Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Episode 1 - Unai Theendum Alaiyaai Naane

Advertisement

மறுபடியும் நம்ம நேத்ரா தக்காளி
பெரியசாமி கட்டுமரம்???
 
அலை – 1
சிவகங்கை மாவட்டம் புதூர் கிராமம் துரைச்சாமி இல்லம். உயர்ந்த மதில்சுவர்களுக்கு நடுவில் கம்பீரமாக வீற்றிருந்த அந்த இரண்டடுக்கு பெரிய வீட்டு வாசலில் கரும்பு தட்டை, மஞ்சள் கொத்து கட்டப்பட்டு மாவிலை தோரணங்களுடன் தைப்பொங்கல் திருநாளை கொண்டாட எதிர்நோக்கி இருந்தனர்.

வீடு முழுவதும் வெளியூரில் வசிக்கும் உற்றார் உறவினர்கள் அங்காளி பங்காளிகள் என நிரம்பி வழிய ஆட்டமும் பாட்டமும் உற்சாகமாய் திரியும் இளசுகள் மத்தியில் கடனே என அமர்ந்திருந்தான் ரிஷிவந்த்.
இத்தனை ஆர்ப்பாட்டமும் தன்னை ஈர்க்கவில்லை என்பதை போல இறுக்கமான முகபாவனையோடு தன் தாயை உறுத்துவிழித்தபடி பார்த்திருந்தான்.

அவனின் முறைப்பிற்கெல்லாம் அச்சம் கொள்ளாத சுமங்கலி வெகுநாட்கள் கழித்து சந்தித்த ஓரகத்திகள், அக்கா, தங்கைகள் அவர்கள் பிள்ளைகள் என அனைவரோடும் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தவர் மறந்தும் ரிஷியின் முகம் பார்க்கவில்லை.

அதில் இன்னும் ஏக கடுப்பிற்கு ஆளானான் அவர்களின் உத்தமபுத்திரன். தன் தாயை அழைக்க அவன் ஏக பிரயத்தனங்களை மேற்கொண்டும் பலனில்லாது போல பல்லைகடிக்கத்தான் முடிந்தது அவனால்.
துரைச்சாமி ஹாலிற்கு வர அத்தனை சலசலப்பும் அடங்கிப்போய் ஒரு அமைதி அலை பரவ மரியாதை நிமித்தமாக அனைவரும் எழுந்து நின்றனர். நடுவில் நின்றவர் அனைவரயும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தொண்டையை செருமியவர் வீட்டு பெண்களின் புறம் திரும்பி,

“மருமகள்களே, நாளைக்கு காலையில கோவில் பூசைக்கு தேவையான சரக்குகள் எல்லாம் எடுத்து பூஜையறையில வச்சாச்சா?...” என்று பொதுவாக கேட்டு சுற்றிலும் பார்வையை விட்டு வீட்டின் மூத்த மருமகளான திலகவதியிடம் நிறுத்த,
“ஆச்சுங்க மாமா. எல்லா வேலையும் முடிஞ்சது. நாளைக்கு பூசைக்கு எல்லாமே தயார் தான் மாமா. சரிபார்த்துட்டேன்...” என பணிவாக கூற,

“எல்லோரும் சாப்பிட்டாச்சா?...” மீண்டும் பார்வை வலத்தை தொடங்க,

“எல்லாமே பசியாறியாச்சுங்க மாமா...” என அடுத்த மருமகளான ரத்தினம்மாள் கூற,

“எல்லா வேலையும் ஆச்சுல. போய் உறங்கவேண்டியது தானே? இன்னும் என்ன இங்க பேச்சு?. காலையில எல்லோரும் நேரத்துக்கு கோவிலுக்கு கிளம்பனும். சூரியோதயத்துக்கு முன்னால பானை பொங்கனும். ஞாபகம் இருக்கட்டும்...” என கூறிவிட்டு ரிஷிவந்தை ஒரு பார்வை அழுத்தமாக பார்த்துவிட்டே சென்றார்.

அவர் சென்றதும் அனைவருமே ஒரு பெருமூச்சை ஆசுவாசமாக வெளியேற்ற ரிஷிவந்த் ஆயாசமாக உணர்ந்தான். மீண்டும் அமர்ந்த இடத்திலேயே அமர விளைய,

“போங்க. போங்க, போய் அவங்கவங்க ரூம்ல தூங்குங்க. அப்பா சொன்னத மறந்துடாதீங்க. நாம பட்டணத்துல பொழைச்சாலும் நம்ம மண்ணு வரைமுறைகளை சரியா பின்பற்றனும்...”

