Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

18. Ivan Vasam Vaaraayo!

Advertisement

நிரஞ்சனா உண்மையை மறைத்தது சரியா? தவறா?

  • சரி

    Votes: 1 16.7%
  • தவறு

    Votes: 4 66.7%
  • யோவ்.. போய்யா.. போய் எபி டைப் பண்ணு..

    Votes: 1 16.7%

  • Total voters
    6

Annapurani Dhandapani

Well-known member
Member


18. இவன் வசம் வாராயோ!


தன் பின்னால் வந்து கொண்டிருந்த நிரஞ்சனாவை யாரோ வாயைப் பொத்தி ஒரு கடைக்குள் இழுத்துக் கொண்டு போவதைப் பார்த்த கயல் அதிர்ச்சியுடன் தன் கணவனையும் அண்ணனையும் சத்தமாக அழைத்துக் கொண்டே அந்தக் கடையை நோக்கி ஓடினாள்.

ஆனால் அந்தக் கடையினுள்ளே யாரையும் காணவில்லை. கடையும் ரொம்ப குட்டியாய் பாத்ரூம் போல நுழைந்தவுடனேயே முடிந்தும் விட்டது. நான்கு பக்க சுவர்களிலும் மரத்தாலான அலமாரி அடித்து இடைவெளியே இல்லாமல் ஆயத்த ஆடைகள் திணித்தது போல அடுக்கி வைக்கப்பட்டு கண்ணாடியால் மூடி போடப்பட்டிருந்தது. மேல் அலமாரிகளில் அட்டை டப்பாக்கள் நிறைய அடுக்கப்பட்டிருந்தன. காற்று வர வழியேயில்லாத காரணத்தால் குட்டியாக இரண்டு சீலிங் ஃபேன்கள் சுற்றிக் கொண்டிருந்தன. ஒரே ஒரு வயதான மனிதர் ஓரமாக இருந்த கல்லாவில் அமர்ந்திருந்தார்.

இவள் உள்ளே வேகமாக நுழைந்ததும்,

"வாங்க மேடம்! என்ன பாக்கறீங்க.. புது மாடல் குர்த்தி.. எத்னிக் டாப்ஸ்.. ஜீன்ஸ்க்கு போடற மாதிரி வெஸ்டர்ன் டாப்.. எல்லாம் இருக்கு.. என்ன பாக்கறீங்க மேடம்.." என்று எழுந்து நின்று அன்பொழுக விசாரிக்க வேறு செய்தார்.

"ரஞ்சி எங்க.. அவன் எங்க.. எங்க வீட்டு பொண்ண கடைக்குள்ள இழுத்துட்டு போறத நா பாத்தேன்.." என்று படபடவென்று பொரிந்தாள் கயல்.

"யாரு மேடம்.. இங்க யாரும் வரலயே.. நா ரெண்டு மணி நேரமா இங்கயே தான் உக்காந்துட்டிருக்கேன்.." என்றார் அவர்.

"இல்ல.. நீங்க பொய் சொல்றீங்க.. நா என் ரெண்டு கண்ணால பார்த்தேன்.. அவன் அவள இந்தக்கடைக்குள்ள இழுத்துட்டுப் போறத என் ரெண்டு கண்ணால பார்த்தேன்.." என்று சொல்லிவிட்டு.. "ரஞ்சீ.. ரஞ்சீீ.." என்று சத்தமாகக் குரல் கொடுத்துக் கொண்டே கடைக்குள் முழுதாய் பார்த்தாள்.

துணிகளைத் தவிர வேறு எதுவுமில்லை.

அதற்குள் தமிழும் முகிலும் அங்கே ஓடி வர,

"தமிழ்.. இந்த கடைக்குள்ளேந்து ஒரு ஆள்.. என் பின்னாடி வந்துட்டிருந்த ரஞ்சிய வாய பொத்தி கடைக்குள்ள இழுத்துட்டுப் போனான்.. நா பார்த்தேன்.. ஆனா.. ஆனா.. இங்க.. ரஞ்சி இல்ல.. எங்கன்னு தெரியல.."என்று வேகமாகச் சொல்லி மீண்டும், "ரஞ்சீ.. ரஞ்சனி.." என்று குரல் கொடுத்தாள்.

