Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வசந்தகால நதிகளிலே....2

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 2.

மறு நாள் அலுவலகம் வழக்கம் போல இயங்கியது. வழக்கத்தை விட மேனேஜர் கடுகடுவென இருந்தார். ஜெயா அமைதியாகத் தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ராமகிருஷ்ணனைக் காணவில்லை. முந்தைய இரவு அவரைப் பற்றி நினைத்தது தான். அவரது சீட் காலியாக இருப்பதைப் பார்த்துதான் மீண்டும் நினைவுக்கு வந்தது ஜெயாவுக்கு.

"ஏன் மாணிக்கம்? ராமகிருஷ்ணன் சார் வரலியா?" என்றாள் பியூனிடம்.

"அப்ப உங்களுக்கு விஷயமே தெரியாதா? நேத்து சாயங்காலம் நீங்க எங்க இருந்தீங்க?"

"நான் நேத்து லீவு இல்ல? என்ன நடந்தது மாணிக்கம்?" என்றாள். ஏனோ படப்டப்பாக இருந்தது.

"நேத்து மதியத்துல இருந்து சார் ரொம்ப டல்லாவே தான் இருந்தாரு. டயர்டா இருக்குன்னு சொல்லிக்கிட்டே இருந்தாரு. நான் தான் போயி ரெண்டு தடவை டீ வாங்கியாந்தேன். ஆனா பாருங்க அஞ்சு மணி இருக்கும் அப்படியே வேர்த்து விறுவிறுத்து மயங்கி விழுந்துட்டாரு. பேச்சு மூச்சே இல்ல" என்றான்.

கேட்க கேட்க என்னவாக இருக்குமோ என்ற பதட்டம் தொற்றிக் கொண்டது ஜெயாவை.

"அப்புறம் என்ன ஆச்சு?"

"தண்ணி தெளிச்சுப் பார்த்தோம். லைட்டா அசைஞ்சாரு. உடனே ஆட்டோவுல ஆஸ்பத்திருக்குக் கூட்டிக்கிட்டு போயிட்டாங்க ராஜாசாரும், விஜி மேடமும். அவங்க தான் மேடம் அவருக்குக் கூடவே இருந்தது."

"சாரோட வைஃப் வரலியா?"

"அது என்ன கொடுமையோ? அந்த அம்மா விவாகரத்து வாங்கிக்கிச்சாம். இவரு தனியாத்தான் இருக்காராம்."

"சரி சரி! அவருக்கு என்னவாம்?"

"ரத்தக் கொதிப்பு தான் மேடம். பிபி சும்மா கிச்சுன்னு எகிறிருச்சு. அதனால இன்னும் ரெண்டு நாள் ஆஸ்பத்தியிரியில் தான் இருக்கணும்னு சொல்லிட்டாங்களாம். அதான் அவரு வரல்ல." என்று சொல்லி விட்டுப் போய் விட்டான்.

"அடப்பாவமே? ராமகிருஷ்ணன் சார் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா? இவரைப் போய் ஏன் அவர் மனைவி விவாகரத்துச் செய்ய வேண்டும்? ஆனால் நமக்கு என்ன தெரியும்? ஆபீசைப் பொறுத்தவரை அவர் நல்லவராகவே தெரிகிறார். தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி இருப்பாரோ? இந்தக் காலத்தில் எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ? நமக்கு என்ன? அலுவலக நண்பர், விழாவுக்கு சமையல் ஆள் பிடித்துக் கொடுத்தவர், அந்த முறையில் நான் போய்ப் பார்க்கத்தான் வேண்டும்." என்று முடிவு செய்து கொண்டாள்.

