Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் நித்யகல்யாணி அத்தியாயம் 19

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 19

ஆபிச்சுவரியில் வந்திருந்த சூரஜின் போட்டோவைத் திரும்பத் திரும்ப பார்த்தான் ப்ராங்க்ளின். அத்தனை உருவ ஒற்றுமை! கர்த்தரே! என்ன சோதனை இது! அதிர்ந்து சிலையாய் நின்ற ப்ராங்க்ளினின் கையில் இருந்த பேப்பரை வாங்கிப் பார்த்த நித்யாவும் அதிர்ந்தாள். உடனே அதை கல்யாணியின் கையில் கொடுத்தாள். கல்யாணிக்கு மயக்கமே வரும் போல் இருந்தது. அப்போ... தன்னை கெடுத்தவன் ப்ராங்க்ளின் இல்லை. அந்த நல்லவனைப் போய் தான் அபாண்டமாய் பழி சுமத்தி.. கடவுளே! அவனையும் நித்யாவையும் பிரிக்க வேண்டும் என்று கூட நினைத்தோமே! என்ன அசட்டுப் புத்தி எனக்கு!
சட் என்று ப்ராங்க்ளின் கையைப் பற்றிக் கொண்டு கண்ணீர் விட்டாள்.
'என்ன மன்னிச்சிடுங்க ப்ராங்க்ளின். உருவ ஒற்றுமை என்ன ஒங்கள தப்பா நெனக்க வச்சிடுச்சி. ஆனாலும் ஒங்கள நான் தப்பா எடுத்திருக்கக் கூடாது. பெண்மை திருடு போயிட்டேங்கற ஆத்திரத்திலயும் ரவிக்கு பவித்ரமா இருக்க முடியலயேங்கற கோபத்துலயும் புத்தி தடுமாறிட்டேன். என்ன மன்னிச்சிடுங்க. நான் பேசுன சொற்களுக்காக எனக்கு கண்டிப்பா கடவுள் கிட்ட இருந்து மன்னிப்பே கிடயாது.'
ப்ராங்க்ளின் ஆறுதல் படுத்தினான்.
'உன் மேல தப்பு இல்ல கல்யாணி. ஒன் நெலமைல யார் இருந்தாலும் அப்படி தான் நினைப்பாங்க. ஆனா நான் ஒரு விஷயத்துக்கு கர்த்தருக்கு நன்றி சொல்லணும். நல்ல வேள! நான் ஊர்ல இருந்தேன். இல்லன்னா நீ மட்டுமில்லாம நித்யாவும் இல்ல நீ சொல்றத நம்பி இருப்பா. அதுக்கப்புறம் நான் இந்த இடத்துல இல்லன்னு ப்ரூஃப் பண்ண மும்பைக்கும் நம்ம ஊருக்கும் எவிடென்ஸ் தேடி நாய் மாதிரி அலஞ்சிருப்பேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!'
இடையில் அந்த ரூம் பாய் ஏதோ கேட்க அவனிடம் திரும்பிய ப்ராங்க்ளின் சூரஜ் பற்றி தகவல்களை சேகரித்தான். சூரஜ் யார் என்ன என்று யாருக்குமே அந்த ஊரில் தெரியாது. சிறு வயதில் இருந்தே அந்த தெருக்களில் வளர்ந்து ஊரில் உள்ள எல்லா கெட்ட பழக்கங்களையும் சிறு வயதில் இருந்தே கற்று அதில் திறமை பெற்று ஊரில் ஒரு ரவுடியாகவும் பெண்களை ஏமாற்றும் பொறுக்கியாகவும் பேர் பெற்றிருந்தான். இந்த ஹோட்டல் முதலாளி அவனை அடியாளாய் வைத்திருந்தார். அந்த செல்வாக்கை வைத்து கல்யாணி போல் தனியாய் மாட்டும் கிளிகளை கவ்வும் பூனையாகவும் அப்பப்போ அவதாரம் எடுப்பான். கல்யாணியை சுவைத்த அன்று பைக்கில் சென்ற போது ரோட்டில் ஆக்சிடெண்ட் ஆயி ஸ்பாட் அவுட் ஆகியிருந்தான். ப்ராங்க்ளின் ரூம் பாயிடம் தன்னைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லி விட்டு நித்யாவைப் பார்த்தான்.
'நித்யா! போதும். இனி இங்க நான் இருக்றது சேஃப் இல்ல. சூரஜ் பண்ண தப்புகள் எல்லாம் என் மேல வந்துரக் கூடாது. நான் அவன் இல்லைன்னு நிரூபிக்கிறதிலெயெ என் பொழப்பு போயிரும். கமான். சீக்கிரம் ஊரப் பார்க்க போலாம்.'
