Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் நித்யகல்யாணி அத்தியாயம் 21

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 21

'தண்ணி தண்ணி' என்று அங்கு நின்றிருந்த எல்லோரும் குரல் குடுக்க, எங்கிருந்தோ ஒரு செம்பு தண்ணீர் கிடைக்க, கல்யாணி வாய் கொப்புளித்து முகத்தை நன்கு கழுவிக் கொண்டாள். மனசு கணக்கு போட்டுப் பார்க்க, இதயம் நாள் தள்ளிப் போயிருப்பதை அறிந்து திடுக் என்று துடிப்பதை ஒரு கணம் நிறுத்தியது. எப்படி கண்டுக்காமல் விட்டோம்? இதில் தான் டாக்டர் வேறு!
சினிமாவில் ஒரு முறை கற்பழிக்கப்பட்ட பெண் உடனே கன்சீவ் ஆவதை வியந்த ஒரு பெண் டீன் க்ளாஸ் எடுக்கும்போது அதை சந்தேகமாக கேட்க, அதற்கு அவர் அது எல்லாம் எண்பது சதம் பாசிபிலிட்டி இல்லை. படத்தின் கதையோட்டத்திற்காக அப்படி காட்சிகளை வைத்திருப்பர். சிலருக்கு ரெண்டு மூன்று முறை உடலுறவு வைத்தால் தான் கரு பிடிக்கும். சிலருக்கு சில மாதங்கள் ஆகும். சிலருக்கு வருடங்கள் ஆகும். ஒவ்வொருத்தரின் உடல்வாகைப் பொறுத்தே அதை நிர்ணயிக்க முடியும் என்றார்.
குழந்தை தவம் இருக்கும் பெண்களுக்கு பெப்பெ காட்டும் இந்த வரம் இந்த மாதிரி தவறான உறவுகளில் மட்டும் எப்படி ஜங் என்று பலிக்கிறது?
'இப்ப பரவால்லயா கல்யாணி?' ரவி ஆதுரத்துடன் கேட்டான்.
அவள் அவனைப் பார்க்க கூசி ஒரு 'ம்'மை உதிர்த்தாள்.
நித்யா பக்கத்தில் வந்து அவளது தோளைப் பிடித்து 'எப்படி இருக்கு?' என்று கேட்டதோடு அவளை ஒரு சந்தேகப் பார்வை பார்த்தாள்.
காரில் ஏறும்போது ப்ராங்க்ளினை ரவியோடு அனுப்பி விட்டு கல்யாணியைத் தன்னுடன் காரில் ஏற்றிக் கொண்டாள். ட்ரைவருக்கு புரியக்கூடாது என்று ஆங்கிலத்தில் கேள்விகளை அடுக்கினாள்.
'கல்யாணி! இது பித்த வாந்தியா இல்ல மத்த வாந்தியா?'
கல்யாணி பதில் ஒன்றும் பேசாமல் தலை குனிந்திருந்தாள்.
'சொல்லு கல்யாணி.'
'நாள் தள்ளிப் போயிருக்கு.'
அதிர்ந்தாள் நித்யா.
'நீயும் ரவியும்...'
'இல்ல.'
'அப்படின்னா...'
'கோவா.'
சொல்லி விட்டு முகத்தை மூடி விட்டு குலுங்கி குலுங்கி அழுதாள் கல்யாணி.
'கல்யாணி. அமைதியா இரு. ட்ரைவர் ஒரு மாதிரி கண்ணாடில பாக்கறாரு.'
கல்யாணி சட் என்று கண்களைத் துடைத்துக் கொண்டு உதட்டைக் கடித்து அழுகையை அடக்கிக் கொண்டாள்.
நித்யா ஒரு நிமிடம் பேசாமல் இருந்தாள்.
பின்னர் கேட்டாள்.
'நீ தான் டாக்டராச்சே. இத கலைக்க மாத்திர, ஊசி ஏதாவது இருக்குமே?'
கல்யாணி அவளை ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்தாள். பின்னர் உறுதியாய் சொன்னாள்.
'இல்ல. இத நான் கலைக்கப் போறதில்ல.'
'என்ன கல்யாணி சொல்ற? ரவிக்கு தெரிஞ்சுதுன்னா...'
'மொத மொதல்ல கரு உருவாறத கலைக்க கூடாதுன்னு எங்கம்மா பக்கத்து வீட்டு அக்காட்ட சொல்றத கேட்ருக்கேன். அப்புறம் ஒரு உயிரை காப்பாத்தற தொழில செய்ற நான் இந்த உலகத்த பாக்க ஏங்கற ஒரு உயிர அழிக்கறது எவ்ளவு பாவம்? எனக்கு நடந்த விபத்துக்கு இந்த உயிர் என்ன பண்ணும்?'
