Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
காதல் 24:

இவர்கள் பேசிய விஷயங்கள் அனைத்தும் தப்பாமல், திலகாவை சென்றடைந்தது. ஏற்கனவே கடுப்பில் இருந்த திலகாவிற்கு, நடந்த விஷயம் மேலும் கோபத்தைக் கூட்ட, அதே கோபத்துடன் பெரியசாமியைத் தேடிச் சென்றார்.

“வாம்மா திலகா..” என்றார்.

“நீங்க இப்படிப் பண்ணுவிங்கன்னு, நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை..!” என்றார் கோபமாய்.

“நாங்க என்ன பண்ணுனோம்...?” என்றார்.

“தெரியாத மாதிரி நடிக்காதிங்க அண்ணே..!. நீங்க அந்த பார்வதி வீட்டுக்குப் போய் பேசிட்டு வந்ததை எல்லாம், கேள்விப் பட்டுட்டு தான் வந்திருக்கேன்..!” என்றார் திலகா.

திலகாவை ஒரு நிமிடம் அமைதியாகப் பார்த்தவர்,

“மருமக வீட்டுக்கு மாமனார் போறது, தப்பில்லையேம்மா..?” என்றார் அமைதியாக.

“என்னது மருமகளா...? அந்த ஒழுக்கங்கெட்டவ உங்களுக்கு மருமகளா..? நல்லா இருக்கே கூத்து..!” என்றார் நக்கலாய்.

“பார்த்து பேசுங்க மதினி. நீங்க பேசுனது மட்டும் முகிலன் காதுல விழுந்தது, அவன் மனுசனா இருக்க மாட்டான்..!” என்றார் மலர்.

“துர்காவை உங்க மருமகள் ஆக்கிக்கிறேன்னு சொன்னிகளே, அதெல்லாம் வாய் வார்த்தை தானா..?” என்றார் திலகா ஆங்காரமாய்.

“வாய் வார்த்தைக்கு எல்லாம் சொல்லலை மதினி. ஆனா முகிலன் இப்படி பண்ணியிருப்பான்னு எங்களுக்குத் தெரியாது. சட்டப்படி இப்போ அவனோட மனைவி மதி தான். இனி இதை யாராலையும் மாத்த முடியாது..!” என்றார் மலர்.

“ஹோ..! எல்லாம் பேசி வச்சுட்டு தான் இந்த வேலையைப் பார்த்திருக்கிங்க. இப்போ தெரியாத மாதிரி நடிக்கிறிங்க..!” என்றார்.
“நாங்க பேசி வச்சு எந்த முடிவும் எடுக்கலை. ஆனா, முகிலனோட விருப்பம் மதி மட்டும் தான். அவளைத் தவிர வேற யாரையும் கண்டிப்பா அவன் கட்டிக்க மாட்டான். அவனோட விருப்பம் தான் எங்க விருப்பமும்..!” என்றார் மலர் பட்டென்று.

அதற்குமேல் அங்கு நிற்க, திலகாவிற்கு தன்மானம் இடம் கொடுக்கவில்லை. மனதில் வளர்த்துக்கொண்ட காழ்ப்புணர்ச்சியுடன் அங்கிருந்து சென்றார்.

“எதுக்குங்க, இந்த திலகா மதினி இப்படி இருக்காங்க..?” என்றார் மலர்.

திலகாவின் பேச்சைக் கேட்டு, அவரும் ஒரு காலத்தில் ஆடியவர் தானே. இப்போது பேசுவதற்கு வாய் வரவில்லை.

“யார் எப்படி இருந்தா நமக்கென்ன..? நம்ம வீட்டு விஷயத்தைப் பத்தி மட்டும் பேசு..!” என்றார் பெரியசாமி.

“என்னமோ போங்க..முகிலனுக்கு இனியாவது நல்ல காலம் பிறந்தா சரி தான்..!””” என்றார் மலர்.

“மதி பொண்ணு என்னைக்கு முகிலன் கூட வாழ வருதோ, அது தான் அவனுக்கு நல்ல காலம்..” என்றார் மகனின் மனது அறிந்தவராய்.