தமிழ் அந்த கல்லாவில் அமர்ந்திருந்த அந்த வயதான பெரியவரின் சட்டையைப் பிடித்து,

"எங்க வீட்டு பொண்ணு எங்கடா.. எம்பொண்டாட்டி எங்கடா.." என்று கோபமாகக் கேட்டான்.

"சா.. சார்.. என்ன சார்.. என்னென்னமோ கேக்கறீங்க.. எனக்கெதும் தெரியாது.. வுடுங்க சார்.." என்று அவர் குரல் நடுங்கக் கூறினார்.

அதற்குள் அக்கம் பக்கத்தில் இருந்த கடைக்காரர்களும் வாடிக்கையாளர்களும் அங்கே குவிந்து விட, ஆளாளுக்கு ஒன்று பேசி, வாய்த்தகராறு ஏற்பட்டது.

தமிழும் முகிலும் அந்த கடைக்காரருக்கு சாதகமாகப் பேசியவர்களைப் பார்த்து கோபமாக கேள்வி கேட்க, அவர்கள் இவர்கள் இருவரையும் அடிக்க வந்து விட்டனர்.

"ஏய்.. யாரப் பாத்து இப்டி அபாண்டமா பழி போடறீங்க.. எங்க ஐயா எத்தினி வருசமா இங்க கடை நட்த்துறாரு தெரியுமா.." என்று கேட்டுக் கொண்டே ஒருவன் முகிலை அடிக்க கை ஓங்க, அவனைத் தடுக்க தமிழ் தன் கையை ஓங்கினான்.

"அண்ணீ.." என்று நிரஞ்சனா தன் உச்ச குரலில் கத்துவது கடையினுள்ளிருந்து கேட்டது.

அங்கு கூடியிருந்த அனைவரும் அதிர்ந்தனர்.

தமிழும் முகிலும் கயலும், "ரஞ்சீ.. ரஞ்சீ.. எங்க இருக்க.." என்று குரல் கொடுத்தனர்.

ஆனால் அவள் எங்கே இருக்கிறாள் என்றே தெரியவில்லை. எல்லா பக்கமும் துணியால் அடைக்கப்பட்டிருந்தது.

தமிழுக்கு ஆவேசம் பொத்துக் கொண்டு வர, "ஏய்.." என்று கத்தியபடி கடை வாசலுக்கு நேர் எதிரிலிருந்த துணியால் அடைக்கப்பட்டிருந்த சுவற்றை தன் முழு பலத்துடன் தள்ளினான். அவன் தள்ளுவதைப் பார்த்து முகிலும் அவனுடன் சேர்ந்து தள்ளினான்.

எல்லாருடைய கவனமும் அந்த மரச்சுவற்றில் இருக்க, கடைக்காரரான அந்த வயோதிகர் நைசாக நழுவுவதை யாரும் கவனிக்கவில்லை.

அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணியெல்லாம் மளமளவென்று கீழே சரிய, மரத்தாலான அந்த சுவர் உடைந்து விழுந்தது. சுவற்றுக்கு அந்தப் பக்கத்தில் நிரஞ்சனாவின் வாயை தன் கையால் பொத்தியபடி ஒருவன் அவளை நகரவிடாமல் பிடித்திருக்க அவள் அவனிடமிருந்து விடுபடப் போராடிக்கொண்டிருந்தாள்.

அவளுடன் இன்னும் இரண்டு இளம் பெண்கள் கைகள் கட்டப்பட்டு, வாயில் துணி அடைக்கப்பட்ட நிலையில் அங்கே அமர்த்தி வைக்கப்பட்டிருந்தனர்.

