Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 16

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
கொஞ்சம் பெரிய அப்டேட் இது! :)

அத்தியாயம் 16

நள்ளிரவை கடந்த நேரத்தில்...



ராம் உடல் முழுதும் வியர்வையில் நனைந்திருந்தது. காற்றுக்கு திணறுபவனை போல, தன் உடல் நடுங்க மூச்சு விட முடியாமல் தவித்தான் ராம்.



உடலில் கொட்டும் வியர்வைக்கு முரணாய் அவன் உடல் நடுங்கி கொண்டிருந்தது. உதடு துடிக்க, மூச்சடைக்க, கண்திறக்க முடியாமல் தவித்து கொண்டிருந்தான் ராம்.



இது எதையும் அறியாத மைதிலி நிர்மலமாய் உறக்கத்தின் பிடியில் இருந்தாள்.



அவன் உடல் விறைத்து தூக்கி போட தொடங்கியது. மெல்ல மெல்ல நொடிக்கொரு முறையாய் அது வேகமெடுத்த நேரம், பட்டென தன் கண்களை திறந்தான் ராம்.



திறந்த அவன் விழிகள் ரத்தமென சிவந்திருக்க, விட்டத்தில் சுழலும் மின்விசிறியை, நடுங்கும் உடலுடன் வெறித்து கொண்டிருந்தான் ராம்.



இதே போன்று உடல் துடிக்க, அவன் மூச்சுக்கு ஏங்கி துடிதுடித்த ஓர் நாள் அவன் கண்ணில் நிழல் படமாய் வந்துபோக, பேச வாயெடுக்க முடியாமல், தொண்டைகுழி அடைக்க, நடுக்கம் குறையாத உடல், மென்மேலும் தூக்கி போட, வியர்வையில் குளித்திருந்தான்.



படுத்திருந்த விரிப்பை கைகளால் சுருட்டி பிடித்து தன் வேதனையை குறைக்க முயன்றான். அவன் விரிப்பை இழுத்த அசைவில் கண்விழித்த மைதிலி, அவன் நிலை கண்டு பதறினாள்.



"ராம்? என்னாச்சு உனக்கு??" அவன் முகத்தை தன்பால் திருப்பியபடி, கன்னத்தை தட்டினாள்.



அப்போதும் அவன் நிலை அப்படியே இருக்க, எழுந்து லைட்டை போட்டுவிட்டு தண்ணீர் எடுக்க விரைந்தாள் மைதிலி.



குளிர்ந்த நீரை அவன் முகத்தில் தெளித்தவள், "ராம்! நார்மல் ஆகு ராம்!! என்னாச்சு?" என அவனை மடியில் தாங்கிக்கொண்டு பதறினாள்.



அவன் மூச்சுவிட திணறுவதை கண்ட மைதிலி, அருகில் கிடந்த ஒரு அட்டையை எடுத்து அவன் முகத்திற்கு நேரே விசிறியபடி, நெஞ்சை நீவி விட்டாள்.



அவன் அவதிபடுவதை பார்க்க பார்க்க, தன் உடல் நடுங்குவதை போல இருந்தது மைத்திலிக்கு.



சில நிமிட மன போராட்டத்தின் பின், ராம் இயல்பு நிலைக்கு வரத்தொடங்கினான்.



அவன் நெஞ்சை நீவியபடியே, "ராம்? இப்போ பரவால்லயா?? தண்ணி குடிக்குறியா கொஞ்சம்??" என கேட்டுவிட்டு அவனுக்கு நீரை மெல்ல புகட்டினாள்.



அவன் சற்று தெளிந்ததும், "என்ன பண்ணுது ராம்? " என ஆதூரமாய் அவள் வினவ,



"தெரியல" என அழுதபடியே அவளை கட்டிக்கொண்டான்.



"ஒன்னும்மில்ல, ஒன்னும்மில்ல,, எல்லாம் சரியாகிடும்.." என

அவனுக்கு சொல்வதை போல தனக்கு தானே சொல்லிக்கொண்டாள் மைதிலி.



விடியல் வரை ஒருவரையொருவர் ஆதரவாய் அணைத்தபடியே ஒருவித மோனநிலையில் கடத்தினர்.



அவன் எவ்வளவு பயந்திருக்கிறான் என்பது, மைதிலியை அவன் அணைத்திருந்த விதத்திலேயே அவளுக்கு புரிந்தது.



ஆதவன் வருகையை ஜன்னல் இடைவெளி எடுத்துரைக்க, இன்னமும் தன்னை நீங்காது இருக்கும் ராமை அயற்சியாய் பார்த்தாள் மைதிலி.



அந்நேரம் யாரோ கதவை தட்டும் ஓசை கேட்க, எழுந்து செல்ல முற்பட்டவளை விடாது இறுக்க பிடித்திருந்தான் ராம்.



"யாரோ வந்திருக்காங்க ராம்.. கதவை திறக்கனும்.. விடு... "

அவன் விரல்களை தன்னிடம் இருந்து பிரித்துக்கொண்டு வாசலுக்கு சென்றாள் மைதிலி.



வாசலருகே, "தங்கச்சிசிசி...... இந்த அண்ணன் வந்துட்டேன்ம்மா.. வந்துட்டேன்... உன்னை பார்க்க ஓடோடி வந்துட்டேன்... எப்படி இருக்க தங்கச்சி...?? மாப்பிளை என்னம்மா பண்ராறு?? உன்னை நல்லா பாத்துக்குறாரா???" என வந்ததும் வராததுமாய் டி.ஆர்.ரா சிவாஜியா என புரியாத ஒரு பாணியில் உளற தொடங்கினான் கௌதம்.



அவன் உளரலை பெரிதாய் கண்டுக்கொள்ளாது, "உள்ள வாங்க அண்ணா" என்றதோடு ராமிடம் சென்று அமர்ந்து கொண்டாள் மைதிலி.



