Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Karisal Kaathal - 23

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
கரிசல் 23:

பஞ்சாயத்தில் இருந்து வீடு வரும் வரை, மதியின் மனம் உலைகளமாய் கொதித்துக் கொண்டிருந்தது.ஒரு வேகத்தில், ஆத்திரத்தில் அப்படி செய்துவிட்டாளே தவிர, அவளின் மனமும், உடலும் நடுங்கிக் கொண்டிருந்தது.

மதியின் இந்த செயலை எதிர்பார்க்காத பார்வதிக்கும் அதிர்ச்சி தான். இப்படி ஒரு தைரியம் அவளுக்கு எப்படி வந்தது என்பது கூட, அவருக்கு புரியாமல் இருந்தது.

பஞ்சாயத்து கலைந்து சில நிமிடங்கள் ஆகியும், மணி முகிலன் அந்த இடத்தை விட்டு நகராமல் நின்றிருந்தான். அவன் கட்டிய தாலி அவன் கையில் இருந்தது.மதியின் மேல் வைத்த நேசம் நெஞ்சில் இருந்தது. மலருக்கு நடந்த விஷயத்தை ஜீரணிக்கவே சில நிமிடங்கள் ஆனது.

இதை அனைத்தையும் எதிர்பார்த்திருந்தவர் போல் இருந்தார் பெரியசாமி. அவரின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. அதை அந்த நிமிடம் கவனிக்கத் தவறினான் மணி முகிலன்.

“நான் சொன்னது சரிதானே மதினி..! பாருங்க எப்படி திமிரா போறான்னு. இந்த வயசுலையே இவ்வளவு திமிர் இருந்தா, இன்னும் போற காலத்துல எப்படி இருப்பா...? இதோட விட்டதேன்னு சந்தோஷப்படுங்க மதினி..!” என்றார் திலகா.

“கொஞ்சம் கூட யோசிக்காம, இப்படி தாலியைக் கழட்டிக் குடுத்துட்டாளே மதினி..” என்று மலர் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தார்.

“சனியன்.., இதோட ஒழிஞ்சதுன்னு நினைச்சுக்குவோம்..! இதுக்கு எதுக்கு ஒப்பாரி வைக்கிறவ..! இதுக்கு தான் நான் முதல்ல இருந்தே தலைப்பாடா அடிச்சுகிட்டேன். யாரு கேட்டா..? எல்லாத்தையும் இங்கனையே விட்டுபுட்டு, வீடு வந்து சேர்ற வழியைப் பாருங்க..” என்ற பெரியசாமி, துண்டை உதறி, தோளில் போட்டவாறு சென்றார்.

“இங்க பாரு முகிலா..! மதி இப்படி செய்யிற பிள்ளை இல்லை. இடையில என்னவோ நடந்திருக்கு..!” என்று தங்கப்பாண்டி சொல்ல, குணபாண்டியும் ஆமோத்தித்தான்.

“உங்களுக்கு ரொம்ப தெரியுமாடா...? வேலைய மட்டும் பாருங்க..” என்று திலகா, அவர்களை சத்தம் போட,

“சித்தி, நாங்க எங்க வேலையைத் தான் பார்க்குறோம். ஆனா, நீங்க தான் தேவையில்லாத நிறைய வேலையைப் பார்க்குறிங்க..இது நல்லதுக்கு இல்லை, பார்த்துக்கோங்க..!” என்றான் குணப்பாண்டி.

அவர்களிடம் பேசினால், முகிலன் முன்பு அசிங்கப்பட வேண்டி இருக்கும் என்று திலகாவிற்கு நன்றாகவேத் தெரியும். அதனால் அதோடு வாயை மூடிக் கொண்டார் திலகா. அந்த இடத்தில் இருந்தும் சென்று விட்டார்.

யாரின் பேச்சும் முகிலனின் காதில் விழவில்லை. மதியின் பேச்சும், செயலும் மட்டும் தான் அவனின் நினைவில் இருந்தது. திடமானவன் என்பதையும் தாண்டி, அவன் கண்கள் கலங்கித்தான் இருந்தது.

