Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் மண்ணில் விழுந்த நட்சத்திரம் அத்தியாயம் 18

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 18

அனிலிடம் திரும்பினாள் ஸ்ரீலதா.
'அனில்! அந்த பைக்கை பாலோ பண்ணு.'
'ஏய்! ஷூட்டிங் போக வேண்டாமா?'
'லேட்டா போனா தப்பில்ல. நைட் முழுக்க ஷூட் இருக்கு. நான் என் போர்ஷன மொத்தமா நடிச்சிர்றென். ப்ளீஸ்.. பாலோ பண்ணு.'
'என்ன ஏதுன்னு விவரமும் நீ சொல்ல மாட்ட. முடிஞ்ச பிறகு தான் சொல்லுவ. பரவால்ல. பாலோ பண்றேன்.' என்றவாறு க்ரீன் விழுந்ததும் அந்த பைக்கை பாலோ பண்ணினான்.
அது நேரே ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றின் காரிடாரில் நின்றது. அனில் தன் காரையும் அங்கே செலுத்தினான். காரிடாரில் செவ்வந்தியை இறக்கி விட்டு அவன் பைக் நிறுத்த சென்று விட்டான். பர்தாவில் இருந்ததால் அக்காவை அடையாளம் தெரியவில்லை செவ்வந்திக்கு. அனிலயும் அந்த அளவுக்கு தெரிந்து கொள்ள முடிய வில்லை.
காரில் இருந்து இறங்கிய அனிலும் ஸ்ரீலதாவும் ரிஷப்ஷனுக்குச் சென்றனர். காவலாளி ஒருவர் அனிலிடம் இருந்து கார் சாவியை வாங்கிக் கொண்டு காரை பார்க்கிங் பகுதிக்குக் கொண்டு சென்றார்.
'ஒரு ரூம் வேண்டும்' என்று அனில் ரிஷப்ஷன் பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்கஅந்த வாலிபன் வந்தான். தலையை கலர் அடித்திருந்தான். கழுத்திலும், கைகளிலும் இரும்பில் செயினும், வளையமும் அணிந்திருந்தான். பிராண்டட் ஆடை. ரிஷப்ஷன் பெண்ணிடம் 'எக்ஸ்க்யூஸ் மி' என்றவன் 'ஒரு ஏசி ரூம் வேண்டும்' என்று ஸ்டைலான ஆங்கிலத்தில் கேட்டு பர்ஸில் இருந்து ஒரு இண்டெர்னேசனல் க்ரெடிட் கார்டை எடுத்து நீட்டினான். அவன் பின்னே வந்து நின்ற செவ்வந்தி அவனது கைகளைப் பிடித்து நின்று கொள்ள, ரிஷப்சனிஸ்ட் அனிலிடம் ஒரு 'எக்ஸ்க்யூஸ் மி'யை உதிர்த்து விட்டு லெட்ஜர் புக் எடுக்கச் சென்றாள். சோபாவில் உட்கார்ந்திருந்த ஸ்ரீலதா எழுந்தாள். செவ்வந்தி பக்கம் வந்தாள். அவளைத் தன் பக்கம் திருப்பி ஓங்கி ஒரு அறை அறைந்தாள்.
அவள் அதிர்ச்சியாக, அந்த வாலிபன் 'ஹேய்' என்று அவள் பக்கம் வர, அனில் அவனைப் பிடித்துக் கொண்டான். அந்த ரிசப்ஷன் பெண் தன் அழகான முகத்தில் 'ஙீ' என்ற முழியப் படர விட, செவ்வந்தியின் கையைப் பற்றிய ஸ்ரீலதா 'வாடி வீட்டுக்குப் போலாம்' என்றாள். அக்காவின் குரலை அடையாளம் கண்ட செவ்வந்தி ஒன்றும் பேசாமல் அவளுடன் வெளியே வந்தாள். அந்த வாலிபன் திகைத்து அங்கேயே நிற்க அனில் கார் சாவி கொண்டு வந்த காவலரிடம் மறுபடியும் காரைக் கொண்டு வருமாறு சொன்னான்.
