Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

“நீதான் எந்தன் அந்தாதி ...!” அத்தியாயம்-5

Advertisement

daisemaran

Well-known member
Member


அத்தியாயம்-5


காதலில் ஏற்ப்பட்ட ஊடல் காரணமாகப் பிரிந்து சென்ற தலைவன், மீண்டும் தலைவியை வந்து அடையும்பொழுது, தலைவி, தலைவன் மீது ஊடல் கொள்வாள். அதாவது பொய்க் கோபம் கொள்வாள். பிறகு, கோபத்தை மறந்து அவனோடு கூடி மகிழ்ந்து வாழ்வாள். இவை சங்க இலக்கியங்களிலுள்ள அகப்பாடல்களில் இடம்பெற்ற செய்தி.

நம் (தலைவனும்) வேழவேந்தனும் அப்படித்தான். அபிநயாவோடு ( தலைவியோடு) பேசாத அந்த ஒரு வார காலம் நரகத்தில் வாழ்வது போல் உணர்ந்தான். பிரிவின் துயரம் அவனை ஊன் உறக்கமின்றி அலைக்கழித்தது. இனியும் அதைத் தொடர விரும்பாத மனம் அவளைக் நாடிச்சென்றது.

அவளுக்கும் அதே நிலைதான்.

‘எப்பொழுதும் சந்திக்கும் கடற்கரை முகப்பிற்கு வருமாறு’ மெசேஜ் அனுப்பி இருந்தான் வேழவேந்தன். அவளிடமிருந்து மறுப்பாக எந்த செய்தியும் வராததால் அதையே பதிலாக எடுத்துக்கொண்டு அவள் கண்டிப்பாக வருவாள் என்ற நம்பிக்கையோடு முன்னமே கடற்கரையில் வந்து காத்திருந்தான்.


சுமார் அரை மணிநேர அவனுடைய காத்திருப்பு வீண் போகவில்லை. அவள் தன்னுடைய டூவீலரில் அங்கு வந்து இறங்கினாள். தூரத்தில் வரும்போதே அவளை கவனித்தவன் பாரா முகம் காட்டி அமர்ந்திருந்தான்.


அவன் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அருகில் நெருங்கி வந்தவள் அவனுடைய பார்வையை சந்திக்க இயலாதவளாக தலைத்தாழ்த்தி நின்றாள். அவளாக எதையாவது பேசுவாள் என்று எண்ணியவனுக்கு ஏமாற்றமே. ஆனாலும் தன்னுடைய ஏமாற்றத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவனுக்கே இயல்பான அந்த உதட்டோர குறுஞ்சிரிப்போடு அவள் முகத்தை ஏறிட்டான். கை விரல்களை ஒன்றோடு ஒன்று கோர்த்தபடி, உதட்டை அழுத்த மூடி அவள் நின்ற கோலம் இவன் மனதை தளர செய்தது.


அவளுடைய வலது கரத்தை மென்மையாகப் பற்றினான். விடுபட வேண்டி கரத்தை தன் பக்கம் இழுத்தாள் அபிநயா. அவன் விடுவதாக இல்லை. அவனுடைய பிடி இறுகியது. அடுத்த நிமிடம் இதற்காகவே காத்திருந்தது போல் அவள் கண்களிலிருந்து இரண்டு சொட்டு விழிநீர் இவன் கையில் பட்டு தெறித்தது. மறுகணம் அவள் அவனுடைய கை வளையத்துக்குள் கிடந்தாள். இருவருக்குள்ளும் ஆழ்கடலின் ஆழ்ந்த அமைதி நிலைகொண்டது. அவர்களுக்குள் வார்த்தைகளற்ற ஒரு மௌனம். நொடி பொழுது நீண்டு....நிமிடங்களை கடத்திக்கொண்டிருந்தது. எவ்வளவு நேரம் அதே மோனநிலையில் இருந்தார்கள் என்று அவர்களுக்கே தெரியாத அந்த சயனநிலை.


அவன் தோளை யாரோ தட்டினார்கள். பின் தொடர்ந்து கடுமையான குரலில்,

"ஹலோ இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க...? இது பொது இடம். மக்கள் வந்து போயிட்டு இருக்கிற பப்ளிக் பிளேஸ். இங்கே வந்து இப்படி உட்கார்ந்திருக்கலாமா?"

கண்மூடி அமர்ந்திருந்த இருவரும் அந்த தடித்த குரலைக் கேட்டு அதிர்ந்துப்போய் பிரிந்து எழுந்தப்போது, கடற்கரையில் போவோர் வருவோர் எல்லாம் இவர்களை கவனித்தபடி நின்றிருந்தனர்.


