Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

AshrafHameedaT

Administrator
அலை – 7

ரிஷிவந்தின் முன் இப்படி குற்றவாளியாக நிற்போம் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை நேத்ரா. அதிலும் அவனின் பார்வை கொஞ்சமும் பிடிக்கவில்லை அவளுக்கு. இடுங்கிய கண்களுடன் முறைக்கும் அவனை மிதப்பாக பார்க்க நினைத்தாலும் அவனின் விழிகளில் தெரிந்த அனலில் கொஞ்சம் ஆடித்தான் போயிருந்தாள்.

யசோதையின் கடுகடு முகத்தை கூட சகித்துகொண்டவளால் ரிஷியின் இந்த பார்வையை கண்கொண்டு பார்க்கமுடியவில்லை.

“ப்ச், இவன் வேற, என்னமோ மாடல்க்கு மார்க் போடறவன் மாதிரி மாஞ்சு மாஞ்சு பார்த்துட்டு இருக்கான்...” என கடுப்பானவள்,

“ஸ்யப்பா, போதும்டி கூழ்வண்டி. இந்த கட்டுமரத்தை கொஞ்சம் பஞ்சாயத்தை முடிச்சு சீக்கிரம் நம்மளை அனுப்ப சொல்லு. சத்தியமா பாக்கமுடியலை...”

அருகில் ராகினியிடம் குனிந்து முணுமுணுக்க அவள்,
“ஆனாலும் உன் வாய் இருக்கு பாரு.சத்தியமா உனக்கு இன்னைக்கு ஆப்புதாண்டி. பெரிய இவளாட்டம் பேசற ஆனா ஏன் கையெல்லாம் வெடவெடன்னு ஆடுதாம்?...” கிண்டலடிக்க,

“அது ஏஸி ஜாஸ்தி இருக்கு. அதனால குளிருது. அதான் நடுக்கம். நீ கொஞ்சம் குறைக்க சொல்லேன்...”

“பேசாம வாயை மூடிட்டு இரு நேத்ரா...” ரோஷிணி அதட்ட,

“நான் நல்லதுக்குதான்பா சொல்றேன். பாரு இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த மூக்குகண்ணாடி தூங்கி இங்கயே தொபுகடீர்னு விழ போகுது. நாலு பேர் அதை தூக்கிட்டு போக போறாங்க. அந்த நாலுபேரா நாம ஆகிட கூடாது பாரு...”

நேத்ராவின் அழிச்சாட்டியத்தில் கண்களை கட்டியது மற்ற மூவருக்கும்.

“அங்க பாரு மூக்கு கண்ணாடி ரெண்டாவது வானம் ஏறிடுச்சு. அடுத்து கனவுலகம் தான். இப்படி இது தூங்கி வழிஞ்சா யார் கட்டுமரத்துக்கு பதில் சொல்றது? பஞ்சாயத்துல ரெண்டு பக்கமும் வாதம் நடக்கனும். அப்போதான் இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும்...”
நேத்ரா தன் பேச்சை இப்போது நிறுத்தமாட்டாள் என முடிவுகட்டிய ரோஷிணி,

“ஏய் அங்க பார் ஸார் நம்மையே தான் முறைச்சுட்டு இருக்கார். உன்னோட ரேடியோவை கொஞ்ச நேரம் ஆஃப் பண்ணு...” நேத்ராவின் கைகளில் கிள்ளி ரிஷியை காண்பிக்க,

“திரும்ப திரும்ப சொல்றேன். எனக்கு கட்டுமரம் முறைப்பை பாத்தா கொஞ்சமும் பயமே இல்லை. இப்டியே இன்னும் ஒரு பைவ் மினிட்ஸ் பார்த்தா இங்கயே உருண்டு புரண்டு சிரிச்சுடுவேன் பார்த்துக்கோ...”