இரு நிமிடம் பேசாமல் நின்றிருந்த செவ்வந்தியும், ஸ்ரீலதாவும் கார் வந்ததும் ஏறிக் கொண்டார்கள். அனில் வண்டி ஓட்ட, ஸ்ரீலதா பர்தாவின் திரையைத் தூக்கி விட்டு செவ்வந்தியைப் பார்த்தாள்.
'என்னடி இதெல்லாம்?'
டக் என்று முறைத்த செவ்வந்தி, அனிலை கை காட்டி, 'என்ன அக்கா இதெல்லாம்?' என்று அவளது பாணியிலேயெ சொன்னாள்.
'அனில் என் லவ்வர்.'
சிரித்தாள் செவ்வந்தி.
'என்னடி சிரிக்கிற?'
'நீ ரொம்ப குடுத்து வச்சவக்கா. எத்தன பேரு? எல்லா மொழி ஹீரோசும் உன் கைல. இதெ மாதிரி அழகழகான பசங்க வேற. லைஃப எஞ்சாய் பண்றல்ல.'
ஸ்ரீலதா ஒன்றும் பேசவில்லை.
'நாங்க கனவுல ரசிக்கிற ஹீரோஸ் கூட நீ நெஜத்திலயே மேல விழுந்து புரள்ற? உன் தங்கச்சி தான் நான். ப்ரட்யூசர்ட்ட போயி நின்னா உங்க அக்கா கிட்ட இருக்ற தேஜஸ் உங்க கிட்ட இல்லம்மாங்கறான். அது என்ன தேஜஸோ. சரி. பசங்கள மயக்கற வித்த தான் நமக்குத் தெரியுதான்னு டெஸ்ட் பண்ணலாம்னா அதுக்குள்ள வந்து காரியத்த கெடுத்திட்ட.'
முறைத்தாள் ஸ்ரீலதா.
'நீ என்ன பேசறோம்னு தெரிஞ்சு தான் பேசறியா? இந்த கஷ்டம்லாம் என்னோட போகட்டுமேன்னு தான் நான் இந்த நெருப்புக் குழியில வெந்து வேகறேன். உங்க எல்லாருக்கும் தான் ராப் பகலா ஒழைக்கறென். நீ என்னடான்னா படிச்சு நல்ல வேலைக்கு போவென்னு பாத்தா... படிச்ச பொண்ணு மாதிரியா பேசற?'
விசு விசு என்று அழ ஆரம்பித்தாள் செவ்வந்தி.
'நீ எனக்கு ஒரு ப்ரஷர் அக்கா. எல்லாரும் நீயும் நடிக்க வேண்டியது தான. ஒங்க அக்கா ஒன்ன ரெக்கமண்ட் பண்ணா நீயும் பிக் ஸ்கிரீன்ல வரலாம். வெளினாடு சுத்தலாம். பேப்பர் புக்ல எல்லாம் வரலாம்னு என்ன நொய் நொய்னு அரிக்கறாங்க. நானும் ஒனக்குத் தெரியாம முயற்சி பண்ணி பார்த்தேன். முடியல.'
தங்கையை ஆதரவாய் தலையைத் தடவிக் கொடுத்தாள் ஸ்ரீலதா.
