Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
கரிசல் 14:

“பார்த்திங்களாக்கா...! முகிலன் அவளைப் பார்க்கனும்ன்னே அவனையே சுத்தி சுத்தி வரா...!” என்று திலகா சொல்ல..

“உண்மைதான் திலகா..! நான் கூட என்னவோன்னு நினைச்சேன்..! ஆனா சரியான கைகாரியா தான் இருப்பா போல..!” என்று அரசி சொல்ல...

“எதுக்கும் மலர் மதினி கிட்ட சொல்லி..கொஞ்சம் கண்டிச்சு வைக்க சொல்லனும்க்கா..!” என்றார் திலகா.

அவர்கள் பேசிக்கொண்டிருக்க..மலரே அவர்களின் அருகில் வர...

“இந்தாருங்க மதினி..! சொல்றமேன்னு கோவத்துக்கு வராதிக..! அந்த மதி கழுதை என்னமோ முகிலனையே சுத்தி சுத்தி வர மாதிரி தெரியுது. நீங்களும் கண்டிக்கிற மாதிரி தெரியலை..!நாளை பின்ன விஷயம் விவகாரமா மாறுச்சுன்னா...இழப்பு என்னம்மோ உங்களுக்கு தான் பார்த்துக்கங்க..!” என்றனர் ஜாடையில்.

“என்ன மதினி சொல்றிங்க..? நம்ம மதி அப்படி எல்லாம் கிடையாது..! அது மட்டுமில்லாம அவ முகிலனைக் கண்டாலே பயப்படுவா...இன்னைக்கு நான் தான் இவனை அனுப்பிச்சு கூட்டிட்டு வர சொன்னேன்..!” என்று மலர் அவளுக்கு பரிந்து கொண்டு வர...அதைக் கேட்ட இருவருக்கும் முகம் கருத்தது.

“என் வீட்லயும்....பொண்ணு இருக்கு மதினி..! அதுவும் உங்களுக்கு நியாபகத்துல இருந்தா சரி..!” என்று திலகா இடக்காக குத்திப் பேச...

“எனக்கு எல்லா அண்ணன்களும் ஒன்னு தான்...மருமகளுகளும் ஒன்னு தான்..எல்லாரு உறவும் தான் எனக்கு வேணும்..! அண்ணன் தம்பி.. இன்னைக்கு அடிச்சுக்குவிக...நாளைக்கு கூடிக்குவிக...அப்பறம் இடப்பட்டு நான் தான் நிக்கணும்..!” என்று மலரும் சொல்ல..

“நல்லா பேச கத்து வச்சிருக்கிக அண்ணி...! என்னமோ மனசுல பட்டதை மறைக்க முடியலை..அதான் உளறிக் கொட்டிட்டேன்..!” என்று அரசியும் பேச்சை முடிக்க பார்க்க..

திலகாவிற்கு என்னமோ..அந்த பேச்சை முடிக்கும் ஆர்வமே இல்லை போல..அவரின் பார்வை தொடர்ந்து மதியை முறைத்துக் கொண்டிருந்தது.

பொங்கல் வைத்து இறக்கி...அதை கோவிலின் முன் கொண்டு வைக்க.. அங்கு அனைவரின் பொங்கல் பானைகளும் வைக்கப் பட்டிருந்தது.

அப்போது அங்கு வந்த கங்காவும்,செல்வியும்..”ஏய் மதி வாடி..! நாம ராட்டினம் ஏறலாம்..!” என்று கூப்பிட...

“ம்கூம்....எங்கம்மா பார்த்தாங்க...அடி பின்னிடுவாங்க...அது மட்டுமில்லை.. என்கிட்டே கைல காசுமில்ல...!” என்று மதி தொங்கிப் போன முகத்துடன் சொல்ல...

அதான் பார்வதி அத்தை இங்க இல்லைல..நீ வாடி..ஒருவாட்டி மட்டும் ஏறி சுத்திட்டு வந்துடலாம்..! என்று ஆசை காட்டினாள் செல்வி.
“நீ போயிட்டு வா மதி..! நான் காசு தரேன்..!” என்று மலர் சொல்ல...

