Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் மண்ணில் விழுந்த நட்சத்திரம் அத்தியாயம் 16

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 16

அனில் ஒரு போட்டோகிராபர்.
'மேடம், ஒரு நிமிடம் அந்த சாரிக்கு முன்னால ஒங்க ஜடையத் தூக்கிப் போட்டு ஒரு போஸ் குடுக்றீங்களா, ப்ளீஸ்?' என்று கெஞ்சும் கண்களுடன் காமிராவைத் தயார் செய்தான்.
கேரள நிறம். ஆறடி உயரம். கேரள ஆண்களுக்கு இருக்கும் பொசு பொசு முடி புல் ஹாண்ட் சட்டையில் இருந்தும் மார்புச் சட்டைப் பித்தானில் இருந்தும் எட்டிப் பார்த்து இம்சை செய்தது. மீசையை ட்ரிம் செய்திருந்தான்.அலை அலையாய் தலை முடி. சற்று தடித்த சிவந்த உதடுகள்.
கையில் அவார்டுடன் நின்றிருந்த ஸ்ரீலதா ஒரு கணம் அவனைப் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டாள்.
'மேடம் ப்ளீஸ். இந்த லைட்டிங்க்குக்கு நீங்க அப்படி நின்னா அள்ளும். நாளைக்கு நீங்க இந்த போட்டோவ என்லார்ஜ் பண்ணி ஹால்ல மாட்டலாம்.'
ஸ்ரீலதா எரிச்சலுற்றாள். 'நான் பாக்காத போட்டோகிராபரா? ஏ மிஸ்டர். ப்ளீஸ் டோண்ட் டிஸ்டர்ப்'
அனில் லச்சியம் பண்ணியதாவே தெரிய வில்லை.
அப்போது மிருணா அங்கே வந்தாள்.
அனிலைக் கண்டு ஆ என்றாள்.
'அனிலெ எந்தா இவிடே? எந்தொக்கே உண்டு விசேஷங்கள்? சுகம் ஆனோ? கண்டு ஒருபாடு நாளாயி.'
'சுகம் மிருணா. தான் எங்கன உண்டு? தண்டெ சுஹுருத்து ஒரு போட்டோவினு போஸ் தரான் தால்பரியப்படில்லா.'
'ஆரு லதயோ?'
'உவ்வு'
அவள் ஸ்ரீலதாவிடம் திரும்பினாள்.
'லதெ. ஈயாள் நல்ல மிடுக்கனா. ஒன்னு போஸ் தரு. நினக்கு இஷ்டாவும்'
'நான் இவன பாத்ததே இல்ல.'
'இவன் நல்ல ஒரு போட்டோகிராபரா. இவண்டெ போட்டோக்களினு ஒருபாடு காம்படிசன் உண்டு ஜெர்னல்ஸில். ஓணத்தப்போல் இவண்டெ போட்டோக்களுக்கு போஸ் குடுக்கான் இவிடத்த ஸ்டார்ஸ் எல்லாம் இவண்ட கால்ஷீட் கேல்கும்'
சரி ஒரு போஸ் தானே குடுத்து தான் பாப்போமே. என்று நினைத்த ஸ்ரீலதா அவன் சொல்லியபடி ஜடையை சாரியின் முன் இட்டு ஒயிலாய் ஒரு கையில் அவார்டைப் பிடித்தபடி நின்றாள்.
'க்ளிக்'
'க்ளிக்'
'க்ளிக்'
மூன்றே க்ளிக் தான். 'பியூட்டிபுல்' என்றான் அவன்.
'தாங்க்ஸ் மேடம். நாளைக்கு உங்களுக்கு அனுப்பி வைக்கறென்.' என்று சொல்லிவிட்டு 'தாங்க்ஸ் மிருணா. நான் வரட்டே? பிம்பு விளிக்கான். கொற ப்ரொக்ராம்ஸ் உண்டு.' என்று மிருணாவிடம் விடை பெற்றுக் கொண்டு போனான்.
அந்த வாரம் அவன் அனுப்பிய போட்டோ அவள் கைக்கு வந்தது. அதே நேரம் அதே போட்டோ ஒரு பிரபல ஹிந்தி பத்திரிகையிலும் அட்டைப் படமாக வந்திருந்தது. இவளின் அழகு அதில் நூறு மடங்கு கூடி இருந்தது. அந்த ஜடை அவளது மாடர்ன் ட்ரஸின் முன்னழகை மறைத்தும் மறைக்காமல் ஒரு ஈர்ப்பை-ஆர்வத்தை பார்ப்பவருக்கு கூட்டியது. திரும்பத் திரும்ப அந்தப் புகைப்படத்தைப் பார்க்க வைத்தது. அவளது பல் வரிசை பளிச் என்று தெரிய முகம் காந்தமாய் கவர்ந்தது
மிருணா சொன்னது போலே மிடுக்கன் தான் என்று எண்ணிக் கொண்டாள் ஸ்ரீலதா. அவனுக்குத் தாங்க்ஸ் சொல்ல வேண்டும் என்று நினைத்தாள். நினைத்ததும் அடுத்த ஷூட்டிங் போக வேண்டியதிருந்ததால் மறந்து போனாள்.
