Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Karisal Kaathal -4

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
காதல் 4:

கொஞ்சமாவது தள்ளி உட்காருவான் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து... அவள் சலிப்படைந்தது தான் மிச்சம்.அவன் கொஞ்சம் கூட நகராமல்.. மேலும் தள்ளிக் கொண்டும்,இடித்துக் கொண்டும் அமர்ந்தான்.

ஒரு நிலைக்கு மேல் பொறுக்க முடியாமல்..”.”””” கொஞ்சம் தள்ளி உட்காருங்க..இல்லைன்னா எந்திருச்சு வேற பக்கம் போய் உட்காருங்க..!” என்றாள்.

“எனக்கு இந்த இடம் தான் வசதியா இருக்கு..!” என்றான் வாயைத் திறந்து.ஆனால் இறுகிய அதே முகத்துடன்.

அவன் குரலில் அவளுக்கு கொஞ்சம் நடுக்கம் எடுத்தாலும் அதை மறைத்துக் கொண்டு..”ஆனா எனக்கு வசதியா இல்லை..” என்றாள்.

“உனக்கு வசதியா இல்லைன்னா..நீ எழுந்து போ...இல்லைன்னா நீ தள்ளி உட்கார்..!” என்றான் வேண்டும் என்றே.

தன்னுடைய இரண்டு புறமும் பார்த்தவள்..இதுக்கு மேல எங்க தள்ளி உட்கார்றது..?ஜன்னலைப் பிடிச்சு தொங்குனாதான் ஆச்சு..” என்று முனங்க...

“அதுல எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லை” என்றான் முன்னால் பார்த்தபடி.

இது சரிப்பட்டு வராது என்று நினைத்தவள்...எழுந்திருச்சு வேற சீட்டுக்கு போயிடலாம் என்று எண்ணி...எழுந்திரிக்க பார்க்க...அவளால் இம்மி கூட முடியவில்லை.

அவள் நகர முடியாதவாறு தோளோடு அணைத்துப் பிடித்திருந்தான் மணி முகிலன்.

அவனின் செயலில் அதிர்ந்தவள்..”என்ன பண்றிங்க?கையை எடுங்க முதல்ல..யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க..?” என்று சுற்றும் முற்றும் பார்க்க...

“அதைப் பத்தி எனக்கு கவலை இல்லை..” என்றான் இறுகிய முகத்துடன்.

“ஆனா எனக்கு கவலை இருக்கு...தயவு செஞ்சு விடுங்க..” என்று கெஞ்ச..

“ஏன் இப்போ அவன் கூட பைக்கில் வரும் போது மட்டும் இனிச்சதோ..!” என்றான் முகிலன்.

“ஹலோ..! அவரும் நீங்களும் ஒன்னு இல்ல..” என்றாள்.

“அப்படியா..? ஒண்ணுமே இல்லையா..?” என்றான்.மீண்டும் அதே இறுக்கம்.

“அதான் சொல்றேனே..ஒன்னுமில்லைன்னு.திரும்பத் திரும்ப கேட்டா என்ன அர்த்தம்..?” என்றாள் கொஞ்சம் கோபம் கலந்த குரலில்.

“பாருங்கப்பா..இவ்வளவு பேசுற அளவுக்கு வளர்ந்துட்டிங்க போல..?” என்றான் நக்கலாய்.

“வளராம...இன்னும் அப்படியே இருப்பாங்கன்ற நினைப்பா...அப்படி ஒரு எண்ணம் இருந்தா அதைத் தூக்கி குப்பைல போடுங்க..!” என்றாள் மூக்கு விடைக்க.

அவன் அவளை சட்டையே செய்யாமல்..அவள் பேசுவது காதிலேயே விழுகாதவன் போல் இருக்க...அவளின் தோளோடு அணைத்த அவன் கைகள் மட்டும் விலகாமல் அதே நிலையில் இருந்தது.

மதி தான் நெளிந்து கொண்டிருந்தாள்.அவளுக்கு அனைவரும் அவளை ஒரு மாதிரி பார்ப்பதைப் போன்ற பிரம்மை.

“உங்க மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்கீங்க..? இப்போ கையை எடுக்கப் போறிங்களா இல்லையா..?” என்றாள் ஆத்திரத்துடன்.

“என் மனசுல என்னென்னமோ தான் நினைச்சிருக்கேன்...ஏன் இப்ப கூட உன்னைக் கட்டிப் பிடிச்சு முத்தம் குடுக்கணும்ன்னு தான் நினைக்கிறேன்... ஆனா அதையெல்லாம் செஞ்சுகிட்டா இருக்கேன்...என்னமோ பெரிய இவ மாதிரி பேசிட்டு இருக்க..” என்றான்.

