Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(08)

Advertisement


வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(08)



தென்றலிடம் சிறுது நேரம் பேசிவிட்டு ஜானவி தென்றலை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு அறையைவிட்டு நகர சிறுது நேரத்தில் சின்னாத்தா அறைக்குள் நுழைந்தார். தலையை குனிந்தவாறு எதோ ஒரு யோசனையில் இருந்த தென்றலை பார்த்து,

“ என்ன செல்வி??. என்ன யோசனை??.”

“ ஒன்னும் இல்ல ஆத்தா”

“ இல்ல உன் முகமே ஒரு மாதிரி இருக்கு. சொல்லு உனக்கு இங்குன இருக்க பிடிக்கலையா. ஒன்னும் பிரச்சனை இல்ல. நாம ஊருக்கு போயிடலாம்.”

“ ஆத்தா இனிமே என் வாழ்க்கை இங்குனதான். காலமுச்சுடும் இங்கதான்.”

“ அதுக்கு முதல்ல உன் புருஷன் குணமாகி ஒத்துக்கணும். அவன் எதாவது கிறுக்குத்தனம் பண்ணுனா அப்புறம் இந்த சின்னாத்தா இந்த குடும்பத்தை சந்தி சிரிக்க வச்சுடுவா . பணத்துல வசதில வேணும்ன்னா இந்த குடும்பம் நம்மளவிட பெருசா இருக்கலாம்.

ஆனா அதுக்காக எதையும் நாம பொறுத்து போகணும்ன்னு அர்த்தமில்லை. நமக்கு நம்ம வாழ்க்கைதான் பெருசு. அதை வாழ்றதுக்கான வழிய பாரு. அதுல எதாவது பிரச்சனைனா நாம எதுக்கும் துணிஞ்சு நிக்கணும் செல்வி.

நாம கிராமத்துக்காரவங்கன்னு நம்மள ஏப்பமா நினைச்சா நாம போடா கூறுகெட்டவனேன்னு சொல்லிடனு. மனசுல எதையும் ஏத்திக்கிட்டு கவலைப்படக்கூடாது சரியா??”

“ ஹ்ம்ம்” என தலையாட்டி தென்றல் மீண்டும் சின்னாத்தாவையே பார்த்துக்கொண்டிருக்க

“ என்ன அப்படி பார்க்குற இவ்வளவு பேசுற நீ ஏன் சுந்தரியை ஒன்னும் சொல்லலைன்னு நினைக்குறியா. என்ன செய்ய அன்னைக்கே நான் அவளை தடுத்துருந்தா இன்னைக்கு உன் வாழ்க்கையை காப்பாத்திருக்கலாம். ஆனா உன்னோட பாதுகாப்பு உன் மாமனோட வாழ்க்கைன்னு எதை எதையோ யோசிச்சு இன்னைக்கு உன்னோட இந்த நிலைமைக்கு நானும் ஒரு காரணம் ஆகிட்டேன்” என கூறி சின்னாத்தா வருத்தமுற

அவரின் வருத்தத்தை கண்டு தென்றல் பேச்சினை திசை திருப்ப “ ஏன் ஆத்தா எப்பிடி இந்த மாப்பிளை பத்தி அத்தைக்கு தெரியுமா??”

“ அதுவா தரகர் பரமசிவத்துக்கிட்ட உன் புருசனோட அத்தைங்க ரெண்டு பேரும் எல்லா விவரத்தையும் சொல்லி பொண்ணு பார்க்க சொல்லிருக்காங்க. அந்த பரமசிவம் சுந்தரிக்கு சித்தப்பா முறை . அவரும் எல்லாம் சொல்லி தான் உன்னைய பொண்ணு கேட்டுருக்காரு சுந்தரிகிட்ட. அவளும் இதான் சாக்குன்னு நம்மள ஏமாத்திட்டா”

“ இது எல்லாம் எப்படி தெரியும் ஆத்தா??”

“ ஹ்ம்ம் நீ மயங்குனவுடன் பரமசிவத்தை கூப்பிட்டு அந்த திருவாசகம் இருகாருல அவரு விசாரிச்சாப்பல”

“ ஓ!!”

“ ஹ்ம்ம் அப்புறம் செல்வி உன் புருசனோட அத்தைக்காரிங்க ரெண்டு பேரு கிட்டயும் ரொம்ப ஜாக்கிரதையா இருந்துக்க”

“ ஏன் ஆத்தா??”

