Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Episode 14 - Unai Theendum Alaiyaai Naane

Advertisement

AshrafHameedaT

Administrator
அலை - 14

ரிஷி சென்ற பின்னும் அங்கேயே அவ்விடத்திலேயே அமர்ந்திருந்த நேத்ராவிற்கு சுறுசுறுவென கோபம் பொங்கியது.

“இவனுக்கு மட்டும் எந்த செக்கும் மாட்டமாட்டிக்கே. ஒருநாள் இல்ல ஒருநாள் பெரிய ஆப்பா ரெடி பண்ணி கட்டுமரத்தை அலேக்கா தூக்கி உட்காரவச்சு ரத்தக்கண்ணீர் வடிக்க வைக்கலை நான் நேத்ரா இல்லை...”

வீம்பும் வீராப்புமாக உறுதிமொழி எடுத்துக்கொண்டவளின் முகத்தில் ஏகத்துக்கும் தீவிரம் கொட்டிக்கிடந்தது.

“என்ன செய்ய என்ன செய்ய?...”என எழுந்து இங்குமங்கும் நடந்துகொண்டே யோசித்தவள் மூளைக்குள் ஒன்றும் பிடிபடாமல் போக,

“ப்ச் ஆங், கட்டுமரம் என்ன கடல் தாண்டியா போக போகுது?. எப்போனாலும் வச்சு செஞ்சிடுவோம். அதுக்குன்னு இப்போவே மண்டையை போட்டு உடச்சிக்கனுமா?...”

தனக்குத்தானே கூறிக்கொண்டவள் தலை சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தில் திரும்ப மணியை பார்த்து அலறியபடி,

“ஐயோ அனய் கூப்பிட சொன்னானே?...” மீண்டும் மொபைலை எடுத்து அதன் பாகங்களை சேர்த்தபடி,

“இவன் பெரிய லார்ட்லபக்கு தாஸ். மீட்டிங்காம் மீட்டிங். உன்னை தெரியாதாக்கும்? ஜொள்ளு பார்ட்டி. நான் கூப்பிட்ட நேரத்துக்கு பேசாம அவனா ஒரு டைம் பிக்ஸ் பண்ணிட்டு வச்சுட்டானே?...”

பொருமோ பொருமென்று பொருமியபடி அவனுக்கு அழைக்க இரண்டாவது ரிங்கில் மறுபுறம் உயிர்பெற்றது.

“சொல்லுடா, ஏன் உன்னோட வாய்ஸ் அப்போ ரொம்பவே டல்லா இருந்தது? எனி ப்ராப்ளம்?...” என அக்கறையாக கேட்க,

“ஹைய்யோடா! இவ்வளோ சீக்கிரம் கேட்டுட்டியே?...” கேலியாக கேட்க,

“அதான் மீட்டிங்க்னு சொன்னேன்ல. அதுவும் உன் கால் அட்டென் பண்ணி சொன்னேன். இப்போவாச்சும் கேட்கேனேன்னு சொல்லு. இன்னும் எனக்கு வேலை முடியலை...” என அலுப்பாக சொல்ல,

“ஓவரா சீன போடாதே. இந்த நேத்ரா சீனுக்கே சீன் காமிக்கிறவ. என்கிட்டையே உன் ஓடாத படத்தை ஓட்ட பார்க்கறியா? மவனே மர்டர் தான் சொல்லிட்டேன். அப்படி ஒன்னும் உன் ஆபீஸ் கட்டிடத்தை கீழ இறக்கி வச்சுட்டு உன் கடமையை ஆற்ற உன்னை கூப்பிடலை. நான் வைக்கிறேன்...”

நேத்ராவின் குரலில் காரம் சற்று தூக்கலாக தெரியவே அனய் தான் தழைந்து போகவேண்டியதாகிற்று.

“அம்மா தாயே மன்னிச்சுக்கோ. தெரியாம சொல்லிட்டேன். நீ விஷயத்தை சொல்லு...” கெஞ்சாத குறையாக கேட்க,

“அந்த பயம் எப்பவும் உன் மனசுல இருக்கட்டும்...” என்றவள் போனால் போகுதென்பதை போல,

“ரொம்ப கெஞ்சி கேட்கன்னு தான் சொல்றேன். இன்னைக்கு ஆண்டாளும் ஆவின் பாலும் காலேஜ்க்கு வந்திருந்தாங்க...” அசட்டையாக நேத்ரா கூற,

“என்ன நிஜமாவா? என்னத்தை பண்ணிவச்ச? எதுவும் ப்ராப்ளமா?...” பதட்டமானான் அனய்.