'என்னடா இது? நல்லாதானே மிமிக்கிரி பண்ணுனோம்? ஒரு ரியாக்ஷன்னும் காணோம்?' என தன் கலைத்திறனை மதிப்பீடு செய்தபடி உள்ளே நுழைந்தான் கௌதம்.



"டேய் ராம்... !! எப்படிடா இருக்க??? என் தங்கச்சிய விட்டு நகர மாட்ட போல!!! அம்புட்டு லவ்வு!!!??" என மைதிலியை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த அவன் கன்னத்தில் குத்தினான் கௌதம்.



ராமிடம் எந்த எதிரொளிப்பும் இல்லாமல் இருப்பதை கண்ட கௌதம், அப்போதுதான் மைதிலியையும் ஊன்றி பார்த்தான்.



விளையாட்டை கைவிட்டவன், "மைதிலி? என்னமா ஆச்சு.. உன் முகமே சரி இல்ல.. என்ன நடந்துச்சு?"



"ராம்க்கு தான் அண்ணா, என்னவோ ஆச்சு.. தூக்கத்துல..?? ..ம்ச்... பயந்துட்டேன்... !!!" அதை என்னவென்று சொல்வது என தெரியாமல் மைதிலி பதற்றமாய் சொல்ல,



"ஹே ரிலாக்ஸ் மைதிலி... ராம்க்கு என்ன? நல்லா தானே இருக்கான்?" ராமின் விழியை விரித்து இயல்பான பரிசோதனையை செய்துக்கொண்டே கேட்டான் கெளதம்.



"இல்ல அண்ணா..." என்றபடி இரவில் அவனுக்கு ஏற்பட்டதை சொன்னாள் மைதிலி.



"எனக்கு என்னவோ பயமா இருக்கு அண்ணா... ரிஸ்க் எடுக்குறோமோன்னு தோணுது.. கொஞ்ச நாளாவே தலை வலிக்குதுன்னு சொல்லிட்டே இருக்கான்.. நம்ம அலோபதி ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம் அண்ணா... பிலீஸ்...."



"ம்ம்... நான் வைத்தியர் கிட்ட பேசுறேன்.. கூடிய சீக்கிரம் கிளம்புறமாறி பாப்போம்... எனக்கு இவன் சரி ஆகிடுவான்னு நம்பிக்கை இருக்குமா...

சென்னை போகணும்னு வேற போன்ல சொன்ன நீ!! அந்த கொலைகார கும்பல் கிட்ட உங்களை எப்படி விடுறதுன்னு தெரியல.. சொன்னாலும் நீ கேக்க மாட்டேங்குற!!!"



"அவங்களால ஒன்னும் பண்ண முடியாது அண்ணா... அவங்கள கம்பி எண்ண வைக்காம விடுறது இல்ல... அங்க எனக்கு சந்தோஷ் இருக்கான்.. நீங்க பயப்படவே வேணாம்..."



"ம்ம்ம்.. ஏதோ நீ சொல்றனு நானும் கேக்குறேன்...!!

டேய் ராம், உனக்கு இப்போ எப்படி இருக்கு?" என கேட்டுக்கொண்டே ராமிற்கு பல்ஸ் செக் பண்ணினான் கௌதம்.



"இப்போ தலைவலி, நடுக்கம் ஏதும் இல்லதானே ராம்...?" என கௌதம் கேட்டதற்கு 'இல்லை' என்பதை போல தலையாட்டினான் ராம்.



"இன்னைக்கு ராமை நான் கூட்டிட்டு போய் அங்க விடுறேன்.. அப்படியே பேசிட்டு வந்துடுறேன் வைத்தியர் கிட்ட..." என கௌதம் சொன்ன பிறகு, இருவரும் கிளம்பி வைத்தியசாலைக்கு சென்றனர்.



ராம் மைதிலியை ஒருவித புரியாத பார்வையுடன், திரும்பி திரும்பி பார்த்தபடியே கௌதமோடு சென்றான்.



சில மணி நேரம் சென்றபின் தனித்து வந்த கௌதமிடம், " என்ன சொன்னாங்க அண்ணா? ஒன்னும் பிரச்னை இல்லை தானே??" என விசாரித்தாள் மைதிலி.



"ஹான்??? அது........!!" என இழுத்த கௌதமை,

"சொல்லுங்க அண்ணா?" என தூண்டினாள் மைதிலி.



"அது ஒன்னும் இல்லமா... இந்த ஊரு க்ளைமேட் அவன் உடம்புக்கு ஒத்துக்காம இருக்கலாம்னு சொன்னாரு... வேற ஒன்னும் இல்ல..." என்றதோடு பேச்சை மாற்றினான் கௌதம்.



"வைத்தியர் கிட்ட கேட்டேன் மைதிலி,,, வைத்தியம் இன்னும் முடியலதான்... இருந்தாலும் நம்ம போகணும்னு சொல்றதால இந்த வாரம் மட்டும் இருந்துட்டு, பிறகு கிளம்பிக்கலாம்னு சொல்றாரு... நீ என்ன சொல்ற?"



"ஒரு வாரம் தானே அண்ணா... பரவால்ல... சென்னை போக ஏற்பாடு பண்ணனும்.. அப்பறம் இன்னும் சில வேலைகள் இருக்கு... ஒரு வாரம் சரியா இருக்கும் எல்லத்துக்கும்..."



"ம்ம்ம்... அப்போ வர சண்டே டிக்கெட் புக் பண்ணிடவா? நானும் உன்னோட வந்து, அங்க விட்டுட்டு போறேன்..."



