Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 18

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் 18

"சார் சார் சார்!"



"எதுக்குய்யா இத்தனை சார்.. வந்த விஷயத்தை சொல்லு..." கோப்புகளில் கவனத்தை வைத்தபடி கேட்டார் விஷ்வநாதன்.



"சார் ராமை ஒரு பொண்ணோட பார்த்தேன் சார்..."



"வயசு பையன் அப்படிதான் இருப்பான்... ரிஷி வீட்டுக்கு வந்ததும் நான் பேசிக்குறேன்.. நீ போ..."



"ஹான்?" என முதலில் முழித்த வரதன், பின் "ஹய்யோ சார், ரிஷி இல்ல... ராம்! ஸ்ரீராம்! உங்க மச்சான் பையன்.. அந்த லூசு.... ஒரு பொண்ணோட சுத்துறான் இங்க...." வரதன் அழுத்தி சத்தமாய் சொன்னதில் திகைத்து எழுந்தார் விஸ்வநாதன்.



"யோவ்... என்னையா சொல்ற நீ? அவனை நான்தானே நார்த் சைடு காட்டுல விட்டுட்டு வந்தேன்! இங்க எப்படி வந்தான்!?"



"இங்க வந்ததுக்கே நீங்க ஷாக் ஆகுறீங்க... அவனுக்கு கல்யாணம் ஆச்சுன்னு சொன்னா இன்னும் ஷாக் ஆவீங்க போலயே!"



"என்னது? கல்யாணமா? அந்த லூசுக்கா? யோவ்.. உளராதயா! யாரையோ பார்த்திட்டு வந்து ராம் ஹேராம்ன்னு கதை சொல்ற..." மீண்டும் கோப்புகளை கையில் எடுத்தார் விஷ்வநாதன்.



அவரை வேகமாக நெருங்கிய வரதன், கோப்புகளை வாங்கி மீண்டும் மேசை மீது வைத்துவிட்டு, "நான் சொல்றதை நம்புங்க... எனக்கு நல்லா தெரியும். அது நம்ம ராம் தான். அவங்களை பாலோ பண்ணிட்டு போய் அட்ரஸ் கூட கண்டுபுடிச்சுட்டேன்..." என்றார் தீவிரமாய்.



"அப்போ நீ நிஜமாதான் சொல்றியா? இது எப்படிய்யா சாத்தியம்? ஒண்ணுமே புரியல எனக்கு...." தலையை பிய்த்துக்கொண்டார் விஸ்வநாதன்.



"நம்மலே அவனை தேடி கண்டுபிடிக்கணும்ன்னு இருந்தோம். இப்போ அவனே நம்ம கண்ணுல பட்டுட்டான்... அந்த பொண்ணு வேற பார்க்க பணக்காரி மாறி இருக்கா! காதுல கழுத்துல போட்டிருந்த நகை எல்லாம் வைரம்... எப்படியும் எல்லாம் அரை கோடி தேரும்"



"வக்கீல் ஆகுறதுக்கு முன்னாடி திருடன்னா இருந்தியோ?" வரதனை கூர்மையாய் பார்த்தார் விஸ்வநாதன்.



"இப்போ அது முக்கியம் இல்ல. முதலில் நான் சொல்ற அட்ரஸ்ல போய் அவங்களை எப்படியாவது கன்வின்ஸ் செஞ்சு உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுங்க. அப்புறமா மத்ததெல்லாம் யோசிக்கலாம்... அவனுக்கு வாரிசுன்னு ஏதும் வந்துட்டா நம்ம பொழப்புக்கு ரோட்டுல தான் நிக்கணும். சொத்துல ஒரு பைசா கூட நமக்கு கிடைக்காது!" குடும்ப வக்கீலாய் குடிகெடுக்க யோசனை சொன்னான் வரதன்.



"ராம் இன்னும் அப்டியே தானே இருக்கான்? திடீர்ன்னு நான் அங்க போய் நின்னா சந்தேகம் வராதா?"



"அவன் இன்னும் லூஸா தான் இருக்கான். அவங்களுக்கு சந்தேகம் வராதமாறி நடிக்க வேண்டியது உங்க பொறுப்பு. நான் உங்க வீட்டுக்கு போய் லட்சுமி அம்மாவை தயார் படுத்துறேன். அவங்க வீட்டுக்கு வந்ததும் நடிக்கணும்ல!?"



"சொத்து என் கைக்கு வரதுக்கு நீ என் இவ்ளோ ஆர்வப்படுற?" சந்தேகம் வரதன் மேல் திரும்பியது.



"எல்லாம் அந்த 10% கமிஷனுக்கு தான்!! நான் இவ்ளோ கஷ்டப்படுறேன்... அந்த டாக்டரு ஒண்ணுமே பண்ணாம இருக்கான்... அவனுக்கும் 10% எனக்கும் 10% ஆ? எதாவது பார்த்து பண்ணுங்க சார்...." பேரம் பேச,



"ம்ம்ம்? அதுவும் சரி தான்!! அவனை விட அதிகமா தான் உனக்கு வரணும்..." அவர் அப்படி சொல்லவும் புது வெள்ளி பாத்திரம் போல பிரகாசித்தது வரதன் முகம்.