“என்ன? என்ன என்ன பண்ணிட்டாங்க இங்க? நான் எதுவும் பண்ணலை. இங்க கட்டுமரம்னு ஒண்ணை கரெஸ் போஸ்ட்ல உட்கார்த்தி வச்சு என் உயிரை எடுக்கறாங்க...” வேண்டுமென்றே மூக்கை உறிஞ்சினாள்.

ரிஷியை சந்தித்ததிலிருந்து நடந்ததை ஒன்றுவிடாமல் கூற அனயால் சத்தியமாக சிரிப்பை அடக்கமுடியவில்லை. பொத்துக்கொண்டு வந்த சிரிப்பை சிரமப்பட்டு வந்த வழியே உள்ளே அனுப்பியவன்,

“நான் தான் மொபைலை யாருக்கும் தெரியாம மறைச்சு வச்சுக்கனும்னு சொல்லி தானே வாங்கி தந்தேன். உன்னை யார் ஊருக்கு சேவகம் செய்ய சொன்னா? இப்போ இதுக்கு வேற நான் வாங்கி கட்டனும்...” என பேசியவன்,

“ப்ச், சரி விடுறா. காலேஜ்னாலே கலாட்டா தான். இதெல்லாம் இல்லாம என்ன இன்ட்ரெஸ்ட் இருக்கும் இந்த லைப்ல. நேத்ரா சமாளிக்காததா?...” என அவளை ப்ரிட்ஜினுள் மொத்தமாக தூக்கி உள்ளே வைத்தான்.

அவன் கேலி செய்கிறான் என தெரிந்தாலும் நேத்ராவிற்கு அந்த போலியான குளுமை கூட பிடித்திருந்தது.

“இதை சொல்லத்தான் கூப்பிட்டிருந்தையா? நான் கூட கொஞ்சம் பயந்துட்டேன். ஓகே பை...” என சொல்லி விடைபெற முயல,

“அட அறிவுகெட்ட அனய் . கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? நான் ஒன்னும் இந்த மொக்கை கதையை சொல்ல கூப்பிடலை. அதுக்குள்ளே ஓவரா பறக்கற? என்ன உன் ட்ரெயினி ஷில்பா இன்னைக்கு செம ப்யூட்டியோ?. நல்லதுக்கில்லை மவனே...”

நேத்ராவின் எச்சரிக்கையில் இப்போதும் வெற்றிகரமாக அனய் தான் சரண்டர் ஆகவேண்டியதானது.

“சரி, சரி. வேலை இருக்கேன்னு சொன்னேன். என்ன கேட்கனுமோ வேகமா கேளு...” என்றவன் நாக்கை கடித்துக்கொண்டான்.

இதற்கும் கோபம் கொண்டு நேத்ரா மீண்டும் மரம் ஏறிவிட்டால் என்ன செய்வது என திருதிருத்து அனய் அமைதியாக,

“இந்த ஆண்டாள் என்கிட்டே ஒண்ணுமே சொல்லாம கிளம்பிட்டாங்க தெரியுமா? ஆனா மறக்காம எனக்கான அர்ச்சனை செவ்வனே நடத்திட்டு போய்ட்டாங்க...”

“என்ன ஒன்னும் சொல்லாம போனாங்க? அதான் திட்டிட்டு தானே போய்ருக்காங்க. இன்னும் வேற உனக்கு கேட்குதாக்கும். அம்மான்னாலே அரட்டல், மிரட்டல் தானே...”

“அந்த அரட்டல் மிரட்டல் கண்டிப்பு இது எல்லாம் உன்கிட்ட இல்லையே? என்கிட்டே மட்டும் தானே? உன்னை தான் மூத்த மகன்னு ரொம்ப கொஞ்சிக்கறாங்க...”

