Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
காதல் 26:

முகிலன் வந்து விட்டு சென்றதை, யாரும் அவளிடத்தில் சொல்லவில்லை.அவளாக அதைப் பற்றி பேசாததால் அவர்களும் விட்டுவிட்டனர்.மதிக்கு சங்கோஜம் என்று மற்றவர்கள் நினைக்க, அவன் வந்தது தான் அவளுக்குத் தெரியாதே.

காலையில் கொஞ்சம் தாமதமாக எழுந்து, பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள் வண்ண மதி. மனம் முழுவதும் நேற்று மலரிடம், பார்வதி சொன்ன வார்த்தைகளே எதிரொலித்துக் கொண்டிருந்தது.

லாவண்டர் நிற காட்டன் புடவையில், அழகோவியமாய் தயாராகி வந்தவள், வாசலையே பார்த்துக் கொண்டிருக்க, அவளின் நடவடிக்கைகளை கண்டும் காணாமல்,பார்த்துக் கொண்டிருந்தார் பார்வதி.

“என்னம்மா மதி, யாரைத் தேடுற..?” என்றார்.

“அது வந்து...நேரம் ஆச்சும்மா...அதான்...மா..இல்லை அப்பாவைக் காணோமேன்னு பார்க்குறேன்..!” என்று உளறிக் கொட்டி முடித்தாள்.
“நான் வீட்ல தான் இருக்கேன் மதி..!” என்றபடி மனோகர் உள்ளே இருந்து வெளியே வர, அவளுக்கு உள்ளே ஏதோ ஒன்று உடைந்ததைப் போல் இருந்தது.

இத்தனை நாள், பிடிவாதமாக முகிலன் அழைத்து சென்றாலும், விருப்பம் இல்லாதவள் போல், கட்டாயத்திற்காக அவனுடன் செல்வதைப் போல் காட்டிக் கொண்டாலும்....இன்று உண்மையாலுமே அவன் வரவில்லை என்றவுடன், மனதிற்குள் ஏதோ ஒன்று அடைத்தது.

“என்னம்மா யோசிக்கிற..? வா போகலாம்..!” என்றார் மனோகர்.

“ஆங்..அப்பா...! இதோ வந்துட்டேன்..!” என்றபடி அறைக்குள் சென்றவள், கண்ணாடி முன்பு போய் நின்று, அதில் தெரிந்த தன்னுடைய உருவத்தைப் பார்த்தாள்.

“என்னமோ, பெருசா பேசுன..? அவன் வல்லவன், நல்லவன்னு...! பாரு இப்பவே கழட்டி விட்டுட்டான்.இவனை நம்பி அவன் வீட்டுக்கு வேற நான் போகனுமா..?” என்று மனசாட்சியுடன் சண்டை கட்டிக் கொண்டிருந்தாள்.

“இதுக்கு நானா பொறுப்பு..? அவன் வம்பா கூப்பிட்டப்பா, ஓவரா பிகு பண்ணின...அவனும் எத்தனை நாளைக்குத் தான் பொறுப்பான்..அதான் கண்டுக்காம போயிருப்பான்..!” என்று அவளின் மனம் அவளையே திருப்பிக் கேள்வி கேட்டது.

“எனக்கு யாரும் தேவையில்லை. நான் யாரையும் நம்ப மாட்டேன். அவன் மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன்..!” என்று வீர வசனம் பேசியவள், வெளியே வந்து,

“வாங்கப்பா போகலாம்..!” என்றபடி ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

அப்படியிருந்தும், கலங்கியிருந்த அவளின் கண்கள், பார்வதியிடம் அவளின் மனதைக் காட்டிக் கொடுத்தது.

“மதிய சாப்பாடு ரெண்டு டிபன் பாக்ஸ்ல வச்சிருக்கேன் மதி. இன்னைக்கு வினோதினி வரான்னு சொன்னியே. சாயந்தரம் வரப்ப, அவளையும் கூட்டிட்டு வந்துடு. வயசுபிள்ளைய, தனியா எப்படி தங்க விடுறது...?” என்றார் பார்வதி.