"சோ!?” என இழுத்தவர், “ஒரு 10.5% எடுத்துக்கோ.." என சொல்லிவிட்டு நகர்ந்தார் விஷ்வநாதன்.



"ஹும்ம்! உன் பிச்சைக்கார புத்தி உன்னைவிட்டு போகுமா!!!" என தன்னை தானே தலையில் அடித்து கொண்டு சென்றார் வரதன்.



"இனி நீங்க இங்கதான் இருக்க போறீங்க அக்கா! என்னோட பிரண்டு வீடுதான் இது! பயப்படவே வேணாம் எதுக்கும்...இந்நேரம் அந்த ஆளு என் அப்பா காதுல உங்களை பார்த்ததை ஓதிருப்பான்!" என்ற ரிஷியிடம்,



"ம்ம்ம்... சரி.. நான் பார்த்துப்பேன்... நீங்க இனி என்னை தேடி வராதீங்க... உங்க அப்பாக்கு சந்தேகம் வரமாறி எதுவும் பண்ண வேணாம்..." என்றாள் மைதிலி.



"மைதிலி சொல்றதுதான் சரி, நம்ம கிளம்பிடுவோம் ரிஷி, உங்க அப்பா எந்நேரமும் வரலாம்..." என்றான் சந்தோஷ்.



"அப்போ நானு?" என இடைபுகுந்தான் கௌதம்.



"என்ன நானு?" -சந்தோஷ்



"நீயும் ரிஷியும் உங்களோட அந்த வீட்டுக்கு போய்டுவீங்க... ராமும் தங்கச்சியும் இந்த வீட்ல இருப்பாங்க.... இதுல என்னோட ரோல் என்னன்னு சொல்லவே இல்லையே?!"



"அச்சோ!!! ஆமா... சொல்ல மறந்துட்டேன்... " என பின்னந்தலையில் தட்டிக்கொண்டபடி தன் பாக்கெட்டினுள் துளவினான் சந்தோஷ்.



"எவ்ளோ கஷ்டமான ரோல்லா இருந்தாலும் பரவால்ல... இந்த கௌதம் அதை கனகாசத்தியமா, ச்சீ கனகச்சிதமா முடிச்சுடுவான்..." என சொல்லிக்கொண்டிருந்த கௌதம் கைகளில் ஒரு தாளை திணித்தான் சந்தோஷ்.



அதை பார்த்ததும், "ஓ! டைலாகோட ஸ்கிரிப்ட் ரெடி பண்ணியாச்சா! சூப்பர் சூப்பர்..." என சொல்லிக்கொண்டே அதை பிரித்து பார்த்தவன் கத்தினான்.



"டேய் இப்போ என்னாத்துக்குடா எனக்கு டிக்கெட் புக் பண்ணிருக்கீங்க?"



"ஸ்ஸ்ஷப்பா... இவன் கிளம்புரானா?! நிம்மதி!!" என மைதிலியிடம் சொன்னான் ராம்.



திரும்பி ராமை முறைத்த கௌதம்,, சந்தோஷிடம்,"கேக்குறேன்ல? எனக்கு எதுக்கு இப்போ டிக்கெட்?" என்றான்.



"செயல் இங்க, சொல் அங்க!!" என மைதிலியை கைகாட்டிவிட்டு நழுவி வெளியேறினான் சந்தோஷ், ரிஷியுடன்.



"என்ன மைதிலி இது?"



"எங்களை இங்க விட்டுட்டு கிளம்புறேன்னு தானே சொன்னீங்க அண்ணா? ஆனா, கிளம்புறதுக்கு ஒரு ஏற்பாடும் பண்றமாறி தெரியல..."



"அதுக்காக கழுத்தை புடிச்சு தள்ளாம டிக்கெட்டை குடுத்து துரத்துரியா?"



"அண்ணா? நீங்க இங்க இருந்தா ஹாஸ்பிடல்ல உங்க பேஷன்ட் எல்லாம் யாரு கவனிப்பா?"



"நான் கவனிப்பேன்னு தான் எல்லாருக்கும் நோய் வந்துச்சா?" என கௌதம் இடக்காக கேட்டு முடிக்கும்போது ராம் கைகளில் பையுடன் வந்தான்.



"இந்தாடா, உன்னோட பை... தூக்கிட்டு கிளம்பு...." என அவன் கைகளில் தூக்கி போட்டான் ராம்.



"வர வர உனக்கு எகத்தாளம் ஜாஸ்தி ஆகிட்டே போதுடா!!!"



இவர்களின் பேச்சுக்கு இடையே வாசல் கதவு தட்டப்படும் ஓசை கேட்கவே மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.



'அதுக்குள்ள தேடி வந்துட்டாங்களா?' என மனதில் எண்ணிக்கொண்டனர்.



"ராம்!! நான் சொன்னதெல்லாம் நியாபகம் இருக்கு தானே? என்னை விட்டு எங்கேயும் போக கூடாது... அவங்க எது கொடுத்தாலும் என்கிட்ட கேட்டுட்டு தான் சாப்பிடணும்... புரிஞ்சுதா?"

