Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான் இமையாக நீ 9

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member
அத்தியாயம் 9

தன் முன் நீட்டப்பட்ட அடையாள அட்டையைக் கண்டு மருத்துவ மேலதிகார அறையில் இருந்த பெண் ஒரு கணம் திடுக்கிட்டுப் போனாள்.

" சார் , என்ன இது? நீங்க போலீஸா?. பிரீத்தாவை எதுக்காக நீங்க தேடறீங்க. அவளைப் பத்தின விவரங்களை எல்லாம், யார் வந்து கேட்டாலும், எதுவும் சொல்லிடக் கூடாதுன்னு எங்களுக்கு மேலிடத்து உத்தரவு இருக்கு சார். அதனால நான் டாக்டரைக் கேட்டுட்டுத் தான் எதுவும் சொல்ல முடியும். நீங்க கொஞ்சம் வெயிட் பண்றீங்களா சார்?." என்று அந்தப் பெண் கேட்கவும்

தனது கைகளை அவள் முன்பு நீட்டி, அவளது வார்த்தைகளை இடைமறித்த தீபக், " இல்ல, நீங்க அவங்களைக் கேட்க வேணாம். ஆனா எனக்குப் பிரீத்தா சிஸ்டரைப் பார்க்கணும். அதுக்கு நீங்களாகவே கொஞ்சம் அவங்க அட்ரஸைத் தந்திடுறீங்களா? இல்லை நான்...என் வேலையைக் காமிக்கவா?." என்று சற்றே மிரட்டல் தொனியில் கேட்டான் தீபக்.

" சார், சார் இருங்க இதோ நான் தர்றேன் " என்று பதறிய குரலில் சொன்ன அவள், மருத்துவமனை ஊழியர்கள் குறித்த தனிப்பட்ட, விவரங்கள் அடங்கிய ஃபைலைத் தேடி எடுத்து, அதில் இருந்த பிரீத்தாவின் முகவரியைத் தேடி அவனிடம் குறித்துக் கொடுத்தாள்.

அதனைப் பெற்றுக் கொண்ட தீபக்கிற்கு, அந்தப் பெண் தன்னிடம் சொன்ன, ' அவங்க அட்ரஸை யாருக்கும் தரக் கூடாதுன்னு மேலிடத்து உத்தரவு ' என்ற வார்த்தைகள் நினைவிற்கு வந்தன.

" சரிங்க சிஸ்டர், அவங்களைப் பத்தின விவரங்களை யாருக்கும் சொல்லக் கூடாதுன்னு டாக்டர் சொன்னதாச், இப்ப என் கிட்ட சொன்னீங்களே, அது எல்லா ஒர்க்கர்ஸுக்குமா? இல்லை அதுக்குத் தனி லிஸ்ட் எதுவும் வச்சிருக்கீங்களா? " என்று கேட்டாள்.

மீண்டும் அந்தப் பெண் தயங்கியபடியே " எல்லா ஒர்க்கர்ஸுக்கும் தான் " என்றாள். "

ம், அப்படியா? எனக்கு நீங்க எதையோ என் கிட்ட மறைக்கிற மாதிரி தெரியுது. நீங்களாவே உண்மையைச் சொல்லிட்டீங்கன்னா உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை " என்று அதட்டலாகக் கேட்டான் .

" சார் , பிளீஸ் நான் தான், பிரீத்தாவோட அட்ரஸை உங்க கிட்ட கொடுத்துட்டேனே சார்.." என்று தயங்கினாள் அந்தப் பெண்.


" இப்ப நான் கேக்கற விவரங்களை எல்லாம் எடுத்துக் கொடுக்கறது மட்டும் தான் , உன் வேலை. இப்ப எடுத்துக் குடுக்கப் போறியா இல்லையா " என்று கேட்டான் தீபக்.

