Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Episode 22 - Unai Theendum Alaiyaai Naane

Advertisement

அலை – 22

ரிஷி சென்ற சிறிது நேரத்தில் பியூடீஷியன் வந்து மீண்டுமாய் நேத்ராவை சிறிது அலங்கரித்தவளை அவளின் சிவந்தவிழிகளையும் கன்றி இருந்த இதழ்களையும் ஒரு நிமிடம் உற்று நோக்கவைக்க அவளிடம் என்னவென நேத்ரா பார்வையாலேயே வினவினாள்.

நேத்ரா கேட்ட தொனியே அப்பெண்ணை வாய்திறக்கவிடாமல் ஒன்றுமில்லை என தலையசைக்க வைத்தது.

பத்தே நிமிடத்தில் நேத்ராவை தயார் செய்தவள் அறையை விட்டு வெளியேற சரியாய் காவேரியும் சுமங்கலியும் வந்துவிட்டனர்.

காவேரியின் சினேகபார்வையில் ஒரு புன்னகையை அவளுக்கு சிந்தியவள் சுமங்கலியை பார்த்து, “அத்தை...” என்று எழ,

“அத்தை உங்களுக்கு பொண்ணு இல்லைன்ற குறையை தீர்க்க உங்க மகன் அழகான மருமகளை உங்களுக்கு பார்த்து குடுத்துட்டார்...” என்றவள் நேத்ராவிடம் திரும்பி காலில் விழு என்பதை போல சைகை காண்பிக்க நேத்ராவும் காவேரியை ஒரு நன்றி பார்வை பார்த்து சொன்னபடி செய்தாள்.

“இருக்கட்டும்மா. நல்லா இரு. எத்தனை முறை கால்ல விழுவ? என் பையன் உன் வீரதீர பிரதாபங்களை எல்லாம் சொன்னான். இன்னைல இருந்து நாம ப்ரெண்ட்ஸ்...” நேத்ராவின் கையை பிடித்துக்கொண்டார் சுமங்கலி.

நேத்ராவிற்கு தான் மயக்கம் வரும் போல ஆனது. பின்னே அவள் தான் முன்பே சுமங்கலியை காலேஜில் வைத்து பார்த்திருக்கிறாளே. அங்கே அவரின் ஆளுமை என்ன? கம்பீரம் என்ன? எத்தனை முறை அவரை பார்த்து வியந்து வாயை பிளந்திருக்கிறாள்.

தன்னிடம் சிறுபிள்ளை போல பேசும் சுமங்கலி அவளுக்கு புதிதாய் தெரிய வாய்விட்டு கேட்டும் விட்டாள்.

“அது காலேஜ். என்னோட போஸ்டிங்ல நான் அப்படித்தான் இருந்தாகனும். ஆனா இது நம்ம குடும்பம். உனக்கு முதல்ல நல்ல ப்ரெண்ட். அடுத்து அம்மா...”

“அப்போ மாமியாரா எப்போ இருப்பீங்க ப்ரெண்ட்?...” என கண்ணடித்து கேட்டவள் சுமங்கலியிடம் மிக இலகுவாக ஒட்டிக்கொண்டாள்.

“மாமியார் ரோல் ப்ளே பண்ணவும் ஒரு இடம் இருக்கு. கண்டிப்பா அங்க நான் உன் மாமியாரா மட்டும் தான் இருப்பேன். இங்கையுமே நாம நம்ம வீட்ல இருக்கும் போதுதான் இப்படி...” என்று புதிர் போட,

“அது என்ன இடம் அத்தை?...”

“புதூர் பெரியவீடு...” காவேரியும் சுமங்கலியும் கோரஸாக சொல்ல,

“ஆஹாங்...” பேசிக்கொண்டே அறையை விட்டு கீழிறங்கி மூவரும் மேடையை நோக்கி வந்துகொண்டிருந்தனர் சாவாகாசமாக.

“போக போக நானே உனக்கு எல்லாம் கத்து தரேன்...” என்ற சுமங்கலியின் கையை பிடித்துக்கொண்டாள் நேத்ரா.

“அடடா கூட்டணி கூடிருச்சு போலையே? வளையம் பெருசாகிட்டே போகுதுடா ரிஷி. அலார்ட் அலார்ட்...” என சொல்லிக்கொண்டவன் சுமங்கலியிடம் என்னவென கேட்க அவர் கண்டுகொள்ளவே இல்லை.

“தக்காளி அப்போ விட இப்போதான் சும்மா தாறுமாறா இருக்க. மனசுக்குள்ள கன்னாபின்னான்னு தோணிவைக்குது. பேசாம நாம இப்படியே ஹனிமூன் கிளம்பிடுவோமா?...” என வம்பிழுக்க அவனை முறைத்து திரும்பிக்கொண்டாள்.