அம்மாவுக்கு ஃபோன் செய்து மாலை சற்று நேரம் கழித்து வருவதாகச் சொன்னாள். கொஞ்சம் ஆப்பிள் பழங்கள் வாங்கிக்கொண்டு நேரே நகரின் மையத்திலிருந்து அந்த ஆஸ்பத்திரிக்குப் போனாள். விசாரித்து அவரது அறைக்குச் செல்லுமுன்னரே மணி 7 ஆகி விட்டது. கண் விழித்துப் படித்திருந்தார் ராமகிருஷ்ணன். ஜெயாவை எதிர்பார்க்கவில்லை என்பதை அவரது அதிர்ச்சி சொல்லியது.

"வாங்க ஜெயா மேடம்! சாரி! உக்காரச் சொல்லக் கூட சரியான வசதி இல்ல" என்றார்.

"பரவாயில்ல சார்! ஆபீஸ்ல நாள் முழுக்க உக்காந்துக்கிட்டே தானே வேலை செய்யறோம். கொஞ்ச நேரம் நின்னா ஒண்ணும் ஆகிடாது." என்றபடி ஆப்பிளை எடுத்து வைத்தாள்.

"உங்களுக்கு உடம்பு சரியில்லேன்னு இன்னைக்குக் காலையில ஆபீசுக்கு வந்தப்புறம் தான் எனக்குத் தெரியும்."

"ஹூம்! எங்க அப்பா, அம்மா யாருக்குமே ரத்தக் கொதிப்பே கிடையாது. ஆனா பாருங்க 42 வயசுல எனக்கு வந்திருச்சு. என்ன செய்ய?" என்றார் விரக்தியாக.

சற்று நேரம் பொதுவான பேச்சுக்கள் பேசி விட்டு விடை பெற்றாள் ஜெயா.

"எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க மேடம்! மதியம் ரெண்டு இட்லி சாப்பிடக் குடுத்தாங்க. அதுக்கப்புறம் ஒண்ணுமே குடுக்கல்ல. ரொம்பப் பசியா இருக்கு. நர்ஸ் கிட்ட சொல்லி சாப்பிட ஏதாவது தரச் சொல்றீங்களா?" என்றார். பசி மிகுந்து தெரிந்தது முகத்தில்.

தன்னைத்தானே கடிந்து கொண்டாள் ஜெயா.

"சே! என்ன மனுஷி நான்? சாப்பிட்டாரா இல்லையா என்று கூடக் கேட்கவில்லையே? இந்த ஆஸ்பத்தியும் தான் என்ன? பேசண்டுக்கு வேளாவேளைக்கு உணவு கொடுக்க வேண்டாமா?" என்று எண்ணிக்கொண்டாள்.

"சர்! நான் இந்த ஆப்பிளைக் கட் பண்ணித் தரேன். முதல்ல சாப்பிடுங்க. பிறகு நான் போய் சொல்றேன்." என்று கூறி விட்டு ஹேண்ட்பேக்கில் இருந்த சிறு கத்தியால் துண்டுகள் போட்டாள். அவருக்கு உண்ணக் கொடுத்து விட்டு நர்சைத் தேடிப் போய்க் கடிந்து கொண்டாள். ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வரும் போது தினமும் போய்ப் பார்த்தால் என்ன? என்று தோன்ற அதைச் செயலாற்ற வேண்டும் என நினைத்துக்கொண்டு வீடு வந்தாள் ஜெயா.

ராமகிருஷ்ணன் சார் இரண்டே நாட்களில் டிஸ்சர்ஜ் ஆகி விட்டார். அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லக் கூட யாரும் வரவில்லை. எனவே லீவு எடுத்துக்கொண்டு ஜெயாவும் ராஜாவும் விஜியுடன் சென்றாள். நகரிலிருந்து சற்று தள்ளி அமைந்திருந்த அந்தச் சிறிய வீடு ஆடம்பரமில்லாமல் அடக்கமாக இருந்தது.

"வாங்க! உக்காருங்க! காப்பி டீ ஏதாவது சாப்பிடறீங்களா?" என்றார் ராமகிருஷ்ணன்.