“ அது…..” என சிறுது யோசித்துவிட்டு “ நீ தெரிஞ்சுக்கணும்ன்னுதான் சொல்றேன் சரியா??”

“ ஹ்ம்ம்….”

“ பரமசிவத்தை திருவாசகம் விசாரிச்சுட்டு அவரை அனுப்புனவுடன் நேர அந்த பரமசிவம் சுந்தரியை தான் பார்க்க போனான்”

“ எதுக்கு ஆத்தா??”

“ நானும் எதுக்கு போறான்னு பின்னாடி போனே.”

“ சரி”

“ அப்புறம் எதோ ரெண்டு பேரும் தீவிரமா பேசிக்கிட்டாங்க”

“ என்னன்னு??”

“ அது மெதுவா பேசுனாங்களா அதான் எனக்கு கேட்கல”

“ ஹம்ம்ஹும்…..”

“ சரின்னு கொஞ்ச நேரம் அங்கேயே நின்னு கவனிச்சேன் அப்போதான் கோவத்துல சத்தமா பேச ஆரம்பிச்சாங்க”

“ அதுவாது உனக்கு கேட்டுச்சா ஆத்தா??”

“ ஹ்ம்ம்ம். உன் புருசனோட அத்தைகாரிங்க ரெண்டு பேரும் படிக்காத பட்டிக்காட்டு பொண்ணு தான் வேணும்ன்னு சொல்லி பரமசிவத்தை பார்க்க சொல்லிருக்காங்க. அதுக்கு பணமும் குடுத்துருக்காளுக. அது திருவாசகத்துக்கு தெரியாது போல.

அந்த பணத்தை வாங்கிட்டுதான் இந்த வீணாப்போனவளும் நம்மள ஏமாத்திட்டா. ஆனா பாரு இனிமேதான் இந்தச் சின்னாத்தாவோட ஆட்டத்தை சுந்தரி பார்க்க போறா. கொஞ்ச நஞ்சமா பண்ணிருக்
கா . அதுக்கு எல்லாம் சேர்த்துவச்சு செய்ய போறேன். மாமியார் எப்பிடி இருப்பான்னு அவளும் தெரிஞ்சுகட்டும்”

“ ஏன் ஆத்தா விடு. நான்தான் அங்க பிரச்சனையா இருந்தேன் இப்போ அதுவும் இல்ல. அதனால எல்லாரும் நிம்மதியா இருங்க மாமாவையும் பார்க்கணும்ல”

“ முதல் பலிகிடா உன் மாமன் தாண்டி. அவன் ஒழுங்கா இருந்தா இவ இந்த ஆட்டம் போடுவாளா. சரிவிடு அதை நான் பார்த்துக்கறேன். ஆமா ஏன் செல்வி நீ எப்பிடி உன் மாமியார்கிட்ட ஒரே நாள்ல நல்லா பேசுற??”

“ தெரியல ஆத்தா என்னமோ அவங்ககூட பேசும்போது உன்கூட இருக்குறமாதிரி இருக்கு”

“ அதுசரி நான் கூட நீ என்னைய தவிர யாருகிட்டை
யும் பேசமாட்டியோன்னு நினைச்சுட்டேன்”

“ ஆத்தா நம்ம மனசுக்கு யாருக்கூட பேசுனா வலிதராதோ அவுங்க கூட நாம மனசுவிட்டு பேசலாம். அதே நேரம் ஒருத்தவங்க கூட பேசுனா நமக்கு வலிதான் மிஞ்சுமனா எதுக்கு தேவை இல்லாம பேசிக்கிட்டுதான்னு நான் அமைதியா போறது”

“ அது சரிதான்” என பாட்டியும் பேத்தியும் சாயங்காலம் வரை பேசிக்கொண்டிருந்தனர். பின் ஊருக்கு கிளம்ப வேண்டிய நேரமும் வர சின்னாத்தா சுந்தரி கண்ணன் மூவரும் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினர்.

திருவாசகத்திடமும் ஜானவியிடமும் நூறுதடவையாவது தென்றலை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு அழுதுகொண்டிருந்த தென்றலிடம் கலங்கிய விழிகளுடன் விடைபெற்றார் சின்னாத்தா. சுந்தரி எப்பொழுதும் போல இல்லாமல் சிறுது பயத்துடனே சின்னாத்தாவை பின் தொடர்ந்தாள்.

