Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Episode 10 - Unai Thenndum Alaiyaai Naane

Advertisement

அலை – 10

சிவராமனை அங்கே எதிர்பார்க்காத நேத்ரா அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தாள்.

“நாம இந்த வார்த்தையை சொல்லும் போதெல்லாம் இந்த மனுஷன் தான் வந்து நிக்கிறாரு. பாவம், யாரு பெத்த புள்ளையோ?...” என உச்சுக்கொட்டியபடி நேத்ரா சென்றுவிட்டாள். நேத்ராவிற்கு இன்னுமே அது ரிஷியின் தந்தை என தெரிந்திருக்கவில்லை.

சிவராமனுக்கு அதிர்ச்சியான அதிர்ச்சி. நேத்ராவை அவர் மறக்கவே இல்லை. மகன் விரும்பியதாக மகனுக்கு நெருக்கமாக நின்று தன் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய அவள் முகத்தை அவரால் எப்படி மறக்கமுடியும்?

அவருக்கு புரியவே இல்லை நேத்ரா எப்படி இங்கு வந்தாள்? என்று.

இதற்கே இப்படி மண்டையை போட்டு உடைத்துக்கொண்டிருந்தவருக்கு தன் மகன் அவளுடன் வம்பிழுத்துக்கொண்டிருந்ததை பார்த்திருந்தால்?

ஏதேதோ நினைத்தபடி சுமங்கலியிடம் வந்தவர்,
“ஏன் சுமா, இந்த வருஷமாவது உன் பையன் காவடியை தூக்க வந்திருக்கலாம்ல? வேணும்னே தானே இப்படி செய்றான்? அய்யாவுக்கு தெரிஞ்சா எவ்வளோ வருந்துவாரு?...”

தனது தந்தை என்ன நினைப்பாரோ என எண்ணி கவலையானவர் ஞாபகம் வந்ததை போல,
“என்னாச்சு சென்னை போன விஷயம்? உன்கிட்ட சொன்னானா?...” கூர்மையான பார்வையில் எதிர்பார்ப்பை கொஞ்சம் கலக்கவிட்டு சுமங்கலியிடம் கேட்க,

“ஹ்ம் சொன்னான். கோபப்படாம கேளுங்க. அவனுக்கு இந்த சம்பந்தத்துல சுத்தமா விருப்பம் இல்லை. அவன் நேராவே அந்த பொண்ணுவீட்ல பிடிக்கலை இஷ்டமில்லைன்னு சொல்லிட்டு வந்துட்டான்...” தயங்கி சொல்ல,

“என்ன? இவனா என்ன முடிவெடுக்கிறது? அய்யா ஒரு இடம் சொன்னா அது நிச்சயம் இவனுக்கு ஏத்ததா தானே இருக்கும். இவனுக்கு ஏன் இது புரியமாட்டிக்கு? எதுவும் ஏட்டிக்கு போட்டி...” எரிச்சல் மிகுந்து இருந்தது குரலில்.

“கொஞ்சம் பொறுமையா இருங்க. நானே அவன்கிட்ட பேசறேன்...”

“என்ன பொறுமையா இருந்து என்ன செய்ய? அதான் செய்யவேண்டியதை செஞ்சிட்டு வந்துட்டாரே உன் சீமந்த புத்திரன். என்ன ஆனாலும் சரி. நான் அவனை மும்பைக்கு அனுப்பவே மாட்டேன்...” தோளில் கிடந்த துண்டை உதறிக்கொண்டு எரிச்சலாக சென்றார்.

திலகவதி வந்து சுமங்கலியிடம் என்னவென கேட்க நடந்ததை விவரித்தார் சுமங்கலி.
“இவங்க பஞ்சாயம் என்னைக்கு தீருமோ? அதுக்காக புள்ளைக்கு விருப்பமில்லாம அங்கன புடிச்சு தள்ளவா முடியும்? வாழப்போறவன் அவன் தானே?. நீ கண்டுக்காத...”

“அதுக்கில்லைக்கா, ஏற்கனவே ரிஷியோட பேர் ஒரு பொண்ணு விஷயத்துல அடிபட்ருச்சு. வீட்ல எல்லோருக்கும் இப்போ தெரியலைனாலும் எப்பவுமே தெரியாமலேவா இருந்துடும். அது அவனோட எதிர்காலத்தை பாதிக்குமோன்னு...”