“பரவாயில்லை அத்தை..!” என்று அப்போதும் மறுத்தாள் மதி.ஆனால் கண்கள் மட்டும் ராட்டினத்தை ஏக்கமாகப் பார்க்க...அதைப் பார்த்த முகிலனுக்குள் ஏதோ அவள் ஆசையை அப்போதே நிறைவேற்றி வைக்க வேண்டும் என்ற உணர்வு தலை விரித்தாட...

“கங்கா,செல்வி..வாங்க நானும் ராட்டினம் சுத்த போறேன்..!” என்று முகிலன் அழைக்க...

“இதோ வரோம் அண்ணா..!” என்று சொன்னவர்கள்...”வாடி மதி..! அதான் முகிலன் அண்ணா இருக்காங்கள்ள...! அவங்க பார்த்துப்பாங்க..! மலர் பெரியம்மா சொல்லுங்க இவகிட்ட..!” என்று சொல்ல..

“போ மதி.!” என்று வற்புறுத்தி அனுப்பி வைத்தார் மலர்.

அந்த ராட்டினத்தில் ஏறுவதற்கும்...இளசுகள்,வாண்டுகள் என்று சுற்றி நிற்க...முகிலன் ஒரு பெட்டியில் ஏறிக் கொண்டான்.அவனுடன் இன்னொரு வாலிபனும் இருக்க...அவனுக்கு அடுத்து இறங்கிய பெட்டியில் இவர்கள் மூவரும் ஏறிக் கொண்டனர்.மதி தன் பட்டுப்பாவடையை சுருட்டி.. லாவகமாய் ஒரு மூலையில் அமர...அந்த லாவகத்தைக் கண்ட... முகிலனுக்கு கண்ணை எடுக்க முடியவில்லை.

“இன்னைக்கு என்னமோ எனக்கு ஆகிடுச்சு..! முகிலா...மனச அடக்கு மனச அடக்கு..!” என்று வாய்க்குள் சொல்லிக் கொண்டிருக்க...இவர்களுக்கு மேல் இருந்த பெட்டியில் இருந்தான் முத்து.

மதி ஏறுவதைக் கண்டவன்...”மதி..!” என்று மேல் பெட்டியில் இருந்து கையை அசைக்க...அவனின் குரலில் மேலே அண்ணாந்து பார்த்தவள்..”ஏய் முத்து..! நீ எப்ப ஏறுன..?” என்றாள் சத்தமாய்.

“இப்ப தான்...நீங்க தான் கவனிக்கலை..!” என்று அவன் சிரித்துக் கொண்டே சொல்ல...அவர்கள் பேசுவதை அங்கிருந்த சிலர் வேடிக்கை பார்க்க.. முகிலனுக்கு அவ்வளவு நேரம் இருந்த நிம்மதி போய்..எரிச்சல் வந்து புகுந்து கொண்டது மனதில்.

முகிலனின் சிடுசிடுத்த முகத்தைப் பார்த்த முத்துவுக்கு அப்படி ஒரு சந்தோசம்...! அவனை இன்னமும் கடுப்பேற்ற எண்ணியவன்...
“நான் கல்லை கீழ வைக்குறேன்..! எங்க நீ எடு பார்ப்போம்..!” என்றான் மதியிடம்.

“கண்டிப்பா...நான் எடுத்துக்காட்டுறேன் பாரு..!” என்றாள் அவளும்.

அப்போதெல்லாம் ராட்டினம் சுற்றும் போது..ஒரு பெட்டியில் இருப்பவர் கல்லையோ,பூவையோ வைத்து விட்டு போக...பின்னால் வரும் பெட்டியில் இருப்பவர்கள் அதை லாவகமாய் எடுக்க வேண்டும்...அதை உற்சாகத்துடன் விளையாடுவர்.மதியும் அதே உற்சாகத்தில் முகிலனை கவனிக்க மறந்தாள்.