"எதுக்காக அண்ணா அலையுறீங்க??? நானே போயிடுவேன்..." அவனுக்கு எதற்க்கு சிரமம் என மைதிலி நினைக்க,



"சண்டே டிக்கெட் போட்டுடவான்னு தான் கேட்டேன்?" என அழுத்தமாய் தான் வருவதை உறுதி செய்தான் கெளதம்.



"ஹும்ம்... சொன்னா கேக்க மாட்டீங்களே!!! சரி பண்ணுங்க அண்ணா..."



பயணம் உறுதியான பின்பு மின்னல் வேகத்தில் ஒரு வாரம் கடக்க, ராம் மைதிலி கௌதமுடன் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினர்.



அவர்களை வரவேற்க சந்தோஷ் நிற்பதை பார்த்து, சிரிப்புடன் கையசைத்தபடி அவனை நோக்கி நகர்ந்து வந்தாள்.



அறிமுகபடலம் முடிந்த பின், "ஆளே மாறிட்ட சந்தோஷ்... சின்ன வயசுல பார்த்தது உன்னை.." என சிலாகித்தாள் மைதிலி.



அவன்தான் சந்தோஷ் என தெரிந்ததும், “நீதானா அது?” என கொடூரமாய் முறைத்தான் ராம். அவனை யாருமே கண்டுக்கொள்ளவில்லை! பாவம்!!



"மச்சான் தான் சூப்பரா இருக்காரு மைதிலி... பார்க்க தெலுங்கு ஹீரோ மாறி..." ராமை முதல்முறை காண்பதால் வேண்டுமென்றே மைதிலியை சீண்டினான் சந்தோஷ்.



"ஏய்......!!!"என மைதிலி இரண்டு அடி போட, மேற்கொண்டு நால்வரும் பேசி சிரித்தபடி பார்க்கிங்ல் இருந்த இவர்கள் கார் அருகே வந்தனர்.



காரின் அருகே வேறொருவன் நிற்பதை கண்ட மைதிலி கேள்வியுடன் சந்தோஷை பார்த்தாள்.



"யாருன்னு தெரியலையா? ரிஷிகேஷ்...! ராமோட மாமா பையன்... என்னோட முதலாளி" உற்சாகமாய் சந்தோஷ் அறிமுகப்படுத்த, மைதிலிக்கு கோவம் ஊற்றெடுத்தது.



" அவன் எதுக்கு இங்க நிக்குறான்?" பல்லிடுக்கில் மைதிலி கேட்டு முடிப்பதற்குள் ரிஷியை நெருங்கி இருந்தனர் நால்வரும்.



நீண்ட நாட்களுக்கு பின், ரிஷியை பார்த்ததும் ஓடி சென்று கட்டிக்கொண்டான் ராம்.



"ரிஷி? நான் வந்துட்டேன் பாத்தியா? இது தான் மைதிலி.. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு தெரியுமா உனக்கு... இதோ இந்த தடியன் போன்ல போட்டோ வச்சுருக்கான்.. நான் காட்ட சொல்றேன்..." என ரிஷியை பார்த்த குஷியில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் சரளமாய் பேசினான் ராம்.



"எது?? நான் தடியனா உனக்கு? எல்லாம் என் நேரம்டா..." என அலுத்து கொண்டான் கௌதம்.



"ஹலோ அண்ணா... நான் ரிஷி.. உங்களை நான் ராம்கூட போட்டோல பார்த்துருக்கேன்..." கௌதமை கண்ட சிநேகமாய் ரிஷி கரம் நீட்ட,



"ஹலோ" என தயக்கத்துடன் சொன்னான் கௌதம். ரிஷியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பது மைதிலி, கௌதம் முகத்தில் தெளிவாய் தெரிந்தது.



அதை உணர்ந்த சந்தோஷ்,

"சொல்ல மறந்துட்டேனே... இனி நம்ம கூட்டணில ரிஷியும் கூட்டு... அவனும் நமக்கு ஹெல்ப் பண்ணுவான்..." என்றான்.



"ஓ! அவங்க அப்பா அம்மாவை ஜெயில்ல போட, அவரே ஹெல்ப் பண்ண போறாரா? வெரி குட்" என்றாள் மைதிலி.



"அக்கா? என்னை நம்புங்க.. கண்டிப்பா நான் கெட்டவன் இல்ல... ராம்காக நான் என்ன வேணாலும் செய்ய தயாரா இருக்கேன்..." மைதிலியிடம் நேரிடையாக பேசினான் ரிஷி.



அவனை தவிர்த்தவள், "நான் அவர்கிட்ட பேசல சந்தோஷ்.. வண்டிய எடு.. போலாம்..." என சொல்லிவிட்டு காரில் ராமுடன் சென்று அமர்ந்து கொண்டாள் மைதிலி.



கௌதம் ஆதரவாய் ரிஷியின் தோள் பற்ற, "பொறு ரிஷி, வீட்டுக்கு போய்ட்டு எல்லாத்தையும் சொல்லுவோம்.. கண்டிப்பா புரிஞ்சுப்பா..." என சந்தோஷ் தன் பங்கிற்க்கு சொல்லிவிட்டு காரை கிளப்பினான்.



கெளதம், "எங்க போறோம் சந்தோஷ்?"



காரை ஓட்டியபடியே, "ECR ல ராமோட ஒரு பங்களா இருக்கு.. அங்க போறோம்..." என்றான்.



"அவங்களுக்கு தெரிஞ்ச இடத்துக்கே போறோமே... வேற எதாது ஹோட்டல்ல ரூம் புக் பண்ணிருக்கலாம்ல..." என மறுக்கேள்வி கேட்டாள் மையு.



சந்தோஷை முந்திக்கொண்டு, "அங்க என்னை தவிர யாருமே வரமாட்டாங்க அக்கா... ரொம்ப பாதுகாப்பான இடம்... யாருக்கும் சந்தேகம் வராது..." என்றான் ரிஷி.



