Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான் இமையாக நீ 2

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member
மக்களே :) அத்தியாயம் 2 பதிந்து விட்டேன் .. தங்களின் மேலான கருத்துக்களை கொடுத்து ஊக்கப்படுத்துமாறு கேட்டு கொள்கிறேன்..

முதல் அத்தியாயத்திற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல ?


விழியாக நான் இமையாக நீ 2
ரவிச்சந்திரன், சிறு வயதில் தந்தையை இழந்து விட்டுத் தனது தாயின் பராமரிப்பிலேயே வளர்ந்து வந்தவன். அதனால் ஆண் பிள்ளைகளுக்கே உரித்தான அம்மாவிற்கான பிரத்யேகப் பாசம் அவனிடம், சற்று மிகுதியாகவே காணப்படும்.
இப்போதும் அவ்வாறே, சுமதி, " சரி, அப்ப நீ எனக்கு வேலை செஞ்சு கொடுக்கறதுக்காகத் தான் ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்றே. அப்படி தானே " என்று சிறிதான குறும்புத் தொனியுடன் கேட்டதும்

" ஆமாம்மா, இந்தப் பொண்ணைப் பார்த்தாலே நல்ல ஒரு ஹோம்லி லுக் கிடைக்குது. அதான், நான் இன்னிக்குப் பொண்ணு பார்க்கப் போகலாம்னு சொன்னேன் " என்று சொன்னான்.

" ஓ.கேடா தம்பி, பொண்ணு வீடு மாங்காட்டில இருக்குது . நீ ஒரு அஞ்சு மணிக்கெல்லாம் ஆபிஸ்ல இருந்து வந்துட்டேன்னா, நாம அங்க போறதுக்கு சரியா இருக்கும் " என்றாள் சுமதி.

" ம்ம் " என்று தலையசைத்தவன் , " அம்மா, போட்டோ மட்டும் இருக்கு. அந்தப் பொண்ணோட பயோடேட்டா எங்கே? " என்று கேட்டான்.

" இதோடா " என்று சொல்லியவாறே, தான் தனியாகப் பத்திரப்படுத்தி வைத்திருந்த, வெண்ணிலாவின் ஜாதகம் மற்றும் பயோடேட்டா அடங்கிய, கவரை அவனிடம் நீட்டினாள் சுமதி.

அதில், பெண், பி.எஸ்.சி நர்சிங் முடித்து விட்டு, குன்றத்தூர் ரோகிணி மருத்துவமனையில் பணி புரிந்து வருவதாக இருந்த செய்தியைக் கண்டதும், ' நர்சிங்கா, போடா ரவி, இந்த இடமும் ஊத்திக்கத் தான் போகுது போல ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், அதன் பின் சற்றும் சுரத்தில்லாமல், கிளம்பி தனது , அலுவலகத்திற்குப் புறப்பட்டுச் சென்றான் ரவி.

ரவி, வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவன். அதிலும், மருந்தாளுமை பற்றிய பிரத்தியேகப் பாடத் திட்டம் அடங்கியது.அவன் படித்து முடித்ததுமே, ஒரு மருந்துக் கடையை சொந்தமாக, அமைத்துக் கொள்ள வேண்டும், என்ற பெருத்த ஆவலுடன் தான் இருந்தான். ஆனால் அதற்கு முதலீடு செய்வதற்கான தொகை, அப்போது அவர்களிடம் இல்லை என்பது அவனுக்கு சற்று தாமதமாகத் தான் புரிந்தது. அதனால் தான், கிடைத்த வேலைக்குப் போவோம், என்ற முடிவுக்கு வந்தவனாய், சென்னையின் பிரசித்தி பெற்ற, அபெக்ஸ், நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதியாக, இணைந்து கொண்டான்.ஆயிற்று, கிட்டத்தட்ட எட்டு வருடப் பணிக்குப் பிறகு, இன்று அவனுக்கென்று தனி உபயோகத்திற்காக கார், கம்பெனி அலவன்ஸ், இணைந்த வீடு, எழுபதாயிரத்தை நெருங்கி விட்ட மாத சம்பளம் என்று, தன் போக்கில் திருமணத்திற்குத் தயார் ஆகி விட்டிருந்தாலும், தன்னை ஏன், இன்னமும், பெண்களுக்குப் பிடிக்கவில்லை, என்ற கேள்வி அவனை உள்ளுக்குள் குடைந்து கொண்டு தான் இருந்தது.