“நானும் சொல்லிட்டேன்ம்மா...! அவ ஹாஸ்ட்டல்ல தங்கிக்கிறேன்னு சொல்றா. இந்த ஊரைக் கண்டாலே அவளுக்கு பிடிக்கலையாம்..!” என்றவள்,

“எதற்கும் சொல்லிப் பார்க்குறேன்...!” என்றபடி மனோகருடன் சென்றாள். ஆனால், அன்று பள்ளிக் கூடம் செல்வதற்கு மனமே இல்லை.

முகிலனை பார்க்காதது, அவளுக்கு எதையோ இழந்ததைப் போல் இருக்க, காரணமே இல்லாமல்....அழுகை வந்தது.

“என்ன நான்..? இப்படி ஆகிட்டேன்..! எனக்கு தான் அவனைக் கண்டாலே ஆகாதே..! அவன் வரலைன்னு நான் சந்தோசம் தான் படனும். ஆனா, ஏன் அழுகை அழுகையா வருது..?” என்று தனக்குள் பேசிக் கொண்டவள், தெளியாத முகத்துடனேயே பேருந்தில் ஏறினாள்.

மதியின் முகத்தைப் பார்த்த மனோகரும், குழம்பித்தான் போனார். அதே குழப்பத்துடன் வீட்டிற்கு சென்றவர்,

“என்ன ஆச்சுன்னு தெரியலை..? மதி முகமே சரியில்லை...!” என்றார் மனைவியிடம்.

“முகிலன் இல்லாம, உங்க மகளுக்கு எல்லாமே கசக்குது. அது அவளுக்கும் தெரியுது. ஆனா உண்மையை ஒப்புக் கொள்ள தயக்கம் அவளுக்கு. அவளை அவ போக்கில் விட்டுடுங்க. போற போக்குல, முகிலன் இவளை விட்டுட்டு இருந்தாலும், இவ இருக்க மாட்டா போல..!” என்று சொன்ன பார்வதிக்கு, மனம் நிறைந்து இருந்தது.

மதியின் பெரியப்பா, வடிவேல்- அரசியின் வீட்டில் ஒரே சண்டையாக இருந்தது.வடிவேல் மனைவியை முறைத்துக் கொண்டு இருக்க,
“நீங்க என்ன சொன்னாலும் சரி, எங்க நிச்சயத்துக்கு பார்வதி சித்தி, மதி எல்லாரும் வரணும். நீங்க போய் கூப்பிடனும்..!” என்று உறுதியாக சொல்லிக் கொண்டிருந்தனர் தனபாண்டியும்,குணபாண்டியும்.

இவர்களுக்குப் பெண் பார்த்து, நிச்சயத் தேதியைக் குறித்திருந்தனர். இருவரும் இரட்டையர்கள் என்பதால், ஒரே நேரத்தில் இரண்டு திருமணத்தையும் நடத்திட எண்ணி, பெண் பார்த்திருந்தனர்.

“யார் என்ன சொன்னாலும், நான் போய் கூப்பிட மாட்டேன்..!” என்று பிடிவாதமாக மறுத்தார் அரசி.

“இப்ப உனக்கு என்னதாண்டி பிரச்சனை. நானும் இத்தனை வருஷம், உன் பேச்சைக் கேட்டு ஆடுனது எல்லாம் போதும்.எனக்கும் கடைசி காலத்துல, என் அண்ணன் தம்பி ஆதரவு வேணும். நான் போய் கூப்பிடத்தான் செய்வேன்..” என்றார் வடிவேல்.

“கணபதியும், திலகாவையும் கூப்பிட வேண்டாம்ன்னு சொல்லலையே..? அதே மாதிரி கோபியையும், லட்சுமியையும் கூப்பிட வேண்டாம்ன்னு சொல்லலையே...? எனக்கு உங்க ரெண்டாவது தம்பி குடும்பமே ஆகாது..! அதுலயும் அந்த மதியைக் கண்டாலே எனக்கு ஆகாது..!” என்றார் அரசி.

“இங்க பாரு அரசி..! அந்த புள்ளையப் பத்தி பேசுறதுக்கு நமக்கு எந்த தகுதியும் இல்லை. ரெண்டும் பொம்பளைப் பிள்ளைங்களா இருந்தாலும், நம்ம யாரோட உதவியும் இல்லாம, பிள்ளைய படிக்க வச்சு இன்னைக்கு ஆளாக்கிட்டான் என் தம்பி.கவுரமா ஒரு கவர்மென்ட் வேலையும் வாங்கிடுச்சு மதி.