தமிழும் முகிலும் மரச்சுவற்றைத் தாண்டி நிரஞ்சனாவின் அருகில் ஓடினர்.

மரச்சுவர் உடைந்து விழுவதைப் பார்த்த அந்த ஆள், நிரஞ்சனாவை விட்டுவிட்டு உடைந்த மரச்சுவற்றில் கால் வைத்து ஏறி தமிழைத் தாண்டிக் குதித்து கடையிலிருந்து சடுதியில் ஓடி மறைந்தான்.

மரச்சுவர் விழுவது, தமிழும் முகிலும் நிரஞ்சனாவின் அருகில் ஓடுவது, நிரஞ்சனாவைப் பிடித்திருந்தவன் அவளை விட்டுவிட்டு எகிறிக் குதித்து வெளியே ஓடுவது என, மூன்றும் ஒரே நேரத்தில் சில நொடிகளில் நடந்து முடிந்துவிட்டது.

"அண்ணீ.." என்று நிரஞ்சனா அழ, "ரஞ்சீ.." என்று கயல் அவளைத் தேற்ற, தமிழ் அவளிடம் என்ன நடந்தது என்று கேட்க, முகிலோ நிரஞ்சனாவைப் பிடித்திருந்தவனையும் அந்த வயோதிகக் கடைக்காரரையும் தேடினான்.

அங்கிருந்த பெண்களின் கைகட்டையும் வாயிலிருந்த துணியையும் கயலும் நிரஞ்சனாவும் சேர்ந்து அவிழ்த்து அகற்றினர்.

"என்ன நிரஞ்சனா ஆச்சு.. பதட்டப்படாம சொல்லு.."

"அ.. அவன்.. அவன்.." இதற்கு மேல் அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை.

அந்தப் பெண்களும் அழுகையைத் தவிர எதையும் சொல்லவில்லை.

முகில் அந்தக் கடையின் கல்லாப் பெட்டியைப் பார்க்க, அதன் மேல் இருந்த மடிக்கணிணியில் ஆபாச வீடியோ ஓடிக் கொண்டிருக்க, அதைப் பார்த்தவன் அதிர்ந்தான்.

"தமிழ்.. இதப்பார்ரா.." என்று அவனை அவசரமாக அழைத்து அதைக் காட்டினான்.

தமிழ் அதற்கு மேலும் தாமதிக்காமல் தன் அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டு விஷயத்தைக் கூறிவிட்டு, காவல்துறைக்கும் அழைத்தான்.

தன்னுடைய கைப்பேசியிலேயே எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டான்.

அவன் அலுவலக நண்பர்கள், பத்து நிமிடத்தில் வந்து சேர, காவலர்களும் அடுத்த பத்து நிமிடத்தில் வந்து சேர்ந்தனர்.


"சென்னையின் முக்கிய வணிகத் தலமாக விளங்கும் ...ல் மக்கள் நடமாட்டம் மிகுந்த அங்காடித் தெருவின் சிறிய சந்தில் துணிக்கடை நடத்தும் போர்வையில் பெண்களைக் கடத்தும் கும்பல் இயங்கி வந்தது அம்பலமாகியுள்ளது.."

அன்றைய மாலைச் செய்திகளில் முக்கியச் செய்தியாக இதுதான் ஓடியது.

காவலர்கள் அங்கிருந்த அனைவரையும் விசாரித்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.

