Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான் இமையாக நீ 10

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member
அத்தியாயம் 10

தான் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் இனி அவன் கட்டுப்பட்டு வெண்ணிலாவைத் திரும்பவும் அனுப்பி வைக்க மாட்டான், என்பதை வாசு கொடுத்த பதில்களில் இருந்து அறிந்து கொண்ட, அவனது தாய், அதன் பின் வாசுவிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

குழந்தை, சுஷ்மிதாவைத் தோளில் போட்டுக் கொண்டு , வெண்ணிலாவை அவன் அடைத்து வைத்திருந்த அறையை நோக்கி நடக்கத் தொடங்கினாள், வாசுவின் தாய் சாரதா.

அவளது மனம், தனக்கு இனி தூக்கம் வரப் போவதில்லை என்பதை அறிந்து கொண்டது.

வெண்ணிலாவின் அறைக்குள் சென்றவுடன் பாப்பாவைக் கட்டிலில் படுக்க வைத்து விட்டு , அவள் கதவைத் தாழிடச் சென்றாள்.

அவள் கதவின் அருகில் செல்வதற்குள், வெளியில் இருந்து வாசு கதவைத் தாழிடும் ஓசை அவளுக்குக் கேட்டது.
" டேய், டேய் வாசு, என்னடா இது என்னையும் இப்படி உள்ளே போட்டு பூட்டி வச்சிட்டே. கதவைத் திறடா, தம்பி.." என்று கத்தினாள்.

பின், பூட்டப்பட்டிருந்த அறைக்குள் இருந்து தான் எவ்வளவு கத்தினாலும் அவனது செவிகளில் விழப் போவதில்லை என்பதை அறிந்து கொண்ட அவள், தனது தலையில் அடித்துக் கொண்டவாறே, சுஷ்மிக்கு அருகில் படுத்துக் கொண்டாள்.

சுஷ்மி, தூக்கத்தில் எப்போதும் போல இவள் மேல் கால்களைத் தூக்கிப் போட, சாரதாவுக்குத் தனது மகள் ரம்யாவின் நினைவு தான் வந்தது.

சாரதாவுக்குத் தான் , இப்படி தூக்கம் தொலைத்த இரவுகளைக் கடந்து செல்வது சகஜமான, ஒன்றாகி விட்டிருந்ததே.

இன்றைய தினம், அவளது மனம் தனது மகனை நினைத்துத் தான் பெரிதான வேதனை கொண்டிருந்தது.

' ம், அடுத்தவங்க அடிச்சா கூட, திரும்பவும் கை நீட்டி அடிக்கத் தெரியாத என் பிள்ளை, எப்படித் தான் இப்படி மாறிப் போனானோ தெரியலியே ' என்று தனக்குள் புலம்பிக் கொண்ட அவள், தனது நினைவுகளை நான்காண்டுகளுக்கு முற்பட்ட காலத்திற்கு இழுத்துச் சென்றாள்.
*****************************************
கஞ்சனூரில், விவசாயம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் வாசுவின் குடும்பத்தினர்.நான்கு தலைமுறைகளாகத் தங்களுக்குச் சொந்தமான பத்து ஏக்கர் நிலத்தில், நெல் விளைவித்திடும், விவசாயக் குடும்பத்தினர். இதில், வாசு தான் அவர்களது குடும்பத்திலேயே முதல், முதலாகக் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்த சூட்டிகையான இளைஞன்.
அதுவும் மருத்துவக் கல்லூரியில்!

ஆம்! தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மெரிட்டிலேயே அவனுக்கு எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைத்து விட்டிருந்தது.
அதனால் வாசுவின் தந்தை, மறுப்பேதும், சொல்லாமல் அவனை மகிழ்வுடன் கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்.

அதன் பின் வந்த அவனது தங்கை ரம்யாவும் அண்ணனுக்கு சளைக்காமல் படிப்பில் வெளுத்து வாங்கினாள்.
ஆனால், அவளை மேற்கொண்டு கல்லூரிக்கு அனுப்பிப் படிக்க வைத்திட வீட்டின் மூத்தவர்கள் அனுமதி அளித்திடவில்லை.