கடிந்துப் பேசிய போலீஸ்காரரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு தர்மசங்கடத்துடன் நெளிய,


"அதெல்லாம் இருக்கட்டும் கிளம்புங்க கிளம்புங்க..." என்றார் போலீஸ்காரர் அதே தோரணையில்.


வெட்கத்தோடு சிவந்த முகம் தர்மசங்கடமாக மாற தன் கால்களை மாற்றி மாற்றி வைத்தபடி நின்ற அபிநயாவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் வேழவேந்தன்.


அவன் முகத்தில் யோசனை படிந்து இருப்பதை கவனித்த அபிநயா


"என்ன ஆச்சு...?"என்றாள்.


"கட்டுப்பாடோடு இருக்கவேண்டும் என்று மனது நினைத்தாலும் செயல்படுத்த முடியவில்லை. உன்னை இவ்வளவு நாட்கள் பார்க்காமல் இருந்து விட்டு பார்த்தபோது என்னையும் அறியாமல் என் கட்டுபாடுகளை எல்லாம் உடைத்தெறிந்து விடுகிறேன்."


“..........."

" என்னை நான் மாற்றிக்கொள்ள வேண்டும் அபி. ஆனாலும் உன்னிடம் நான் எதிர்பார்த்தது வேறு ஒரு கேள்வி...."

என்றவன் வார்த்தையை பாதியிலேயே நிறுத்திவிட்டு அவள் பதிலுக்காக காத்திருந்தான்.


"என்ன கேள்வி எனக்கு புரியல?"


" அந்த நீலவேணி பத்தி கேட்பாய் என்று நினைத்தேன்..."


" நான் கேள்வி கேட்க வரவில்லை மன்னிப்பு கேட்கத் தான் வந்தேன்..."

" மன்னிப்பா எதற்கு..." புரியாதவனாய் கேட்டான்.

"இரண்டு நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது."

" என்ன சம்பவம் ஒன்னுமே புரியல"

"இரண்டு நாளைக்கு முன்னாடி காலேஜ் போயிட்டு இருக்கும்போது என்னுடைய துப்பட்டா டூவீலரில் மாட்டிக்கிச்சு வண்டியிலிருந்து ஸ்லிப்பாகி கீழே விழுந்துவிட்டேன். ரோட்டில் போனவர்கள் என்னை கைத்தாங்கலாக அழைத்து சென்று ஓரிடத்தில் அமர வைத்தார்கள். அப்பாவுக்கு கால் பண்ணலாம் என்று எண்ணிய எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். தேவையில்லாமல் அவர்களுக்கு எதற்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தால். அந்த வழியாகப் போன அப்பாவின் நண்பர் தன் பைக்கை நிறுத்தி என்னை அழைத்துச் சென்று கல்லூரியில் டிராப் பண்ணினார். அப்பத்தான் எனக்கு உங்கள் ஞாபகம் வந்தது.அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் நீங்களும் இருந்திருப்பீர்கள் என்று என் மனது சொன்னது. என்ன ஏது என்று விசாரிக்காமல் கோபப்பட்டு விட்டோமே என்று ரொம்ப கஷ்டமா இருந்துச்சி. உங்கள பாக்கணும் மன்னிப்பு கேட்கனும் உங்ககிட்ட மனசு விட்டு பேசணும்னு தோணுச்சு. ஆனா தயக்கமா இருந்துச்சு. அப்பதான் நீங்க மெசேஜ் போட்டீங்களா இன்னைக்கு எப்படியாவது உங்களை பார்த்துடனுன்னு ஓடிவந்தேன்."


"ம்ம்... இப்பையாவது என்ன புரிஞ்சுகிட்டியே..." என்றவன் நீலவேணி பற்றி அவள் தன்னுடன் கல்லூரியில் படித்ததிலிருந்து ஆரம்பித்து மொத்தக் கதையையும் சொல்லி முடித்தான்.


"இனிமே கடவுளே வந்து சொன்னாலும் உங்க மேல நான் சந்தேகப்பட மாட்டேன்." என்றாள் அபிநயா.


உண்மையான காதல் உடையவர்களிடையே சில நேரங்களில், சிறு மனவேறுபாடுகள் வரும். அவை நீர்மேல் குமிழிபோல் மறைந்துவிடும். அதன்பின் முன்பைவிட மிகுதியான அளவில் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த தொடங்குவார்கள்.


அப்படித்தான் இருவரும் ஆழமான புரிதலோடு பழக ஆரம்பித்தார்கள். காதல் வானத்தில் இன்ப சிறகடித்து பறந்து கொண்டிருந்த இவர்களின் வாழ்வில் அடுத்தகட்டமாக இரு குடும்பத்திலிருந்தும் பிரச்சினைகள் உருவானது. அதாவது இவர்களின் காதல் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது.



தொடரும்...
 
Last edited:
Top