அவனுக்கு பதில் சொல்லாது வேடிக்கை பார்ப்பதை போல முகத்தை திருப்பி கொண்டாள் மைதிலி. ரிஷிக்கு முகம் தொங்கி போனது.



கண்ணாடி வழியே ரிஷியை பார்த்த சந்தோஷ், கண்களால், "அமைதி!! அமைதி!!" என்றான். இதையெல்லாம் மௌனமாய் கவனித்துக்கொண்டிருந்தான் கௌதம்.



வெகுநாட்களுக்கு பின் ரிஷியை பார்த்த மகிழ்ச்சியில் அவனோடு ஓயாமல் பேசியபடியே வந்தான் ராம். இதை மைதிலி கண்டும் காணாதபடி இருந்தாள்.



வீட்டு வாசலில் கார் நின்றதும் வேகமாக இறங்கிய ரிஷி உள்ளே சென்று திவ்யாவுடன் வாசலுக்கு வந்தான்.



"மையு.. இதுதான் திவ்யா.. ரிஷி கட்டிக்க போற பொண்ணு... எனக்கு மட்டும் தான் தெரியும்... யார்ட்டையும் சொல்லிடாத!!!" என ராம், மைதிலி கேட்காமலே திவ்யாவை அவளிடம் அறிமுகபடுத்தினான்.



கையில் ஆரத்தி தட்டுடன் சிரித்தபடி நின்றாள் திவ்யா.

ரிஷியை தவிர்த்ததை போல திவ்யாவிடம் பாராமுகம் காட்ட தோணவில்லை மைத்திலிக்கு.



திருஷ்டி கழித்துவிட்டு, "அண்ணா... ஆரத்தி எடுத்தேன்ல.. காசு குடுங்க...." என்றாள் திவ்யா.



"காசா??? என்ட இல்லையே... " என ராம் முடிப்பதற்குள் தன்னிடம் இருந்த இளரோஜா வண்ண நோட்டை எடுத்து ராமிடம் கொடுத்து கொடுக்க சொன்னான் கௌதம்.



"உள்ள வாங்க அண்ணி...."



வந்த களைப்பிற்கு ஓய்வெடுக்க அனைவருக்கும் அறையை ஒதுங்குபடுத்தி கொடுத்தான் ரிஷி.



சிறிது நேரத்திற்க்கு பின், தோட்டத்தில் மைதிலி தனித்து நிற்பதை கண்ட ரிஷி, அவளருகே சென்று, "அக்கா?" என்றழைத்தான் தயக்கமாய்.



திரும்பி அவனை பார்த்தவள், "டோன்ட் கால் மீ 'அக்கா' ஓகே? நான் ஒன்னும் உங்களுக்கு அக்கா இல்ல.. " வெடுக்கென சொல்லிவிட்டு திரும்பி கொண்டாள்.



"நீங்க ஏதோ என்மேல கோவத்துல இருக்கீங்கன்னு நினைக்குறேன்... ஆனா என்னனு தான் தெரியல.... எனக்கு நீங்க பேசாம இருக்குறது கஷ்டமா இருக்கு... என்னனு சொன்னா நான் மன்னிப்பு கேட்க தயாரா இருக்கேன்..." பார்த்த சில மணி நேரங்களே ஆன ஒருத்தியிடம் மன்னிப்பு கேட்க தயங்காமல் நிற்கிறான் என்றால், அது அவளுக்காக அல்ல, ராமின் மீதான பிரியத்தால் தான் என்பதை அவள் மனம் கண்டுக்கொண்டது.



"ஒன்னும் இல்ல..." என்று இருக்காம் சற்றே தளர அவள் சொல்ல,



"எதுவா இருந்தாலும் சொல்லுங்க அக்கா... ப்ளீஸ்..." என்றான் ரிஷி மீண்டும்.



தன் மனதில் உள்ள கோவத்தை எப்படி அவனிடம் சொல்வது என தெரியாமல் நின்றாள் மைதிலி.



ரிஷி, "ப்ளீஸ்....."



"நைட்ல கண்டதையும் காட்டி, நீ கெட்டதும் இல்லாம ராமையும் சேர்த்து கெடுத்து வச்சுருக்க.

ஊரு முழுக்க பொண்ணுங்க பிரண்ட்ஸ்... கூட்டிகிட்டு ஜாலியா ஊர சுத்துறது... உனக்குன்னு வரபோரவ பத்தி கவலையே இல்ல... திவ்யாக்கு இதெல்லாம் தெரியுமானும் தெரியல... ச்சே!"



இதை சற்றும் எதிர்க்காத ரிஷி, "அது... சாரி அக்கா... தப்பா நினைக்காதீங்க என்னை... பிளீஸ்.... அது....... முன்னாடி தான் அக்கா.... இப்போ அப்படி இல்லை... திவ்யா வந்த பிறகு ரொம்ப மாறிட்டேன்..." என்று சங்கடமாய் சொல்ல,



"எல்லாருக்கும் தனக்குன்னு ஒருத்தி வந்தாதான் மாறனும்னு புத்தி வருமா?" என சூடாய் கேட்டாள் மைதிலி.



"சாரி அக்கா.... ப்ளீஸ்...."



"ம்ம்... "



"என்கிட்ட பேசுவீங்க தானே?"



"ம்ம்"



இப்போதைக்கு இந்த 'ம்ம்' போதும் என எண்ணி திருப்தி அடைந்தபடி திரும்பி செல்ல எத்தனிதவன், பின் நின்று, "அக்கா" என்றான்.



'இன்னும் என்ன?' என்பதை போல இருந்தது மைதிலியின் பார்வை.