“ம்ஹும் உனக்கு வாய்ச்சது அவ்வளோதண்டா ரிஷி...” என அவன் விட்ட பெருமூச்சில் தட்டு தாம்பாளங்கள் பறக்காமல் தப்பித்தது.

அடுத்தடுத்து உறவினர்கள் நண்பர்கள் என மாற்றி மாற்றி வந்துகொண்டே இருக்க மதியத்தை நெருங்கிவிட்டது.

நேத்ராவிற்கு வேற பசி கிள்ளியெடுக்க முன்னால் அடுக்கப்பட்டிருந்த தட்டுகளில் பழங்கள் ஸ்வீட்ஸ் என அனைத்தும் அவளை பார்த்து கெக்கலிப்போடு சிரிப்பதை போல தோன்ற கடுப்பாகிவிட்டாள்.

“இன்னும் ஒரு டென் மினிட்ஸ்டா நேத்ரா. சாப்பிட போய்டலாம்...” என ரிஷி சொல்ல சலித்துக்கொண்டாள்.

அதே நேரம் மொபைலில் அவனுக்கு அழைப்பு வர அடுத்த ஐந்தே நிமிடத்தில் சாப்பிட அழைத்துசென்றவன் வேகமாக உண்டுவிட்டு அவளுக்காக காத்திருக்க அவளோ நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு உணவையும் ரசித்து உண்டுகொண்டிருந்தாள்.

“நேத்ரா நாம வெளில போறோம். சீக்கிரம் சாப்பிடு...” என விரட்ட அவனின் முகத்தில் இருந்த டென்ஷன் அவனை சோதிக்காமல் கடகடவென அனைத்தையும் விழுங்க வைத்தது.

உண்டு முடித்து வெளியில் வரும் பொழுதே சிவராமனும் அன்பும் வாசலில் காரில் காத்திருந்தனர். இவர்களும் இணைந்துகொள்ள நேராக நாயகியம்மாவை அனுமதித்திருந்த மருத்துவமனையை நோக்கி சென்றனர்.

நாயகியம்மாவிற்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்க வெளியில் வந்த டாக்டரிடம் விசாரித்தார் சிவராமன்.

“டாக்டர் அம்மாவுக்கு என்னாச்சு? இப்போ எப்படி இருக்காங்க?...” பதட்டத்தோடு கேட்க நேத்ராவிற்கு ஒன்றும் புரியவில்லை.

“திடீர்னு மூச்சுத்திணறல் வந்துருச்சு. அதான் இன்பார்ம் பண்ணினோம். இப்போ நத்திங் வொரி. நீங்க போய் பார்க்கலாம். ஆனா டிஸ்டர்ப் செய்யாதீங்க. மயக்கத்துல இருக்காங்க...” என சொல்லி கிளம்ப அனைவரும் உள்ளே சென்றனர்.

அவரிடம் ஆசிர்வாதம் வாங்கியவர்கள் சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு கிளம்ப துரைச்சாமியும் அன்பும் அங்கேயே இருந்துகொண்டனர். ரிஷியின் குடும்பம் அன்றே காரைக்குடிக்கு செல்ல மறுநாள் நேத்ரா, ரிஷியை அழைத்துவர காவேரியையும் மனோஜையும் மட்டும் விட்டு சென்றனர்.

மாலை நேராக நேத்ராவின் வீட்டிற்கு வந்துவிட பால் பழம் சடங்குகள், உறவினர்கள், அக்கபக்கத்தினர் வருகை என நேரம் கிடுகிடுவென பறந்தது. இரவும் கவிழ அனைவரும் சாப்பிட்டு முடித்து உறங்குவதற்கு ஆயத்தமாகினர்.

நேத்ராவிற்கு தான் ஒரே குழப்பமாக போனது. ரிஷியை தேடினாள் அவள். அவன் கண்ணிலே சிக்காமல் போக,

“நைட்டும் வந்தாச்சு. என்ன என்னக்கு எந்த இன்ஸ்ட்ரக்ஷனும் இல்லை. என்னதான் நடக்குது?...” யோசனையோடே தன்னறைக்குள் செல்ல அது எப்போதும் போலவே இருந்தது.

“இன்னைக்கு எனக்கு கல்யாணம் முடிஞ்சது தானே? அப்பறமும் ஏன்?...” அறையின் நீள அகலங்களை அளந்துகொண்டே நடைபயில கதவு திறக்கும் ஓசை கேட்டது.

ஆர்வமாய் ரிஷியாகத்தான் இருக்கும் என நிமிர்ந்து பார்க்க அங்கே காவேரி வந்துகொண்டிருந்தாள் ஒருவித நமுட்டுசிரிப்போடு.

