Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான் இமையாக நீ-32, இறுதி பாகம்

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member
32 நிறைவு பகுதி
தீபக், அங்கிருந்து பெரும் மன பாரத்துடன் கிளம்பிச் சென்றான்.
' இப்ப எல்லாம், பணம் தான் எல்லாருக்கும் கண் கண்ட தெய்வமாகிப் போச்சு. பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் பண்ணுவாங்க போல ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
காற்றைக் கிழித்திடும் வேகத்துடன், அவனது வண்டி சீறிப் பாய்ந்தது.
_____<<<<_______________________________
வெண்ணிலாவின் வீடு இடையில் தான் தொலைத்து விட்ட ஆனந்தத்தை மீட்டெடுத்துக் கொண்டிருந்தது. வெண்ணிலா வருகிறாள் என்ற, நல்ல செய்தியைக் கேட்ட நிமிடத்தில் இருந்து.
ரவி தனது அன்னையிடமும் சொல்லி விட, சுமதியும் வெண்ணிலாவின் வீட்டுக்கே வந்து விட்டிருந்தாள்.
காலையில் பூத்த மல்லிகை மொட்டுக்களைத் தொடுத்து , அழகான ஒரு செண்டைப் போல, பின்னிக் கோர்த்து விட்டிருந்தாள் மிருதுளா.
அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் வாசலை எட்டிப் பார்ப்பதும், உள்ளுக்கும், வெளியேயுமாக நடை போடுவதாகவும், ஆகவும் இருந்தனர்.
மேனகா தன் மகளுக்குப் பிடித்த
ரவா கேசரியைக் கிளறிக் கொண்டு இருந்தாள்.
சுமதியிடம் ரவிக்கு, எது பிடிக்கும் என்று கேட்டுக் கொள்ளவும் அவள் தவறவில்லை .
" ம்ம், கேசரி போதும் அண்ணி. அது தான் அவனுக்கும் பிடிக்கும் " என்று சொல்லிப் புன்னகைத்தாள் சுமதி.
மிருதுளா, கலைந்து கிடந்த தங்களது அறையைப் பெருக்கிச் சுத்தம் செய்தாள். ' நான் வேறே எல்லாத்தையும் அப்படி, அப்படியே போட்டு வச்சிட்டேன் . இந்த அக்கா வந்தவுடனே, அதைத் தான் பார்த்துட்டு என்னைத் திட்டுவா ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவாறே தனது பணியைத் தொடர்ந்தாள்.
ஒரு வழியாக , வெண்ணிலாவையும் ரவியையும் சுமந்தபடி, கால் டாக்சி அவர்களது வீட்டை நெருங்கி விட்டிருந்தது.
சாரதாவுக்குத் தான், பயத்தில் உதறல் எடுக்கத் தொடங்கியது. ' ஐயோ, என் பிள்ளை தான் உங்க பொண்ணைக் கடத்திட்டான்னு சொல்லிட்டு, நான் எப்படி அவ வீட்டுக்குள்ளயே போக முடியும். நாம தப்புப் பண்ணிட்டோமோ ' என்று தன்னையே சாடிக் கொண்டாள் சாரதா.
" அம்மா , அக்கா வந்தாச்சு பாரு " என்றபடி ஓடிச் சென்று காருக்கு அருகில் நின்று கொண்டாள் மிருதுளா.
சுஷ்மியைத் தன் தோளில் சுமந்தபடி இறங்கி வந்த வெண்ணிலாவைக் கண்டதும், அனைவரும் திகைத்துப் போயினர்.
" அத்தை, மாமா வாங்க உள்ள, ஏன் இப்படி, ஷாக் ஆகி நிக்கறீங்க எல்லாரும். வாங்க உள்ளே போய்ப் பேசிக்கலாம் " என்று ரவி தான் அனைவரையும் அழைத்துச் சென்றான்.