“என்ன மிஸ்டர்..உங்க பேச்சு ஒரு மாதிரி போயிட்டு இருக்கு..! நீங்க கட்டிப் பிடிச்சு முத்தம் குடுக்குற வரைக்கும் நான் சும்மா இருப்பேனா... உங்களுக்கு அவ்வளவு தைரியமா..?” என்றாள்.

“பாருங்கப்பா...புள்ளைப் பூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைச்சிருக்கு..!நான் வாய்ல தான் சொன்னேன்..நீயா என்னை சீண்டி விடுற மாதிரி இருக்கே..!” என்றான் அவள் முகத்தை ஆராய்ச்சியாய் பார்த்தபடி.

“ச்சிஈ..” என்றாள் வெறுப்பாய்.

ஏனோ அவளின் முகச்சுளிப்பு அவனிடம் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தியது.

“ஏய்..!!!!” என்று அவளின் கன்னங்களை விரல்களால் அழுத்திப் பிடிக்க... அந்த அழுத்தத்தில் அவளுக்கு வலி உயிர் போனது.

அவளின் முகத்தை அழுத்தமாய் பார்த்தவன்..”நான் சொன்னதை செய்ய எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது...அப்படியே செஞ்சாலும் என்ன செய்ய முடியும் உன்னால..?” என்றான்.

கஷ்ட்டப்பட்டு அவனின் விரல்களை விலக்கியவள்...”செருப்பால அடிப்பேன்..!” என்றாள் உக்கிரமாய்.

அவளின் வார்த்தைகளில் வெகுண்டவன்....கட்டுப்படுத்த முடியாமல் வந்த கோபத்தை..இருக்கும் இடம் கருதி அடக்கப் பார்க்க..அது அவனால் முடியாமல் போக..முகம் செந்தணலாய் மாறிப் போனது.

“இனி எப்படி நீ நிம்மதியா இருக்கேன்னு நானும் பாக்குறேன்..!” என்று உறும....

அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது என்னவோ நூறு சதவிகிதம் உண்மை.அவனைப் பற்றி அவளுக்கு தான் தெரியுமே..! இருந்தாலும் முகத்தில் பயத்தைக் காட்டாமல் இருக்க..பெரும்பாடு பட்டாள்.

“என் நிம்மதி என் கைல தான் இருக்கு.மத்தவங்க கையில குடுத்துட்டு சுத்துறதுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்லை..” என்றாள்.

“அதானா..நீ எப்படி முட்டாளா இருப்ப...மத்தவங்களை முட்டாளா ஆக்குறது தான் உனக்கு கை வந்த கலை ஆச்சே..!” என்றான் எகத்தாளமாய்.

“உங்க அனுமானத்துக்கும் கணிப்புக்கும் ரொம்ப நன்றி..” என்றவள் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொள்ள...மணி முகிலன் தான் கோபத்துடன் அமர்ந்திருந்தான்.

அவனின் உயரத்திற்கு அந்த மினி பஸ் சீட்டில் உட்கார்ந்திருந்ததே கொஞ்சம் சிரமமாக இருந்தது அவனுக்கு.எழுந்து செல்ல நினைப்பதை ஈகோ தடுக்க..அப்படியே இருந்துவிட்டான்.

ஆனால் மதிக்கு தான் அவஸ்தையை இருந்தது.யாராவது பார்த்தால்..? என்ற நினைப்பே..அவளை நிம்மதியாய் இருக்க விடவில்லை.
“ச்ச்ச...முதல் நாள் வேலைக்கு போறேன்...ஆரம்பமே இப்படி இருக்கே..!” என்று நொந்து கொண்டவள்...தலையை இவன் பக்கம் திருப்பவேயில்லை.

சுகமாய் செல்ல வேண்டிய பயணம் இருவருக்கும் கனமாய் சென்றது.

அவள் இறங்க வேண்டிய இடமும் வர...”நான் இறங்கனும்..” என்றாள் பட்டும் படாமல்.அவளை கண்டுக்காமல்..பக்கத்து சீட்டில் எழுந்து அமர்ந்தான்.

“தப்பிச்சேன்டா சாமி..!” என்று எண்ணியபடி இறங்கியவள்...ஒரு யோசனைக்காக அவனைப் பார்க்க...அவனோ கல்லோ,மண்ணோ என்று இருந்தான்.

