Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

AshrafHameedaT

Administrator
அலை – 9

நேத்ராவின் வேண்டுதலை கடவுள் சரியாக நிறைவேற்றினார் போலும். ரிஷியின் கண்களுக்கு தான் மாட்டிவிட கூடாது என்று நினைத்தாளே தவிர தன்னுடைய கண்களுக்கு ரிஷி பட்டுவிட கூடாது என்று வேண்டவில்லையே. இருவரின் வாக்குவாதத்தின் பின் நாள் தவறாமல் ரிஷி இவளின் பார்வை வட்டத்திற்குள் விழுந்துகொண்டே தான் இருந்தான். பார்க்கும் போதெல்லாம் எள்ளும்கொள்ளும் வெடித்தது இவளுள்.

“என்ன இந்த கடவுள் கொஞ்சம் கூட இரக்கமே காட்டலை. கட்டுமரத்தை கண்ணுல காட்டிட்டே இருக்காரே?. இவனை பார்க்கலைன்னு யார் அழுதா?..” கடுப்பாகிவிட்டாள்.

என்னதான் இவள் அலுத்துக்கொண்டாலும் ரிஷி ஒரு பொருட்டாகவே இவளை பார்க்கவில்லை. எதிர்பட்டாலும் கண்டுகொள்ளாத பாவனையை காட்ட அது எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றியது போல ஆகிவிட்டது நேத்ராவிற்கு.

“இவன் பெரிய இவன். என்னை பார்க்காத மாதிரி போவானாக்கும். எனக்கு தெரியாதா இப்படி போக...” வெட்டிக்கொண்டாள்.
தானும் இரண்டு நாள் அது போலவே போனாலும் ஏனோ அவனை பார்த்து உள்ளுக்குள் இரண்டு வார்த்தை திட்டி சென்றால் தான் மனதே மட்டுப்படும்.

அன்றும் அப்படி லைப்ரேரியில் வைத்து அவனை காண அவனோ இவளை பார்ப்பதும் லைப்ரேரியனிடம் பேசுவதுமாக இருக்க,
“எப்டி பார்க்கறான் பாரு. இவனை பாக்க சொன்னோமா? வேலையை பார்த்துட்டு போக வேண்டியது தானே?...”

திட்டிக்கொண்டே மீண்டும் அவனை பார்க்க இப்பொது அவளை கண்டுகொள்ளாமல் அங்கிருந்த லெட்ஜரில் பார்வையை ஓட்டிக்கொண்டிருந்தான். வேண்டுமென்றே எடுத்த புத்தகத்தை மேஜை மேல் படாரென போட அந்த சத்தத்தில் ரிஷி மட்டுமின்றி அங்கிருந்த அனைவருமே இவளை ஒரு நிமிடம் திரும்பி பார்த்துதான் விட்டனர்.

“நான் எதை தூக்கி போட்டா இவனுக்கென்ன? ஏன் பார்த்தான்?...” மீண்டும் திட்டிக்கொண்டே எழுந்து சென்று எடுத்த புத்தகத்தை வைத்துவிட்டு வேறு தேட,

“உன் வீட்ல இருந்து கொண்டுவந்த புக்ஸா இதெல்லாம்? இப்டி தூக்கி எரியுற? உன் கோவத்தையெல்லாம் வேறெங்காவது வச்சுக்கோ. என் கிட்ட வேண்டாம்...”

என்ன நடக்கிறது என உணரும் முன்னே அவளின் பின்னால் நின்று உறுமிவிட்டு சென்றுவிட்டான். அவளோ அவனின் நெருக்கத்தில் முதலில் நிலைகுலைந்து தெளிந்த நிமிடம் அவன் அங்கிருந்தே சென்றுவிட்டான்.

“கட்டுமரம் தப்பிச்சா ஓடற. நின்னா என் கிட்ட நல்லா வாங்கிகட்டனுமின்னு பயந்தே எஸ்கேப் ஆகிட்டல. வச்சிக்கிறேன் உன்னை...” அவனுக்கு தக்க பதிலடி கொடுக்கமுடியவில்லையே என்ற ஆதங்கத்தில் பொருமி தள்ளினாள்.

அடுத்த வாரம் முழுவதும் இப்படியே செல்ல வார இறுதி மூன்று நாட்கள் ரிஷி கல்லூரிக்கு வரவில்லை.

