Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
காதல் 27:

மதி காய்ச்சலில் படுத்து முழுதாக இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. ஊசி போட்டும் காய்ச்சல் குறைந்த பாடில்லை. இரண்டு நாட்களும் தூங்கிக் கொண்டே தான் இருக்கிறாள். விடியும் நேரம், இரவு நேரம் என்று எதுவும் பாகுபாடில்லை. அவள் அறியவுமில்லை.

“இப்ப என்ன பெரியம்மா பண்றது...? நான் வந்த நேரம், இவளுக்கு இப்படி காய்ச்சல் வந்திருச்சு..!” என்று வினோதினி சொல்ல,

“காய்ச்சல் நேரம் காலம் பார்த்துட்டா வரும்.இன்னும் ரெண்டு நாள்ல சரியா போய்டும். காய்ச்சல் வந்தா உடனே சரி பண்ண கூடாது...!” என்றார் பார்வதி.

“பரவாயில்லையே பெரியம்மா..! டாக்டர் மாதிரியே பேசுறிங்களே..?” என்றாள்.

“இதைத் தெரிஞ்சுக்க கூட, பெரிய படிப்பெல்லாம் படிக்கனுமா என்ன..?” என்ற பார்வதி, மதிக்கு கஞ்சி வைத்துக் கொண்டிருந்தார்.

இரண்டு நாட்கள் அவளைத் தவிக்க விட்டவன், அப்போது தான் வந்து சேர்ந்தான். அவ்வளவு காய்ச்சலிலும், முகிலனின் புல்லட்டின் சத்தம், மதியின் காதுகளை தீண்டிச் சென்றது. ஆனால் அவளால் எழுந்து உட்காரவே முடியவில்லை.

வண்டி சத்தத்தைத் கேட்டு, வெளியே எட்டிப் பார்த்த சுமதி,

“அம்மா..! முகிலன் மாமா வந்துட்டாங்க போல. அவங்க வீட்டு முன்னாடி பைக் நிக்குது..!” என்றாள்.

அவள் சொல்வதை வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தாள் வினோதினி.

“என்ன நடக்குது இங்க...? அவனுக்கும், இந்த குடும்பத்துக்கும் ஆகாதே. முக்கியமா மதிக்கு ஆகாதே. ஆனா, சுமதி பேசுறதை பார்த்தா வேற என்னவோ இருக்கும் போலயே...?” என்று வினோதினி யோசித்துக் கொண்டிருக்க,

“இப்ப தான் வந்திருகாப்டி போல. அசதியா இருக்கும். நீ போய் எதுவும் சொல்ல வேண்டாம்...!” என்ற பார்வதி, கஞ்சியை எடுத்துக் கொண்டு, மதியின் அருகில் சென்றார்.

“மதி, எழுந்து இந்த கஞ்சியைக் கொஞ்சம் குடி, கொஞ்சம் தெம்பா இருக்கும்..!” என்றார். ஆனால் அவளுக்கு காதிலேயே விழவில்லை என்பதைப் போல் உறங்கிக் கொண்டிருந்தாள்.

“இப்படியே தூங்கிட்டே இருந்தா, காய்ச்சல் எப்படி சரி ஆகும்..? எழுந்து இந்த கஞ்சியை கொஞ்சம் குடி மதி..!” என்றார் மீண்டும். மதி அசைந்தபாடில்லை.

முகிலன் வீட்டிற்குள் நுழையும் போதே, சோர்வுடன் தான் நுழைந்தான். மதியின் வீட்டைக் கடக்கும் போது, கண்கள் அவளைத் தேடினாலும், அதையும் மீறிய சோர்வு, அவனை வேறு யோசிக்க விடவில்லை.

“வா முகிலா..!” என்ற மலர், அவனின் முகத்தைப் பார்த்து பதறிப் போனார்.

“என்னப்பா கண்ணு இப்படி செவந்திருக்கு..?” என்று மலர் கேட்க, இறுகிய முகத்துடன் இருந்தவன்,

“ஒண்ணுமில்லம்மா..! ரொம்ப அசதியா இருக்கு..! நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்..! என்னை எழுப்பாதிங்க..!” என்றபடி சென்று விட்டான்.

“என்னாச்சு இவனுக்கு..?” என்று புரியாமல் யோசித்துக் கொண்டிருந்தார் மலர்.