“இவ ஏற்கனவே பத்திக்கிட்டு இருக்கிற கொள்ளியை எடுத்து மொத்தத்தையும் கொளுத்திடுவா. நாமதான் கப்சிப் ஆகனும். என்ன ஏதுன்னு கேட்டா தானே திரும்ப பேசுவா. எதுவும் கேட்காதீங்கடி...” வனமலர் சொல்ல ரோஷிணியும் ராகினியும் வாயை மூடினர்.
அவர்களை அதிகம் சோதிக்காமல் நேத்ராவிடமிருந்து காப்பதற்காகவே ரிஷி பேச ஆரம்பித்தான்.

“அன்னைக்கு நான் உங்க நாலு பேரையும் தானே வார்ன் பண்ணினேன். இருந்தும் நீங்க கிளாஸ் கட் அடிச்சிருக்கீங்க. அப்போ உங்களுக்கு செய்யிறது தப்புன்ற கொஞ்சமும் பயம்ன்றதே இல்லை...”

“ஓஹ் சார்க்கு எங்களை அடையாளம் தெரியலையாமாம். நம்பிட்டோம் நம்பிட்டோம்...”

மனதினுள் கவுண்டர் கொடுத்துக்கொண்டாள் நேத்ரா. அவளையும் மீறி அவள் விழிகளில் கிண்டல் கொப்பளித்தது. ரிஷி சரியாக அதை கண்டுகொண்டான்.

“க்ளாஸ்க்கு போக பிடிக்கலைனா நீங்க எதுக்கு படிக்க வரீங்க? ஆட்டமும் பாட்டமுமா இருக்கனும்னா வீட்லயே இருக்க வேண்டியது தானே? உங்கமே நம்பிக்கை வச்சு உங்க பேரன்ட்ஸ் அனுப்பி வச்சா கொஞ்சமும் அந்த நம்பிக்கையை காப்பாத்தனும்ன்ற பொறுப்பில்லாம நடந்துக்கறீங்க...”

ரிஷியின் கடுமையில் நால்வரும் அமைதியாக நிற்க, யசோதைக்கு உள்ளம் குளிர்ந்து. “எத்தனை ஆட்டம் காட்டியிருப்பாள் இந்த நேத்ரா? இன்னும் வாங்கட்டும்...” என சந்தோஷமாக எண்ணிக்கொண்டது.

“உங்களை என்ன சொல்ல? உங்க பேரன்ட்ஸ சொல்லனும். படிக்க விருப்பம் இல்லாதவங்களை இப்படி எங்க தலையில கட்டி...” முகத்தை அஷ்டகோணலாக வைத்து கூற நேத்ராவிற்கு தாளவில்லை.

ரிஷிக்கொன்றும் அப்பெண்களை இப்படி தாழ்த்தி பேசவேண்டும் என்கிற எண்ணமில்லை. கொஞ்சம் கண்டித்து விட்டுவிடுவோம் என்கிற அவனின் பெருந்தன்மையில் பெட்ரோலை கொட்டி விழிகளின் அலட்சியத்தால் தீயையும் பற்றவைத்துவிட்டாள். நேத்ராவின் மீதாக கோபம் அவனை மதியிழக்க செய்ததுமில்லாமல் இப்போதும் தான் பேசியதை அலட்சிய பார்வையோடு கேட்டுக்கொண்டு நிற்க நிற்க அதை பார்க்க பார்க்க ரிஷியின் ஆத்திரம் அவனின் புத்தியை மழுங்க செய்தது.

இப்படி தரம் தாழ்ந்து தன் நிலை மறந்து தன்னை செயல்படவைத்தவளை வெறுப்பாய் பார்த்தவன் அதற்கு மேலும் வார்த்தைகளை வீசாமல் இருக்க பெரும் பிரயத்தனம் மேற்கொண்டு வெற்றியும் கண்டான். மூச்சை ஆழ இழுத்து ஊப் என ஊதிவிட்டு யசோதையை பார்த்து கிளம்புமாறு சைகை காண்பிக்க ரோஷிணியிடம் திரும்பிய யசோதை பார்வையால் தன் பின் வர சொல்லி முன்னே சென்றார்.