ஆனால் , வாசுவின் தந்தை, தனது மகன் படிக்கும் கல்லூரியிலேயே, மருத்துவ
சம்பந்தமான, மெடிக்கல் ரெக்கார்டு மேனேஜ்மெண்ட், என்ற ஒரு வருடப் படிப்பிற்காக, மகளை அனுப்பி வைத்தார். தனது பிள்ளைகளுக்குத் துணையாக தனது மனைவியையும் அவர்களுடன் இணைத்து அனுப்பி வைத்தார்.

பெரியவர்களிடம், " ஒரு வருஷம் தானே அப்பா, அவ நல்லபடியா படிச்சு முடிச்சுட்டுத் திரும்பி வந்துடுவா. இந்தக் காலத்தில பொண்ணுங்களுக்குப் படிப்பும் முக்கியமானதாத் தானே, இருக்கு " என்று சொல்லி ஒருவாறு அவர்களின் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டார்.

ஒரு வருடப் படிப்பை அவள் முடித்த போது, வாசு மருத்துவப் படிப்பின் இறுதி ஆண்டில் இருந்தான்.

அதன் பின், பட்ட மேற்படிப்பிற்காக அவன் தேர்ந்தெடுத்தது, எம்.டி அனஸ்தீஸியா ( மயக்க மருந்து நிபுணர் ).

அப்போது தான் ரம்யாவின் வாழ்வில் விதி விளையாடியது.தனது கல்லூரிப் படிப்பை முடித்த ரம்யா, மீண்டும் தான் கஞ்சனூருக்கு வரப் போவதில்லை, என்று தனது பெற்றோர்களிடம், அடம் பிடிக்கத் தொடங்கினாள்.

" அப்பா , அண்ணா தனியா ஒரு வீடு எடுத்துத் தானே தங்கி இருக்கான்.
நானும் அவன் கூடயே இருக்கேன். இங்கே தனியா இருக்கிறது எனக்குப் பிடிக்கலைப்பா. பிளீஸ் பா, நான் அண்ணா கூட தங்கி, அங்கேயே ஏதாவது வேலை பார்க்கறேன் பா. " என்று தனது தந்தையிடம், கெஞ்சிக் கூத்தாடி அவரது அனுமதியுடனே தஞ்சையில், உள்ள மருத்துவமனை ஒன்றில், ரிக்கார்டு மேனேஜ்மெண்ட் பிரிவில் வேலை பார்த்து வந்தாள்.

அங்கே தான் விதி, அவளது வாழ்வில் விளையாடியது .

அவள் பணி புரிந்து வந்த மருத்துவமனை, குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு சிகிச்சை அளித்திடும், ஒரு பிரபலமான, ஃபெர்டிலிடி கிளினிக் .

பொதுவாக, ஃபெர்டிலிடி கிளினிக்குகளில், முதலாவதாக மருத்துவர்கள் அளித்திடும் சிகிச்சையானது
IUI, எனப்படும் பெண்ணின் கர்ப்பப்பைக்குள், அவளது கணவனின் விந்தணுக்களை நேரடியாக ஊசி மூலமாகச் செலுத்துவது.
அந்த சிகிச்சைக்குப் பலன் அற்றுப் போனால், அடுத்ததாக, IVF சிகிச்சை.
அதாவது சோதனைக் குழாய், முறையில் கருவை உருவாக்கித் தாயின் கருப்பைக்குள் செலுத்தி அதன் மூலமாகக் கருத்தரிக்கச் செய்தல்.
ஆனால், இப்படிப்பட்ட சிகிச்சை முறைகளில், சம்பந்தப்பட்ட ஆண், பெண் இருவரின், இனப் பெருக்க உறுப்புகள், அனைத்தும் நல்ல முறையில் செயல்படும் விதமாக அமைந்திருக்க வேண்டும்.குறிப்பாகப் பெண்களின் கருப்பை திடகாத்திரமாக, ஒரு குழந்தையைக் குறைவின்றி சுமந்து பெற்றிடும் வலிமை மிக்கதாய், இருந்திட வேண்டும்.அப்படிப்பட்ட வலிமையற்ற பெண்களுக்காகவே இப்போது, பெண் மருத்துவர்கள் தேர்ந்து கொண்ட முறை தான், வாடகைத் தாய் சிகிச்சை முறை!
முன்பெல்லாம் சட்டபூர்வமான ஒப்புதல்களோடு, எந்த விதமான திருட்டுத்தனங்களும் , துரோகங்களும் இல்லாமல், அமைதியாக நடைபெற்று வந்த, இந்த வாடகைத் தாய் சிகிச்சை முறை, இப்போது சில மருத்துவர்களின் பேராசையினால், பல இளம் பெண்களின் வாழ்வை சீரழித்திடும் வகையில், திசை மாறிப் போனது, அந்தக் கால தேவனின் கட்டளை என்று ஆகிப் போனது போலும்.
அழகான, இளம் பெண்களை , சில குழந்தை பெற முடியாத தாய்மார்களின் கணவன்மார்கள், தங்களது குழந்தையை, அவர்கள் தான் சுமந்து பெற்றுத் தர வேண்டும், என்று சிகிச்சை அளித்திடும் மருத்துவர்களிடமே, கேட்டுக் கொள்வதும், அதற்காகப் பல லட்சங்களைக் கை மாற்றிக் கொள்வதும் , என சில மருத்துவமனைகளில், வெளி உலகிற்குத் தெரியாத வண்ணம், அமைதியாக, கயவர்கள் அரங்கேற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள் .

