Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வசந்தகால நதிகளிலே....7

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 7:

மதியப் பொழுது ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளாமல் கழிந்தது. உணவின் போது கவிதா விரோதியைப் பார்ப்பது போலப் பார்த்தாள் ஜெயாவை. தீபன் நண்பர்களோடு வெளியே எங்கோ போய் விட்டான்.

"இப்பவாவது சொல்லுவியா? என்ன விஷயம்னு?" என்றாள் அம்மா மெல்லிய குரலில்.

மணி இப்போதே 2. இன்னமும் சொல்லவில்லையென்றால் அத்தையும் ராமகிருஷ்ணனும் வந்த பிறகா சொல்வது? இது என் வாழ்க்கை. நேற்று பிறந்த தீபன் தெளிவாக சிந்தித்து எல்லைக்கோடு கிழிக்கிறான். ஆனால் நான்? இன்னமும் தயங்கிக்கொண்டு இருக்கிறேன். என எண்ணிக்கொண்டாள்.

"என்ன? சொல்லேன்" என்றாள் கவிதா எரிச்சலோடு.

"இன்னைக்கு சாயங்காலம் 5 மணிக்கு என்னைப் பொண்ணு பாக்க ராமகிருஷ்ணன்னு ஒருத்தரும் அவங்க அம்மாவும் வராங்க" விஷயத்தைப் பொட்டெனப் போட்டு உடைத்தாள் ஜெயா.

ஊசி விழுந்தால் கூடக் கேட்கும் நிசப்தம் நிலவியது. இரு நிமிடங்களுக்குப் பிறகு கடகடவெனச் சிரிப்பு சத்தம் கேட்டது. சிரித்தது கவிதா தான்.

"உன்னையா? உன்னைப் பொண்ணு பாக்கவா வராங்க? மாப்ப்பிள்ளைக்கு வயசு என்ன 65 இருக்குமா?" என்றாள் மேலும் சிரிப்போடு.

மனதின் ரணத்தில் கொள்ளிக்கட்டையைச் செருகியது போல வலித்து எரிந்தது.

"இல்லை! 42. என் கூடத்தான் ஆபீசுல வேலை பாக்குறாரு" என்றாள். கமறிய குரலை சமாளித்துக்கொண்டு.

"ஜெயா! நிஜமாத்தான் சொல்றியாடி? யார் அவங்க? என்ன சாதி? எதுவுமே தெரியாம நேரா வீட்டுக்கு வரச் சொல்லிட்டியா?" என்றாள் அம்மா. குரலில் கலக்கம்.

"ஓ! நீ இந்த ஆள் கூடத்தான் ஊர் சுத்தினியோ? அம்மா சொன்னாங்க. போன மாசம் ஃபுல்லா நீ சனி ஞாயிறு கூட வீட்டுல தங்கலியாமே? கல்யாண ஆசை முத்திப் போச்சோ? " என்றாள் கவிதா.

பதிலே பேசாமல் அமர்ந்திருந்தாள் ஜெயா.

"என்னம்மா நீ பேசாம இருக்கே? இந்த வயசுக்கு மேல இவ சாதி விட்டு சாதி கல்யாணம் செஞ்சுக்கிட்டா, என் புகுந்த வீட்டுக்ல என்னைக் கேலி செய்ய மாட்டாங்களா? ஊர்ல உலகத்துல என்ன பேசுவாங்க?" என்றாள்.

"கவிதா சொல்றதுலயும் உண்மை இருக்கும்மா! ஜெயா! உனக்கு வயசு 36 ஆகுது. இப்பப் போயி எதுக்கும்மா கல்யாணம்? பின்னால ஏதாவது பிரச்சனைன்னு நீ வந்தா, நாங்க என்ன செய்ய?" என்றாள்.

"அது மட்டும் இல்லம்மா! இப்ப ஜெயாக்காவை மாதிரி வேலை பாக்குற பொண்ணுங்களை வளைச்சுப் போட்டு கல்யாணம்னு பேருக்கு செஞ்சுக்கிட்டு அவங்க சம்பளத்தை ஃபுல்லா பிடிங்கிக்கிட்டு தன்னோட இன்னொரு குடும்பத்துக்குக் குடுக்குற ஆட்கள் இருக்காங்களாம். நேத்து தான் டிவியில காட்டுனாங்க. அக்கா! நீ சொல்றது அந்த மாதிரி ஆள்கள்ல ஒருத்தரா இவரு ஏன் இருக்கக் கூடாது?

