Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
காதல் 6:

மதி வீட்டிற்கு வந்து இன்றோடு பத்து நாட்கள் முடிந்திருந்தது.அன்று அரசு விடுமுறை என்பதால்...தொடர்ந்து வந்த வார கடைசி கிழமைகளையும் சேர்த்து மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

அந்த முதல் நாளைத் தவிர..முகிலன் அவளைப் பின் தொடர்ந்து செல்லவும் இல்லை...அவளை வம்பு செய்யவும் இல்லை...அப்படி என்றால் அவன் திருந்தி விட்டான் என்று அர்த்தம் கிடையாது...அவன் ஒரு வார காலமாக ஊரிலேயே இல்லை என்பது தான் உண்மை.

ஆனால் அது தெரியாத மதியோ..அவன் தன்னை தொந்தரவு செய்யவில்லை என்று நினைத்து...கொஞ்சம் நிம்மதியாக இருந்தாள்.

முதல் நாள் இரவு ஆரம்பித்த மழை....கொஞ்சம் கொட்டித் தீர்த்து...பின்பு சாரலாய் மாறி அதிகாலை ஐந்து மணிக்கு...தன் சேவையை நிறுத்தியது.
இரவு பெய்த மழையின் விளைவாக...ஊரே குளிர்ந்து காணப்பட.. அதிகாலையில் வீசிய காற்று உடலை ஊடுருவிச் சென்றது.மதி சுகமாய் போர்வைக்குள் முடங்க...

“மதி விடிய போகுது....எந்திருச்சு வாசல்ல கோலம் போடு...லேசா கூட்டி மட்டும் விட்டுட்டு கோலத்தைப் போடு..!” என்று பார்வதி சொல்லிக் கொண்டிருக்க...அம்மாவின் குரலில் எழுந்துவிட்டாள் சுமதி.

“அம்மா..! அக்கா தூங்குறா...நான் போய் போடுறேன்.! எப்பவும் நான் தான போடுவேன்..!” என்று சுமதி சொல்ல..அதுவரை போர்வைக்குள் சுகமாய் முடங்கியிருந்தவள்....வேகமாய் எழுந்து வந்தாள்.

“நீ இரு சுமதி..! நான் கோலம் போடுறேன்..! நீ இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறதுன்னா தூங்கு..!” என்றாள் பெரியவளாய்.

“மறுபடியும் தூங்க போனா..அம்மா முதுகுல டின்னு கட்டிடும்...நான் போய் பின்னாடி மாட்டுக் கொட்டகையை கூட்டி அள்ளுறேன்..! நீங்க கோலத்தைப் போடுங்க..” என்றபடி பெருக்குமாறும் கையுமாக சென்றாள்.

முகத்தை மட்டும் கழுவிக் கொண்டு வெளியே சென்றாள் மதி.

“சப்பா..என்னா குளுரு...ஒரு மழைக்கே ஊரும்,உடம்பும் தாங்காது போலேயே..!” என்று எண்ணியபடி வாசலைக் கூட்டி முடித்தாள்.

ஒருவாறு உட்கார்ந்து கோலம் போட்டுக் கொண்டிருக்கும் போது..சரட்டென்று ஒரு வண்டி அவளைக் கடந்து போக...வீதியில் குழிகளில் தேங்கியிருந்த நீரை வாரி..வண்ண மதியின் மேல்..வண்ணமாய் தெளித்து விட்டு போனது.

எதிர்பாராத இந்த செயலில்..மதி சேற்றுத் தண்ணியால் நனைந்திருந்தாள். யாரென்று அவள் பார்க்கும் முன் அந்த வண்டி அவள் கண்களை விட்டு மறைந்திருந்தது.

“ச்ச்ச..யாரு இது..காலங்கத்தால இப்படி பண்ணது..!” என்ற எரிச்சலில்.. மீண்டும் முனங்கிக் கொண்டு கோலத்தைப் போட ஆரம்பிக்க...மீண்டும் மறு பக்கத்தில் இருந்து வந்த வண்டி...அதே குழிக்குள் இறங்கி தண்ணியை அவள் மேல் வாரி இரைக்க..

“அறிவுகெட்ட முண்டம்..ஆள் இருக்குறது தெரியலை...!” என்று கத்த...அரை இருள்..இப்போது கொஞ்சம் விலக ஆரம்பிக்க...விடியலும் ஆரம்பித்தது.. முகிலனின் முகத்தைப் பார்த்துக் கொண்டு.

