாங்கியவனின் அருகில் வந்து நின்றாள் ஹம்சகீதா.

அவளைக் கண்டதும் சிநேகப்பார்வை வீசிய கணவனிடம் புன்னகைப் புரிந்தவள்,

“எனக்கு உங்க கிட்டப் பேசனும்…” என்றாள் தயக்கத்தோடு.

“பேசனும்னா டைரக்டா பேசு ஹம்மு…. அதுக்கு எதுக்கு பெர்மிஷன்…?.. அன்னிக்கு உன்னோட போனைக் கேட்டு சண்டைப் போட்டப் பொண்ணா இது..?” என்றதும் ஹம்சாவின் முகம் வாடிப்போக

“ஹே..! என்ன ஹம்மு… பேசு.. ஏன் அமைதியா இருக்க…?”

“நீங்க என் மேல கோவமா இருக்கிங்களா என்ன…?”

“நான் ஏன் உன் மேல கோவப்படனும்…? அதுவும் இன்னிக்கு சான்சே இல்லை.. எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்… நீ என்னோட மனைவியான நாள்.. நான் ஏன் கோவமா இருக்கனும் ஹ்ம்ம்.?” எனக் கேட்க

“இல்ல.. நான் உங்களைக் காதலிக்க சம்மதிக்கல இல்லையா… அதான்..”

ஒரு அதிர்ச்சிக் கலந்தப் பார்வையை அவள் பக்கம் வீசியவன்,
“அப்போ இனியும் என்னை லவ் பண்ணப் போறதில்லையா…நீ…?” என்று கேட்க

இப்போது அதிர்வை வெளிப்படுத்துவது ஹம்சாவின் முறையாயிற்று.

“பின்ன என்ன நீ….? காதலை சொல்ல எனக்கு எவ்வளவு உரிமை இருக்கோ.. அதை மறுக்க உனக்கும் அதே உரிமை இருக்கு… அதனால் எனக்கு கோபம் இல்ல வருத்தம் தான்.. ஒரு பொண்ணை இம்ப்ரெஸ் செய்ய முடியலன்னு… ஆனா அதுல உன் தப்பு ஒன்னுமே இல்லை ஹம்மு.. உங்கம்மாவுக்கு நல்ல மகளா இருந்திருக்க நீ.. நாளைக்கு நானும் நம்ம பசங்கட்ட அதையே தானே எதிர்ப்பார்ப்பேன்… இப்ப கூட உங்க அம்மா சம்மதிச்சு உனக்கு விருப்பமில்லனா நான் உன்னை விட்ருப்பேன்..”

“விடுவீங்க… விடுவீங்க… நானெல்லாம் விட மாட்டேன்…”என அவள் புன்னகையோடு சொல்லவும்,

“விடமாட்டேனு சொல்லி அங்கேயே நிக்கிற ஹம்மு…” என அவன் வம்பிழுக்க அவன் அருகில் சென்று தோளில் அடிக்க, அவளை அப்படியே அணைத்துக் கொண்டான்.

தான் விரும்பிய பெண்ணே தனக்கு மனைவியான சந்தோசத்தை அன்றிரவு அவளோடு கொண்டாடித் தீர்த்தான் ராஜதீபன்.

*****************************************************************************

தஞ்சாவூரில் உள்ள அவர்களது இல்லத்தில் அனைத்து உறவுகள் சூழப்பட்டு இருந்தாலும் தனிமையது தலைவியை சூழ்ந்திருந்தது. முதல் மூன்று நாட்கள் இத்தனை நாள் பிரிந்திருந்தக் குடும்பத்தைக் கண்டு அவர்களோடு கொஞ்சிக் குலாவி மகிழ்ந்த மதுரவசனியின் மனம் ஓரத்தில் கணவனுக்காக அவனின் அழைப்பிற்காக ஏங்கித் தவிக்கத்தான் செய்தது.

