Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

“உன் மூஞ்சிக்கு நான் கேட்குதா? மவனே இன்னைக்கு செத்த...” என அவன் தலையை பிடித்து உலுக்க,

“ஏய், அவர் மேல இருந்து கையெடு முதல்ல...”சேலை தலைப்பை சொருகியபடி ஒரு பெண் வந்து பத்திரகாளியாக நிற்க அவளின் அதட்டலுக்கெல்லாம் மசிவாளா நேத்ரா.

அசையாமல் நின்று, “நீ யாரு?. அதை சொல்லு முதல்ல...” என்றாள் முறைத்தபடி.

“ஹ்ம் இவரு பொண்டாட்டி. பேரு அமிர்தவல்லி @ நேத்ரா...” என அந்த பெண் சொன்னதும் நேத்ராவின் கை தானாக அவனின் சட்டையிலிருந்து இறங்கியது.

“உங்க பேரை உங்க ப்ரெண்ட்ஸ் கூப்பிட்டதை கேட்டேன்ங்க. அதான் உங்களை பார்த்து சிரிச்சேன். நீங்க அதை தப்பா புரிஞ்சிட்டீங்க...” அவன் சொல்ல,

“நீங்க பேசாம இருங்க. முதல்ல பொம்பளபுள்ளைக்கு கொஞ்சம் நிதானம் வேணும். இம்புட்டு மெட்டுமத்தனம் ஆகாது...” என்ற அந்த பெண்,

“உங்களை சொல்லனும். என் பேரை ஷர்ட்ல எழுதுங்கன்னு நான் சொன்னேனா? பெருசா சப்ரைஸ் குடுக்கறேன்னு இப்போ என்ன ஆச்சு பாருங்க. இன்னொரு தடவை இந்த சட்டையை போடுங்க. நானே உங்களை கும்மிடுறேன் கும்மி...”

அப்பெண் அவனை தரதரவென இழுக்காத குறையாக இழுத்துச்செல்ல நேத்ராவின் முகமோ விளக்கெண்ணையை குடித்தது போல ங்கே என்றிருந்தது. அங்கிருந்த சிலரும் நேத்ராவை பார்த்து தலையில் தட்டிக்கொண்டு சென்றனர். ரோஷிணி சிரிக்க ஆரம்பிக்க மற்றவர்களும் சிரித்துவிட்டனர்.

அவர்களை முறைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியே சென்றவளை விடாது துரத்தியது பலத்த சிரிப்பொலி.
திரும்பிபார்த்தவளின் நுரையீரல் முழுவதும் ஜில்லென்ற சுவாசக்காற்று பரவ ஒட்டுமொத்த பட்டுப்பூக்களும் பூத்த பரவசம். நொடியில் அதை மறைத்தவள் அவனை ஏறிட்டாள்.

“தக்காளி மண்டையில மசாலாவே இல்லை போல? எங்க போனாலும் ஒரு கலவரத்தை உண்டு பண்ணி மொக்கை வாங்கறதே பொழப்பா வச்சிருக்க போல?...”

நேத்ராவை வம்பிழுத்த ரிஷி வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க முதன் முதலில் அவனின் ஆர்ப்பாட்டமான சிரிப்பை விழி விரித்து பார்த்தவள் அவன் தன்னை கேலி செய்கிறான் என்பதை உணர்ந்தும் எதிர்பேச்சின்றி மௌனமாக நின்றாள்.
அந்த நொடியை பேச்சால் கலைக்க விருப்பம் இல்லாமல் அவனையே பார்த்தபடி நிற்க சிறிது நேரம் சிரித்தவன் நேத்ராவின் அமைதியில் நிமிர்ந்து பார்த்து ஒற்றை புருவத்தை உயர்த்தி என்னவென கேட்க சித்தம் கலங்கி மொத்தமாக மாறி இருந்தவள் தெளிந்துவிட்டாள்.

“யாரை பாத்து தக்காளின்னு சொன்னீங்க? நீங்க யார் எனக்கு பேர் வைக்க?...” எண்ணையில் விட்ட கடுகாய் பொரிய,

“பேக் டூ பெவிலியன் தக்காளி...” அவளை சீண்டினான்.

“என்ன என்னை ஃபாலோ பண்ணி வந்திருக்கீங்களா?...”என்றாள் கடுகடுவென்ற முகத்தோடு.

“நான்தான் அதை கேட்கனும் தக்காளி. இது என்னோட ஊர். நீ தான் என்னை ஃபாலோ பன்ற?...” அமர்த்தலான குரலில் கேலியாக கேட்டான்.

மீண்டும் அவனை நேத்ரா முறைப்பாக பார்க்க, “ரெண்டு நிமிஷம் முன்னாடி இந்த தக்காளி எங்க காணாம போய்ட்டா?...” கிண்டலாய் சொல்ல,

“வேண்டாம். என்னை வெறுப்பேத்தாதீங்க...” விரல் நீட்டி எச்சரிப்பாய் கூற அவளின் சுண்டுவிரலை பிடித்தவன்,
“உனக்கு பெரியவன் நான். என்னையே விரலை நீட்டி எதிர்த்தா பேசற...” அவளின் விரலை பிடித்து மடக்க அதிர்ந்துவிட்டாள்.