“என்ன மேடம் யாரையோ எதிர்பார்த்து யாரோ வந்து நிக்கிறாங்களேன்னு கடுப்பாகிட்டீங்க போல?...” நேத்ராவை சீண்ட,

“ச்சே ச்சே நான் சும்மா தான். ஒண்ணுமில்லையே. எனக்குத்தான் தெரியுமே நீங்க தான் வருவீங்கன்னு...” பூசி பேசினாள்.

“ஆஹா எனக்கே இப்போதான் தெரியும். எனக்கு முன்னமே உனக்கு தெரியுமா என்ன?...” என்றவளை விட்டுடேன் என்பதை போல பாவமாக பார்த்தாள் நேத்ரா.

“சரி சரி, இன்னைக்கே ரொம்ப ஓட்டினா பயந்துக்குவ. நாளைக்கு மிச்சத்தை வச்சிக்கறேன். உன் பெட்ல நான் தூங்கலாம் தானே?...”

“அச்சோ இதென்ன கேள்வி? வாங்க எனக்குமே தூக்கம் வந்திடுச்சு...” முகத்தின் தவிப்பை காட்டாமல் இருக்க பிரயத்தனப்பட்டுக்கொண்டே கட்டிலில் படுத்துவிட்டாள்.

“அப்போ இது வேண்டாமா?...” என்றவளை திரும்பி பார்க்க காவேரியின் கையில் புது மொபைல் பளிச்சிட்டது.

“மாமா லைன்ல தான் இருக்காங்க. நீ பேசு. மொபைலும் உனக்குத்தான்...” என கொடுத்துவிட்டு பாத்ரூம் சென்றுவிட,

“இவ்வளோ நேரமும் இவன் நான் பேசினதையெல்லாம் கேட்டுட்டா இருந்தான்?...” மீண்டும் மட்டுப்பட்டிருந்த கோபத்தில் காரம் ஏற,

“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க?...” என கத்திவைத்தாள்.

“உன்னைத்தான்னு சொன்னா அது ஓல்ட் டயலாக்கா இருக்கும்டா தக்காளி. ஆனா அதுதான் உண்மை. இன்னைக்கு என்னை தாளிக்கனும்னு நீ கரண்டியோட காத்திட்டு இருப்பன்னு எனக்கு தெரியும்டா. ஆனா விதி சதி பண்ணிடுச்சு பாரு...”

“விதின்னு சொல்லாதீங்க. எல்லாம் நீங்க தான்...” மாலையில் இருந்து அவனிடம் எதுவும் பேசமுடியாத ஏமாற்றம் கடுகாய் பொரியவைத்தது.

“சத்தியமா இல்லைடா தக்காளி. சாந்தி சடங்கு எப்பவும் எங்க பரம்பரை வீட்ல நடக்கிறதுதான் வழக்கம். சோ நாளைக்கு டைம் பிக்ஸ் பண்ணிட்டாங்க. என்னை ரொம்ப தேடின போல?...” குரலில் குறும்பு கூத்தாட,

“இல்லவே இல்லை. தேடவே இல்லை...” முறுக்கிக்கொண்டாள்.

“ஆமா நீ தேடவே இல்லை. நானும் பார்த்தேன்...” என சொல்லி பெரிதாக சிரித்து,

“ஓகே நீ தூங்கு. நாளைக்கு எர்லி மார்னிங் நாம கிளம்பனும். அப்போ பேசலாம். பை. ஸ்வீட் ட்ரீம்ஸ்...” என்க அதற்குள் வைக்கிறானே என்று பேச்சை வளர்க்க,

“நான் தூங்கனுமா வேண்டாமான்னு நீங்க சொல்லாதீங்க. எனக்கு தெரியும். இதுல ஸ்வீட் ட்ரீம்ஸ் வேற...” காவேரியை கருத்தில் கொண்டு கொஞ்சம் சத்தத்தை குறைத்து அடக்கி வாசித்தாள்.

“கண்டிப்பா நீ இன்னைக்கு தூங்கி தான் ஆகனும் தக்காளி. இன்னைக்கு நீ தூங்கி ஸ்வீட் ட்ரீம்ஸ் பார்த்தாதான் தான் உண்டு. நாளைக்கு அதுக்கு டைம் இருக்காதுடி. நான் குடுக்கவும் மாட்டேன்...” சன்னமான சிரிப்போடு.

அவன் கூறியதன் அர்த்தம் முதலில் புரியாமல் பின் மூளை சரியான அர்த்தத்தை எடுத்துகொடுக்க ஏகத்துக்கும் இவளின் பிரஷர் எகிறியது.