"ஆமா! ஜெயா! கவிதா சொல்றதும் சரின்னு படுது. வரவன் ஃபிராடுன்னா உன் வாழ்க்கை மட்டுமில்ல, நம்ம குடும்பமே பாதிக்கடுமே? " என்றாள் அம்மா.

"இவங்க நல்லவங்கம்மா! வருவாங்க பேசிப்பாரேன்" என்றாள் பலவீனமாக ஜெயா. அவளுக்கு இப்போது தான் செய்வது மிகப்பெரிய தவறோ எனத் தோன்றி விட்டது. ஒரு வேளை அம்மாவும் கவிதாவும் சொல்வது உண்மையாக இருக்குமோ? என் நலன் மேல் அக்கறை இருப்பதால் தானே பேசுகிறார்கள்? என்ன இருந்தாலும் ரத்த சொந்தத்தைப் போல வருமா?

"அக்கா! இன்னமும் ஒண்ணும் கெட்டுப் போகல்ல! நீ ஃபோன் பண்ணி அந்த ஆளை வர வேண்டாம்னு சொல்லு. உனக்குக் கல்யாணம் செஞ்சுக்கணும்னு ஆசையா இருந்தா , அம்மா கிட்டயோ எங்கிட்டயோ சொல்ல வேண்டியது தானே? எங்க புகுந்த வீட்டுல எத்தனை வரன் இருக்காங்க?" என்றாள் கவிதா.

மனது மலர்ந்தது ஜெயாவுக்கு.

"யாருடி அது?" என்றாள் அம்மா.

"அதாம்மா! தொட்டில் போடும் போது கூட வந்தாரே, எங்க மாமியாருக்குத் தம்பி முறை அவரைத்தான் சொல்றேன். அவருக்கு ஜெயாக்காவை பார்த்ததுமே பிடிச்சுப் போச்சு. எங்க மாமியார் கிட்ட கேட்டிருக்காரு. ஆனா நாங்க பிடி குடுக்கவே இல்லை. பெரிய பணக்காரரு. சொந்தமா கம்பெனி இருக்கு. அவரைப் பார்க்கலாம். என்னக்கா?" என்றாள்.

மனதுள் பயம் மளமளவென மீண்டும் கூடு கட்டியது. அவரா? அந்தப் பெரியவரா? வயதே 60க்கு மேல் இருக்குமே? அவர் ஜெயாவைப் பார்த்து இளித்ததும், வழிந்ததும் நினைவில் வர உடல் உதறிப் போட்டது.

"ஐயையோ! அவ்வளவு வயசானவரை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்" ஏறக்குறைய கத்தினாள்.

"உன்னைக் கட்டாயப்படுத்தல்லக்கா! சும்மா சொன்னேன் அவ்வளவு தான். உனக்குக் கல்யாணத்துல இஷ்டமில்லேன்னா சொல்லிடு. முதல்ல இப்பவே ஃபோன் பண்ணி அந்த ஆளை வர வேண்டாம்னு சொல்லு" என்றாள் கவிதா. அம்மாவும் ஒத்து ஊதினாள். குழப்பமான மனத்தோடு ஃபோனை எடுத்தாள். அழைப்பு போகவே இல்லை. நெட் ஒர்க் எல்லைக்கு வெளியே உள்ளார் என்றே வந்தது.

"இப்ப என்ன செய்ய?" என்றாள் ஜெயா.

"நீ ஒண்ணும் கவலைப்படாதேக்கா! நாங்க இருக்கும் போது உனக்குக் கெடுதல் நடக்க விட்டிருவோமா? வரட்டும் அவங்க! ஒண்ணுல ரெண்டு கேட்டுடறேன்" என்றாள் தங்கை.

இப்போது பதட்டமும் பயமும் அதிகமானது ஜெயாவுக்கு. ஐயோ! என் வாழ்க்கை சலனமில்லாமல் போய்க்கொண்டிருந்ததே! ஏன் இத்தனை தேவையில்லாத குழப்பம்? இப்போது அவர்கள் வந்தாலும் தவறு, வரவில்லயென்றாலும் தவறு என்றல்லவா ஆகிறது. என்னால் அவர்களுக்கு ஏத்னேனும் அவமானம் நேர்ந்தால் என்னை மன்னிக்கவே மாட்டார்கள் அவர்கள். தவித்தாள்.

ஐந்தரை மணிக்கு காலிங் பெல் ஒலிக்க மயக்கமாக வந்தது ஜெயாவுக்கு. அவளை அவளது அறையிலேயே இருக்கச் சொல்லி விட்டு தான் பார்த்துக்கொள்கிறேன் என்று வெளியில் போய் விட்டாள் கவிதா. ஆனாலும் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் திரை மறைவில் நின்றாள் ஜெயா. வந்தவர்களை உட்காரக் கூடச் சொல்லவில்லை கவிதா.