பல ஆண்களின் கண்ணீருக்கு அர்த்தம் இல்லை. ஆனால் சில ஆண்களின் கண்ணீருக்கு அர்த்தங்கள் சொல்லத் தேவையில்லை. அந்த வகையில், முகிலன் இரண்டாவது வகை.

அவன் கொண்ட நேசம், கொண்டவளின் வயதைப் பார்க்கவில்லை. யாரைப் பற்றியும் யோசிக்கவில்லை. தன்னவளாக்கிக் கொள்ளும் முயற்சியில் தான், தோல்வி அடைந்து விட்டானே தவிர, அவளை காலம் முழுவதும், நெஞ்சில் சுமக்கத் தயாராகி இருந்தான்.அவனுடைய வயதில், அவ்வளவு தான் யோசிக்க முடிந்தது அவனால்.

“நீ இப்படி பண்ணுவேன்னு, நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை..?” என்றாள் கங்கா.

“ஆமா மதி. இருந்தாலும் நீ செஞ்சது தப்பு..!” என்று செல்வியும் ஆமோதித்தாள்.

ஆனால் மதியோ, பதில் பேசாமல் வெறித்த பார்வையுடன் இருந்தாள். அவள் இருந்த நிலையில், வினோதினி மட்டும் தான், அவளுக்கு முழு ஆதரவு.

“பெரியம்மா..மதியை எங்க கூட அனுப்பி விடுங்க. அவ அங்க வந்து படிக்கட்டும். இங்க இருந்தா, எல்லாரும் இவளைப் பேசியே கொன்னுடுவாங்க..!” என்றாள் வினோ.

“ஆமாக்கா...! மதியை நான் கூட்டிட்டு போறேன்..!” என்று விநோதியினின் அம்மாவும் சொல்ல, யோசித்தார் பார்வதி.

“நீ கூட்டிட்டு போம்மா..! இனியாவது என்பிள்ளை நிம்மதியா படிக்கட்டும். என்ன செலவு ஆனாலும் நான் பார்த்துக்கறேன்..!” என்றார் மனோகர் முதன் முறையாக.

மதி, அவரை ஆச்சர்யமாய் பார்க்க,

“ஆமாம்மா..! இனி நான் குடிக்க மாட்டேன். நான் ஒழுங்கா இருந்திருந்தா, யாரும் இன்னைக்கு இப்படி பேசியிருக்க மாட்டாங்க. இனி உன்மேல சத்தியமா நான் குடிக்க மாட்டேன்..! நீ ஆசைப்பட்ட மாதிரியே, நீ படிமா..!” என்றார்.

“அப்பா...!” என்றபடி நெகிழ்ந்து விட்டாள் வண்ண மதி. பார்வதிக்கும் கூட, கணவரின் மாற்றத்தில் மகிழ்ச்சி தான்.

“யாரெல்லாம், என்னை குடிகாரன் பொண்ணுன்னு சொன்னாங்களோ, யாரெல்லாம் உங்களை மரியாதை இல்லாம நடத்துனாங்களோ, யாரெல்லாம் என் மேல பழி போட்டு பேசுனாங்களோ, அவங்க வாயை அடைக்கிற அளவுக்கு நான் வருவேன்ப்பா..! நீங்க பார்க்கத்தான் போறீங்க..!” என்றவளுக்கும் மனதில் வைராக்கியமும், கண்களில் லேசான கண்ணீரும் தோன்றியது.

“என் பிள்ளையைப் பத்தி, எனக்குத் தெரியும்மா..!” என்ற மனோகரனின் கண்களிலும், இத்தனை நாள் தொலைத்தப் பாசத்தின் ஏக்கம்.
மதி, அவளின் வாழ்க்கைப் பாதையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல ஆரம்பித்தாள். அவ்வப்போது, மின்னி மறையும் முகிலனின் முகமும், எப்போதும் மனதில் இருக்கும் அவனின் நினைவுகள் மட்டுமே அவளுக்கு உந்து சக்தி. ஆனால் இதை அவளே அறியாமல் இருந்தது தான் விதி.