ஆனாலும் அவனிடம் தானாகப் பேச மனம் தயக்கம் கொண்டது. தயக்கம் என்பதை விட அவளது சுயகௌரவம் தடுத்தது. இப்படியாக நாட்கள் கழிய நான்கு நாட்கள் முடிந்தப் பின்னும் ராஜ் நந்தன் அவளுக்கு அழைத்துப் பேசவில்லை. அந்த கோபத்தில் ஊருக்குச் செல்லாமல் அவள் ஐந்தாம் நாளும் இருந்தாள். அவளது பிறந்த வீட்டினரும் இத்தனை மாதங்கள் பிரிந்த காரணத்தால் அவளுக்குப் பிடித்த உணவையெல்லாம் சமைத்துப் போட்டு, அவளைக் கண்ணும் கருத்துமாய் கவனித்தனர்.

ஆனாலும் வேயென்ன தோளைக் கொண்டிருந்த தலைவியவள் கொழுக்கொம்பு இல்லாத கொடி ஒன்று பற்றிப் படரமுடியாமல் தவிப்பது போல் ராஜா இன்றி தவித்தாள்.

இங்கே ராஜ் நந்தனோ பாட முடியாமல் தவித்தான். பிரிவுத் துயர் தலைவியை மட்டுமா பாதிக்கும்…? தலைவனையும் தானே..! அதனால் விளையும் துன்பங்களை நினைத்து தன் கடமையை மறக்க மாட்டான் தலைவன். ஆகையால் உள்ளுக்குள் உருகி மருகி உடையவளுக்காகத் தவித்தாலும் தனது மனப்போராட்டங்களை வெளியே அவன் காட்டவே இல்லை.

ஆனாலும் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் அவனது மனைவிக்காக ஏங்கியது. ஒவ்வொருவரும் உள்ளத்திலும் அன்பெனும் பண்பு பொங்கிக் கொண்டே தான் இருக்கிறது. அந்த அன்பை யாராவது ஒருவரிடத்தில் காட்டி மகிழ்வது உள்ளத்தின் இயல்பு. அதுவும் அன்பென்னும் சாரல் தன் மீது வீசாமல் புறக்கணிக்கப்பட்ட ராஜாவுக்கு அன்பு காட்ட ஒருத்திக் கிடைத்த பின் அவன் தனது அன்பைச் சாரலாய் அல்லாமல் சூறாவளியாகத்தான் வெளிப்படுத்தினான்.

இப்போது அவனுக்கு அவன் தாய் தந்தை என அனைவரையும் கிடைத்து விட்டாலும் அவள் இல்லாத தனிமை தீயாய் சுட்டது. ஆனால் மனைவியிடத்தில் அவனுக்கு அதீத கோபம் இருந்தது. அதை அவளிடம் காட்டவே அவன் தஞ்சாவூருக்கு விரைந்து சென்றான். தஞ்சாவூர் சென்ற பின்னோ நிலைமைத் தலைகீழாய் மாறிப்போயிருந்தது.

ராஜ் நந்தன் மதுரவசனியின் வீட்டிற்கு வந்தவுடனே “வாங்க மாப்பிள்ளை…” என்றபடி மோகனா வரவேற்க,மொத்த குடும்பமும் கூடிவிட,

மொட்டை மாடியில் விட்டத்தை வெறித்தவாறே கணவனின் திமிர் பிடித்த கணவனை மனதில் திட்டிக் கொண்டே இருந்தவள், வாங்க மாப்பிள்ளை என்ற சத்தம் கேட்டு, வேக வேகமாக படிகளில் இறங்கி வந்தவள் கடைசி இரண்டு படியில் தடுமாறி விழப்போக, சட்டென அவளைத் தாங்கிப் பிடித்தான் ராஜ்நந்தன்.