" இதோ, இதோ பார்த்துச் சொல்றேன், சார். " என்றபடியே ரிசப்ஷனுக்குப் பின் புறமாக இருந்த ரகசிய அலமாரியைத் திறந்து, அதிலிருந்த ஒரு ஃபைலை எடுத்துத் தேடத் தொடங்கினாள் அந்தப் பெண்.

தீபக், கைகளை நீட்டி அந்த ஃபைலைத் தன் வசமாக்கிக் கொண்டான்.

இதனைச் சற்றும் எதிர்பாராத அந்தப் பெண், " சார், சார் நீங்க அந்த , நேம் லிஸ்ட் மட்டும் தானே கேட்டீங்க. சார், ஃபைலைக் கொடுத்துங்க சார் " என்று கெஞ்சாத குறையாக, அவனிடம் கேட்க,
" ம், தர்றேன் தர்றேன் " என்று சொல்லி விட்டு அந்த ஃபைலின் உள்ளீடுகள் அனைத்தையும், தனது செல் போனில் படமெடுத்து, சிறைப் படுத்திக் கொண்டான் தீபக்.

" தாங்க்ஸ். எனக்கு உதவி பண்ணினதுக்கு. ஆனா நான், இப்படி வந்து உன் கிட்ட கேட்டு வாங்கின தகவல்களைப் பத்தி, இங்க வேற யாருக்கும் தெரியக் கூடாது. ஏன்னா இது ஒரு பெண்ணோட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம். மீறி, வெளியே சொன்னீங்கன்னா உங்க மேல தான் ஆக்ஷன் எடுக்க வேண்டி வரும் " என்று கடுமையான குரலில் எச்சரித்து விட்டு அங்கிருந்து சென்றான் தீபக் .
________________________________
முத்தம், முதல் முதலாக ஒரு ஆடவனிடம் இருந்து தான் பெற்ற முத்தம், இப்படி ஒரு அருவருப்பான சூழ்நிலையிலா தனக்குக் கிடைக்க வேண்டும் என்று தனக்குள் குமுறி அழுது கொண்டிருந்தாள் வெண்ணிலா.

ஆனால், அவளின் இதழ்களை ஸ்பரிசத்த அந்த நிமிடத்தில், வாசுவின் முகமே மிகவும் மென்மை கூடி விட்டிருந்தது.

அவனால், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

" ம், இதுவே எனக்கு இந்த ஆயுளுக்கும் போதும்டி. உனக்குத் தெரியுமா? உன்னோட அரவணைப்புக்காகத் தான் நான் இத்தனை வருஷமா காத்துக்கிட்டு இருக்கேன். உனக்கு ஞாபகம் இருக்கா? சின்ன வயசுல நான் ரம்யாவுக்கு ஒரு முத்தம் கொடுத்தா, நீ எனக்கும் கொடுன்னு சொல்லிட்டு என் பக்கத்திலயே வந்து நின்னுட்டு இருப்பியே. நான் உன் ரெண்டு கன்னத்திலயும், மாத்தி மாத்தி முத்தம் கொடுத்துட்டே இருப்பேனே. அதை எல்லாம் நீ மறந்தா போயிட்ட ? " என்று கேட்டான் வாசு.

" நீ, என்னடா. இப்படி எதை, எதை எல்லாமோ ஞாபகத்தில வச்சிக்கிட்டு, இப்படி என்னன்னவோ பேசிட்டு இருக்கே. ரம்யா மாதிரி, ஏன் என்னையும் நீ உன்னோட தங்கச்சியா நீ நெனச்சுருக்கக் கூடாது. போடா, இப்படி என்னைக் கடத்திட்டு வந்து கட்டிப் போட்டு என் வாழ்க்கையைப் பாழாக்கணும்னு எத்தனை நாளா, நீ திட்டம் போட்டு வச்சிருந்தே. இங்கே பாரு, நீ என்னைப் பலவந்தமா ஒரு நாளும் அடையவே முடியாது, என் அன்பை வாங்கிக்கவும் முடியாது. மீறி என் கிட்ட வந்தேன்னா, அப்புறம் என்னை நீ பிணமாத் தான் பார்ப்பே " என்று மிகவும் கோபமுற்ற குரலில் ,