"அக்கா... நான் வேணுனே யாரோடவும் பேசல அக்கா... ராம் போன்க்கு வந்த கால்ஸ்ஸ மட்டும் தான் நான் பிக்(pick) பண்ணுவேன்... அவனை கான்டேக்ட் பண்ண முடியலன்னு பீல் பண்ணவங்களுக்கு நான் ஆறுதல் மட்டும் தான் அக்கா சொல்லுவேன்.." என்று தன்னை நியாயப்படுத்த அப்பாவியாய் சொன்னான் ரிஷி.



ஆனால், எதற்காக இதில் ராமை கோர்த்துவிட்டானோ அது அவனுக்கே வெளிச்சம்.

ஆனால் அதை கேட்டதும் இறங்கிய வேதாளம், மீண்டும் மரத்தின் மேல் தொத்தி கொண்டது.

இம்முறை ஸ்ரீராமின் மீது... உக்கிரத்துடன்...!
 
Last edited:
"மையு....!"

தனக்கான அறையின் கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான் ராம்.

"இங்க என்னை பாரு மையு.. நான் எப்படி இருக்கேன்னு..."

குளிரில் லேசாக நடுங்கியபடி சொன்னான் ராம்.



அவனை திரும்பி பார்க்காது, ஜன்னல் வழியே தோட்டத்தில் பார்வை பதித்திருந்தாள் மைதிலி.



அவள் திரும்பாமல் நின்றாலும் அதை பெரிதாய் எடுத்துக்கொள்ளாது, " இந்த சந்தோஷ் இல்ல... என்னை பிடிச்சு தள்ளி விட்டுட்டான் ஸ்விம்மிங் பூல்ல. எனக்கு கோவம் வந்துடுச்சு தெரியுமா? பதிலுக்கு நான் அவங்கள என்ன பண்ணிட்டேன்னு சொல்லு பாக்கலாம்..." என ஆர்வமாய் கேட்டான் ராம்.



அதற்கும் பதில் சொல்லாது அவள் நின்ற நிலையிலேயே இருக்கவும், மெல்ல பூனை நடை நடந்து அவளருகே சென்றவன், தன் நீர் சொட்டும் தலையை அவள் கழுத்து வளைவில் வைத்து ஆட்டினான்.



தன் மீது நீர்படவும், தன்னிச்சையாய் 'ஏய்' என சொல்லிக்கொண்டு தன் புடவை தலைப்பால் தன்னை துடைத்து கொண்டாள் மைதிலி.



அப்போது தான் ராமும் ஈர உடையுடன் நிற்பதை கண்டு ஒரு துவாலையை எடுத்து, அவனிடம் எதுவும் பேசாமல், அவன் தலை துவட்ட தொடங்கினாள்.



"நின்னுகிட்டே தூங்கிட்டேன்னு நினைச்சேன் ஹிஹி..."



ஒருநொடி அவன் முகத்தை பார்த்தவள், மீண்டும் அவன் தலையை துவட்ட தொடங்கினாள் சற்று வேகமாக.



'ஸ்ஸ், ஆஆ' என முனகினாலும் தன் வீரத்தை சொல்லியே ஆக வேண்டும் என ஆர்வத்தில் மேற்கொண்டு பேசினான் ராம்.



"என்னை தள்ளி விட்டுட்டு சிரிச்சானுங்க மையு... உடனே நான் சோகமா இருக்க மாறி பேஸ் வச்சுகிட்டேன்... சரின்னு என்னை மேல தூக்கிவிட கௌதம் கிட்ட வந்தானா? வேகமா அவனை தண்ணிக்குள்ள தள்ளி விட்டுட்டேன்.. ஹிஹி... அப்புறம் நாங்க எல்லாரும் தண்ணிக்குள்ள விழுந்து விழுந்து விளையாடுனோம்.

திவ்யா தான் போதும் விளையாண்டதுன்னு, அனுப்பிவச்சுடுச்சு..."



அவன் சொல்லி முடித்ததும் துவாலையை அவன் தலையில் இருந்து எடுத்து அறையின் மூலையில் தூக்கி வீசினாள் மைதிலி.



விலகி நடந்தவளை கரம் பற்றி இழுத்தபடி, "ஏன் மையு பேசமாட்ற?" என்றான் வாடிய முகத்துடன். அவன் எது செய்தாலும் ‘சூப்பர்’ சொல்லியே பழக்கிவிட்டவள், இன்று செய்த வீர தீர செயலுக்கு ஒன்றும் சொல்லாமல் இருப்பது அவனை வாட வைத்தது.



"நான் பேசலனு இப்போதான் உனக்கு தெரியுதா ராம்? சென்னை வந்த பிறகு நீ என்ன கண்டுக்கவே இல்ல... உனக்கு நான் முக்கியம் இல்லல..." ரிஷியை கண்ட நொடி முதல் மைதிலியை அவன் பெரிதும் நாடாமல் இருந்தது வேறு அவளுக்கு ஒரு மூலையில் வருத்தமாய் இருந்தது.



நினைவு திரும்பியதும் தன்னை மறந்துவிடுவானோ என அஞ்சுபவளுக்கு, இன்று துணை கிடைத்த குஷியில் ராம் தன்னை நாடாது இருக்கவும், பயம் சூழ்ந்து கொண்டது.



ராமிடம் இப்போது அவள் கோவப்படுவது அபத்தம் என அவளுக்கு தெரிந்தாலும், அவளால் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் ராமிடன் சினந்து பேசிவிட்டாள்.

முகம் சிறுத்து போனது அவனுக்கு.

"ஏன் மையு என்னை திட்டுற? நான் தப்பு பண்ணிட்டேனா?" என புரியாமல் பேசினான் ராம்.



தான் செய்த மடத்தனத்தை உணர்ந்தவள், ராமை மேற்கொண்டு எதுவும் சொல்லிவிடாமல் இருக்க கைகளை இறுக்க கட்டிக்கொண்டு தன்னை சமநிலை படுத்த முயன்றாள்.