கணவனைக் கண்ட திருப்தியிலும், அவனைப் பிரிந்திருந்த வேதனையும், இப்போது படிகள் இறங்கும்போது நிலைத் தவறி விழுந்து குழந்தைக்கு எதாவது ஆகியிருந்தால் என்ற பதட்டம் எல்லாம் சேர கணவனின் தோள் பற்றி இருந்தவள் கணவனின் தோளில் சாய்ந்து தேம்பித் தேம்பி அழ,

“அறிவிருக்கா உனக்கு…. இப்படியா டி ஓடி வருவ…?” எனப் பூம்பொழில் மகளைத் திட்ட

சுலோச்சனாவோ “இன்னமும் விளையாட்டா உனக்கு மது…? வயித்துப்புள்ளத்தாச்சி கொஞ்சம் பார்த்து இருக்க மாட்ட…?” என அதட்டல் போட மோகனாவும் , “பார்த்து வரக்கூடாதா மது…?” எனக் கேட்க

மதுரவசனியோ இதை எதுவும் காதில் வாங்காது அழுகையிலேயே கரைய, “கொஞ்சம் எல்லாரும் அமைதியா இருக்கீங்களா…? எனச் சத்தம் போட்டான் ராஜா.

அதில் மாமியார் மூவரும் அடங்கிப் போக, அவனது சத்தத்தைத் திடுக்கிடலோடு பார்த்தாள் ஹரிணி.
“மது… ஒன்னுமில்லடா.. என்னைப் பாரு..” என முகம் நிமிர்த்த அப்போதும் அவள் அழுகைக் குறையவில்லை. அவளை தன்னிடம் இருந்து பிரித்து ,

“அத்த… ரூம்க்குப் போகனும்..…” எனக் கேட்க

“இந்த ரூம் தான் மாப்பிள்ளை..” எனச் சுலோச்சனா சொல்லி அவள் தங்கியிருக்கும் கீழ் அறைக்கு வழிகாட்ட,

மதுரவசனியை கைகளில் அள்ளியவன் அவளைத் தூக்கிச் செல்ல, மோகனாவோ வெட்கச்சிரிப்போடு இடத்தை விட்டு நகர,

மதுரவசனியோ அப்போது தான் சுய நினைவு அடைந்தவளாய், “அய்யோ… எல்லாரும் பார்க்கிறாங்க.. விடுங்க…” என அழுகையோடு சொல்ல

“பேசினா… தொலச்சிடுவேன் உன்னை…” என மிரட்டியவன் அவளை அறைக்குள் தூக்கிச் சென்றவன் அவளைக் கட்டிலில் கிடத்திக் கதவை அடைத்தான்.

அவள் கட்டிலில் உட்கார்ந்திருக்க, அவள் அருகில் அமர்ந்தவன்,

“என்ன நினைச்சதை சாதிச்சிட்டியா..?” என்றுக் கேட்க

அவள் புரியாமல் விழிக்க ,

“அப்படி ஒரு திமிர் இல்ல உனக்கு…. நானா தான் தேடி வரனும்.. இதுல டயலாக் அடிப்பா… நான் போகவே மாட்டேங்கன்னு… ஒரு போன் கூடப் பண்ண மாட்ட… அவ்வளவு பிடிவாதம்… நான் தானே கோபப்பட்டேன்.. அதுக்குக் கூட உரிமை இல்லையா எனக்கு..?” என்றான் அழுத்தமாய்.

மீண்டும் பழைய நந்தனைப் பார்ப்பது போல் தோன்றியது அவளுக்கு. ஏற்கனவே கீழே விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் இன்னமும் கை கால்கள் நடுங்கிக் கொண்டிருக்க, அவனது பேச்சில் இன்னமும் காயப்பட்டுப் போனாள். ஆனாலும் அவளும் அவனுக்குக் குறைந்தவள் இல்லையே…?

“அதே நானும் கேட்கவா… எனக்கு உங்க மேல கோவப்பட உரிமை இல்லையா…? அதுக்காக பொண்டாட்டிப் போனாலே அவள்கிட்ட பேசுவோமேன்னு உங்களுக்கு ஏன் தோணல…?” எனக் கோபமாகக் கேட்க,