ராட்டினம் சுற்ற ஆரம்பிக்க..விசில் சத்தங்களும்..சிரிப்பு சத்தங்களும் அரங்கேற....முத்து கல்லை தரையில் வைத்து விட்டு போக...பின்னால் மதி அதை குனிந்து லாவகமாய் எடுக்க...அத்தனை சந்தோஷமும்,பூரிப்பும் அவள் முகத்தில்.

சுற்றி இருப்பவர்களின் மனதையும்,அதில் ஓடும் வக்கிர எண்ணங்களையும்,முகிலனின் மனதில் இருந்த உரிமை உணர்வையும் அறியாமல்...அந்த வயதிற்கே உரிய விளையாட்டுத் தனத்துடன்...அதை ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தாள் மதி.

முதலில் இதை வேடிக்கையாக பார்த்துக் கொண்டிருந்த முகிலன் ஒரு நிலைக்கு மேல தாங்காமல்...முத்து வைத்து சென்ற கல்லை அவன் எடுக்க...அதைப் பார்த்து அவனை முறைத்தான் முத்து.

“என்ன முறைப்பு வேண்டி கிடக்கு..! இந்த கல்லை விட்டே எரிஞ்சுடுவேன்...!” என்று சைகையால் முத்துவிடம் சொன்னான் முகிலன்.
“முடுஞ்சா எறி பார்ப்போம்..!” என்று அவனும் பார்வையால் சவால் விட...அப்போது ராட்டினத்தின் வேகம் குறைய...அவர்களின் சண்டையும் ஒரு முடிவுக்கு வந்தது.

“பெட்டி மேல போறப்ப எல்லாம்..அடிவயித்துல என்னமோ பன்னுச்சுல கங்கா..!” என்று செல்வி கேட்க..

“ஆமாடி..! நல்லா இருந்தது...! சாயங்காலமும் வந்து ராட்டினம் சுத்தலாமா..?” என்று கங்கா கேட்க...

“எங்க எங்கம்மா அஞ்சு ரூபா தான் தந்துச்சு...இன்னு கேட்ட அவ்வளவு தான்...!” என்று செல்வி தன் இயலாமையை எதார்த்தமாக சொன்னாள்.

“சரி விடு செல்வி..!” என்று கங்கா தேற்ற....இவர்கள் பேச்சில் கலந்து கொள்ளாமல் பஞ்சு மிட்டாயை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னடி பார்த்துட்டு இருக்க...?” என்று கேட்க...

“இல்லை பஞ்சுமிட்டாய்...சூப்பரா இருக்கும்ல...!” என்று மதி சொல்லிக் கொண்டிருக்க...அவர்கள் மூவரிடமும் மூன்று பஞ்சுமிட்டாய் கவரை நீட்டினான் முகிலன்.

“ரொம்ப தேங்க்ஸ் அண்ணா..!” என்று அவர்கள் இருவரும் வாங்கிக் கொள்ள...மதி மட்டும் வாங்காமல் நின்றாள்.
“இந்தா பிடி..!” என்றான்.

“வேண்டாம்..!” என்றாள்.

“என்ன லந்தா..! ஒழுங்கா பிடி..!” என்று அதட்டல் போட..அந்த அதட்டலில் மிரண்டவள்..பட்டென்று வாங்கிக் கொண்டாள்.
 
மீண்டும் அவனை கீழ் கண்ணால் முறைக்க...”என்ன..?” என்று அதட்டினான்.