'செவ்வந்தி! நீ நெனைக்கற மாதிரி இது இந்திர லோகம் இல்ல. ஜிகினா உலகம். எல்லாமே போலி. சிலந்தி வல மாதிரி ஒரு நாள் அத்துரும். இன்னைக்கு ஒருத்தர மேல தூக்கிப் பிடிக்கும். மறு நாளே அவர கீழ தூக்கி வீசிரும். ஏதோ எனக்கு கொஞ்சம் லக். இன்னும் ஓடிக்கிட்டு இருக்கேன். அது எத்தன நாளைக்குன்னு தெரியல. ஒன்னப் பத்தி நான் எவ்ளோ கனவு கண்டு வச்சிருக்கேன் தெரியுமா. நீ கல்யாணம் பண்ணி குழந்த குட்டிகளோட ஒரு சராசரி வாழ்க்க வாழணும்னு. ஒன் பேர்ல எத்தன சொத்து எழுதி வச்சிருக்கேன் தெரியுமா? அரசியல் மாதிரி இதுவும் சாக்கட செவ்வந்தி. ஒனக்கு இது வேண்டாம். என்னோட வாழ்க்கயப் பாத்து நீ முடிவு பண்ணிக்காத. நான் எவ்ளோ கஷ்டப் பட்டேங்கரது அம்மாவுக்கும், ராக்காயி ஆண்டிக்கும் தான் தெரியும். கண்ணுக்குப் பிடிச்சவன கல்யாணம் பண்ணிகிட்டு மனசார தன்ன அவனுக்கு குடுக்றதுக்கும் வன்முறயா ஒருத்தன் தன்ன பறிக்கிறதுக்கும் ஒனக்கு வித்யாசம் தெரியும் தானே? அத நான் அனுபவிச்சேன். அத மறச்சி ஒருத்தன கல்யாணம் பண்ணிகிட்டு நான் இருந்திருந்திருக்கலாம். ஆனா நாம மறுபடியும் அந்த குப்பத்திலெயெ தான் இருக்கணும். இப்ப நான் ஒருத்தி கஷ்டப்பட்டதால அந்த குப்பமே எப்படி மாறிடிச்சி பாத்தியா? சின்ன வயசுல சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டதெல்லாம் மறந்திருச்சா ஒனக்கு? இந்த நெலமைக்கு வந்ததும் பழச மறக்கக் கூடாது செவ்வந்தி! சீக்கிரமே ஒரு நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணிக்க. ஒனக்கு யாராவது பிடிச்சிருந்தா சொல்லு. விசாரிச்சு நானே பண்ணி வைக்கறேன்.'
அவள் ஒரு நிமிடம் யோசித்து அவளைப் பார்த்தான்.
'இப்ப என் கூட ஹோட்டலுக்கு வந்தானே ஷ்யாம்? அவன்கா?'
ஸ்ரீலதா வெறுப்பை உமிழ்ந்தாள்.
'அவனா? ஒரு பொண்ண ஹோட்டலுக்கு கூட்டிட்டு வரவன் எப்படி நல்ல பையனா இருப்பான்?'
'அக்கா. நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நாளா பழகறோம். அவன் என்ன லவ் பண்றான். நான் தான் சினிமா அது இதுன்னு ஆசப்படறென். அவன் வேண்டாம். நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு தான் சொன்னான். நான் வேண்டாம் கொஞ்ச நாள் போகட்டுமேன்னு சொல்றென். சரி இப்படி பண்ணினா இவ நம்மள விட மாட்டான்னு ஹோட்டலுக்கு கூட்டிட்டு வந்தான். நானும் சினிமால நடிக்கப் போகணும்னா இதெல்லாம் தெரிஞ்சுக்கணுமே. நம்மள புடிச்சவனுக்கெ நம்மள மொதல்ல குடுப்போம்னு வந்தேன்.'
'பாவி. என் ஒருத்தி வாழ்க்க சீரழிஞ்சது போதாதா? நீயுமா? நான் கழுவுற மீன்ல நழுவுற மீனா வர்ற புத்திய கடவுள் எனக்கு குடுத்திருக்காரு. இல்லன்னா. எனக்கு நேர்ந்த சம்பவங்கள்னால தற்கொலயோ, போதைக்கு அடிமயோ ஆயி ஃபீல்ட விட்டு போயிருப்பேன். நீ சினிமாவுக்கே வர வேண்டாம். ஒனக்கு என்ன தேவயொ அந்த அளவுக்கு நான் ஒனக்கு சம்பாதிச்சுத் தர்ரேன். ஆமாம். அந்தப் பையன் ஒன்ன உண்மையாவெ லவ் பண்றானா?'
'லவ் பண்ணாமலா எனக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்கணும்னு நம்ம கார பாலோ பண்ணிகிட்டே வருவான்?' என்று விசும்பலோடெ செவ்வந்தி சொல்ல, ஸ்ரீலதா திரும்பிப் பார்த்தாள்.
ஆம்! உண்மை தான்.
அந்த நவ நாகரீக வாலிபன் முகத்தில் பதற்றத்துடன் இவர்களது காரை தன் புல்லட்டில் பாலோ செய்து கொண்டிருந்தான்.

(தொடரும்)
 
Top