ஆனா, நீ பிள்ளைங்களை அப்படியா வளர்த்து வச்சிருக்க.பார்வதிக்கு நினைப்பு, பிள்ளைகளை வளர்க்குறது இருந்துச்சு. உன் நினைப்பு அடுத்தவங்களை எப்படி கெடுக்குறதுன்னு இருந்துச்சு. கடைசில இப்ப தறிகெட்டுப் போய் இருக்குறது,உன் மகனுக தான். இதுக்கு மேல என்னை சொல்ல வைக்காத..! நம்ம வீட்ல நடக்குற மொத விசேஷம்...பார்த்து நடந்துக்க..!” என்றார் வடிவேல்.

“நான் உங்க தம்பி குடும்பத்தைக் கெடுத்தேனா...?” என்று அரசி மூக்கை சீந்த,

“நீ நல்லவதான் அரசி. அந்த திலகா பேச்சைக் கேட்காத வரைக்கும். நமக்கும் பொம்பளை பிள்ளை இல்லை. மதியும், சுமதியும் உனக்கு பொண்ணுங்க தான...என்னைக்காவது உன்னை பெரியம்மா அப்படின்ற சொல்லுக்கு மறு சொல்லு சொல்லி இருப்பாங்களா..? யோசி..!” என்றபடி சென்று விட்டார் வடிவேல்.

“ஆமாம்மா..! மதி நல்ல புள்ளை...ஆனா திலகா சித்திக்கு தான் பிடிக்கிறது இல்லை. நீயும் அது பேச்ச கேட்டுகிட்டு ஆடாத. நீ கூப்பிட வராட்டியும், நாங்க போய் கூப்பிடுவோம்..இல்லையா குணபாண்டி..” என்றான் தன பாண்டி.

“சரியா சொன்ன தனபாண்டி..!” என்ற குண பாண்டி....

“எங்களுக்கு ட்ராக்டர் வாங்க லோன் யாரு வாங்கிக் குடுத்ததுன்னு நினைக்கிறிங்க...? முகிலன் மச்சான் தான். இப்படியே சும்மா திரியாம, ஏதாவது ஒரு வேலையைப் பாருங்கன்னு சொல்லி, பாங்க்ல பேசி, வாங்கிக் குடுத்தார். அதனால தான், இன்னைக்கு பொண்ணு வீட்ல கூட....சரின்னு சொல்லியிருக்காங்க..! இனியாவது மனுஷங்களை மதிக்க கத்துக்கங்க ம்மா..!” என்றான்.

“என்னடா சொல்றிங்க..?” என்றார் அரசி.

“அட ஆமாம்மா...! உன்கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு தான் நினைச்சோம்..! ஆனா இப்ப சொல்லிட்டோம். அதுமட்டுமில்லை, அன்னைக்கு வழியில பார்த்த மதி கூட, இதைத்தான் சொல்லுச்சு. நாங்க ரெண்டு பேரும் குடிக்காம,ஒழுங்கா இருந்தா...சொத்தை எங்க ரெண்டு பேருக்கும் கையெழுத்து போட்டுத் தரேன்னு கூட சொல்லுச்சு..!” என்றனர்.

“மதியா அப்படி சொன்னா...?” என்றார் அரசி, நம்ப முடியாமால்.

“அட ஆமாம்மா..! என்னைக்காவது நீ பெரியம்மான்னு பாசமா பேசியிருக்கியா..? இல்லை நாங்கதான் அண்ணன்ன்னு அவளுக்கு ஏதாவது பண்ணியிருக்கோமா..! இப்படி எதுவுமே செய்யாம, உங்கப்பாவுக்கு சொத்துல பங்கில்லைன்னு சொன்னா, அவளும் வம்புக்கு தான் நிப்பா.

அவ மட்டும் கோர்ட்க்கு போனான்னு வையி, நம்மால ஒன்னும் செய்ய முடியாது. மனோகர் சித்தப்பா பங்கை குடுக்க முடியாதுன்னு இங்க யாரும் சொல்ல முடியாது. நல்லா யோசிச்சுப் பாருங்க..!” என்று சொல்லிவிட்டு, இருவரும் வெளியே சென்று விட்டனர்.
இயல்பிலேயே அரசி கெட்டவர் இல்லை. திலகாவின் சேர்க்கைதான் அவரை இப்படி மாற்றியிருந்தது. இன்று பிள்ளைகளின் பேச்சில், கொஞ்சம் யோசிக்கத் தொடங்கியிருந்தார் அரசி.