மேனகா சாரதாவை அடையாளம் கண்டு கொண்டாள் ." அக்கா, நீ சாரதா தானே? இங்கே எப்ப வந்தே .? உன் பிள்ளைங்க எல்லாம் எப்படி இருக்காங்க, என்ன வேலை பண்றாங்க ? " என்று கேள்விகளை அடுக்கத் தொடங்கினாள்.
சபாபதியும், அவளுடன் இணைந்து கொண்டார்.
" அட , நம்ப சாரதா அக்காவா? எப்படி இருக்கீங்க அக்கா? வாசு, ரம்யா எல்லாரும் நல்லா இருக்காங்களா? இந்தப் பாப்பா யாரு? இந்த ரம்யா பொண்ணுக்கு அதுக்குள்ள கல்யாணம் பண்ணிட்டியா? பாப்பாவைப் பார்த்தாலே, ரம்யா ஜாடை தெரியுதே " என்று கேட்டார் சபாபதி.
" ஏங்க, என்ன இது வெண்ணிலா, நிக்கிறா, அவளைக் கூப்பிடாம ஆளாளுக்கு ஏதேதோ பேசிட்டு இருக்கீங்க? நீ வாடி என் மருமகளே " என்று வெண்ணிலாவை அழைத்தாள், ரவியின் தாய் சுமதி.
வெண்ணிலா வீட்டிற்குள் நுழைந்தாள். அதற்குள் கண் விழித்துக் கொண்ட சுஷ்மி, தெரியாத இடத்தில், தனக்கு அறிமுகம் இல்லாத நபர்களைக் கண்டு மலங்க மலங்க விழித்தபடி நின்று கொண்டிருந்தாள்.
அனைவரது கண்களும் அவளது துறுதுறுப்பான விழி அசைவையே உற்று நோக்கிக் கொண்டிருந்தன.
மேனகா, வெண்ணிலாவை அருகில் அழைத்து, அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டாள்.
" வர்ற வெள்ளிக்கிழமை, நம்ப குல தெய்வம் கோவிலுக்குப் போய்ப் படையல் போட்டுட்டு வந்துடணும். நான் வேண்டிட்டு இருக்கேன். அந்த மகமாயி புண்ணியத்துல நீ நல்லபடியா வீடு வந்து சேர்ந்துட்டே " என்று சொன்னாள் மேனகா.
"சரிம்மா இரு நான் போய் குளிச்சுட்டு ஃபிரெஷ் ஆகிட்டு வந்துடறேன் " என்று சொல்லி விட்டு வெண்ணிலா குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
அன்றைய தினம் போல, மிருதுளா சுமதியுடன் சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.
" ம், இன்னைக்கு என்ன பண்ணலாம் மிருது. உன் மெனுவைச் சொல்லு " என்று சுமதி கேட்டாள்.
" அத்தை , இன்னிக்கு பரோட்டா செய்யலாம். நான் நல்லா செய்வேன் " என்று மிருதுளா சொல்ல, அதனைக் கேட்டபடி குளியலறைக்குள் இருந்து வெளிப்பட்ட வெண்ணிலா, " ம்ம், அதை நாங்க சொல்லணும் . நீயா சொல்லிக்கக் கூடாது " என்றாள்.
வெண்ணிலாவைத் தேடிக் கொண்டே, அங்கே வந்த சுஷ்மி, " அத்தே, பாப்பா பொம்மையைக் காணோம். நீ பார்த்தியா ? " என்று கேட்டாள்.
" இல்லையேம்மா, அத்தை பார்க்கலையே, நாளைக்கு நாம கடைக்குப் போய் புதுசா ஒரு பொம்மை வாங்கிக்கலாம் " என்றாள் வெண்ணிலா .