சின்னாத்தா கிளம்பியவுடன் அங்கு என்ன செய்வது என தெரியாது காலையில் தங்கி இருந்த அறையில் போய் இருந்துக்கொண்டாள் தென்றல். இரவு 8 மணி வரை ஜானவியால் தென்றலை சந்திக்க முடியவில்லை. வந்த உறவினர்களை வழி அனுப்பவும் இரவு உணவுக்கு தயாரிக்க மேற்பார்வை இடவும் நேரம் சரியாக இருந்தது.

இடையிடையே தென்றலை சந்திக்க ஜானவி அவளின் அறைக்கு செல்ல எண்ணினாலும் மாயாவதியோ இல்லை லீலாவதியோ இடைபுகுந்து பேசி பேசி ஜானவிக்கு எரிச்சலை ஏற்படுத்தினர்.

கல்யாணத்துக்கு என்று வந்த உறவினர்கள் சென்ற பின் இரவு 8 மணி போல் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் உணவு மேஜையில் உணவு உண்ண அமர்ந்தனர். அனைவருக்கும் ஜானவி உணவு பரிமாறத் தொடங்குவதற்கு முன் ஜானவி தென்றலை அழைத்து வர அவளுடைய அறைக்கு செல்ல எண்ணுகையில்,

“ என்ன அண்ணி நாங்க சாப்பிட உட்கார்ந்துருக்கோம் நீங்க வாட்டுக்கு கிளம்பி எங்கையோ போறீங்க. யாரு பரிமாறுவா??. நீங்க தானே எப்போதும் பரிமாறுவீங்க” என மாயாவதி கூற

“ அது தென்றல் இன்னும் வரல சாப்பிட. அதான் போய் கூட்டிட்டு வரேன்” என ஜானவி பதில் கூற

எப்பொழுதும் தனிமையில மாயாவதி லீலாவதி பேச்சுக்கு பதில் கொடுக்காமல் முடிந்தவரை கடந்து சென்றுவிடுவார். ஆனால் இந்த மாதிரி அனைவரின் முன் பேசும்போது தவிர்க்கமுடியாது பேசுவார்.

“ தென்றலா அது யாரு அண்ணி??” என லீலாவதி நக்கலாக வினவ

“ ருத்ரனோட மனைவி”

“ ஓ அப்போ செல்வின்னு அந்த கிழவி… ஹம்ம்ஹும் அந்த வயசான அம்மா சொல்லுச்சு”

அதில் கோவம் கொண்டு அமைதியாக

“ அவளோட முழுப்பேரு பூந்தென்றல் செல்வி போதுமா. இப்போ போய் கூட்டிட்டு வரேன்” என கூறிவிட்டு ஜானவி தென்றலின் அறைக்கு செல்ல

அவள் கட்டிலில் அமர்ந்து எங்கோ வெறித்துக்கொண்டு இருந்தாள்.

“ என்னமா என்ன யோசனை என் பொண்ணுக்கு??” என ஜானவி கேட்டுக்கொண்டே அறையினுள் நுழைய

அதில் சிந்தனை தடைபட “ அம்மா வாங்க. என்ன கேட்டீங்க??”

“ ஹ்ம்ம் என்ன சிந்தனைன்னு கேட்டேன்??”

“ சிந்தனை எல்லாம் ஒன்னும் இல்லமா. சும்மா இருக்கேன்ல அதான் என் வாழ்க்கையை பத்தி நினைச்சுகிட்டு இருந்தேன்”

“ சும்மா இருந்தா வாழ்க்கையை பத்தி நினைக்கத்தான் தோணும். எதாவது செஞ்சுக்கிட்டே இருந்தாதான் வாழ்க்கையை வாழ தோணும். அதனால இப்போ என்கூட கீழ சாப்பிட வருவியாம். அங்க எல்லாரும் உனக்காக காத்துகிட்டு இருக்காங்க”

“ என்னது!!!.... எல்லாரோடையும் சாப்பிடணுமா??. அம்மா நான் கீழ சமையக்கட்டுல உட்கார்ந்து சாப்புட்டுக்குறேன்”

“ ம்ப்ச் இது என்ன பழக்கம் வீட்டு ஆளுங்க மாதிரி நடந்துக்க. சமையக்கட்டுல உட்கார்ந்து எதுக்கு சாப்பிடணும். வீட்டு மருமகள் எல்லாரோடையும் சேர்ந்துதான் சாப்பிடணும். வா கீழ போலாம். நான் தான் கூட இருக்கேன்ல வா” என பேசிக்கொண்டே தென்றலை அழைத்துக்கொண்டு உணவு மேஜைக்கு வந்தார் ஜானவி.

