Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Ivan Vasam Vaaraayo! - Intro

Advertisement

Annapurani Dhandapani

Well-known member
Member
இந்தப் போட்டியில் பங்கெடுத்துக் கொள்ள வாய்ப்பளித்த மல்லிகா மேம் -க்கு என் மனமார்ந்த நன்றிகள்!

இனிய நட்பூக்களுக்கு,

நான் இந்த தளத்துக்கு புதியவள்! சிலருக்கு என்னைத் தெரிந்திருக்கலாம்! தெரியாதவர்களுக்கு,
நான் அன்னபூரணி தண்டபாணி! பெண்மை, பிரதிலிபி போன்ற தளங்களில் பல கதைகள் எழுதி முடித்திருந்தாலும் சில கதைகள் புத்தகமாக வெளி வந்திருந்தாலும் நான் நன்றாக எழுதுகிறேனா என்று தெரியவில்லை! அதைத் தெரிந்து கொள்ளவும் என் எழுத்துத் திறமையை வளர்த்துக் கொள்ளவும்தான் இந்தப் போட்டியில் பங்கெடுத்துக் கொள்ள வந்திருக்கிறேன்! அதற்கு வாசகர்களாகிய நீங்கள்தான் எனக்கு துணையாக இருக்க வேண்டுமென்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


இந்தக் கதை பற்றி:

கதையின் தலைப்பு: இவன் வசம் வாராயோ!

நாயகன்: தமிழ்வாணன்
நாயகி: நிரஞ்சனா


தலைப்பைப் படித்ததுமே புரிந்திருக்குமே! ஆமாம்! காதல் கதையேதான்! அதைக் கொஞ்சம் வித்தியாசமாக பல சுவாரசியமான திருப்பங்களோடு சொல்ல முயல்கிறேன்! உங்களின் கருத்துக்களும் விமர்சனங்களுமே எனக்கு எனர்ஜி பூஸ்ட்டர்ஸ் என்று சொல்லிக் கொண்டு, இன்று கதையின் டீசரை இங்கு பதிவு செய்கிறேன்!

படித்துப் பார்த்து எப்படி உள்ளதென்று சொல்லுங்கள் நட்பூக்களே!!



*********

இவன் வசம் வாராயோ! - டீசர்!



காலை பதினோரு மணியாகி விட்டாலும் கூட பரபரப்புக்கு பஞ்சமில்லாத அந்த காய்கறி மார்க்கெட்டில் தனக்குத் தேவையான காய்கறிகளை பேரம் பேசி வாங்கி, தன் துணிப் பையில் அடைத்துக் கொண்டு வந்து, இரவல் கேட்டு வாங்கி வந்த இரு சக்கர வாகனத்தில் மாட்டிவிட்டு அதில் சாவியை பொருத்திவிட்டு உதைத்தாள் அவள்.

ஒன்று! இரண்டு! மூன்று! ம்ஹூம்! அது கிளம்புவேனா என்றது!

"ஹையியோ.. இது ஸ்டார்ட் ஆக மாட்டுதே.. இப்ப என்ன செய்ணும்னு புரீலயே.." என்று அவள் யோசிக்கும் போதே அவளருகில் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆட்டோ அண்ணன் ஒருவன்,

"என்னமா? ஸ்டாட் ஆகலயா?" என்று கேட்க,

ஆஹா! ஒருத்தன் சிக்கிட்டான்.. இவனையே ஸ்டார்ட் பண்ண வச்சுடுடீ.. என்று தனக்குள் கூறிக் கொண்டவள்,

"ஆமாண்ணா! என்னன்னு தெரீல! ஸ்டார்ட் ஆகல.." என்றாள் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு!

அந்த ஆட்டோ அண்ணன் கர்ம சிரத்தையாய் வந்து இவளுடைய இரவல் வாகனத்தை இரண்டு மிதி மிதித்து ஸ்டார்ட் செய்து கொடுக்க,

"ரொம்ப தேங்க்ஸ்ண்ணா!" என்று வாயெல்லாம் பல்லாக நன்றி கூறிவிட்டு வாகனத்தில் ஏறி அமர்ந்து பறந்தாள் அவள்!

மார்க்கெட்டைக் கடந்து வெளியே வந்து இரண்டு பெரிய சாலைகளையும் பயத்துடனேயே கடந்து, வலது பக்கம் இருக்கும் தன் வீடிருக்கும் தெருவுக்குள் திரும்ப அவள் எத்தனிக்கவும் இடது பக்கத்திலிருக்கும் ரயில்வே கேட் திறந்து விட, ரயில் தண்டவாளத்தைக் கடந்து வாகனங்கள் வேகமாக வரவும் சரியாக இருந்தது! இவள் வலது பக்கம் திரும்ப முடியாமல் சில நிமிடங்கள் திணறிவிட்டு, பின்னர் அவசரமாகத் திரும்ப, வண்டி நிலை பிழன்று சரிந்தது! வண்டியில் மாட்டியிருந்த காய்கறிப்பை கீழே விழுந்து காய்கறிகள் தெருவில் சிதறியது!

"ஹையியோ... என் வெங்காயம்! வெங்காயம்! ஓடுது.. பிடி.. பிடி.." என்று இவள் தன் வண்டியை தூக்க முடியாமல் தூக்கி அவசர அவசரமாக ஓரமாக நிறுத்திவிட்டு, சிதறி ஓடும் வெங்காயங்களின் பின்னால் ஓடினாள்!