“நான் அக்கறையா போன் செஞ்சா மேடம் என்ன சொல்வ… எனக்கு என்னைப் பார்த்துக்க தெரியும்னு சொல்வ. இல்ல… நான் என் குடும்பத்தோட இருக்கும்போது நொச்சுப் பண்ணாதீங்கன்னு சொல்லுவ.. ஏன் டி இவ்வளவு சொல்றியே... புருஷன் தனியா இருப்பானே.. அவன் கிட்ட பேசனும்னு உனக்குத் தோணிச்சாடி…? ஹ்ம்ம்… அக்கறைப்பட்டாலும் தப்பு.. பேசலன்னாலும் தப்பு இல்ல…. அன்னிக்கு உனக்குக் கால் வலிக்கும்னு உட்காரு சொன்னா… அப்படி கத்துற.. சரி கல்யாண வீட்டுல கோவத்தைக் காட்டக் கூடாதேன்னு அமைதியா போனேன்.. அதுக்குப்புறமாவும் நீயா பேசினியா… ஹ்ம்ம்.. நான் நாலு நாள் கழிச்சு வரேன்… நீங்க என்ன சொல்றிங்கன்னு தானே கேட்ட….” என்று கத்த

“நான் நாலு நாள் இருந்துட்டு வரேன்னு சொன்னா… போகாதன்னு சொல்ல உங்களுக்கு என்ன ஈகோ…?”

“அப்படியே விட்டேனா பாரு…? இதே நான் போகாதன்னு சொல்லியிருந்தா நீ சும்மாவா இருந்திருப்ப.. நான் என்ன அடிமையா..? என் வீட்டுக்குப் போக உங்க பெர்மிஷன் எதுக்கு…? அப்படி இப்படின்னு டயலாக் விட்டிருக்க மாட்ட…? நாலு நாள்ல வரேன்னு சொன்ன நீ ஏன் டி அஞ்சு நாள் ஆகியும் வரல.. கொடுத்த வாக்கைக் காப்பாத்த தெரியாதா உனக்கு…?”

“நீங்க கோபத்துல எங்கிட்ட பேசல.. நீங்க பாட்டுக்கு உங்க வேலையைப் பார்த்துட்டு தானே இருந்தீங்க…. உங்க மனசு என்னைத் தேடல தானே…? ஒரு போன் செஞ்சு நல்லா இருக்கியானு கேட்டா என்ன… நான் தான் திமிர் பிடிச்சவ.. நீங்க ரொம்ப நல்லவர் தானே..?” எனப் பதிலுக்குக் கேட்க

“இங்க பாரு மது…. நான் உன்னைத் தேடுறேன்னு எப்படி காட்டச் சொல்ற…? என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டான்னு ஸ்டேட்டஸ் போடனும் வாட்ஸ் அப்பில.. இல்ல.. நெத்தியில போர்டு மாட்டிக்கிட்டு சுத்தனுமா… நான் உன்னைத் தேடுறது என்னோட உணர்வு… அதை நான் ஊருக்கு வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டத் தேவையில்லை.. என்ன சொன்ன நான் உன்னை தேடல இல்ல.. அப்புறம் ஏன் டி நாலு நாள்ல நீ வரலன்னதும் மதியம் சாப்பிடாம கூட ஃப்ளைட் பிடிச்சு உனக்காக ஓடி வரேன் நான்…? நீ என்னைப் புரிஞ்சிக்க முயற்சியே பண்ணல.. நானா என் காதலை சொன்னதும் உனக்கு ஏத்தம் இல்ல..” என்றான் அழுத்தத்துடன்

அவளோ அழுகையோடு, “அப்படியெல்லாம் சொல்லாதீங்க… உங்களை எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா…? உங்க குரல் கேட்டு தான் நான் வேகமா ஓடி வந்து படியில விழப்பார்த்தேன்…” என விசும்ப, தாங்காத தலைவனவன் அவளைத் தன்னோடு அணைத்துக் கொள்ள,

அவனோடு துஞ்சியவள் அழுகையில் கரைய உடலோ நடுங்கியது. அவளது நடுக்கம் குறையாமல் இருக்கக் கண்டவன், அவளைப் பின்னோடு இறுக்கி அணைத்தான்.