முகிலனும், அவளின் நினைவுகளை மறக்க, அதில் இருந்து தப்பிக்க, படிப்பில் தன்னை நுழைத்துக் கொண்டான்.

அவனுடைய பேச்சு குறைந்தது. வீட்டிற்கு வரும் வருகை குறைந்தது. அவனுடைய பழைய சந்தோசம் தொலைந்தது. இப்படி அனைத்தையும் தொலைத்தவன், அவளை எதிர்காலத்தில் தொலைக்கக் கூடாது என்பதற்காகவே தீவிரமாய் படித்தான்.

இன்று அவனும் வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்துவிட்டான். மதியும் ஒரு நிலைக்கு வந்து விட்டாள். ஆனால் சில மனிதர்களும், அவர்களின் குணங்கள் மட்டும் மாறவேயில்லை.

பழைய நினைவின் தாக்கத்தில் இருந்து வெளி வந்தாள் வண்ண மதி. எல்லாம் இப்போது நடந்து முடிந்த மாதிரி இருந்தது அவளுக்கு. ஆனால் பத்து வருடங்கள் சென்றிருந்தது.

“என்ன மதி, கனவு கண்டு முடுச்சுட்டியா..?” என்றார் பார்வதி.

“என்னம்மா..? கிண்டல் பன்றிங்களா..?” என்றாள்.

“யாரு, நானு கிண்டல் பண்றேனா..? நீ என்னடான்னா, சட்டப்படி அவன் ஏன் புருஷன்னு சொல்ற..? அவனும் வந்து அதை உறுதி பண்ணிட்டு போறான்..? என்ன நடக்குது இங்க..? இன்னும் எத்தனை விஷயத்தை, எங்களுக்குத் தெரியாம மறைச்சிருக்க..?” என்றார் கோபம் கலந்த குரலில்.

“நான் மறைக்கனும்ன்னு நினைக்கலை. அப்படி மறைச்சதால தான், நான் என்னோட படிப்பை முடிக்க முடிஞ்சது. இல்லைன்னா எப்பவோ மறுபடியும் ஒரு பஞ்சாயத்தைக் கூட்டியிருப்பிங்க..!” என்றாள்.

“புரியலை..!” என்றார்.

“எனக்கு மட்டும் என்ன புரியுது. அன்னைக்கு பஞ்சாயத்தோட, எங்க உறவே இல்லைன்னு தலை முழுகிட்டு தான் மெட்ராஸ்க்கு போனேன். ஆனா, மணி மாமா விடுற மாதிரி இல்லை. கிட்டத்தட்ட என்னைக் கடத்திட்டு போய் தான், ரிஜிஸ்ட்டர் ஆபீஸ்ல பதிவு பண்ணினார்.இந்த விஷயம் விநோதினிக்கே தெரியாது..” என்றாள்.

“என்னது கடத்திட்டு போனானா...?” என்று அதிர்ந்தார் பார்வதி.

“தூக்கிட்டு போறதும் ஒண்ணுதான், கடத்திட்டு போறதும் ஒன்னுதான்..!” என்றாள்.

“இதை ஏன் நீ அப்பவே சொல்லலை. சொல்லி இருந்தா அவனை ஒரு வழி பண்ணிருக்கலாம்ல..” என்றார் பார்வதி.

“வேண்டாம்மா..! என்னால அவரு ஒரு தடவை பட்ட அவமானமே போதும். அந்த வயசுல, என்னோட பக்கத்தை மட்டும் தான் நான் யோசிச்சேன். மணி மாமா பக்கமும் யோசிச்சிருக்கணும்.படிப்பைக் கூட பாதியில விட்டிருப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா இப்பதான் தெரியுது, படிச்சு, டாக்டர் ஆகிட்டாங்கன்னு. இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை. இதெல்லாம், இப்படித்தான் நடக்கணும்ன்னு விதி இருக்கறப்போ,யாரால மாத்த முடியும்..!” என்றாள்.