ஷூட்டிங்கில் டைரக்டர் முதல் லைட் மேன் வரை அந்த அட்டைப்படத்தைப் பற்றியே பேச மிருணாவிற்கு போன் செய்து அவன் நம்பர் வாங்கிக் கொண்டாள்.
ஷூட்டிங்கின் இடையில் கிடைத்த கேப்பில் அவனிடம் பேசினாள்.
'ஹலோ' என்றாள்.
'ஹலோ, அழகான பொண்ணு வாய்ஸ்னு தெரியுது. குயிலோட பேரு தெரிஞ்சுன்னா சந்தோசப்படுவேன்.'
ஸ்ரீலதா சிறிது விளையாடலாம் என்று நினைத்தாள்.
'எண்டெ பேரு ஸ்ரீஜா. எனிக்கு சினிமாவில் அபினயிக்கணும். சார் என்னெக் கொண்டு ஒரு போட்டோ ஷூட் செய்யணும். ப்ளீஸ் வேண்டான்னு பரயரது.'
'நீங்க தமிழ் மாதிரி தெரியுது. பேசாம தமிழ்லேயெ பேசலாமே'
எப்படி கண்டுபிடிச்சான்? மிருணா நான் நல்ல மலையாளத்துல சம்சாரிக்கிறேன்னு சொல்லிச்சே.
'ஹலோ சொல்லுங்க ஸ்ரீஜா.'
' அதாங்க ஒரு போட்டோ சூட் பண்ணனும். நீங்க எடுத்தா வித்தியாசமா இருக்கும்னு சொன்னாங்க. எவ்ளோ ஃபீஸ்னாலும் நான் தந்திர்றென். நீங்க எங்க வரச் சொல்றீங்களோஅங்க வந்திர்ரேன்.'
'ம்ம்ம். நான் பிஸி தான். ஆனாலும் உங்களுக்காக ஒரு அர மணி நேரம் ஒதுக்கறேன். இன்னைக்கு சாயந்திரம் அஞ்சு மணிக்கு மேக்கப்போட ப்ளஸ் ரெண்டு மாற்று உடைகளொட கபீர் வீதி அஞ்சாம் நம்பர் வீட்டுக்கு வந்திர்ரீங்களா?'
'ரொம்ப தாங்க்ஸ் சார். கண்டிப்பா வந்திர்றென்.' என்று சொல்லி ரிசீவரை வைத்தாள் ஸ்ரீலதா.
அவனுக்கு ஏதாவது வாங்கிப் போக வேண்டும். பி.ஏ.விடம் சொல்லி விலை உயர்ந்த புது ரக அட்வான்ஸ் கேமிரா ஒன்றை வாங்கினாள்.
சாயந்திரம் அஞ்சு மணிக்கு பர்தாவோடு வந்து கபீர் வீதி அஞ்சாம் நம்பர் வீட்டு முன் நின்று காலிங் பெல்லை அழுத்தினாள். அது மிடில்க்ளாஸ் மக்கள் குடி இருக்கும் வீதி. இரண்டு பெட் ரூம் கிச்சன் ஹால் வீடு என்று யூகித்தாள். கார் பக்கத்து வீதியில் காலி கிரவுண்டில் நின்றிருந்தது. டீ ஷர்ட், பெர்மூடாசில் வந்து கதவைத் திறந்த அனில் வாசலில் நின்றிருந்த பர்தாப் பொண்ணைப் பார்த்ததும் முதலில் புருவம் சுருக்கினான். பின்னர் சிட் அவுட்டைத் தாண்டி வாசலுக்கு வந்து கேட்டைத் திறந்தான். அவள் உள்ளே வந்ததும் வீட்டுக்குள் கூட்டிச் சென்றான்.
'வாங்க ஸ்ரீலதா' என்றான்.
அதிர்ந்தாள் ஸ்ரீலதா.
வாசல் திறந்து உள்ளே வந்து வரவேற்பறையில் உட்கார்ந்து பர்தாவின் முகத்திரையை மேலே எடுத்து விட்டு அவனை வியந்து பார்த்தாள்.
'எப்படி கண்டுபிடிச்சீங்க அனில்?'
