Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் நித்யகல்யாணி அத்தியாயம் 16

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 16

இராமாயணத்தில் கதை ஒன்று சொல்லுவார்கள்.
குளத்தில் தண்ணீர் குடிக்க குனிந்த ராமன் கையில் இருந்த ராமபாணத்தை கரையில் குத்தி வைத்து விட்டு தண்ணீர் குடித்தான். தாகம் தீர்ந்த பின் அம்பை எடுக்கும்போது தான் கவனித்தான். அம்பு ஒரு தவளையின் மீது ஏறி இருந்தது. ராமன் சோகத்தோடு 'தவளையாரே! ஒரு சத்தம் போட்டிருக்கலாம் அல்லவா?' என்றான். உடனே வேதனையோடு தவளை, 'ராமா! எனக்கு எப்போதெல்லாம் ஆபத்து ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் நான் ராமா ராமா என்று உன்னைத் தான் கூப்பிடுவேன். ஆனால், இப்போதோ ஆபத்து உன்னால் ஏற்படுகிறது. நான் யாரை கூப்பிடுவேன்?' என்று கூறி விட்டு உயிர் துறந்தது.
அவ்வாறே தன் கற்பைக் காப்பாற்ற வேண்டிய ப்ராங்க்ளின் அதை சூறையாடுவதை அதிர்ச்சியில் கவனித்தாள் கல்யாணி. சாஃப்டாய் தென்பட்ட ப்ராங்க்ளின் காட்டுமிராண்டித் தனமாய் செயலில் ஈடுபட்டான். மனவலியில் அவளது உடல் வலி கூட மரத்து விட்டது. தன் காரியம் முடிந்ததும் களைத்து எழுந்த ப்ராங்க்ளின் உடைகளை மாற்றிக் கொண்டு வெளியே சென்று விட்டான். போர்வையால் தன்னை மூடிய கல்யாணி விக்கித்து இருந்தாள். வேலியே பயிரை மேய்ந்த கதையாய்... அவளுக்கு ரவியின் நினைப்பு வந்து குடைந்தது. தனக்காக எட்டு வருடங்கள் காத்திருந்த அந்த மகான் எங்கே? தங்கையாய் கருத வேண்டிய தன்னை எச்சில் படுத்திய இந்த காமாந்தகன் எங்கே? அவளுக்கு அழுகை வந்தது. தன் புனிதமான உடலை ரவிக்கு தர நினைத்த தன் ஆசையைக் குழிதோண்டி புதைத்த ப்ராங்க்ளின் மீது எரிச்சலும் வந்தது.
கண்கள் வழிந்தோட, மெதுவாக எழுந்து வாசல் கதவை சாத்தி விட்டு வந்தாள். பாத்ரூமில் சென்று ஷவரில் உடல் முழுவதையும் நனைத்தாள். வெதுவெதுவென்ற தண்ணீர் உடலுக்கு ஒரு சாந்தத்தை தந்தது. மீண்டும் நடந்த சம்பவம் நினைவுக்கு வர, மறுபடியும் கண்ணீர் ஊற்றெடுத்தது. சோப் போட்டு நன்கு தன்னை சுத்தம் செய்தவள் டர்க்கி டவலை சுற்றிக் கொண்டு வெளியே வந்தாள். கொண்டு வந்திருந்த பேக்கை எடுத்து திறந்து வேறு உடைகள் மாற்றிக் கொண்டாள். அவள் தங்க வேண்டிய ஹோட்டல் நகரத்தின் மத்தியில் உள்ள ஒரு த்ரீ ஸ்டார் ஹோட்டல். ஒரு டாக்ஸி பிடித்து நகரத்தை அடைந்து தென்பட்ட ஆறு ஏழு த்ரீ ஸ்டார் ஹோட்டல்களில் நுழைந்து ரிசப்ஷனில் காலேஜ் பேர் சொல்லி விசாரித்தாள். ஏழாவது ஹோட்டலில் விஷயம் சொன்னதும் ரிசப்ஷனிஸ்ட் ரூம் ஒன்றிற்கு போன் பண்ணவே மெடிக்கல் காலேஜின் ப்ரபசர், அவளுடன் வந்த மாணவ, மாணவிகள் எல்லோரும் கும்பலாய் ரிசப்ஷன் வந்து அவளை சூழ்ந்து கொண்டனர். மனிஷா ஓடி வந்து அவள் கையைப் பிடித்துக் கொண்டாள்.
'என்னடி ஆச்சு? எங்க போன?'
கல்யாணி ஏற்கனவே யோசித்து வைத்த பதிலை சொன்னாள்.
'இல்ல. வர வழியில சேவியர்ஸ் சர்ச்சைப் பாத்தேன். பைக்கை நிறுத்தி உள்ளே போனேன். திருப்பலி நடந்துட்டு இருந்தது. அது முடிச்சு சாமி கும்பிட்டுட்டு வரேன். வழியில கொஞ்சம் ட்ராபிக். பைக் காரனுக்கு வேற ஒரு கமிட்மெண்டாம். ஒரு டாக்ஸியில ஏத்தி விட்டுட்டு போயிட்டான். அப்புறம் இங்க வந்து நாலஞ்சு ஹோட்டல் அலஞ்சு ஒங்களப் பிடிச்சேன்.'