எதிரில் இருக்கும் முகிலனைப் பார்த்து மூச்சடைத்தது மதிக்கு.இரவு முழுவதும் தூங்கவில்லை என்பதைப் போல்..கண்கள் ரத்த சிவப்பில் இருக்க....அவன் முகம் முழுவதும் தூக்கம் அப்பிக் கிடந்தது.

“ஆள் இருக்குறது தெரியலை..தெரிஞ்சிருந்தா இன்னும் நல்லா... ஸ்பீடா ஓட்டியிருப்பேன்...” என்றான்.

“இதென்ன உங்கப்பன் வீட்டு ரோடா..உங்க இஷ்ட்டத்துக்கு போக..” என்றாள் எரிச்சலாய்.

“இது உங்க அப்பன் வீட்டு ரோடும் கிடையாது..உன் இஷ்ட்டத்துக்கு கத்த...வந்துட்டா காலைலயே மனுஷனைக் கடுப்பேத்த..” என்றபடி வண்டியைக் கிளப்பியவன்...

“இந்த நைட்டி அது இதுன்னு கண்ட கருமத்தை எல்லாம் போட்டுட்டு திரியாத....! பொண்ணா ஒழுங்கா லட்சணமா இருக்க பாரு..!” என்றபடி அவன் செல்ல முற்பட..

“ஹலோ..! இந்த பேண்ட் சட்டை எல்லாம் போடுறதை விட்டுட்டு, வேட்டி சட்டை எல்லாம் போட்டு..ஒழுங்கா ஆம்பிளை மாதிரி இருக்க பாருங்க...! வந்துட்டாக காலைலயே வக்கனைக்கு..” என்றபடி உள்ளே சென்று விட்டாள்.

அவளின் பேச்சில் திகைத்தவன்..”இவளுக்கு இவ்வளவு தைரியம் எங்க இருந்து வந்துச்சு..!” என்று யோசித்தபடி சென்றான்.

“நான் நைட்டி போட்டா இவனுக்கென்ன..? பெரிய இவன் மாதிரி பேசுறான்..!” என்று புலம்பியவள்..தன்னையே ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.அப்படி ஒன்னும் மோசமால்லாம் போடலை.. என்றபடி குளிக்க சென்றாள்.

கடுப்புடன் வீட்டிற்குள் நுழைந்தவனை..”வாப்பா முகிலா...போன வேலை எல்லாம் நல்ல படியா முடுஞ்சதா..?” என்றார் மலர்.

“ஆமாம்மா...ஆனா சரியா தூக்கமே இல்லை..நான் போய் கொஞ்சம் நேரம் தூங்குறேன்..! என்னை எழுப்பாதிங்க!” என்றபடி அறைக்கு சென்றவன்.. கட்டிலில் விழுந்து கண்ணை மூட...

“அறிவு கெட்ட முண்டம்..” என்ற வார்த்தையுடன்,நைட்டியோடு காட்சி அளித்த மதி தான் கண் முன் தோன்றினாள்.

“ராட்ச்சசி...காலைலயே இப்படி நைட்டியோட மனுஷன் முன்னாடி நின்னு...கொஞ்ச நேரத்துல...சப்பா..” என்று தலையை உலுக்கியவன்..

அவளின் நினைவைத் தள்ளி வைத்து உறங்க முற்பட...அது முடியாமல்.. கடைசியில் அவளின் நினைப்புடனேயே தூங்கிப் போனான்.

ஹாஸ்பிட்டல் சார்பாக..கிராமப்புற மக்களுக்கு இலவச ரத்த தானம்,முழு உடல் பரிசோதனை என்று நான்கைந்து ஊர்களுக்கு சென்று விட்டு..ஒரு வரம் கழித்து இன்று தான் வீடு திரும்பினான் முகிலன்.

ஒரு வாரம் கழித்து..மதியை எப்படி பார்ப்பது என்று யோசித்துக் கொண்டே வந்து தான்..முன்னால் இருக்கும் குழியை கவனிக்காமல் வண்டியை விட்டான்.கடைசியில் அந்த சம்பவமே ..மதியின் தரிசனத்திற்கு வித்திட்டது அவனுக்கு.எப்படியோ அவன் நினைத்தது அவனுக்கு நடந்துவிட்ட சந்தோசம்.

“வெளிய எங்கயும் போக வேண்டாம் மதி..!தோட்டத்துக்கு போயிட்டு மதியம் வந்திடுறோம்..!” என்று மதிக்கு சொன்னவர்..