“இது மலர் மதினிக்குத் தெரியுமா..?” என்றார்.

“தெரியலைம்மா..!” என்றாள் ஒரே வார்த்தையில்.

“அவங்க கண்ணு முன்னாடி தான் அத்தனையும் நடந்தது. ஆனா மலர் மதினி கண்டுக்கவே இல்லை. அவங்க கொஞ்சம் பேசியிருந்தா, உன் வாழ்க்கை இவ்வளவு தூரம் சிக்கல் ஆகியிருக்காது..” என்றார்.

“அவங்க மேல எந்த தப்பும் இல்லை. நம்ம சொந்த பந்தமே, எப்படா..எங்க காலை வாரி விடலாம்ன்னு யோசிச்சுட்டு இருக்குறப்போ, அவங்களை குத்தம் சொல்லி என்ன ஆகப் போகுது..?” என்றாள்.

“பக்கத்து வீட்ல இருக்காங்கன்னு தான் பேரு. ஒரு நாள் கூட, உன்னைப் பத்தி விசாரிச்சது கிடையாது..? மறுபடியும் எப்படி உன்னை ஏத்துக்குவாங்க..?” என்றார் பார்வதி.

“நான் யார்கிட்டயும் வாழ்க்கைப் பிச்சை கேட்டுப் போகலை. அப்படி ஒரு அவசியம் எனக்கு இல்லை. எது நடக்கணுமோ, அது தான் நடக்கும். இப்போதைக்கு இந்த பேச்சை விடுங்கம்மா..!” என்று முடித்து விட்டாள் மதி.
 
Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
அங்கே முகிலனின் வீட்டிலும், இந்த பிரச்சனை தான் ஓடிக் கொண்டிருந்தது.

“அந்த புள்ளை, அவ்வளவு உறுதியா சொல்லுது...முகிலன் என்னோட புருஷன்னு. இது எப்ப நடந்துச்சு..? ஒரு வார்த்தை என்கிட்டே சொல்லனும்ன்னு தோணலையா..?” என்றார் மலர்.

“உங்ககிட்ட சொல்லி செஞ்ச கல்யாணம் தான் செல்லாமப் போய்டுச்சு. அதான் சொல்லாம பண்ணேன். ஏன் அவளுக்கேத் தெரியாது. அவளைக் கடத்திட்டுப் போய்தான் ரிஜிஸ்டர் பண்ணேன்..!” என்றான் அசால்ட்டாய்.

“அடப்பாவி..! எவ்வளவு பெரிய விஷயத்தை, இவ்வளவு சாதாரணமா சொல்லிட்டு இருக்க..? மதி மட்டும் ஒரு கம்ப்ளைன்ட் குடுத்திருந்தா, இந்நேரம் நீ கம்பி எண்ணிட்டு இருந்திருப்ப..?” என்றார் மலர் அதிர்ச்சியுடன்.

“அதான் அவ குடுக்கலையே..? அது மட்டும் இல்லாம, அவ நினைச்சிருந்தா, அப்பவே அதை தடுத்திருக்க முடியும்.
ரிஜிஸ்டர் ஆபீஸ்ல, சத்தம் போட்டு கத்தியிருக்க முடியும்.கையெழுத்து போடாம வந்திருக்க முடியும்.ஆனா, இதை எதையுமே அவ செய்யலை. அதுக்கு என்ன அர்த்தம்..? நான் அவ மனசுல இருக்கேன்னு அர்த்தம். அது அவளுக்கேத் தெரியலைன்னு அர்த்தம்...!” என்றான் முகிலன் உல்லாசமாய்.

“இது எப்ப நடந்தது...?” என்றார் மலர்.

“அது நடந்து, நாலு வருஷம் ஆச்சு..!” என்றான் அசால்ட்டாய்.

“இத்தனை வருஷம் என்கிட்டே இருந்து மறைச்சிருக்க.எவ்வளவு சாதாரணமா இருந்திருக்க..?” என்றார் பெரியசாமி ஆதங்கத்துடன்.