“பொழைக்க போன இடம் வேறா இருந்தாலும் நமக்குன்னு வழிவழியா வர பாரம்பரியம், கலாச்சாரத்தை நாம காப்பாத்தி நமக்கு பின்னால வரும் தலைமுறைகளுக்கான சீதனமா தரனும். புரியுதா?...” என்ற சிவராமன்,
அங்கிருக்கும் வயதுபிள்ளைகளுக்கு சொன்னாலும் கண்கள் மகன் ரிஷியையே கண்டனத்துடன் மொய்த்துக்கொண்டிருந்தன.

“என்னண்ணே நான் சொல்றது சரிதானா?...” என தன்னுடைய மூத்த அண்ணன்களிடம் மறக்காமல் கேட்டுக்கொண்டார்.
காரைக்குடி, புதுக்கோட்டையில் பெயர்பெற்ற கல்லூரிகளை திறம்பட நடத்திவரும் தன் தந்தையின் ஆங்கிலப்புலமை பற்றி எத்தனையோ முறை வியந்திருக்கிறான் ரிஷி.

யாரையும், எத்தனை பெரிய பதவியில் இருப்பவர்களையும் அஞ்சாமல் எதிர்கொள்ளும் தந்தையின் திறனையும் தைரியத்தையும் எண்ணி பெருமைகொள்ளாத நாளே இல்லை எனலாம்.

அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தந்தை சிவராமன் தாய், தகப்பன், அண்ணன், சொந்தங்கள் என வரும்போது தன்னுடைய உயரத்தையையும் பெருமைகளையும் விட்டு இறங்கி நின்று பேசுவதும் தந்தையிடமும், உடன்பிறந்த மூத்தவர்களிடமும் பணிந்து போவதையும் அவன் அறவே வெறுத்தான்.

தன் தந்தை இங்கு வந்ததும் தொலைந்து போகும் மாயம் இதுவரை அவன் அறியாதது. அவரை கட்டிவைக்கும் இந்த பாசத்தளைகளை அடியோடு வெறுக்கத்தான் செய்தான்.

ரிஷியை பொறுத்தவரை சிவராமனின் பாசம் என்பது தனிமனித சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிப்பதை போல. ஆனால் அவனின் தந்தைக்கோ அனைத்திற்கும் அப்பாற்பட்டது குடும்ப பற்றும் சொந்தங்களிடையே பகிரப்படும் பாசமும்.
தந்தையையே இந்நிலையில் காண விரும்பாதவனுக்கு தன்னையும் இந்த வலையில் அனைவரும் சேர்ந்தே பிணைக்கவிருப்பதை தடுக்கமுடியவில்லை. அதற்கு காரணம் தாய் சுமங்கலியும், தந்தை சிவராமனும்.
அனைவரிடமும் ஒரு எல்லையில் பழக நினைப்பவனுக்கு இந்த எல்லைகளற்ற அன்பு அலை மூச்சடைத்தது. வெளிவரும் வழி இருந்தும் சூழ்நிலை கைதியாக நிற்கவேண்டிய தன் இயலாமை அவதிக்குள்ளாக்கியது. வாய் மூடி மௌனியாக நடப்பவற்றை பார்த்திருந்தான்.

“நீ சொல்றது என்னைக்கு தப்பா இருந்திருக்கு ராமா? நம்ம அப்பா நமக்கு சொல்லிக்குடுத்ததை நாம நம்ம பிள்ளைகளுக்கு சொல்லி வளர்த்ததால தான் வெளியூர்ல வெளிநாட்டுல இருந்தாலும் தடம்பிறளாமல் நம்ம பிள்ளைங்க நம்ம பிள்ளைங்களாவே வளர்ந்திருக்காங்க...”

தம்பியின் பேச்சை மெச்சிக்கொண்ட அண்ணன் உசிதமணி பெருமையாக சகோதரனை அணைத்துக்கொண்டார். அவரின் அடுத்தவரான முருகானந்தமும், சிவராமனின் தம்பியான சிகாமணியும் புன்னகையுடன் பார்த்திருந்தனர்.
நான்கு உடன்பிறந்த சகோதரர்களும் ஒருவரை ஒருவர் தழுவி தங்கள் பெருமையை பறைசாற்றிக்கொண்டனர். என்னதான் ஒருவரை ஒருவர் எப்போதாவது பார்த்துகொள்வதாக இருப்பினும் இப்பண்டிகை நேரங்களில் யாரும் யாரையும் விட்டுக்கொடுக்காமல் இணைந்தே இருப்பார்கள்.
Nice
 