“ஏய் சுமதி..! ரேசன் கடைல இன்னைக்கு ஜீனி போடுவாங்க..போய் வாங்கிட்டு வந்திடு..!” என்று அவளுக்கும் சொல்லி விட்டு மாடுகளைப் பிடித்துக் கொண்டு அவர் தோட்டத்துக்கு செல்ல...

“இன்னும் எத்தனை நாளைக்குப்பா இப்படியே கஷ்ட்டப்படுவிங்க..? அடுத்தவங்க தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து பார்க்குறதை விட...நம்ம சொத்தைப் பிரிச்சு பாக்கலாம்ல..”என்றாள்.

“எங்கம்மா...! நானும் எவ்வளவோ பொறுத்துப் பார்த்துட்டேன்...இனி கோர்ட்க்கு போனாதான் முடியும் போல...ஒருத்தன் சரிண்ணா..ஒருத்தன் மாட்டேன்றான்..மனசுல என்னதான் வச்சிருக்கானுகன்னு தெரியலமா..” என்றார் சலிப்புடன்.

“அவங்க மனசுல இருக்குறது தான் நமக்கு தெரியுமேப்பா...ஆனா அது கனவுல கூட நடக்காது.பேசாமா நாம சேலத்துக்கு குடி போய்டலாமாப்பா.. இப்ப நான் தான் வேலைக்கு போறேன்னே..! அப்பறம் ஏன் நீங்க கஷ்ட்டப்படனும்..” என்றாள்.

“அது சரியா வராதும்மா..இந்த ஊரை விட்டு வேற எங்கயும் போயி நிம்மதியா இருக்க முடியாதும்மா...எங்களுக்கு இதுவே பழகிப் போய்டுச்சு..பொம்பளை புள்ள வேலைக்குப் போகுதுன்ற காரணத்துக்காக.. நாங்க வீட்ல உட்கார்ந்து சாப்பிட முடியுமாம்மா..என்ன இருந்தாலும் நாளைக்கு ஒருத்தன் வீட்டுக்கு நீங்க போய்தான ஆகணும்..” என்றார்.

“ஏன்ப்பா..பொம்பளைப் பிள்ளைங்கன்னா..அப்பா,அம்மாவை வச்சு பார்த்துக்க கூடாதுன்னு ஏதும் சட்டம் இருக்கா..?” என்றாள்.

“சட்டத்தைப் பத்தி எல்லாம் எனக்கு தெரியாது மதி..! ஆனா பொண்ணையும் குடுத்துட்டு..மருமகன் வீட்ல போய் எப்படி உட்கார்ந்து சாப்பிட முடியும்..?”

“அப்படின்னா..நின்னுகிட்டே சாப்பிடுங்கப்பா..” என்று சுமதி சொல்ல..அவளை மதி முறைக்க..மனோகரனோ சிரித்து வைத்தார்.

“இந்த சின்ன வாண்டுதான் மதி இன்னும் விளையாட்டுப் புள்ளையாவே இருக்கு..!”என்று சொல்ல..

“நான் பெரிய பிள்ளையாகி ரொம்ப வருஷம் ஆகிடுச்சு... உங்களுக்கு தான் தெரியலை..!” என்றாள்.

“அம்மா தாயே..விடு..எங்களுக்கு தான் தெரியலை...நீ பெரிய மனுஷிதான் போதுமா..?” என்று மதி பேசிக் கொண்டிருக்க...மனோகரனும் கிளம்பினார்.

“எதுக்குக்கா நம்ம மட்டும் இன்னொரு வீட்டுக்கு வாழப் போகணும்..! ஆம்பிள்ளைங்க வாழ வரமாட்டங்களா..?” என்றாள்.

“நல்ல கேள்விதான்..உனக்கு மாப்பிள்ளை பார்ப்பாங்க இல்ல..அப்ப பையன்கிட்ட இந்த கேள்வியை கேளு..பதில் சொல்லுவாக..!” என்றாள்.
“அப்படின்ற..? கண்டிப்பா கேட்கணும்..இல்லைன்னா எனக்குத் தலையே வெடிச்சுடும்..!” என்றாள்.

சுமதி ரேசன் கடைக்கு செல்ல....மதி தன்னுடைய உடைகளை எல்லாம் துவைக்க எடுத்துக் கொண்டு வீட்டின் கொல்லைப்பக்கம் சென்றாள்.
நைட்டியை கண்டுபிடித்தது என்னவோ டவுனில் தான்.ஆனால் கிராமத்தில் பெண்கள் சிலர் அதையே முழு நேர உடையாக அணிந்து கொண்டிருந்தனர். அதில் இவர்களின் கிராமமும் அடங்கும்.