“நான் ஒன்னும் யாரையோ கல்யாணம் பண்ணலை. ஏற்கனவே நான் தாலி கட்டுன என் பொண்டாட்டி தான் அவ..!” என்றான்.

“அதான், கழட்டிக் குடுத்துட்டு போயிட்டாளே..?” என்றார் மலர்.

“நான் அதை தப்பா எடுக்கலை. கழட்டிக் குடுத்துட்டு, படிக்க போயிருக்கான்னு தான், மனசுல திரும்ப திரும்ப சொல்லிகிட்டேன்..! இந்த ஜென்மத்துல, அவ மட்டும் தான் எனக்கு பொண்டாட்டி. அதனால, எனக்கு வேற பக்கம் பொண்ணு பாக்குற வேலையை விட்டுட்டு, என் பொண்டாட்டியை இங்க கூட்டிட்டு வர வழியைப் பாருங்க..!” என்றபடி சென்று விட்டான் முகிலன்.

“என்னங்க..இப்படி சொலிட்டு போறான்..?”

“எதுவும் சொல்றதுக்கு இல்லை..! நானும் ஒரு காலத்துல, அறிவு கெட்டத்தனமா நடந்திருக்கேன். இவன் இத்தனை வருஷம் கம்முன்னு இருக்குறப்பவே தெரியும்....ஏதோ விஷயம் இருக்குன்னு. ஆனா இப்படி ஒரு விஷயம் இருக்கும்ன்னு யோசிக்கலை...எப்படியோ, இனியாவது ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தா சரி..!” என்றார் பெரியசாமி.

அவரின் பேச்சைக் கேட்ட, மலருக்கு அப்படி ஒரு ஆச்சர்யம். மதியை ஒரு காலத்தில் வேண்டாம் என்று சொன்னவர், இன்று அவர் வாயாலையே சரி என்று சொல்லிவிட்டார். இதற்கு முழு காரணம் மதி என்பதை மலர் அறிந்திருக்கவில்லை.

மறுநாள் விடியல், எப்போதும் போல் இல்லாமல்,மதிக்கு சற்று நல்ல விடியலாகவே விடிந்தது.வழக்கம் போல், அதிகாலையில் எழுந்தவள், வாசலில் நீர் தெளிக்க வந்தாள்.

கூட்டித் தெளித்துக் கோலம் போட்டு முடிக்கும் வரையிலும், பக்கத்து வீட்டில் இருந்து மலர் வெளியே வரவேயில்லை. வாசல் தெளிக்கவும் இல்லை.

“என்னாச்சு..? மலரத்தை இன்னும் வாசல் தெளிக்கல..?” என்ற யோசனையுடன், அவ்வப்போது திரும்பி பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அவளின் செய்கைகளை, தன்னுடைய அறையில் இருந்து பார்த்த முகிலனுக்கு, மனதிற்குள் சற்று நிம்மதி. அவளை சீக்கிரம் வழிக்கு கொண்டு வந்து விடலாம் என்று எண்ணினான்.

“எதுக்கு நம்ம வீட்டு வாசலையே பார்க்குறா...?” என்று அவனும் யோசித்தபடி, கீழே இறங்கி சென்றான்.அப்போது தான் மலர் எழுந்திருந்தார்.

“என்னாச்சு முகிலா..?” என்றார், அவன் வேகமாய் வருவதைப் பார்த்து.

“இல்லம்மா..,மதி நம்ம வீட்டு வாசலையே பார்த்துட்டு இருந்தா. அதான், என்னன்னு பார்க்கலாம்ன்னு வந்தேன்..!” என்றான்.

“அதுவா, என்னடா இன்னும் வாசல் தெளிக்க, நான் வெளிய வரலையேன்னு பார்த்திருப்பா. நான் இன்னைக்கு கொஞ்சம் லேட், அதான்..!” என்றார் மலர்.