“இப்ப உங்களுக்கு மதி மேல எந்த கோபமும் இல்லையாங்க..?” மலர்.

“காலம் எவ்வளவோ மாறிடுச்சு மலர்.காலம் ஒரு நல்ல மருந்துங்கறது என்னோட விஷயத்துல சரி தான். நானும் கொஞ்சம் சுயநலமா இருந்துட்டேன். என் பையனோட வாழ்க்கை இப்படி ஆகுறதுக்கு நான்தான் எல்லா வகையிலும் காரணம். ஏதோ ஒருவகையில காரணம்ன்னு சொல்லி என்னால தப்பிக்க முடியாது..” என்றார் தளர்ந்தவராய்.

“இனி நல்லது தாங்க நடக்கும்..!” என்றார் மலரும் ஆறுதலாய். அவருக்குத் தெரிந்திருக்கவில்லை, திலகா இருக்கும் வரை அந்த நல்லது நடக்காது என்று.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயங்கள். திலகா செய்வது அவருக்கு நியாயம் என்று பட்டால் பரவாயில்லை. ஆனால், அவர் செய்வது மட்டுமே நியாயம் என்ற எண்ணம் தான் பல பிரச்சனைகளுக்குக் காரணம்.

அன்று மாலை, பள்ளி விட்டதற்கு அறிகுறியாக,பெல் அடிக்க....அதோடு சேர்த்து மதியின் மனமும் அடித்துக் கொண்டது. காலையில் முகிலனின் பின்னால் அமர்ந்து வந்ததே, இன்னமும் அவளுக்குள் ஒருவித சுகந்த மனநிலையை ஏற்படுத்தியிருந்தது.

“இப்ப சாயந்தரமும் வருவானா..?” என்று அவளின் உள் மனம் ஒரு நப்பாசையுடன் கேள்வி கேட்க,

“வந்தாலும் நான் போக மாட்டேன்..!” என்று பிடிவாதமாய் மனதை மறைத்துக் கொண்டிருந்தாள். மறுநாள் வினோதினி வருவதாய் இருந்தது.

“வினோ வந்த உடனே, அவளை நம்ம வீட்லயே தங்க வச்சிடணும். தினமும் அவ கூட போக வர இருந்தா, முகிலனோட தொல்லை இருக்காது..!” என்று மனதிற்குள் ஒரு கணக்குப் போட்டுக் கொண்டிருந்தாள்.

கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே வர, அவளுக்காகவே காத்திருந்தான் முகிலன்.கொஞ்சம் சோர்வுடன் காணப்பட்டான்.ஆனால் அந்த சோர்விலும் ஒரு அழகு.

“இவன் டாக்டரா... இல்லையா..? எப்ப பார்த்தாலும் இப்படியே சுத்திட்டு இருக்கான்..!” என்று யோசித்தபடி வந்தவள், அவனை சட்டை செய்யாது, கடந்து செல்ல முற்பட்டாள்.

அவளை கோபத்துடன் உறுத்துப் பார்த்தவன், கொஞ்ச நேரம் அதே இடத்தில் இருந்தான். மதி கண்டு கொள்ளாமல் சென்று விட்டாள்.

உடலின் சோர்வும், அவளின் நிராகரிப்பும் சேர்ந்து கொள்ள, உக்கிர மூர்த்தியாய் மாறித்தான் போனான் மணி முகிலன்.

மதி கொஞ்ச தூரம் சென்று திரும்பி பார்க்க, முகிலனோ அந்த இடத்தை விட்டு நகராமல் அங்கேயே நின்றிருந்தான்.

“என்ன அந்த இடத்துலயே இருக்கான். முகமும் சரி இல்லையே..? என்னவா இருக்கும்..!” என்று மதி யோசிக்க,

பட்டென்று அவளின் அருகில் வந்தவன், அவளை ஒரு புறமாக சட்டென்று தூக்கி, வண்டியின் முன்னால் இருத்திக் கொண்டு, வண்டியைக் கிளப்பி விட்டான்.