“யூ யூ யூ...” என அவனை திட்டுவதற்கு வார்த்தைகள் சிக்காமல் திண்டாட வாய்விட்டு சிரித்தவன்,

“ஹா ஹா ஹா. யூ, ஐ லவ் யூ தக்காளி...” என சொல்லி கட் செய்திருந்தான்.

தொடர்பு அறுந்திருந்த கைபேசியை தன் தலையில் தட்டிக்கொண்டவளின் முகம் வெட்கத்தில் ஜொலித்தது.

“ராஸ்கல் என்ன வாய்?. என்ன வாய்? ஸ்வீட் ராஸ்கல்...” என நினைத்து தனக்குள் சிரித்துக்கொண்டாள்.

“நான் வெளில வரலாமா?...” என்றபடி பாத்ரூம் கதவை தட்டி காவேரியும் வந்துவிட சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவர்கள் எப்பொழுது உறங்கினார்களோ அதிகாலையிலேயே ஆண்டாள் வந்து எழுப்பிவிட அரக்க பரக்க குளித்து கிளம்பினார்கள்.

ஒரு காரில் ரிஷியும் நேத்ராவும் மட்டும். ரிஷியின் ஏற்பாடே.

இன்னொரு ஆம்னி வேனில் நேத்ராவின் பெற்றோர், அனய், தோழிகள், உறவினர்கள் சிலர் என கிளம்பினார்கள்.

தூக்கத்திலேயே எழுந்து தூக்கத்திலேயே குளித்து காரில் ஏறியதும் தூங்கியே போனாள் நேத்ரா. உடன் யார் யார் வருகிறார்கள் என கவனிக்கும் நிலையில் கூட இல்லை அவள். அந்தளவிற்கு வெகு நாட்களுக்கு பின் அரவணைத்துக்கொண்ட தூக்கத்தை உதறமுடியவில்லை நேத்ராவால்.

மனைவியவள் அமர்ந்திருந்த சீட்டை தூங்குவதற்கு வாகாக ரிஷி சாய்த்து சீட் பெல்டையும் போட்டுவிட்டு காரை கிளப்பினான்.

கார் சீரான வேகத்தில் சென்றுகொண்டிருக்க இடையிடையில் நேத்ராவை திரும்பி பார்த்துக்கொண்டான். அவளாக எழும்பும் வரை எழுப்பவே இல்லை.

இடையில் காலை உணவிற்கென காரை நிறுத்த அப்போதுதான் கண்விழித்தாள் அவனவள். உறக்க கலக்கத்தில் கண்களை தேய்த்துவிட்டு எங்கிருக்கிறோம் என பார்த்து இறங்க ஆண்டாள் அவளை நோக்கி வந்தார்.

“சாப்பிடலாம் வா நேத்ரா...” என அழைக்க ரிஷியை திரும்பி பார்த்தால் அவன் மறுபுறம் இருக்கவில்லை.

“மாப்பிள்ளை அங்கே இருக்கார். உன்னை அழைச்சிட்டு வர சொன்னார். வா போகலாம்...” என்று சொல்ல அவருடன் சென்றவள் ரிஷியின் அருகில் சென்று அவளாகவே அமர்ந்துகொண்டாள்.

அமரும் பொழுது சரியான இடி வேறு அவனுக்கு. அவளின் செய்கையில் சிரிப்பு வர இன்னும் உள்ளே தள்ளி அவள் நன்றாக அமர இடம் விட்டு நகர்ந்தான். ஆனாலும் முகத்தில் மலர்ச்சியையும் தாண்டிய ஒரு களை.

பொதுவாக பேசியபடி அனைவரும் சாப்பிட்டு கிளம்ப காரில் ஏறிய நேத்ராவும் ஒருவித அமைதியிலே இருந்தாள். அரைமணி நேரம் பொறுத்துப்பார்த்தவன்,

“தக்காளி என்ன வாயே திறக்கலை? என்னாச்சு நேத்ரா?...” அவளின் கை பற்றி கேட்க,

“எனக்கென்ன? நான் நல்லா தான் இருக்கேன்...” அவளின் வெடுக்கென்ற விட்டேற்றியான பதிலில்,

“ஹ்ம் வொய்ப் கோபமா இருக்கீங்களா?...” என்றவன் காரை கொஞ்சம் நிழலாக பார்த்து ஓரங்கட்டி நிறுத்திவிட்டு மொபைலை எடுத்து,

“மாமா, நீங்க முன்னாடி போங்க. நாங்க ஒரு டென் மினிட்ஸ்ல ஜாயின் பண்ணிக்கறேன். உங்களோடவே ரீச் ஆகிடுவோம். நோ நோ. நோ ப்ராப்ளம் மாமா. ஹ்ம்...”