அவளின் உடையையும் ஜடையையும் பார்த்த லீலாவதி

“ ஏம்மா புது பொண்ணு இந்த அலங்காரம் பண்ணவா இவ்வளவு நேரம் எடுத்துக்கிட்ட. உனக்காக இங்க எல்லாரும் காத்துகிட்டு இருக்கோம் கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்க கூடாது” என கேட்க

அதற்கு எந்த பதிலும் கூறாது தலையை குனிந்தவாறே ஜானவி காட்டிய இடத்தில் அமர்ந்தாள் தென்றல். லீலாவதியின் பேச்சுக்கு ஜானவி,

“ அதுவா நான் போய் சாப்பிட கூப்பிட்டா. ‘ என்ன மாமா முன்னாடி நான் உட்கர்ந்து சாப்பிடறதா. அது தப்பு. மாமா சாப்பிட்டவுடன் நான் சாப்புடுறேன் அதான் மரியாதைன்னு சொல்லி வர மாட்டேன்னு சொல்லிட்டா. அதான் அந்த மாதிரி எல்லாம் இங்க இல்ல எல்லாரும் ஒன்னாதான் சாப்புடுவோம்ன்னு சொல்லி கூட்டிவர கொஞ்சம் தாமதம் ஆகிடுச்சு” என ஜானவி கூற விழுக்கென்று தலையை நிமிர்த்தி ஜானவியை பார்த்த தென்றலிடம்

“ என்ன தென்றல் வைக்க. கூச்சப்படாம என்ன வேணும்ன்னு கேட்டு வாங்கி சாப்புடு . இந்த வீட்டு பொண்ணுங்களைவிட இந்த வீட்டு மரும்களுக்குத்தான் எல்லா உரிமையும். அதனால தயங்காம கேட்டு வாங்கிக்க. என்ன நான் சொல்றது சரிதானே லீலா” என ஜானவி சிரித்துக்கொண்டே கேட்க

பல்லைக்கடித்துக்கொண்டு “ ஆமா ஆமா அண்ணி” என கூறிவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

ஜானவி பேச்சுக்கு லீலாவதி சண்டை போட்டிருக்கலாம். ஆனால் தமயந்தி நித்யவதி இந்த வீட்டு மருமகள்கள் அல்லவா. தென்றலுக்கான உரிமையை மறுக்கும் போது தங்கள் மகள்களின் உரிமையும் மறுக்க படுவதாக அல்லவா பொருள் படும் அதனால் சகோதிரிகள் இருவரும் அமைதியாக உண்டனர் அப்பொழுது சரியாக வீட்டினுள் நுழைந்தார் குணசேகரன்.

“ நித்தி அப்பா வாறாங்க” என விவேகன் தன் அருகில் அமர்ந்து உண்டு கொண்டிருந்த நித்யவதியிடம் கூற

“ எங்க அண்ணா??”

“ அங்க பாரு வாசலுல”

“ ஓ!!!.... பெரிய அப்பாவா”

“ ஹ்ம்ம்” என இருவரும் பேசிக்கொண்டிருக்கையில்

“ மச்சா கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுருச்சு ரொம்ப சந்தோசம் மச்சா” என கூறிக்கொண்டே தென்றலின் அருகில் அமர்ந்து தட்டில் இட்லியை வைத்துக்கொண்டே குணசேகரன் கூற

“ ஹ்ம்ம்” தலை அசைப்புடன் எதுவும் கூறாது அமைதியாக திருவாசகம் உணவை உண்டுகொண்டிருந்தார்.

அன்று குடித்துவிட்டு பிரச்சனை பண்ணியதிலிருந்து பேச்சை குறைத்துக்கொண்டார் .

“ அப்புறம் லீலா” என குணசேகரன் அழைக்க

“ என்ன மாமா??”

“ எங்க இன்னுமா சேதுராமன் வரல??”