“ஹோ..!அதுவா விஷயம். நான் கூட என்னமோன்னு நினைச்சுட்டேன்..!” என்றவன், சிரித்தபடி மீண்டும் அறைக்கு சென்றான்.

மதி வழக்கம் போல், பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். வெளியே பைக் ஹாரன் சத்தம் அடிக்க, முதலில் அசட்டையாய் விட்டுவிட்டாள். மீண்டும் மீண்டும் அடிக்க,

“யார் இப்படி ஹாரன் அடிக்கிறது..?” என்று வெளியே எட்டிப் பார்க்க,அங்கே புல்லட்டில்,ஸ்டைலாக அமர்ந்திருந்தான் மணி முகிலன்.கருப்பு நிற பேண்ட்டும், வெள்ளை நிற முழுக்கை சட்டையும், அந்த காலை பனிக்காற்றில் ஆடிய அவனின் முன் உச்சி முடிகளும், அவனை அத்தனை கம்பீரமாகவும், அழகனாகவும் காட்டியது.

அவனையே ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மதி. அவளால் பார்வையை எடுக்கவே முடியவில்லை. மதி தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை அறியாத முகிலன், மீண்டும் மீண்டும் ஹாரனை அடித்துக் கொண்டிருந்தான்.

“யார் மதி..இப்படி ஹாரன் அடிக்கிறது..?” என்றபடி வந்த பார்வதி, மகளையும்...அவள் வெளியே பார்த்துக் கொண்டிருந்த முகிலனையும் பார்த்து கொஞ்சம் அதிர்ந்தார். பின் நடந்த விஷயங்கள் நியாபகத்திற்கு வர, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்.

“மதி..மதி...” என்று அழைக்க,

“ஞான்...சொல்லுங்கம்மா..!” என்றாள்.

“யார் அது..?” என்றார் தெரியாதவர் போல்.

“அது வந்து, மணி மாமா தான்மா....” என்றாள்.

“என்னவாம்..?” என்றார்.

“எனக்கென்ன தெரியும். எனக்கு ஸ்கூலுக்கு நேரம் ஆச்சு..!” என்றபடி உள்ளே சென்றாள்.

மகளை பஸ் ஸ்டாண்ட் அழைத்து செல்வதற்காக, அப்போது தான் தோட்டத்தில் இருந்து வந்தார் மனோகர். வாசலில் ரெடியாக முகிலன் நிற்பதைப் பார்த்தவருக்கு, மனதிற்குள் கொஞ்சம் பெருமை இருக்கத்தான் செய்தது, மருமகனை எண்ணி.

“டைம் ஆச்சுப்பா..! சீக்கிரம் வண்டியை எடுங்கங்கப்பா..!” என்று மதி அவசரமாய் சொல்ல, அவரோ முகிலனைப் பார்த்து தயங்கி நின்றார்.

“என்னப்பா..? வண்டியை எடுங்க..!” என்றாள் மீண்டும்.

“மதி...மாப்பிள்ளை..!” என்று அவர் தயங்க, தகப்பனை முறைத்தாள் மதி. வெள்ளை நிறத்தில், பச்சை நிற பார்டர் வைத்த காட்டன் புடவை, அவளுக்கு கன கச்சிதமாய் இருக்க, அவளைப் பார்க்காததைப் போல், பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் மனதிற்குள். வெளியே முகம் ரௌத்திரமாய் இருந்தது. அவன் மீண்டும் வண்டியை உறுமவிட,

“நீ முகிலன் கூடவே போய் இறங்கிக்கம்மா..! எனக்கு ஒரு வேலை இருக்கு..!” என்று நைசாக நழுவப் பார்த்தார் மனோகர். சரியாக அந்த நேரத்திற்கு துரைப்பாண்டி, எதிர்த்தார் போல் வண்டியில் வர, அவனைப் பார்த்தவள்,

“சரிப்பா..” என்றபடி முகிலன் பின்னால் ஏறி அமர்ந்தாள். மனோகருக்கு சந்தோசம். ஆனால் முகிலனுக்கு அவளைப் பற்றி நன்றாகத் தெரியும். துரைப்பாண்டியைப் பார்த்த பிறகு தான், அவள் இப்படி செய்கிறாள் என்று. எது எப்படியோ, வண்டியில் ஏறிவிட்டாள் மதி.