“இல்லை...சுமதிக்கு...!” என்று இழுக்க....அவளின் அப்பாவித்தனமான முகம் கண்டு சிரித்தவன்...சுமதிக்கும் ஒன்றும் வாங்கிக் கொடுத்தான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த திலகாவிற்கு வயிறு எரிந்தது.முகிலனுக்கும் மதியை பிடிக்கிறது என்ற நிஜத்தை அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

முகிலன் அந்த இடம் விட்டு நகர்ந்தது தான் மாயம்..அவளின் அருகில் வந்த திலகா...”இப்படி மயக்கி மயக்கி பேசியே..எல்லா செலவையும் அவன் தலையில் கட்டிட்டு வந்துடுன்னு உன் ஆத்தாக்காரி சொல்லி அனுப்பிச்சாளா..?” என்று வெடுக்கென்று கேட்க...

அவரின் பேச்சில் மதிக்கு அழுகை வர....கையில் இருந்த பஞ்சு மிட்டாயை தூக்கி எறிந்துவிட்டு...அழுது கொண்டே ஓடி விட்டாள்.

இதை தூரத்தில் இருந்து பார்த்த முகிலன்...வேகமாய் அங்கே வர... அவனின் கோபம் தெரியும் என்பதால்..செல்வியும் கங்காவும் கூட அவ்விடத்தை உடனே காலி செய்தனர்.

“என்னாச்சு..? எதுக்கு இப்ப மதி அழுதுகிட்டே போறா..?” என்றான் திலகாவிடம்.

“எனக்கு ஒன்னும் தெரியாது...!” என்றார் அவர்.

“இல்லையே..! நீங்க எதுவோ சொன்னிங்க..! அதைக் கேட்டு தான்..அவ ஓடுனா..?” என்று விடாமல் கேட்க...

இவனைப் பகைத்துக் கொள்ள கூடாது என்று நினைத்தவர்...”நான் ஒண்ணும் தப்பா சொல்லலை மருமவனே...! அந்த முத்து பய கூட உனக்கு என்ன பேச்சு...நாலு பேர் பார்த்தா என்ன நினைப்பாக...இனி அவன் கூட பேசாதன்னு தான் சொன்னேன்..! உடனே ‘ஓ’ன்னு அழுதுகிட்டு..கைல வச்சிருந்த இந்த பஞ்சுமிட்டாய கூட தூக்கிப் போட்டுட்டு ஓடுறா...? என்னதான் குடும்பத்துக்குள்ள சண்டை சச்சரவு இருந்தாலும்..அவளும் எனக்கு மகள் தான.அந்த உரிமையில நான் கண்டிக்க கூடாதா..?” என்று அவன் யோசிக்கவே இடம் தராதபடி...முடித்து விட்டார் திலகா.

“ஹோ...மகாராணி இதுக்கு தான் அப்படி ஓடுனாளா..? என்று கோபத்துடன் அருகில் பார்க்க..அவன் ஆசையாய் வாங்கிக் கொடுத்த பஞ்சுமிட்டாய்... அனாதையாய் கிடந்தது.

முகிலன் மனதில் முதல் அச்சாரம் திலகாவால் இடப்பட்டது.மனதில் இருந்த உரிமை உணர்வில் ஒரு சிறு விரிசல்.
அந்த திருவிழாவிற்கு பிறகு முகிலன் மதியைப் பார்க்கவே இல்லை. ஆனால் மனதில் ஒரு ஓரத்தில் அவளின் நினைவுகள் இருந்து கொண்டே இருந்தது.

காலமும் நேரமும் யாருக்கும் காத்திருக்காமல் செல்ல...பத்தாம் வகுப்பின் இறுதியில் இருந்தனர் இவர்கள் மூவரும்.முத்து இப்பொழுதெல்லாம் பள்ளிக்கு சரியாக செல்வதில்லை.அவனுடைய அம்மா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இருந்தான்.

ஒரு நாள் வரும் வழியில் முத்துவைப் பார்த்த மதி..”என்ன முத்து ஸ்கூலுக்கு வரலையா..? பப்ளிக் எக்ஸாம் வேற வரப்போகுது..!” என்று சொல்ல...