"பிடிங்க.. பிடிங்க.. ஏங்க.. பிடிங்க.." என்ற பெண்ணின் அலறல் கேட்டு அவசரமாகத் திரும்பிப் பார்த்த ஒரு நெடியவன், தன்னருகே தேவதை போல ஒரு பெண் ஓடி வருவதைக் கண்டு அதிர்ச்சியாகி, சுற்று முற்றும் பார்க்க, அவளை யாரும் துரத்தி வரவேயில்லை! அவளுடைய பொருளை யாரும் பறித்துக் கொண்டு ஓடுவது போலும் தெரியவில்லை! அப்புறம் இவள் ஏன் இப்படிக் கூவுகிறாள் என்று குழம்பினான்!

அவளோ இன்னும்.. பிடி பிடி என்று கூவிக் கொண்டே, ஓடி ஓடி கீழே தரையில் சிதறிக் ஓடும் வெங்காயங்களைப் பொறுக்குவதைப் பார்த்த பின் தான் அங்கு என்ன நடக்கிறது என்று அவனுக்குப் புரிந்தது!

வெங்காயங்கள் இவன் காலருகேயும் ஓடி வர, இவனும் அவற்றை எடுக்கத் தொடங்கினான்! எல்லா வெங்காயங்களையும் எடுத்தவள் அங்கு அவளுக்காக வேறு சிலரும் வெங்காயம் பொறுக்கியதைக் கண்டு, ரொம்ப தேங்க்ஸ்! ரொம்ப தேங்க்ஸ்! என்று ஒப்பித்தபடியே எல்லாரிடமும் வாங்கி தன் பையில் போட்டுக் கொண்டாள்.

இவனிடமும் வந்து ரொம்ப தேங்க்ஸ்ங்க என்று ஒப்பித்தபடியே வெங்காயத்தை வாங்கித் தன் பையில் போட்டுக் கொண்டு வந்து தன் இரவல் வாகனத்தில் மாட்டிவிட்டு வண்டியை கிளப்ப, மீண்டும் அது கிளம்புவேனா என்றது!

சில பல முறை உதைத்துப் பார்த்தவளுக்கு தோல்வியே கிடைத்தது!

கடவுளே! அப்ப மாதிரியே இப்பவும் எந்த இளிச்ச வாயனையாவது வண்டி ஸ்டார்ட் பண்ண அனுப்பி வைப்பா! உனக்கு புண்ணியமா போகும்! என்று மனதுக்குள் வேண்டியபடியே வண்டியை உதைத்தாள்!

அவளுடைய புலம்பலுக்கு செவி மடுத்த இறைவன் அந்த நெடியவனையே அவளுக்குத் துணையாக அனுப்பி வைத்தார்!

"வண்டி ஸ்டார்ட் ஆகலையா? நா வேண்ணா ஸ்டார்ட் பண்ணித் தரவா?" என்று அவளருகில் வந்தான் அவன்!

நா வேண்டினதும் இந்த இளிச்ச வாயனை அனுப்பினதுக்கு நன்றி கடவுளே! என்று உள்ளுக்குள் சிரித்தபடி வெளியே பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டவள்,

"ஹூம்.. ரொம்ப தேங்க்ஸ்ங்க.." என்று கூறி நகர்ந்து நிற்க, அவனும் அந்த வண்டியை உதைத்து ஸ்டார்ட் செய்து கொடுத்தான்!

அவனுக்கு தலையசைத்து நன்றி சொல்லிவிட்டு வண்டியில் ஏறி அமர்ந்தவளைப் பார்த்து,

"வண்டி சர்வீஸ் பண்ணனும்னு நெனக்கிறேன்! எதுக்கும் இனிமே வண்டிய சர்வீஸ் பண்ற வரைக்கும் எங்கியும் எடுக்காதீங்க!" என்றான்!

"ம்.. சரிங்க..." என்ற சொல்லிக் கொண்டே வேகமெடுத்தாள் அவள்.

கட்டுனா இவள மாதிரி ஒருத்திய கட்டணும்.. என்ன ஃபிகரு.. என்ன கலரு...

அழகியே ...

மேரி மீ... மேரி மீ... அழகியே...

என்று காற்று வெளியிடை கார்த்தி போல முணுமுணுத்தபடி மெதுவாக நடந்து போனவன் அந்தத் தெருவின் கடைசியிலிருந்த பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் நுழைந்து முதல் அடுக்கின் மின் தூக்கியருகே செல்ல, அங்கே அந்த வண்டிக்காரியும் நிற்கக் கண்டவன்,

ஆஹா.. அழகி... இந்த ஃப்ளாட்டுதானா? எப்டியாச்சும் பேசி நம்பர் வாங்கிடணும்... மனதுக்குள் நினைத்துக் கொண்டே அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.


*************

முதல் அத்தியாயம் இந்த வார இறுதியில் வரும்! முடிந்தவரை வாரம் ஒன்று என அத்தியாயங்களை பதிவிட முயல்கிறேன் நண்பர்களே!

உங்கள் அன்பையும் ஆதரவையும் எப்போதும் வேண்டும் உங்கள் அன்பு சகோதரி,
அன்னபூரணி தண்டபாணி.
 
Top