ரவிச்சந்திரனை வெண்ணிலாவுக்குப் பிடிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!



வெண்ணிலா தன்னை , தலைமை மருத்துவர் ஷீபா, ஸ்கேன் ரூமிற்கு அழைத்ததால், ஆய்வகத்தைப் பூட்டி விட்டு, கீழ்த்தளத்தை நோக்கி விரைந்தாள். அப்போது, படிக்கட்டுகளில் கால் இடறித் தடுமாறி விழப் போனவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டது, ஒரு நீண்ட கரம். அந்தக் கரத்தின் ஸ்பரிசத்திலேயே, அது ஒரு ஆணினுடையது என்பதை அறிந்து கொண்ட அவள், சரேலென அதனை விலக்கி விட்டு, " சாரி சார், பார்க்காம, தெரியாம இடிச்சுட்டேன் " என்று சொல்லி விட்டு, தன் பாதையில் முன்னேறிச் சென்றாள்.

ஸ்கேன் அறை எண் ஐந்து, அது பிரத்யேகமாக, பெரிய டாக்டர் ஷீபா நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுத்திடும் இடம். அங்கு ஏன் அவர் தன்னை வரச் சொல்ல வேண்டும் என்பது புரியாமல், அங்கே சென்ற வெண்ணிலாவைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் ரவிச்சந்திரன். மருத்துவமனையில், நர்சுகளுக்கு உரிய சீருடையில், அவளது பெண்மை, பேரழகுடன் மிளிர்ந்தது. ' ஓ, நீ, இங்கே தான் வேலை பார்க்கறியா.இன்னிக்கு, முழு நாளும் இங்கே தான் எனக்கு டியூட்டி ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், ரிசப்ஷனில தனது கார்டைக் கொடுத்து விட்டு, அதற்கு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.


சுற்று, முற்றும் தனது பார்வையைச் செலுத்தியவன், அங்கே குழந்தை பேறின்மைக்கான திரண்டு வந்திருந்த தம்பதியர்களைக் கண்டதும், ' அடேய் மக்கா, முதல்ல, உன் கூட வாழ வந்தவளையே ஒரு குழந்தை மாதிரி, ஏத்துக்கிட்டு நேசிக்கப் பழகிக்க. உனக்குக் குழந்தை இல்லைன்கிற குறையும் தெரியாது. அதோட, உன்னோட கூட்டுத் தொகையும், அதிகமாயிடும்.அதை விட்டுட்டு, இப்படி ஹாஸ்பிட்டல், ஹாஸ்பிட்டலா கேம்ப் போட்டுட்டு இருக்கீங்க ' என்று அவர்களுக்கு சொல்வது போல தனக்கு சொல்லிக் கொண்டான்.

இந்தக் கலிகாலத்தில் தான் மருந்தே உணவு என்று மாறி விட்டிருக்கிறதே! அவனுக்குள் இருந்த இன்னொரு குரல், ' தம்பி இங்கே இவ்வளவு கூட்டம் இருக்கிறதுனால தான் உன் பாக்கெட் நிரம்புது. சோ, கீப் கொயட் ' என்றது. நொடிக்கு ஒரு முறை அவனது பார்வை மூடப்பட்டு இருந்த ஸ்கேன் ரூம் வாசலை அடைந்து, பின் மீண்டு வந்தது. ஆனால், வெண்ணிலா இன்னும் வெளியே வரவில்லை.