அதற்கு பின்..நேரம் அவள் நினைவைத் தடுக்க...தன் வேலையை நோக்கிச் சென்றாள்.ஆனால் பின்னாலேயே வந்த மணி முகிலனை கவனிக்க தவறிவிட்டாள்.இப்பொழுது மட்டுமா கவனிக்கத் தவறினாள்...வாழ்க்கையில் பல இடங்களில் தவறினாள்.

குடும்பம் என்ற ஒன்று மட்டும் அவளுக்கு இல்லாமல் இருந்திருந்தால்.. இன்று அவள் இல்லை.ஆனால் அது அவளுக்கு பாதிப் புரியவேயில்லை என்பது தான் வித்தையிலும் விந்தை.

விரும்பி வருவதை நிராகரிப்பதும்...விலகி நிற்பதை தேடிச் செல்வதும் தான் மனித இயல்போ என்னவோ..?இயல்புகளின் இயலாமை தான் பல கண்ணீர்களுக்கு காரணமோ என்னமோ..?

இவள் நிம்மதியாய் வேலையைப் பார்க்க போக...அங்கே மணிமுகிலனின் வீட்டில் ஒரு பெரிய போரே நடந்து கொண்டிருந்தது.

முகிலனின் அப்பா பெரியசாமி ஒரு பக்கம் கோபமாய் இருக்க...அம்மா மலர் ஒரு பக்கம் கத்திக் கொண்டிருந்தார்.

முகிலனோ..எதையும் காதில் வாங்காமல் விட்டத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்க...

“நீ இப்படி செய்வன்னு நான் நினைக்கவேயில்லை மணி...யாரைக் கேட்டு அவளைப் போய் பார்த்துட்டு வந்த...அவ நிம்மதியா இருக்குறது உனக்கு பிடிக்கலையா..? இத்தனை வருஷம் கழிச்சு வந்திருக்க புள்ளைய..திருப்பி எங்கயாவது ஓட வைக்கிற திட்டமா..?” என்று மலர் கரிச்சுக் கொட்ட..

“அவன் என்ன சொல்ல வரான்னு தான் கொஞ்சம் காது குடுத்து கேளேன்...நீயா ஒன்ன நினைச்சு....நீயா பேசிட்டு இருக்குறதுல எந்த அர்த்தமும் இல்லை..” என்று பெரியசாமி சத்தம் போட...

“ஆமா..நான் பண்றது தான் உங்க கண்ணுக்குத் தெரியும்.இவன் பண்றது எல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியவே தெரியாது.நமக்குன்னு இந்த ஊருக்குள்ள ஒரு கவுரவம் இருக்கு...இவன் இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தா...ஊரு வாய்க்கு அவுல் கிடச்ச மாதிரி...ஆளாளுக்கு கண்ணு காது மூக்கு வச்சு பேச ஆரம்பிச்சுடுவாங்க..!”

“உங்களுக்கு ஊரு முக்கியமா..? இல்லை நான் முக்கியமா..?” என்றான் பட்டென்று.

“என்னடா மணி இப்படி பேசுற..?” என்று கண் கலங்கிய மலர்...சேலைத் தலைப்பால் கண்ணீரைத் துடைக்க...

“இப்ப எதுக்கு உடனே அழுகுறிங்க..? நான் என்ன அப்படிக் கேட்க கூடாத ஒன்னக் கேட்டுட்டேன்..!” என்றான்.

“நீ எதையும் கேட்கலை தான்...நீ கேட்காமையே எல்லாத்தையும் வித்து..படாத பாடுபட்டு உன்னைய படிக்க வச்சோம்ல அது தான் நாங்க பண்ண பெரிய தப்பு..!”என்றார் மலர்.
 
“இன்னும் எத்தனை நாளைக்கு தான் இதையே சொல்லி சொல்லி காட்டுவிங்க..! நீங்க படிக்க வச்சதுக்கு நான் எங்க பாதகம் பண்ணேன். நல்லா படிச்சு நல்லாத்தான இருக்கேன்..!” என்றான்.

“அதைத்தான் நாங்களும் சொல்றோம்..! நல்லா படிச்சுட்டு..எதுக்கு சேலத்துல வேலை பாக்கணும்..மெட்ராஸ் போய் பாக்கலாம்ல...நீ இன்னும் பெரிய ஆளா வரணும்..இந்த ஊருக்குள்ள எல்லாரும் உன்னை பெருமையா பேசனும்ன்னு தான் எங்களுக்கு ஆசை.ஆனா நீ என்னடான்னா...இங்கயே சுத்திட்டு..இப்ப வந்திருக்க அந்த புள்ள பின்னாடி சுத்திகிட்டு..இன்னைக்கு வேலைக்கும் போகாமல் வந்திருக்க...!” என்றார் பெரியசாமி.