ரிஷியின் எரிச்சல் கரையை கடக்கும் அபாயத்தை அவனின் முகமே சுமங்கலிக்கு பறையடித்து காண்பிக்க சுதாரித்தவர் மூத்தார் மனைவி திலகவதியிடம்,

“அக்கா பேசிக்கிட்டே இருந்தா நேரமாகிட்டு இருக்குல. காலையில நேரத்தோட பொங்கல் வைக்கனுமே...” என

உத்தரவிற்காக காத்திருப்பதை போல கேட்டுவைக்க வேகமாக ரிஷி தாயின் அருகில் செல்ல முயல,

“அதுக்கென்னத்தா, இனி சோலி ஒண்ணுமில்லை. நாளைக்கு மறவாம ஐயா எடுத்துக்குடுத்த உடுப்பைத்தான் உடுத்தனும். நெனப்பிருக்குல...”என சொல்லி அனைவரையும் அனுப்பிவிட்டு சுமங்கலியையும் அழைத்துக்கொண்டு பூஜையறையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை மீண்டும் ஒருமுறை சரிபார்க்க சென்றார்.

அவர் சொல்லி சென்றது ரிஷிக்கும், அவனின் இளைய பெரியப்பா மகன் தினேஷிற்கும் என்பது அனைவருக்குமே வெட்டவெளிச்சம். ஆனாலும் யாரும் வாய் திறக்கவில்லை.

துரைச்சாமியின் குடும்பம் மிகவும் பெரியது. அங்காளி பங்காளி என அனைவருமே கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருபவர்கள். துரைச்சாமிக்கு ஒரு அண்ணனும் ஒரு தங்கையும் என அவ்வூரிலேயே ஒரே குடும்பகாம வசித்துவந்தனர்.

துரைச்சாமியின் தலைமுறை வரை அவ்வூரிலேயே தோப்பு, வயல் என பண்ணையம் செய்ய அவரும், அவர் அண்ணன் பெரியசாமியும் தலையெடுத்து பஞ்சு மில் என மெல்ல கால்பதிக்க ஆரம்பித்து அதை வெற்றியும் காண அவர்கள் பிள்ளைகள் படித்து ஆளுகொரு தொழிலில் சொந்த முயற்சியில் கால்பதித்துக்கொண்டனர்.

பெரியசாமி உடல்நலகுறைவால் இறந்துவிட அவருக்கு பின் அவர் மனைவி கோமதியும் அவருடனே காலமானார். மொத்த குடும்ப பொறுப்பும் துரைச்சாமியிடம்.

அவரின்றி ஒரு அணுவும் அசையாது அவ்வீட்டில். அவரின் சொல்லிற்கு மறுபேச்சு எழும்பாதென்பது அவ்வூரறிந்த உண்மை. பிள்ளைகள் அவர்களின் பிள்ளைகள் என வெளியூரிலும் வெளிநாட்டிலும் இருந்தாலும் பொங்கல் பண்டிகை என்றும் வரும் பொழுது அவ்வீட்டில் தான் கொண்டாடவேண்டும்.

அக்குடும்பத்தை பொறுத்தவரை அது எழுதப்படாத சட்டமும் கூட. இதுவரை மீறியவர் எவருமில்லை. பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே அனைவரும் வந்துவிட அன்றைக்கே குலதெய்வம் கோவிலுக்கு சென்று பூஜை போட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிடுவர்.

வந்ததும் துரைச்சாமி தன் உடன்பிறப்பான மகாதேவியின் வீட்டிற்கு தன் குடும்பம் சகிதமாக சென்று பட்டுபுடவை, பட்டு வேஷ்டி, ஒரு கட்டு கரும்பு, ஏழுவகை பழங்கள், எழுவகை கிழங்குகள், அரிசிப்பானை, அரிசிப்பெட்டி, பருப்பு வகைகள், நெய், மஞ்சள்கிழங்குகள், இவையனைத்தும் பொங்கலுக்கும் மூன்றுநாள் முன்பு கொடுத்துவிடுவார்.
இவர்களை வாசலில் வைத்து ஆரத்தி எடுக்கும் மகாதேவி அனைவரயும் வரவேற்று அன்றைக்கான கறிவிருந்தை தன் சொந்தங்களுக்கு நிறைவாக உபசரித்து வழியனுப்பிவைப்பார்.

காலங்காலமாக நடைபெறும் அவர்களின் பழக்கவழக்கங்களை, சகோதரிக்கும், மகள்களுக்கும் செய்யும் சீர்வரிசைகளை எந்த சூழ்நிலையிலும் அவர் விட்டுக்கொடுக்கவே மாட்டார்.

