Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அறிமுகம் + முன்னுரை (Prologue)

Advertisement

Vijayanarasimhan

Well-known member
Member
வணக்கம் நண்பர்களே...

எனது முதல் முழுநீளப் புதினத்தோடு இப்போட்டியில் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி... சிறுகதைகளே எனக்குத் தோதான களமாக இருந்தன (இருக்கின்றன!), நாவலுக்குள் அடியெடுத்து வைப்பதில் ஒரு பெரிய உளவியல் ‘அழுத்தத்தடை’ (potential barrier / threshold) இருந்தது எனக்கு... நாவலுக்கான கதைக்களங்கள் பல என்னிடம் இருக்கின்றன, இருந்தும் ஏனோ எழுத மட்டும் கைவராமலே இருந்தது! எழுதத் தெரியாமல் எழுதிக் கதையைச் சொதப்பிடுவோமோ என்ற அச்சம் ஒருபுறம், எழுதுவதற்கு முன் களத்தை இன்னும் இன்னும் ஆய்ந்து அறிய வேண்டும் என்ற முடிவில்லாத் தேடல் ஒருபுறம்...

அந்நிலையிதான் ஒரு சோதனை முயற்சியாக இக்கதையை எழுதத் தொடங்கினேன்... தேர்வறையில் பணியில் இருந்தபோது, மும்முரமாய்த் தேர்வெழுதும் மாணவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது தோன்றிய ’பொறி’ இது. ’சொதப்பினாலும் பரவாயில்லை’ என்று துணிந்து ஒரு பலியாட்டு முயற்சியாய் (sacrificial piece!) எழுதத் தொடங்கிய கதை இது!

ஆனால், எழுத எழுத எனக்கே பிடித்துப் போன கதையாக இது உருவெடுத்தது... ’முதல் பாகம்’ என்று ஒரு இடத்தில் மூச்சுவிட்டது தவறாகிவிட்டது, அத்தோடு அப்படியே நின்றுவிட்டது! சென்ற ஆண்டின் தொடக்கத்தின் விட்ட இடைவெளி, இதோ இப்போது இப்போட்டிக்காக மீண்டும் தொடங்குகிறேன்...

இடையில் எஸ்.எம். தளத்தில் நடந்த ஒரு குறுநாவல் போட்டியில் ஒரு குறுநாவலை வெற்றிகரமாய் முடித்தேன் - வாசகர்களின் பேராதரவினால்... அதே ஆதரவு இங்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இதோ... மீண்டும் விக்ரமாதித்யன்! ?:giggle::giggle:

கதையைப் பற்றி நான் அதிகம் சொல்லப்போவதில்லை, அதைத் தலைப்பே சொல்லிவிடும்... ‘மீண்டும் விக்ரமாதித்யன்’தான்! :cool:

அம்புலிமாமாவில் படித்திருந்தாலோ அல்லது மொட்டை மாடியில் நிலாச்சோறுடன் பாட்டியிடமிருந்தோ அம்மாவிடமிருந்தோ விக்ரமாதியனின் கதைகளை நீங்கள் கேட்டிருந்தாலோ இக்கதை உங்களுக்கு மேலும் ஆர்வமூட்டுவதாய் இருக்கும்... இல்லாவிட்டாலும் பாதகமில்லை!

இதில் நிறைய கற்பனை கொஞ்சம் உண்மை & வரலாறு கலந்திருக்கும், எது எது என்று உங்களால் பிரித்தறிய முடிந்தால் சரி, இல்லையேல் என்னைக் கேட்கக் கூடாது... சரியா? ;);):D:D:LOL::LOL:

ஒவ்வொரு அத்தியாயத்திலும் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்... நான் வாரம் ஒரு அத்தியாயம் என்ற வகையில்தான் பதிவிடவுள்ளேன்... இயன்றவரை அனைத்துக் கருத்துகளுக்கும் பின்னூட்டங்களுக்கும் பதிலளித்து, தேவையானதையும் இயன்றதையும் கதைக்குள் அமைத்துக்கொண்டு முன்னேறிச் செல்ல விழைகிறேன்... :giggle::)(y)

இது ஒரு கனவுருப்புனைவு (fantasy) அவ்வப்போது வரலாற்று மீப்புனைவு (epic fantasy) தளத்தையும் தொட்டுவரும்... தயாராகுங்கள், விக்ரமாதித்யனைச் சந்திப்போம்...