சுமதி, குழந்தையைக் கண்ணில் தங்கிய கேள்வியுடன் பார்க்க, அதே கணத்தில், ஹாலில் தனித்து விடப் பட்டிருந்த சாரதாவிடம் ரவி பேசத் தொடங்கினான். " அம்மா, நீங்க, இப்ப யாரு வந்து என்ன கேட்டாலும், எதுவும் பேசாதீங்க. வெண்ணிலாவைக் கடத்தி வச்சிருந்த ஆட்களைப் பத்தி, நீங்க தான் போலீஸ் கிட்ட தகவல் கொடுத்தீங்கன்னு சொல்லித் தான் நான் உங்களைப் பத்தி எல்லார் கிட்டயும் சொல்லப் போறேன். உங்க பையனைப் பத்திக் கேட்டா, அவன் வெளிநாட்டில இருக்கறதாச் சொல்லிடுங்க. சில, பல நல்ல, விஷயங்களுக்காக நாம ஒரு பொய் சொல்றதுல தப்பே இல்லை. நான் சொல்றது உங்களுக்குப் புரியுதா அம்மா? " என்றான்.
சாரதா ஏதோ சொல்ல வாயெடுத்தாள் . அதற்குள் சுஷ்மியைத் தூக்கிக் கொண்டு அங்கே வந்த சுமதியைப் பார்த்த ரவி அவளை அமைதியாக இருக்கும் படி சைகை செய்தான்.
" டேய் , இந்தப் பாப்பா நல்லாப் பேசுதுடா. ஆமாம், இவளை எப்படி நீங்க ரெண்டு பேரும் பார்த்தீங்க " என்று ரவியிடம் கேட்டாள்.
ரவி, பேசத் தொடங்கினான். " இவங்க மூலமாகத் தான், வெண்ணிலா இருக்கற இடம் பத்தி எங்களுக்குத் தெரிய வந்துச்சு. இவங்களோட பையன் வெளிநாட்டில இருக்காரு. சரி, நமக்கு உதவி பண்ணினவங்க எதுக்காகத் தனியா இருக்கணும்னு, சொல்லிட்டு நாங்க இவங்களை இங்கே கூட்டிட்டு வந்துட்டோம் . இங்கே வந்து பார்த்தப்புறம் தான் தெரிஞ்சுது . மாமாவுக்கும் இவங்க தெரிஞ்சவங்கன்னுட்டு " என்று சொன்னான். அதனைக் கேட்ட வெண்ணிலாவுக்கும், கண்கள் ஆனந்தத்தில் கலங்கி விட்டன.
அதற்குள் சுஷ்மிக்குத் தூக்கம் வந்து விட்டது. சபாபதி " அம்மாடி வெண்ணிலா இன்னைக்கு ஒரு நாள் சாரதா அத்தை , உங்க ரூமிலே படுத்துக்கட்டும். நாளைக்கு, நான் அந்த மாடி ரூமை ஒதுக்கிக் கொடுத்துடறேன் " என்று சொன்னார்.
" சரிங்கப்பா " என்றாள் வெண்ணிலா.
ரவி, வெண்ணிலாவைப் பார்த்தபடி அந்த இடத்தை விட்டு நகராமல், அங்கேயே அமர்ந்து கொண்டிருந்தான் .
வெண்ணிலாவுக்கு அவன் பார்வையின், வேகத்தைத் தாங்க முடியவில்லை.
வெட்கத்தில் தலை கவிழ்ந்தபடி சமையலறைக்குள் புகுந்து கொண்டாள் வெண்ணிலா.
அதன் பின், அனைவரும் இணைந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களது இரவு உணவை , இன்பத்துடன் உண்டு முடித்தனர்.
சாப்பிட்டு முடித்ததும் ரவி சுமதியுடன் தன் வீட்டிற்குக் கிளம்பிச் செல்ல ஆயத்தமாகிட, " சரிங்க அண்ணே. வர்ற வெள்ளிக்கிழமை நாள் நல்லா இருக்குது . அன்னைக்கு வந்து, மத்த விஷயங்களைப் பத்தி நாம பேசி முடிச்சுடலாம் " என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டாள் சுமதி.