கலக்கமாக கூறியவரின் மனக்கண்ணில் காவேரியின் துவேஷப்பார்வை வந்து இன்னும் அவரின் கலக்கத்தை அதிகமாக்கியது.
காவேரி மூலமாகத்தானே ரிஷி இன்னொரு பெண்ணுடன் பேசி இருந்தது தெரிந்தது. அதனால் அவருக்கு கொஞ்சம் பயமும் கூட.

“பயப்படறயாக்கும்? நம்ம புள்ளை அம்புட்டு விளக்கம் சொல்லியும் உனக்கு நம்பிக்கை இல்லாம போச்சா?...”

“நம்பிக்கை இல்லையா? என் பிள்ளை மேலையா? என்ன வார்த்தை சொல்லிட்டீங்க அக்கா? இந்த உலகத்துல என் புருஷனுக்கு அடுத்ததா நான் நம்பிக்கை வச்சிருக்கிற ஆள் ரிஷி தான்...”திடனாக கூற,

“அப்புறம் ஏன் இந்த கவலை? விட்டுத்தள்ளு. பொண்ணு வீட்ல ஒன்னும் இவனை வேண்டாம்ன்னு சொல்லலையே. இவன் தானே சொல்லிட்டு வந்துருக்கான்...” என்றவர்,

“ஆகாத போகாத விஷயத்தை நினச்சுட்டு இருக்காம இதை பெரியவர்கிட்ட எப்படி சொல்றதுன்னு யோசிப்போம். வீட்டுக்கு போனதும் பேசுவோம். வா பூசைக்கு நேரமாச்சு...” அவரை இழுத்துக்கொண்டு திலகவதி சென்றார்.

ஒரு மரநிழலில் நின்று மொபைலை நோண்டிக்கொண்டிருந்த ரிஷியை, “அண்ணா வாங்க சாமி கும்பிட. அய்யா கூட்டிட்டு வர சொன்னாங்க...”

ரிஷியின் சித்தப்பா சிகாமணியின் மகன் அன்புமணி வந்து அவனை அழைக்க அவனை முறைத்த ரிஷி,
“ஏண்டா எத்தனை தடவை சித்தப்பாவை அப்பான்னு கூப்பிடுன்னு சொல்லிருக்கேன். அதென்ன அய்யா?...” அதட்டல் குரலில் சொல்ல,

“தினேஷ் அண்ணா கூட சின்னைய்யான்னு சொல்றாரே அண்ணா...” என்றவன் ரிஷியின் முறைப்பில் அடங்கி,

“அதெல்லாம் சரிவராது அண்ணா. நீங்க வாங்க. உங்களை கூட்டிட்டு வர சொன்னாங்க அய்யா...” ரிஷியின் கோபத்தை கண்டுகொள்ளாத குரலில் கூற,

“நீ என்னனுதான் வக்கீலுக்கு படிச்சியோ? நீயெல்லாம் ஒரு பேமஸ் லாயர். உன்னையெல்லாம் திருத்தவே முடியாது. நீ போ, எனக்கு ஒரு போன் கால் வரவேண்டியதிருக்கு. நானே வரேன்...” எனவும் அன்புமணி மனமில்லாமல் உள்ளே கிளம்பினான்.

அதே நேரம் காவேரி குடும்பமும் கோவிலுக்குள் நுழைய அங்கிருக்க பிடிக்காத ரிஷி கோவிலை விட்டு வெளியேறி அதை சுற்றி நடக்க ஆரம்பித்தான்.

என்றைக்கு தன் தாயையே அவள் உதாசீனம் செய்து கண்ணீரை வரவழைத்தாளோ அன்றிலிருந்து அவளின் முகத்தில் விழிப்பதற்கு கூட ரிஷிக்கு மனம் ஒப்பவில்லை.

அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தவன் பார்வையில் நேத்ரா விழ அவனின் சோர்ந்த மனதிற்கு ஏதோ இதம் சேர்த்தது அவளின் வளவள பேச்சு.

கோவிலை சுற்றி சிறு சிறு கடைகள் போடப்பட்டிருக்க அங்கே ஒவ்வொன்றை பற்றியும் கேட்டு அவர்களிடம் வாயடித்துக்கொண்டிருந்தாள்.

“இவ வாய் மட்டும் இல்லைனா...” என நினைத்து சிரித்துக்கொண்டவனுக்கு தன்னை நினைத்தே அவ்வளவு ஆச்சர்யம்.