ப்ரபசர் திட்டினாள்.
'நல்லா சாமி கும்பிட்டே. ஏம்மா, நம்ம ப்ரோக்ராம்ல தான் சேவியர்ஸ் சர்ச் இருக்குல்ல. ஏன் நாளைக்கு போனா சேவியர் கோச்சுக்க போறாரா? நாலு மணி நேரமா ஒன்னத் தேடி தவிச்சு போயிட்டோம். ஒரு பொறுப்பு வேண்டாமாம்மா. டீனுக்கு சொன்னோம். என்ன கூப்பிட்டு திட்டுனாரு. ஏன் பைக்ல புள்ளைங்கள கூட்டிட்டு போனீங்க.. பஸ்லயோ இல்ல டாக்சியிலோ போயிருக்கலாம்லன்னு திட்டுனாரு. நல்ல வேள நீ வந்த. இல்லயோ நாங்க போலீசுக்கு போயிருப்போம்.'
மனிஷா அவளது பேக்கை எடுத்துக் கொண்டாள்.
'சரி. வா போலாம்.'
ரூமில் நாலு பேர் இருந்தனர். அவர்களோடு இவர்களும் சேர்ந்து கொண்டனர். கல்யாணி உர்ரென்று இருந்தாள். இன்னும் அந்த பாதிப்பில் இருந்து மனம் மீள வில்லை.
'ஏன் ஒரு மாதிரி இருக்கற?' என்றாள் மனிஷா.
சுதாரித்துக் கொண்ட கல்யாணி, 'ஒண்ணுமில்லயே. ட்ராவல் டயர்ட்னெஸ். நான் கொஞ்சம் தூங்கணும். சாப்பாடு ஒண்ணும் வேண்டாம். மத்தியானம் சாப்டதே வயித்துல இருக்கு. நீங்க வெளில பூட்டிட்டு போங்க சாப்டணும்னா. நான் தூங்கணும்.'
மெதுவாக மாக்ஸிக்கு மாறி ஒரு கட்டிலில் படுத்து போர்வையை கழுத்து வரைக்கும் இழுத்து போர்த்திக் கொண்டாள்.
மனிஷா மெதுவாய் அவள் பக்கம் வந்து, 'ஆமாம். ஒதடு ஏன் ஒரு பக்கமா வீங்கி இருக்கு?' என்றாள்.
அதிர்ந்த கல்யாணி, 'அது ஒண்ணுமில்ல. எறும்பு ஏதோ கடிச்சு வீங்கிருச்சு. ரொம்ப தெரியுதா மனிஷா?'
'இல்ல. லைட்டாதான். சரி நீ தூங்கு.'
கண்களை மூடி தூங்கியது போல் நடித்தாள்.
பத்து நிமிடங்கள் கழிந்ததும் அவர்கள் ஐந்து பேரும் சாப்பிட வெளியில் சென்று விட்டனர். கல்யாணியின் கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென்று வழிந்தது. நாயி! உடம்பைக் கடித்து குதறி விட்டான். அங்கங்கே எரிந்தது. அதிர்ச்சியில் உடல் மரத்துப் போக இப்போது தான் வலி உணர ஆரம்பித்தாள். வாயைத் துணியால் அடைத்துக் கொண்டு 'ம்ம்ம்...ம்ம்ம்' என்று முனகியபடி அழுக ஆரம்பித்தாள். எவ்ளோ நேரம் அழுதாளோ தெரியாது அப்படியே தூங்கிப் போனாள்.
மறு நாள் மனிஷா எழுப்ப எழுந்து கொண்டு ஊர் சுற்றிப் பார்க்க அவர்களோடு கலந்து கொண்டாள். வித்தியாசம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவே கலகல என்று இருப்பது போல் நடித்தாள். அஞ்சுனா பீச், மட்கோஆ பீச் என்று ஆறு பீச்கள் பார்த்தனர். கல்யாணியின் மனது எதிலும் ஒட்டவே இல்லை. சவேரியார் சர்ச்சுக்கு சென்றார்கள். கோல்டன் கலரில் விளங்கிய அந்த பழங்கால கட்டிடத்தையும் சவேரியாரின் உருவத்தையும் பார்த்ததும் கல்யாணியின் மன இறுக்கம் தளர்ந்தது. இனி தான் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தாள்.
தன் சினேகிதியின் மாமன் மகன்.. அவளுக்கு மிகவும் பிரியமானவன். அவனைக் காட்டிக் கொடுத்தால் அவர்களது வாழ்வு கெடும். தன்னால் மேரி டீச்சருக்கும் அவரது அண்ணனுக்கும் பகை உண்டாகும். சொல்லாமல் விட்டால் நாளை எப்போதும் அவன் முகத்தில் விழிக்க வேண்டி வரும். நடந்த சம்பவம் மனதை விட்டு என்றும் அகலாது அவனைக் காணும் போதெல்லாம் ரிவைண்ட் ஆயி தன்னை புதுப்பித்துக் கொண்டு அவளை படுத்தி எடுக்கும்.