?????????
மறு நாள் காலையில், விடிந்தவுடன் அரக்கப் பரக்க எழுந்து கொண்ட வெண்ணிலா, தனது அலைபேசியுடன் மொட்டை மாடிக்குச் சென்றாள்.
ரவியின் எண்களைத் தட்டி விட்டு காத்திருக்கத் தொடங்கினாள் .
" ஹலோ என்ன இது ? குட்மார்னிங் டியர். வெண்ணிலவு இன்னிக்குக் காலையிலயே, என்னைத் தேடி வந்துடுச்சி " என்று கேட்டான் ரவி.
" இல்லை வந்து, என்னை உங்களுக்குப் பிடிச்சு இருக்கா. என் மேல உங்களுக்குத் துளி கூட சந்தேகம் வரலையா , அந்த வாசுவும் , நானும் சின்ன வயசுல, ஒன்னாவே தான் இருப்போம் , சேர்ந்து தான் விளையாடுவோம். வந்து இதை எல்லாம் உங்க கிட்ட சொல்லணும்னு தோனுச்சு . அதான் போன் பண்ணினேன் " என்று தயங்கியவாறே சொன்னாள் வெண்ணிலா.
மறு முனையில், ரவி சிரிக்கத் தொடங்கினான். " சரி, இப்ப அதுக்கு என்ன பண்ணனும்னு சொல்றே. வேணா இப்ப அவனைக் கூப்பிட்டு ஒரு பிரியா விடை கொடுத்துடுவோமா " என்று கிண்டல் தொனியில் கேட்டான். வெண்ணிலா பதில் சொல்லவில்லை.
" இங்கே பாரு நிலா, நேத்திக்கு, நீ என் மேலே சாய்ஞ்சபடியே, அந்த அண்டர் கிரவுண்டுல இருந்து மேல வந்தே பார்த்தியா. அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன், என் ஆயுசுக்கும் உனக்கு ஒரு அனுசரணையான வாழ்க்கையைக் கொடுக்கணும்னு. அதுலே, எந்த மாற்றமும் கிடையாது.
நீ சொன்னதையே நான் இப்பத் திரும்பவும் சொல்றேன். என் நிலாவே, நீ இந்த ரவியிடம் பெற்ற இரவல் வெளிச்சத்தில், இரவு முழுவதும் விண்ணில் ஜொலித்தாலும், என் இரு விழிகளுக்கு மட்டுமே ஒளி தரும், உயிர் வெளிச்சமும் நீ மட்டும் தான்; நீயே தான் !! அதனால் இனி வரும் நாளெல்லாம், உன் விழிகளை எனக்குள் புதைத்துக் கொண்ட இமையாகிடுவேன் நான் " என்று கவி வாசித்திட மறு முனையில் கேட்டுக் கொண்டிருந்த வெண்ணிலா, " சரி அப்ப நான் வைக்கவா " என்று வெட்கத்துடன் கேட்டாள். " ச்சேச்சே அதெல்லாம் போனுக்கு வக்காதேம்மா. என் கன்னத்துக்கு வை " என்று ரவி மீண்டும் அவளைக் கலாய்த்திட, சின்னச் சிரிப்புடன் இணைப்பைத் துண்டித்து விட்டு, மீண்டும், படுக்கை அறைக்குள் புகுந்து கொண்டாள் நிலா.

( சுபம்)
ஹாய் ஃபிரெண்ட்ஸ் கதை உங்களுக்குப் பிடிச்சு இருக்கும்னு நம்பறேன். ஏதாவது குறைகள் இருந்தாலும் எடுத்துக் கூறுங்கள். உங்களுடைய தொடர் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள்.

இந்தக் கதையில், இடம் பெற்ற சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் எனது சொந்தக் கற்பனையே ! ??




 
Top