மொபைலை வைத்து நேத்ராவின் புறம் பார்க்க அவள் இவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

தன்னுடைய ஸீட்டில் நன்றாக சாய்ந்து அமர்ந்தவன் அவளின் வலது கையை பிடித்துக்கொண்டே,

“இந்த விஷயத்தை இப்போவே பேசி முடிச்சிடுவோம். நம்ம வீட்டுக்கு நாம வாழ்க்கையை தொடங்கற இடத்துக்கு நீ எந்த சஞ்சலத்தோட வரதையும் நான் விரும்பலை நேத்ரா. நீ அங்க முழுமனசா சந்தோஷமா வரனும்னு பிரியப்படறேன்...”

“அட போடா, நெஞ்சை முட்டும் சந்தோஷத்துல தானே என்னால பேசக்கூட முடியாம இப்படி இருக்கேன். இவன் வேற ஓவரா ஸீன் போடுவான்...” மனதிற்குள் அவனை அலுத்துக்கொண்டாள்.

“ஐம் ஸாரி நேத்ரா. இந்த ஒன் இயரா நீ எவ்வளோ கஷ்டப்பட்டிருப்பன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. பட் என்னோட சுட்சுவேஷன்...” என்றவன் ஆரம்பத்திலிருந்து அனைத்தும் சொல்லி முடிக்க அப்போதும் அப்படியே தான் இருந்தாள்.

“ஏதாவது பேசேண்டி...” அப்போதும் அவள் மௌனக்குடை பிடிக்க அவளின் வார்த்தைகளுக்கு காத்திருக்க பொறுமையில்லாமல்,

“உனக்காக உன்கிட்ட இருந்து நான் விலக விலக உனக்குள்ள நான் நெருக்கமாகிட்டே போற அந்த பீல் என்னை ஒவ்வொரு நிமிஷமும் வதைச்சுட்டே இருந்துச்சுடி. என்னை எனக்குள்ள நானே இளைப்பாற முடியாமல் தவிச்ச நேரங்கள் எத்தனையோ நேத்ரா...”

“ப்ளீஸ் ஏதாவது பேசு...” அவனின் கெஞ்சலில் குழைவில் தன் செம்பவள இதழ் திறந்தவள்,

“என்ன பேசனும்? எந்த சலனமும் இல்லாமல் சந்தோஷமா இருந்தேன். உங்களை பார்க்கிற வரை மட்டுமே. பார்த்தப்போ கூட பெருசா எதுவும் இல்லை. என் மேல நீங்க கோபப்பட்டபோது கூட நான் சும்மா தான் சீண்டி பார்த்தேன். அவ்வளோ தான்னு நானும் நினைச்சிட்டு இருந்தேன்...”

“ஆனா எக்ஸாம் ஹால்ல நீங்க பார்த்த பார்வை நீங்க வாய்வார்த்தையா சொல்லாததை எனக்கு காட்டிக்குடுத்துச்சு. என் மனசையும் நான் தெளிவா புரிஞ்சிட்ட நாள் அது. ஆனா இது ஒத்துவராதுன்ற முடிவுக்கு நானே என்னை கொண்டுவந்தேன்...”

“ஆனாலும் ஒவ்வொரு தடவை உங்களை பார்க்கும் போதும் நீங்க என்னை தாண்டி போகும் போதும் என்னையும் அறியாம உங்களை உங்களோட அந்த பார்வையை தேட ஆரம்பிச்சேன்...”

“ஆனா நீங்க அம்மா சொன்னாங்க அபாகஸ் பண்ணாங்கன்னு கதை சொல்லிட்டு இருக்கீங்க? இதுல பெரியசாமின்னு என்கிட்டே போர்ஜரி வேலையும் பார்த்திருக்கீங்க? உங்களை என்ன செய்யறது, இப்போ நான் எப்படி நடந்துக்கறதுன்னு கூட எனக்கு தெரியலை...”

“உங்களோட உண்டான இந்த வாழ்க்கை எனக்கு அப்படி ஒரு சந்தோஷத்தை கொடுக்குது. இந்த நிமிஷம் இந்த உலகத்திலையே சந்தோஷமான ஆள் யாருன்னா அது நான் மட்டும் தான்னு பூரிச்சு போய் இருக்கேன். ஆனாலும்...”

அதுவரை அவளை பேச விட்டவன் அழுகையும் கண்ணீருமாக பேசியவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.

“நீங்க தாலிக்கட்டுற கடைசி நிமிஷம் வரைக்கும் எனக்குள்ள நான் போராடின போராட்டம் வார்த்தையால என்னால சொல்லவே முடியாது. ஏனோ எனக்கு ரொம்ப சோர்வா இருக்கறப்போ எல்லாம் உங்களோட பார்வையும் அதில் இருந்த காதலும் தான் என்னை மீட்டுவரும்...”