“என்ன கட்டுமரம் இந்த பக்கம் கரை ஒதுங்கற மாதிரி இருக்குது?...” தனக்குள் நினைத்தவள் அவனை சந்தேகமாக அளவிடும் பார்வை பார்க்க மீண்டும் அவளை பார்த்து என்னவென கேட்டு புருவத்து உயர்த்தினான். வெக்கம் கெட்டமனது அவனின் இந்த பாவனையை கொஞ்சமே கொஞ்சம் ரசிக்கத்தான் செய்தது.

“நேத்ரா உன் பார்வையை வேறு புறம் திருப்பு...” மூளை கட்டளையிட,

“இல்லை இல்லை பரவாயில்லை, இன்னும் கொஞ்சம் ஒருமுறை பார்த்துக்கொள்...” என நெஞ்சம் கெஞ்சியது.

நெஞ்சத்தை அப்புறப்படுத்தி புத்தி உரைத்த உண்மையில் மனதை அதட்டி அடக்கியவள் இனி இங்கிருந்தால் வேலைக்காகாது என தோழிகளை தேடி நழுவிவிட்டாள்.

அவளின் அவசர நடையை பார்த்தபடி புன்னகை முகமாக நின்றிருந்த ரிஷியை பின்னிருந்து தொட்டு அழைத்த சுமங்கலி,
“ரிஷி நீ எப்போ ஊர்ல இருந்து வந்த? போன் கூட பண்ணலை. வீட்டுக்கு கூட வராம நேரா கோவிலுக்கு வந்து நிக்கிற?...” அவரின் கேள்விக்கு,

“மாம், நம்ம வீட்டுக்கு போய்ட்டு தான் இங்க வந்தேன். தாத்தா வீட்டுக்கு போறதுக்கு முன்ன பெரியப்பாவுக்கு கால் பண்ணேன். நீங்க எல்லோருமே கோவிலுக்கு கிளம்பிட்டதா சொன்னாங்க. அதான் நேரா இங்கயே வந்துட்டேன்...”
“வீட்டுக்கு வந்திருந்தா தாத்தா சந்தோஷபட்டிருப்பார்ல?...”

“சரி நான் வீட்டுக்கு போய்ட்டே வரேன்...” ரிஷி முறுக்கிக்கொண்டு கிளம்ப,

“சரி சரி ஒன்னும் வேணாம். அதை விடு. சென்னை போன விஷயம் என்னாச்சு?. போன்லையும் ஒரு தகவலும் சொல்லலை. தாத்தா என்னனு கேட்டுட்டே இருந்தாங்க...”

“ஏன் பொண்ணோட அப்பா பேசலையா தாத்தாக்கிட்ட?...” ரிஷி கேட்க,

“ம்ஹூம் பேசலை போல. தாத்தாவும் நீ வரட்டும்னு இருக்காங்க...” ஆவலுடன் சொல்ல ரிஷிக்கு அவரின் ஆர்வம் சங்கடத்தை கொடுத்தது.

“மாம் ஓவர் எக்ஸ்படேஷன் வச்சுக்காதீங்க. எனக்கு இது ஒத்துவரனும்னு தோணலை. நான் அவங்கக்கிட்ட நேராவே நோ சொல்லிட்டு வந்துட்டேன்...” உறுதியான குரலில் கூறியேவிட்டான்.

“ரிஷி?...” சுமங்கலி அதிர்வாக பார்க்க,

“எஸ் மாம். எனக்கு அந்த பொண்ணு பிடிக்கலை. எனக்கு வேண்டாம். நான் அவங்க அம்மாப்பாக்கிட்டையே நேரா சொல்லிட்டேன். தாத்தாவை நீங்க சமாளிச்சுக்கோங்க...”

“நான் என்ன சொல்லி சமாளிக்க? அப்பாவும் கேட்பாரே?...’

கறார் குரலில், “நீங்க தான் ப்ராமிஸ் பண்ணிருந்தீங்க. மேரேஜ் விஷயத்துல என்னை ஃபோர்ஸ் பண்ணமாட்டேன்னு...”
படபடவென சொல்லிவிட்டு அவரின் கன்னம் தட்டி நகர சிலையாக நின்றார் சுமங்கலி. இதை எப்படி கணவனிடமும் மாமனாரிடமும் சொல்ல என குழம்பி நின்றார்.

நேத்ரா ரிஷியிடமிருந்து தப்பித்து ரோஷிணியிடம் மாட்ட அவளோ ரிஷி அவளிடம் என்ன பேசினான் என கேட்டு துளைக்க எதுவோ சமாளித்து அங்கிருந்து நகர்ந்தவள் மலரும் இதையே கேட்கவும் அவளிடமிருந்து தப்பி,

“ஹைய்யோ ராமா இந்த கொசுத்தொல்லை தாங்கலையே...” கண்ணை மூடி கத்தி விழி திறக்க அவளெதிரே சிவராமன் திகைப்பாய் நின்றிருந்தார்.

“ஹைய்யோ திரும்பவும் முதல்ல இருந்தா?...” நேத்ரா அலறியேவிட்டாள்.

அலை தீண்டும்...
Excellent
 
Top