'அதுக்கு... ஒன் வாழ்க்கைய பத்தி நெனச்சு பாத்தியா? ரவிட்ட எப்படி மறைக்கப் போற?'
'அது தான் மனசுக்கு கஷ்டமா இருக்கு. திருவுளச் சீட்டு படி அவர்ட்ட சொல்லக் கூடாது. என் மனசாட்சிப்படி இந்த உயிரை அழிக்கக் கூடாது. அதுக்கு ஒரே வழி தான் இருக்கு. நான் இந்த உயிர தாங்கி இருக்கறதா நெனக்கவே போறதில்ல. இன்னைக்கு தான் கல்யாணம் முடிஞ்ச பொண்ணா நடந்துக்கப் போறேன். இந்த கருவுக்கு வலிமை, அதிர்ஷ்டம் இருந்ததுன்னா அது தாங்கி நிக்கட்டும். இல்ல கடவுள் விருப்பப்படி அமையட்டும்.'
நித்யா ஒன்றும் பேச வில்லை. தோழியின் வாழ்வு இப்படி ஆகி விட்டதே என்று மனம் வருந்தினாள்.
கல்யாண மண்டபத்தில் மாலை ரிஷப்ஷன் நடைபெற்றது. கல்யாணியின் வகுப்புத் தோழர்களும், தோழிகளூம் வந்திருந்தார்கள். மனிஷாவும் வந்திருந்தாள். இரு ஜோடிகளும் அருகருகே உட்கார கண் குளிர கண்டார்கள் மேரி டீச்சரும் ஜேம்ஸ் சாரும், முத்தம்மாளும்.
ரிசப்ஷன் முடிந்து இரவு வந்தது. முதலிரவு அறை பலமாய் ஜோடிக்கப்பட்டிருந்தது. டீப்பாயில் பலவகை பழங்கள், பருப்பு வகைகள் வைக்கப்பட்டிருந்தன.
'காத்திருந்து காத்திருந்து காஞ்சு போய் கெடக்கறாருடி ஒன் வீட்டுக்காரர். பாத்து. பாய்ஞ்சுரப் போறாரு. பதமா நடந்துக்கடி.'
'நெறய பழம் எல்லாம் வாங்கி வச்சிருக்கு. காலைல எல்லாம் காலி ஆயிரணும்.'
'எல்லா பழமுமாடி?'
தோழிகள் அனைவரும் கொல் என்று சிரிக்க, கல்யாணி வெட்கத்தை வரவழைத்துக் கொண்டாள்.
அங்கு நித்யாவின் தோழிகளும் அவளை விட வில்லை.
'தோழிகள் ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல கல்யாணம். பாக்கலாம் யாரு மொதல்ல குழந்த பெத்துக்கறாங்கன்னு'
'நித்யா தான் மொதல்ல பெத்துக்குவா.'
'எப்படி சொல்ற?'
'கல்யாணி தான் டாக்டராச்சே. எப்படி தள்ளிப்போடறதுன்னு அவளுக்குத் தான் நல்லா தெரியும்.'
'அப்படி நெனைக்காத. இவங்க ரெண்டு பேரும் தான் எஞ்சினியராச்சே. எப்படி ஒரு கட்டடத்த எழுப்பறதுன்னு நல்லாவே தெரிஞ்சவங்களாச்சே.'
தோழியர் கொல் என்று சிரிக்க, நித்யாவை செம்பு பாலுடன் உள்ளே தள்ளினர்.
'பாலை அவரையும் குடிக்க விடு.'
தோழியர் மறுபடியும் சிரிக்க நித்யா கதவை மூடினாள்.
கட்டிலில் உட்கார்ந்திருந்த ரவி எழுந்தான். கல்யாணி அவன் அருகே சென்று செம்பு பாலை டீப்பாயில் வைத்து அவன் காலில் விழுந்தாள்.
'ஏய்! என்ன நீ! டாக்டருக்கு படிச்சுட்டு என் கால்லல்லாம் விழுற?'
'அது படிப்பு! தொழில்! இது நம்ம கலாச்சாரம். இரண்டையும் நான் விட மாட்டேன்.'
'ம்ம்ம். இந்த நாளுக்கு நான் எவ்ளோ நாள் ஏங்கி இருக்கென் தெரியுமா?'
கல்யாணி முகம் குனிந்தாள்.
அவன் அவள் தலையை நிமிர்த்தி அவள் கண்களைப் பார்த்தான். மெதுவாக அவள் நெற்றியில் முத்தமிட்டான். பின்பு மூக்கு. மெதுவாக கீழே வரும்போது கல்யாணி ஒரு நிமிடம் அவனிடம் இருந்து விலகி டீப்பாயில் இருந்த பால் சொம்பை எடுத்தாள்.