“ இல்ல மாமா இன்னைக்கு வரதா சொல்லிருந்தாரு. ஆனா நேரம் சொல்லல”

“ ஓ சரி சரி” என கூறிக்கொண்டே அருகில் பார்க்க தென்றல் இட்லியை உண்ணாது அளந்துகொண்டிருந்தாள்.

“ நீ எவ்வளவு அளந்தாலும் இட்லி அளவு அவ்வளவுதான்மா” என கூற பக்கத்தில் கேட்ட சத்தத்தில் அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்க்க

“ என்னமா அப்படி பார்க்குற??. எவ்வளவு நேரம்தான் இட்டிலியை அளப்ப”

அதற்கு எதுவும் கூறாது இல்லை என்ற தலை அசைப்புடன் மீண்டும் குனிந்துகொண்டாள். அதை கண்டு,

“ அதுசரி ஒரு முடிவோடுதான் இருக்கும் போல இந்த பொண்ணு. ஹ்ம்ம் சரி தங்கச்சி அந்த குருமாவை கொஞ்ச இங்குட்டு போடுமா” என கூற ஜானவி பரிமாற ஆரம்பித்தார்.

அப்பொழுது ராஜவர்மன் சிம்மவர்மன் வேகமாக சாப்பிட்டுவிட்டு எழுந்து போய்விட மாறவர்மன் சாப்பிட்டு எழும்போது மாறா என அழைத்தார் திருவாசகம்.

“ அப்பா சொல்லுங்கப்பா”

“ அது அருணாவோட அப்பாவுக்கு….”

“ பேசிட்டேன் ப்பா நாளைக்கு காலைல ஆபீஸ்ல வந்து உங்களை பார்க்குறேனு சொல்லிட்டாரு.”

“ அப்படியா சரிப்பா. அப்புறம் நாளைக்கு மதியம் என்னோட பிஏ ராம்….”

“ லீவுன்னு சொல்லிடாருப்பா என்கிட்ட. அதனால விநாயக்க நாளைக்கு உங்களுக்கு பிஏ வா வருவாரு.”

“ அப்போ சிம்மா….”

“ சிம்மாட்ட சொல்லியாச்சுப்பா”

“ ஓ!!... சரி இந்த கல்யாணம்….”

“ ரெஜிஸ்ட்ரேஸன் தானேப்பா சிம்மாவுக்கு முடிஞ்சுச்சு ஆனா ருத்ராவுக்கு இப்போ பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாரு ரெஜிஸ்டர்”

“ ஓ!!.... சரிவிடு பார்த்துக்கலாம் முதல்ல ருத்ரன் குணமாகட்டும்”

“ சரிப்பா”

“ அப்புறம் நம்ம வழக்கப்படி குல…”

“ குல தெய்வம் கோவிலில் சிறப்பு பூஜைதானேப்பா நாளைக்கு பண்ணசொல்லிட்டேன்”

“ சரிப்பா நம்ம வழக்கப்படி…..”

“ ஆமா ப்பா நம்ம வழக்கப்படிதான் பூஜை பண்ண சொல்லிருக்கேன்”

‘ இவனை’ என பல்லைக்கடித்துக்கொண்டு “ அது சரி மாறா. நம்ம வழக்கப்படி பண்ற அன்னதானமும் பண்ணசொல்லிட்டியா??”

“ அதுவா அதுவும் சொல்லிட்டேன்ப்பா”

“ சரி மாறா” என கூறிவிட்டு திருவாசகம் சாப்பிட ஆரம்பிக்க மாறா என அழைத்தார் குணசேகரன். தன் அருகில் இருந்த குணசேகரனின் விளிப்பில்

“ என்ன மாமா கூப்பிட்டீங்களே???”