நன்றி,
விசய் :) ?​
============================================

முன்னுரை (PROLOGUE)

அரண்மனைச் சமையற்கூடம் அடர்த்தியான அமைதியோடு இருந்தது.

ஒரு ஓரமாகத் தரையில் அமர்ந்து பேரரசர் விக்ரமாதித்யர் தனது இரவுணவை மெள்ளச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

உணவும் அதிக ஆடம்பரம் இல்லாததுதான். இரண்டு தோசையும் ஒரு வாழைப்பழமும்.

சமையற்கூடப் பணியாளர்கள் எல்லோரும் பத்தடி இடைவெளிவிட்டு நின்றிருந்தனர். விக்ரமாதித்யரின் முகத்தில் இலேசாக வியர்வை மொட்டுகள் அரும்பின.

விசிற வந்த பணிப்பெண்ணைப் பேரரசர் தலையசைத்துத் தவிர்த்தார். அவள் எதுவும் சொல்லாமல் குனிந்து வணங்கியபடியே பின்னால் நகர்ந்தாள்.

“இப்படிப் புழுக்கத்தோடுதான் உண்ண வேண்டுமா, அண்ணா?” - உரிமையோடு ஒலித்தது அக்குரல்.

விக்ரமாதித்யர் மெள்ளத் தலையைத் தூக்கிப் பார்த்தார், “நாளைக்கு யார் விசிறுவார்கள், பட்டி?”

தோசையை விண்டு சட்டினியில் தோய்த்து வாயிலிட்டு மென்று விழுங்கினார், “நாளைக்கு இந்த உணவுகூட கிடைக்குமா என்பதே ஐயம்தான்!”

விக்ரமாதித்யரின் குரலில் ஒரு சோர்வு இருந்தது. இலேசான விரக்தியும் கலந்திருந்தது.

“என்ன அண்ணா... நீங்கள் இம்மென்றால் கட்டளையை நிறைவேற்ற-”

”தயாரா?” பட்டியை முடிக்கவிடாமல் விக்ரமாதித்யர் இடைமறித்தார். இலையை மடித்துவிட்டு எழுந்து சென்று கைகழுவிக்கொண்டார்.

சேவகன் நீட்டிய தாம்பூலத்தைப் புறக்கணித்துவிட்டுப் பட்டியை உற்று நோக்கினார்.

“தயார்!”

”உத்தராயனம் முடிந்து சூரியனின் தேர் திசை திரும்புகிறதோ இல்லையோ உஜ்ஜைனி பேரரசனின் நிலை தவறாமல் திசைதிரும்பிவிடுகிறது!”

விக்ரமாதித்யர் பட்டியைப் பார்த்தாலும் அவரது பார்வை பட்டியின் மீது இல்லை.

பட்டி கையசைக்க அங்கிருந்த அனைவரும் நொடியில் கண்ணில்படாமல் மறைந்தனர்.

விக்ரமாதித்யர் இதழில் புன்னகை தவழக் கோட்டை வாயிலை நோக்கி நடக்கத் தொடங்கினார். பட்டி எதுவும் பேசாமல் பின்தொடர்ந்தான்.

விக்ரமாதித்யர் தேரில் ஏறிக்கொள்ள, பட்டி சாரதி இருக்கையில் அமர்ந்துகொண்டான். சாரதி கடிவாளத்தைப் பட்டியின் கையில் பணிவோடு கொடுத்துவிட்டு வணங்கியபடியே பின்வாங்கினான். பட்டியின் சுண்டலில் தேர் நகர்ந்தது.

”இந்தக் ’காடாறு மாதம் நாடாறு மாதம்’ ஏற்பாடு அலுத்துவிட்டது பட்டி... போகக் கூடிய எல்லா இடத்திற்கும் போய்வந்தாகிவிட்டது... கூத்தில் வேடம் கட்டுபவனைப் போல மாறி மாறி வேடம் கட்டி அலுத்துவிட்டது...”

விக்ரமாதித்யர் மேகமற்ற ஆடி மாத வானை வெறித்தபடிப் பேசினார். பட்டி பதிலேதும் சொல்லவில்லை.

ஒரு நாழிகையில் வண்டி காளிக் கோயிலை நெருங்கிவிட்டிருந்தது.

பட்டி வண்டியை நிறுத்திய பின்தான் விக்ரமாதித்யர் கோயிலைக் கவனித்தார்.