“அப்பா முதல்ல..வேலை வேலைன்னு சொல்றதை நிப்பாட்டுங்க..! நான் ஒரு டாக்டர்.அதை நான் வேலையா நினைக்காம சேவையா நினைக்குறேன்.ஆனா நீங்க ஏன் அதை புருஞ்சுக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறிங்கன்னு தான் எனக்குப் புரியலை..”என்றான் எரிச்சலாய்.

“இன்னைக்கு எதுக்கு அந்த பிள்ளை பின்னாடி போன..? அதுக்கு முதல்ல பதில் சொல்லு..?” என்றார் மலர்.

“போகணும்ன்னு தோணுச்சு போனேன்..! இது ஒரு குத்தமா..?” என்றான்.

“நீ ஒரு டாக்டரு..” என்று பெரியசாமி சொல்ல..

“ஏன்ப்பா..டாக்டரு எல்லாம் பொண்ணு பின்னால போகக் கூடாதுன்னு இருக்கா..?” என்றான் இடக்காய்.

“வண்ண மதி பின்னால எதுக்கு போன..? மூளை இருக்குறவன் செய்யற வேலையா இது..?” என்று கேட்டுக் கொண்டிருக்க...வெளியே சத்தம் கேட்டது.

“அண்ணா,மலர் மதினி...” என்ற குரல் கேட்டு மலர் வெளியே வர..

அங்கே மதியின் இரண்டாவது பெரியப்பா கணபதியும்,திலகாவும் வந்திருந்தனர்.

“வாங்கண்ணா,வாங்க மதினி....” என்று மலர் உள்ளே கூப்பிட...அவர்கள் வந்திருந்த தோரணையிலேயே தெரிந்தது..அவர்கள் முக்கியமான விஷயம் பேச வந்திருக்கிறார்கள் என்று.

“என்ன விஷயம் அண்ணா...? வீடு வரைக்கும் வந்திருக்கிங்க..?” என்று மலர் ஆரம்பிக்க...

“முதல்ல காபி தண்ணிய குடு மலரு..!” என்றார் பெரியசாமி.

மலர் உள்ளே செல்ல...வந்திருந்தவர்களை ஆராய்ச்சிப் பார்வைப் பார்த்தான் மணி முகிலன்.

“என்ன மருமவனே..இன்னைக்கு ஆபீசுக்கு போகலையா..?” என்றார் திலகா..பதவிசாய்.

“அது ஆபீஸ் இல்லை..ஹாஸ்பிட்டல்..” என்றான் எரிச்சலாய்.

“என்ன மருமவன் கோவமா இருக்குற மாதிரி தெரியுது..?” என்று கணபதி கேட்க..

“அவன் என்னைக்கு சிரிச்சுப் பேசியிருக்கான்..அவன் குரலே அப்படித்தான்..” என்றபடி மலர் வந்து காப்பியை கொடுக்க....

“அதனாலென்ன..இருந்துட்டு போவட்டுமே மதினி...நேத்து பேஞ்ச மழையில முளைச்ச காளான் எல்லாம்..இன்னைக்கு அந்த ஆட்டம் ஆடும் போது...என் மருமவன்..எம்புட்டு படிப்பு படிச்சு..இப்போ டாக்குடரு வேற..சொல்லவா வேணும்..!” என்று முகிலனுக்கு பரிந்து கொண்டு வந்தார் திலகா.

“என்ன மச்சான் என்ன விஷயம்..?” என்று பெரியசாமி கேட்க..

“என்ன அண்ணேன் இப்படி கேட்குறிங்க...என் மகன் துரைபாண்டிக்கு வயசாகுது...அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்றதுக்கு முன்னாடி..நம்ம துர்காவுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிபுட்டா கடமை முடிஞ்சுடும் பாருங்க..!”

“அது வாஸ்தவம் தான் தங்கச்சி...என்ன வயசாகுது துர்காவுக்கு..?” என்றார் பெரியசாமி.

“வர தை மாசம் வந்தா பதினெட்டு வயசு முடியப் போகுதுண்ணே..!எங்க படிப்பு தான் மண்டைல ஏறலை.ஆனா வீட்டு வேலைய நறுவிசா செய்ய..துர்காவை மிஞ்ச யாராலையும் முடியாதுண்ணே..” என்று திலகா தேனாய் பேச..