அவன் இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட இவளோ மீண்டும் மூக்கை உறிஞ்சிவிட்டு,

“இதுக்குத்தான் என்னை பேச வைக்காதேன்னு சொல்றேன். என்ன கேட்கறேனோ அதுக்கு மட்டும் பதில் சொன்னா போதும்...” என்றுவிட்டு,

“சரி சொல்லிட்டல. கேட்டுக்கறேன். அவ்வளோ தானே?...” என,

“ஹைய்யோ அதை சொல்லலை. நீ ஒரு நம்பர் குடுத்து மாப்பிள்ளைன்னு சொல்லி பேச சொன்னியே. அதை பத்தி கேட்டேன்...” என்று சொல்ல,

“ஒஹ் அதுவா? அந்த இடம் கேன்சல் ஆகிடுச்சு...” என்றவன் மறுபுறம் கேட்ட நேத்ராவின் சந்தோஷ கூச்சலில் கொஞ்சம் சந்தேகம் வலுக்க,

“நீ என்ன பேசின அவங்ககிட்ட?...” கொஞ்சம் குரலில் கடினம் மீண்டிருந்தது.

“நான் எதுக்கு பேசனும்?...” வீம்பாக கேட்க,

“அப்போ பேசவே இல்லையா? உன்கிட்ட என்ன சொல்லி நம்பர் குடுத்தேன்?...” காட்டமாக அனய் கேட்க,

“நீ குடுத்தா நான் பேசிடனுமா? யாருன்னே தெரியாதவங்கள்ட்ட எல்லாம் நான் பேசமாட்டேன். அதுவும் இல்லாம என்கிட்டே அவ்வளோ ஈஸியா பேசிட முடியுமா?...” அலட்டலாக பதிலளிக்க பல்லை கடித்தான் அனய்.

“இங்க பாரு அனய். நான் தான் பேசலையே தவிர. பேசாமலே ஒன்னும் இல்லை. நம்ம கூழ்வண்டி இல்ல. அவக்கிட்ட குடுத்து அவளை பேச சொன்னேன். அதுவும் உனக்காக தாண்டா...” அவனின் அமைதியில் தானாகவே கூற அப்போதும் அவன் எதுவும் பேசாமல் இருக்க,

“என்னால எல்லாம் அவன்கிட்ட பேச முடியாது. நான் என்ன கடலை போடவா நம்பர் வாங்கினேன். பிடிக்கலைன்னு சொல்ல தான். அதுவும் நான் பேசனும்னு நினைக்கலை. நீ பேச சொல்லி சொன்ன. எனக்கு தோணினதை நான் செஞ்சேன்...”

“இப்படியும் இருப்பாளா?...” என கோபம் கோபமாக வந்தது அனய்க்கு.

“நேர்ல கூட பார்க்காத ஒருத்தரை பிடிக்கலைன்னு யோசிக்காம சொல்லியிருக்கியே? இது மட்டும் அம்மாவுக்கு தெரிஞ்சா என்னவாகும்?. அவங்க என்னவோ அந்த மாப்பிள்ளையே வேண்டாம்னு சொல்லிட்டதா நினைச்சிட்டு இருக்காங்க...” என சொல்ல,

“ஏன் என்னை பத்தி யாருமே யோசிக்கலை? பொண்ணுகேட்டு வந்ததை பத்தி என்கிட்டே சொல்லலை. மாப்பிள்ளை யார் என்னனு எந்த விபரமும் எனக்கு தெரிவிக்கலை...” என்றவள்,

“நீ மட்டும் என்னவாம்? நீ கூட அந்த நம்பரை வாட்ஸ்அப் ல அனுப்பி இது உனக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை நம்பர். பேர் பெரியசாமின்னும், அவனோட படிப்பையும் போட்டு அவர்க்கிட்ட நேரம் கிடைக்கிறப்போ பேசிடுன்னு சொல்லி மட்டும் தான் அனுப்பின...”

“அதுக்கு மேல என்கிட்டே எந்த டீட்டயில்ஸும் குடுக்கலை. என்னை என்ன பண்ண சொல்ற?...”

அனய் பேசுவதற்கு சிறு இடைவெளி கூட கொடுக்காமல் படபடவென பட்டாசாய் பொரிந்து தள்ளினாள். அவளின் பேச்சில் அவன் தான் அயர்ந்து போனான்.