அறைக்குள் சென்று, அப்படியே கட்டிலில் விழுந்தான் முகிலன். குளிக்க வேண்டும் என்று கூட தோணவில்லை அவனுக்கு. சென்னையில் நடந்த விஷயங்களே மறுபடியும் நினைவிற்கு வந்தது.

முகிலன், படிக்கும் காலத்தில் இருந்தே தாமஸைக் கண்டால் அவனுக்கு ஆகாது. கல்லூரியில் முகிலனை ஜெயிக்க வேண்டும் என்று எண்ணி, அவன் மண்ணைக் கவ்வியது தான் மிச்சம். முகிலனை ஜெயிக்க முடியாமல், அவன் தன் மானத்தை சீண்டி விட்டு வேடிக்கைப் பார்ப்பது, இப்போது மட்டுமல்ல, கல்லூரி காலத்திலிருந்தே தாமஸின் பழக்கம்.

சில வருடங்களுக்குப் பிறகு, சென்னையில் தாமஸை சந்தித்தான் முகிலன். இவன் சென்றிருந்த கான்ப்ரன்சிற்கு அவனும் வந்திருந்தான். அங்கிருந்த சீனியர் மருத்துவர்கள் முகிலனை புகழ்ந்து தள்ள, காலம் கடந்தும் அதைப் பொறாமையுடன் பார்த்தான் தாமஸ். அதிலும் அவர்களின் கல்லூரி கால பேராசிரியரும் ஒருவர்.

“அப்படி என்ன தான் அவன்கிட்ட இருக்கு..? அவனை இப்படி தலை மேல தூக்கி வச்சு கொண்டாடுறானுக...? ஆப்ட்ரால் வில்லேஜ்ல இருந்து வந்தவன்...இவனெல்லாம் எனக்கு நிகரா..?” என்று மனதில் எண்ணியவன்,

“நீங்க சொல்ற மாதிரி, டாக்டர் முகிலனை நினைச்சா எனக்கும் பெருமையா தான் இருக்கு. நாங்க ரெண்டு பேரும் காலேஜ் பிரண்ட்ஸ் வேற...?” என்றான் தாமஸ்.

“இசிட்..! அப்போ முகிலனை அப்ப இருந்தே தெரியுமா உங்களுக்கு..? வாட் எய டேலன்ட் மேன்...இப்போவே நிறைய தீசிஸ் பண்ணிட்டு இருக்கார்..!” என்றனர் சக வயது மருத்துவர்கள்.

“டேலன்ட் தான்...! என்ன டேலன்ட் இருந்து என்ன செய்ய...? பெர்சனல் லைப் ஜீரோ ஆகிடுச்சே...!” என்றான் தாமஸ்.

“என்னாச்சு...?” என்றனர் ஆர்வமுடன். முகிலன் பல்லைக் கடித்துக் கொண்டு தாமஸை முறைக்க, அதைப் பார்த்த தாமஸிற்கு, மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது.

“எஸ்..! படிக்கும் போதே, ரொம்ப கஷ்ட்டப் பட்டுட்டான்..!லைக், டாக்டர் முகிலனோட ஊர் ஒரு வில்லேஜ். படிக்கும் போதே, முகிலனுக்கு மேரேஜ் ஆகிடுச்சு,. தென், என்ன பிராப்ளம்ன்னு தெரியலை, அது போலீஸ் கேசாகி, முகிலன் காலேஜ்க்கு கூட கொஞ்ச நாள் வரலை. முகிலன் வொய்ப் கூட, அப்பவே அவனை விட்டு போய்ட்டாங்க..! இப்போ வரைக்கும் வேற மேரேஜ் கூட பண்ணிக்கலை..! என்ன பிராப்ளம்ன்னு தெரியலை...” என்றான் தாமஸ். முகிலனைப் புகழ்வதைப் போல புகழ்ந்து, பழித்து விட்டான்.

“டாக்டர் இவர் சொல்றது உண்மையா..?” என்று சக டாக்டர்கள், அனுதாபத்துடன் கேட்க, சிலர் ஆர்வத்துடன் கேட்டனர்.

“தாமஸ்..! யு கிராஸ் த லிமிட்...வந்தா, வந்த வேலையை மட்டும் பார்க்கணும். நான் இன்னும் அதே பழைய முகிலன் தான். என்னைப் பத்தி என்னைவிட உனக்கு நல்லா தெரியும்...” என்ற முகிலன்,

“சாரி பிரண்ட்ஸ்...இட்ஸ் மை பர்சனல்..சோ பிளீஸ்..!” என்று தன்மையாய் சொல்ல,

“ஹோ..! இட்ஸ் ஓகே டாக்டர்...பீல் ப்ரீ..!” என்றபடி களைந்து செல்ல, இப்போது தாமஸை நன்றாகவே முறைத்தான் முகிலன்.