“என்னடி கரெஸ் காலேஜ் பக்கம் ஆளையே காணோம்? மூணு நாளா வரலையே?...” வனமலர் நேத்ராவிடம் இயம்ப,

“ஏன் உன்னால அவரை பாக்காம இருக்க முடியலையாக்கும்?...” வெடுக்கென கேட்க,

“நேத்ரா, என்ன பேச்சு இது? அவ சும்மா தானே கேட்டா, அதுக்கு ஏன் கடுப்படிக்கிற?...” ரோஷிணி அதட்ட தன்னுடைய பேக்கை எடுத்துக்கொண்டு நேத்ரா எழுந்து சென்றுவிட்டாள்.

“ரோஷி, நீ எதுக்கு அவளை திட்டுற? அவ கொஞ்ச நாளா டிஸ்டர்ப்டா இருக்கா...” ராகினி சப்போர்ட் செய்து வர,

“ஆளாளுக்கு இப்படி அவளை தூக்கி வைங்க. யாராச்சும் கண்ட்ரோல்ல அவளை வச்சாதான் உண்டு...” ரோஷிணி கூற,

“அதை நீ சொல்லாத. வா போய் அவளை பாப்போம்...” மலர் இருவரையும் இழுத்துக்கொண்டு நேத்ராவை தேடி சென்றாள். ஹாஸ்டல் ரூமிற்கு செல்ல அங்கே சைந்தவி அழுதுகொண்டிருக்க நேத்ரா சமாதானம் செய்துகொண்டிருந்தாள்.

“என்னாச்சு நேத்ரா? ஏன் இவ அழறா?...” ராகினி கேட்க,
“நானும் வந்ததுல இருந்து கேட்டுட்டு இருக்கேன். ஒண்ணுமே சொல்லலை. நீயாச்சும் கேளு...” அங்கிருந்து நகர்ந்து அமர ராகினி சைந்தவியிடம் பேச்சுக்கொடுக்க,

“அக்கா வீட்ல ஆயாவுக்கு உடம்பு சரியில்லை போல. ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்க. எனக்கு உடனே எங்க ஆயாவை பாக்கனும்...” மீண்டும் அழுகை.

“உங்க வீட்ல யாரையாச்சும் வர சொல்லி உன்னை கூட்டிட்டு போக சொல்ல வேண்டியது தானே?. இப்போ காலேஜ் கூட லீவ் தானே?...”

“காலேஜ் லீவ் தான் மலர். ஆனா ஹாஸ்டல் பிள்ளைங்களுக்கு பேரன்ட்ஸ் வந்து கூட்டிட்டு போகனும். அட்லீஸ்ட் அவங்க போன் பண்ணியாச்சும் பர்மிஷன் கேட்கனும்ல...” ரோஷிணி சொல்ல,

“ஆமாமா இங்கதான் இல்லாத ரூல்ஸ் பேசறாங்களே?...” ராகினி சலித்தாள்.

“இது எல்லா காலேஜ்லயும் உள்ள ரூல்ஸ் தான். இங்க மட்டும் புதுசு இல்லை...” மலர் கூற அவளை நேத்ரா மீண்டும் முறைக்க,

“ஹைய்யோ உங்க ஆர்க்யூமெண்டை அப்பறமா வச்சுக்கோங்க. இப்போ இவளுக்கு என்ன பண்ணலாம்?...” ரோஷிணி அவர்களின் சண்டையை அவசரமாக திசைமாற்ற,

“சந்து உன் வீட்டு நம்பர் சொல்லு...” என நேத்ரா கேட்க,

“வீட்ல யாருமில்லையாம்க்கா...” கரகரவென கண்ணீர் வடிய பேசியவளை பார்க்கவே பரிதாபமாகிற்று நேத்ராவிற்கு. அதன் பின் கொஞ்சமும் யோசிக்காமல் தன்னுடைய மொபைலை எடுத்து ஆன் செய்தவள் வேகமாக ஹாஸ்டல் வார்டன் அறையில் உள்ள நம்பருக்கு அழைப்பு விடுத்தாள்.

ரிங் போகும் சப்தம் கேட்கவும் மற்றவர்களை பார்த்து வாயில் விரலை வைத்து பேசாமல் இருக்கும் படி சைகை செய்தவள் மறுபுறம் அட்டண்டர் குரல் கேட்டதும்,

“ஹலோ நான் காரைக்குடில இருந்து சௌந்தரம் பேசறேன். என் பொண்ணு சைந்தவி பர்ஸ்ட் இயர் பிசிக்ஸ் படிக்குதுங்க. அதுக்கிட்ட அவசரமா பேசனும். கூட்டியாறீங்களா?...”