ஸ்கேன் ரூமிற்குள், சென்ற வெண்ணிலா அங்கே மருத்துவர் ஷீபாவின் முன்னால் அமர்ந்து இருந்த பெண்ணைக் கண்டதும், அதிர்ச்சி அடைந்தாள்.

" சோ, பிரீத்தா நீ கிளம்பு. அடுத்த ஆள் வந்தாச்சு. நான் பார்த்துக்கறேன் " என்று ஷீபா துரத்தாத குறையாகப் பிரீத்தாவிடம் சொல்ல அவள் தயக்கத்துடன் எழுந்து கொண்டாள்.

" ம், பிரீத்தா இதோட நீ, அடுத்த ஒன்னாந் தேதி வேலைக்கு வந்தா போதும். உன் சம்பளப் பணம், நாளைக்கே உன் அக்கவுண்டில ஏறிடும். ம் கிளம்பு " என்று அதட்டல் தொனியில் சொல்லிட, வெண்ணிலா எதுவும் புரியாமல் விழித்தாள்.

மருத்துவர், முன்னிலையில் பிரீத்தாவிடம் எதுவும் பேச முடியாது என்பதால், பிரீத்தாவிடம் வெளியே காத்திருக்கும் படி சைகை காட்டினாள்.பின், மருத்துவர் ஷீபாவிற்கு வணக்கம் தெரிவித்து விட்டு, அவர் முன் அமர்ந்து கொண்டாள்.

" ம், உக்காரு வெண்ணிலா. இப்ப நான் கேக்கப் போறது, கொஞ்சம் பெர்சனல் தான். ஆனா நீ செய்யப் போற இந்த உதவியால, ஒரு குழந்தையில்லாத தாய்க்கு, தெய்வம் போல உதவி செயதவள் ஆகிடுவே. உன்னோட lmp (last month period) எப்போ? " என்று கேட்டாள் ஷீபா.

" எதுக்கு மேம், ? ம் போன வாரம் சண்டே அன்னிக்கு " என்று பதில் சொன்னாள்.

" then say this is your 6th day . ஓ.கேம்மா அடுத்த வாரத்தில, நீ உன்னோட, கரு முட்டைகளைத் தானம் பண்றே. சும்மா இல்லை. அதுக்குத் தகுந்த பணமும், நான் வாங்கித் தந்துடுவேன் . உனக்கு சம்மதம் தானே " என்று கேட்டாள்.

இதனைச் சற்றும் எதிர்பாராத வெண்ணிலா, " மேம், இல்லை மேம். அதெல்லாம் வேண்டாம்..எனக்கு, அந்த மாதிரி எல்லாம் பணம் சம்பாதிக்கணும்கிற அவசியம் இல்லை. என்னோட படிப்பு வீணாப் போயிடக் கூடாதுன்கிற காரணத்துக்காகத் தான் நான் வேலை பார்க்கவே வந்திருக்கேன். சாரி மேம் " என்று மறுத்தாள்.

அவள் மனத்திற்குள் கிலி பிடித்துக் கொண்டது. ' ஐயையோ, எக் கலெக்ஷனா? நானா? வேண்டான்டி அம்மா. ஆளை விடுங்க '.என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் அவள்.