“அந்தளவுக்கு என்னையே மாத்தினது உங்களோட காதல். அதை யார்க்கிட்டயும் சொல்லாம என் ப்ரெண்ட்ஸ்க்காக நான் இயல்பா இருக்கிறதை போல காட்டிக்க நான் பட்ட கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும். இப்போ வந்துட்டு சும்மா அதையெல்லாம் மறந்திடுன்னு சொல்ற...”

சரமாரியாக அவனின் மார்பில் கைகளால் தன்னுடைய தாக்குதலை நடத்தினாள். அவளை அழகாய் சமாளித்தவன்,

“சாரிடா உன்னோட படிப்பு, அதை நினைச்சுதான்...” விலுக்கென அவனிடமிருந்து விடுபட்டவள்,

“யோவ் போதும் நிறுத்துய்யா. படிப்பாம் படிப்பு புடலங்கா படிப்பு. உனக்கு என்கிட்டே சொல்ல தைரியம் இல்லை. நேரா என் அப்பாம்மாவை கரெக்ட் பண்ணி என்னை கல்யாணமும் செஞ்சுட்ட. ஆனா ஒரு விஷயம் உண்மை. பெரியசாமியா என்னோட ப்ரெண்டா எனக்கு ரொம்பவே சப்போர்ட்டிவா இருந்தீங்க...” உண்மையாக உணர்ந்தே கூறினாள்.

“லீவ் இட் நேத்ரா. இப்போ இந்த நிமிஷம் நிஜம். இனி வரும் வாழ்க்கை முழுக்க எனக்கு நீயும் உனக்கு நானும். இதுதான் நிரந்தரம்...”

“அதெப்படி அவ்வளோ சீக்கிரத்துல விட முடியும்? நான் யாருக்காகவும் அழுததே இல்லை. எதுக்காகவும். என்னை அழவச்சதே நீங்களும் உங்க காதலும் தான். நீங்க எனக்கு வேண்டாம்னு நான் முடிவு பண்ணினாலும் எனக்கே எனக்குன்னு எனக்குள்ள இருந்தது நீங்க மட்டும் தான்...”

அவனும் விடவில்லை. அவளும் நிறுத்தவில்லை. இன்னுமின்னும் பேசிக்கொண்டே இருந்தனர். வாக்குவாதங்களும் நீண்டுகொண்டே செல்ல அது எப்பொழுது காதல் பாதையாக மாறிப்போனது அவனும் அறியவில்லை. அவளுக்கும் புரியவில்லை.

கட்டிவைத்திருந்த மொத்த நேசத்தையும் அப்பொழுதே ஒருவருக்கொருவர் பகிர்ந்தே ஆகவேண்டுமென்னும் தீவிரத்தில் இருந்தது அந்த பேச்சுக்கள்.

“இன்னும் எவ்வளவு நேரம் போகனும்?.பசிக்குது எனக்கு...” வெளியில் பார்த்துக்கொண்டே அவனிடம் கேட்க,

“இன்னும் அரைமணி நேரத்துல புதூர் போய்டுவோம். லஞ்ச் ரெடியா இருக்கும். போனதும் சாப்பிடலாம் ...” சின்ன புன்னகையோடு.

சொல்லியது போலவே அரைமணி நேரத்திற்கு முன்பாகவே சென்றுவிட மணமக்களுக்கான வரவேற்புகள் தடபுடலாக நடக்க துரைச்சாமியும் நாயகியம்மாவும் இல்லையென்ற குறையை தவிர உசிதமணியின் சொல்படி அனைத்தும் சிறக்கவே செய்தனர்.

புகுந்தவீட்டின் சடங்கு சாங்கியங்கள் நேத்ராவை திணறடிக்க கொஞ்சம் மிரண்டுதான் போனாள். ஆனாலும் அவளுக்கு பிடித்துதான் இருந்தது. கொஞ்சம் தடுமாற்றம் அவ்வளவே. அவளின் திருதிரு பார்வையில் ரிஷிக்கு அடக்கமாட்டாமல் சிரிப்பு வர அவனை முறைத்தவண்ணம் இருந்தாள் அவனின் நாயகி.

அடுத்தடுத்து நிற்க நேரமில்லாமல் மாலை வரவேற்பிற்கென தயாராக அங்கே சைந்தவி வந்து கட்டிக்கொண்டாள்.

“நேத்ராக்கா எனக்கு எவ்வளோ ஹேப்பியா இருக்கு தெரியுமா? இன்விடேஷன்ல உங்க பேரை பார்த்தப்போ கூட நான் நம்பலை. எனக்கு தோணவே இல்லை...” உண்மையான சந்தோசம் அவளின் முகத்தில் பளபளத்தது.