“இவளுக்கு மட்டும் பிறக்கும் போதே வாய் வாகா எல்லை வரைக்கும் வச்சிருக்காங்க. எனக்கு தங்கச்சின்னு சொன்னா எவனும் நம்பமாட்டான்...” என நினைத்தவன் தவறியும் வாய்விட்டு சொல்லவில்லை.

“மாப்பிள்ளை வீட்ல போட்டோ எதுவும் கொடுக்கலை நேத்ராக்குட்டி. எனக்கும் விஷயம் முழுசா தெரியாதுடா. ப்ளீஸ் புரிஞ்சிக்கோடா...”

அவளை மலையிறக்க தன் தலைக்கு மேல் மலைபோல் குவிந்திருந்த வேலையை ஒதுக்கிவைத்து தங்கையை தலையில் நிற்கவைக்க தாலாட்ட ஆரம்பித்தான்.

“ஹ்ம் ஹ்ம்...” என்ற முணங்கலில் “ஹப்பாடா” என ஆசுவாசமானது அனய்க்கு.

பின்னே நடு இரவில் கால் செய்து மூக்கால் அழுது தன்னுறக்கத்தை ஒப்பாரி வைத்தே ஓட்டிவிடுவாளே? அந்த பயம் தான் அவனுக்கு.

“அதுவும் அவன் பேரை பார்த்தியா பெரிய சாமியாம், பெரிய சாமி. எந்த ஊர் சாமியா இருந்தா எனக்கென்ன? நான் எதுக்கு அவனுக்கு பேசனும்?...”

“திரும்பவும் முதல்ல இருந்தே ஆரம்பிக்கிறாளே?...” என பீதியானது அனய்க்கு.

“உன் கோபம் நியாயம் தான். இன்னொரு தடவை மாப்பிள்ளை பார்க்கிறப்போ உன்கிட்ட அம்மாவையே பேச சொல்லி உனக்கு எல்லா டீட்டையில்ஸும் குடுக்க சொல்றேண்டா குட்டி...” என சமாதானம் கூற,

“பாப்போம் பாப்போம்...” என்றவளின் மிதப்பான பதிலில்,

“நல்ல வேளை அந்த சாமி இவக்கிட்ட மாட்டிக்கலை. எவன் சிக்கி சின்னாபின்னம் ஆகபோறானோ?...”

தன் தங்கைக்கு வரப்போகும் வருங்கால கணவன் மீது சக ஆண்மகனாய் பரிதாபம் கொண்டவன் நொடியில் தலையை உலுக்கிக்கொண்டு,

“ம்ஹூம், நான் ஒரு அண்ணன். இப்படி நினைச்சா என் தங்கச்சி வாழ்க்கை என்னாகறது? எவனா இருந்தாலும் சிக்கட்டும். சிக்கன் பிரியாணியோ? மசாலாவோ? நான் என் தங்கச்சிக்கு தான் சப்போர்ட்...” நேத்ராவின் அண்ணன் என நிரூபித்தான் அடுத்த நொடியில்.

“ஓகே விடு. அப்புறம், காலேஜ் ப்ரெண்ட்ஸ் எல்லாம் எப்படி இருக்காங்க?...” என நூல் விட,

“ஏன் கேட்கிற?...” தெரிந்துகொண்டே கேட்க,

“இல்ல சும்மா இருந்தா ஒரு ஹாய் ஹலோ...” என,

“இங்க பழையசோத்துக்கு பக்கவாதமாம். நீ ப்ரியாணிக்கே பாய் விரிச்சு உட்கார்ந்துட்ட. ஒன்னும் கிடைக்காது. ஓடிடு...” என தாளிக்க,

“இல்லைடா உன்னை நல்லபடியா பார்த்துக்க சொல்லலாம்னு தான் கேட்டேன். வேறொண்ணும் இல்லைடா...” என அசடு வழிய அவன் கூற,

“அடேய் நல்லவனே போய் பொழப்பை பாரு. கொஞ்சமும் பொறுப்பில்லாம ஆபிஸ் நேரத்துல உனக்கென்ன அரட்டை வேண்டிக்கிடக்கு? நான் மொபைலை ஆஃப் பன்றேன்...” அவனின் பதிலை எதிர்பாராது அணைத்து மொபைலை பார்ட் பார்ட்டாக பிரித்து அந்தந்த இடத்தில் வைத்தாள்.

