Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
காதல் 10:

“என் புருஷனை நான் எதுக்கு மயக்கனும்..?” என்ற மதியின் கேள்வி முகிலனின் காதுகளுக்கள் வண்டுகள் ரீங்காரமிட்டதைப் போல..மீண்டும் மீண்டும் ஒலித்தது.

“மயக்கி தாண்டி வச்சிருக்க மேனா மினுக்கி...” என்று மனதிற்குள் காதல் வசனம் பேசிக் கொண்டிருந்தான் மணி முகிலன்.

ஆனால் அங்கு மதியோ...கண்களில் கொலைவெறியுடன் அனைவரையும் பார்த்துக் கொண்டிருக்க....நடுவில் இருந்த பெரியவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.

திலகாவிற்கும் இது அதிர்ச்சி தான் என்றாலும்...அது சில நிமிடங்கள் தான்.அடுத்த நிமிடம் தெளிந்து விட்டார்.துர்காவிற்கு தான் அழுகையாய் வந்தது.அப்போது கூட அவளின் தவறு அவளுக்கு புரியவில்லை.

“மதி பேசாம இரு..!” என்று பார்வதி அடக்கிக் கொண்டிருக்க...

“இல்லம்மா...எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆகணும்..!இவங்க வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுறாங்க..! நீங்களும் கேட்டுட்டே இருக்கீங்க..?” என்று எகிற..

“என்னடி சும்மா கத்தி..பத்தினி வேஷம் போடுற...அது தான் உனக்கும், அவனுக்கும் ஒன்னுமில்லைன்னு சொல்லி பஞ்சாயத்துலையே அத்து விட்டாச்சே..! இப்ப என்னடி மறுபடியும் புருஷன் அது இதுன்னு உறவு கொண்டாடுற...

ஏன்..? மருமவன் இப்ப பெரிய டாக்டரு அப்படிங்கறதாலையா..?” என்று திலகா நாக்கு மேல் பல்லைப் போட்டு பேச....

வாய்வரை வந்த விஷயத்தை கஷ்ட்டப்பட்டு அடக்கினாள் மதி.எங்கே கட்டுப்பாட்டை இழந்து விடுவோமோ... என்று அவளுக்கே பயம் வந்தது போலும்.இருந்தாலும் இவர்கள் முன்னாடி தோற்பதா..? என்ற வைராக்கியம் வேறு.

“உங்க பஞ்சாயத்துல அத்து விடுறது எல்லாம் சட்டத்துக்கு தெரியாது.நான் சட்டப்படி அவரை விவாகரத்து பண்ணவேயில்லை.இல்லை பஞ்சாயத்துல உங்களுக்கு எதுவும் கையெழுத்து போட்டுக் குடுத்தேனா..?” என்றாள் தெனாவெட்டாய்.

“சும்மா உனக்கு தான் சட்டம் தெரியும்கிற மாதிரி அள்ளி விடாத சரியா..? எங்களுக்கும் தெரியும்..!” என்றான் துரைப்பாண்டி வேகமாய்.
“என்ன தெரியும் உனக்கு..?” என்றாள்.

“மைனர் பொண்ணைக் கட்டிகிட்டான்னு சொல்லி தான ..பிரச்சனை பண்ணி அத்து விட்ட.இப்ப என்ன புதுசா பாசம் பொங்குது.மைனர் பொண்ணு கல்யாணமே செல்லாதுங்கறப்போ..அப்பறம் எங்க சட்டப்படி போறது..?” என்றான் துரை.

“பரவாயில்லையே...! உனக்கு கூட மூளை வேலை செய்யுது..ஆனா பாரு அதுக்கு அவசியமே இல்லை...ஏன்னா இதுக்கு பதில்...” என்று திரும்பியவள்...

“என்ன டாக்டரே..! பதில் நீங்க சொல்றிங்களா..? இல்லை நான் சொல்லவா..?” என்றாள் தெனாவெட்டாய்.

அதுவரை அவளையும்,அவள் சண்டை போடும் அழகையும் ரசித்துக் கொண்டிருந்தவன் அவளின் கேள்வியில் திகைத்தான்.இது அவன் எதிர்பாராதது.