அவனின் திடீரென்ற செய்கையில் பயந்தவள், தடுமாறி விழப் போக....அவனின் ஒரு கை, அவளின் இடுப்பை தன்னோடு சேர்த்து அணைத்திருந்தது. ஒருகையால் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.

“நிறுத்துங்க..! வண்டியை நிறுத்த போறிங்களா இல்லையா..?” என்று அவன் கையேடு சேர்த்து வண்டியை நிறுத்த போக, வண்டியை உலட்டிக் கொண்டே, நிறுத்தாமல் ஓட்டிக் கொண்டிருந்தான் முகிலன்.

அவனின் முகம் பாறையாய் இறுகிக் கிடக்க, அவளின் இடுப்பை அணைத்த கைகளோ, அவளை மீண்டும் தனக்குள் இழுத்துக் கொண்டது. மதியின் நிலைதான் திண்டாட்டம் ஆகிப் போனது.

காதோரத்தில் படும் அவனுடைய மூச்சுக் காற்று, அவளுக்கு அவஸ்தையாய் இருக்க, இடுப்பில் இருந்த அவன் கையின் வலிமையில் கிறங்கித்தான் போனாள் வண்ண மதி.

“ப்ளீஸ்...! நான் உங்க கூடயே வரேன். இறக்கி விடுங்க, பின்னாடி உட்கார்ந்துக்கறேன்..!” என்றாள் திக்கித் திணறி.
அவன் அவளை சட்டை செய்யாமல் வண்டியை மட்டும் ஓட்டிக் கொண்டிருந்தான்.

“ஐயோ, எல்லாரும் பார்க்குறாங்க...மதி ஏதாவது பண்ணு..!” என்று உள் மனம் சொல்ல,

“மணி மாமா..! பிளீஸ்..” என்றாள் கொஞ்சம் இறங்கியக் குரலில்.

அவளின் ’மணி மாமா’ என்ற அழைப்பில் கொஞ்சம் மனம் இறங்கியவன், வண்டியை நிறுத்தி, மெதுவாக இறக்கி விட்டான்.

அவன் கைப்பட்ட இடம், இன்னமும் நெருப்பாய் தகிக்க, அந்த வெப்பம்..காதல் வெப்பமாய் அவளுக்குள் இறங்கிக் கொண்டிருந்தது.

மெதுவாக சென்று அவனின் பின்னால் அவள் அமர, அதே இறுகிய முகத்துடன் வண்டியை எடுத்தான் முகிலன்.

இதற்கும் ஒரு வார்த்தை முகிலன் அவளுடன் பேசவில்லை. ஆனால் எல்லாமே செயலில் காட்டினான். நீ என் மனைவி, நான் உன் கணவன் என்று கிடைத்த இடத்தில் எல்லாம் ஸ்கோர் செய்தான்.வாயைத் திறந்து பேச மாட்டானா..? என்று மதியின் உள் மனம் ஏங்கித் தான் போயிற்று.

அவர்களின் ஊரை நெருங்கும் போது, அவளின் கையைப் பிடித்து தன் இடுப்போடு வளைத்துக் கொண்டான். அவனின் செயலில் மதி தான் வாயைப் பிளக்க வேண்டியதாய் போயிற்று.

“நான் அப்படியே இவனை கட்டிப் பிடிச்சுட்டு வரேன்னு, ஊர்ல எல்லாரும் பேசணும். அதுக்குத் தான் இப்படிப் பண்றான்...” என்று அவளுக்கு எரிச்சல் வர, கையை எடுத்தாள்.ஆனால் முடியவில்லை.அவனின் இடுப்பை சுற்றித்தான் இருந்தது அவள் கைகள்.

மதி எண்ணியது போல, வழியில் பார்ப்பவர்கள் எல்லாம், அவர்களை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க, எதிரே வந்த முத்து கூட, காணாததைக் கண்டவன் போல், முறைத்துக் கொண்டு நின்றான்.