தோழிகள் மற்ற மூவரும் அமைதியாக வெளியேற நேத்ரா மட்டும் ரிஷியை முறைத்துக்கொண்டு நின்றாள். அவளின் குண இயல்பு ரிஷியை இப்படியே விட்டுச்செல்ல இடமளிக்கவில்லை. என்ன ஆனாலும் இன்றைக்கு அவனை ஒரு கை பார்த்துவிடு என உள்மனது தூபமிட கண்கள் சிவந்தாள்.

“போதும் ஸார் உங்க லெக்சர். இதுக்கு மேல ஒரு வார்த்தை எங்க பேரன்ட்ஸ் பத்தி பேசாதீங்க...”

மற்றவர்கள் சென்று ஐந்து நிமிடத்திற்கு பின் நேத்ராவின் குரல் முதுகின் பின்னால் கேட்க திரும்பியவன் அங்கே நேத்ரா மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க கோபாவேசமாக வெறித்து நின்றாள்.

ரிஷியின் அறையை விட்டு யோசனையோடே வெளியேறிய ரோஷிணி தங்கள் பின்னால் நேத்ரா வராததை அப்போதுதான் கவனித்து அவளை மீண்டும் அழைத்துவர திரும்புவதற்குள் நேத்ரா பொரிய ஆரம்பித்திருந்தாள்.

“ஏன் ஸார் எங்கட்ட என்ன நடந்தது? எதுக்கு கிளாஸ் கட் அடிச்சோம்னே ரீசன் கேட்காம உங்க இஷ்டத்துக்கு யார் கம்ளைன்ட் குடுத்தாலும் இப்படித்தான் பேசுவீங்களா?...”

“ஏய்...” என்றபடி ரிஷியும் விரல் நீட்டியபடி ஆத்திரத்தோடு உறுத்து விழித்தபடி அவளருகில் வர அவன் பேச நேத்ரா அனுமதிக்கவே இல்லை.

அவனிற்கு சளைக்காமல் நேத்ராவும் சப்தமிட அறையின் கதவை திறந்துகொண்டு ரோஷிணி படபடப்பாக உள்ளே நுழைந்தாள்.

“என்ன ஏய் சொல்றீங்க? அவ்வளோ தான்...” நேத்ராவின் இந்த எகிறலில் ரோஷிணிக்கு பயத்தில் நா உலர்ந்துவிட்டது.

“என்ன பண்ணிட்டு இருக்க நேத்ரா. அவர் நம்ம காலேஜ் கரஸ்பாண்டென்ட். கொஞ்சம் ரெஸ்பெக்ட் குடுத்து பேசு...” கடிந்தவள் ரிஷியிடம் திரும்பி,

“சாரி ஸார். இவ கொஞ்சம் எமோஷனல் டைப். ஆனா மனசுல ஒன்னும் இருக்காது. ப்ளீஸ் ஸார்...” இறைஞ்சல் குரலில் மன்னிப்பை வேண்ட,

“நீ சும்மா இரு ரோஷி. நீ எதுக்கு இவர்க்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு இருக்க. இவர் காலேஜ்ல நாம ஒன்னும் சும்மா படிக்கலை. அது மாதிரி இவங்களும் இலவச படிப்பு சொல்லி குடுக்கலை. நாம காசுகுடுத்து தான் படிக்கிறோம். என்னமோ இவர்க்கிட்ட யாசகம் வாங்கி ஒன்னும் படிக்கலை...”