“அழாத மதும்மா..” என அவன் மென்மையாகச் சொல்ல, அப்போதும் அவள் அழ

“உன்னைத் தேடாம இல்லடா… மது.. உனக்கான என்னோட தேடல் ரொம்ப ரொம்ப பெரிசு.. உன்னோட குரலை மட்டும் கேட்டுட்டு இருக்க முடியுமா என்னால.. அப்படி உன் குரல் கேட்டா அடுத்த நிமிஷம் நீ எனக்குப் பக்கத்துல இருக்கனும்டா.. உனக்கு ஞாபகம் இருக்க நான் உங்கிட்ட என் மனசை சொன்னப் பின்னாடி ஒரு மாசம் நான் கான்சர்ட்காக ஃபாரீன் போனேன்.. உங்கிட்ட அதுக்கு அப்புறமா போன்ல பேசியிருக்கேனா சொல்லு.. பேசினா உன்னை உடனே கிளம்பி வரச் சொல்லிடுவேன்னு பயம்மா எனக்கு… சரி நீயும் இவங்களை மிஸ் செய்வன்னு தான் தங்கிட்டு வரட்டும்னு விட்டேன்.. நாலு நாள் கஷ்டப்பட்டு நெட்டித் தள்ளினேன்.. ஆனா நீ என்னடான்னா எக்ஸ்ட்ராவா இருந்திட்ட.. அதான் உன்னைத் தூக்கிட்டுப் போகலாம்னு வந்தேன்..” என அவள் கன்னத்தில் முத்தமிட்டுவாறே நேசத்தோடு சொல்ல,

மதுரவசனி கணவனின் புறம் திரும்பி மூக்கோடு உரசி , “ நான் உங்களைத் தேடலன்னு பார்த்தீங்களா நீங்க.. என் புருஷனை நான் மிஸ் பண்றேன்னு நானும் போர்டு மாட்டிக்கிட்டா தொங்க முடியும்…? என் போனை பாருங்க…” என்று கொஞ்சிக் கொண்டே சொல்ல,

“உன்னைப் பார்க்க வந்தேனா.. இல்லை உன் போனையாடி….?” என்றவன் அவள் சொல் தட்டாது போனைப் பார்க்க, அதில் ஒளிர்ந்தது அவனது படம் தான். மியுசிக் ப்ளேயர் பாஸில் வைக்கப்பட்டிருக்க,

“அந்த ப்ளேயரை ஆன் செய்யுங்க..” எனச் சொல்ல

அவன் ஆன் செய்தால் ஒலித்தது அவன் பாடிய பாடல்.

“உங்க கிட்டப் போன் பேசலனாலும் நான் நாள் முழுக்க உங்கப் பாட்டைத் தான் கேட்டுட்டே இருக்கேன்… அப்புறம் ஏன் போன் பேசனும்… ஹ்ம்ம்.?” எனப் புருவம் உயர்த்திக் கேட்ட மனைவியின் கன்னத்தைச் செல்லமாய்க் கிள்ளியவன்,

“நீயாவது என் குரலை இப்படி கேட்கிற.. நான் எப்படி டி கேட்கிறதாம்..?”

“சாரி.. அன்னிக்கு நான் ஒரு தப்பு செஞ்சிட்டேன்.. அதான் உங்கக் கிட்டக் கோவமா பேசினேன்..” என்றவள் சரண் கீர்த்தி சந்தித்தைப் பற்றிச் சொல்ல,

“ஓஹ்…. அதான் விஷயமா..? சரி விடும்மா” எனச் சமாதானமாகப் பேசியவன்,

அவளது கால்களைப் பார்க்க லேசாக வீங்கியிருக்க, அதைத் தன் மேல் வைத்துப் பிடித்து விட
“என்ன நீங்க… என் காலைப் பிடிக்கிறிங்க…? விடுங்க…. மருந்துப் போட்டா சரியாகிடும்..” என இழுக்கப் பார்க்க

“ஓடி வந்ததுக்கே உன்னை அடிச்சிருக்கனும்… ஏதோ பாவம் அழுதியேன்னு விட்டேன்…. இனிமே ஜாக்கிரதையா இல்ல.. பிச்சுடுவேன்… காலைக் கொடுடி.. தைலம் இருக்கா.?” என வினவ

அவள் தெரியல என்று சொல்லவும் கதவைத் திறந்தவன் அங்கே ஹாலில் பூ கட்டிக் கொண்டிருந்த ஹரிணியைக் கண்டு,