தன் முழுக்கை சட்டையின் பட்டனை கழட்டி, சட்டையை மேலே ஏற்றியவன், தாமஸைப் பார்த்து,

“இப்ப கேளு..உனக்கு என்ன சந்தேகம்...?” என்றான்.

“நீ இப்படி பண்ணுனா...நாங்க பயந்துடுவோமா...? உன்கிட்ட அடிவாங்க நான் ஒன்னும் பழைய தாமஸ் கிடையாது...நான் இப்போ டாக்டர்..!” என்றான்.

“அப்படியா...? நான் என்ன கம்பவுண்டர்ன்னா சொன்னேன்..! இன்னும் உனக்கு புத்தி மாறவே இல்ல...நீ என்ன படிச்சு என்னத்துக்கு...? போடா டேய்..!” என்றபடி திரும்பி நடந்தான் முகிலன்.

அவனை குரோதத்துடன் பார்த்த தாமஸ்...”டாக்டர் முகிலன்...! எனக்கு மேரேஜ் ஆகி, ஒருவயசுல ஒரு பையன் இருக்கான்.. நீங்க எதுக்கும் உங்களை செக் பண்ணிக்கோங்க...அடிக்கறவன் எல்லாம் ஆம்பிள்ளை கிடையாது..!” என்றான்.

அவனின் வார்த்தைகள், முகிலனின் தன்மானத்தை முழுதாய் சீண்டி விட ரௌத்திரமாய் மாறிப் போனான். இருக்கும் இடம் அறிந்து தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டான். அவனை நோக்கி திரும்பியவன்,

“ஒரு குழந்தையைக் குடுக்கறவன் எல்லாம் ஆம்பிள்ளை கிடையாது.எவ்வளவு பெரிய புரபஷன்க்கு போனாலும், உன்னோட சீப் மென்டாலிட்டி இன்னும் மாறவே இல்லை. மொத்ததுல நீ மனுஷனே கிடையாது...! போடா டேய்..!” என்றபடி வந்துவிட்டான் முகிலன். இருந்தாலும், தாமஸ் ஏற்றிய நெருப்பு, அவனின் மனதில் எரிந்து கொண்டே இருந்தது.

“வேண்டாம் முகிலா..அதைப் பத்தி நினைக்காத..!” என்று ஒரு மனம் சொன்னாலும்,

“இவனெல்லாம் பேசுற அளவுக்கு ஆகிட்டோமே..? எல்லாம் இவளால வந்தது. இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்..!” என்று மனதில் ஒரு முடிவுடன் தான் வீட்டிற்கு வந்தான். அதையே நினைத்துக் கொண்டிருந்தவன், தூக்கத்தையும் தொலைத்திருந்தான்.

அவன் பேசியதை எல்லாம் பொருட்படுத்தக் கூடாது என்று ஒரு மனது எண்ணினாலும், ஏதோ ஒன்று அவனை உள்ளே தூண்டிக் கொண்டிருந்தது.

இரவு எட்டு மணியாகியும் அவன் சாப்பிட வராமல் இருக்க,

“என்னாச்சு முகிலனுக்கு...? இன்னும் பய சாப்பிடல..?” என்றார் பெரியசாமி.

“என்னன்னு தெரியலைங்க..! வரும் போதே, ஒரு மாதிரி கோவமா தான் வந்தான். தூங்கப் போறேன், எழுப்பாதிங்கன்னு சொல்லிட்டுப் போனான்.இன்னும் தூங்கிட்டு தான் இருக்கான். எழுப்ப மனசு வரலை. அதான் வந்துட்டேன்..!” என்றார் மலர்.

“அதுக்காக, வெறும் வயித்தோட தூங்குறதா...? அவனை முதல்ல எழுப்பு. சாப்பிட்டு தூங்கட்டும். பெரிய டாக்டருன்னு பேரு, செய்றது எல்லாம் சின்ன பிள்ளைத்தனமா..?” என்று பெரியசாமி முனங்க,வேறு வழியில்லாமல் மகனை அழைக்க சென்றார் மலர்.

“என்னம்மா..?” என்றான் சிவந்த கண்களுடன்.