தொண்டையை கனைத்துக்கொண்டு கட்டை குரலில் பேசிய நேத்ராவை சைந்தவி ஆவேன வாயை பிளந்து பார்த்தாள்.
சிறிது நேரத்தில் சைந்தவியை அழைக்க ஒரு பெண் வர முகத்தை துடைத்துக்கொண்டு செல்லுமாறு நேத்ரா சைகையில் கூற அவளும் அவ்வாறே சென்றாள்.

சைந்தவி போனை எடுத்ததும், “இந்தா புள்ள சந்து ஓன்னு அழு பாப்போம். அழுதுட்டே அட்டண்டர் குணவதிக்கிட்ட போனை குடு...” நேத்ரா கூறியதை போலவே சைந்தவி செய்ததும்,

“அம்மா என் மாமியாருக்கு ரொம்ப முடியாம இருக்குதுங்க. புள்ளையை பாக்கனும்னு தவியா தவிக்குது. லீவ் இல்லையாமே. நாங்க வந்து கூட்டிட்டு போற அளவுக்கு தோது இல்லைங்க. புள்ளையை கொஞ்சம் அனுப்பி வைக்கிறீங்களா?...”

மறுபுறம் கூறியதிலும் சைந்தவியின் அழுகையிலும் குணவதிக்கு பரிதாப அலை பொங்கியது.

“சரிங்கம்மா, நான் வார்டன் அம்மாகிட்ட பேசிட்டு அனுப்பிவிடறேன். நீங்க கவலைபடாதீங்க...” என்றவர் அதே போல வார்டன் யசோதையிடமும் பேசி சைந்தவியை அனுப்ப கேட்பாஸ் கொடுத்துவிட்டார்.

வேகமாக அறைக்குள் வந்த சைந்தவி, “ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அக்கா. என்ன செய்யனு தெரியாம இருந்தேன். சரியா ஹெல்ப் பண்ணினீங்க... என,

“சரி சரி நீ கிளம்பு. போய் உங்க பாட்டியை பாரு. தனியா போய்டுவியா? நாங்க யாராச்சும் துணைக்கு வரட்டுமா?...” என்றதும் சைந்தவிக்கு தூக்கிவாரிப்போட்டது.

“இல்லை இல்லை நானே போய்ப்பேன். ஒன்னும் பிரச்சனை இல்லைக்கா. எனக்காக நீங்க சிரமப்பட்டுக்க வேண்டாம்...” படபடவென பேசியவள் வேகமாக ஒரு பேக்கில் தேவையான துணிகளை எடுத்துக்கொண்டு கிளம்ப,

“என்னைக்கு வருவ சந்து?...”
“எல்லோரும் கிளம்பவும் வந்துடுவேன்...” சைந்தவி உளற,
“என்ன எல்லாரும் கிளம்பவுமா?...” மலர் கேட்க,

“ஐயோ ஆயா, எங்க ஆயாவுக்கு ஒன்னும் ஆகக்கூடாது அக்கா. என்னால தாங்கவே முடியாது...” அழ ஆரம்பிக்க,
“சரி சரி. அழாத. நீ முதல்ல கிளம்பு...” நேத்ரா சொன்னதும் விட்டால் போதுமென வேகமாக கிளம்பிவிட்டாள் சைந்தவி.
 
“பாவம்ல ரொம்ப அழுதுட்டா...” என ராகினி உச்சு கொட்ட மற்றவர்கள் அதை ஆமோதித்து தலையசைத்தனர்.
இரவு வரை அப்படி இப்படி என நகர மலர் தான் ஆரம்பித்தாள்.

“போனவ ஆயாவுக்கு என்னாச்சுன்னு ஒண்ணுமே சொலலல. ஒரு கால் பண்ணிருக்கலாம்ல...”

“விடு அங்க என்ன கஷ்டமோ. நேரமில்லையோ என்னவோ...” ராகினி பரிந்து பேச,

“இங்க இருந்து புலம்புறதுக்கு பேசாம நேராவே போய் பார்த்திடுவோமே. நமக்கும் ரெண்டு நாள் லீவ். எப்டியும் வீட்டுக்கு போகலை நாம. போய்தான் பார்ப்போமே...”