“எப்படி என்னையும் கோர்த்து விடுறா..ராட்ச்சசி..” என்று முனங்கியவன்.. ஒரு முடிவுடன் அவளைத் தெனாவெட்டாய் பார்க்க....இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த முத்துவுக்கு தான் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.

அது தான்....அத்து விட்டாச்சே..! அதுக்கப்பறமும் எப்படி இவ்வளவு தைரியமா பேசுறா..? என்று முத்துவும் யோசித்துக் கொண்டிருக்க...
“என்ன முகிலா...என்ன பண்ணி வச்ச..?” என்றார் மலர் பீதியுடன்.

“நீங்க பயப்படுற அளவுக்கு எல்லாம் ஒண்ணுமில்லைம்மா..” என்றான்.

“அவ என்னென்னமோ சொல்றா..? நீயும் பேசாம இருக்க...? என்னதான் நடந்தது...?” என்று மலர் உலுக்க...

“என்னடி புதுசு புதுசா கதை சொல்லிட்டு இருக்க..இப்படி அடுத்தவ வாழ்க்கையைப் புடுங்கி வாழணும்ன்னு ஆசைப்படுறியே...இதெல்லாம் அந்த கடவுளுக்கே அடுக்காது..நீ நல்லா இருப்பியா..?” என்று துர்கா ஒரு பக்கம் கத்தத் துவங்க....

அவளின் பேச்சில் கலங்கிய தன் கண்களில் இருந்து கண்ணீரை வெளிவராமல் தடுத்து நிறுத்தியவள்...தைரியம் வரப் பெற்றவளாய்..

“அடுத்தவ வாழ்க்கையை புடிங்கி வாழனும்கிற அவசியம் எனக்கு கிடையாது..அதே மாதிரி அடுத்தவ புருஷன்னு தெரிஞ்சும் வாழ நினைக்கிற யோக்கியமான உன்னை விட நான் மோசமானவளும் கிடையாது..!” என்றவள்...

“இது தான் என்னோட முடிவு...எங்கப்பா பங்கு சொத்து வந்தே ஆகணும்..நான் நாளைக்கே வண்டியை வச்சு உழுது வெள்ளாமை வைக்குறேன்..எவன் வந்து என்ன புடுங்க முடியும்..அவனவன் பங்குல என்ன வேண்ணாலும் பண்ணிக்கோங்க..! இது தான் எங்க பதில்... உறுதியான முடிவும் கூட..” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க..

“ஐயோ..! என்ன இவ...டிராக் மாறி..கடைசில அதை குளோஸ் பண்ணிட்டா..நாம ஒரு பிளான் பண்ணா..இவ நமக்கு மேல கில்லாடியா இருக்காளே..!” என்று முகிலன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க..

“கிளம்பலாமா அப்பா...” என்றவள்..அவர்களை அழைத்துக் கொண்டு கிளம்ப....முகிலனின் அருகில் வந்து..அவனின் கண்களைப் பார்த்து...

”வேடிக்கை பார்த்துகிட்டு..என்னைப் பேசுறதை எல்லாம் கேட்டு சந்தோஷப்பட்டுக்கிட்டு இருக்கிங்களோ...சார்..! எனக்கென்னமோ..நீங்க களி திங்க போற நாள் ரொம்ப தூரத்தில் இல்லைன்னு தோணுது..!” என்றவள்..அருகில் இருந்த மலரிடம்..

“மகனுக்கு வேற பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ற மும்பாறத்துல இருக்கிக போல...சந்தேகமே வேண்டாம்..உங்க பையன் கண்டிப்பா மாமியார் வீட்டுக்கு போய்டுவார்...!” என்று எகத்தாளம் பேசிக் கொண்டு வெட்டிக் கொண்டு நடக்க..

“என்ன நடக்கிறது இங்கே..!” என்பதைப் போல் பார்த்து வைத்தார் மலர்.

மதி அந்த இடத்தை விட்டு காலி செய்யவும் மழை பேஞ்சு ஓய்ந்ததைப் போல் இருந்தது.