“எப்போது பார்த்தாலும் எரிச்சலோடு அவளை திட்டி தீர்க்கும் தான் இன்று இலகுவாக அவளிடம் பேசிவிட்டேனே? அதுவும் சீண்டலுடன்...” என நினைத்தவன்,

“தக்காளி...” நானா பேர் வச்சேன் அவளுக்கு? அடடே ஆச்சர்யகுறி! தனக்கு தானே வியந்துகொண்டான் இதழ்களில் பூத்த குறுநகையோடு.

“ஹ்ம் அவளும் தக்காளி பழமாட்டம் தான் இருக்கிறா. கொஞ்சம் செவ செவன்னு. கொஞ்சம் லைட் பிங்க். ம்ஹூம் இவ கோபப்படும் போது இன்னொரு கலர். அது கொஞ்சம் ஆரஞ்ச் மிக்ஸிங்...” அத்தோடு தன் கற்பனைக்கு கடிவாளமிட்டவன்,

“ஹைய்யோடா ரிஷி, உனக்கு என்னாச்சு? நினைப்பெல்லாம் தறிகெட்டு ஓடுது. துரைக்கு தெரிஞ்சது துப்பாக்கிதான் மவனே. பேசாம வந்த வேலையை பார்...” புத்தி சத்தமில்லாமல் கத்தியை சொருக நிதர்சனத்தை உணர்ந்தான்.

ஆனாலும் நேத்ராவை பற்றிய சிந்தனையை விட்டு முழுவதுமாக வெளிவரமுடியவில்லை.

வீட்டிற்கு சென்றால் தேவையில்லாமல் ஏதாவது பேசி தலைவலி வந்துவிடும் என எண்ணியே அவன் நேராக கோவிலுக்கு வர உள்ளே நுழையும் போதே நேத்ராவை பார்த்துவிட்டான்.

இவளெங்கே இங்கே? என யோசனையோடு வர அதற்குள் அவள் நடத்திய களேபரமும் வாங்கிய மூக்குடைப்பும் கண்ணில் பட அடக்கமாட்டாமல் சிரிப்பும் பொத்துக்கொண்டு வந்தது.
Nice
 
“பாடினாலும் இல்லைனாலும் அவங்க பயப்படறதுல அர்த்தம் இருக்குல நேத்ரா. கரெஸ்க்கு சும்மாவே நாமன்னா கொஞ்சம் காண்டு தான். இன்னைக்கு வசமா சிக்கிருக்கோம். வச்சு செய்யபோறாரு...”

வனமலரும் இதையே கூற ராகினியும் ரோஷிணியும் அவளை வந்து ஒட்டினார் போல் நின்றுகொண்டனர்.

“ஒருவேளை நாம பண்ணின வேலை அவருக்கு தெரிஞ்சிட்டா?...” ராகினி எடுத்துக்கொடுக்க,
“ வாயை வைக்காதடி. அதெல்லாம் தெரியவே கூடாது...” மலர் சொல்லி,

“என்ன தெரியக்கூடாது? தெரிஞ்சிட்டா என்ன பன்றது? அதை யோசிங்க...” ரோஷிணி கூற,
“ஏண்டி பயப்படறீங்க? அதை கண்டுபிடிக்கிற அளவுக்கு கட்டுமரத்துக்கு ஏது மசாலா? அதுவும் இல்லாம இப்போ பயந்தா மட்டும் என்னாகிடும்? எல்லாமே மாறிடுமா?...”

நேத்ரா கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் பேச கொலைவெறி ஆகினர் மூவரும்.

“மாறுதோ இல்லையோ. நாம இப்போவே ஹாஸ்டல் கிளம்பறோம்...” ராகினி தங்களுடைய உடைமைகளை எடுத்துவைக்க,
“நான் வரமாட்டேன். நாளைக்கு இங்க கெடா வெட்டு திருவிழாவாம். கண்டிப்பா இருந்துதான் போகனும்னு ஆயா சொல்லிட்டாங்க. நீங்க வேணும்னா கிளம்புங்க. நான் நாளைக்கு ஈவ்னிங் தான் கிளம்புவேன்...”

பிடிவாதமாக சொல்லியவள் இழுத்து மூடி உறங்க விழைய அவளின் அலும்பில் தலைவலி தெறித்தது மற்றவர்களுக்கு.
“சொன்னா கேளேன் நேத்ரா. பிடிவாதம் பிடிக்காதே.ப்ளீஸ் டா...” கொஞ்சலும் கெஞ்சலுமாக ரோஷிணி அவளிடம் சென்று கேட்க ராகினியும் மலரும் கூட நேத்ராவை சூழ்ந்தனர்.