“நல்லா இடமா பார்த்து..கல்யாணத்தை முடிச்சு வச்சுட்டா..கடமை முடுஞ்சுடும்ன்னு பாக்குறிங்க..?” என்றார் பெரியசாமி.

“வேற நல்ல இடம் எதுக்கு அண்ணே..நம்ம முகிலன் தம்பி இருக்குறப்போ..?” என்று அவர் பட்டென்று கேட்டு விட..

“என்ன மதினி சொல்றிங்க..? நம்ம முகிலனுக்கு எப்படி..?” என்று மலர் தயங்க..

“அட என்ன மதினி இம்புட்டு யோசிக்கிறிங்க...துர்காவுக்கு படிப்பு தான் கொஞ்சம் கம்மி.வேற எந்த விதத்துல குறைச்சல்...? என்று கொஞ்சம் குரலை உயர்த்த..

“ஐயோ மதினி...நான் அப்படி சொல்ல வரலை...” என்று இழுக்க..

“என்னடா சொத்து பத்து எல்லாம் பஞ்சாயத்துல கிடக்குதே..நமக்கு சீர் செனத்தி எல்லாம் நல்லா செய்வாகளான்னு யோசிக்கிறிகளா..?” என்று திலகா கேட்க...

“ஐயையோ அப்படி இல்லை மதினி..!” என்று பதறினார் மலர்.

“பிறகென்ன மதினி...ரெண்டு பேரு ஜாதகத்தையும் பார்ப்போம்..பொருந்தி வந்தா முடுச்சுப் போடுவோம்..” என்றார் திலகா.
ஆண்கள் இருவரும் வேடிக்கைப் பார்க்க..பெண்களே பேசிக் கொண்டிருந்தனர்.அதைப் பார்த்த முகிலனுக்கு எரிச்சலாய் வந்தது.

அவன் பேச வாயெடுக்க..பெரியசாமி அவனைப் பார்த்த பார்வையில் அடங்கினான்.

“பொம்பளைங்க நீங்களா பேசிகிட்டா..ஆம்பிளைங்க நாங்க எதுக்கு..?” என்று பெரிசாமி கேட்க...
“இது என்னடா புது வம்பு..” என்று நினைத்தார் திலகா.

“இங்க பாருமா திலகா..எடுத்தோம் கவுத்தோம்ன்னு செய்யுற காரியமில்லை இது..நல்லா யோசிச்சு செய்யணும்..முதல்ல ஜாதகத்தைப் பார்ப்போம்...அப்பறம் முடிவு பண்ணிக்கலாம்..” என்று பெரியசாமி முடிக்க...

“ரொம்ப நல்லது மச்சான்..” கணபதி சொல்ல...

“என்ன மருமவனே உங்களுக்கு சந்தோஷமா..?” என்றார் திலகா.

திலகாவையும்,கடிகாரத்தையும் பார்த்தவன்...அவர்களை சட்டை செய்யாது வெளியேறினான்.
ஆம்..நேரம் மாலை ஆறு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.வண்டியை எடுத்தவன் சீறிப் பாய்ந்தான்.

மணி முகிலன் ஒரு மருத்துவன்.ஒரு மருத்துவனுக்கு உரிய அமைதி அவனிடத்தில் இருக்கும்..ஆனால் அது உண்மையான அமைதி கிடையாது. ஒருவித தீவிரவாதமான அமைதி.அவன் என்ன நினைக்கிறான்... என்ன செய்கிறான் என்று யாராலும் புரிந்து கொள்ள முடியாத அமைதி.

அவன் ஒரு டாக்டர் என்பதாலேயே அவ்வூரில் அதிகம் மதிக்கப்பட்டான். ஆனால் அந்த நிலையை அடைய அவன் பட்ட பாடுகளும்..இழந்த இழப்புக்களும் ஏராளம்.

சரியாக ஆறு மணி கடந்த சில நிமிடங்களில்....அந்த ஊரின் நிறுத்தத்தில் வந்து இறங்கினாள் வண்ண மதி.

இறங்கியவள் முதலில் கண்டது..தனது பைக்கில் சாய்ந்து நின்றிருந்த முகிலனைத் தான்.

கொஞ்சம் களைத்துத் தெரிந்தாலும்...அதிலும் அவள் வசீகரிக்கவே செய்தாள்.அவளையேப் பார்த்துக் கொண்டு அவன் நிற்கு...அவளோ குனிந்த தலை நிமிராமல் வந்தாள்.

காதல் வளரும்..
 
Top