ரோஷிணியின் பேச்சில் நேத்ராவும் குஷியனாள். ஏதோ காரணமில்லா ஒரு வெறுமை மனதை தொட்டு செல்வதை உணர்ந்தவளால் அதை எதற்கு, ஏன், என்னதென்று இனம் காணமுடியாமல் அறவே வெறுத்தாள். அதிலிருந்து தப்பிக்க வழியில்லாமல் தவித்தவளுக்கு ரோஷிணியின் யோசனை பெரும் ஆறுதலாக இருந்தது. உடனே சம்மதித்தவள் மறுநாள் எப்படி கிளம்பலாம் என்பதை பேசி முடிவு செய்தனர்.

அவ்வப்போது செய்யும் வழி தான். தன்னுடைய மொபைலில் இருந்து அட்டண்டருக்கு அழைத்து வீட்டிலிருந்து போன் செய்தது போல பேசி வெளியில் கிளம்புவது தான். அதை போலவே ரோஷிணிக்கு இல்லாத மாமாவிற்கு உடம்பிற்கு முடியவில்லை என கூறி அவளும் துணையாக வனமலரும் கிளம்பிவிட, பிற்பகல் நேத்ராவோடு ராகினி வேறொரு காரணம் சொல்லி கிளம்பினர்.

ஒருவழியாக காரைக்குடியை வந்தடைந்தவர்களுக்கு சைந்தவியின் ஊரான புதூர் வந்துவிட்டனர். ஊரே விழாக்கோலம் பூண்டிருக்க முகவரி தெரியாமல் அல்லாட வழியில் செல்பவரிடம் கேட்டு ஒருவழியாக வீட்டை அடைந்தனர். வீட்டு வாசலில் வந்து நின்றால் உறவினர்கள் கூட்டம் அவ்வீட்டை நிறைத்திருக்க யோசனையோடே மூவரும் உள்ளே சென்றனர் சைந்தவி இருக்கிறாளா என கேட்டு உறுதி செய்தபடி.

அங்கே பட்டுப்பாவாடை தாவணி சகிதம் சர்வ அலங்காரத்தில் தலைநிறைய பூவுடன் அழகென ஜொலித்த சைந்தவியை பார்த்து வாயடைத்தனர். முதல்நாள் கண்ணீரும் கம்பலையுமாக கிளம்பிய பெண் இவளா என்று. இவர்கள் நால்வரையும் கண்டதும் சைந்தவிக்கு கைகால் எல்லாம் வெலவெலத்தது. நேத்ராவின் கோபம் அறிந்ததுதானே. பொய் சொல்லி நடித்தல்லவா கிளம்பி இருக்கிறாள்.

“என்னடி இது? நீ நேத்து கிளம்பினதென்ன? இன்னைக்கு இருக்கிறதென்ன? அப்போ நேத்து சொன்னதெல்லாம் பொய்யா?...” வனமலர் கேட்க சைந்தவியின் பார்வை முழுவதும் நேத்ராவிடம்.

அதற்குள், “யாரு ஆத்தா இந்த புள்ளைங்க? உன் சிநேகித புள்ளைங்களா? ஆளுவீட்லையே நிப்பாட்டி வச்சிருக்கவ. உள்ளாற கூட்டிட்டு போ. மேல ஒரு ரூமை ஒதுக்கி குடு...” என வயதான பெண்மணி காதில் போட்டிருக்கும் தண்டட்டியை ஆட்டியபடி சொல்ல,

“சரிங்க ஆயா...” என்ற சைந்தவியை முறைத்தாள் நேத்ரா.
“வாங்கக்கா உள்ள போகலாம்...” தயங்கியபடியே உள்ளே அழைத்து செல்ல ஒவ்வொருவராக வீட்டு மனிதர்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டே சென்றனர்.

மாடிக்கு சென்றதும் ஒரு விசாலமான அறையில் அவர்களை அழைத்து சென்றவள் அவர்களின் பேக் அனைத்தையும் அலமாரியில் வைத்துவிட்டு திரும்பியவள் நேத்ராவை தேட அவள் மாடி பால்கனி வழியாக வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

“அக்கா சாரி அக்கா. உங்களை ஏமாத்தனும்னு நினைக்கலை. ஒவ்வொரு விசேஷமும் எங்க சொந்தபந்தம் மொத்தமும் சேர்ந்து கொண்டாடுவோம். ஒவ்வொரு சிவராத்திரிக்கும் எங்கப்பா காவடி எடுப்பாங்க நேத்ராக்கா...”