கத்திய அவள் தன்னைக் கட்டிப் போட்டிருந்த நாற்காலியைத் தானே அதீத வேகத்துடன் , பின் பக்கமாகத் தனது கால்களாலேயே, நகர்த்திக் கொண்டு சென்ற அவள், சுவற்றுக்கு அருகில் சென்று தனது தலையை, சுவற்றோடு மோதிக் கொள்ள, முயற்சித்தாள்.

" ஏய், ஏய் நிலா. நிறுத்துடி " என்று அவளைத் தடுத்த வாசு, மீண்டும் நாற்காலியை நகர்த்திக் கொண்டு வந்து, கட்டிலுடன் பிணைத்துக் கட்டி விட்டான்.

" சாப்பிட்டாச்சு இல்லை. அப்படியே தூங்கு. குட் நைட் " என்று சொல்லி விட்டு, அந்த அறையை விட்டு வெளியேறி விட்டான் வாசு.
____________________________________
தீபக்கிடம் தனது , புகாரை ஒப்படைத்து விட்டு, வெண்ணிலா வீட்டிற்கு விரைந்த ரவி, அங்கே தனக்காகக் காத்துக் கொண்டு இருந்த சுமதியிடம் , " அம்மா, வாம்மா போகலாம். வா, கிளம்பு. " என்று சொன்னவன்

பின் , சபாபதியிடம் திரும்பி, " ஒன்னும் பிரச்சினை இல்லை மாமா . இங்கே போலீஸ் ஸ்டேஷன்ல ஆக்டிவா இருக்கிற இன்ஸ்பெக்டர், தீபக் என்னோட கூடப் படிச்ச நண்பன் தான். அதனால , வெண்ணிலா காணாமப் போன , விஷயத்தை ஒரு பப்ளிக் இஷ்யூவா, மாத்திடாம, கான்ஃபிடென்ஷியலா டீல் பண்ணிக்கறேன்னு சொல்லிட்டான். அவன் கிட்ட எல்லா விவரங்களையும் சொல்லிட்டு வந்திருக்கேன் " என்று சொன்னான்.

அதற்குள், மிருதுளா " மாமா, அத்தை சாப்பிட்டாங்க. உங்களுக்கும் தோசை, ஊத்தித் தரவா மாமா ? " என்று கேட்டாள்.

ரவி, தனது தாயைக் கேள்விக் குறியோடு நோக்கினான்.

அவள், அவ்வளவு சீக்கிரத்தில் யாருடனும் பழகி விட மாட்டாள் . அத்துடன் எங்கும், விரைவில் கை நனைத்திடவும் மாட்டாள். அப்புறம் எப்படி, இந்த வீட்டில் சாப்பிடும் அளவிற்கு , ஒட்டுதல் ஏற்பட்டது என்ற கேள்வி தெரிந்தது அவனது விழிகளில்.

பின் தயங்கியபடியே, " ம், சரி. சாப்பிடறேன் " என்று சொல்லி விட்டு அமர்ந்து கொண்டான்.

அவன் மனத்தில் அன்றைய பகல் பொழுது, நிகழ்வுகள் யாவுமே, வெறும் கனவுகளே தானோ, என்ற கேள்வி எழுந்தது.

வெண்ணிலாவின் முகம், அவனுக்குள் மிகவும் ஆழமாகப் புதைந்து விட்டிருந்தது.