"இதைப் பாருங்க! எங்கக்கா தெரியாம உங்களை வரச் சொல்லிட்டாங்க. அவங்களுக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லை. அதனால மேற்கொண்டு வம்பு வளக்காமப் போயிருங்க" என்றாள் கவிதா கடுமையாக.

அழுகை வர சமாளித்துக்கொண்டாள் ஜெயா. ஆனால் அதற்கெல்லாம் கலங்கவில்லை அத்தை.

"என்ன சின்னப் பொண்ணைப் பேச விட்டுட்டுப் போயிட்டாங்க? எங்கேம்மா உங்கம்மா?" என்றாள் வேலம்மாள் எதுவுமே நடக்காதது போல.

"ஒரு தடவை சொன்னாப் புரியாதா? போங்க பேசாம. எங்கக்காவுக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்ல" என்றாள் கவிதா மீண்டும்.

"நல்லாத்தான் புரியுது! போ! போயி உங்கக்காவை வரச் சொல்லு! அவ சொல்லட்டும், அப்புறம் பேசிக்கலாம். ஆமா! உங்கம்மா என்ன? எப்பவுமே சின்னப்பசங்க பின்னால ஒளிஞ்சுக்குவாங்களோ?" என்றாள் வேலம்மாள் மீண்டும்.

அம்மா வெளியே வந்தாள்.

"வாங்கம்மா! நீங்க தான் ஜெயாவோட தாய்னு புரிஞ்சுக்கிட்டேன். வீட்டுக்கு வந்தவங்களை இப்படித்தான் வரவேற்பீங்களா?"

"இதைப் பாருங்க! நீங்க யாரு? என்ன சாதி? இது எதுவும் தெரியாம உங்களை வரச் சொல்லொட்டா என் மக ஜெயா. அது தப்புன்னு இப்ப அவளுக்குப் புரிஞ்சு போச்சு. அதனால தான் சொல்றேன் நீங்க போகலாம்." என்றாள் அம்மா.

"அப்படியா? சரி! ஏம்மா உன்னைப் பார்த்தா பிள்ளைப் பெத்தவ மாதிரி இருக்கே? உனக்கு என்ன வயசு?" என்றாள் வேலம்மாள் கவிதாவை நோக்கி.

"26"

"உம்! 26 வயசுலயே கல்யாணமாகி நீ குழந்தை பெத்துக்க உங்கம்மா சம்மதிச்சிருக்காங்க, ஆனா உங்கக்கா மட்டும் கல்யாணம் பண்ணக் கூடாதா? இது என்னம்மா நியாயம்?" என்றாள் வேலம்மாள் மீண்டும்.

"நீங்க தகறாரு பண்றதுக்குன்னே வந்திருக்கீங்க! மரியாதையாப் போயிருங்க. இல்லேன்னா போலீசுல சொல்லுவேன்." என்றாள் கவிதா.

கோபம் வந்தது ஜெயாவுக்கு.

"அம்மா! நீங்க ஏன் ஜெயாவுக்குக் கல்யாணம் ஆகக் கூடாதுன்னு நெனக்கறீங்கன்னு இப்ப புரியுது. மருமக வந்தா மகன் அன்னியன் தான். உங்க மகன் தீபனை நம்ப முடியாது. அதே மாதிரி தன்னோட புகுந்த வீட்டுல உங்களைச் சேர்க்க மாட்டாங்கன்னு சொல்லிட்டுப் போயிட்டே இருக்கும் உங்க ரெண்டாவது மக. அதனால உங்களோட கடைசி காலம் வரைக்கும் சம்பாதிச்சுப் போட்டு உங்களைக் கவனிச்சுக்க ஜெயாவை தயார் பண்ணி இருக்கீங்க. அது புரியுது. ஆனா உங்க காலத்துக்கு அப்புறம் அந்தப் பொண்ணு என்ன செய்யும்னு யோசிச்சீங்களா?" என்றாள் வேலம்மாள்.

சிவாகாமியின் முகம் கறுத்தது.

"என்ன எங்கம்மாவை பயமுறுத்திப் பார்க்கறீங்களா?" என்று வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்தாள் கவிதா.