நேத்ரா கட்டுகடங்காத கோபத்தில் இருப்பதை உணர்ந்த ரோஷிணிக்கு நிலைமையை எப்படி கையாள்வது என புரியவே இல்லை.
நேத்ராவை இப்போது அமைதிபடுத்த தான் என்ன கூறினாலும் அதுவே ரிஷியிடம் அவள் இன்னும் வேகத்துடன் பாயவைக்கும் என்பது அவளின் திண்ணம்.

ரிஷியிடம் திரும்பிய நேத்ரா, “இங்க பாருங்க சார், நீங்க யாரா வேணாலும் இருந்துக்கோங்க. முதல்ல ஒரு பொண்ணுகிட்ட எப்டி பிகேவ் பண்ணனும்னு படிச்சுட்டு வாங்க அதுக்கப்றமா இந்த காலேஜை நிர்வாகிக்கலாம்...”

ரிஷியின் மூக்குடைக்க அவள் பேசியது அவனை சீண்ட,
“யார்க்கிட்ட எப்படி பேசனும்னு நடந்துக்கனும்னு நீ எனக்கு கத்துக்க சொல்றியா? ஷிட்...” என இரைந்தவன்,

“கெட் லாஸ்ட் மை பிளேஸ். இனியும் உன்னை போல ஒரு பொண்ணை என்னோட காலேஜ்ல நான் இருக்க விடமாட்டேன். நாளைக்கு உன் பேரண்ட்ஸ வரவழச்சு உன் சீட்டை கிழிச்சிடறேன்...”

ரிஷியின் கோபம் இந்தளவுக்கு செல்லும் என்பதை எதிர்பாராத ரோஷிணி மீண்டும் நேத்ராவிற்காக மன்னிப்பை கேட்க அதற்கும் முட்டுக்கட்டையிட்டாள்.
 
“நீ இவர்க்கிட்ட மன்னிப்பு கேட்டா மட்டும் நான் இந்த காலேஜ்ல படிச்சிடுவேனாக்கும்? ஸ்டூடன்ஸ் ப்ராப்ளம்னு வந்தா அதை சால்வ் பண்ணாம கண்மூடித்தனமா பனிஷ் பன்ற இந்த காலேஜ் எனக்கு வேண்டாம்...”

மீண்டும் மீண்டும் இதையே திருப்பி சொல்ல யோசனையில் சுருங்கிய ரிஷி,

“ஓகே சொல்லு அப்படி என்னதான் சொல்றன்னு நானும் கேட்கிறேன்...” போனால் போகிறது என்பதை போல கூறியவனை எள்ளலாக பார்த்தவள்,

“ரோஷி கிளம்புவோம் நாம...” அவளை இழுத்துக்கொண்டு திரும்ப,

“இரு நேத்ரா என்ன விஷயம்னு நாம சொன்னா தானே ஸார்க்கு புரியும்...” ரிஷியை பார்த்து,

“ஸார் மூணு நாளைக்கு முன்னால பிரபா மேம் எடுத்த யூனிட் எங்க க்ளாஸ்ல யாருக்குமே புரியலை. அன்னைக்கே வந்து படபடன்னு சொல்லிக்குடுத்துட்டு போய்ட்டாங்க. லீவ்ல போனவங்க நேத்து ஈவ்னிங் வந்து இன்னைக்கு க்ளாஸ் டெஸ்ட் இருக்குன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க...”

“நாங்க இன்னொரு முறை நடத்தினதுக்கு பின்னால டெஸ்ட் வச்சுக்கலாம்னு சொன்னோம். அதுவும் ரொம்ப ரிக்வெஸ்ட்டா. ஆனா மேம் பிடிவாதமா மாட்டேன்னு சொல்லி இன்னைக்கு டெஸ்ட் பிக்ஸ் பண்ணிட்டாங்க. அதான் நாங்களும் எங்க க்ளாஸ்ல இன்னும் சிலபேரும் கட் அடிச்சோம்...”