நித்யாவுக்கும் கல்யாணிக்கும் அதுவே சரி என்று பட கல்யாணி அந்த ரூம் பாயிடம் கேட்டு அந்த போட்டோ வெளிவந்த பேப்பரை வாங்கி கைப்பையில் பத்திரப்படுத்திக் கொண்டாள்.
மூவரும் சாப்பிட்டு விட்டு அடுத்த ட்ரெயினைப் பிடித்தார்கள். கல்யாணிக்கு கோவா என்றாலே இப்போது கசப்பாக இருந்தது. சூரஜின் நினைப்பு வந்தது. ஏன் கடவுள் தன்னை அவனுடன் இணைக்க வேண்டும்? சாவதற்கு முன் கடைசி ஆசை நிறைவேற்றப்படுவதைப் போல அவளை அவன் ஏன் ருசிக்க வேண்டும்? அவன் ஏன் ப்ராங்க்ளின் மாதிரியே இருக்க வேண்டும்? நிறைய வேண்டும்கள் அவள் மனதில் கேள்வியாய் உதித்துக் கொண்டே வர உறங்கிப் போனாள்.
விழித்தபோது 'டீ காப்பி டீ காப்பி' என்று பான்ட்ரி ஆட்கள் சப்தம் கொடுக்க எழுந்து பெர்த்தை விட்டு இறங்கினாள். கீழே நித்யாவும் அப்போது விழித்திருந்தாள்.
கொட்டாவி விட்டுக் கொண்டே 'டீ சாப்டலாமா கல்யாணி?' என்றாள்.
'நீ ரெண்டு வாங்கி வச்சிரு. நான் ப்ரஷ் பண்ணிட்டு வரேன்.'
'சரி போய்ட்டு வா. நான் இப்ப தான் ப்ரஷ் பண்ணேன்.'
'ப்ராங்க்ளின் தூங்கறாரா?'
'ஆமாம்.'
சொல்லிக் கொண்டே பர்ஸில் இருந்து பணம் எடுத்து ரெண்டு டீ வாங்கினாள் நித்யா. ஒன்றை முன்னே இருந்த ட்ரேயில் வைத்து விட்டு இன்னொன்றை எடுத்து உறிஞ்சிக் கொண்டே ஆப்போசிட் மிடில் பெர்த்தில் உறங்கிக் கொண்டிருந்த ப்ராங்க்ளினைப் பார்த்தாள்.
இவனுக்கு ஏன் இந்த மனக் கஷ்டம்? கல்யாணி இவனை அக்யூஸ் செய்தபோது இவனுக்கு எப்படி இருந்திருக்கும்? அவன் சொல்வது உண்மை தானே? கல்யாணி சொல்வதைத் தானே தானும் நம்பி இருப்போம்! கல்யாணியை நினைத்தபோது அவளின் மேல் இரக்கம் அதிகரித்தது. இனி அவளின் கதி என்ன? டாக்டர் ஆனாலும் பெண் பெண் தானே! அவளுக்கும் கல்யாணம் செய்து குழந்தை குட்டி பெற்று வாழ வேண்டும் என்று ஆசைகள் இருக்கும் தானே!
கல்யாணி ப்ரஷ் செய்துவிட்டு வந்து பேக்கில் இருந்து ஒரு டவலை எடுத்து முகத்தைத் துடைத்தாள். பின்பு ட்ரேயில் இருந்த டீயை எடுத்து உறிஞ்சினாள். இருவரும் மௌனமாக டீயைப் பருகி முடிக்க, ப்ராங்க்ளின் எழுந்திருந்தான். அவனும் ப்ரஷ் செய்து ஒரு டீ வாங்கிக்குடிக்க பொழுது பொல பொல வென்று விடிந்திருந்தது. இரயில் தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க, கம்பார்ட்மெண்ட் முழுவதும் விழித்துக் கொண்டது.
இன்னும் ரெண்டு மணி நேரத்தில் மதுரை வந்து விடும் என்று பக்கத்தில் இருந்த பயணிகள் பேசிக் கொண்டிருந்தார்கள். நித்யா கல்யாணியிடம் கேட்டாள்.
'இனி என்ன பண்றதா உத்தேசம், கல்யாணி? இதயே நெனச்சிட்டிருக்கப் போறியா? ஜெயகாந்தன் சொல்ற மாதிரி தலைக்கு முழுகிட்டு ரவிய கட்டிக்கோ. நீ மனசால கெடல. பல்லி தலைல விழுந்தா அதையேவா நெனச்சுட்டு இருப்போம்? அந்த மாதிரி இத மறந்துரு. இது தெரிஞ்ச மூணு பேர் நாம தான். நமக்குள்ளேயெ இத பூட்டி வச்சுப்போம். நீ என்ன சொல்ற ப்ராங்க்ளின்?'
ப்ராங்க்ளின் வாய் திறந்தான்.
'நீ சொல்றது தான் சரி நித்யா. இத மறந்துர்ரது தான் நல்லது.'