“ ஒன்னும் இல்ல மாப்பிள்ளை அந்த இட்லி…”

“ நான் சாப்பிட்டேன் மாமா எனக்கு போதும்” என கூறிக்கொண்டே எழ

“ நீங்க சாப்டிங்க ஆனா எனக்…”

“ உங்களுக்காக ஒரு தடவைன்னு எல்லாம் சாப்பிட முடியாது எனக்கு வயிறு நிறைஞ்சுடுச்சு” என கூறிவிட்டு மாறவர்மன் சென்றுவிட

‘ இவன்கிட்ட கேட்டதுக்கு நானே எடுத்திருக்கலாம்’ என முணுமுணுத்துக்கொண்டே இட்லியை நகர்ந்து எடுத்துக்கொள்ள

அதற்குள் மாயாவதி லீலாவதி தமயந்தி திருவாசகம் அனைவரும் சாப்பிட்டு எழுந்து செல்ல.
சிறுது நேரத்தில் நித்யவதி தென்றலை தவிர குணசேகரனும் உணவை உண்டு விட்டு சென்றுவிட்டார் . தென்றல் இன்னும் சாப்பிடாது அப்படியே வைத்திருந்தாள்.

அதனை கண்டு ஜானவி “ என்ன தென்றல் சாப்பாடு பிடிக்கலையா??”

“ அச்சச்சோ அப்பிடி எல்லாம் இல்லமா”

“ அப்புறம் அப்படியே வச்சுருக்க”

“ இல்ல ஏதோ யோசனை” என கூறிவிட்டு ஒரு வாய் உணவை உண்ண ஆரம்பிக்க

“ நீ அப்படி
கஷ்ட்டப்பட்டு உண்ண வேணாம். இந்த சப்பாத்தி வச்சுக்கோ” என கூறி ஒரு சப்பாத்தியை ஜானவி தென்றலின் தட்டில் வைக்க

“ இல்லமா நான் இட்லியே சாப்பிடுறேன்”

“ ஏன் சப்பாத்தி பிடிக்காதா??”

“ இல்லமா இது அப்புறம் வீணாப்போயிடும்ல”

“ அப்போ ரெண்டையும் சாப்புடு” என வலுக்கட்டாயமாக தென்றலை உண்ணவைக்க அதனை புன்னைகையுடன் நித்யவதி பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ என்ன இங்க பார்வை??. நீ இன்னும் சாப்பிடலையா??” என ஜானவி மிடுக்காக வினவ

“ ஏன் பார்க்க கூடாதா??. நான் அப்பிடித்தான் பார்ப்பேன். என் அத்தை நான்
பார்க்குறேன் உங்களுக்கு என்ன”

“ அது சரி நீ என்னைய பார்த்ததுபோதும். ஒழுங்கா சாப்பிட்டு என் மகனை பார்க்க போ “

“ அத்தை நா…. நான்…. போகல”

“ எங்க போகல நித்தி???”

“ ம்ப்ச் நீங்க என்ன சொல்லவரிங்கன்னு புரியுது நான் சிம்மா அத்தான் அறைக்கு போகல”

“ அப்புறம் எங்க தங்குறதா உத்தேசம்???”

“ ஹ்ம்ம் உங்ககூட….”

“ ஏது உனக்கு கல்யாணம் பண்ணி வச்சதுக்கு என் புருஷன்கிட்ட இருந்து என்னைய பிரிக்க பார்க்குற”

“ அத்தை….” என நித்யவதி சிணுங்க அவளின் அருகில் சென்ற ஜானவி

“ இங்க பாரு நித்திமா சிம்மா ஒன்னும் விருப்பப்பட்டு உன்னைய கல்யாணம் செஞ்சுக்கலைதான். அதே நேரம் வெறுக்கவும் இல்ல. நீ அவனைவிட்டு ஒதிங்கியோ இல்ல அவனை ஒதுக்கவோ நினச்சா வாழ்ககை உங்க ரெண்டு பேரையும் சேர விடாது .

எதையும் தைரியமா எதிர்கொள்ளணும். என்னைய எடுத்துக்க உங்க மாமாவும் நானும் மூணு வருசமா பேசிக்குறது இல்ல. அதுக்காக நான் வீட்டை விட்டு போய்ட்டேனா இல்ல வேற அறையில தங்கிட்டேனா இல்லையே. என்னைக்காவது ஒரு நாள் எல்லாம் சரி ஆகிடும்ன்னு ஒரு நம்பிக்கை. அதே மாதிரி நீயும் நம்பு நிச்சயம். ஒரு நாள் சிம்மா முழு மனசோட உன்னைய ஏத்துக்குவான்”

“ ஹ்ம்ம்…..” என முனங்களுடன் தலையை நித்யவதி ஆட்ட

“ ஏய்!! என்ன??. ஒரு வேளை சிம்மா எதாவது பேசிடுவான் நினைக்குறியா???”