ரோஷினி கூறுவதை உன்னிப்பாக கேட்டவன்,
“இதை நீங்க உங்க ஹெச்ஓடி கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிருக்கலாமே. இல்லைனா பிரின்ஸிபால் மேம் இருப்பாங்களே. அதை விட்டுட்டு கிளாஸ் கட் அடிச்சு மத்த ஸ்டூடன்ஸ் கெட்டு போறதுக்கும் நீங்க காரணமா இருக்கறது நல்லவா இருக்கு?...”

ரோஷிணியிடம் மட்டுமே பேசியவன் மறந்தும் நேத்ராவின் புறம் திரும்பவில்லை. ஆனால் நேத்ராவோ இன்னமும் அதே நிலையில் தான் இருந்தாள். கோவம் குறையாமல்.

“ஓகே. நீங்க கிளம்புங்க. நான் என்னனு பார்க்கறேன். இனிமே கிளாஸ் கட் பண்ணாம யாரும் கம்ப்ளைன்ட் பன்றதுக்கு வாய்ப்பு கொடுக்காதீங்க. இப்போ க்ளாஸ்க்கு போங்க. போகனும்...”
ரிஷி கூற அப்போதுதான் ரோஷிணிக்கு போன உயிர் திரும்பியது. நிம்மதியுடன் திரும்பி பார்க்க அங்கே நேத்ரா உக்கிரம் குறையாமல் ரிஷியை முறைத்தபடியே நின்றிருந்தாள்.

“இன்னும் என்னடி நேத்ரா? அதான் ஸார் பார்த்துக்கறதா சொல்லிட்டாங்களே, வா நாம போவோம்...” அவளை இழுக்க,
“ஓஹ் இவ்வளோ நேரம் நம்மை பேசவே விடாம இவங்க இஷ்டத்துக்கு என்னவேனாலும் பேசுவாங்க. நாம கேட்டுட்டு போகனுமா? நம்மோட பிரச்சனை என்னனு கூட கேட்காத இவங்களாம்...” அவளை இடைமறித்தவன்,

“என்ன உன்கிட்ட அப்பாலஜி கேட்கனும்னு எதிர்பார்க்கிறாயா?...”

“அதுல என்ன தப்பிருக்கு? காரணமே இல்லாம எங்க பேரன்ட்ஸ் பத்தி பேச உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு ஸார்?. எங்களை உங்களைமாதிரி ஆளுங்ககிட்ட பேச்சு வாங்கவா இங்க படிக்க அனுப்பினாங்க?...”

மீண்டும் மீண்டும் ரிஷி பார்த்த உதாசீன பார்வையும் தாங்கள் செய்ததற்கு பெற்றோரை பேசியதும் அவளை வெகுவாய் சீண்டியது. தன்னை எப்போதும் யாரேனும் கீழாக பார்ப்பதை ஒருபோதும் அனுமதியாதவள் ரிஷியின் எள்ளலில் ஏளனத்தில் உள்ளமெங்கும் மிளகாயை பூசியது போல காந்த வெகுண்டெழுந்தேவிட்டாள்.

“என்னை பற்றி என்ன தெரியும் இவனுக்கு?...” தன் தாய் தந்தையை நினைக்கையிலேயே கண் கலங்கியது. விழிகளில் திரண்ட துளிகள் உருண்டுவிடாமல் உள்ளிழுத்தவள்,

அவளின் பேச்சில் ரிஷியின் தன்மானம் சீண்டப்பட, “ஒரு சிறுபெண் தன்னை தாழ்த்தி பேசுவதா?...” நொடியில் நிதானம் இழந்தான்.

“ஓஹ் மேடம்க்கு அவ்வளோ கோவம் வருதோ? உன்னை வளர்த்ததுதான் நல்லா தெரியுதே?...” அவனின் வார்த்தை பிரயோகம் நேத்ராவை உசுப்ப,

“அப்டி என்ன தெரிஞ்சுட்டீங்க?...”