ஆனால் அங்கிருந்த யாருக்கும் அதிர்ச்சி அகன்றபாடில்லை.திலகாவிற்கு போட்ட திட்டமெல்லாம் கைவிட்டு போய்விடுமோ என்ற பயம் மனதிற்குள் துளிர் விட...அப்போது புதிதாய் ஆரம்பித்தாள் கோபியின் மகள் ராணி.

“என்ன அயித்தை...உங்களுக்கு என்னையெல்லாம் பார்த்தா மருமகளா கண்ணுக்குத் தெரியாது போல...! முன்னாடி மதி..இப்ப துர்கா..அடுத்து இவளை எப்ப அத்து விடுவிங்கன்னு சொல்லுங்க...அடுத்து மாமனை நான் கட்டிக்கிறேன்...” என்றாள்.

“என்னாடி வாய் ரொம்ப நீளுது..! என் மக இன்னமும் வாக்கப்பட்டே போகலை..அதுக்குள்ள அத்து விடுறதைப் பத்தி பேசுறவ..?” என்றார் திலகா எரிச்சலுடன்.

“அட அதுக்கில்லை பெரியம்மா....பின்னாடி அப்படி ஒரு நிலைமை வந்தா..மலரத்தை பொண்ணு தேடி அலையக் கூடாது இல்ல...அதான் இப்பவே சொல்லி வைச்சேன்..!” என்றாள் இடக்காய்.

அவர்கள் அனைவரையும் எரிச்சலுடன் பார்த்தவன்....அங்கிருந்து கிளம்ப தயாராக..

“என்ன மருமவனே கிளம்புறிங்க..? என் மகளுக்கு ஒரு பதிலை சொல்லிட்டு போங்க..!” என்று திலகா ஒரே போடாய் போட...
“நான் என்ன பதில் சொல்லணும்..?” என்றான் கூர்மையாய் பார்த்தபடி.

“எப்ப கல்யாணத்தை வச்சுகிடலாம்ன்னு தான்..” என்று சொல்ல..

“என்னைப் பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது..! இளிச்சவாயன் மாதிரி இருக்கா..?” என்று கோபமாய் கத்தியவன்..

“என்னம்மா இதெல்லாம்? நான் எப்ப கல்யாணத்துக்கு சரின்னு சொன்னேன்..!” என்றான் மலரிடம்.

“இன்னமும் நாங்களும் ஒன்னும் சொல்லலை முகிலா..!” என்றார் மலர் கொஞ்சம் பயத்துடன்.

“அட என்ன மதினி இப்படி பேசுறிங்க..? ஜாதகம் எல்லாம் பார்த்து பேசி முடிக்க போறப்ப..இப்படி சொல்றிங்க..?” என்றார் திலகா கோபமாய்.

“என்ன மாமா..? என்னை ஏமாத்தலாம்ன்னு முடிவு பண்ணிட்டிகளா..?” என்றாள் துர்கா கலங்கிய கண்களுடன்.

“ஏய்..!” என்று ஒரே உறுமலாய் உறுமினான் முகிலன்.அவனின் சத்தத்தில் அங்கு அப்படி ஒரு அமைதி நிலவ..

“உன்னை ஏமாத்தறது தான் என்னோட வேலையா...? சொல்லு...? உன்னை காதலிச்சு ஏமாத்துனேனா...இல்லை வயித்துல புள்ளையைக் குடுத்து ஏமாத்துனேனா...?எந்த விதத்துல உன்னையும் உன் குடும்பத்தையும் நான் ஏமாத்துனேன்..!” என்று உறும...அவனின் கண்கள் ரத்த சிகப்பில் மாறியது.

அவனின் கோபம் பார்த்து அதிர்ந்த திலகா...”கோபப்படாதிங்க மருமவனே..! அவ சின்ன கழுதை..அவளுக்கு என்ன தெரியும்..?” என்று சமாதான உடன்படிக்கைக்கு வர...