'இந்தாங்க. நீங்க கொஞ்சம் குடிச்சிட்டு தாங்க.'
ரவி ஒன்றும் பேசாது வாங்கி குடித்து விட்டு டம்பளரை அவளிடம் நீட்ட அவள் மிச்சப் பாலை குடித்தாள். குடித்து முடித்த அவளை இறுக அணைத்தான் ரவி.
'ஆ முரடு! வலிக்குது.'
'என்ன இதுக்கே வலிக்குதுன்னு சொல்ற. இன்னும் என்னென்னவோ இருக்கு.' அவன் குறும்புடன் கண் அடிக்க, அவள் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். அவன் அவளை கட்டிலில் உட்கார வைக்க, அவள் படுத்துக் கொண்டாள். அவன் அவளை தன் பக்கம் இழுக்க, அவள் அவன் நெஞ்சில் சாய்ந்து அவன் நெஞ்சின் முடிகளை கைகளால் அளைந்து கொண்டே கேட்டாள்.
'என் மேல உங்களுக்கு அவ்ளோ காதலா?'
'ஏய்! பேசிப் பேசி நேரத்தை வீணடிக்காத. ஏற்கனவே நெறய நேரம் வீணாயிடிச்சி. கொஞ்சம் நேரம் கழிச்சு ரெஸ்ட் எடுக்கறப்ப பேசிக்கலாம்.' என்று அவன் தன் மன்மத வித்தைகளை காட்டத் துவங்க ஒரு 'சீ'யோடு தன்னை மனதார அவனுக்குத் தந்தாள் கல்யாணி.
அங்கு நித்யாவின் அறையில் ப்ராங்க்ளினோடு ஈஷிக் கொண்டிருந்தாள் நித்யா.
'ஏன் நித்யா! கல்யாணிக்கு என்ன ஆச்சு?'
'ஒண்ணும் ஆகலயே.'
'என்கிட்டயே மறைக்கற பாத்தியா?'
'...'
'சொல்லு நித்யா.'
'ஆமாங்க.'
'சே. அவளுக்குன்னு ஏன் இப்படி நடந்தது?'
'அவ தலவிதி அது.'
'ஏதாவது பண்ணி கலச்சுக்கலாம்ல.'
'அவ பிடிவாதம் தான் உங்களுக்கு தெரியும்ல. மாட்டாளாமாம். அத கவனிக்க மாட்டாளாமாம். ஆனா அது ஜீவனோட இருந்தா பெத்துக்குவாளாமாம்.'
'இதென்ன பைத்தியக்காரத்தனமா இருக்கு.'
'எனக்கு அவ வாழ்க்கய நெனச்சா பயமா இருக்குங்க.'
'பயப்படாத. கர்த்தர்ட்ட நாம வேண்டிப்போம்.'
கர்த்தரிடம் ப்ரேயர் செய்த அந்த தம்பதியர் அடுத்து தங்கள் இல்வாழ்க்கையில் புக விளக்கு அணைக்கப்பட்டது.
மறு நாள் அவர்களது துணிகளை விருப்பத்தோடு வாங்கி துவைத்த முத்தம்மாள் எல்லாம் நல்லபடியாய் முடிந்ததை எண்ணி புளகாங்கிதம் அடைந்ததோடு மேரி டீச்சரிடமும் சொன்னாள்.
காலங்கள் உருண்டன.
அந்த மூன்று மாதங்கள் அவர்களது வாழ்க்கையில் பொற்காலமாக அமைந்தன.
கல்யாணியை மசக்கை பின்னி எடுக்க, ஆனந்தத்தில் திளைத்தனர் ரவி, மேரி டீச்சர், ஜேம்ஸ், முத்தம்மாள் மற்றும் ரவியின் குடும்பத்தினர்.
கல்யாணிக்கு கோவா கரு பலமாய் தங்கி விட்டது என்பதை உணர முடிந்தது. மெது மெதுவாய் வயிறு மேடேற ஆனந்தத்தில் ஆழ்ந்தான் ரவி.
தினம் தினம் கல்யாணியை பூப்போல் தாங்கினான். அவளை ஒரு வேலை செய்ய விட வில்லை.
மேரி டீச்சர் தான் 'அப்படி எல்லாம் விடக்கூடாது மாப்பிள்ள. ஆறு மாதம் ஆகப் போகுது. குனிஞ்சு நிமிந்து வேல செய்யட்டும். அப்போ தான் சுகப் பிரசவம் ஆகும். கல்யாணி. டெய்லி வீட்டத் தொட. மெழுகு. இது தான் ஒனக்கு எக்சர்சைஸ். பையன் போல இருக்கு. முந்திப் பொறந்துருவான் போல. வயிரு கீழ வருது.'