மதியின் வீட்டின் முன்பு வந்து வண்டியை நிறுத்தினான் முகிலன். சத்தம் கேட்டு வெளியே வந்த பார்வதி கூட இவர்களைப் பார்த்து வாயடைத்துப் போனார்.இருவரின் ஜோடிப் பொருத்தத்தை காலையில் பார்த்ததில் இருந்தே, அவளை சீக்கிரம் முகிலன் வீட்டிற்கு அனுப்பி விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார். அதற்கு தகுந்தார் போல் மலரும், பெரியசாமியும் வந்து பேச, நெகிழ்ந்து தான் போனார் பார்வதி.

இப்போது மீண்டும் மருமகனுடன் சேர்ந்தே மகள் வந்திருப்பது கண்டு, அவருக்கு மகிழ்ச்சி தான். ஆனால் மதிக்கு தான் சந்கோஜமாய் போனது.அம்மாவைப் பார்த்த உடன், முகிலனின் இடுப்பில் இருந்த கையை பட்டென்று எடுத்தாள்.வேகமாக இறங்கவும், அவனும் ஒன்றும் சொல்லாமல், தன் வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தியவன், வேகமாய் வீட்டிற்குள் சென்று விட்டான்.

இங்கு மதிக்கோ, பார்வதியின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை.

“அம்மா..அது வந்து...நான் வரலைன்னு தான் சொன்னேன். மணி மாமாதான்..வம்படியா..” என்று சொன்னவள், ஏனோ அவன் தன்னைத் தூக்கியதை மட்டும் சொல்லவில்லை.

“புருஷன், பொண்டாட்டிக்குள்ள இதெல்லாம் சகஜம்.நீ உள்ள போ..!” என்றார் பார்வதி சாதரணமாக.

அவரின் வார்த்தையில் மதி தான் வாயடைத்துப் போனாள்.அம்மா என்ன சொல்லிட்டு போறாங்க..? அவங்களுக்கு என்மேல கோபம் இல்லையா..? என்று எண்ணியவள், அதை பார்வதியிடம் கேட்டே விட்டாள்.

“இந்நேரம் நான் வேற யார்கூடவாது இப்படி வந்திருந்தா, நீங்க எப்படி அடிப்பிங்க..? இப்ப ஒண்ணுமே சொல்லாம இருக்கீங்க..?” என்றாள்.

“கட்டுன புருஷனைத் தவிர, வேற யார் கூட போனாலும் அந்த பழைய அடி இப்பவும் இருக்கு. நீயும் சின்ன பிள்ளை கிடையாது..!” என்றார் பார்வதி. அவர் யாரை குறிப்பிட்டு சொல்ல வருகிறார் என்பதை மதி அறிவாள்.

“அம்மா, இப்பவும் சொல்றேன். முத்துவும் நானும் நல்ல பிரண்ட்ஸ். அதைத் தாண்டி எங்களுக்குள்ள வேற எண்ணம் வந்தது கிடையாது. முத்துவும் கெட்டவன் கிடையாது. யாருக்காகவும் என்னோட இந்த எண்ணத்தை மாத்திக்க மாட்டேன்..!” என்றாள் மதி.

“இனி உன் பாடு, உன் புருஷன் பாடு. நான் சொல்றதை கேட்கலைன்னாலும், முகிலன் சொல்றதை நீ கேட்டுத் தான் ஆகணும்..” என்றவர், அன்று பெரியசாமியும், மலரும் வந்து பேசிவிட்டு சென்றதைப் பற்றி சொன்னார்.

“என்னால அவங்க வீட்டுக்கு எல்லாம் போக முடியாது..!” என்றாள் மதி.

“என்ன,படிச்ச திமிரா..? முன்னாடி நான் எது சொன்னாலும் உன்னோட நல்லதுக்குன்னு சொல்லுவ. இப்ப நல்லா எதிர்த்து பேசக் கத்துகிட்ட. பிள்ளைங்களுக்கு ஒரு கட்டத்துக்கு மேல, பெத்தவங்க ஒன்னும் சொல்லக் கூடாது, அப்படித்தான..?” என்றார் பார்வதி கோபமாய்.

“நான் எப்பம்மா அப்படி சொன்னேன்..?” என்றாள் மதி அழாத குறையாய்.