“இதையெல்லாம் விட்டு என்னால எப்டி வரமுடியும்? இதையெல்லாம் பார்த்தே வளர்ந்துட்டேன். மிஸ் பண்ண மனசு வரலை. அதுமட்டும் காரணமில்லை...” என்றவள் கொஞ்சம் வெட்கம் பூசிய முகத்தோடு,

“ஊர்ல இருந்து என்னோட மச்சான் வருவாங்க. வருஷத்துல ரெண்டு தடவை தான் வருவாங்க அவங்க. அவங்களையும் பார்க்கனும்னு தான்...”

“மச்சான்னா?...” என்ற ரோஷிணியிடம்,

“என்னோட அத்தை பையன். என்னை கட்டிக்க போறவங்க. பரிசம் எல்லாம் போட்டாச்சு. நான் படிச்சு முடிக்கவும் கல்யாணம்...” என சொல்லி,

“அதுதான் அழுதுட்டு இருந்தேன். நீங்களா வந்து கேட்டதும் தான் உங்களால நிச்சயம் எனக்கு ஹெல்ப் பண்ண முடியும்னு தோணுச்சு. அதான் பொய் சொன்னேன்...”

சொல்லி முடிக்கும் வரை அவளையே பார்த்திருந்த நேத்ரா பின் கைப்பிடி சுவரை பிடித்துக்கொண்டு வெளியே பார்த்தவள்,
“பரவாயில்லை. உன்னோட பொய் எங்களுக்கு நல்லதுதான். உன் பாட்டிக்கு என்னவோன்னு பயந்து நீயும் கால் பண்ணலைன்னு தான் இங்க வந்தோம். இது கூட நல்லா தான் இருக்கு. உன் ஊர் எனக்கு பிடிச்சிருக்கு சந்து...”

நேத்ரா பேச பேச சைந்தவிக்கு போன உயிர் திரும்பி வந்ததை போல இருந்தது. சத்யாவிற்கு நடந்ததை பார்த்தவளாகிற்றே. அதுவுமில்லாமல் யாராலும் இலகுவாக நெருங்கிவிடமுடியாத நேத்ராக்காவே அவளின் வீட்டில் இன்று.
பறக்கத்தான் செய்தாள் சைந்தவி. அவளின் மகிழ்ச்சி முகத்திலேயே தெரிய அதை கண்ட வனமலர்,

“என்ன சந்து உங்க ஊர் சந்துபொந்தெல்லாம் சுத்தி காண்பிப்பியா?...” என அவளின் கன்னம் தட்டி கேட்க,

“ஹைய்யோ அக்கா கண்டிப்பா. நீங்க எங்க வீட்டுக்கு வந்ததே ரொம்ப சந்தோஷம். அப்புறம் இன்னொரு விஷயம். எங்கம்மாவுக்கு நான் பொய் சொல்லி வந்தது தெரியாது. காலேஜ் லீவ் விட்டு வந்தேன்னு தான் நினைக்காங்க...” என்றவள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு,

“என் மாமா தான் என் தங்கச்சி பேசறப்போ என்னை பாக்கனும்னு சொல்லி வர சொல்லிருக்காரு. அவ தான் ஹாஸ்டலுக்கு போன் செய்யறப்போ விஷயத்தை சொன்னா...” வெட்க குரலில் கூற,

“அடிப்பாவி அவ்வளோ பெரிய தில்லாலங்கடியா நீ?...” ராகினி கிண்டலடிக்க,

“பார்ரா. பாக்க அப்பாவியாட்டம் இருந்துட்டு செய்யறதெல்லாம் கேடித்தனம்...” ரோஷிணி அவளின் காதை திருகி சொல்ல வெளி வாசலில் இருந்து யாரோ சைந்தவியை அழைத்தனர்.

“அக்கா என் மச்சான் தான். வாங்க அவங்களை காமிக்கிறேன்...”

புள்ளிமானென துள்ளி ஓடும் அச்சிறுபெண்ணை புன்னகையோடு பின் தொடர்ந்தனர் மூவரும்.

அங்கு நிற்றிருந்த இளந்தாரி பையனிடம், “மச்சான் இவுக எம்ட்டு காலேஜ்ல படிக்கிறவக...” ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி அறிமுகப்படுத்தி,
“என் மச்சான். அருளு. நெய்வேலில வேலை பாக்காவுக...” என சொல்ல அவர்களிடம் சகஜமாக உரையாட தயங்கிய அருள் அவர்களுக்கு கொண்டுவந்த மோரை குடுத்துவிட்டு கீழிறங்கி விட்டான்.