“சிஸ்டர்…… வீட்டுல தைலம் இருக்கா… மதுவுக்குக் கால்ல வலி…” எனக் கேட்க

அவளோ அவன் சற்று நேரத்திற்கு முன் அவளைத் தூக்கிச் சென்ற காட்சி நினைவில் வர நமுட்டுச் சிரிப்போடு எழுந்து ,
“இருங்கண்ணா..” என்றபடி தைலத்தை எடுத்து வந்து மதுவின் அறைக்குள் நுழைந்து அவனிடம் தந்தவள் ,

“மது… இப்ப தான் காயத்தைப் பார்க்கிறீங்கன்னா அப்போ இவ்வளவு நேரம் என்ன செஞ்சீங்க..?” என விஷமமாய்க் கேட்க

“அய்யோ அண்ணி.. ஒன்னுமே இல்ல..” என மது அவசரமாகச்
சொல்ல

“ நம்பிட்டேன்.” என்றபடி அவள் நகர,

அதற்குள் அறைக்குள் நுழைந்த மதுரவல்லி ,
“என்ன மது நீ புள்ளத்தாச்சிப் பார்த்து வர மாட்ட… இன்னமும் பச்சபுள்ளையாட்டமே இருந்தா எப்படி… சுலோ…. கொஞ்சம் வெண்ணீர் வைச்சு எடுத்துட்டு வா… புள்ளைக்கு ஒத்தடம் கொடுக்கலாம்… லேசா வீக்கம் இருக்கு…” எனக் கட்டளையிட

சுலோச்சனா வெண்ணீரோடு வருவதற்குள், பூம்பொழில் செங்கலில் நொச்சி ஆடுதொடா இலை ஆகியவற்றைப் போட்டு சூட்டை ஏற்றித் துணியில் வைத்துக் கட்டி எடுத்து வர

“ஹோ… ஆடுதொடா போட்டியா.. சரி முதல்ல அதைக் கொடு…” எனச்
சொல்ல மதுரவசனிக்கு அவர் ஒத்தடம் கொடுக்கப் போக,

“அய்யோ.. ஆத்தா.. நானே கொடுக்கிறேன்.. நீங்க ஏன் சிரமம் படுறீங்க…” என ராஜா சொல்ல

“என் பேத்திக்கு செய்ய எனக்கு என்னயா சிரமம் இருக்கப்போவுது…? அதுமட்டுமில்லாம உனக்கு பதமா கொடுக்க வராது… நானே தரேன்..” என்றபடி அவர் ஒத்தடம் வைத்து முடிக்க

வெந்நீரோடு வந்தார் சுலோச்சனா.

“அத்தை வெந்நீர் போட்டுட்டேன்”எனவும்

“மது… செத்த நேரம் கழிச்சு இதுல காலை வை.. இதமா இருக்கும்…” என்றபடி அவர் போக

மோகனா ஜூஸோடு உள்ளே வந்தார்.
“இந்தாங்க மாப்பிள்ளை… நீங்க வந்து ரொம்ப நேரம் ஆகுது.. குடிக்கக் கூட எதுவும் கொடுக்கல…” என அவர் வருந்திச் சொல்ல

ஹரிணியோ மனதினுள், “எங்க அவர் டைம் கொடுத்தார் அத்த.. அவர் தான் பொண்டாட்டியைத் தள்ளிட்டுப் போய் கதவைச் சாதிட்டார்… நீங்க ஃபீலிங்கஸைக் குறைங்க…” எனக் கவுண்டர் கொடுத்தாள்.