“நீ இப்ப பேசுனதுக்கு, இப்படி தான் அர்த்தம்..!” என்றவர், அவளை முறைத்து விட்டு சென்றார்.

“எல்லாம் இவனால வந்தது. எங்க வீட்ல இருக்குறவங்களையே எனக்கு எதிரா திருப்புறான்...இவன் வச்சது தான் சட்டமா..? நான் அவன் வீட்டுக்குக் கண்டிப்பா போக மாட்டேன். பார்க்குறேன் என்ன பண்றான்னு..?” என்று தனக்குள் பேசி முடித்தவள், குளிப்பதற்காகக் கொல்லைப் புறத்திற்கு சென்றாள்.

அங்கு, வீட்டிற்குள் நுழைந்த முகிலனின் நிலையோ, சொல்லவே வேண்டாம். வேகமாக, தன்னுடைய அறைக்கு சென்றவன்..அப்போதுதான் இழுத்து பிடித்த மூச்சை விட்டான்.

ராட்சசி..! பொண்ணா இவ.என்னை பாடாப்படுத்துறதுக்கே பிறந்திருப்பா போல. அவனின் நெஞ்சில் இன்னமும் அவளின் வாசனை.அவளின் முன்பு, கோபக்காரனாய் காட்டிக் கொண்டாலும், உள்ளே துடிக்கும் மனதை, அடக்கும் வழி தெரியாமல் திண்டாடித்தான் போனான்.

எங்கே இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால், அவள் கண்டு பிடித்து விடுவாளோ என்று எண்ணியவன், உடனே வந்து விட்டான்.

அவள் சாய்ந்திருந்த நெஞ்சில் கை வைத்தவன்...”மதி...சீக்கிரம் என்கிட்டே வந்துடுடி.என்னால ரொம்ப நாளைக்கு எல்லாம் தாக்குப் பிடிக்க முடியாது..!” என்று பேசிக் கொண்டிருந்தான்.

“கூடிய சீக்கிரம் வந்துடுவா முகிலா..” என்ற மலரின் குரல் கேட்டு நிமிர்ந்தான்.

“நீங்க எப்பம்மா வந்திங்க..?” என்றான்.

“நீ, தானா பேசிட்டு இருக்கும் போதே வந்துட்டேன்..!” என்றார் மலர்.

“என்ன விஷயம்மா..?” என்றான்.

“அதை நான் கேட்கணும் முகிலா..! எப்பவும் நேரம் கழிச்சு தான் வருவ. இன்னைக்கு சீக்கிரமே வந்துட்ட. வந்தவன், ஒரு வார்த்தை பேசாம, நேரா இங்க வந்துட்ட. அதான் என்னன்னு பார்த்துட்டு போக வந்தேன்..!” என்றார் மலர்.

“அது ஒண்ணுமில்லைம்மா...! நாளைக்கு சென்னைல ஒரு கான்பிரன்ஸ்...அதுக்குப் போகணும்.அதான் சீக்கிரம் கிளம்பி வந்துட்டேன்..!” என்றான்.

“நாமளே தனியா ஒரு ஆஸ்பத்திரி வைக்கலாம்ல முகிலா..?” என்றார்.

“இப்போதைக்கு வேண்டாம்மா..! இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்..!” என்றவன்,

“கூடிய சீக்கிரம் வந்துடுவா...அப்படின்னு ஏதோ சொன்னிங்களே...? என்னம்மா..?” என்றான்.

“இன்னைக்கு பார்வதி மதினி வீட்டுக்குப் போயிருந்தோம் முகிலா..!” என்றார்.

“ஹோ..என்ன விஷயம்மா..? இத்தனை வருஷத்துல, இப்ப தான் உங்களுக்குப் போகணும்ன்னு தோணுச்சா..?” என்றான்.

“தப்புத்தான் முகிலா. உன்னோட மனசுல என்ன இருக்குன்னு தெரியாம, எதுவும் பேசக் கூடாதுன்னு சொல்லி தான் அமைதியா இருந்தேன். இப்ப மதி தான் என் மருமகள்னு உறுதியா தெரிஞ்சதுக்கு அப்பறமும், என்னால சும்மா இருக்க முடியலை. அதான் உங்கப்பாவைக் கூட்டிகிட்டு போய் பேசிட்டு வந்துட்டேன்..!” என்றார் மலர்.