கல்யாணி மேரி டீச்சரின் கண்களைப் பார்க்க மாட்டாள் அந்தப் பொழுதுகளில்.
அங்கே நித்யாவின் வயிறு திறக்க வில்லை.
'ஆறு மாசம் தான ஆகுது நித்யா. கொஞ்ச நாள் சந்தோஷமா இருக்கலாம்.'
'இல்லங்க. எல்லோரும் கல்யாணி உண்டாயிட்டா. நீ இன்னும் உண்டாகலன்னு கேக்கறாங்க.'
'இப்படி பச்சையாவா கேப்பாங்க. நீயும் பச்சையாவே பதில் சொல்லு. நாங்க இன்னும் செஞ்சுட்டு தான் இருக்கோம்னு.'
'ஒங்களுக்கு வெவஸ்தயே கெடயாதா?'
'கேக்கறவங்களுக்கு மட்டும் வெவஸ்த இருக்குதா?'
'நான் ஒண்ணு சொல்லட்டுமா?'
'என்ன?'
'நாம ஒரு டாக்டர கன்சல்ட் பண்ணலாமா?'
'ஒனக்கு என்ன ஆச்சு? ஆறு மாசம் தான் ஆச்சு கல்யாணம் முடிஞ்சு. அதுக்குள்ள எதிர்பார்க்கறதுங்கறது...'
'சரி. ஒங்களுக்காக இன்னும் ஒரு மாசம். அடுத்த மாசம் தூரம் வந்ததுன்னா டாக்டர்ட்ட போலாம். சரியா?'
ப்ராங்க்ளின் அரை மனதாக தலைஆட்டினான்.
அடுத்த மாதம் அவள் வீட்டுக்கு விலக்கானாள்.
மூன்று நாட்கள் கழித்து ப்ராங்க்ளினோடு ஹாஸ்பிடல் போனாள்.
நர்ஸ் ஒரு குப்பியை ப்ராங்க்ளினிடம் கொடுத்து 'இதுல கொஞ்சம் செமன் எடுத்துட்டு வாங்க சார். பாத்ரூம் அங்க இருக்கு.' என்று விட்டு போனாள். அவன் கல்யாணியைப் பார்க்க அவள் மெலிதான புன்னகையுடன் போங்க என்பது போல் தலை ஆட்டினாள்.
அவன் எரிச்சலுடன் போய் பத்து நிமிடம் கழித்து திரும்பி வந்து குப்பியை நர்சிடம் நீட்ட அவள் 'அந்த டேபிள்ல வைங்க' என்றாள்.
அவன் டேபிளில் வைத்து விட்டு நகர நித்யாவை டாக்டர் உள்ளே அழைத்து சென்றார். சிறிது நேரம் கழித்து அவளிடம் அன்று மாலை வருமாறு சொன்னார்.
அன்று மாலை.
ஆசுபத்திரியில் டாக்டருக்கு முன் அமர்ந்திருந்தனர் நித்யாவும் ப்ராங்க்ளினும்.
டாக்டர் அவர்கள் ரிப்போர்ட்டைப் பார்த்து விட்டு கண்ணாடியை கீழே இறக்கி விட்டு அவர்களை சீரியஸாய் பார்த்தார்.
'நேரடியா விஷயத்துக்கு வந்துடுறேன். உங்க வீட்டுக்காரர்ட்ட எந்த ப்ராப்ளமும் இல்ல. ஒங்களால தான்.. ஒங்க கர்ப்பபை ஒரு கருவ தாங்கற அளவு வளரல. ஐயம் சாரி. ஒங்களால ஒரு குழந்தைக்கு தாயாக முடியாது.'
நித்யாவுக்கு கண்களை இருட்டிக் கொண்டு வர அங்கேயே மயங்கி விழுந்தாள்.
அங்கே...
கல்யாணிக்கு பிரசவ வலி எடுக்க ஆஸ்பிட்டலில் ஒரு அழகான ஆண் சிசுவை நார்மல் முறையில் பெற்றெடுத்தாள்.

(தொடரும்)









 
Interesting update
கல்யாணிக்கு இப்படி ஒரு குழந்தை வந்து சோதனை, நித்யாவுக்கு தாயாக முடியாதுன்னு ஒரு சோதனை பாவம் தான். கல்யாணிக்கு குழந்தை சீக்கிரம் பிறந்துடுச்சேன்னு எந்த ஒரு பிரச்சனையும் வரலையா
 
Top