மூச்சினை சீர் செய்து..தன்னிலைக்கு வர வெகுபாடுபட்டான்.”என் புருஷன்” என்று மதியின் வாயில் இருந்து வந்த வார்த்தைகளினால் மனதில் தோன்றியிருந்த இனிமை காணாமல் போயிருந்தது.இப்போது கோபம் முழுவதும் மதியின் மேல் திரும்பியிருந்தது.

“எல்லாம் இவளால வந்தது....இன்னைக்கு வச்சிருக்கேன் இவளுக்கு..” என்று மதியை மனக்கண்ணுக்குள் கொண்டு வந்து நிப்பாட்டி திட்டிக் கொண்டிருக்க...அவள் சடையைத் தூக்கி பின்னால் போட்டு...அவனைக் கண்டுக்காமல் போனது நியாபகம் வர..அவனின் மனம் கொஞ்சம் சாந்தம் அடைந்தது.

மதியின் முகம் மட்டுமே..அவனுக்கு நிம்மதியைக் கொடுக்கும் மருந்து.அதை அவனுமே உணர்ந்திருக்கிறான்.
 
“ஏண்டி இப்படி என்னைக் கொள்ளாம கொல்லுற..? அப்படி நான் என்ன பண்ணேன்..? எனக்கு எதுக்கு இந்த தண்டனை...என்கிட்டயே வந்துடு மதி...” என்று மனதிற்குள் அவன் அரற்றிக் கொண்டிருக்க..

“அவளை நிரந்தரமா அத்துவிடுறத்துக்கு வழி இருக்கா பெரிசாமி அண்ணே..!” என்று திலகா கேட்க..

“என்ன நினச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல..? நான் என்ன ஆடா மாடா...உங்க வீட்ல இழுத்துட்டு போய் கட்ட..எங்கம்மாவோட உறவுங்கறதால தான் இவ்வளவு பொறுமையா பேசுறேன்..இல்லை..எனக்கு வர ஆத்திரத்துக்கு...” என்று கையை முருக்க...

“முகிலா..” என்று அதட்டினார் பெரியசாமி.

“இங்க இருக்குற எல்லாத்துக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன்...இவ்வளவு நேரம் நான் அமைதியா இருந்ததுக்குக் காரணம்...எனக்கு பேசத் தெரியாமையோ...இல்லை உங்களைக் கண்டு பயந்துகிட்டோ இல்லை...இது உங்க குடும்ப பிரச்சனை..நீங்க பேசி முடிவு பண்ணனும்ன்னு தான்.

எப்ப..மதி என்கூட வந்ததை வச்சு அவளைத் தப்பா பேசுனிங்களோ... அப்பவே எல்லார் கழுத்தையும் திருகியிருப்பேன்.ஆனா மதி பேசட்டும்..அவ வாய்ல இருந்தே எல்லாம் வரட்டும்ன்னு தான் அமைதியா இருந்தேன். அதை உங்களுக்கு சாதகமா எடுத்துகிட்டா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது.

அப்பறம் இன்னொன்னும் சொல்லணும்...மாப்பிள்ளை,மருமகன்னு யாராவது என் வீட்டுப்பக்கம் வந்திங்க...? என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது...எனக்கு பொண்டாட்டின்னா அது வண்ண மதி மட்டும் தான்.அப்பாவும் அவ தான் என் பொண்டாட்டி...இப்பவும் எப்பவும் அவ தான்....என் வாழ்க்கையிலும்,மனசுலயும் அவ ஒருத்திக்கு மட்டும் தான் இடம்..
அதனால் தேவையில்லாம..எல்லா விஷயத்துலயும் தலையிடுறதை விட்டுட்டு..போய் அவங்க அவங்க வேலையைப் பாருங்க..!” என்றவன்..

“ங்கான்...திலகா அத்தை....இனி என் பொண்டாட்டி எப்பவும் என்கூட பைக்ல வருவா..உங்ககிட்ட முன்னாடியே சொல்லிடனும் பாருங்க..!” என்றான் நக்கலாய்.