மாலை இறங்கும் சமயம் அனைவரும் சைந்தவியோடு கோவிலுக்கு செல்ல அங்குள்ள வழக்கமுறை தோழிகள் நால்வருக்கும் புது அனுபவமாக இருந்தது. வெகுவாக ரசித்தனர். அந்த பெரிய கோவிலை சுற்றி வைக்கப்பட்டிருந்த காவடிகளும் அலங்காரங்களும் பூஜைகளும் என குதூகலமாக ஒவ்வொன்றையும் சைந்தவி விளக்க கூற அனைத்தையும் கவனமாக கேட்டுக்கொண்டனர்.

கோவிலை சுற்றிவிட்டு அங்கிருந்த சன்னிதிகளில் ஒன்றில் கண்மூடி தெய்வத்தை வணங்கியபடி நின்றவள் விழி திறக்க எதிரே ஒருவன் வாயெல்லாம் பல்லாக இவளை பார்த்து வெட்க சிரிப்பு சிரித்தான். முதலில் கண்டுகொள்ளாதவள் மீண்டும் அவன் அதையே செய்து தனது சட்டையை பார்த்துவைக்க அப்போதுதான் கவனித்து அவனின் சட்டை பையின் மேலுள்ள பெயரை படித்தாள்.

படித்த நொடி முகத்தில் ரத்தம் பாய அவன் மீது பாய்ந்துவிட்டாள். நேத்ராவின் இந்த செய்கையில் மற்றவர்கள் அதிர்ந்து நோக்க,
“நேத்ரா என்ன பன்ற? இவங்க சட்டையை விடு...” ரோஷிணி பதறிப்போய் நேத்ராவை இழுக்க,

“இவன் அப்போதிருந்து என்னையே உத்து உத்து பார்த்துட்டு இளிச்சுட்டே இருந்தாண்டி. நானும் போனா போகட்டும்னு பார்த்தா என்னை பாக்கறதும் இவன் சட்டையை பாக்கரதுமா இருக்கான். என்னடானா என்னோட பேரை இவன் சட்டையில எம்ப்ராய்ட் பண்ணிருக்கான்...”

நேத்ரா அவனின் சட்டைபகுதியை பிடித்திருந்த கையை எடுத்து விட்டு காண்பிக்க அங்கே வெளிர் நிற சட்டையில் அடர்நீலத்தில் நேத்ரா என ஆங்கிலத்தில் எம்ப்ராய்டிங் செய்யப்படிருந்தது.

அச்சட்டைக்காரனோ, “இல்லைங்க. இல்லைங்க. நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க...” என பதட்டமாக சொல்ல இன்னும் மாலை மயங்கவில்லை என்பதால் கோவிலில் அதிக கூட்டமில்லை.

இருந்த ஓரிருவரும் அங்கே கூடிவிட நேத்ரா அவனை பிடித்து ஆட்டு ஆட்டு என ஆட்டிக்கொண்டிருந்தாள்.
 
“உன் மூஞ்சிக்கு நான் கேட்குதா? மவனே இன்னைக்கு செத்த...” என அவன் தலையை பிடித்து உலுக்க,

“ஏய், அவர் மேல இருந்து கையெடு முதல்ல...”சேலை தலைப்பை சொருகியபடி ஒரு பெண் வந்து பத்திரகாளியாக நிற்க அவளின் அதட்டலுக்கெல்லாம் மசிவாளா நேத்ரா.

அசையாமல் நின்று, “நீ யாரு?. அதை சொல்லு முதல்ல...” என்றாள் முறைத்தபடி.

“ஹ்ம் இவரு பொண்டாட்டி. பேரு அமிர்தவல்லி @ நேத்ரா...” என அந்த பெண் சொன்னதும் நேத்ராவின் கை தானாக அவனின் சட்டையிலிருந்து இறங்கியது.

“உங்க பேரை உங்க ப்ரெண்ட்ஸ் கூப்பிட்டதை கேட்டேன்ங்க. அதான் உங்களை பார்த்து சிரிச்சேன். நீங்க அதை தப்பா புரிஞ்சிட்டீங்க...” அவன் சொல்ல,

“நீங்க பேசாம இருங்க. முதல்ல பொம்பளபுள்ளைக்கு கொஞ்சம் நிதானம் வேணும். இம்புட்டு மெட்டுமத்தனம் ஆகாது...” என்ற அந்த பெண்,

“உங்களை சொல்லனும். என் பேரை ஷர்ட்ல எழுதுங்கன்னு நான் சொன்னேனா? பெருசா சப்ரைஸ் குடுக்கறேன்னு இப்போ என்ன ஆச்சு பாருங்க. இன்னொரு தடவை இந்த சட்டையை போடுங்க. நானே உங்களை கும்மிடுறேன் கும்மி...”