"மையு.... பேசு என்கிட்ட..." கெஞ்சினான்.



"எனக்கு கோவம் வருது ராம்... கொஞ்ச நேரம் நீ வெளில இரு.. நான் வரேன்..."



"என்மேல கோவமா உனக்கு? என்னை அடிச்சுக்கோ மையு... கோவம் போய்டும்ல... என் மாமாக்கு கோவம் வந்தா என்னைதான் அடிப்பாங்க.. கோவம் போய்டும் அவங்களுக்கு... நீயும் என்னை அடிச்சுக்கோ..." என சொல்லிக்கொண்டே கட்டியிருந்த அவள் கைகளை பிரிக்க முயன்றான் ராம்.



"சொன்னா கேளு ராம்... கொஞ்சநேரம் வெளியில இரு... போ..." குரல் உயர்த்தி அவள் கத்த, வெளிறி போனான் ராம்.



இதுவரை அவளிடம் கோவத்தை கண்டிராதவனுக்கு, இப்போது அவள் கோவத்தில் பயந்தே போனான். கண்ணீர் வரும்போல இருந்தது. அழுதாலும் அவளுக்கு பிடிக்காது என்பதால் இமைகளை மூடி திறந்து கண்ணீருக்கு தடையிட்டான் ராம்.



அறையின் வாயிலுக்கு சென்ற பின், தயங்கி "என்னை விட்டுட்டு போய்டமாட்ட தானே மையு... ஒரு தடவ சொன்னியே!! என் மாமா கிட்ட என்னை விட்டுட்டு போயிடுவேன்னு....!!! அதுக்கு தான் நம்ம இங்க வந்துருகோமா? ப்ளீஸ் மையு.. நான் உன்னோடவே இருக்கேன்.. விட்டுட்டு போய்டாத...." என்றான் கட்டுப்படுத்திய அழுகை குரலில்.

ஓடி சென்று கட்டிக்கொள்ள வேண்டும் என தோன்றினாலும், தன்னை நிலைப்படுத்தி கொள்வதே பிரயத்தனமாய் பட, அவன் முகம் பாராது திரும்பி கொண்டு, "நீ வெளில போ ராம்.. கொஞ்ச நேரம் ... ப்ளீஸ்..." என்றாள்.



அதற்குமேல் நிற்காமல் அங்கிருந்து வீட்டின் வெளியே இருந்த புல்வெளிக்கு சென்றான் ராம். அங்கே அவனுக்கு முன் அனைவரும் அமர்ந்து பேசி கொண்டிருக்க, அமைதியாய் சென்று ரிஷி அருகில் அமர்ந்து கொண்டான். அழுகை பொத்துக்கொண்டு வந்தது.



பேச்சு சுவாரஸ்யத்தில் அனைவரும் இருக்க,, கௌதம் தான் முதலில் ராமின் வாடிய முகத்தை கவனித்தான்.



"ஹே இங்க பாருடா... புது மாப்பிளை சோந்து போய் உட்காந்துருக்கான்..." என சிரித்தான் கௌதம்.



கௌதம் சொன்னதும் வெடுக்கென திரும்பி அவனை தன் பலம் கொண்ட மட்டும் முறைத்தான் ராம்.



'ஹும்ம்?? என்ன முறைக்குறான்?' என நினைத்த கௌதமிற்கு, ராம் கல்யாணத்தன்று அவனிடம் வாங்கி சேர்த்துக்கொண்டதும் சேர்த்து நினைவு வர, மெல்ல நகர்ந்து சந்தோஷின் பக்கம் சென்றான். ‘எதற்கு வம்பென்று?’



கௌதம் சொன்ன பிறகே அனைவரும் ராமை கவனித்தனர்.



ராம் தோள்களில் கை போட்டு அணைத்தபடி "என்ன ப்ரோ சோகமா இருக்க? என்ன ஆச்சு?" என வினவினான் ரிஷி.



ஒன்றும் சொல்லாமல் தலையை தொங்க போட்டுகொண்டு சோகத்தில் மூழ்கி இருந்தான் ராம்.



"என்ன ஆச்சு மச்சான்? மைதிலி அடிச்சுட்டாலா? ஹாஹா!" என கேலியாய் கேட்டான் சந்தோஷ்.



"ம்ஹும்.. கோவமா இருக்கா" மெல்லிய குரலில் பதில் சொன்னான் ராம்.



"கோவமா? என்னாச்சு? நீங்க ஏதும் பண்ணீங்களா?"



சந்தோஷ் கேட்டதற்கு 'இல்லை' என தலையாட்டினான் ராம்.



"வேற என்னவா இருக்கும்? ம்ம்ம்? மைதிலி கோவத்துக்கு யார் காரணம்னு சொல்லுங்க... அடிச்சு தூக்கிடுவோம்!!"



சந்தோஷுடன் சேர்ந்து கொண்டு, "ஆமா ப்ரோ... யாருன்னு மட்டும் சொல்லு... அடிச்சு தூக்கிடுவோம்..." என்றான் ரிஷி தன்னை தானே அடித்துக்கொள்ள சம்மதமாய்.



"தெரியலையே... வெளில போனு சொல்லிட்டா... சிரிக்க கூட இல்ல... நான் உனக்கு முக்கியம் இல்ல தானேனு கேக்குறா? ஒண்ணுமே புரியல எனக்கு..."



தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் ராம் சொல்வது மற்றவருக்கு புரியாமல் இருக்க, ரிஷிக்கு மட்டும் சற்று விளங்குவதை போல இருந்தது.



'ஆஹா!!! நம்ம கிளப்பி விட்டது தான் போலயே.....!!!' என யூகித்தபடி ஒன்றும் சொல்லாமல் இருந்துகொண்டான் ரிஷி.