தன் அண்ணன் முகமும், தனது குடும்பத்தினரின் பரிவும் தவிர வேறு ஒன்றும் அறியாத பேதைப் பெண் ரம்யா, இப்படிப்பட்ட, ஒரு சம்பவத்தினால் பலி ஆகிப் போனது தான் , கொடூரத்தின் உச்சம் .

அவள் பணி புரிந்து வந்த மருத்துவமனையின், தலைமை மருத்துவர், ரம்யாவின், உலகமறியாத குழந்தைத்தனத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டாள்.

குழந்தையின்மைக்கான சிகிச்சை முறைகள் பற்றி எதுவும் தெரிந்திடாத ரம்யா,தனக்கு மாதவிடாயின் போது ஏற்படும், தீவிர வயிற்று வலி மற்றும் சிரமங்களைப் பற்றி, மருத்துவரிடம் சொல்லப் போக, அவளோ " ரம்யா, உனக்குக் கருப்பையில், கட்டி, இருக்கு. அதைக் கிளீன் பண்ணிட்டு, டெஸ்டுக்கு அனுப்பணும் " என்று சொல்லி, அவளுக்குத் தானே சிகிச்சை அளிப்பதாகச் சொல்லி மருத்துவமனையில், தங்கிக் கொள்ளச் செய்தாள்.அப்போது, சாரதா தனது கணவரின் உடல் நிலை, சரியாக இல்லாத காரணத்தினால் , தனது மகளை வைத்து வாசுவிற்கு சமைத்துப் போட சொல்லி விட்டு கிராமத்திற்கே திரும்பிச் சென்று விட்டிருந்தாள்.

அதனால் ரம்யாவும், " டாக்டர், எங்க அம்மா, என் கூட இல்லை. ஊருக்குக் கிளம்பிப் போயிட்டாங்க. அதனால அவங்க வந்ததுக்கு அப்புறமா, நான் ஆபரேஷன் பண்ணிக்கறேன். இப்ப எதுவும் வேணாம் " என்று மறுத்திட,

ரம்யாவை, ஒரு கோடீசுவர தம்பதிகளுக்குப் பிள்ளை பெற்றுத் தரும் வாடகைத் தாயாக விலை பேசி வைத்திருந்த மருத்துவருக்கு, தனது காரியத்தை வெற்றிகரமாக முடித்துக் கொள்ள, அதுவே சரியான சந்தர்ப்பம், என்ற முடிவுக்கு வந்தவளாய், ரம்யாவிடம்
" அதனால என்னம்மா. நான் தான் இருக்கேனே , நான் பார்த்துக்கறேன். கட்டி சின்னதா இருக்கும் போதே ஆபரேஷன் பண்ணிடறது தான் நல்லது. வளர்ந்திடுச்சின்னா, ரொம்ப சிரமம்.
அதுவும் உனக்குத் தான். கட்டியை எடுக்கறதும் கஷ்டம், பின்னால நீ கல்யாணம் பண்ணிக்கும் போது, குழந்தை பிறக்கிறதும் கஷ்டம். அதனால என்ன செய்யறதுன்னு யோசிச்சு, நல்ல முடிவா சொல்லு. புரிஞ்சுதா " என்று நயவஞ்சகமாகப் பேசி, ஒருவாறு அவளைச் சம்மதிக்க வைத்தாள்.