அப்பெண் அவனை தரதரவென இழுக்காத குறையாக இழுத்துச்செல்ல நேத்ராவின் முகமோ விளக்கெண்ணையை குடித்தது போல ங்கே என்றிருந்தது. அங்கிருந்த சிலரும் நேத்ராவை பார்த்து தலையில் தட்டிக்கொண்டு சென்றனர். ரோஷிணி சிரிக்க ஆரம்பிக்க மற்றவர்களும் சிரித்துவிட்டனர்.

அவர்களை முறைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியே சென்றவளை விடாது துரத்தியது பலத்த சிரிப்பொலி.
திரும்பிபார்த்தவளின் நுரையீரல் முழுவதும் ஜில்லென்ற சுவாசக்காற்று பரவ ஒட்டுமொத்த பட்டுப்பூக்களும் பூத்த பரவசம். நொடியில் அதை மறைத்தவள் அவனை ஏறிட்டாள்.

“தக்காளி மண்டையில மசாலாவே இல்லை போல? எங்க போனாலும் ஒரு கலவரத்தை உண்டு பண்ணி மொக்கை வாங்கறதே பொழப்பா வச்சிருக்க போல?...”

நேத்ராவை வம்பிழுத்த ரிஷி வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க முதன் முதலில் அவனின் ஆர்ப்பாட்டமான சிரிப்பை விழி விரித்து பார்த்தவள் அவன் தன்னை கேலி செய்கிறான் என்பதை உணர்ந்தும் எதிர்பேச்சின்றி மௌனமாக நின்றாள்.
அந்த நொடியை பேச்சால் கலைக்க விருப்பம் இல்லாமல் அவனையே பார்த்தபடி நிற்க சிறிது நேரம் சிரித்தவன் நேத்ராவின் அமைதியில் நிமிர்ந்து பார்த்து ஒற்றை புருவத்தை உயர்த்தி என்னவென கேட்க சித்தம் கலங்கி மொத்தமாக மாறி இருந்தவள் தெளிந்துவிட்டாள்.

“யாரை பாத்து தக்காளின்னு சொன்னீங்க? நீங்க யார் எனக்கு பேர் வைக்க?...” எண்ணையில் விட்ட கடுகாய் பொரிய,

“பேக் டூ பெவிலியன் தக்காளி...” அவளை சீண்டினான்.

“என்ன என்னை ஃபாலோ பண்ணி வந்திருக்கீங்களா?...”என்றாள் கடுகடுவென்ற முகத்தோடு.

“நான்தான் அதை கேட்கனும் தக்காளி. இது என்னோட ஊர். நீ தான் என்னை ஃபாலோ பன்ற?...” அமர்த்தலான குரலில் கேலியாக கேட்டான்.

மீண்டும் அவனை நேத்ரா முறைப்பாக பார்க்க, “ரெண்டு நிமிஷம் முன்னாடி இந்த தக்காளி எங்க காணாம போய்ட்டா?...” கிண்டலாய் சொல்ல,

“வேண்டாம். என்னை வெறுப்பேத்தாதீங்க...” விரல் நீட்டி எச்சரிப்பாய் கூற அவளின் சுண்டுவிரலை பிடித்தவன்,
“உனக்கு பெரியவன் நான். என்னையே விரலை நீட்டி எதிர்த்தா பேசற...” அவளின் விரலை பிடித்து மடக்க அதிர்ந்துவிட்டாள்.

“என்ன கட்டுமரம் இந்த பக்கம் கரை ஒதுங்கற மாதிரி இருக்குது?...” தனக்குள் நினைத்தவள் அவனை சந்தேகமாக அளவிடும் பார்வை பார்க்க மீண்டும் அவளை பார்த்து என்னவென கேட்டு புருவத்து உயர்த்தினான். வெக்கம் கெட்டமனது அவனின் இந்த பாவனையை கொஞ்சமே கொஞ்சம் ரசிக்கத்தான் செய்தது.

“நேத்ரா உன் பார்வையை வேறு புறம் திருப்பு...” மூளை கட்டளையிட,

“இல்லை இல்லை பரவாயில்லை, இன்னும் கொஞ்சம் ஒருமுறை பார்த்துக்கொள்...” என நெஞ்சம் கெஞ்சியது.