“எனக்கு தான் சுட்டுப் போட்டாலும் படிப்பு வருவேனாங்குது..! இந்த வருஷமும் பெயில் ஆயிட்டா...என்னைத் துப்பி போடுவானுக..! அதுக்கு பேசாம பள்ளிக் கூடத்துக்கே போகாம நின்னுட்டான்னு பேசட்டும்..!” என்றான்.

“எதுக்கு இப்படி எல்லாம் பேசுற..?” என்று அவள் கவலைப் பட..

“என்னை என்ன செய்ய சொல்ற மதி..!அன்னைக்கு அந்த வாத்தி கூட என்னை எப்படி பகடி பேசுனாரு..! நீங்க எல்லாம் சிரிக்க தானே செஞ்சிங்க..!” என்று அவன் முறைத்துக் கொண்டு சொல்ல..

“சாரி முத்து..! நாங்க எதார்த்தமாதான் சிரிச்சோம்..! அதுக்காக ஏன் ஸ்கூலுக்கு வர மாட்டேன்னு சொல்ற..? இந்த பத்தாவதையாவது ஒழுங்கா முடிக்கலாம்ல..!” என்று அவள் பாவமாய் சொல்ல..

“இங்க பாரு மதி..! நான் உன்னை விட மூணு,நாலு வயசு பெரியவன்.. உனக்கு மாமா முறை...என்னையும் மாமான்னே கூப்பிடு...இந்த முத்து,சொத்துன்னு எல்லாம் கூப்பிடத் தேவையில்லை..” என்றான் முகத்தில் அடித்தார் போல்.

“அஸ்க்கு..புஸ்க்கு..! உன்னைய மாமான்னு வேற கூப்பிடனுமா..? ஆளைவிடுடா சாமி..!” என்றபடி அவள் நகர்ந்து செல்ல...

அவளின் கையைப் பிடித்து தடுத்தவன்..”என்ன கொழுப்பா..? இனி என்னை அப்படிதான் கூப்பிடுற...! உன்கூட ஒண்ணா ஸ்கூலுக்கு வந்தா...நீ எப்படி வேணுமின்னாலும் கூப்பிடுவியா..? “ என்று சொல்ல..

“இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு..!” என்றாள் புரியாமல்.

“இல்லை...ஊருக்குள்ள என் கூட்டாளிக எல்லாம் சொன்னானுக...! நீ மதி கூட பள்ளிக் கூடம் போறதால தான்..அந்த புள்ளை உன்னை மாமான்னு கூப்பிட மாட்டேங்குது..! அதே இது..முகிலனை மட்டும் மணி மாமா..மணி மாமான்னு சுத்தி சுத்தி வருது..நீயும் அது கூட படிக்காம..கெத்தா இருந்தா..உன்னையும் முத்து மாமா,முத்து மாமான்னு சுத்தி வரும்.. அப்படின்னு சொன்னானுக..! எனக்கும் அப்படித்தான் தோணுச்சு..!” என்றான்.

அவனுக அப்படி சொன்னா...உன் புத்தி என்ன மாடு மேய்க்கவா போயிருந்துச்சு...! வீணா உன் படிப்பைக் கெடுக்குறானுக..இது கூட உனக்கு தெரியலையா...? மணி மாமாவை எதுக்கு பேசுறிங்க...மணி மாமாவும் நீயும் ஒண்ணா..? என்று அவள் சொல்லி முடிக்கவில்லை...

“இங்க பாரு..! உனக்கு வேணா..அவன் உசத்தியா இருக்கலாம்.ஆனா எனக்கு அப்படி கிடையாது.எனக்கு எதிரியே அவன் தான்..அவன் நல்லா படிக்க போய் தானா..எல்லாரும் என்னைய கேலி பேசுறாக..!உன் புராணத்தை நிப்பாட்டு..!” என்று திட்டிவிட்டு சென்று விட்டான்.

“மணி மாமாவும் நீயும் எனக்கு ஒண்ணா...அவர் மாமா மட்டும் தான்..நீ எனக்கு பிரண்டும் சேர்த்து..!” என்று அவள் சொல்ல வந்த வாக்கியங்களை முழுமை பெற விடாமல்..அதை முடித்து விட்டு சென்றிருந்தான் முத்து.