“நிஜமா...அப்பாவும் வந்தாரா..?” என்றான் ஆச்சர்யமாய்.

“ஆமா முகிலா. அது மட்டுமில்லை, மதியை சீக்கிரம் நம்ம வீட்டுக்கு அனுப்பி வைக்க சொன்னார்..” என்றார்.

“நம்ப முடியலையே...?” என்று முகிலன் யோசிக்க,

அன்று நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்பித்தார் மலர்.கேட்டுக் கொண்டிருந்த முகிலனுக்கு, மனம் இப்போது தான் கொஞ்சம் அமைதியாய் இருந்தது.

“ஆனா...மதியை வழிக்குக் கொண்டு வர்றது கொஞ்சம் கஷ்ட்டம் முகிலா..” என்றார் மலர்.

“அது உண்மை தான்..!” என்று மனதிற்குள் எண்ணியவன்,

“அந்த கவலை உங்களுக்கு எதுக்கும்மா..! அவளை எப்படி வழிக்குக் கொண்டுட்டு வரணும்ன்னு எனக்குத் தெரியும்..!” என்றான், அன்று மாலை நடந்ததை மனதில் அசை போட்டுக் கொண்டே.

“மெட்ராஸ்க்கு எப்ப போகணும் முகிலா..?” என்றார்.

“நாளைக்கு காலைல சேலத்துல இருந்து பிளைட்ல போறேன்ம்மா..!” என்றான்.

“ஏரோபிலேன்ல போகப் போறியா தம்பி,..?” என்றார் மலர்.

“ஆமாம்மா..! சீக்கிரமே உங்களையும், அப்பாவையும் கூட்டிட்டு போவேன்..” என்றான்.

“அதெல்லாம் வேண்டாம் முகிலா..! நீ போறதே எங்களுக்கு பெருமை தான். என்ன உங்கப்பாவுக்கு, நீ தனியா ஆஸ்பத்திரி வைக்கணும்ன்னு ஆசை. நீ மட்டும் சரின்னு சொன்னா, நம்ம கிழக்கு தோட்டத்தையும் வித்துக் குடுத்துடுவாரு..” என்றார்.

“எனக்காக,இனி எதையும் விக்க கூடாதுன்னு தான், நான் கொஞ்ச நாள் போகட்டும்ன்னு சொல்றேன்..” என்றான்.

“சரிப்பா, குளிச்சுட்டு வா...சாப்பாடு எடுத்து வைக்கிறேன்..!”என்றபடி மலர் செல்ல, அவர் சென்றவுடன், வேகமாய் ஜன்னலை விலக்கிப் பார்த்தான். ஆனால் மதி தென்படவில்லை.

நாளைக்கு போறதுக்கு முன்னாடி, இவளைப் பார்த்தாகனுமே. இவ வேற அடைக்கோழி மாதிரி, இனி வீட்டை விட்டே வெளிய வர மாட்டா..என்ன பண்ணலாம்..? என்று யோசித்துக் கொண்டே குளிக்க சென்றான்.

அங்கு மதியும், முகிலனைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தாள். அவனின் பிடிவாதமும், அடாவடித்தனமும் அவளின் கண் முன்னால் வந்து சென்றது. இன்று மட்டுமில்லை. நான்கு வருடங்களுக்கு முன்னால், அவன் வழுக்கட்டாயமாகத் தன்னை பதிவுத் திருமணம் செய்ததும் நியாபகம் வந்தது.

நான்கு வருடங்களுக்கு முன்னால் நடந்த விஷயத்திற்கு சென்றது அவளின் நினைவு.


 
Hi,
முகிலன் இப்ப பார்த்து சென்னை கிளம்புறானே..
எப்ப மதி முகிலன் வீட்டுக்கு போவா
சூப்பர் எப்பி.
 
Last edited:
Top