காலேஜ் ஸ்டாப்ஸ் என அனைவரும் வந்து வாழ்த்த அவர்களின் மரியாதை கலந்த பார்வையில் கொஞ்சம் நெளிந்து, கூசி, நிறைய வெட்கப்பட்டுத்தான் போனாள் நேத்ரா.

வரவேற்பு முடிந்ததும் வீட்டிற்கு வந்தவர்கள் சாந்தி சடங்கிற்கு தயார் செய்ய அதுவரை இருந்த இலகுத்தன்மை மறைந்து படபடப்பு குடிகொண்டது அவளிடத்தில்.

சில நேரங்கள் இப்படி அப்படி என காலத்தை கடத்தி நழுவியபடி இருந்தாலும் அவள் பயந்த நிமிடம் வந்தேவிட்டது.

அவளை அழைத்துசெல்லவென காவேரி வர நேத்ரா அந்த அறையிலேயே இல்லை. சுமங்கலியிடம் சொல்ல சத்தமில்லாமல் யாரின் கவனத்தையும் கவராமல் இங்குமங்கும் தேடினார்கள்.

அங்கே இங்கே சுற்றி அவளுக்கே தெரியாமல் சரியாக ரிஷியின் அறைக்கு எதிரில் இருந்த அலமாரியில் எதையோ பார்ப்பதை போல குடைந்துகொண்டிருந்தாள்.

“இங்க என்னடி பன்ற? உன்னை எங்கலாம் தேட...” பின்னந்தலையில் ஆண்டாள் அவளை தட்ட அதிர்ந்து திரும்பியவள் அங்கிருந்தவர்களை கண்டு மாட்டிக்கொண்ட உணர்வில் முழித்துவைத்தாள்.

அங்கே தன் தாய் முதற்கொண்டு சுமங்கலி, காவேரி, திலகா என நின்றிருந்தனர்.

“வ...வந்து அ....அத்தை........ வ....ந்து....... இ.....ங்க...”திக்க,

“எங்கயும் வர வேண்டாம் நீ. முதல்ல காவேரி கூட கிளம்பு...” ஆண்டாள் கூற காவேரி வாய்க்குள் சிரித்தாள்.

“நீங்க போங்க. நான் அனுப்பி வைக்கிறேன்...” என்ற சுமங்கலி சொல்ல மற்றவர்கள் கிளம்பவும்,

“காவேரி போய் ஒரு க்ளாஸ்ல தண்ணி கொண்டுவா...” அவளிடம் சொல்லி திரும்பியவர் நேத்ராவை பார்க்க,

“வ.....வந்ததிலிருந்து வீட்டை பார்க்கவே இல்லை. அதான் சுத்தி பார்க்கலாமேன்னு வந்தேன் அத்தை...” என அவளாகவே கூற,

“எனக்கு உன்னையும் தெரியும், உன் புருஷனையும் தெரியும். இந்த வீட்ல நான் உனக்கு மாமியாரா மட்டுமே இருப்பேன். என்கிட்டே இந்த வேலை வேண்டாம்...” என்று சுமங்கலி கண்களை உருட்டி மிரட்ட அப்பாவியாய் பார்த்தாள் நேத்ரா.

“ஸாரி அத்தை...” பாவம் போல கூற,

“சுத்தி பார்க்கற நேரமா இது? உன்னை...” என காதை பிடித்து திருக சிணுங்கலுடன் விலகிக்கொண்டாள்.

அதற்குள் காவேரி வந்திருக்க நீரை பருகக்கொடுத்து கன்னம் வழித்து திருஷ்டி கழித்தவர்,

“காவேரி அழைச்சிட்டு போடா...” என அனுப்பிவைத்துவிட்டு கீழே இறங்கிவிட்டார்.

“வசமா மாட்டிட்டியா நேத்ரா?...” என கேலி செய்துகொண்டே திரும்பினால் அங்கே அவனின் அறைவாசலில் ரிஷி இவளை பார்த்தபடி நின்றிருந்தான். இதழ்களில் அடக்கப்பட்ட புன்னகை.

அவர்களிடம் வந்தவன், “நீ போ காவேரி. நான் பார்த்துக்கறேன்...” என சொல்ல,

“எனக்கு வேலை மிச்சம்...” என்றபடி சென்றுவிட்டாள் காவேரி.

மாடி லாபியில் என்றாலும் இருவரின் தனித்துவிடப்பட்ட நிலை வெகுவாக சோதித்தது ரிஷியை.

எத்தனை நாள் காத்திருப்பு, தவிப்பு,ஏக்கம் என மொத்த உணர்ச்சிகளும் கலந்துகட்டி புயலென தாக்கி அவனை தலைகீழாக புரட்டிப்போட்டது.