“இன்னொரு முறை கால் பண்ணு பேசிக்கறேன் உன்னை...” என தன் மொபைலையே முறைத்தபடி வெறித்திருந்த அனய் தன் கேபினுக்குள் யாரோ வரும் அரவம் உணர்ந்து வேலையை கவனிக்கலானான்.

நேரத்தை நெட்டித்தள்ளிய நேத்ரா தன் தோழிகளின் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தாள். அவளுக்கு தெரியும் நேராக அவர்கள் மூவரும் தன்னை தேடி தன்னுடைய அறைக்கு தான் வருவார்கள் என்று.

எந்த ஒளிவு மறைவும் இல்லாத அவர்களுக்குள் நேத்ரா மட்டுமே இப்போது தனக்கும் ரிஷிக்குமான பனிப்போரை மறைத்திருந்தாள். அவனின் சீண்டல் முதல் தீண்டல் வரை எதையும் சொல்ல ஏனோ வாய் வரவே இல்லை.

இப்போது நினைத்தாலும் சிலிர்ப்பும் தகிப்புமாக அவனுடைய தீண்டல் அவளை இம்சித்துக்கொண்டு தான் இருந்தது. அதை அடியோடு வெறுத்தவள் மேலும் மேலும் அவன்மீது கோபத்தை வளர்த்துக்கொண்டாள்.

தன்னுடைய அலட்சியத்தை அலட்சியப்படுத்தி தன்னை நோக்கி முன்னேறும் அவனின் பாத சுவடுகளை என்ன முயன்றும் அழிக்கமுடியாமல் இவளை திணறடிக்கத்தான் செய்தான் கள்வனவன்.

தன்னை தோற்கடிக்கும் அவனின் பார்வைகளை எப்படி தோழிகளிடம் பகிர்ந்துகொள்வாள்? நேத்ராவாகிற்றே.

யாராகினும், எவராகினும், யாரிடமும் தனக்கு தலையிறக்கமாக போய்விடக்கூடாது என்ற ஈகோ அவளை எப்போதும் போல் இதிலும் ஆட்டிவைக்க மௌனியாகி ரிஷியை ஆட்டிவைக்க முடிவெடுத்தாள்.

நினைவுகள் மொத்தத்திலும் ரிஷியின் தாக்கமே அதிகமாக நிறைந்திருக்க எப்போதடா இதிலிருந்து விடுபடுவோம் என தலையை பிடித்துக்கொண்டாள்.

எத்தனை முயன்றும் நேத்ரா சென்றதும் வகுப்பை நிராகரித்து வரமுடியாத அவளின் தோழிகள் நொந்து நூலாகி திண்டாடி மாலை தான் விடுதிக்கு வரவேண்டியதாகிற்று.

“இதுக்குத்தான் மாஸ்டர் ப்ளான் நேத்ரா இருக்கனும்ன்றது. நம்ம என்ன செஞ்சும் வேலைக்காகலையே...” ராகினி புலம்பிக்கொண்டே வர,

“விடு விடு இன்னொரு நாள் இருக்கு எல்லோருக்கும்...” என கருவியபடி வனமலர் கைகளை முறுக்கிக்கொண்டாள்.

நேத்ராவை கண்டதும், “ஹேய்...” என தோழிகள் மூவரும் ஆராவாரத்துடன் கட்டிக்கொள்ள மூச்சு திணறி போனது நேத்ராவிற்கு.

“ஹைய்யோ விடுங்கடி. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக்கறேன்...” என கொஞ்சம் இலகுவாக அமர,

“என்னாச்சுடி. இன்னைக்கு கேம்பஸ் முழுக்க உன் பேச்சுதான் போ. ஏற்கனவே கரெஸ் உன் பேரன்ட்ஸ வர சொல்லியிருந்தது எல்லோருக்கும் தெரிஞ்சது. அதுக்கு ஏத்தது போல நீ அவங்களை பார்த்துட்டு வரப்போ ரொம்ப டல்லா வந்துட்டியா, அவ்வளோ தான் ஆளாளுக்கு கதை கட்டிட்டானுங்க...” மலர் சொல்ல,

“ஆமா நேத்ரா காலேஜ்ல கொசுவுக்கெல்லாம் கொடுக்கு முளைச்சிருக்கு. இதை இப்போவே பிடுங்கி எறிஞ்சிடனும். இதுவரை நம்ம மேல காண்டுல இருந்ததுக எல்லாம் ஆனானப்பட்ட நேத்ராவையே அடக்கின கரெஸ்னு ஒரே அவர் புகழ்...”