ஆனால் அவர்களைப் பார்த்துக் கொண்டே சென்ற துரைப்பாண்டிக்கு உள்ளுக்குள் பற்றி எரிந்தது.

முகிலனின் பின்னால் அமர்ந்திருந்தவளுக்கு, அவனிலிருந்து வந்த சென்ட்டின் வாசம், ஒரு வித மோன நிலையைக் கொடுத்தது.

“வரவர ரொம்ப அழகாயிட்டே போறானோ..? இல்லை எனக்கு மட்டும் தான் அப்படித் தோணுதா..?” என்று மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள் மதி.

முகிலனும் அவளைப் பற்றி தான் நினைத்துக் கொண்டு வந்தான்.

“எப்படி இருக்கா பாரு..? வரவர தக்காளி, நல்லா பிகராகிட்டே போறாளே..? நம்ம ஒழுங்கா இருந்தாலும், இவ இருக்க விட மாட்டா போலயே..?” என்று அவனும், அவளுடைய அருகாமையை ரசித்துக் கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.

அவளின் நினைவில் இருந்தவன், இரண்டு நாய்கள் சண்டை போட்டுக் கொண்டு நாடு ரோட்டிற்கு வந்ததை கவனிக்கவில்லை.அருகில் நெருங்கும் போது கவனித்தவன், நாய்கள் மீது மோதாமல் இருக்க, சடன் பிரேக் போட்டான்.

அந்த பிரேக்கில், அவனே ஒரு குலுங்கு குலுங்கி தான் அமர்ந்தான். பின்னால் இருந்த மதி, மொத்தமாய் அவன் மீது மோதி, பயத்தில் அவனுடைய சட்டையை இறுகப் பிடித்துக் கொண்டாள்.

பிரேக் போட்ட அதிர்ச்சியை விட, அவள் தன் மேல் வந்து மொத்தமாய் விழுந்த அதிர்ச்சி தான், அவனை மின்சாரமாய் தாக்கியது. ஒரு நிமிடம் பேயாட்டம் ஆடத் துவங்கிய உணர்வுகளை அடக்க, பெரும் பாடு பாட்டுப் போனான்.

“சாரி..! நாய் குறுக்க வந்துடுச்சு, கவனிக்கலை..” என்றான் ஒரு மாதிரி குரலில். அந்த குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை ஆழ்மனம் வரை தீண்டி சென்றது.

“பரவாயில்லை..” என்றாள், அப்போதும் கெத்தை விட்டுக் கொடுக்காமல்.

“இன்னைக்கு நான் ஹாஸ்பிட்டல் போய், பேஷண்ட்ஸ பார்த்த மாதிரி தான். போற போக்குல நானே பேஷன்ட் ஆகிடுவேன்..” என்று தனக்குள் முனுமுனுத்தபடி சென்றான் மணி முகிலன்.

அங்கே மதியின் வீட்டில் இருந்தனர் மலரும், பெரியசாமியும். இத்தனை வருடங்களுக்குப் பிறகு, அந்த வீட்டிற்குள் வந்திருக்கிறார் பெரியசாமி.

வந்தவர்களைப் பார்த்து முதலில் அதிர்ந்து தான் நின்றார் பார்வதி. ஆனால் சீக்கிரத்தில் சுதாரித்து விட்டார்.
“வாங்க மதினி, வாங்க அண்ணா..!” என்றார்.

உள்ளே வந்து அமர்ந்த பிறகும், சற்று நேரம் இருவரும் அமைதியாகத் தான் இருந்தனர்.