“இப்போ நாம கிளம்பினா மட்டும் அந்த கட்டுமரம் பேசாம விட்டுடுமா? நாளைக்கு போய் வாங்கி கட்டிக்கறதை ஒரு நாள் தள்ளிவச்சு வாங்கிப்போம். ஒன்னும் ஆகிடாது...”

நேத்ராவின் துணிச்சல் பேச்சில் மற்றவர்களும் கொஞ்சம் மனம் மாற அவர்களின் முகமாற்றத்தில் உற்சாகமான நேத்ரா,
“வந்ததும் வந்துட்டோம். நாளைக்கு ஒருநாள் எல்லாத்தையும் மறந்து ஹேப்பியா ஜாலியா இங்க என்ஜாய் பண்ணுவோம்?. என்ன சொல்றீங்க?...”

சில நொடி அமைதிக்கு பின் மூவரும் ஒன்றுசேர்ந்து நேத்ராவை கட்டிக்கொண்டு ஆடினர். மறுநாள் முழுவதும் அந்த ஊரையே சைந்தவியோடு சேர்ந்துகொண்டு ஒரு கலக்கு கலக்கிவிட்டு தான் அங்கிருந்து கிளம்பினர் பிரியாவிடையோடு.
நேத்ராவை சந்தித்த மறுநாள் காலேஜ் சென்ற ரிஷி அவள் வந்ததற்கான அறிகுறிகள் ஏதும் தென்படாததால் ஹாஸ்டல் வார்டனுக்கு அழைத்தவன் மாணவிகளுக்கு வரும் அலைபேசி எண்களை குறித்து வைத்திருக்கும் லெட்ஜரை எடுத்துவர செய்தான்.

காலர் ஐடி இருப்பதால் எந்த நேரம் யாருக்கு அழைப்பு வந்ததென்றும் அழைத்தது யாரென்றும் கேட்டு, வந்த எண்ணையும் லெட்ஜரில் பதிந்து வைப்பது வழக்கமான ஒன்று.

சைந்தவி கிளம்பிய அன்றும் நேத்ராவும் தோழிகளும் கிளம்பிய அன்றும் ஒரே எண்ணிலிருந்து ஹாஸ்டல் நம்பருக்கு அழைப்பு வந்திருக்க ரிஷிக்கு முகம் சிவந்து போனது கோவத்தில்.

அந்த அட்டண்டரை வரவழைத்து விளாசித்தள்ளிவிட்டான். முதல் நாள் சைந்தவியின் வீட்டிலிருந்து கால் வந்திருப்பதாக நம்பியதை கூட விட்டுவிட்டான்.

ஆனால் நேத்ரா கிளம்பிய அன்று அதே எண்ணிலிருந்து இரண்டு தடவை அடுத்த இரண்டு மணி நேரத்தில் வந்திருப்பதை கவனியாத அட்டண்டர் நேத்ராவின் நம்பரை எழுதிவைத்தும் கவனத்தில் கொள்ளாத அவரின் கவனக்குறைவு அவனுக்கு பெரும் எரிச்சலாக போயிற்று.

இனி கவனமாக இல்லையென்றால் வேலையை விட்டு நீக்கிவிடுவதாக எச்சரித்து மிரட்டியே அனுப்பிவைத்தான். தான் விசாரித்த விஷயம் பற்றி அப்போது யாரிடமும் சொல்லவேண்டாம் என்றும் சொல்லியே அனுப்பினான்.

அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை தீர்மானித்தவன் அன்றைக்கே பிரின்ஸிபால் ராணியம்மாவை அழைத்து நேத்ராவின் பெற்றோரை மறுநாள் வந்து தன்னை சந்திக்குமாறும், உறுதியாக வந்தே ஆகவேண்டும் என செய்தி அனுப்ப சொல்லி உத்தரவிட்டதும் தான் கொஞ்சம் ஆசுவாசமானான்.

“எடுத்தெறிஞ்சு பேசறதும் இல்லாமல் எப்படிப்பட்ட ஏமாற்றுத்தனம்? என்னிடமே கொஞ்சமும் பயமில்லாமல் பேசிட்டு சீட்டை கிழிச்சா கிழிச்சுக்கோன்னு எகத்தாளம் வேற...”

பெரும் அவமானமாக உணர்ந்தான் ரிஷி. நேத்ரா தன்னை ஜெயித்துக்கொண்டே செல்வதாக நினைத்தவனுக்கு அதைவிட தன்னை ஒரு பொருட்டாக எண்ணாமல் அலட்சியமாக நடத்தியதில் ரிஷியின் ஆண் கர்வம் அடிவாங்கியது.