" அப்ப நான் கிளம்பறேன் மேம் " என்று எழப் போனவளைத் தடுத்து அமர வைத்த மருத்துவர், " என்னம்மா இது, உங்களை மாதிரி, இள வயசுப், படிச்ச நாகரிகமான பெண்களுடைய கரு முட்டைகளுக்கு இப்போ மார்க்கெட்டில ரொம்ப டிமாண்ட். இப்பப் போனாளே பிரீத்தா , அவ கூட தொடர்ச்சியா, இரண்டு மாசமா தன்னோட கரு முட்டைகளைத் தானமா கொடுத்தா. அதனால இந்த மாசம் , அவளுக்கு சரியான முட்டை வளர்ச்சி இல்லை. அதான் அவளைத் திருப்பி அனுப்ப வேண்டியதாப் போயிடுச்சு. அதான் நான் உன்னைக் கேடடேன் " என்று சற்றே எரிச்சலுற்ற தொனியில் மருத்துவர் பேசிட

" இல்ல மேம். எனக்கு வீட்டில கல்யாணம் பண்ணி வக்கப் போறாங்க. மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க . அதனால் இது சரியா வராது மேம்..ஓ.கே மேம் . நான் லேப்புக்குப் போறேன் " என்று சொல்லி விட்டு சரேலென எழுந்து கொண்டாள் வெண்ணிலா.

ஸ்கேன் ரூமை விட்டு வெளியே வந்த பிரீத்தா, ரிசப்ஷனில் ஒரு பேப்பரை வாங்கிக் கொண்டு, அதில், ' வெண்ணிலா இங்கே தப்பு, தப்பா ஏதேதோ நடக்குது. மேம் உன் கிட்ட எக் டொனேட் பண்ணச் சொன்னா, முடியாதுன்னு மறுத்துடு. என் கிட்ட, அப்படி தான் சொன்னாங்க. ஆனா, எனக்கே தெரியாம , இன்னொரு ஆணோட விந்தணுவை எடுத்து, என் கர்ப்பப் பைக்குள்ள செலுத்தி, ஐ.வி. எப் பண்ணிட்டாங்க. எல்லாம் முடிஞ்சதுக்கப்புறமா தான் தெரிஞ்சது, அவங்க என்னை ஒரு வாடகை தாயா, மாத்தறதுக்கு முயற்சி பண்ணி இருக்காங்கன்னுட்டு. அதுவும் என்னோட சம்மதம் இல்லாமலேயே. நல்ல வேளையா ஐ.வி. எப் கரு தங்கலை. அதான், எனக்கு லீவு கொடுத்திட்டு, உன்னை வரச் சொன்னாங்க. இன்னும், இதுக்குப் பின்னாடி, ஒரு கூட்டமே, இருந்து செயல்படுதுன்னு நெனக்கிறேன். அவங்க என்ன பேசினாலும் நீ முடியாது, முடியாதுன்னு சொல்லிட்டு வந்துடு ' என்று எழுதி விட்டு அதனை எட்டாக மடித்து ஸ்கேன் ரூமிற்கு எதிரில் வீற்றிருந்த ரவிச்சந்திரனிடம் கொடுத்து, " சார், இப்ப இந்த ஸ்கேன் ரூமுக்குள்ளே இருந்து ஒரு சிஸ்டர் வருவாங்க பாருங்க . அவங்க கிட்ட இதைக் கொஞ்சம் மறக்காம கொடுத்துடுங்க " என்று சொல்லி விட்டு, வேகமாக அங்கிருந்து வெளியேறி விட்டாள்.

வெண்ணிலாவிற்காகத் தானே ரவியும் காத்துக் கொண்டிருந்தான். பிரீத்தா அவ்வாறு சொன்னதும் அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.' ஆஹா, இன்னிக்கு உனக்கு நல்ல நாள் தான் போ.சும்மா, சைட் அடிக்க வந்தவனுக்கு அவ கூட பேசறதுக்கும் நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு ' என்று எண்ணிக் கொண்டான்.

ஸ்கேன் ரூமை விட்டு வெளியே வந்த வெண்ணிலாவை அவளது அலைபேசியின் செய்தித் தொனி அழைத்தது. தங்கை மிருதுளா தான் அனுப்பி இருந்தாள். அதனைத் திறந்து பார்த்தபோது, அதில் ஒரு ஆணின் புகைப்படமும், அதற்குக் கீழே, பயோடேட்டாவும் இருந்தது. அதனைப் பார்த்தபடி நடந்து வந்த அவள் தனக்கு எதிரே கண்ட, அந்த முகத்தைக் கண்டு திகைத்துப் போய், அசையாமல் ஒரு கணம் நின்று விட்டாள்.