இப்போதும், அவள் கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் நின்றபடி தன்னைப் பார்த்து ஒரு வெட்கப் புன்னகையை சிந்துவது போலவே அவன் கண்களுக்குத் தெரிந்தது.
' எல்லாமே, கனவு தானா ? நான் எதுக்காக உன்னைப் பார்த்தேன். நீ எதுக்காக என் கூட காரில வந்தே? பெயர்ப் பொருத்தம் எல்லாம், பார்த்து அழகாப் பேசினியே, இப்படி திடீர்னு காணாமப் போயிட்டியே, இப்ப நான் என்னடி செய்வேன்? என் வாழ்க்கையே இப்ப, அமாவாசையா மாறிடுச்சே ' என்று அவனது மனம் உள்ளூர அழுது கொண்டே இருந்தது.


" நீயில்லா வாழ்வும்
எனக்கு, இருள் விலகா
வானம் என்று ஆகிடுமோ "
__________________________________________
வெண்ணிலா, சுவற்றோடு மோதிக் கொள்ள விரைந்து சென்றதைக் கண்ட வாசு ஒரு கணம் திடுக்கிட்டுப் போனான் .

அறையை விட்டு வெளியே வந்த அவன் , தனது தாயிடம் விரைந்தான்.
" அம்மா, நீ போய் வெண்ணிலா ரூமில படுத்துக்க, அவளுக்குத் துணையா " என்று சொன்னான்.


" என்னடா இப்படி ஒரு காரியத்தைப் பண்ணி வச்சிருக்கே. உனக்கு , அவளை உண்மையாவே மனப்பூர்வமா பிடிச்சிருந்தா, அதை என் கிட்ட சொல்லி இருக்க வேண்டியது தானே. வேணாம்டா, பெண் பாவம் பொல்லாததுடா, ஏற்கனவே நம்ம ரம்யா ஒருத்தியை இழந்துட்டுப் படற கஷ்டம் போதாதா , அம்மாவும் இல்லாம, அப்பாவும் இல்லாம, இந்தப் பச்சை மண்ணு, நம்மளை நம்பித் தானே இருக்கா.
அந்த முகத்தைப் பார்க்கறப்ப கூடவா, நீ செய்யறது தப்புன்னு, உனக்குத் தெரியலை. நமக்கு எந்த வம்பும் வேணாம்டா. நாளைக்குக் காலையில, இந்தப் பொண்ணைக் கொண்டு போய் அவங்க வீட்டில விட்டுட்டு வந்துடுடா. அம்மா, நானும் உன் கூட வர்றேன். சரியா " என்று கேட்டாள்.


" அம்மா, உனக்கு எதுவும் தெரியாது. நீ பேசாம நான் சொல்றதை மட்டும் செய். ஆனா நான் உனக்கு ஒன்னு மட்டும் சொல்லிக்கறேன். நான், இவளை நம்ப வீட்டுக்கு இப்படி கடத்திக் கூட்டிட்டு வரலைன்னா, அவளை வேற யாராவது , கடத்தி இருப்பாங்க. அப்படி ஒரு ஆபத்து அவளுக்காகக் காத்திருந்தது. அது தெரிஞ்சதுனால தான், நான் முந்திக்கிட்டேன். அதை நானே அவ கிட்ட சொல்ல வேண்டிய நேரத்தில, சொல்லிடறேன் . இப்போதைக்கு நீ, அவ கூட போய்ப் படுத்துக்க. போம்மா " என்று தனது தாயை, வெண்ணிலாவைத் தான் அடைத்து வைத்திருந்த அறைக்கு அனுப்பி வைத்தான்.

( வரும்)
 
அப்போ ஹாஸ்பிடல் விஷயம் பத்தி வாசு க்கு தெரிந்து இருக்கு ரம்யா இறப்புக்கும் இந்த ஹாஸ்பிடளுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா ..
 
அப்போ ஹாஸ்பிடட்டலில் அவள் விழும் போது தாங்கி பிடித்தது இவன் தானா ?
அங்கு தான் ஏதோ பிரச்சனை ரம்யாக்கு நடந்து இருக்கு போல.?
அந்த டாக்டரை தூக்கி விசாரணை பண்ணினால் எல்லாம் தெரியும்
சூப்பர் 😀
 
Top