ஜூஸைக் கையில் பெற்றுக் கொண்ட ராஜா,
“தேங்க்ஸ் அத்த… மது ஈவினிங் எதாவது சாப்பிட்டாளா…. இல்லன்னா அவளுக்கும் ஜூஸ் தரீங்களா..?” எனக் கேட்க

மதுவே வாய்த் திறந்து “ நான் குடிச்சிட்டுத் தான் மாடிக்கே போனேங்க..” எனச் சொல்ல

“சரிங்க மாப்பிள்ளை நீங்கப் பார்த்துக்கோங்க.. மது.. முதல்ல காலை வெந்நீர்ல விடு… மறந்துடாதே.. அத்தைக்கிட்ட திட்டு விழும்…” என எச்சரிக்க

ஹரிணியோ “மோகித்த.. நீங்க கவலையே படாதீங்க… அவ காலை விடலன்னா அண்ணாவே தூக்கி வைக்க வைச்சிடுவார்…” எனச் சொல்லி சிரித்தபடியே செல்ல

அவர்கள் போன பின் கதவை அடைத்தவன் ஜூஸைக் குடித்து விட்டு ,

“நான் கூட என்னமோன்னு நினைச்சேன் மது.. ஆனா உன் வீட்டில விக்ரமன் பட செட் மாதிரி ஆர்டிஸ்ட் நிறையா இருந்தாலும் எல்லாரையும் தனியா கவனிச்சிக்கிறாங்க… அதுக்குள்ள பாரேன்… பெரியம்மா உங்கம்மா.. சித்தி ஆத்தா அண்ணின்னு எல்லாரும் ஒன்னுக் கூடிட்டாங்க….” எனச் சிரிக்க

“ஆமா எல்லாரும் நல்லா பார்த்துப்பாங்க... ஆனா நான் எதிர்ப்பார்க்கவே இல்லை… நீங்க எனக்காக இறங்கி வருவிங்கன்னு… எவ்வளவு தெரியுமா உங்களை மிஸ் பண்ணினேன்…. ” என ஏக்கத்தோடு சொல்ல,
 
“இறங்கி வந்தாலும் நான் தான் மது ஜெயிச்சேன்.. உனக்கு ஞாபகம் இருக்கா.. கல்யாணம் ஆனப் புதுசில நான் இல்லாம நீ இல்லைன்னு ஏன் உனக்குத் தோணலன்னு கேட்டேன்.. நீ அதுக்கு எனக்கு எல்லாரும் முக்கியம்னு சொன்ன… முடிஞ்சா நீங்க முக்கியம்னு என்னை சொல்ல வைங்கன்னு சொன்ன… சொல்ல வைச்சேன் பார்த்தியா..?” என மனைவியின் காதலை வென்று விட்ட கர்வத்தோடு உரைக்க

“ஆமா… அதை ஒத்துக்க எனக்கு என்ன கஷ்டம்…. நீங்க இல்லாம எனக்கு இங்க பிடிக்கலதான்… நாங்களாம் மனு நீதிச் சோழன் ஊராக்கும்.. நீதியை ஒத்துப்போம்..” என மிடுக்காகச் சொன்ன மனைவியைக் காதலாக அணைத்துக் கொண்டான் ராஜ் நந்தன்.

இறங்கி வருவது தலையிறக்கமல்ல…. அது தலைவியின்பால் தலைவன் கொண்ட மயக்கமே… தீராத மயக்கம்…! காதல் ஆட்டத்தில் ஒருவர் வெற்றியைத் தன்னுடையதாய் மற்றவர் கருதும்போதே அந்த ஆட்டம் வெற்றியடைகிறது.

இங்கு ராஜாவின் வெற்றியே ராணியின் வெற்றி…அவர்கள் காதலின் வெற்றி…!!

ஒரு வாரத்திற்குப் பின்…

ஹம்சகீதா-தீபன் தம்பதியினர் தேனிலவுச் சென்றுத் திரும்பி விட்டனர். சமையலறையில் நின்று காய்கறி வெட்டிக் கொண்டு இருந்தாள் மதுரவசனி. அவளுடன் சேர்ந்து ஹம்சா சமையலைக் கவனித்துக் கொள்ள,

மது தான் பேச்சைத் தொடங்கினாள்.

“ஏன் டி ஹம்சா…. நம்ம சின்ன வயசில நினைச்சிருப்போமா.. இப்படி ஒரே வீட்டில இருப்போம்னு… செமயா இருக்குல்ல… நம்ம ப்ரண்ட்ஸ் எல்லாரும் ரொம்ப ஹாப்பி.. நீங்களாவது ஒண்ணா இருக்கீங்களேன்னு…” என உற்சாகத்தோடு சொல்ல

“ஆமா மது… எங்கிட்ட ராஜிம்மா கூடச் சொல்லி சந்தோசப்பட்டா…”

“ நம்ம ராஜிம்மாவா… ஆமா திரு அண்ணா எப்படி இருக்காராம்..?”