ஆனால் அதற்கு எல்லாம் திலகா அசரவேயில்லை.அவரது திட்டம் நிறைவேறும் வரை அவர் எந்த எல்லைக்கும் போவார்.அதாவது தாழ்ந்து.

“உன் முன்னாடியே தானா...இன்னொருத்தனை விரும்புறேன்னு சொல்லிட்டு போனா..? அவளுக்காக இவ்வளவு பேச்சு பேசுற..?” என்றான் துரை.

முகிலன் இது நாள் வரைக்கும் எந்த கேள்விக்கு பயந்து வாயைத் திறக்காமல் இருந்தானோ..அதே கேள்வி.இப்போது சபையில்.மனதிற்குள் துடித்தாலும்..வெளியே அவன் மனத் திடத்தை விட்டுக் கொடுக்கவில்லை.

“அது எங்க பிரச்சனை..அதை நாங்க பார்த்துக்கறோம்..எது எப்படி இருந்தாலும்..அவளுக்கு நான் தாலி கட்டியிருக்கேன்...அதனால புருஷன் நான் தான்..என் பொண்டாட்டியை எப்படி வழிக்கு கொண்டு வரதுன்னு எனக்குத் தெரியும்..போய் உனக்கு விட்ட வேலையை நீ பாரு..!” என்று திமிருடன் கூறியவன்..

இதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என்பதைப் போல் அங்கிருந்து வேகமாய் கிளம்பினான்.ஆனால் மனதிற்குள் ஆறாமல் இருந்த பல காயங்கள் இன்று மீண்டும்...புது காயங்களாய்.

ஆசைப் பட்ட மனதிற்கு அருமருந்தே அவள் அருகாமை தான்.ஆனால் இதை அறியாத அவளோ..அவள் வீட்டில்.

அவள் இதை மட்டுமா அறியவில்லை.அவன் மனதினையும் அறியவில்லையே..? அப்படி தெரிந்து கொள்ள முயற்சி செய்திருந்தால்.. இன்று இவ்வளவு பிரச்சனைகள் இருந்திருக்காதோ...எத்தனை வருட தவம்..? எத்தனை வருட ஏக்கம்..?
“மதி மதி” என்று அவன் உள் மனம் அரற்ற....”அவளின் மாமா..மாமா..” என்ற விளிப்பிற்கு மனம் ஏங்கியது.

“நினைவுகளில் கூட அவனுக்கு இனிமையில்லை.அந்த அளவிற்கு அவனுக்கு நடந்த விஷயங்கள் கூட கசப்பானவை தான்.அதன் நினைவுகள் இன்றும் யோசிக்கும் போது..அதிகமாய் கசக்கத்தான் செய்கிறது அவனுக்கு.சில உண்மைகள் கசக்கும் என்பது அவன் வாழ்வில் மட்டுமே மெய்யாகிப் போன ஒன்று.

காதலுக்கும்,காதலிக்கும்,கல்யாணத்திற்கும் இடையே அல்லல் பட்டுக் கொண்டு தவிக்கிறான்.அவனின் தவிப்பை மதி புரிந்து கொள்ளும் காலம் எப்போது..?

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அவன் சொன்ன சில விஷயங்கள்,சில பொய்கள்..இன்று அவனுக்கே திரும்பி..திருப்பி திருப்பி அடிப்பதை மட்டும் அவனால் தாங்க முடியவில்லை.

“இதை இப்படியே விட்டால் சரி வராது..” என்று எண்ணியவன்..அதே கோபத்துடன் சென்றான்.

அங்கே மதியின் வீட்டிலோ..ஆழ்ந்த அமைதி.அனைரும் ஒவ்வொரு பக்கம் திரும்பி அமர்ந்திருக்க....மதி மட்டும் விதியே என்று அமர்ந்திருந்தாள்.

“என்ன நினச்சுட்டு இருக்க மதி..?” என்றார் பார்வதி.

மதி அமைதியையே பதிலாய் தர...

“எங்ககிட்ட இருந்து எதையாவது மறைக்கிறியா மதி..?” என்றார் மனோகரன்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா..!” என்றாள் மதி.