முக்கியமாக நிரஞ்சனாவை பல கேள்விகள் கேட்க, அவள்,

"எனக்கு எதுவும் புரியலங்க.. நா மாடியிலிருந்த கடைக்கு போயிட்டு வந்துகிட்டிருந்தேன்.. கீழ இருக்கற அந்த வளவிக்கட, பொட்டுக்கட.. ஹேன் பேக் கடன்னு ஒண்ணொண்ணா பாத்துட்டே வரும்போது இந்தக் கடலேர்ந்து ஒருத்தன் என் மேல மோதற மாதிரி வந்தான்.. நா சுதாரிச்சிக்கறதுக்குள்ள என் வாயப் பொத்தி கடைக்குள்ள தள்ளிட்டு போனான்.. அந்த செவத்தில கதவு இருக்கறதே தெரீல.. அந்த கெழவன் எங்கியோ கை வெச்சான்.. அது தெறந்துகிச்சி.. என்ன உள்ளாற தள்ளிட்டு போனதும் கதவு தானாவே மூடிகிச்சி.. உள்ள இந்த பொண்ணுங்களும் இருந்தத பாத்து பயந்துட்டேன்.. அப்பதான் புரிஞ்சது.. இவன் பொண்ணுங்கள கடத்தறவன்னு..

கதவு மூடிகிட்டதும் அண்ணியோட குரல் கேட்டுச்சி. அவங்க ரஞ்சீ ரஞ்சீன்னு என்ன கூப்பிட்டாங்க.. அவன் என் வாயப் பொத்திகிட்டு இருந்ததால என்னால குரல் கொடுக்க முடியல.. ஆனா நா அவன் கைய கடிச்சி வுட்டுட்டு அண்ணீன்னு குரல் கொடுத்தேன்.." என்று சொல்லி முடித்தாள்.

அந்தப் பெண்கள் தாங்களும் இதைப் போன்றே கடைக்கு வந்ததாகவும் அவன் தங்களை இதே போன்றே பிடித்து அடைத்ததாகவும் கூறினார்கள். தங்களுடன் யாரும் வரவில்லையென்பதால் தங்களைத் தேடி யாரும் வரவில்லை என்றனர்.

அந்தக்கடையில் அவர்கள் இருவரும் சுமார் இரண்டு மணி நேரமாக அடைபட்டிருப்பதாகக் கூறினார்கள்.

தங்களைக் காப்பாற்றிய நிரஞ்சனாவுக்கும் அவள் குடும்பத்தாருக்கும் நன்றி தெரிவித்தார்கள்.

முதல்கட்ட விசாரணைகள் முடிந்ததும் தமிழும் முகிலும் கயலும் காவல்துறையிடம் விடைபெற்றுக் கொண்டு நிரஞ்சனாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர். அந்தப் பெண்களையும் காவலர்கள் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

அவர்கள் நால்வரும் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தனர்.

இதற்குள் மதுரமும் வளர்மதியும் தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்துவிட்டு பதறியபடி தமிழுக்கும் முகிலுக்கும் பல முறை அழைத்து விட்டனர்.

அவர்கள், வீட்டுக்கு பத்திரமாக வந்து கொண்டிருப்பதாகச் சொன்ன போதும் பதைபதைப்புடன் வீட்டு வாசலிலேயே நின்றிருந்தனர்.

நிரஞ்சனாவைப் பார்த்த பின்னரே அவர்களால் நிம்மதிப் பெரு மூச்சு விட முடிந்தது எனலாம்.

உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாக வளர்மதி என்னவென்று விசாரிக்க, கயலும் முகிலும் நடந்ததை சுருக்கமாகக் கூறினர்.

"நல்ல வேளைம்மா ரஞ்சனி.. உனக்கு ஒண்ணும் ஆகல.. யப்பா கருப்பா.. நீதான் இந்த பொண்ண பத்திரமா காப்பாத்தியிருக்க.." என்று வாய் விட்டு நன்றி சொன்னாள் வளர்மதி.

பத்திரமாக வீடு வந்து சேர்ந்தும் நால்வருக்கும் இன்னும் படபடப்பு அடங்காமல் இருந்தது.

அவர்களை ஆசுவாசப்படுத்தி உணவு உண்ண வைத்தாள் மதுரம்.

திருமண ஏற்பாடு செய்ய ஊருக்குச் சென்றிருக்கும் சொக்கலிங்கமும் ஈஸ்வர பாண்டியும் தொலைக்காட்சி செய்தியைப் பார்த்துவிட்டு இவர்களுக்கு அழைத்து விவரம் கேட்க, அடங்கியிருந்த படபடப்பு மீண்டும் அதிகரித்தது.