“காபி,தண்ணி ஏதாவது..?” என்று பார்வதி கேட்டுக் கொண்டிருக்க,

“இந்தாங்க மாமா...தண்ணி குடிங்க..!” என்ற தண்ணீர் செம்பை நீட்டினாள் சுமதி. கொஞ்சம் தயக்கத்திற்குப் பிறகு வாங்கிக் கொண்டார் பெரியசாமி.

“எங்களை மன்னிச்சிடுங்க மதினி. முகிலன் இப்படி செய்வான்னு நாங்க நினைக்கவேயில்லை. எங்களுக்கும் விஷயம் தெரியாது. தெரிஞ்சிருந்தா, அவனுக்கு துர்காவை பேசியிருக்க மாட்டோம். எங்களுக்கும் விஷயம் நேத்து தான் தெரியும்..!” என்றார் மலர்.

பார்வதி அமைதியாக நிற்க, மனோகர் தான் பேச ஆரம்பித்தார்.

“விடுமா..! இந்த ஜென்மத்துல அவங்க ரெண்டு பேருக்கு தான் முடுச்சு போட்டிருக்கு. அதை நம்மால மாத்த முடியுமா..?” என்றார்.

“இருந்தாலும் அவன் செஞ்சது தப்புத்தான அண்ணே..!” என்றார் மலர்.

“அவங்க ரெண்டு பேரும் இப்ப சின்னப் பிள்ளையில்லை. அவங்களுக்கு என்ன தேவைன்னு அவங்களுக்குத் தெரியும். இனி அவங்க விருப்பத்துக்கே விட்டுடுவோம்..!” என்றார் மனோகர்.

“அதைத்தாண்ணே நானும் சொல்றேன். ஒரு நல்ல நாளா பார்த்து மதியை எங்க வீட்டுக்கு அனுப்பி வைங்கன்னு கேட்கத்தான் வந்தோம்...!” என்றார் மலர்.

“நீங்க தான் வந்ததுல இருந்து பேசுறிங்க மதினி. அண்ணன் ஒன்னும் பேசலையே...?” என்றார் பார்வதி கேள்வியாய்.
“பேசுற தகுதியை நான் இழந்துட்டேன் பார்வதி. அதான் பேசாம இருக்கேன்..!” என்றார் பெரிய சாமி. அவரின் அந்த ஒற்றை வாக்கியம், அவரின் மனசை சொல்ல,

“எங்களுக்கு சம்மதம் தான் மதினி. ஆனா மதி என்ன நினைக்கிறான்னு தெரியலை. அவ விருப்பம் இல்லாம எதையும் செய்ய கூடாது அப்படிங்கிறதுல மட்டும் உறுதியா இருக்கேன் மதினி..!” என்றார் பார்வதி.

“முகிலன் கண்டிப்பா மதி மனசை மாத்திடுவான். நீங்களும் சொன்னா மதி கேட்பா..! ரெண்டு பேருக்கும் வயசும் ஏறிகிட்டே போகுது...” என்று மலர் சொல்ல, பார்வதியும் யோசிக்கத் தொடங்கினார்.

“சரியா முடிவு எடுக்க வேண்டிய நேரத்துல, ஒரு தப்பான முடிவை எடுத்துட்டோம். ஆனா இப்போ நேரமும் சரியா தான் இருக்கு. முடிவும் சரியா தான் இருக்கும்..!” என்றார் பெரியசாமி.

“கூடிய சீக்கிரம், என்பொண்ணு உங்க வீட்டுக்கு வாழ வருவா மச்சான்..!” என்றார் மனோகர்.

“ரொம்ப சந்தோசம்..!” என்று இருவீட்டு பெரியவர்களும், சரியான முடிவை எடுத்திருந்தனர்.


 
saroja

Well-known member
Member
எப்ப பதிவு திருமணம் நடந்தது
பெரியசாமி மனம் மாறி இருக்கிறது
அருமை
இனியாவது நிதானமாக
எல்லாரும் நடந்தா பரவாயில்லை
 
Senmozhi

Well-known member
Member
அருமையான காதல் . ரசிக்க வைக்கின்ற பதிவு
 
Advertisement

Advertisement

Top