“முன்ன பின்ன தெரியாத என்னை உன்னோட ஆளுன்னு எங்கவீட்ல கூசாம சொன்னவ தானே நீ. நீ வேற எப்டி பேசுவ...”
விழிகள் தெறிக்க அதிர்ந்து பார்த்தாள் நேத்ரா. ரோஷிணிக்கு கூட இப்பேச்சு பிடிக்கவில்லை.

முதலில் திகைத்தாலும் அவனே வலையில் விழுவது போல எடுத்துகொடுத்ததில் கண்கள் மின்ன,

“ஏன் ஸார். நான் சொன்னதுல உங்களுக்கு உடன்பாடில்லைனா அப்போவே இல்லைன்னு மறுத்திருக்கலாமே. எனக்கு ஹெல்ப் பண்ணின ஒரு ஹெல்ப் பண்ண நினச்ச என் வளர்ப்பு இப்டினா, நான் சொன்னதும் இதுதான் சாக்குன்னு ஈன்னு சிரிச்சிட்டு நின்னீங்களே இதுதான் உங்க வளர்ப்போ?...”

இதை ரிஷி எதிர்பார்க்கவே இல்லை. இப்படி தன்னை மடக்குவாள் என நினைத்தா பார்த்தான். நேத்ராவின் முகத்தில் திருப்தி கலந்த வெற்றிக்களிப்பு.

“இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பார்த்திடனும் இவளை...” கண்கள் ரத்தமென சிவக்க அவளை நோக்கி இரண்டடி வைத்தான்.
ரிஷியின் முகத்தில் தெரிந்த ஆவேசத்தில் கொஞ்சம் மிரண்ட நேத்ரா அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்,

“சனியரசன் சட்டையை போட்டுட்டு சாட்டையை கையில எடுக்கிறதுக்குள்ள எஸ் ஆகிடுடி நேத்ரா...” என தனக்குள் கூறிக்கொண்டு ரோஷிணியை இழுத்துக்கொண்டு அறையை விட்டு சிட்டாக பறந்தேவிட்டாள்.

“தப்பிச்சுட்டாளே. நாளுக்கு நாள் இவ அட்டகாசம் தாங்க முடியலை. ம்ஹூம் இவளை இப்படியே விடக்கூடாது. ஒவ்வொரு தடவையும் என்னை வெறுப்பேத்திட்டே போறா. என்னோட குணம் தெரியாம என்கிட்ட மோதிட்டல...”

வஞ்சம் வைத்து பழிதீர்க்க முடிவெடுத்தேவிட்டான். ஆத்திரம் குறையாமல் சுவற்றில் குத்த மீண்டும் கதவு திறக்கும் ஓசையில் வேகமாக திரும்பினான்.

அங்கே நின்றிருந்த தன் இளைய பெரியப்பா மகம் தினேஷை கண்டதும் தன் முகபாவனையை மாற்றி,
“வாடா தினேஷ். என்ன காலேஜ் பக்கம்? காரணமில்லாமல் நீ வரமாட்டியே...”

வந்தவனை வரவேற்று அமரவைத்து அங்கிருந்த ப்ரிட்ஜில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து அவன் புறம் நீட்டியவன் தனக்கும் ஒன்று எடுத்துக்கொண்டான்.

குளிர்ந்த நீரை குடித்ததும் தான் கொஞ்சம் எரிச்சல் அடங்கியது போல இருந்தது மனதிலும், உடலிலும். கைகள் தானாக தடையை தடவிக்கொள்ள வாய் வலிப்பது போல ஒரு பிரம்மை.

“இதுக்கே நமக்கு இப்படி வாய் வலிக்குதே பக்கம் பக்கமா பேசின அவளுக்கு?...” தன் யோசனை தறிகெட்டு செல்ல நொடியில் தலையில் தட்டிக்கொண்டவன்,

“நான் ஒன்னும் பாவப்படலை அவ மேல. இன்னொருக்க வார்த்தைக்கு வார்த்தை பேசட்டும். பேசற வாயை கிழிச்சிடறேன் கிழிச்சு...” சூளுரைத்துக்கொண்டான்.