போன்லேயெ கண்டுபிடிச்சிட்டேன். எத்தன படம் பாத்திருப்பேன். உங்க வாய்சும் பெக்யூலியர். அப்புறம் மிருணா நீங்க என் போன் நம்பர் கேட்டதா சொன்னா. ஸோ ஒண்ணும் ஒண்ணும் இரண்டு. அப்புறம் இன்னொரு சைக்காலஜி உங்களுக்குத் தெரியுமா? யாராவது தங்களோட பேர மாத்திச் சொல்லணும்னு நெனச் சா அவங்க பேரோட பர்ஸ்ட் லெட்டர்ல தொடங்கற பேராத்தான் சொல்வாங்களாம். உங்க வாய்ஸ், ஸ்ரீஜாங்கற பேரு, பர்தா உடை எல்லாமே நீங்க தான்னு சொல்லாம சொல்லிடிச்சி.'
'சரி. பர்தா உடை எப்படி?'
'அதுவா. இவ்ளோ பெரிய பிரபலம் அவ்ளோ எளிமையா கபீர் வீதியில வந்து நிக்க முடியுமா? ஊரே கூடிராது?'
'யப்பா பெரியா ஆளு தாங்க நீங்க' என்றவாறு எழுந்தாள் ஸ்ரீலதா
தன் பேக்கில் இருந்து தான் வாங்கி இருந்த கேமிரா பார்சலை அவனிடம் தந்தாள்.
'எ ஸ்மால் கிப்ட்'
அவன் அதை வாங்கிப் பார்த்து ஓபன் பண்ணி ஆச்சரியப்பட்டான்.
'ஸ்மால் கிப்டா? இதத் தான் அடுத்து வாங்கணும்னு நெனச்சேன். ரொம்ப தாங்க்ஸ்.'
'நான் தான் நன்றி சொல்லணும். அந்த போட்டோவுக்கு அத்தன பாராட்டு. எல்லா இண்டஸ்ரியில இருந்தும் போன். உங்களுக்கு மட்டும் வயசே ஆவாதானு அத்தன பேரும் கேக்கராங்க. இனி நீங்க எனக்கு நெறய போட்டோ எடுத்து உதவணும். உங்க கைவண்ணத்துல சாரி கேமிராவண்ணத்துல எடுத்த புகைப்படங்களத்தான் புக்ஸ்க்குத் தரலாம்னு இருக்கேன். அதுக்கு ஒங்களுக்கு ஸ்பெஷல் சம்பளம்.'
'ம். நான் இன்னைக்கு நரி முகத்துல தான் முழிச்சிரிக்கேன் போல. தென்னிந்தியாவின் கனவுக்கன்னி என் வீட்டு ஹால்ல. அவங்களுக்கு ஆஸ்தான போட்டோகிராபர் நான்.'
'ஆமாம் நீங்க கேரளா தானே.'
'ம்ம். அப்பா தமிழ். அம்மா மலையாளி. சரி மொதல் மொறயா எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க. என்ன சாப்டுரீங்க?'
'ஓ இது தான் உங்க வீடா? போட்டோ ஷூட்டுக்கு இங்க வரச் சொன்னீங்க?'
'உள்ள வாங்க.'
அடுத்து உள்ள அறைக்கு கூட்டிச் சென்றான். அங்கு ஒரு போட்டோ ஸ்டூடியோ அறை இருந்தது. ஒரு புரபஷனல் போட்டோ ஷூட் ரூம்.
'வாவ்' என்றாள்.
சுவரில் மாட்டி இருந்த போட்டோக்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள்.
ஒரு பாம்பு தவளையைப் பிடிக்கும் கணத்தை கேமிராவில் அடைத்திருந்தான்.
'என்னங்க இது அந்த பாம்பு உங்கள பாத்திருந்தா போட்டுத் தள்ளிருக்கும் போல. இவ்ளோ க்ளீயரா எடுத்திருக்கீங்க.'
அவன் சிரித்தான்.
அதற்குள் ப்ரிட்ஜில் இருந்து ஜூஸ் பாட்டிலை எடுத்திருந்தான்.
'இந்தாங்க' என்றான்.
அதை சிப்பிக் கொண்டே வரவேற்பறையில் வந்து சோபாவில் உட்கார்ந்தாள் ஸ்ரீலதா.
வரவேற்பறையிலும் நிறைய போட்டோக்கள். சிரிக்கும் குழந்தை, தண்ணீரைக் காலைக் கொண்டு அளயும் சிறுமி, புலியைத் துரத்தும் யானை. பார்த்துக் கொண்டே வந்தவள் ஒரு காரின் விண்டொவில் தட்டை நீட்டி பிச்சை கேட்பது போல் இருக்கும் படத்தைப் பார்த்து அதிர்ந்தாள்.

(தொடரும்)
 
Top