கோவா டூர் முடிந்து பெங்களூர் வரும் வரை ஜன்னல் ஓர சீட்டை பிடித்து யோசித்துக் கொண்டே வந்தாள். ட்ரெயின் பெங்களூரை அடைந்ததும் அனைவரும் ஷாப்பிங் சென்றனர். இவளும் ஈடுபாடு இல்லாது கலந்து கொண்டாள். நித்யாவிற்கு ஒரு சாரியும், அம்மா மற்றும் மேரி டீச்சருக்கு ரெண்டு சாரிகளும், ஜேம்ஸ் சாருக்கு ஒரு வாட்சும் வாங்கிக் கொண்டாள். ரவிக்கு என்ன வாங்குவது என்று யோசித்த போது கண்கள் மறுபடியும் ஊற்றெடுக்கத் துவங்கின. கைக்குட்டையால் கண்களை யாரும் அறியாது துடைத்துக் கொண்டு அவனுக்கும் ஒரு வாட்சை வாங்கினாள்.
அவளுடன் வந்திருந்த அந்த எம் பி பையனும் அவனது நண்பர்களும் ஏதோ பொய் காரணம் சொல்லி விட்டு அன்றே பிளைட்டை பிடித்து ஊர் போய் சேர்ந்திருந்தனர். அவளுக்கு தன் மீதே கோபம் வந்தது. அந்த எம்பி பையனை அன்று திட்டாமல் இருந்திருந்தால் அவன் பழி வாங்க ஆசைப்பட்டு தன்னை அந்த ஹோட்டலுக்கு அழைத்து வந்திருக்க மாட்டான். அங்கு ப்ராங்க்ளினை சந்திக்க நேர்ந்திருந்திருக்காது. தனது சமூக கோபம் தன்னை பழிவாங்கி இருக்கிறது. அவளுக்கு பச்சாதாபம் பெருக்கெடுத்தது.
ட்ரெயின் மதுரையை நோக்கி நகர்ந்தது. மனம் பலவித யோசனைகளில் விழுந்தது.
இனி எப்படி நித்யாவுடன் நட்பை தொடர்வாள்? ரவியுடன் தனது நிலை என்ன? அவனிடம் உண்மையை சொல்லி விடலாமா? சொன்னால் ஏற்றுக் கொள்வானா? இல்லை விட்டுச் சென்று விட்டால் தன்னால் தாங்க முடியுமா? நித்யாவிடம் இதைச் சொன்னால் கண்டிப்பாக ப்ராங்க்ளினை கல்யாணம் பண்ணிக் கொள்ள மாட்டாள். இப்படிப்பட்ட பல நினைவுகள் அவளுக்கு பைத்தியம் பிடிக்க வைக்காத குறையாய் அவளை வறுத்தெடுத்தன.
மனிஷா தான் அவளை குறு குறு என்று பார்த்தாள்.
'நீ எதயோ என் கிட்ட மறைக்கிற கல்யாணி. பேய் பிடிச்ச மாதிரி இருக்க. எதயாவது பாத்து பயந்துட்டியா?'
'சே அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல. ஊர விட்டு இவ்ளோ தொலைவு வந்ததில்லயா.. அதான் அம்மா, அப்பா, நித்யாவ எல்லாம் தேடுது.'
'ஏன் ரவிய தேடலியாக்கும்?'
அவள் பதில் சொல்லாமல் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள்.
வெட்கம் போல என்று மனிஷா நினைத்து தன் கையில் இருந்த ஹெரால்ட் ராபின்சனில் மூழ்கிப் போனாள்.
மதுரை வந்தது. எல்லோரும் இறங்கினார்கள். அவரவர் அவரவர் நண்பிகளோடு பஸ்ஸில் அவரவர் ஊரைப் பார்க்க போக வேண்டும் என்பது பிளான். எல்லோரும் புரபசரிடம் விடை பெற்றுக் கொண்டு நகர்ந்தனர்.
'கல்யாணீஈஈஈஈஈ' என்று குரல் கேட்க திரும்பினாள். நித்யா நின்று கொண்டிருந்தாள் முகம் நிறைய பிரகாசத்துடன். தோழியைப் பார்த்ததும் அவளிடம் எல்லாவற்றையும் கொட்ட வேண்டும் என்று துடித்தாள் கல்யாணி. அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே லக்கேஜுடன் அவளை நோக்கி நகர்ந்தாள்.
'யார் வந்திருக்கா பாரு?' சொல்லியபடியே அவள் நகர பின்னால் தெரிந்தான் ப்ராங்க்ளின்.

(தொடரும்)
 
சே பாவம் கல்யாணியின் நிலை .என்ன முடிவெடுப்பாளோ. Mp பையனிடம் பிரச்சனை வச்சருக்க கூடாதுன்னு இப்போ யோசித்து என்ன பண்றது.
 

Advertisement

Top