துரதிர்ஷ்டவசமாக, அப்போது வாசுவும் மருத்துவ சம்பந்தமான, ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்னை சென்றிருந்தான்.

' சரி ஹாஸ்பிட்டல்ல தான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டாங்கள்ல, இப்ப அண்ணனும் ஊருல இல்லை. சமைச்சுப் போடற வேலையும் இல்லை. அவன் வர்றதுக்குள்ள, நம்ம டிரீட்மெண்ட்டை முடிஞ்சுடுவோம் ' என்று எண்ணியவள், மருத்துவரிடம், " டாக்டர், எனக்கு ஓ.கே தான். நாளைக்குக் காலையில வந்து அட்மிட் ஆகிடவா? " என்று தனது , ஆழ் மனத்தின் மொத்த நம்பிக்கையையும், மருத்துவர் மீது வைத்தவளாய், வெள்ளந்தியாகக் கேட்டுக் கொள்ள , மருத்துவரும் அதற்கு சம்மதித்தாள்.

விளைவு, எவனோ ஒரு ஊர், பெயர் அறியாத ஒரு, ஆணின் விந்தணுக்கள் மூலம் , உருவாக்கப்பட்ட, எட்டு நாள் ஆயுள் கொண்ட, கருவானது அவளது கருப்பைக்குள் செலுத்தப்பட்டது.
இரண்டு நாட்கள், ரம்யாவைத் தனது கண்காணிப்பில் வைத்திருந்த, ரம்யாவை, மூன்றாவது தினம் வீட்டிற்கு அனுப்பி வைத்தாள் மருத்துவர்.
ஐ.வி.எப் சிகிச்சைக்குப் பின், பெண்களுக்குக் கொடுக்கப்படும் மாத்திரைகளோடு, தனது வீட்டிற்கு வந்தாள் ரம்யா!
**************************************
சுஷ்மி, திடீரென விழித்துக் கொண்டு, தேம்பி அழும் ஓசை கேட்டது.
கண் விழித்துக் கொண்ட சாரதா மணியைப் பார்க்க, அது பின்னிரவு மணி இரண்டு எனக் காட்டியது.
படுக்கையில் இருந்து, எழுந்து அமர்ந்து கொண்ட சாரதா சுஷ்மியைச் சமாதானம் செய்து, மீண்டும் உறங்கச் செய்தாள்.
பின், நாற்காலியில், அமர்ந்த நிலையிலேயே, ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று விட்டிருந்த வெண்ணிலாவை ஒரு கணம், உற்று நோக்கினாள்.
அந்த, முகத்தின் குழந்தைத்தனத்தைக் கண்டு அவளது மனம் பரிவு கொண்டது. '

"ம், இந்தப் பிள்ளைக்கு என்ன ஆபத்துன்னு தெரியலை. வாசு எதுக்காக , ஆபத்துல இருந்து காப்பாத்தத் தான், இவளை நான் கூட்டிட்டு வந்திருக்கேன்னு சொன்னது, எந்த வரைக்கும் உண்மைன்னும் தெரியலை. பொழுது விடிஞ்சவுடனே, நாம தான் அவன் கிட்ட திரும்பவும் பேசி, இந்தப் பொண்ணை
அவங்க வீட்டில விட்டுட்டு வரச் சொல்லணும் ' என்று தனக்குள் எண்ணிக் கொண்டவாறே மீண்டும் படுக்கையில், சாய்ந்து கொண்டாள் சாரதா.
(வரும்)








 
அட கொடுமையே.. மெடிக்கல் ரெகார்ட் பத்தினா படிப்பு படிச்ச பில்லையே இப்படி ஏமாந்து போய் இருக்கே.. வீட்டுல உள்ள ஆட்கள் கிட்ட சொல்லாம என்ன treatment வேண்டி இருக்கு.... வாசு டாக்டர் னா இதை எல்லாம் கண்டுபிடிக்கிடுவான் தானே அது தான் இப்போ அதே மாதிரி நிலாவுக்கு நடக்க இருந்த தவறை தெரிஞ்சி காப்பாத்த வந்து இருகாணா ஆனா லவ் பண்ணுறேன் சொல்லுறது உண்மையா அப்போ ரவி நிலமை..
 
ரம்யாவை ஏமாத்தினதும் ஷிபா டாக்டர் தானா... ?? ரம்யா வீட்டுக்கு சொல்லாம ஏன் சிகிச்சைக்கு போகணும்..
 
Top