"தா! சின்னப்புள்ளையா லட்சணமா ஓரமா அங்கிட்டுப் போயி உக்காரு. உன்னை மாதிரி கையை கிரீம் போட்டு பராமரிக்குறவ இல்லை நான். களையெடுக்குறவ. அருவா வீசுனேன்? கை தூண்டாப் போயிரும். வந்ததுல இருந்து பாக்கேன். ஓவராக் கத்துதியே?" என்றாள் வேலம்மாள். நடுங்கிப் போய் அமர்ந்தாள் கவிதா.

"ஜெயா" என்று கத்தினார் ராமகிருஷ்ணன்.

பயந்தபடியே வெளியே வந்தாள்.

"இத்தனை நேரமும் உங்கம்மாவும், தங்கச்சியும் எங்களை அவமானப்படுத்துனதைப் பார்த்துக்கிட்டும் பேசாம தான் இருந்தியா? உனக்கு நாங்க என்னம்மா செஞ்சோம்?" என்றார் ராமகிருஷ்ணன் கோபமாக.

"வந்து...வந்து..." என்ன சொல்வது எனத் தெரியாமல் தடுமாறினாள் ஜெயா.

"ஏதோ ஒரு வேகத்துல காதலிச்சுட்டு வீட்டை ஓடுற வயசு உனக்கும் இல்ல, எனக்கும் இல்ல. படிச்சு வேலை பாக்குற பெண் நீ! உனக்கு நல்லது எது? கெட்டது எதுன்னு தெரியாமப் போனா அதுக்குப் பேரு அப்பாவித்தனம் இல்ல. முட்டாள் தனம்" என்றார் கோபமாக.

"இதைப் பாராத்தா! ஏதோ என் மகன் உன் மேல ஆசைப்பட்டான். நீயும் சம்மதிச்சேன்னு தான் நான் வந்தேன். உங்கம்மாவுக்கும் தங்கச்சிக்கும் அவங்க சுய நலம் தான் முக்கியம். நீ கொண்டு வர கசு முக்கியம். அதனால ஏதாவது பேசத்தான் செய்வாக. ஆனா நீ? நீ என்ன சொல்லியிருக்கணும்? எனக்கு அத்தையைத் தெரியும், ராமகிருஷ்ணனைத் தெரியும். நான் கல்யாணம் செஞ்சுக்கத்தான் போறேன்னு சொல்லியிருக்க வேண்டாமா? அதை விட்டுட்டு அவங்களைப் பேச விட்டு வேடிக்கை பார்த்துட்டியே?" என்றாள் வேலம்மாள் கடுங்கோபமாக.

"தயவு செஞ்சு என்னை மன்னிச்சுக்குங்க அத்தை" என்றாள் கண்ணீருடனே.

"இல்ல தாயீ! என் குடும்பத்துக்கு நீ சரிப்பட மாட்டே! பலவீனமான மனசுள்ள பெண்ணுங்களால குடும்பத்துக்கும் நல்லதில்ல, நாட்டுக்கும் நல்லதில்ல. அதனால தம்பி ராமு! இந்தப் பொண்ணு நமக்கு வேண்டாம்டா! வா போகலாம்" என்று மகனின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியில் சென்றாள் வேலம்மாள்.

காதுகளில் ஞொய்யென்ற சத்தம். தன் வாழ்க்கை போகிறது என்ற தவிப்பு. இனிமேல் ராமகிருஷ்ணனையும் அத்தையையும் பார்க்கவே முடியாமல் போய் விடுமோ என்ற பயம், அத்தை சொன்னது போல கவிதாவுக்குப் பணம் கொடுக்கும் ஏடிஎம் ஆகவே தன் வாழ்க்கை போய் விடக் கூடாது என்ற ஆவேசம், எல்லாவற்றுக்கும் மேலாக தனக்கென குடும்பம் என்ற ஆசை எல்லாம் சேர பாய்ந்து போய் குறுக்கே நின்றாள் ஜெயா.

"அத்தை! நான் செஞ்சது தப்புத்தான். ஒரு நிமிஷம் குழப்பத்துக்கு ஆளாயிட்டேன். ஆனா அதுக்காக என்னை நீங்க வேண்டாம்னு சொல்றது நியாயமே இல்ல. என்னால உங்க மகன் இல்லாம வாழ முடியாது, அதே போல உங்க மகனாலயும் நான் இல்லாம வாழ முடியாது. அதனால எங்களுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சிருங்க. இதை நீங்க வேண்டுகோளா நெனச்சாலும் சரி, இல்லை மிரட்டலா நெனச்சாலும் சரி. ஆனா நீங்க சரின்னு சொல்ற வரைக்கும் இந்த வீட்டுக் கதவைத் திறக்க மாட்டேன்." என்றாள்.

சட்டென அணைத்துக்கொண்டாள் வேலம்மாள்.