“என்னக்கா...? என்ன சொல்லிட்டு போறானுக...?” என்றபடி திலகா வர,

“அது ஒண்ணுமில்லை திலகா. கல்யாண விஷயமா பேசிட்டு இருந்தோம்...” என்று அரசி பட்டும் படாமல் பதில் அளிக்க,
“என்னக்கா..? ஏதோ வேண்டா வெறுப்பா பதில் சொல்றிங்க..?” என்றார் திலகா.

“அப்படியெல்லாம் இல்லை திலகா. நிச்சயத்துக்கு மனோகரு குடும்பத்தையும் கூப்பிடணும்ன்னு சொல்லிட்டு இருந்தாக, அதான் யோசனையில இருந்தேன்..!” என்றார்.

“ என்னக்கா...நடக்குறது எல்லாம் புதுசா இருக்கு. திடீர்ன்னு என்ன கொழுந்தன் வீட்டு மேல பாசம் பொங்குது..?” என்றார்.

“திடீர்ன்னு பொங்கலை....ஆனா, பையக சொல்றதும் ஒருவிதத்துல உண்மை தான். சாகப் போறப்ப எண்ணத்தை கொண்டுட்டு போகப் போறோம். நீ பெருசா? நான் பெருசான்னு.. ஏன் இப்படி அடிச்சுகிட்டு கிடக்கணும். அதைத் தான் யோசிக்கிறேன்..!” என்றார்.

“உங்களுக்கு நல்லா வேப்பில்லை அடிச்சுட்டு போயிருக்காக அரசியக்கா...! ஆனா ஒன்னு சொல்லுறேன், அவுக வரதா இருந்தா...எங்களைக் கூப்பிடாதிங்க..!” என்றபடி எழுந்து சென்று விட்டார் திலகா.கடைசியில் அரசி தான் முழித்துக் கொண்டிருந்தார்.

அங்கே மதிக்கோ, பள்ளியில் வேலையே ஓடவில்லை. பாடம் எடுப்பதில் அவள் கவனம் சுத்தமாக இல்லை. பேசாமல் ஸ்டாப் ரூமில்,,,,,, தலையைக் கவிழ்த்து படுத்து விட்டாள்.

“ஹேய் மதி...? ஐ ஆம் பேக்..!” என்ற குரலில் நிமிர, அங்கே நின்றிருந்தாள் வினோதினி.

“ஹாய் வினோ..! எப்படிடி இருக்க...?” என்று கேட்டவள், எழுந்து அவளை அணைத்துக் கொண்டாள்.

“நான் நல்லா இருக்குறது இருக்கட்டும். மேடம் என்ன ஒரே சோகத்தை பிழிஞ்சுகிட்டு இருக்கீங்க..?” என்றாள் அவளை யோசனையாய் பார்த்தபடி.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல..!” என்று மதி மனதை மறைக்க,

“அம்மா காலைலயே சொல்லி தான் அனுப்புனாங்க..! உன்னை கண்டிப்பா கூட்டிட்டு வரணும்ன்னு..!” என்றாள் மதி.

“வாய்ப்பே இல்லை மதி. வேணுமின்னா பெரியம்மாவை வந்து பார்த்துட்டு வரேன்..! ஆனா, அங்க தங்குறதுக்கு வாய்ப்பே இல்லை.
இரண்டு நாளைக்கு மேல அங்க தங்குனா மூச்சு முட்டும் மதி.பிளீஸ் புரிஞ்சுக்கோ..!” என்றாள் வினோ.

“அதுக்குமேல உன் விருப்பம். இவ்வளவு பக்கத்துல இருந்துகிட்டு, ஹாஸ்ட்டல்ல தங்குனா...சித்தி எங்களை என்ன நினைக்க மாட்டாங்க..?” என்றாள் மதி.