"ய்யா.. தமிழு.. ஒண்ணுல்லய்யா.. புள்ளைய பயப்படாம இருக்க சொல்லு.. தலைக்கு வந்தது தலப்பாகையோட போச்சு.. அம்மாவ தாயத்து கயிறு கட்டிவுடச் சொல்லுய்யா.." என்று ஈஸ்வர பாண்டி சொன்னார்.

"சரி மாமா.. நா அம்மா கிட்ட சொல்றேன்.."

"நாங்க நாளைக்கு நைட் கௌம்பி வரோம்யா.." என்றார்.

"பாத்து பத்திரமா வாங்க மாமா.." என்று கூறி தமிழ் கைப்பேசி அழைப்பை துண்டித்தான்.

எல்லாரையும் சமாதானம் செய்து உறங்க அனுப்பினாள் மதுரம்.

நிரஞ்சனாவின் முகம் இன்னும் தெளியாததைக் கண்ட மதுரம் அவளுடன் துணைக்கு படுக்கிறேன் என்று சொல்ல, நிரஞ்சனா வேண்டாம் என்று மறுத்து தனியாகவே தன்னுடைய அறைக்குள் சென்று முடங்கினாள்.

அப்ப அவங்க என்னத் தேடி சென்னைக்கும் வந்துட்டாங்களா.. இப்ப என்ன செய்யப் போறேன்.. எப்டி தப்பிக்கப் போறேன்.. கடவுளே.. இன்னும் எவ்ளோ தூரம் என்ன ஓட வெக்கப் போற.. ஏதோ இங்க வந்தப்றம் என் வாழ்க்கைல வந்த பிரச்சனை எல்லாம் சரியாயிடுச்சி.. இனிமே எனக்காக நா வாழலாம்னு கொஞ்சம் ஆசப்பட்டேன்.. உடனேயே பிரச்சனைய ஜெட் வேகத்தில அனுப்பி வெக்கறியே.. இது நியாயமா..

அண்ணி, அண்ணன், அவரு எல்லாம் அந்தாள் மத்த பொண்ணுங்கள கடத்தி வெச்ச மாதிரி என்னையும் பிடிச்சிகிட்டான்னு நெனச்சிகிட்டாங்க.. ஆனா உண்மையில அந்த பொண்ணுங்கள மட்டும்தான் அவன் கடத்திருக்கான்.. ஆனா என்னை பிடிச்சது என்னைத் துரத்திட்டு வர பழைய பகைன்னு நா அவங்ககிட்ட சொல்லல.. கடவுளே.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. என்ன காப்பாத்து.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. என்று நினைத்துக் கொண்டே திரும்பிப் படுத்தாள்.

குழந்தை நன்றாக உறங்கிக் கொண்டிருக்க, அதைப் பார்த்தபடியே அவள் பயத்தோடு வெகு நேரம் விழித்திருந்தாள்.


எனக்கு ஒரு விடியலக் குடு.. என்று வேண்டிக் கொண்டே படுத்திருந்தவளுக்கு, காலை அடுத்த பிரச்சனை யூனியன் ரூபத்தில் வரப் போவது கண்டிப்பாகத் தெரியாது.


அவள் தமிழின் குடும்பத்திடம் என்ன விஷயத்தை மறைத்தாள்? ஏன் மறைத்தாள்? யூனியன் மூலமாக அப்படி என்ன பிரச்சனை வரப் போகிறது? எல்லாம் அடுத்தடுத்த அத்தியாயங்களில்..




- தொடரும்....
 
Last edited:
எவ்ளோ பிரச்சனை இந்த சின்ன பெண்ணுக்கு,, எப்போதான் தீருமோ
 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அன்னபூரணி தண்டபாணி டியர்
 
Last edited:
Top