"என்ன சார் நீங்க? இப்பத்தான் ஆஸ்பத்தியில இருந்து வரீங்க. பேசாம ரெஸ்ட் எடுங்க." என்றாள் விஜி.

அப்போது ராஜாவுக்கு ஃபோன் வர சற்றே வெளியில் போய்ப் பேசி விட்டு வந்தான். வரும் போதே முகத்தில் மகிழ்ச்சி.

"விஜி! எங்கம்மா நம்ம காதலை ஏத்துக்கிட்டாங்க. நம்மை இப்பவே வீட்டுக்கு வரச் சொல்லியிருக்காங்க. உடனே கிளம்பு" என்றான். விஜி துள்ளிக் குதிக்காத குறை. ஜெயாவுக்கும் மகிழ்ச்சி தான். அவர்கள் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாகக் காதலித்து வருகிறார்கள். கண்ணியமான உண்மைக் காதல். ஆனால் ஏனோ ராஜாவின் வீட்டில் அவன் அம்மா ஒப்புக்கொள்ளவில்லை. இப்போது திடீரென மனம் மாறியிருக்கிறார்கள் போல. ராஜா விஜியை அழைத்துக்கொண்டு பறந்து விட்டான். ஜெயா சற்றே சங்கடமாக உணர்ந்தாள்.

"அப்ப நானும் கிளம்பறேன் சார். நாளையில இருந்து ஆபீஸ் வருவீங்களா?" என்றாள்.

"உம்! அப்படித்தான் நெனச்சிருக்கேன். கடவுள் என்ன நெனச்சிருக்காரோ?" என்றார் விரக்தியாக.

"கடவுள் எப்பவுமே நல்லதைத்தான் நெனப்பாரு. ராத்திரிக்கு என்ன சாப்பிடப் போறீங்க?"

"ஏதாவது உப்புமா செஞ்சுப்பேன். நீங்க கிளம்புங்க ஜெயா. என்னால உங்களுக்கு ஏன் சிரமம்? ஆஸ்பத்தியிலயே ரெண்டு நாள் சாப்பாடு வேற குடுத்தீங்க. மதியம் லீவு போட்டுட்டு என்னை வீட்டுல கொண்டு வந்து விட்டீங்க. ரொம்ப தேங்க்ஸ்." என்றார்.

விடை பெற்றுக் கிளம்பி விட்டாள் ஜெயா. ஆனால் வீட்டிலும் கூட ராமகிருஷ்ணனைப் பற்றிய யோசனையாகவே இருந்தது. இது பற்றி யாரிடமாவது பேசினால் தேவலாம் போல ஒரு உணர்வு. ஆகையால் அன்று அம்மாவின் அருகில் வந்து படுத்துக்கொண்டாள்.

"ஜெயா! கேக்கணும்னு நெனச்சேன். யாருக்கு நீ ரெண்டு நாளா சாப்பாடு எடுத்துட்டுப் போற? அதுவும் சாயங்காலம் லேட்டா வேற வர? யாருக்கு என்ன உடம்பு?" என்றாள் அம்மா.

அம்மாவே அந்தப் பேச்சை ஆரம்பித்ததில் சற்றே நிம்மதியானது ஜெயாவுக்கு.

"எங்க ஆபீஸ்ல ராமகிருஷ்ணன்னு ஒருத்தர் வேலை செய்யுறார்மா. அவருக்கு தான் ரத்தக் கொதிப்புன்னு ஆஸ்பத்திரியில சேர்த்திருந்தாங்க. அவருக்குத்தான் சாப்பாடு."

"ஏன் அவர் வீட்டுல யாரும் இல்லையா?"

"இல்லியேம்மா! அவரோட பேரண்ட்ஸ் பத்தித் தெரியல்ல. ஆனா அவரோட மனைவி விவாகரத்து வாங்கிட்டாங்களாம். சொன்னாங்க."

சட்டென அம்மாவின் முகம் சீரியசானது.