“ஒன்னும் நினைக்க மாட்டாங்க. என்னைப் பத்தி அவங்களுக்கு நல்லாவே தெரியும்..!” என்றாள் வினோ.
“இருந்தாலும்..” என்று மதி இழுக்க,

“அதை விடு..! ஊர் எப்படி இருக்கு..? கொஞ்சமாவது திருந்தி இருக்காங்களா மக்கள், இல்லை இன்னமும் அப்படியே தான் இருக்கா..சுமதி எப்படி இருக்கா...அப்பறம் உன் ஸ்கூல் பிரண்ட்ஸ், கங்கா,செல்வி எல்லாம் எப்படி இருக்காங்க..!” என்றாள் விடாமல்.

“எல்லாரும் நல்லா இருக்காங்க...!” என்று சத்தமாக சொன்னவள், ”என்னைத் தவிர..!” என்ற வாக்கியத்தை மட்டும் மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

“என்னாச்சு மதி..?”

“ஒண்ணுமில்லைடி..!” என்றாள். ஆனால் அந்த வார்த்தைக்குள் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தது.

“இன்னைக்கு மட்டுமாவது வீட்டுக்கு வருவ தான..?” என்றாள்.

“கண்டிப்பா...!!” என்றாள் வினோ. அந்த வார்த்தைக்கும் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தது.

அன்றைக்கு பள்ளி முடிந்து இருவரும் பஸ் ஏறும் வரை ஒன்றும் தெரியவில்லை மதிக்கு. ஆனால் எப்போதும் போல், ஜன்னல் ஓர இருக்கை, அவளுக்கு முகிலனை முன்னிறுத்த... தவித்துப் போனாள்.

பஸில் வந்தால், உரசிக் கொண்டு அருகே வந்து அமரும் முகிலன், முகத்தைத் திருப்பினால் வம்படியாய் அவனைப் பார்க்க வைக்கும் முகிலன்,காத்து மடல்கள் கூசும் அவனின் மூச்சுக் காற்று...என்று மொத்தமும் முகிலன் ஆகிப் போனாள்.

சாயந்தரம் எப்படியும் வருவான் என்று அவள் எதிர்பார்த்திருக்க, அவன் தான் இல்லையே. எப்படி வருவான்.

“ஒருநாள் பார்க்கலை..! இத்தனை வருஷம் இவனைப் பார்க்காமத் தான இருந்தேன். ஆனா இப்ப ஒரு நாள் கூட முடியலை..!” என்று உள்ளே உருகிக் கொண்டிருந்தவள், அமைதியாக வர,

“என்னடி அமைதியா வர..?” என்று வினோ தான் ஆரம்பித்தாள்.

“ஒண்ணுமில்லை வினோ..! லேசா தலைவலி...” என்றாள்.

“கேட்கணும்ன்னு நினைச்சேன்..! ஆமா, எப்படி இருக்காரு ஹீரோ..?” என்றாள் வினோ.

“ஹீரோவா..? அது யாரு..?” என்று மதி புரியாமல் முழிக்க,

“அதாண்டி உன் எக்ஸ் ஹஸ்பண்ட்.... இப்போ என்ன பண்றார்..? விவசாயமா..?” என்றாள்.

“அது எதுக்கு உனக்கு...?” என்றாள்.

“இது என்னடி வம்பா இருக்கு. கேட்க கூட கூடாதா..?” என்றாள்.

“அவரு இப்போ டாக்டர்..!” என்றார்.

“என்னது டாக்டரா...? நடந்த பிரச்னைக்கு அப்பறம், அவரு படிக்கப் போகலைன்னு கேள்விப் பட்டோம்...!” என்றாள் வினோ அதிர்ச்சி தாங்காமல்.

“அதெல்லாம் சுத்த பொய்..! நானும் கூட நம்பிட்டேன். ஆனா, அவர் படிப்பையும் விடலை..எதையும் விடலை..!” என்றாள் இரு பொருள் பட.

“படிப்பு சரி..! வேற என்ன இருக்கு..? விடுறதுக்கு..” என்று வினோதினி கொஞ்சம் நக்கலாகக் கேட்க, அவளை முறைத்தாள் மதி.
“சரி சரி , முறைக்காத...! சரி, ஆள் எப்படி இருக்கார். அப்பவே சும்மா ஜம்முன்னு இருந்தாரு. இப்ப கேட்கவா வேணும்..?” என்று வினோதினி, முகிலனின் நினைவில் சொல்ல,

“அவரைப் பத்தி உனக்கு என்ன பேச்சு...? கொஞ்ச நேரம் அமைதியா வா..!” என்றாள் கொஞ்சம் கோபமாய். அவள் கோபத்திற்கான காரணம் தெரியாமல் வினோதினி தான் முழித்துக் கொண்டு வந்தாள்.