“சாப்பிட்டு தூங்கு தம்பி..!” என்றார் மலர். இப்பொழுதெல்லாம் அவனை ‘டா’ போட்டு பேச மலருக்கு வாய் வருவதில்லை.

“சரி..! நீங்க போங்க, நான் குளிச்சுட்டு வரேன்..!” என்றான். மலர் சென்றவுடன், அவன் கண்கள் தாமாக, மதி வீட்டின் பக்கம் இருக்கும் ஜன்னல் பக்கம் சென்றது.எழுந்து ஜன்னலைத் திறந்தவன், மதியின் வீட்டைப் பார்க்க, அவள் தென்படவில்லை. யாரும் தென்படவில்லை. ஒரு சிறிய குண்டு பல்ப் மட்டுமே எரிந்து கொண்டிருந்தது.

நேரத்தைப் பார்க்க, அது எட்டு மணியைக் காட்டியது. இவ்வளவு நேரமாவா தூங்கியிருக்கோம்..? என்று நினைத்தவன், குளித்து விட்டு வந்து மீண்டும் பார்த்தான்.

எத்தனை முறை பார்த்தாலும், காய்ச்சலில் படுத்திருக்கும் மதி, அவன் கண்களுக்குத் தெரியவா போகிறாள்.கடுப்புடன் கீழே சென்றான்.

கீழே சென்றவனுக்கு, மலர் தட்டில் வைத்த இட்லி கண்களில் தெரியவில்லை. இட்லியை சில நிமிடங்கள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன முகிலா..! சாப்பிடு. எதா இருந்தாலும் சாப்பிட்டுட்டு யோசி..!” என்றார் பெரியசாமி.

“எங்கம்மா அவ..?” என்றான் மொட்டையாய்.

“யாரக் கேட்குற...?” என்றார் மலர். அவருக்கு பதில் சொல்லும் அளவிற்கு அவனுக்கு பொறுமை இல்லை.

“யாரைக் கேட்பாங்க...! என் பொண்டாட்டியைத் தான் கேட்டேன்..!” என்றபடி பட்டென்று எழ,

“நீ மதின்னு சொல்லாம, மொட்டையா சொன்னா...எங்களுக்கு எப்படித் தெரியும்..?” என்றார் பெரியசாமி.

“உங்களுக்குத் தெரியவே வேண்டாம். என் கஷ்ட்டம் எனக்கு. உங்களுக்கு என்ன..? இந்த வயசுலயும் நீங்க உங்க பொண்டாட்டியை பக்கத்துல தான வச்சிருக்கிங்க...?” என்று எரிந்து விழுந்தான்.

“முகிலா..! அப்பாகிட்ட என்ன பேச்சு பேசுற...?” என்றார் மலர்.

ஒரு நிமிடம் நிதானித்தவன்...”சாரிப்பா...!” என்று சொல்லிவிட்டு,

“நான் போய் அவளைப் பார்த்துட்டு வந்து சாப்பிடுறேன்..!” என்றபடி வெளியே சென்றான்.
 
“முகிலா..! நில்லு. அவளுக்கு உடம்புக்கு சரியில்லை..! காலையில போய் பார்த்துக்கலாம்..!” என்று மலர் கத்திக் கொண்டிருந்தது, அவன் காதில் விழவேயில்லை. அதற்குள் அவன் மதியின் வீட்டின் முன் நின்றிருந்தான்.

“இவனுக்கு என்னங்க ஆச்சு..?” என்றார் மலர்.

“பார்த்தா தெரியலை, இனி மதியில்லாம உன் மகன் ஒரு நாள் கூட இருக்க மாட்டான்..! என்னமோ நடந்திருக்கு. ஆனா என்னன்னு தான் தெரியலை..!” என்றார் பெரியசாமி.

“அவளுக்கு வேற அங்க காய்ச்சல், இவன் பேசாம அங்க போய் ஏதாவது ஏடாகூடமா பேசிட போறான்..!” என்று மலர் பதட்டம் அடைந்தார்.

“அதெல்லாம் பேசமாட்டான். மதியை பார்த்தாலே, உன் மகனுக்கு பாதி சரியாகிடும். பேசாம இரு..!” என்றார்.

“என்னங்க நீங்க..? நான் என்ன சொல்லிட்டு இருக்கேன், நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க...?” என்றவர், தானும் மதியின் வீட்டிற்கு சென்றார்.

“யாரு இப்படி கதவைத் தட்டுறது...? வினோதினி யாருன்னு பாருமா..!” என்றார் பார்வதி.