"ஜெயா! உனக்கும் வயசாகுது. இந்த மாதிரி தறுதலைங்களுக்கு எதுக்கு நீ உதவி பண்ற?" என்றாள் கோபமாக.

எரிச்சலானாள் ஜெயா.

"யாரும்மா தறுதலை? அவரைப் பார்த்தா அந்த மாதிரி ஆளாத் தெரியல்ல."

"அப்ப எதுக்கு பொண்டாட்டியை விலக்கி வெச்சாராம்?"

"அவர் விலக்கல்லம்மா! அந்த அம்மா தான் டிவோர்ஸ் வாங்கிட்டுப் போயிடிச்சு போல."

"அந்த அளவுக்கு இவன் என்ன செஞ்சானோ?"

ஏன் இதைப் பற்றிப் பேசினோம் என எண்ணிக் கொண்டாள் ஜெயா. பேச்சை மாற்ற எண்ணி

"ஏம்மா? தம்பி அன்னைக்கே இண்டெர்வியூ போயிட்டு வந்தானே? ஏதும் சொன்னானா?"

உதட்டைப் பிதுக்கினாள்.

"என்னவோ முதல் ரெண்டு ரவுன்டுல செல்க்ட் ஆயிட்டானாம். நாளைக்கு வரச் சொல்லியிருக்காங்களாம். அப்பத்தான் பெரிய அதிகாரியோட இண்டர்வியூவாம். அதுலயும் செலக்ட் ஆயிட்டான்னா நல்லதுன்னான்"

சந்தோசம் துக்கம் இரண்டும் ஒரு சேரத் தாக்கியது ஜெயாவை. அதிகம் படிக்காத அம்மாவிடம் இத்தனை விவரங்கள் சொன்னவன் படிக்க வைத்த அக்காவிடம் சொல்லவேயில்லையே? என எண்ணிக்கொண்டாள். எப்படியோ தீபனுக்கு வேலை கிடைத்து விட்டால் போதும்.

"தீபனுக்கு என்ன வயசும்மா இருக்கும்?" என்றாள் ஜெயா.

"உம்...அவனுக்கும் 25 ஆச்சே! வேலை கெடச்ச உடனே கல்யாணத்தைப் பண்ணிர வேண்டியது தான்" என்றாள் அம்மா.

மீண்டும் சுருக்கென்றது.

"முதல்ல வேலை கெடைக்கட்டும். எந்த கம்பெனியாம்?"

பெயர் சொன்னாள் அம்மா. அயர்ந்து போனாள் ஜெயா. அது ஒரு மிகப்பெரிய சாஃப்ட்வேர் கம்பெனி. ஆரம்ப சம்பளமே 40,000 கொடுப்பார்கள். அதில் இரு ரவுண்டுகள் வெற்றி அடைந்திருக்கிறான் என்றால் தீபன் கெட்டிக்காரன் தான். எப்படியோ நன்றாக இருந்தால் சரி.

இரவு எப்போது முடிந்தது காலை எப்போது புலர்ந்தது எனத் தெரியாமல் விழிப்பும் தூக்கமுமாக கழித்தாள் ஜெயா. அன்றைய பொழுது வழக்கம் போலக் கழிய மாலை சீக்கிரமே வீடு வந்து விட்டாள். மகிழ்ச்சியே உருவாக தீபன் அமர்ந்திருந்தான்.

"அக்கா! எனக்கு வேலை கெடச்சிருச்சுக்கா. சம்பளம் மாசம் 50,000 ரூவா. வர திங்கக் கிழமை வரச் சொல்லியிருக்காங்க." என்று கத்தினான் தம்பி. அவன் கைகளில் இனிப்புப் பெட்டி.