அதை தன் வாரிசுகளும் தன் வீட்டில் பிறக்கும் பெண்பிள்ளைகளுக்கு அந்த மரியாதையை குறைவின்றி செய்ய கற்றுக்கொடுக்கவும் செய்தார். இன்றுவரை தன்னுடன் பிறந்த சகோதரிக்கான சீரை தன் கையாலேயே கொடுத்தும் வருகிறார் துரைச்சாமி.

பிள்ளைகள், மருமக்கள், பேத்தி, பேரன்களுக்கும், துரைச்சாமியே தன் கையால் புது உடுப்புகளை தட்டில் வைத்து வழங்குவர். அதைத்தான் கோவிலுக்கு பொங்கல் வைக்க செல்லும் பொழுது உடுத்தியிருக்கவேண்டும்.
இது அவரின் பிள்ளைகள் தன் பிள்ளைகளுக்கு தரும் அன்பான கட்டளை. இன்றுவரை எந்த மீறல்களும் இல்லாமல் கட்டுக்கோப்பாக செவ்வனே சென்றுகொண்டிருக்கிறது துரைச்சாமியின் பரம்பரை.

விடிய வெகுநேரம் இருந்தும் கதவு படபடவென தட்டப்பட எரிச்சலுடன் கண்விழித்தான் ரிஷிவந்த்.

“ரிஷி, கதவை திறய்யா. ரிஷி தம்பி...” என்ற குரலில் ரௌத்ரமானவன்,

“ஆரம்பிச்சுட்டாங்க போல அவங்க சுப்ரபாதத்தை...” என்ற சன்னமான முணுமுணுப்போடு எழுந்து கதவை திறக்க அவனின் கோலம் கண்டு கொஞ்சம் ஆசுவாசமானார் சுமங்கலி.

“நல்லவேளைய்யா நீயே தயாராகிட்டே...” கோவிலுக்கு தயாராக கிளம்பியே வந்து கதவை திறந்த மகனின் பொறுப்பில் முகம் மலர்ந்தாலும் கொஞ்சம் சந்தேகமும் இருந்தது.

மகனின் முகத்தில் தூக்கக்கலக்கம் கொஞ்சமும் குறையாமல் கலைந்த தலையோடு நிற்பதை முறைத்து பார்க்க, அதை உணர்ந்தது போல ரிஷியும்,

“டவுட்டே வேண்டாம் மாம். நான் நைட்டே குளிச்சுட்டு இந்த ட்ரெஸ் போட்டுட்டுதான் படுத்தேன். அப்போதானே நீங்க எழுப்பினதும் அப்டியே கிளம்ப சரியா இருக்கும்...” என,

“ஐயோ ராமா...” தலையில் அடித்துக்கொண்ட சுமங்கலியை அசால்ட்டாக பார்த்தவன் முகம் கழுவ பாத்ரூம் சென்றான்.
“உனக்கு எத்தனை தடவை சொல்றது ரிஷி. அம்மான்னு கூப்பிடுன்னு. உன் தாத்தாவுக்கு கேட்டா வருத்தப்படுவாரு...” என சொல்ல,

“கேட்கட்டும். ஐ டோன்ட் கேர் மாம். நான் எப்படி உங்களை கூப்பிட்டு வளர்ந்தேனோ அப்டித்தான் கூப்பிடுவேன்...” என்று முகத்தை துவாலையில் ஒற்றி எடுத்தவன் அதை சுமங்கலியின் தோளில் போட்டுவிட்டு கண்ணாடியின் முன்பு சென்று தலைவார நின்றான்.

“இது என்ன பிடிவாதம் ரிஷி?...” கொஞ்சம் கவலையோடு கெஞ்சல் குரலில் தான் கேட்டார் சுமங்கலி.
“உங்க பிடிவாதத்துக்கு எந்தவிதத்திலும் என்னுடைய பிடிவாதம் இணையில்லை மாம்...” என்றவனின் முகன் களையிழந்து காணப்பட்டது.

மனம் பிசைய மகனின் முகத்தை பார்த்தவருக்கு இப்போது அவனிடத்தில் இலக்கம் காண்பித்தால் உடனே தலைமேல் ஏறிவிடுவான் என்பது நிச்சயம். கரையத்துடித்த மனதை இருக்கிப்பிடித்தார்.
“கிளம்பு ரிஷி...” கொஞ்சம் கண்டிப்போடு கூறி வெளியேறிவிட்டார்.
Nice
 
Top