“இனியும் அவளின்றி அவனா?...” அந்த ரம்யமான சூழ்நிலையில் ரசனையை தாண்டிய பார்வை அவனிடம் அவள் மீது.

இப்பொழுது பார்க்கும் அவனின் பார்வையே வேறாக தெரிய மொத்தமாய் தவித்து தவிர்த்தாள் நேத்ரா.

அவளை நெருங்கியவனை தவிர்த்து வேகமாய் ரிஷி வெளிவந்த அறைக்குள் சென்றுவிட்டாள். அவளின் வேகம் இவனுள் குறும்பு புன்னகையை விதைக்க சிறிது நொடி எங்கே நின்று தன்னை சமன் செய்துகொண்டு உள்ளே சென்றான்.

ஜன்னலின் பக்கம் நின்றிருந்தவள் உடல் கதவடைக்கும் ஓசையில் சிலிர்த்து நடுங்கியது. அவளின் அவஸ்தையை கண்டவன் சூழ்நிலையை மாற்றும் பொருட்டு வாய்விட்டே சிரித்தான்.

“தக்காளி சத்தியமா நீதானா இது? முடியலை போ...” மீண்டுமாய் சிரிக்க அதற்கு பலன் இருந்தது போல. அவனை திரும்பி முறைத்தாள். அவளை நெருங்கி பின்னிருந்து கட்டிக்கொண்டவன்,

“இந்த கேரளாப்பட்டில் நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்கடி தக்காளி...” கூந்தல் பூக்களை வாசம் பிடித்துக்கொண்டே சொல்ல அவனை உதறி தள்ளினாள்.

அவனின் அருகாமையும் இருளும் தனிமையும் பெண்ணவளை நிலைகுலையசெய்தது. மொத்தமாய் உள்ளுக்குள் உருகிகொண்டிருந்தவளின் அடிவயிற்றில் சுழன்ற பயப்பந்து அவனை விட்டு விலகசெய்தது.

அவளின் விலகல் முயற்சியில், “அதான் எல்லாமே சொல்லிட்டேன்ல. இன்னும் என்னடி கோபம் உனக்கு?...” என சீற வேண்டுமென்றே சண்டையை வளர்த்தாள்.

“இந்த கோபம் என்கேஜ்மென்ட்ல என்னோட ரூம்க்கு வந்து என்னை சீண்டிவிட்டு போனீங்களே அதுக்கு...” என்றாள் நேத்ரா.

“ஒஹ் தக்காளி அந்த கோபத்தை இப்போ காட்டறீங்களோ?...” என கிண்டலாக கேட்டு அவளின் கை பிடிக்க,

“அதுக்கெல்லாம் பதில் சொல்லமுடியாது, போயா...” வம்படியாய் அவனை தள்ளிவிட,

“அட நீ வாயா...” தள்ளிசென்றவளை மீண்டுமாய் தனக்குள் இழுத்தான் ரிஷி.

“விடுங்கன்னு சொல்றேன்ல. திரும்பவும் ஏன்?...” என சொல்லி விலக முனைய அவனின் சில்மிஷங்கள் அவளை பாடாய் படுத்தின.

“போடா வாடான்னு பேசுவன்னு பார்த்தேன். புருஷனானதும் எனக்கு மரியாதை எல்லாம் பலமா இருக்கே தக்காளி...” என சீண்ட,

“அதெல்லாம் எனக்கு நெருக்கமானவங்களுக்கான உரிமை. அவங்களை மட்டுமே அப்படி கூப்பிடுவேன்...” வேண்டுமென்றே கூற,

“அதான் இன்னும் கொஞ்ச நேரத்துல ரொம்பவே நெருக்கமாகிடுவோமே தக்காளி...” விஷமமாய் கூறிவைக்க அதில் சிவந்து போனாள் நேத்ரா.

“ப்ராட், ப்ராட். விடுங்க...”

“ஆமா ப்ராட் தான். உனக்கு மட்டுமேயான ப்ராட் நான். விடவே மாட்டேன்...” மொத்தமாய் அவனுள் அவள்.

சில பல சண்டைகளும் சச்சரவுக்களுமாய், சீண்டல்களும் சிணுங்கல்களுமாய் நேத்ரா தயங்கி விலக அவளின் தயக்கங்களை தகர்த்தெறிந்தவன் தன்னவளினுள் மொத்தமாய் மூழ்கிக்கொண்டிருந்தான்.

இரவின் மடியில் பொண்ணிலவின் ஒளியில் இனிதான இல்லறம் ஒன்று நல்லறமாய் அரங்கேறியது.

விடியலின் அருகில், “கவுத்திட்டியே கட்டுமரம்...” முணுமுணுத்தாள் நேத்ரா முகம் கொள்ளா பூரிப்போடு.


அலை தீண்டும்...
Nice
 
Top