“சரி பெரியம்மா..!” என்றவள், சென்று கதவைத் திறக்க, புயல்போல் உள்ளே நுழைந்தான் முகிலன். அவனைப் பார்த்த வினோதினிக்கு அடையாளம் சுத்தமாகத் தெரியவில்லை. பின்னே கல்லூரி மாணவனாய் பார்த்தவனுக்கும், கட்டிளங் காளையாய் பார்ப்பவனுக்கும் வித்யாசம் இருக்கத்தானே செய்யும்.

“வாவ்..! ஹீரோ...!” என்று அவள் வாயைப் பிளக்க, அவள் ஒருத்தி அங்கு இருந்ததையே சட்டை செய்யாமல் உள்ளே சென்றான் முகிலன்.

“யாரு வினோ..!” என்றபடி பார்வதி வர, முகிலனை அந்த நேரத்தில் பார்த்தவர்,

“வாங்க தம்பி..! என்ன இந்த நேரத்துல...” என்றார் புரியாமல்.

“மாமியார் வீட்டுக்கு நேரம் காலம் பார்த்து தான் வரணுமா அத்தை..!” என்றான்.

“இல்ல தம்பி, இந்த நேரத்துக்கு வந்ததில்லையேன்னு கேட்டேன்..!’ என்றார்.

“இனி எந்த நேரத்துலையும் வருவேன்.இனி எல்லாத்தையும் எதிர்பாருங்க..!” என்றவன்,

“மதி எங்க..?” என்றான்.

“உள்ள தூங்கிட்டு இருக்கா தம்பி..!” என்றார் பார்வதி.

“இங்க ஒருத்தன், இவளால தூக்கம் போய் தவிக்கிறேன்..! இவ எப்ப பார்த்தாலும் தூங்கிட்டு தான் இருக்கா...இவளை..” என்று முகிலன் பல்லைக் கடிக்க,

“நீ கூட இந்நேரம் வரைக்கும் தூங்கிட்டு தான இருந்த..” என்று மனசாட்சி ஒரு பக்கம் கிண்டல் அடிக்க, அதை ஒரு புறம் ஒதுக்கியவன்,

அன்று போல், அவளுடைய அறைக்கு உடனே செல்லவில்லை. அன்று சுமதி வெளியில் இருந்தாள். இன்று உள்ளே இருந்தாள். அவள் முன்பு அப்படி செல்வது அவனுக்கு சரியாகத் தோன்றவில்லை.(இதெல்லாம் வக்கனையாத்தான் யோசிக்கிறான்.)

“மதியை கூப்பிடுங்க..! கொஞ்சம் பேசணும்..!” என்றான்.

“இல்ல தம்பி, அவ நல்லா தூங்கிட்டு..” என்று அவர் முடிக்க கூட இல்லை...மலர் வந்து விட்டார்.

“முகிலா, என்ன இது..? வா வீட்டுக்கு. காலையில பார்த்துக்க...!” என்றார் மலர்.

“ஏன் இந்த நேரத்துக்கு என்ன...? நான் எவளோ ஒருத்தியை பார்க்க இந்த நேரத்துக்கு வரலை. அவ என் பொண்டாட்டி..!” என்றான் முகம் இறுக.

“யாரு இல்லைன்னு சொன்னா..? அவளுக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியலை. அதான் சொல்றேன் வா..!” என்றார்.

“மதிக்கு என்னாச்சு...?” என்றவனுக்கு, இப்போது சுற்றி யார் இருக்கிறார்கள் என்ற கவலை பின்னுக்கு சென்றது.

“ரெண்டு நாளா காய்ச்சல் தம்பி..!” என்றார் பார்வதி.

“காய்ச்சலா..? இதை ஏன் நான் வந்த உடனே சொல்லலை..! டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனிங்களா இல்லையா..?” என்றபடி மதியிடம் சென்றான்.

மதியைத் தேடி வந்த அவன் வேகமெல்லாம், அவளை அப்படி ஒரு கோலத்தில் பார்த்தவுடன், அப்படியே வடிந்தது. துவண்ட கொடியாய் படுத்திருந்தாள். சிவந்த அவள் கண்ணங்கள் காய்ச்சலினால் மேலும் சிவந்து, அனலாய் இருந்தது.

“மதி..!” என்றபடி அவள் கைகளைப் பற்றியவனுக்கு, அவள் உடலின் சூடு கண்டு கோபம் தான் வந்தது.