மதிக்கு தான் ஒன்றுமே புரியவில்லை.அதை தீர யோசித்து முடிவு எடுக்கும் வயதில்லை அவள் வயது.எதையும் ஆர்வமாய் பார்த்து, அலைபாய்ந்து,ஆராய தெரியாத இரண்டும் கெட்டான் வயது.

தன்னுடன் சகஜமாக பேசிக் கொண்டிருந்த முத்து...சட்டென்று இப்படி முகத்தைத் தூக்கிக் கொண்டு போனதை அவளால் தாங்க முடியவில்லை..!கங்காவிடமும்,செல்வியிடமும் சொல்லி அழ...

“இங்க பாரு மதி..! இதை இதோடு அப்படியே விடு..! படிக்கிறதும் படிக்காததும் அவன் விருப்பம்.அவனுக்கு எப்பவுமே முகிலன் அண்ணா மேல பொறமை..அதனால அப்படி தான் பேசுவான்..! இதை எல்லாம் பெரிசு பண்ணாம நம்ம படிக்கிற வேலைய பார்ப்போம்..! எங்களுக்கு ஒண்ணுமில்லை. ஆனா பார்வதி அத்தை உன்னை தான் மலை போல நம்பியிருக்கு..! நீ நல்லா படிச்சு..நல்ல மார்க் வாங்குவன்னு கனவு கண்டுகிட்டு இருக்கு.அதனால அது கனவுல மண்ணை அள்ளி போட்டுடாத..!” என்று கங்கா சொல்ல...

“முத்து பாவம் இல்லையா..?” என்றாள் மதி.

“அதுக்கு நம்ம என்ன செய்ய முடியும்..? எல்லாம் அவங்க அம்மா குடுக்குற செல்லம்..அவ்வளவு தான்...!” என்று செல்வி முடிக்க...அப்போது கொஞ்சம் தெளிந்து இருந்தாள் மதி.

தேர்வுகளும் தொடங்க..அவள் கவனம் முழுவதும் படிப்பில் திரும்பியது. இப்போது எல்லாம் அவள் முத்துவிடம் சரியாக பேசுவதில்லை. அவனையும் பார்க்க முடிவதில்லை.அவன் பரீட்சை எழுத வராதது கண்டு அவளுக்கு உள்ளுக்குள் சிறு வருத்தம் இருக்கத்தான் செய்தது.

எல்லா பரீட்சையையும் நன்றாகவே எழுதினாள்.அன்று அவளுக்கு இறுதி பரீட்சை.சமூக அறிவியல் தேர்வு.எப்பொழுதும் அந்த பாடம் அவளுக்கு மிகவும் விருப்பம்..கூடவே நன்றாக படித்திருந்ததால்..அதுவே அவள் முகத்தில் அதீத புத்துணர்ச்சியைக் கொடுத்தது.

“இன்னைக்கு கடைசி பரீட்சை..நல்லா எழுதிட்டு...சீக்கிரமா வீட்டுக்கு வந்து சேர்ந்துடு..! துணில பேனா மைய அப்பிகிட்டு வந்து நின்ன....அடி வெளுத்துடுவேன்...!” என்று பார்வதி கண்டிப்புடன் செல்ல..

அவர் சொன்ன அனைத்திற்கும் ‘சரி’ என்று தலையை ஆட்டிவிட்டு சந்தோஷமாக சென்றாள்.கடைசி பரீட்சை என்றாலே..மனதில் ஒரு சந்தோசம்...அடுத்து வரும் இரண்டு மாத விடுமுறை..எல்லாத்தையும் கணக்கிட்டு...பேசிக்கொண்டே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவள் வருகைக்காகவே காத்திருந்தவன் போல் வந்தான் முகிலன்.

“எப்ப வந்திங்கண்ணா..?” என்று கங்கா கேட்க..