மனம் முழுக்க மகிழ்ச்சி வெள்ளம் ஆக்கிரமித்தது. அவளது அன்புத்தம்பி, அவளுக்கு பத்து வயதாகும் போது பிறந்த குழந்தை. இப்போது உலகளாவிய அளவில் பரவியிருக்கும் கப்ம்னியில் வேலை செய்யப் போகிறான். அதுவும் 50,000 ரூபாய் சம்பளத்தில். கண்கள் பனித்தன. மனம் அப்பாவை நினைத்தது.

"அப்பா இருந்திருந்தா ரொம்ப சந்தோசப்படுவார்டா! வாழ்த்துக்கள் தீபன்" என்றாள் மனமாற.

"நல்ல நேரத்துல எதுக்கு இப்ப கண் கலங்கிக்கிட்டு. போ தீபன். போயி ஆர்டரை அப்பா படத்துக்குக்கிட்ட வெச்சு கும்பிடு. உனக்கு இனிமே எப்பவுமே நல்ல காலம் தான்" என்றாள் அம்மா.

மீண்டும் சுருக்கென்றது ஜெயாவுக்கு.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் முன்பு இதே போல வேலைக்கான ஆர்டருடன் ஜெயா வந்த போது அம்மா அத்தனை குதூகலப்படவில்லையோ? சம்பளம் இத்தனை இல்லையென்றாலும் அப்போது அவள் குடும்பத்துக்கு அது தேவையாகத்தானே இருந்தது?

கவிதா வந்து விட்டாள்.

"எனக்குத் தெரியும். என் தம்பி ரொம்ப கெட்டிக்காரன்னு. உங்க அத்தானுக்கு ரொம்ப சந்தோசம்டா தம்பி! முத மாச சம்பளம் வந்ததும் உன் மருமகனுக்கு ஏதாவது செய்யி" என்றாள்.

இவள் மாறவே மாட்டாள் என எண்ணிக் கொண்டாள். அன்றைய இரவு மீண்டும் தனிமைப் படுக்கையில் விழித்திருந்த போது ராமகிருஷ்ணனின் நினைவு மீண்டும் வந்தது. கடந்த சில நாட்களாகவே அவர் ஆபீசில் அத்தனை கலகலப்பாக இல்லை. மதிய உணவுக்கு வெளியிலும் போகவில்லை, கொண்டு வந்தும் உண்ணவில்லை. சே! நானாவது கேட்டிருக்க வேண்டாமா? ஆனால் அவர் யாருடனும் பேசவே இல்லையே? நானாகப் போய்ப் பேசினால் நன்றாக இருக்குமா? முகத்தில் அடித்தது போல உனக்கென்ன வந்தது? என்று கேட்டு விட்டால் எத்தனை அவமானம்? யோசித்தபடி அன்றைய இரவு கழிந்தது. மறு நாள் எழும் போதே அப்படி ஒரு தலைவலி. சுத்தியலால் யாரோ அடிப்பது போல விண் விண் எனத் தெறித்தது. கண்களைத் திறக்கக் கூட முடியவில்லை.

சோர்வு சூழ கண்களை மூடினாள். எவ்வளவு நேரம் உறங்கினாள் எனத் தெரியவில்லை. அம்மாவின் குரல் கேட்க விழித்துக்கொண்டாள்.

"என்ன ஜெயா? இன்னமும் படுத்திருக்கே? ஆபீஸ் போகலியா?" என்றாள்.

எழ முயன்றவளுக்குத் தலை சுற்றியது. அப்படியே மீண்டும் படுத்துக்கொண்டாள்.

"என்னடி? என்ன? என்ன செய்யுது உனக்கு? கண்ணும் முகமும் சரியில்லையே?" என்றபடி தொட்டுப் பார்த்தாள்.

"ஜெயா! உடம்பு அனலாக் கொதிக்குதும்மா. இன்னைக்கு ஆபீஸ் போகாதே. முதல்ல ஃபோன் பண்ணி லீவு சொல்லு. அப்புறம் வெந்நீர் தரேன். வாயைக் கொப்பளிச்சுட்டு மெல்ல எழுந்து வா. டாக்டர் கிட்டப் போகலாம்" என்றாள் அம்மா.