“சரிதான், நீ எனக்குப் பதில் சொல்லமாட்டாய், நான் அன்னையிடமே வினவுகிறேன்... அவள் சொல்வாள்...” விக்ரமாதித்யர் சட்டென ஊக்கம் பெற்றவராய் வண்டியிலிருந்து குதித்து இறங்கிக் கோயிலை நோக்கி விரைந்து நடந்தார்.

பட்டி கடிவாளத்தைக் கட்டிவிட்டுப் பின்தொடர்ந்தான்.

இருபுறமும் அடர்ந்த காடாக இருக்க, இடையில் இருந்த வெட்டவெளியில் கோயிலின் நிழல்தோற்றம் காளியின் முகம் போலவே காட்சியளித்தது. வாயிலின் இருபுறமும் எரிந்த பெரிய நந்தா விளக்குகள் தீஉமிழும் கண்கள் போலவும், நடப்பட்டிருந்த சூலங்கள் கோரப் பற்கள் போலவும் தோன்றின. ஆந்தைகளும் கோட்டான்களும் மாறி மாறி அலறிக்கொண்டிருந்தன. நரிகளின் ஊளை கூட அருகிலேயே கேட்டது.

ஏறத்தாழ நடுநிசியை நெருங்கிவிட்ட அந்த இரவில் அந்தச் சூழலும் கோயிலும் அதிபயங்கரமாய்க் காட்சியளித்தன. இவ்விருவரைத் தவிர பிறர் யாராக இருந்தாலும் அச்சத்திலேயே மடிந்திருப்பர்! ஆனால், விக்ரமாதித்யரும் பட்டியும் சொந்த வீட்டில் திரியும் சிறுவர்களைப் போலக் கோயிலை நோக்கிச் சென்றனர்.

விக்ரமாதித்யர் தனது வேகத்தைக் குறைக்காமலே நடந்து உள்ளே சென்றார். பட்டி மெள்ளப் பின்தொடர்ந்து கோயிலின் வாயிலை அடைந்தான்.

பட்டியின் மனத்தில் அண்ணன் கூறிவந்த சொற்கள் எதிரொலித்துக் கொண்டிருந்தன. அண்ணனின் மனத்தில் என்னதான் இருக்கிறது என்று கண்டறிய எண்ணினான்.

அவன் வாயிலை நெருங்கிய கணத்தில் இடதுபுறம் எரிந்துகொண்டிருந்த நந்தா விளக்கு சட்டென அணைந்தது.

பட்டி அப்படியே உறைந்து நின்றான்.

நின்ற இடத்திலேயே கண்களை மூடிக் காளியைத் தியானித்தான். “ஹே... மாகாளி... உன் விளையாட்டு என்ன?”

ஏதோ உணர்ந்தவனாக வாயிலைவிட்டுப் பின்னால் நகர்ந்து பத்தடி தள்ளிப் போய் தரையில் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டான்.

”உன் சித்தம் என் கட்டளை தாயே!”

கண்களை மூடி அமர்ந்திருந்த பட்டியின் மனக்கண்ணில் விக்ரமாதித்யர் கருவறைக்கு முன் சென்று நிற்பது தெரிந்தது.

வழக்கத்திற்கு மாறாய் விக்ரமாதித்யர் தனது அரச சின்னங்களைக் கழட்டிக் காளியின் பாதத்தில் வைக்காமல் காளி விக்கிரகத்தைக் கண்கொட்டாமல் பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தார்.

கருவறை மெள்ள ஒரு ஒளிவெள்ளத்தில் மூழ்கியது.

பட்டியின் இதழ்களில் புன்னகை ஒன்று மலர்ந்தது.

அப்படியே அவன் இரண்டு நாழிகை அமர்ந்திருந்தான். பின் சட்டெனக் கண்களைத் திறந்தான், எதிரே விக்ரமாதித்யர் நின்று கொண்டிருந்தார்.

பட்டி அமர்ந்தபடியே அவரை நோக்கித் தன் கைகள் இரண்டையும் நீட்டினான்.

உலகையே தன் ஒரு குடைக்கீழ் ஆளும் பராக்கிரமசாலி, உஜ்ஜைனி பேரரசர் விக்ரமாதித்யர் தன் வாளை உருவிச் சடாலெனச் சுழற்றினார்,

விக்ரமாதித்யரின் தலை துண்டாகிப் பட்டியின் நீட்டிய கைகளில் விழுந்தது.

பட்டியின் இதழ்களில் அரும்பிய புன்னகை மாறவில்லை!

*****​
313
Image Copyright: (C) 2018, Vijayanarasimhan. All rights reserved.

 
Last edited:
Top