அதன் பின் தினேஷிடம் பேச ஆரம்பித்தவன் முகம் மீண்டும் கோபத்தை தத்தெடுத்தது. தினேஷ் கிளம்பியதும் தலையை பிடித்துக்கொண்டான்.

“இன்னைக்கு நான் யார் முகத்துல முழிச்சேனோ? நேரமே சரியில்லை. இப்போ யார் கேட்டா எனக்கு கல்யாணம் செய்து வைங்கன்னு. பொண்ணு பார்த்திருக்காறாம் பொண்ணு...”

துரைச்சாமி மேல் கட்டுகடங்காமல் கோபம் பெருகியது.

“இவர் சொன்னா நான் உடனே பார்க்க போய்டனுமா? என்னை எவ்வளவு ஈஸியா நினைச்சுட்டார். இவர் பார்த்துவச்ச பொண்ணை நிச்சயம் கல்யாணம் செய்துக்கமாட்டேன். நோ வே...” பிடிவாதமாக எண்ணிக்கொண்டவன்,

“எல்லாம் இவளால. இவளை பார்த்த அன்னில இருந்து ஆரம்பிச்சது பிரச்சனை. தக்காளி சைஸ்ல இருந்துட்டு என்ன குதி குதிக்கா...”

மீண்டும் சுற்றி சுற்றி நேத்ராவிடம் வந்து நின்றவன் தனக்கு நடக்கும் விருப்பமில்லா செயல்கள் அனைத்திற்கும் காரணமாக அவளையே கொண்டுவந்து நிறுத்தினான்.
-------------------------------------------------------------​
ஹாஸ்டல் ரூமில் தனக்கு முன்னால் இருந்தவற்றை பார்க்க பார்க்க கண்ணீர் கரைபுரண்டது. இப்படி ஒரு தாக்குதலை அவள் எதிர்பார்க்கவே இல்லை. சத்யாவிற்கு இதை யார் செய்கிறார்கள் என்பது அனுமானத்திற்கு இடமில்லாமல் தெளிவாகவே தெரிந்தது. ஆனாலும் யாரிடமும் எதுவும் சென்று கூற பயமாக இருந்தது.

அழுகை முட்ட தன்னுடைய குமுறல்களை சைந்தவியிடம் பகிர அவளோ இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமில்லை, இது விஷயமாக என்னிடம் பேசவும் செய்யாதே என கண்டிப்போடு கூறிவிட இன்னமும் வெறுத்து போனாள் சத்யா.

நாளுக்கு நாள் சத்யாவின் பொறுமையும் எல்லையை கடக்க ஆனாலும் எதுவும் செய்யமுடியாத கையறுநிலை அவளுக்கு.
எத்தனை யோசித்தும் இதை எப்படி அணுகுவது என அவளுக்கு புரிபடவே இல்லை.

நேத்ராவால் மட்டுமே இதை சரிபண்ணமுடியும் என்பது அவளறிந்ததே. ஆனால் நேத்ரா தான் தன்னிடம் பேசமாட்டாளே. இப்போது தான் செய்த மடத்தனத்தை எண்ணி வருந்தி ஒரு பயனும் இல்லையே.

என்ன ஆனாலும் நேத்ராவிடம் பேசிவிடுவது என முடிவெடுத்தாள் சத்யா.

அலை தீண்டும்...
 
படிக்க விருப்பம் இல்லாதவர்களை எங்க தலையில் கட்டி....
இது 50% நிஜம் தான்....... எதுவுமே பண்ணமுடியாது.......
பண்ணியும் பிரயோஜனமில்லை.......

அலற விடுறாளே ரிஷியை.......
 
Top