“நீ அங்க பேசுன வேகத்தைப் பார்த்தா அப்படி தெரியலையே..?நடந்த பிரச்சனையையும் தாண்டி என்னவோ நடந்திருக்கு..இல்லைன்னா நீ இவ்வளவு உறுதியா பேசுற ஆள் கிடையாது...சொல்லு..!” என்று பார்வதி கோபத்துடன் கேட்க...

“அது வந்து...” என்று அவள் இழுக்க...

“என்ன வந்து போயி...என்ன நடந்ததுன்னு சொல்லு..!” என்றர அதட்டி.

“அவளை ஏன் கேட்குறிங்க..? என்னைக் கேளுங்க..!” என்றான் மணி முகிலன்.

அவனின் குரலில் வெகுண்டு திரும்பியவள்....”நீங்க ஒன்னும் சொல்ல தேவையில்லை....” என்றாள் வெடுக்கென்று.

“பாருங்கப்பா...!இவ அங்க என் புருஷன்,என் புருஷன்னு மூச்சுக்கு மூச்சு சொல்லுவாளாம்...நாங்க கேட்போமாம்..இப்ப நான் பேசத் தேவையில்லையா..?” என்றான்.

“ஏன் இவ்வளவு பேசறவர் அங்க பேசியிருக்க வேண்டியது தானே..!” என்றாள் வெடுக்கென்று.

“பேசலைன்னு நீ பார்த்தியா..?” என்றான் அவனும் வெடுக்கென்று.

“இப்ப என்ன விஷயமா இங்க வந்திங்க..?” என்றார் பார்வதி பட்டும் படாமல்.

“என்ன அத்தை பட்டும் படாமல் பேசுற மாதிரி இருக்கு..?” என்றான்.

“இனிமேல் பேச என்ன இருக்கு..? அதான் எல்லாம் முடுஞ்சு போய்டுச்சே..!” என்றார் விரக்தியாய்.

“இப்ப நீங்க இவ்வளவு விரக்தியா பேசுற அளவுக்கு என்ன நடந்தது..?” என்றார்.

“இன்னமும் என்ன நடக்கணும்..? என் பொண்ணு வாங்குன பேரை அங்க பார்த்திங்க தான...? காதுல கேட்க கூடாத வார்த்தையெல்லாம் கேட்டாச்சு...எங்களுக்கு இது புதுசு இல்லைன்னாலும்...எல்லா நேரமும் கேட்டுகிட்டே இருக்க முடியாதுல...அதான்...” என்றார்.

“உங்க பொண்ணு கேட்டுகிட்டு சும்மா இருந்த மாதிரி தெரியலையே...?” என்றான்.

“சும்மா வேற வரணுமா..? அதெல்லாம் பழைய மதி.இப்ப யாருக்காகவும், யாருகிட்டயும் பேச்சு வாங்கணும்ன்ற அவசியம் எனக்கு கிடையாது..!” என்றாள் மதி எரிச்சலுடன்.

“நீங்க தயவு செஞ்சு கிளம்புங்க...! அப்பறம் இதுக்கும் வேற விதமா பேசுவாங்க..!” என்றார் பார்வதி.

அவரின் வார்த்தைகளில்..அவ்வளவு கோபம் வந்தது முகிலனுக்கு.

“இங்க பாருங்க அத்தை..நான் ஒன்னும் கள்ளக் காதலி வீட்டுக்கு வரலை..என் பொண்டாட்டி வீட்டுக்கு அவளைப் பார்க்கத்தான் வந்தேன்..இதுல தப்பா பேச என்ன இருக்கு..?” என்றான்.

“அது தான் இல்லைன்னு அப்பவே அத்து விட்டாச்சே..! நான் மதிக்கு வேற இடத்துல மாப்பிள்ளை பார்க்கலாம்ன்னு இருக்கேன்..!” என்றார் உறுதியான குரலில்.

ஏனோ அதைக் கேட்டவுடன் மதிக்கு அருவெருப்பாய் இருந்தது. வார்த்தையால் கூட அப்படி ஒரு விஷயத்தைக் கேட்க பிடிக்கவில்லை.