“ஹ்ம்ம்.. நல்லா இருக்காங்களாம் டி.. அவளும் உன்னை மாதிரி ஜுனியருக்கு வெயிடீங்…” எனப் புன்னகைக்க

“ஹம்சா.. ஆனா சும்மா இருந்தா நிறையா யோசிக்கத் தோணுதுடி..” என அலுப்பாகச் சொல்ல

“என்ன தோணும்… அத்தான் கூட டூயட் பாட தோணும்…. அதானே…” என வம்பிழுக்க
“போடி… அதான் வாழ்க்கையா..? பிறந்தோம்… வீட்டில இருக்கப்போ… அப்படி சண்டைப் போட்டு வேலைக்குச் சேர்ந்தேன்… அதுக்குள்ள கல்யாணம்.. இப்ப குழந்தை…. இதான் வாழ்க்கையான்னு தோணுது.. கல்யாணம் குழந்தை எல்லாம் நல்ல விசயம் தான்.. ஆனா இதானா வாழ்க்கை… இத்தனை நாள் அப்பா அம்மாக்காக வாழ்ந்தேன்.. இப்ப இவருக்காக வாழ்றேன்… இனி என் குழந்தை.. ஆனா எனக்காகன்னு எப்போ வாழ்ந்தேன் நான்…? மிஸ்.மதுரவசனி சிவச்சந்திரன் மிஸஸ்.ராஜ் நந்தன் ஆக மாறியிருக்கேன்.. அதான் மாற்றமா தெரியுது…” எனப் புலம்ப

“ஹே…! லூசு… எதுக்கு எப்படி குழப்பிக்கிற.. மாசமா இருக்கப்போ இப்படி எதாவது கண்டபடி தோணுமாம்… முதல்ல ரிலாக்ஸா இரு… அத்தான் உன்னை எப்படிப் பார்த்துக்கிறாரு.. அதுக்குக் கொடுத்து வைச்சிருக்கனும்..” என ஹம்சா சொல்ல

“அவர் என்னை என்னை விட நல்லா பார்த்துப்பார்.. அப்படி என்னைக் காதலிக்கிறார்… சாகற வரைக்கும்.. அந்த காதல் இருக்கும்…. அதுவும் இப்ப விட அதிகமாய்… ஆனா காதல் தான் வாழ்க்கையா….? காலேஜ்ல நான் அப்படி ஆவேன் இப்படி ஆவேன்னு வசனம் பேசினோம்.. ஆனா எல்லாரும் இப்ப எப்படி இருக்கோம்.. கடைசியில முப்பத்தாறு வயதினிலே ஜோதிகா மாதிரி ஆகிடுவோம் இல்ல…” என ஏக்கத்தோடு சொல்ல

“ஹேய்.. இப்படி பேசாத லூசு…. குழந்தைக்கு எதாவது ஆகிடப்போகுது.. சந்தோசமா இரு…” என அதட்ட

“ப்ச்… என் குழந்தைக்குக் கனவு காண சொல்லித்தரேன் டி நான்…” என்றாள் புன்னகையோடு.
காதல் வாழ்க்கையோடு இயைந்த ஒன்றா இல்லை காதல் தான் வாழ்க்கையா…?? காதல் மட்டுமே ஒரு பெண்ணின் அடையாளமாகிவிடுமா.. நல்ல கணவன் நல்ல பிள்ளைகள்.. இதுதான் என் அடையாளமாக வேண்டுமா..? என்ற கேள்வி அவளுள் ஆழப்பிறந்தது.

குறையாத காதல் மட்டுமே நிறைவான வாழ்க்கையா…??

ஆட்டம் தொடரும்..!!

//thankssssssssssssssssssssss much dearsssssssssssssssssss more an epi and epilouge to complete??????????
 
Top