நெஞ்சத்தை அப்புறப்படுத்தி புத்தி உரைத்த உண்மையில் மனதை அதட்டி அடக்கியவள் இனி இங்கிருந்தால் வேலைக்காகாது என தோழிகளை தேடி நழுவிவிட்டாள்.

அவளின் அவசர நடையை பார்த்தபடி புன்னகை முகமாக நின்றிருந்த ரிஷியை பின்னிருந்து தொட்டு அழைத்த சுமங்கலி,
“ரிஷி நீ எப்போ ஊர்ல இருந்து வந்த? போன் கூட பண்ணலை. வீட்டுக்கு கூட வராம நேரா கோவிலுக்கு வந்து நிக்கிற?...” அவரின் கேள்விக்கு,

“மாம், நம்ம வீட்டுக்கு போய்ட்டு தான் இங்க வந்தேன். தாத்தா வீட்டுக்கு போறதுக்கு முன்ன பெரியப்பாவுக்கு கால் பண்ணேன். நீங்க எல்லோருமே கோவிலுக்கு கிளம்பிட்டதா சொன்னாங்க. அதான் நேரா இங்கயே வந்துட்டேன்...”
“வீட்டுக்கு வந்திருந்தா தாத்தா சந்தோஷபட்டிருப்பார்ல?...”

“சரி நான் வீட்டுக்கு போய்ட்டே வரேன்...” ரிஷி முறுக்கிக்கொண்டு கிளம்ப,

“சரி சரி ஒன்னும் வேணாம். அதை விடு. சென்னை போன விஷயம் என்னாச்சு?. போன்லையும் ஒரு தகவலும் சொல்லலை. தாத்தா என்னனு கேட்டுட்டே இருந்தாங்க...”

“ஏன் பொண்ணோட அப்பா பேசலையா தாத்தாக்கிட்ட?...” ரிஷி கேட்க,

“ம்ஹூம் பேசலை போல. தாத்தாவும் நீ வரட்டும்னு இருக்காங்க...” ஆவலுடன் சொல்ல ரிஷிக்கு அவரின் ஆர்வம் சங்கடத்தை கொடுத்தது.

“மாம் ஓவர் எக்ஸ்படேஷன் வச்சுக்காதீங்க. எனக்கு இது ஒத்துவரனும்னு தோணலை. நான் அவங்கக்கிட்ட நேராவே நோ சொல்லிட்டு வந்துட்டேன்...” உறுதியான குரலில் கூறியேவிட்டான்.

“ரிஷி?...” சுமங்கலி அதிர்வாக பார்க்க,

“எஸ் மாம். எனக்கு அந்த பொண்ணு பிடிக்கலை. எனக்கு வேண்டாம். நான் அவங்க அம்மாப்பாக்கிட்டையே நேரா சொல்லிட்டேன். தாத்தாவை நீங்க சமாளிச்சுக்கோங்க...”

“நான் என்ன சொல்லி சமாளிக்க? அப்பாவும் கேட்பாரே?...’

கறார் குரலில், “நீங்க தான் ப்ராமிஸ் பண்ணிருந்தீங்க. மேரேஜ் விஷயத்துல என்னை ஃபோர்ஸ் பண்ணமாட்டேன்னு...”
படபடவென சொல்லிவிட்டு அவரின் கன்னம் தட்டி நகர சிலையாக நின்றார் சுமங்கலி. இதை எப்படி கணவனிடமும் மாமனாரிடமும் சொல்ல என குழம்பி நின்றார்.

நேத்ரா ரிஷியிடமிருந்து தப்பித்து ரோஷிணியிடம் மாட்ட அவளோ ரிஷி அவளிடம் என்ன பேசினான் என கேட்டு துளைக்க எதுவோ சமாளித்து அங்கிருந்து நகர்ந்தவள் மலரும் இதையே கேட்கவும் அவளிடமிருந்து தப்பி,

“ஹைய்யோ ராமா இந்த கொசுத்தொல்லை தாங்கலையே...” கண்ணை மூடி கத்தி விழி திறக்க அவளெதிரே சிவராமன் திகைப்பாய் நின்றிருந்தார்.

“ஹைய்யோ திரும்பவும் முதல்ல இருந்தா?...” நேத்ரா அலறியேவிட்டாள்.

அலை தீண்டும்...
 
Nethra and rishi yum sernthu ellorayum suthal vida porangalonu thonuthu....but correspondent oru student a adikadi meet panurathu sathiyamanu apapo oru sinna nerudal than.....but story semma.....superb waiting for the next episode eagerly pa.....
 
Top