காலையில் முகிலனின் முகச்சுளிப்பிற்கு பின் ஏனோ அந்த நைட்டியை போட விரும்பவில்லை.தனது சுடிதாரில் ஒன்றை எடுத்துப் போட்டவள் தூக்கிப் போடப்பட்ட கொண்டையுடன்....அமர்ந்து துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தாள்.

அவர்கள் வீட்டில், திருகிவிட்டால் தண்ணீர் வரும் குழாய்கள் எல்லாம் இல்லை.கிணற்றில் இருந்து தான் நீரை இரைக்க வேண்டும்.துவைத்து முடித்தவள்,அலசுவதற்காக நீரை இறைக்க போக...அந்த நேரம் பார்த்து அவளின் செல்போன் ஒலித்தது.

கைகளைக் கழுவிக் கொண்டு வீட்டிற்குள் சென்றவள்..அழைத்தது வினோதினி என்பதை அறிந்ததும்...மகிழ்ச்சியில் அவளுடன் பேச ஆரம்பித்தாள்.
 
“சொந்த ஊருக்கு போனதும்..மேடம்க்கு எங்க நியாபகம் எல்லாம் இல்லை..!” என்று வினோ பொய்யாக கோபித்துக் கொள்ள..

“அப்படி எல்லாம் இல்லை வினோ...நேரம் சரியா இருக்கு..இன்னைக்கு எனக்கு லீவ்ன்னு தெரிஞ்சு தான் போன் பண்ணியிருக்க..அப்பறம் எதுக்கு இந்த பில்டப்பு...” என்றாள்.

“கண்டுபிடிச்சுட்டியா..? சரி விஷயத்துக்கு வா..! வேலை எப்படி போகுது.அங்க செட் ஆகிட்டியா..?ஊரெல்லாம் எப்படி இருக்கு..?” என்றாள் விடாமல்.

“எல்லாம் செட் ஆகிடுச்சு..ஊரெல்லாம் நல்லா இருக்கு...இப்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்லை..நீ எப்ப இங்க வர...?” என்றாள் மதி.

“அடுத்த வாரம் வரேன் மதி...! அந்த வாரத்துலையே ஜாயின் பண்றேன்..!” என்றாள்.

“ரொம்ப சந்தோஷம்டி..நீ வந்தா எனக்கும் கொஞ்சம் தெம்பா இருக்கும்..” என்று சொல்ல..

“அடிப்பாவி..நான் சேலத்துல ஹாஸ்ட்டல் பார்த்திருக்கேன் அங்கதான் தங்க போறேன்..! உங்க வீட்டுக்கு வந்தா ரெண்டு நாள்ல கிளம்பிடுவேன்..!” என்றாள்.

“என்னடி இப்படி சொல்ற..? நீ என்கூட தான இருக்கேன்னு சொன்ன..?” என்றாள்.

“அது சரியா வராது மதி..!” என்றாள் பட்டென்று.

அவளின் குணம் தெரிந்தவள்..”சரி உன் இஷ்ட்டம்..!” என்றபடி வைத்து விட்டாள்.

வினோதினி வேறு யாருமில்லை.அவளின் சித்தியின் மகள் தான்.ஆனால் இருவரும் தோழிகள் போலவே பேசிக் கொள்வர் என்பதை விட தோழிகள் தான்.அவர்கள் வீட்டில் தங்கி தான் வண்ண மதி படித்தாள்.இருவருக்கும் ஒரே வயது என்பதால் அக்கா,தங்கை என்ற உறவு மறைந்து போயிருந்தது.பார்வதிக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருக்க..அவருடைய தங்கைக்கு திருமணம் ஆன உடன் குழந்தை நிற்க...இருவருக்கும் ஒரு மாதம் முன்ன,பின்ன என்ற நிலையில் குழந்தை பிறந்தது.

மதிக்கு டீச்சர் ஆக வேண்டும் என்ற கனவு.ஆனால் வினோதினிக்கு அப்படி இல்லை.இருந்தாலும் மதியின் உடனேயே இருந்ததால்..அவளும் அவளுடனேயே படித்தாள்.

பத்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மதி...மேல்வகுப்புக்கு தனது சித்தியின் வீட்டிற்கு செல்ல...அங்கு சேர்ந்த பள்ளியில் படிக்க சற்று சிரமப்பட்டாள் என்றே சொல்ல வேண்டும்.