' இதென்ன, இந்த போட்டோவில இருக்கிறது, இவர் தானே. இவர், இவர் யாரு..அம்மாவும் எதுவும் சொல்லலையே ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள், மீண்டும் அலைபேசித் திரையை நோட்டமிட, ' அக்கா, இவங்க இன்னிக்கு உன்னைப் பொண்ணு பார்க்க வர்றாங்க. எப்படி இருக்காரு மாப்பிள்ளை ' என்று கேட்டிருந்தாள் அவளது தங்கை மிருதுளா.

அவசர, அவசரமாகத் பயோடேட்டாவை வாசித்த அவள், ' ஓ. மெடிக்கல் ரெப்பா. அதான் இங்கே வந்திருக்காரு. போய்ப் பேசிப் பார்க்கலாம் ' என்று எண்ணியவாறே ரவியை நோக்கி நடந்தாள்.

" சார், நீங்க யாரைப் பார்க்கணும். எதுக்காக ரொம்ப நேரமா, இங்கே வெயிட் பண்றீங்க " என்று கேட்டாள்.

அவளாகத் தன்னிடம் பேசுவாள் என்பதை சற்றும் எதிர்பாராத ரவிச்சந்திரனுக்கு உள்ளூர வார்த்தைகள் தடுமாறின. " நான் அபெக்ஸ் ரெப். ரிசப்ஷனில கார்டைக் கொடுத்தேன், இன்னிக்கு எனக்கு சீஃப் டாக்டர் கிட்ட அப்பாயிண்மென்ட். வெயிட் பண்ணச் சொன்னாங்க.நானும் வெயிட் பண்ணிட்ட...டே இருக்கேன். இன்னும் என்னை அவங்க கூப்பிடலை " என்று சொல்ல வெண்ணிலாவுக்குத் தன்னை மீறிக் கொண்டு சிரிப்பு வந்தது.

ரவிக்கு அவளது சிரிப்பைக் கண்டு, பரவசம் உண்டானது. ' இன்னும், இன்னும் சிரியேன் ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

' நீங்க தான் இன்னிக்கு என்னைப் பொண்ணு பார்க்க வர்றீங்களா? ' என்று நேரடியாகவே அவனிடம் கேட்டு விடலாமா என்று ஒரு புறம், தோன்றினாலும் ' ஆமா, சும்மாவே எல்லார் கிட்டயும் அதிகப் பிரசங்கின்னு பேரு வாங்கிட்டு இருக்கேன். இதுல இப்படி கேட்டா, இவன் வேற ஏதாவது நெனச்சுக்கப் போறான் ' என்று எண்ணிக் கொண்டு தனது முடிவை மாற்றிக் கொண்டு ரிசப்ஷனை நோக்கி நடந்தாள்.

அவள் அங்கு என்ன சொன்னாளோ, ஏது சொன்னாளோ தெரியவில்லை , அடுத்த பத்து நிமிடத்தில், மருத்துவர் ஷீபா அவனை அழைப்பதாகச் சொன்னார்கள். சுற்றிலும் பார்த்தபோது, வெண்ணிலாவின் முகம் எங்குமே தென்படவில்லை.

' ம், அவ்வளவு தானா. எங்கேடி போயிட்ட அதுக்குள்ளே ' என்று மனத்திற்குள் அவளைத் திட்டிக் கொண்டே எழுந்து கொண்டான் ரவி .

அந்த கணத்தில் பிரீத்தா அவனிடம் கொடுத்த கடிதம் அவனது நினைவுகளை விட்டு, மறைந்து விட்டிருந்தது.
( வரும்)





 
Top