“நேத்து வந்தேம்மா..!” என்றவன்..”எக்ஸாம் எல்லாம் நல்லா எழுதி இருக்கிங்களா..?” என்றான்.

“நான் பரவாயில்லாம எழுதி இருக்கேன் அண்ணா..! மதி நல்லா எழுதி இருக்கா..! எப்படியும் அவ தான் ஸ்கூல் பர்ஸ்ட் வருவா..!” என்று கள்ளம் கபடம் இல்லாமல் தன் தோழியை புகழ்ந்து சொன்னாள் கங்கா.

“அது சரி ஒழுங்கா படிச்சா சரிதான்..!” என்றவன்...மதியைப் பார்க்க.. அவளோ அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

“எக்ஸாம் எப்ப முடியும்..?” என்றான்.

“மதியம் முடுஞ்சுடும் அண்ணா..!” என்றாள் கங்கா.

“மதிய நேரத்துல அங்க இருந்து தனியாவா வரீங்க..?” என்றான்.

“ஆமாண்ணா..! நம்ம ஊர் பஸ் பத்திதான் உங்களுக்கு தெரியுமே..! இன்னைக்கு நான் விட்ட உடனே வந்துடுவேன் அண்ணா..! இவ வர தான் லேட் ஆகும்..!” என்று கங்கா சொல்ல..

“எதுக்கு..?” என்றான்.

“அதுவா..! இவ நோட்டு புக்கு எல்லாம் டீச்சர் கேட்டாங்க..! அப்பறம் இவ தான் கிளாஸ் லீடர் வேற..எங்க ஸ்கூலுக்கு வந்து குடுத்துட்டு வரணும் அண்ணா..!” என்று அவள் சொல்ல..

“எக்ஸாம் உங்க ஸ்கூல்ல எழுத மாட்டிங்களா..?” என்றான்.

இல்லண்ணா..! எங்க ஸ்கூல்ல சென்ட்டர் போடலை...அதற்கு அடுத்து பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள ஒரு பள்ளியின் பெயரை சொன்னவள்...அங்க போய் எழுதிட்டு வரணும்..! என்றாள்.

“சரிமா..லேட் ஆகப் போகுது..! நீங்க கிளம்புங்க..!” என்றான்.அதுவரை மதி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.என்னமோ மணியைப் பார்த்தாலே அவளுக்கு இப்போதெல்லாம் படபடவென்று அடித்துக் கொள்கிறது.

அவர்கள் சற்று முன்னே சென்று கொண்டிருக்க...”மதி..!” என்றான் கொஞ்சம் அன்பு கலந்த குரலில்.

அந்த குரல் அவளுள் ஏதோ மாயம் செய்ய...தலையை மட்டும் திருப்பினாள்.

“நான் வேண்ணா துணைக்கு வரட்டுமா..?” என்றான்.

“வந்தா நல்லா தான் இருக்கும்..!” என்று யோசித்தவள்...பார்வதியை மனதில் நினைத்துக் கொண்டு..”இல்லை...வேண்டாம்..!” என்று சொல்லிவிட்டாள்.

மனது ஒன்று சொல்ல..அவள் வாய் வேறொன்று சொல்லியது.

“ஆல் த பெஸ்ட்..” என்றான் சத்தமாக.

“தேங்க்ஸ்...மணி மாமா...!” என்றாள் புன்னகை முகமாய்.ஏனோ அந்த முகம் அப்படியே பதிந்து போனது.

தலையை அழகாகக் கோதிக் கொண்டவன் முகத்தில்...காதல் அப்பட்டமாக தெரிய...அவளை நினைத்து தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்.

இனி வரும் பிரளயங்களை அறியாமல்..!

 
Muthu &mukilan idaiyil urimai porattam poikittu irukka ..arasi &thilakam iruvarukum appo irunthe mathi mela verupa a oru thanks mamake ivalo love effecta mukila nice epi sis
 
Last edited:
Top