அம்மாவின் அன்பில் கரைந்தது உள்ளம். கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.

"என்னம்மா? என்ன செய்யுது? கண்ணெல்லாம் தண்ணி?" என்று துடைத்து விட்டாள் அம்மா. அம்மாவைக் கட்டிக்கொண்டு உனக்குப் பிறகு எனக்கு யார் அம்மா இருக்கிறார்கள்? என்று கதறத் தோன்றியது. உடல் நலமின்மை காரணமாக மனமும் பலவீனப்பட்டு விட்டது எனத் தேற்றிக் கொண்டாள்.

அம்மா சொன்னபடி எழுந்து வாயைக் கொப்பளிப்பதற்குள் கண்கள் இருண்டு கொண்டு வந்தன. அம்மா கொடுத்த காப்பியின் வாடையே குமட்டியது. மகளின் நிலையைப் பார்த்த தாய் எதுவும் பேசாமல் ஆட்டோ பிடித்து பக்கத்து கிளினிக்குக்கு அழைத்துச் சென்றாள். டாக்டர் பரிசோதித்து விட்டு வைரஸ் காய்ச்சல். மூன்று நாளாகும் குணமாக. எந்த வேலையும் செய்யக் கூடாது. மூன்று நாட்களும் வந்து ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி ஊசியும் போட்டு மாத்திரைகளும் கொடுத்தார். என்ன சாப்பிடலாம்? என்ன குடிக்கலாம்? என அம்மா கேட்டுக்கொண்டிருந்தாள். அந்த மயக்க நிலையிலும் ரிசப்ஷனில் உட்கார்ண்டிருந்த பெண்ணை எங்கோ பார்த்த நினைவு வர மூளையைக் கசக்கினள் ஜெயா. நினைவுக்கு வரவே இல்லை. வீட்டுக்கு வந்து உறங்கி எழுந்த பின் சற்றே தெம்பாக இருந்தது.

மதியம் அம்மா கொடுத்த சுடுகஞ்சியைக் குடித்துக்கொண்டிருந்த போது ராமகிருஷ்ணனிடம் இருந்து ஃபோன் வந்தது. அவள் அன்று வரவில்லையென்பதால் சில வேலைகளை மேனேஜ்ர் அவரிடம் ஒப்படைத்து விட்டார் போல. அதைக் குறித்து சந்தேகங்களைக் கேட்டு விட்டு வைத்து விட்டார். அப்போது தான் பளிச்சென அந்த ரிசப்ஷன் பெண் யாரெனத் தெரிந்தது. அன்று ராமகிருஷ்ணன் சார் வீட்டுக்குப் போன போது சுவரில் தொங்கிய அவர்களது கல்யாண ஃபோட்டோவில் இருந்தவள். அப்படியானால் அவள் ராமகிருஷ்ணனின் மனைவியா? விவாகரத்து ஆகி விட்டது எனச் சொன்னாரே? ஆனால் அவள் கழுத்தில் புதுச் சரடு மின்னியது போல அல்லவா நினைவு? எப்படியானாலும் நாளை பார்த்துக்கொள்ளலாம் என எண்ணி கண்ணை மூடினாள் ஜெயா.
 
Nice epi dear.
Katha nalla irruku.
Tq for daily ud.Katha kadasi vara kodungo,mathiyathil stop pannida matinga thane?yenna enakku katha ishttam aye, athu konda kelkunnu. Silar nalla kondu povum pinna mathiyathil kanaathu povum. Athukke advance booking.
 
ஏன் ஜெயாவை வீட்டில் யாருமே கண்டு கொள்ள வில்லை???!!

ராமகிருஷ்ணர்க்கும் அவர் மனைவிக்கும் ஏன் விவாகரத்து ஆகிருக்கும்???
 
Top