'நீங்க ரெண்டு பேரும் ஈஸியா சொல்லிட்டீங்க. ரவியோட ... ரவியோட நான் எப்படி இருப்பேன். இந்த விஷயத்த சுமந்துகிட்டு? மனசு உறுத்திட்டே இருக்குமே' என்றாள் கல்யாணி.
'அந்த சுமைய தான் இறக்கி வச்சிருன்னு தானே சொல்றோம்? கல்யாணி! நீ ஒரு டாக்டர். சில விஷயங்கள முற்போக்குத்தனமா தான் அணுகணும்.'
'மனசுக்கு அது தெரியாதே நித்யா. இப்பவும் அறிவு ஓகே தான் சொல்லுது. நாளைக்கே ரவிக்கு தெரிய வந்துடிச்சின்னா.'
'அப்போ இப்பவே சொல்லிட்டு ஏத்துகிட்டா கல்யாணம் பண்ணிக்க இல்லன்னா அம்மாட்ட சொல்லி அரேன்ஜ்ட் மேரேஜுக்கு ரெடி பண்றேன்.'
'எப்படி நீ பொசுக்குனு இப்படி சொல்ற? இத்தன வருசமா பழகிட்டு நிமிஷத்துல அவன ஒதற முடியுமா?'
'ஒன் மனச தான் காதலிக்கிறான்னு ஒன்கிட்ட அவன் நெறய தடவ சொன்னதா நீ என் கிட்ட சொல்லி இருக்க. அது உண்மைன்னா ஏத்துக்கட்டும்.'
'அது ஓகே. ஆனா எங்களுக்குள்ள ஏதாவது சின்ன சண்ட வந்து அப்போ அவன் அத குத்தி காட்டினா என்னால தாங்க முடியாது நித்யா.'
'அப்போ அத சொல்லாதே. அவனுக்கெ பின்னால தெரிஞ்சாலும் ஒம்மேல அன்பு இருந்தா அத பெருசு பண்ண மாட்டான்.'
'சப்போஸ் பெருசு பண்ணி குடும்பம் சிதஞ்சிடிச்சின்னா... குடும்பம்ங்ற அமைப்பு எக்காரணத்த கொண்டும் சிதையக் கூடாது நித்யா. அப்படி சிதையற குடும்பங்கள்ல இருக்ற குழந்தைங்க தான் பெரும்பாலும் குற்றவாளிகளா உருவாகறாங்க.'
'சரி அப்போ என்ன தான் பண்ணப் போற? நாம வழக்கமா பண்றத பண்ணலாமா?'
என்ன என்பது போல் ப்ராங்க்ளின் பார்த்தான்.
நித்யா ஹேண்ட் பேக்கில் இருந்து ஒரு பேப்பர் எடுத்து ரெண்டு துண்டாகக் கிழித்து அந்த ரெண்டிலும் பேனாவைக் கொண்டு ஏதோ எழுதினாள்.
பின்னர் பக்கத்தில் அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருந்த அடுத்த பெர்த் சிறுமியைக் கூப்பிட்டாள். அது தயங்கிக் கொண்டே பக்கத்தில் வர, அதன் அம்மா என்ன என்பது போல் பார்க்க, நித்யா, 'இந்த ரெண்டு சீட்ல ஒண்ண எடும்மா.' என்க, அது ஒரு நிமிடம் யோசித்து ஒரு சீட்டை எடுத்து நித்யாவின் கையில் கொடுத்து விட்டு அடுத்த நிமிடம் ஜூட் விட்டது.
கல்யாணி நித்யாவின் கையில் இருந்த அந்த சிறுமி எடுக்காத சீட்டை பறித்துக்கொண்டாள்.
'நீ நான் நல்லா இருக்கட்டும்னு ரெண்டு சீட்லயும் ஒரே விஷயத்த எழுதி இருந்தா?'
சொல்லி விட்டு தன் கையில் உள்ள சீட்டை மெல்ல பிரித்து வாசித்தாள் கல்யாணி.
'ரவியிடம் விஷயத்தை சொல்லி விடு. நல்லதே நடக்கும்.'
கல்யாணி நிமிர்ந்து 'ஒன் கைல உள்ளத கொடு' என்றாள்.
நித்யா அந்தச் சிறுமி எடுத்த சீட்டை எடுத்துக் கொடுக்க, அவள் அதையும் வாசித்தாள்.
'ரவியிடம் விஷயத்தை சொல்லி விடாதே. கடவுள் காப்பாற்றுவார்.'

(தொடரும்)
 
Nice epi.
This is not fair Kalyani,if you didn't inform then its equivalent to betrayal from your side.
Ravi must know this before marriage or else he may feel it's a forgery.
 
Nice update
அப்போ கல்யாணி சொல்லாம இருக்க போறாளா, பின்னால் ரவிக்கு தெரிந்தால்
பிரச்சனையாகுமே, என்னமோ பார்த்து பண்ணுங்கப்பா
 
Top