"நீ தைரியமா உன் மனசைச் சொன்னதால நான் ஏத்துக்கறேன். ஆனா இப்படி வீட்டுக்கு வந்தவங்களை வான்னு கூடச் சொல்ல முடியாதவங்க வீட்டுல எனக்கு வேலை இல்ல. உங்கம்மாவும் சரி, தங்கச்சியும் சரி. எங்களை மட்டுமில்ல, உன்னையும் சேர்த்து அவமானப்படுத்தியிருக்காங்க. அதனால இப்பவே நீ எங்க கூட வந்தா, பக்கத்துக்கோயில்ல வெச்சு என் மகன் உனக்குத் தாலி கட்டுவான். என் மருமகளா எங்க குல விளக்கா நீ வரலாம். நீயே முடிவு செஞ்சுக்க!" என்றாள் வேலம்மாள் தீர்மானமான குரலில்.

திகைத்துப் போனாள் ஜெயா. ஒரு நிமிடம் யோசித்தாள். நிச்சயம் அம்மா மன்னிப்புக் கேட்பாள், ஜெயாவை இவருக்குக் கல்யாணம் செஞ்சு குடுக்க சம்மதம். என்று சொல்வாள் என எதிர்பார்த்தாள். மாறாக அம்மா கத்தத் துவங்கினாள்.

"ஓஹோ! இத்தனை நாள் வளர்த்த எங்களை விட, நேத்து வந்தவங்க உனக்கு உசத்தியாப் போயிட்டாங்களா? என்னை மீறிப் போயிருவியா நீ?" என்றாள்.

தங்கையோ, "அக்கா! என்ன இருந்தாலும் நாங்க உன் ரத்த சொந்தம். இவங்களுக்கு என்ன உன் மேல அத்தனை அக்கறை? இன்னைக்குப் போயிட்டு நாளைக்கே நீ கண்ணைக் கசக்கிக்கிட்டு வந்தா நாங்க பார்க்க மாட்டோம். யோசி" என்றாள்.

அந்த கணத்தில் முடிவெடுத்தாள் ஜெயா. அம்மாவையும் தங்கையையும் பார்த்தாள்.

"ஏன் கவிதா? நீயும் உங்க புருஷன் வீட்டுக்காகக் காசு கேக்கத்தானே வந்த? உன் புகுந்த வீட்டுக்காரங்க மட்டும் உனக்கு ரத்த சொந்தமா? அவங்களை நம்பித்தானே அம்மா உன்னை அனுப்புனாங்க? அவங்களுக்கு எந்த விதத்துலயும் இவங்க குறைஞ்சு போயிடல்ல. கண்ணைக் கசக்கிக்கிட்டு இங்க நான் வரவும் மாட்டேன். அம்மா! என்ன இருந்தாலும் நீ என்னைப் பெத்தவ. அதனால உங்கிட்ட சொல்லிட்டே போறேன். நான் இவரைத்தாக் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன். மனசு இருந்தா வந்து வாழ்த்து. " என்று சொல்லி விட்டு தன் உடைகளை எடுத்து வைத்துக்கொண்டு ராமகிருஷ்ணனோடு கரங்களை இணைத்தவாறு நடந்தாள் ஜெயா. மனமெல்லாம் மகிழ்ச்சியாக அவர்களைத் தொடர்ந்தாள் வேலம்மாள். வசந்தகால நதிகளிலே வைரமணியாய நீரலைகள் பெருக்கெடுத்து ஓடின.

அன்பு நட்புகளே,

இன்றோடு இந்தத் தொடர் நிறைவு பெறுகிறது. மீண்டும் ஒரு தொடர் மூலம் உங்களோடு உரையாட ஆசை எனக்கு. எப்படிப்பட்ட தொடர் வேண்டும்? குடும்பம்? அல்லது திகில்? எந்த வகையை நீங்கள் பரிந்துரைக்கிறீர்களோ, அதை எழுதலாம் என்றிருக்கிறேன். எனது விருப்பம் குடும்பம். உங்கள் விருப்பம் என்ன?
 
Nice story with good ending. I like thigil stories da srija. En enral family stories nalla irrukkum analum sila samayam andha kadhaigal namma b.p ethividum.
திகில் கதைகளா மேடம்? கட்டாயம் உண்டு. கூடிய விரைவில் எதிர்பாருங்கள்.
 
கதையை அழகா முடிச்சு இருக்கீங்க சிஸ்...
வாழ்த்துக்கள் ? ? ? ?

எனக்கு குடும்ப கதை... ok sis
 
Top