“இவ்வளவு காய்ச்சல் வர வரைக்கும் என்ன பண்ணிங்க..? ஹாஸ்பிட்டல் போனிங்களா..? இன்ஜெக்ஷன் போட்டாங்களா..? என்ன பீவர்ன்னு செக் பண்ணிங்களா..?” என்றான் விடாமல்.

“முகிலா..! கொஞ்சம் மூச்சு விட்டுட்டு பேசு. வைரஸ் காய்ச்சல்ன்னு சொன்னாங்க..! இன்னும் ரெண்டு நாளைக்கு மாத்திரை குடுத்திருக்காங்க.பார்வதி மதினி கூட, நானும் தான் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்தேன். நீ இங்க இருந்திருந்தா, அந்த அலைச்சலும் இல்லை எங்களுக்கு..!” என்றார் மலர்.

அந்த காய்ச்சலிலும் அவன் குரல் கேட்டு, மெல்ல கண்களைத் திறந்தாள் மதி.

“ஏதாவது சாப்பிட்டாளா அத்தை..!” என்றான்.

“சாப்பிட மாட்டேங்கிறா தம்பி. நானும் கெஞ்சிப் பார்த்துட்டேன்..!” என்றார் பார்வதி.

ஒரு நிமிடம் அவளையும், அங்கு இருந்தவர்களையும் பார்த்து யோசித்தவன், மறுநிமிடம், அவளை அப்படியே கைகளில் தூக்கிக் கொண்டான்.

“என்ன பண்ற முகிலா..? அவளை விடு..!” என்று மலர் கத்த,

“என்ன தம்பி பண்றிங்க...?” என்று பார்வதியும் பதறினார்.

“உங்க யாரையும் நம்பி, இனி அவளை விட முடியாது. அவளை எப்படி பார்த்துக்கணும்ன்னு எனக்குத் தெரியும். விலகுங்க..! இனி இவ என்கூடத் தான் இருப்பா..!” என்றான்.

“முகிலா..என்ன இது..? அதுக்குன்னு ஒரு நேரம் காலம் வேண்டாமா...? ஒரு நல்ல நாளா பார்த்து...” என்று மலர் முடிக்கவில்லை.

“அம்மா..! இவ எப்ப நம்ம வீட்டுக்கு வராளோ, அது தான் நமக்கு நல்ல நேரம்..இப்போதைக்கு இவளுக்கு என்ன தேவையோ, அதை மட்டும் வாங்கிட்டு வாங்க..!” என்றவன், யாரையும் சட்டை செய்யாமல் கிளம்பிவிட்டான்.

காய்ச்சலில் துவண்டிருந்த மதிக்கு, நடப்பது கொஞ்சம் புரிந்தாலும், தெளிவான சிந்தனை இல்லை. “மணி மாமா..!” என்றவள், முகிலனின் நெஞ்சிலேயே சாய்ந்து கொண்டாள்.

அந்த நிலையிலும், அவளின் ‘மணி மாமா’ என்ற அழைப்பு, அவன் உயிர் வரைத் தீண்டி, அவனுக்குள் இருந்த காதல் உணர்வைத் தூண்டிவிட்டது. மேலும் அவளை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டான்.

அங்கு நடந்ததை எல்லாம், வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள் வினோதினி.

“என்னடா நடக்குது இங்க..? இது எப்படி சாத்தியம். மதி அவனுக்கு பொண்டாட்டியா...? நானும் கூடவே தானடா இருந்தேன். எனக்குத் தெரியாம இதெல்லாம் எப்படா நடந்துச்சு..?” என்று வடிவேல் பாணியில் யோசித்துக் கொண்டிருந்தாள்.

“எதுவும் நினைச்சுகிடாதிங்க மதினி...! அவன் வந்தப்பவே முகம் சரியில்லை. இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கலை..!” என்று மலர் வருத்தப்பட,

“விடுங்க மதினி..! நல்ல நாள்ல அவ அங்க வருவதா தான இருந்துச்சு. அது முன்னாடியே நடந்திடுச்சு. எது எப்படியோ...இனி மதி உங்க பொறுப்பு மதினி..!” என்றார் பார்வதி.

“நான் சொல்லத் தேவையில்லை மதினி. இருந்தாலும் சொல்றேன், முகிலன் என்னைவிட மதியை நல்லா பார்த்துப்பான்..!” என்றார் மலர்.

மதியோ, மாமனின் நெஞ்சில் தஞ்சம் அடைந்திருந்தாள்.







 
Top