“அட பாருங்கப்பா....! என்ன மதி மேடம்...நீங்களும் களி திங்க ரெடியா இருக்கீங்க போல..?” என்றான்.

அவள் முறைத்து பார்க்க... பார்வதியோ புரியாமல் பார்க்க...”என்ன அத்தை புரியலையா...? நீங்களும்,ஊரும் சேர்ந்தது அத்து விட்டாலும்...இப்போ சட்டப்படி அவ என் மனைவி.ரிஜிஸ்தர் ஆபீஸ்ல பதிஞ்சு..பக்காவா வச்சிருக்கேன் எல்லாமே..!” என்றான் கூலாய்.

பார்வதி இதை எதிர்பார்த்தார்..இருந்தாலும் கொஞ்சம் அதிர்ச்சி இருக்கத்தான் செய்தது.

“இன்னைக்கு இல்லை நேத்து இல்லை...நாலு வருஷம் ஆகிடுச்சு...உங்க மகளுக்கு எப்ப இருபத்தியோரு வயசு முடுஞ்சதோ அப்பவே அவளைக் கூட்டிட்டு போய்...சாரி அவ பாசைல சொல்லனும்ன்னா கடத்திட்டு போய்..கையெழுத்து போட வச்சேன்..!” என்றான் ஸ்டைலாக சாய்ந்து நின்று கொண்டு.

பார்வதி மகளை முறைக்க...மதியோ தலையைக் குனிந்தாள்.அவளும் வேண்டும் என்றா போனாள்.காலேஜ் போவதற்காக வந்தவளை...தூக்கிக் கொண்டு போய் காரியத்தை செய்து முடித்திருந்தான் அவன்.

இந்த நிமிடம் வரை அதை சொல்லவும் முடியாமல்,சொல்லாமல் இருக்கவும் முடியாமல் தவிப்பவள் ஆயிற்றே..!
“எதுக்கு அப்படி வலுக்கட்டாயமா செய்யணும்...இன்னொரு முறை அத்து விடுறதுக்கா..?” என்றார் பார்வதி சூடாய்.

“பழசை எல்லாம் விடுங்க..! எனக்கு மனைவின்னா அது மதி மட்டும் தான்.யார் தடுத்தாலும்.அதனால் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்குறேன்,கல்யாணம் பண்றேன்னு சொல்ற வேலையை விட்டுட்டு...அவளை என்கூட சேர்த்து வைக்கிற வழியைப் பாருங்க..!” என்றான்.

“அது இந்த ஜென்மத்தில் நடக்காது..” சொன்னது பார்வதி அல்ல மதி.

“நான் நடத்திக் காட்டுவேன்..!” என்றான் முறுக்கேறிய முகத்துடன்.

“அதையும் பார்க்கலாம்...” என்றாள் அவளும் நேர் கொண்ட பார்வையாய்.

“பார்க்கதான போற..?” என்றவன் அங்கிருந்து வெளியேற..தலையில் கையை வைத்து அமர்ந்து விட்டார் பார்வதி.

“இவ வாழ்க்கையில் மட்டும் தான் இவ்வளவு பிரச்சனையும் வரணுமா...?” என்று அவர் சோர்ந்து போக..

“என்ன மதி பண்ணிக்கிட்டு இருக்க...இது வாழ்க்கை விஷயம்..” என்று மனோகரன் சொல்ல...

“நான் பட்ட அவமானத்துக்கு நீங்களும் ஒரு காரணம்..அதானால் என்னை கட்டாயப்படுத்தாதிங்க..!” என்றபடி அவள் உள்ளே செல்ல...பெற்றவர்கள் தான் கதி கலங்கி நின்றனர்.

இவர்களின் வாழ்வில் இனி புயல் வீசுமா தென்றல் வீசுமா என்று தெரியாது.

ஆனால் சுழல் காற்றில் இருவரையும் சுழற்றி எடுக்க...அவர்களுக்கே தெரியாமல் சதி வலை பின்னப்பட்டுக் கொண்டிருந்தது.

காதல் வளரும்...
 
Top