“நான் என்ன சொல்லிட்டேன்னு, இப்படிக் கத்துறா..?” என்று யோசித்தவள், அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை.
“பஸ் நிறுத்தத்தில் இருப்பான்..!” என்று மதி எதிர்பார்க்க, அங்கும் அவளுக்கு ஏமாற்றமே.

“ச்ச்ச...மானங்கெட்ட மனசு. அவனைப் பத்தி நல்லா தெரிஞ்சும், ஏன் இப்படி எதிர்பார்க்குது..?” என்று எரிச்சலுடன் நடந்து கொண்டிருந்தாள். அவர்கள் பின்னால் வந்த முத்து,

“என்ன மதி நடந்து போற..?” என்றபடி, வண்டியை ஸ்லோ பண்ணினான் .

அவனைப் பார்த்த வினோதினி,

“இவன்..அவன் இல்ல...!” என்றாள்.

“நடந்து போகாம..? ஓடிப் போக சொல்றியா..? கொலைகாண்டுல இருக்கேன்.பேசாம போய்டு..!” என்று எரிந்து விழுந்தாள் மதி.
“ஏய் பொண்ணு..? எப்படி இருக்குற..?” என்றான்.

வினோதினி அவனை முறைக்கவும்,

“எல்லாம் என் நேரம்..!” என்றபடி சென்று விட்டான் முத்து.

“இன்னுமாடி இவன் கூட பேசிட்டு இருக்க..?” என்ற வினோ.

“இங்க பாரு..! அவன் என் பிரண்டு. இப்ப மட்டுமில்ல, எப்பவுமே பேசுவேன்..!” என்றாள் மதி.

அவளின் பேச்சில் வினோதினிக்கு ஒரு மாதிரியாகிப் போனது. ஏதோ நியாபகங்கள் வர, அதோடு வாயை மூடிக் கொண்டாள்.
வீட்டை நெருங்கும் போதும், கண்கள் முகிலனின் வீட்டு வாசலைப் பார்க்க, அங்கும் மதிக்கு ஏமாற்றமே.கலங்கிய கண்களை வெளிக்காட்டதவாறு, வீட்டிற்குள் நுழைந்தாள்.

“ஹாய் பெரியம்மா..!”

“வா வினோதினி...! எப்படி இருக்க..? அம்மா எப்படி இருக்கா..? வேலைல சேர்ந்துட்டியா..? பிடிச்சிருக்கா...?” என்றார் பார்வதி விடாமல்.
“உங்க எல்லா கேள்விக்கும் ஒரே பதில் தான். எல்லாமே ஓகே. எல்லாமே நல்ல இருக்கு. எல்லாமே பிடிச்சிருக்கு..!” என்றாள் வினோ.

“என்ன மதி..? ஏன் சோர்வா இருக்க..?” என்றார் பார்வதி.

“தெரியலைம்மா..! காய்ச்சல் வர மாதிரி இருக்கு. தலையெல்லாம் வலிக்குது..!” என்றாள்.

“காய்ச்சலா..?” என்ற பார்வதி, அவளைத் தொட்டுப் பார்க்க, உடல் அனலாய் கொதித்தது.

“காய்ச்சல் இப்படி அடிக்குது. வர மாதிரி இருக்குன்னு சொல்ற..? நீ முதல்ல உட்காரு..!” என்றார்.

“என்ன மதி...? அங்கயே சொல்லி இருந்தா இன்ஜெக்ஷன் போட்டுட்டு வந்திருக்கலாம்ல...!” என்றாள் வினோ.

“அப்போ தெரியலை வினோ..!” என்றாள் மதி.

இது காதலனை காணாததால் வந்த காய்ச்சல் என்று அவர்களுக்கு எப்படித் தெரியும்.




 
ஹாய் பிரண்ட்ஸ்....

கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் அனைத்து தோழமைகளுக்கும் நன்றி.

உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல, கடமைப்பட்டுள்ளேன். இந்த அத்யாயத்தையும் படித்து விட்டு, உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துக்கள் மட்டுமே என்னை செப்பனிடும்...!

நன்றி தோழிகளே...!
 
Top