அந்த சமயங்களில்..வினோதினி மட்டும் இல்லை என்றால்..இவள் இந்த அளவிற்கு வந்திருக்க முடியாது.பார்வதியின் ஆசை மதி அரசு வேலை பார்க்க வேண்டும் என்பது.வினோவும் இவளும் சேர்ந்து படித்ததால்..இருவரும் வேறு வேறு துறைகள் என்பதால் இருவருமே பாசாகினர்.

வினோவிற்கு வேலைக்கான ஆர்டர் பத்து நாட்கள் தாமதமாக வர..முதலில் மதி மட்டும் வந்து ஜாயின் பன்னுபடி ஆகிவிட்டது.

வினோவிற்கு அவ்வளவு தூரத்தில் சென்று வேலை பார்க்க விருப்பமில்லை.மதியின் கட்டாயத்தில் வருகிறாள்.சில மாதங்கள் பார்த்துவிட்டு...மாறுதல் வாங்கிக்கொள்..என்று மதி சொன்ன காரணத்திற்காக வருகிறாள்.

அவளைப் பற்றிய யோசனையில் இருந்தவள்..

“ஐயோ..! துணியை அலசனுமே..!” என்று எண்ணியவள் செல்லை வைத்துவிட்டு வெளியே செல்ல...அங்கே அவளுக்கு ஆச்சர்யம்.அவள் வைத்திருந்த வாளிகளில் எல்லாம் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது.

“நான் தண்ணிய இறைக்கவே இல்லையே..? எப்படி எல்லாம் நிரம்பி போய் இருக்கு..?” என்று யோசனையுடன் பார்க்க...யாரும் அங்கு இல்லை.

“இதென்னடா..?” என்று அவள் யோசிக்கும் முன்னரே...திடீரென்று மூலையில் அவளுக்கு மின்னல் வெட்டியது.

தான் எண்ணியது சரி என்பதைப் போல..முத்து தான் இறைத்து வைத்திருந்தான்.அவன் வீட்டு சுவற்றின் பக்கம் மறைந்திருக்க...லேசாக வெளியே தெரிந்த அவன் சட்டை காட்டிக் கொடுத்தது அவனை.

“இந்த தண்ணி இறைச்சு வைக்கிற வேலை எல்லாம் நான் யாரையும் செய்ய சொல்லலை..! அதனால தேவையில்லாத விஷயத்தில் யாரும் மூக்கை நுழைக்க வேண்டாம்..” என்றாள் எரிச்சலாய்.

அவளின் வார்த்தைகளில் கோபம் கொண்டவன்...பட்டென்று வெளியே வந்தான்.

“நான் உனக்கு செய்ய கூடாதா..?” என்றான்.

“கூடாது..!” என்றாள் பட்டென்று.

“ஏன் மதி என்னைய புருஞ்சுக்கவே மாட்டேங்குற..?” என்றான்.

“ஏன் கல்யாணம் பண்ணும் போது...சார்க்கு எங்க நியாபகம் எல்லாம் இல்லை.பொண்டாட்டி செத்த உடனே கரிசனம் பொங்குதோ...!” என்று கேட்க..அவளின் வார்த்தைகளில் தலை குனிந்தான் முத்து.

“என்னோட நிலைமை அப்படி..!” என்றான்.

“என்ன பொல்லாத நிலைமை...மண்ணாங்கட்டி நிலைமை..! செய்றதையும் செஞ்சுட்டு சாக்கு வேற..உன் முகத்துலையே முழிக்க கூடாதுன்னு தான் நினைக்கிறேன்...!” என்றாள்.

“உன்னை அப்பவே அப்படி நம்புனேன்..ஆனா நீ என்ன பண்ண...பழசை கொஞ்சம் நினைச்சுப் பாரு..!” என்றாள் கோபமாய்.

“என் மனசு உனக்கு கூட புரியலை மதி..! சரி விடு...எனக்கு விதிக்கப்பட்டது எல்லாமே இப்படித்தான் போல..” என்று தன்னையே நொந்து கொண்டவன் திரும்பி செல்ல முற்பட...

“அதை கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்..இப்ப யோசிச்சு என்ன பன்ன...?” என்றாள் எகத்தாளமாய்.

இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்க...தூங்கி எழுந்து ஜன்னல் அருகில் நின்றிருந்த முகிலனின் கண்களுக்கு, இந்த காட்சி... சத்தம் பட்டும் சற்று குறைவாக அச்சுப் பிசகாமல் அவன் கண்களுக்கு விருந்தளிக்க..தூங்கி எழுந்தவன் ருத்ர மூர்த்தி ஆனான்.

“இவளுக்கு என் கூட பேச மட்டும் தான் கசக்கும்...அவன் கூட பேசுறதுன்னா இனிக்கும் போல....இதை இப்படியே விட்டா..அது முகிலனுக்கு அழகில்லையே..!” என்று எண்ணி...வேகமாய் கீழே வர...அங்கே இருந்தவளைக் கண்டவனுக்கு அதிர்ச்சி.ஆம் துர்கா தான் தன் அம்மாவுடன் வந்திருந்தாள்.

மலர் ஏதோ பேசிக் கொண்டிருக்க....”இதோ மாமாவே வந்துட்டாக அத்தை..!” என்று அவள் குதிக்க..அதைப் பார்த்த முகிலனின் முகம் அஷ்ட்ட கோணலாகியது.

அவனுக்கு சில விஷயம் எப்போதும் பிடிக்காது.கொஞ்சி கொஞ்சி பேசுவது,கண்ணை சிமிட்டி சிமிட்டி பார்ப்பது,குமரியாக இருந்தாலும் குழந்தையாக காட்ட முயற்சிப்பது...இப்படி எதையாவது கண்டான் என்றால் அவ்வளவு தான்.அவனுக்கு வரும் கோபத்தை அவனாலேயே அடக்க முடியாது.

“நல்லா இருக்கிங்களா மாமா..!” என்றாள் கொஞ்சும் குரலில்.

“ஏன் நல்லா இல்லைன்னா என்ன செய்றதா உத்தேசம்..?” என்றான்.

“பாருங்கத்தை மாமாவுக்கு பகடியை...ஒரே தமாசா பேசுறாக..” என்று அவள் சொல்ல..

“யாரு நானு..தமாசா..உன்கிட்ட..” என்று அவன் கொலைவெறியில் கேட்க..துர்காவோ நாணிக் கோணினாள்.

அவளின் செய்கையைப் பார்த்ததும் ஏற்கனவே கோபத்தில் இருந்தவனுக்கு கோபம் கூடிக் கொண்டே செல்ல..அவனின் முகத்தை வைத்தே..அந்த கோபத்தின் அளவை உணர்ந்து கொண்டார் மலர்.

“நீ வந்து உர்கார் துர்கா.அவன் காலைல தான் வந்தான்.அதனால் அப்டி இருப்பான்..!” என்று மலர் சமாளிக்க...தன் அம்மாவை ஒரு முறை முறைத்தவன்...கடுப்புடன் வெளியேறினான்.

“மருமவன் ரொம்ப களைப்பா இருப்பாரு போல மதினி..” என்று திலகாவும் தன பங்குக்கு கூற..அவர்களின் பேச்சில் முகிலனை கவனிக்கவில்லை மலர்.

கோபத்துடன் சென்ற முகிலன்..யாரைப் பத்தியும் கவலைப்படாமல் சட்டென மதியின் வீட்டிற்குள் நுழைந்தான்.
அங்கே மதியோ..இதை அறியாமல் தனது புடவைகளை அலசி கொண்டிருந்தாள்.கோபத்துடன் வந்தவன்...அவள் பின் நிற்க..அதை அறியாத அவள்...

“காதல் என்பது எனது பெயர்..
கண்ணீர் என்றால் எனக்கு உயிர்..
உருவம் எனக்கு கிடையாது...
உணர்ச்சி பிழம்பாய் வரும் போது..”
என்ற பாடல் வரிகளை முனுமுனுத்துக் கொண்டிருக்க....அதைக் கேட்டவன்..

“ஏன் காதலனை விட்டு ஒரு நிமிஷம் கூட இருக்க முடியலையோ..ஏக்கம் பாட்டா வேற வெளிய வருது..!” என்றான் ஆத்திரத்துடன்.

அவன் குரல் கேட்டு...சட்டென்று பின்னால் திரும்பியவள்...அதிர்ந்தாள்.எவ்வளவு தைரியமா வீட்டுக்குள்ளயே வந்திருக்கான் என்று எண்ணினாள் போலும்.

மிரட்சியுடன் அவள் விழிகளும்,ஆத்திரத்துடன் அவன் விழிகளும் மோதிக் கொண்டன.

காதல் வளரும்...
 
Top