"என்ன அண்ணா.. இதுக்கு போய் சோகமா இருக்கீங்க... அண்ணி கோவப்பட்டா என்ன?? நம்ம அவங்கள சமாதானம் பண்ணுவோம்?" என திவ்யா சொல்லவும் ராம் முகம் மெல்ல தெளிந்தது..



"ஆனா, எனக்கு எப்படி சமாதானம் பண்ணனும்னு தெரியலையே....!!!" ராம் உதடு பிதுக்கினான்.



எல்லாரும் ஒவ்வொரு விதமாய் யோசிக்க, எந்த யோசனையும் ராமிற்கு பிடித்தமாய் இல்லை. இறுதியாய் கௌதம் சொன்ன ஐடியாவில் அவ்விடம் சில நொடி அமைதி காத்தது.



ராம் தன்னை முறைத்து பார்ப்பதை போல தோன்றியது கௌதமிற்கு. 'அடி வாங்குறது உறுதி போலயே' என எண்ணியபடி அவன் இருந்த நேரம்,அவனை உறுத்து பார்த்த ராம், ஒரு வித வேகத்துடன் அவனிடம் சென்றான்.



தன்னை அடிக்க வருவதாக நினைத்து கௌதம், சந்தோஷின் பின் வேகமாக ஒளிய போக, அவன் மீது உப்பு மூட்டை ஏறுவதை போல தொற்றி கொண்டான் ராம் மகிழ்ச்சியில்.



"ஹே சூப்பர் சூப்பர்.. அப்டியே பண்ணலாம்.. உனக்கும் அறிவு இருக்கு கௌதமு... " என குதூகலிக்க,



"ராம்... இந்த ஐடியாவ செஞ்சே ஆகனுமா?" என சந்தோஷ் சந்தேகமாக கேட்டான்.



அடியிலிருந்து தப்பிய குஷியில், "ஏன் ஏன் ஏன்?? என் ஐடியாக்கு என்ன குறைச்சல்? நீ வாடா ராம்... நம்ம இதை எக்சீக்யூட் பண்ணுவோம்..." என்றான் கெளதம் உற்சாகமாய்.



ராம், "என்ன பண்ணனும்னு சொல்லு"



"அப்படி கேளுடா ராம்.. நம்ம குடுக்க போற சர்ப்ரைஸ்ல என் தங்கச்சி அப்டியே ஆடி போய்டனும்னு ஆடி.... சரி நீ போய் இங்க இருந்த செடில இருந்து கலர் கலரா நெறய பூ பறிச்சுட்டு வா.. மத்ததெல்லாம் ஐயா பாத்துபாரு...." காலரை தூக்கி விட்டுக்கொண்டான் கெளதம்.



ராம், “எந்த ஐயா?”



கெளதம், “அது நான்தான், போய் நான் சொன்னதை செய்டா லூசு”



ஐடியா குடுத்த நன்றிக்காக அவனை அடிக்காமல் ராம் சென்றதும் கௌதம் அந்த இடத்தையே சுற்றி சுற்றி எதையோ தேடினான். அவனையே பார்த்திருந்த மற்றவர்களில் சந்தோஷ், "கௌதம்! இதெல்லாம் தேவையா இப்போ?" என வினவினான்.



"என் நண்பனுக்காக உயிரையும் கொடுப்பேன்... இதை பண்ண மாட்டேனா? நீ கம்முன்னு இரு... நானாச்சு! என் நண்பனாச்சு..."

தன் தேடலை மீண்டும் தொடர்ந்தான்.



"என்ன ரிஷி இது?" என திவ்யா கிசுகிசுக்க, "நம்மகென்ன!! வேடிக்கை பார்ப்போம்.. இப்படி உட்காரு..." என்றான் ரிஷி.



கைநிறைய பூக்களுடன் வந்த ராமிடம், "சூப்பர் மச்சி... இரு..." என சுற்றிலும் பார்த்தவன், ஓடி சென்று ஓரமாய் இருந்த பூந்தொட்டிகளுள் ஒன்றை தூக்க முடியாமல் தூக்கினான்.



"நான் தூக்கவா?" என துணைக்கு வந்த ராமிடம் "நோ நோ.. மண்ணு இருக்கதால தான் கணமா இருக்கு. இல்லனா இதெல்லாம் எனக்கு சர்வ சாதாரணம்..." என சொல்லிவிட்டு மண்ணை கீழே கொட்டிவிட்டபின் அதற்குள் ராம் கொண்டு வந்த பூக்களை கொட்டினான்.



பின்பு ஒரு நீள கயிற்றை கொண்டு அந்த பூந்தொட்டியை கட்டினான் கௌதம். அதை தோட்டத்தின் வாசலுக்கு மேல வைத்து, மறுபக்கம் இழுத்து கட்டி, ராம் கயிறை இழுத்தால், பூந்தொட்டியில் உள்ள பூக்கள் வாசலில் வருவோர் மீது கொட்டுவதை போல தயார் செய்தான்.



"எல்லாம் ரெடி... இப்போ நான் போய் மைதிலியை கூட்டிட்டு இங்க வருவேன்... நீ கரெக்ட்டா கயிறை இழுக்கணும்... பூ மழை மாறி அவமேல கொட்டனும்... சரியா?"



கௌதமின் மிரட்டலான ஐடியாவில் சொக்கி போய் பூம்பூம்மாடு தோற்கும் அளவுக்கு தலையாட்டினான் ராம்.



"அச்சோ... கயிறு லூஸா கட்டிருக்கு பாருங்களேன்..." பூந்தொட்டியோடு சேர்த்து கட்டிருயிருக்கும் கயிற்றை காட்டி திவ்யா பதற, "சும்மா இருங்க திவ்யா.. என்னதான் நடக்கும்னு பார்ப்போம்..." என சந்தோஷ் அவளை நிறுத்தினான்.



கெளதம், "மைதிலி..."