“என்னனு நினைச்சிட்டு இருக்கா இந்த காலேஜ், என்னை பற்றிலாம். இருக்கட்டும் எப்படியும் நாளை வந்துதானே ஆகவேண்டும்...” மனம் கறுவியபடி விழி சிவக்க மறுநாளைக்காக காத்திருந்தான்.

முதல் நாள் இரவே அட்டண்டர் இவனுக்கு அழைத்து நேத்ராவும் மற்றவர்களும் ஹாஸ்டல் வந்து சேர்ந்த தகவலை சொல்லிவிட்டார். ம்ம் என்ற முணுமுணுப்போடு அதை உள்வாங்கிக்கொண்டான்.

காலையில் பரபரப்போடு கல்லூரி கிளம்பியவன் செல்லும் வழியெல்லாம் இன்று நேத்ராவின் பெற்றோர் வந்திருப்பார்கள். அவர்களிடம் என்ன பேசவேண்டும் என்பதை பலமுறை உள்ளுக்குள் உருப்போட்டுக்கொண்டே சென்றான்.

காலைநேர பரபரப்பிற்கு எந்த பஞ்சமும் இன்றி அக்கல்லூரி இயங்கிக்கொண்டிருக்க ஆனந்த் வேகமாக தன் வகுப்பறைக்கு சென்றவன்,
“நேத்ரா உன் பேரன்ட்ஸ் வந்திருக்காங்க...” என சொல்ல இருக்கையில் இருந்து எழுந்தேவிட்டாள் நேத்ரா.
“என்ன என்னோட அப்பாம்மாவா?...” சந்தேகமாக கேட்க,

“ஆமாம். நான் பார்த்தேன்...” உறுதிபட அடித்து கூறியவனிடம் பதில் பேசாது யோசனையானவள்,

“சரி விடு. எப்படியும் இன்னும் கொஞ்சநேரத்துல அதுவே தெரிஞ்சிடும்...” தோளை குலுக்கிக்கொண்டு அமர்ந்துகொள்ள,
“அவங்க கரெஸ் ரூம் கேட்டு போறதை பார்த்தேன்...” ஆனந்த் மீண்டும் சொல்ல,

“ஆஹா நேத்ரா இது அவர் வச்ச ஆப்பு தான் போல. என்னடி பண்ண?...” மலர் பதட்டமாக கேட்க,
“விடு அமேஸான், விடு. நீ எதுக்கு பதறுற? கட்டுமரம் எங்கம்மாவோட மண்டையை கழுவி முடிக்கட்டும். மத்ததை அப்புறம் பார்த்துப்போம்...”

கொஞ்சமும் அச்சமில்லாமல் ஒருவித இலகுதன்மையோடு அமைதியாக அமர்ந்துகொண்டாள் நேத்ரா. மற்றவர்களுக்குத்தான் தலைமுடியை பிய்த்துக்கொள்ளலாம் போல ஆனது.

ரிஷி ஒரு முக்கிய பைலில் மூழ்கி இருக்க பியூன் வந்து கதவை தட்டி உள்ளே வந்து,
“சார் நேத்ரா தங்கச்சியோட பேரன்ட்ஸ் வந்திருக்காங்க. நீங்கதான் வர சொல்லிருந்தீங்கன்னு சொன்னாங்க. அனுப்பட்டுமா?...” என ராசு விளித்த தங்கை என்ற வார்த்தைக்கு அவனை முறைத்தான்.

பின் தன்னுடைய இருக்கையில் இருந்து நிமிர்ந்து அமர்ந்த ரிஷி பார்வையில் கொஞ்சம் கடுமையை வரவழைத்து இறுகிய தோற்றத்திற்கு வந்து,
“ஹ்ம் வர சொல்லுங்க...” சொல்லி அனுப்பியவன் மீண்டும் அந்த பைலில் கவனத்தை திருப்பினான்.
“எக்ஸ்கியூஸ்மி ஸார்...” என்ற குரலில் நிமிர்ந்து பார்த்தவன்,

“இவங்களா?...” என அதிர்ந்து போய் தன்னுடைய இருக்கையில் இருந்து தானாகவே எழுந்து நின்றவனின் இறுக்கமான இதழ்கள் தானாகவே பிரிந்து,
“மாமா?... என முணுமுணுத்தது அதிர்வோடு..
அலை தீண்டும்...
Nice
 
Top