ராகினியின் சோக கீதத்தில் ஏற்கனவே எரிமலையென குமுறிக்கொண்டிருந்த நேத்ரா ரிஷியின் மீது தீரா கோபம் கொண்டாள்.

“சும்மா இருங்கடி. எரியிற நெருப்புல எண்ணையை ஊத்திட்டு. என்ன நடந்ததுன்னு கேட்காம உங்க இஷ்டத்துக்கு பேசறீங்க?...” மற்ற இருவரையும் அடக்கிய ரோஷிணி,

“நேத்ரா ஏதாவது சாப்ட்டியா? உன்னை பார்த்தாலே டயர்டா தெரியற. வா போய் கேண்டீன்ல ஏதாவது சாப்பிட்டு வருவோம். வந்து மத்ததை பேசிப்போம்...” என்று எழுப்ப நேத்ரா மறுத்துவிட்டாள்.

“நாங்களும் லஞ்ச் சாப்பிடலை நேத்ரா. ரொம்ப பசிக்குது...” என மலர் பாவம் போல் வயிற்றை தடவிக்கொண்டு சொல்லவும் அவர்கள் பால் நேத்ராவின் மனம் கனிந்தது.

“லெட்ஸ் கோ ப்யூட்டீஸ். யூ நோ எனக்கும் ரொம்ப பசிதான். கூப்பிட்டதும் கிளம்பிட கூடாதுன்னு கொஞ்சம் கெத்து காட்டினேன்...” என கண்ணடித்து கூறி வலவலத்துக்கொண்டே சாப்பிட கிளம்பினாள் தன் தோழிகளுக்காக.

ஆனாலும் மனதிற்குள் புகைந்துகொண்டுதான் இருந்தாள் நேத்ரா இதுவுமே ரிஷியினால் என்று.

------------------------------------------------------------------------

கதவின் முன் நின்றிருந்த ரிஷியை சற்றும் எதிர்பாராத பாலகிருஷ்ணன் அவனை உள்ளே அழைப்போமா வேண்டாமா என்னும் யோசனையில் ஆழ்ந்துவிட ஆண்டாள் தான் திகைப்பை வெளிக்காட்டாமால்,

“உள்ள வாங்க தம்பி...” என அழைத்தார்.

“எப்படியடா சமாளிக்க போகிறோம்?...” என்று ரிஷியின் தவித்த மனதில் அப்போதுதான் சிறு நம்பிக்கை விதை முளைவிட தொடங்கியது.

மாமியார் மனதை கரைத்துவிடலாம் என பேராசையோடு புன்னகை முகமாக உள் வந்தவன் கொஞ்சமும் சங்கோஜமின்றி அங்கிருந்த சோபாவில் அமர்ந்துவிட்டான்.

அவனின் உரிமையான பார்வையும் புன்னகை முகமும் இருவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

தங்களுடைய முதல் சந்திப்பில் கூட இத்தனை இலகுவாக அவன் இல்லை என்றதை நினைவு கூர்ந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

ஓரளவிற்கு அவர்கள் யூகித்து தான் இருந்தனர் ரிஷியின் திடீர் வருகையின் காரணத்தை.

எப்படி இருந்தாலும் அவனின் எண்ணம் நிறைவேறாது என்று சொல்லிவிடவேண்டும் தாங்கள் என பார்வையிலேயே தங்கள் எண்ணங்களை பரிமாறிக்கொண்டனர் அந்த தம்பதிகள்.

இதை அறியாத ரிஷியோ தன் காதல் கைகூடிவிடும் என்ற சந்தோஷத்திலும் தன் காதலியை அடைந்தே தீரவேண்டும் என்ற தீவிரத்திலும் அவர்களிடம் பேச்சை ஆரம்பித்தான்.



அலை தீண்டும்...
 
:love::love::love:

காது நொய்ங்குது நேத்ரா பேச்சை கேட்டு.....
இருந்தாலும் இந்த ரிஷிக்கு அவள் தான் வேணுமாம்.....

ஒன்னும் சொல்றதுக்கில்லை......
 
Top