"அண்ணா... ப்ளீஸ்... நானே வரேன்.. ஒரு பைவ் மினிட்ஸ்..."



"இல்லம்மா.. ரொம்ப நேரமா ராம் அழுதுட்டே இருக்கான்.. அதான் உன்னை கூப்பிட்டேன்..."



கௌதம் சொன்னதை கேட்டதும்...

"அழுகுறானா?"

'ஹய்யோ' என தலையில் தட்டிக்கொண்டபடி எழுந்து அவனை தேடி சென்றாள் மையு.



அவள் பின்னொடு சிரித்தபடி 'யெஸ்' என்ற வெற்றிகுறியோடு சென்றான் கௌதம்.



அவனை தேடி வாசலுக்கு சென்றவள், வாசலில் நின்றபடி கண்களை சுழற்றினாள்.

கௌதம், கட்டை விரல் உயர்த்தி 'ரெடி' என ராமிற்கு சொன்ன நேரம், மைதிலி "ராம்..." என அழைத்தாள்.



அவள் அழைத்ததில் தன் கையிலிருந்த கயிறை ‘அம்போ’வென விட்டுவிட்டு அவளை நோக்கி, "மையு... நான் இங்கே இருக்கேன் பாரு..." என ஓடி வந்தான்.



"அடேய் கிராதகா!!!! கயிறை புடிடா..." அலறினான் கெளதம்.



அவளும் அவனை நோக்கி நகர,, மைதிலியை நிறுத்த இரண்டடி எடுத்து வைத்த கௌதம் மீது மேலிருந்த பூக்கள் மழை போல சிதறின. பூந்தொட்டியோடு....!!



மைதிலி வந்த பிறகு அங்கு நடந்தது எல்லாம் ஸ்லோ மோஷனில் ஓடியதை போல தோன்ற, ராம் கயிறை விடவும், "அய்யோ" என அலற வாயெடுத்தவர்கள், கௌதம் மீது பூந்தொண்டி விழவும், கட்டுப்படுத்தியும் முடியாமல் விழுந்து சிரித்தனர்.



அதுவரை கௌதம் பேசியிருந்த வீர வசனங்கள் எல்லாம் பின்னணி இசையாகிட, கீழே தரையோடு தரையாய் கிடந்தவனை துடைத்து எடுக்க ஒருவரும் இல்லை.



மைதிலி ராமுடன் மற்ற மூவரும் சேர்ந்து சிரிக்க, சில நிமிடங்கள் சென்ற பின்னரே ,, மைதிலி அவனருகே சென்று எழுப்பி விட முயன்றாள்.



"என்னமா?? உயிரோட இருக்கேனான்னு எட்டி பார்க்குறியா?" எழுந்துக்கொள்ள கை கொடுத்த மைதிலியை கேட்டான் கெளதம்.



ராம் அவனை காட்டி காட்டி வெடித்து சிரிக்கவும், கௌதமிற்கு 'உனக்காகவாடா உயிரை குடுப்பேன்னு சொன்னேன்?' என நொந்தே போனான்.



சிரிப்பை கட்டுப்படுத்தியபடி, "ஏன்... இப்ப..டி....." என்றாள் மைதிலி.

அவளை தவிர ஒருவரும் பேசும் நிலையில் கூட இல்லை.

'கொலைகார கும்பல் கிட்ட வந்து மாட்டிருக்கேன் பாரு’ என நினைத்துக்கொண்டான் கௌதம்.



"சீக்கிரம் தூக்கும்மா... செத்து போன ஆயா எல்லாம் ஹாய் சொல்லுது" தரையில் கிடந்தவனை கஷ்டப்பட்டு தூக்கி விட்டாள் மையு சிரிப்போடு!



கௌதம் அங்கேயே படுத்து ஓய்வெடுக்க, ஒருவாராய் அனைவரும் சிரித்து ஓய்ந்த நேரம், "எனக்கு ஒரு ஐடியா தோணுது..." என்றாள் திவ்யா.



"ஐயையோ!! மறுபடியும் ஐடியாவா!!!" கௌதம் எழுந்து கொள்ள முயன்று, முடியாமல் 'மம்மி.....' என்ற அலரலோடு முதுகை பிடித்துக்கொண்டு மீண்டும் படுத்துக்கொண்டான்.



அவன் நிலை பார்த்து மீண்டும் எல்லாரும் சிரிக்க, "என்ன ஐடியா திவ்யா??" என்றாள் மைதிலி சிரிப்பு மறையாமல்.



"ஒரு தடவ ஷாக் குடுத்து தானே ராம் அண்ணாக்கு இப்படி ஆச்சு... நம்ம ஏன் மறுபடியும் ஷாக் குடுக்க கூடாது? போன நியாபகம், திரும்ப வந்துடும்ல?

கௌதம் அண்ணாக்கு அவங்க ஆயா நியாபகம் வந்த மாறி... ஹாஹா" என்றாள் திவ்யா.



"என்ன சொல்ற? ராம்க்கு ஷாக் குடுத்தாங்களா??" அதிர்ந்து எழுந்தாள் மைதிலி. கௌதமிற்கும் இது புதிய செய்தியாய் இருந்தது.



மைதிலி அதிர்ந்ததை பார்த்து ரிஷியிடம் திரும்ப அவன் தன் தலையில் அடித்துக்கொண்டு நிற்பது தெரிந்தது...



'உளறிட்டோமோ??' என நடுங்கினாள் திவ்யா. ரிஷியும் சந்தோஷும் தலையில் கைவைத்து அமர்ந்துவிட,



"என்ன நடந்துச்சுன்னு சொல்ல போறீங்களா இல்லயா?" அமைதியான இடத்தில் மைதிலியின் குரல் பேரிடியாய் எதிரொலித்தது.

-தொடரும்...
 
Top