“ ஹம்ம்ஹும்…. உங்க மகன் வாய திறந்து பேசிட்டாலும்”

“ அப்புறம் என்ன??”

“ அவரு பார்க்குற பார்வையே எனக்கு நடுங்குது அத்தை”

“ ம்ப்ச் இங்க பாரு நான் கட்டிகிட்டதுல இருந்து நான் பெத்ததுவரைக்கும் பொண்டாட்டிய புருஞ்சுக்குறதுல கொஞ்சம் கூமுட்டைதான். என்ன செய்ய??. நீ தான் பொறுத்துக்கணும்” என ஜானவி கூறிக்கொண்டிருக்கையில்

“ க்கும்…” என தொண்டையை செருமிக்கொண்டே மேஜையில் இருந்த தண்ணீரை குவளையில் ஊற்றி அருந்த ஆரம்பித்தார் திருவாசகம்.

அவரை பார்த்தவுடன் ஒரு நிமிடம் ஜெர்கான ஜானவி பின் அதே குரலில் சற்றே உரக்க

“ இங்க பாரு நித்தி நான் சொல்றத கவனத்துல வச்சுக்கோ.
கல்யாணம் ஆனவுடன் நாம மரியாதைக்கு புருஷன் சொல்றதை கேட்போம்.

உடனே என்னமோ பொண்டாட்டிக்கு ஒன்னும் தெரியாது அவ ஒரு முட்டாள்ன்னு நினைச்சுக்குறது. அவுங்க செய்ற தப்பை நாம சொன்னா நம்மள மட்டம் தட்டுவாங்க இல்ல சண்டை போடுவாங்க. அதனால எப்பவும் நீ உன்னோட சுய மரியாதையை விட்டுகுடுக்காத” என ஜானவி கூற

தென்றல் புரியாது முழித்துக்கொண்டிருக்க திருவாசகம் ஜானவியை முறைத்துவிட்டு சென்றுவிட

‘ உங்க மகன் இங்க பேசவே மாட்டாராம் இதுல எங்க சண்டை போடுறது’ என எண்ணிக்கொண்டு ஜானவியை பார்த்துக்கொண்டிருந்தாள் நித்யவதி.

“ சரி நித்தி நீ ஓடு உன்னோட அறைக்கு” என கூறிவிட்டு தென்றலை அழைத்துக்கொண்டு சென்றார் ஜானவி.

நித்யவதியும் மனதில் இருந்த பயத்தையும் நடுக்கத்தையும் மறைத்துக்கொண்டு சிம்மவர்மனின் அறைக்கு சென்றாள். அங்கு சிம்மவர்மனின் அறையின் கதவு பாதி திறந்து இருந்தது.

‘ அச்சச்சோ கதவு திறந்து இருக்கு. அத்தான் தூங்கிருக்க மாட்டாரோ ஐயோ நித்தி இன்னைக்கு சிங்கம் நம்மள பார்வைலையே எரிக்க போகுது இல்ல ஒருறொரு வார்த்தையா பேசி கொல்ல போகுது. இறைவா காப்பாத்து’ என மனதில் எண்ணிக்கொண்டு

கதவை திறந்து அறையின் உள்ளே இரண்டடி வைக்க எதோ பாட்டு சத்தம் கேட்க அதை கவனித்துக்கொண்டே அறை முழுவது பார்வையை சுழலவிட்டாள் நித்தியவதி. அங்கு கண்ணாடி முன் நின்றுகொண்டு தலையை சீவிக்கொண்டே,

நேற்று இல்லாத மாற்றம் என்னது


காற்று என் காதில் ஏதோ சொன்னது

இதுதான் காதல் என்பதா

இளமை பொங்கி விட்டதா

இதயம் சிந்தி விட்டதா


சொல் மனமே…………

என சிம்மவர்மன் பாடிக்கொண்டிருக்க

“ என்னங்கடா நடக்குது இங்க சினம் கொண்ட சிங்கம் சிங்கர் சிங்கமா மாறி இருக்கு” என வாய்விட்டே கூறிக்கொண்டு விழி விரித்து அதிர்ச்சியுடன் நித்தியவதி நின்றுகொண்டிருந்தாள்






அடுத்த அத்தியாயத்தில் பாப்போம்

thanks for supporting and plz drop ur comments friends :):)
Nice
 
Top