அவன் மண்டையை உருட்டவும், தன்னை சமன் செய்தபடி கதவை திறந்தாள் மையு.



வாசலில் ஈஈஈஈ என இளித்தபடி நின்றிருந்தனர் ரிஷியும் சந்தோஷும்.



"என்ன ஆச்சு?" அவர்களை உள்ளே வர சொல்லிவிட்டு கதவை தாழிட்டபடி கேட்டாள் மைதிலி.



சந்தோஷ், "ரிஷி ஏதோ குடுக்க மறந்துட்டானாம்!"



"என்னது?" என மைதிலி கேட்டதும் அவள் கைகளில் ஒரு தங்கசங்கிலியை வைத்தான் ரிஷி.



"தயவுசெஞ்சு இதை வேணான்னு சொல்லிடாதீங்க அக்கா!!! இது ராம் அம்மாவோடது... உங்ககிட்ட தான் இது இருக்கணும்... ப்ளீஸ்.."



இப்படி சொல்பவனிடம் எதுவும் சொல்ல முடியாமல், சங்கலியை வாங்கிக்கொண்டாள் மைதிலி..



"இதென்ன? டாலர்ல R?"



"ராம் அப்பா பேரு ரவிச்சந்திரன்.. அதனால R...

இனிமே அது Ram..."



மெலிதாய் சிரித்தபடி அதை தொட்டு பார்த்தவள், "இதுக்காக திரும்ப வந்தீங்களா?? சரி சரி கிளம்புங்க..." என்றாள்.



"ஹே நீங்க இன்னும் கிளம்பலையா?" என கௌதமை பார்த்து கேட்டான் ரிஷி. அதற்கு கௌதம் முறைத்த முறைப்பில் பறந்து சென்றனர் இருவரும்.



"சரி அண்ணா... நீங்களும் கிளம்புங்க... "



"மாட்டேன் மைதிலி..."



"என்ன அண்ணா.. நீங்களும் ராம் மாறி பண்ணிட்டு இருக்கீங்க? நீங்க ஒரு டாக்டர், நியாபகம் இருக்கா இல்லையா? சொன்னா கேளுங்க..."



"முடியாது!!!"



"போன்னு சொன்னா போக வேண்டியது தானே?!" என கேட்ட ராமிற்க்கும் பதில் சொல்லாது சோபாவில் சட்டமாய் அமர்ந்து கொண்டான் கௌதம்.



அவனிடம் பதில் பேச வந்த மைதிலி, மீண்டும் கதவொலி கேட்கவும், வாசலுக்கு சென்றாள்.



கதவை திறந்ததும் அங்கு நின்றவரை கண்டு, ‘எதிர்பார்த்தேன்’ என்ற பாவனையில் ஊடுருவும் பார்வையுடன் நின்றாள் மைதிலி.



வரதன் சொன்னதோடு ஒப்பிட்டு அவளை அளவிட்டவர் பின் “அம்மாடி!!! நான்தான் விஸ்வநாதன். உனக்கு என்னை தெரிய வாய்ப்பில்லைதான்... என்ன பண்றது? நான் முன்ன நின்னு கண் குளிர நடத்தி வச்சுருக்க வேண்டிய கல்யாணம். இப்படி யாரோ மூணாம் மனுஷன் சொல்லி தெரிய வேண்டி இருக்கு!!! உனக்கு நான் அப்பா முறை தான். உள்ள கூப்பிட மாட்டியா?" என்றார் பவ்வியமாக.



விஷ்வநாதன் முகத்தை பார்த்த மைதிலிக்கு இதுவரை அவர் செய்த காரியங்கள் அனைத்தும் அவள் கண்முன் ரயில் போல ஓட, வெறுப்பை கக்கும் விழிகளுடன் நின்றிருந்தாள்.



வந்தது யார் என உணர்ந்து கொண்ட கௌதம் விரைந்து அவளருகே சென்று மெதுவாக அவள் கையில் தட்டினான்.



அதில் கலைந்தவள், நிமிர்ந்து அவரை பார்த்து, "வாங்க" என்றதோடு உள்ளே சென்றுவிட்டாள்.



"இது யாரும்மா?" என கௌதமை கேட்டார் அவர்.



"என் அண்ணன்" என்றதோடு நிறுத்திக்கொண்டாள் மையு.



"ஓ! உனக்கு அண்ணன் இருக்காங்களா?"



"ஏன்? இல்லன்னு யாராது சொன்னாங்களா?" பட்டுதெரித்தாற்போல் வார்த்தைகள் வந்து விழுந்தன மைதிலியிடமிருந்து.



"இல்ல இல்ல.... அது.... ராம் எங்க? புள்ளைய பார்த்து ரெண்டு மாசமாச்சு...."



"ரொம்ப பாசமோ!!!" அவள் சாதாரணமாக கேட்டது போல இருந்தாலும்,, குத்தலாக கேட்டது போலவே இருந்தது விஸ்வநாதனிற்கு.



"இருக்காத பின்ன!!! நான் தோளுல தூக்கி வளர்த்த பையன்...."



இவர்கள் பேச்சினூடே கிச்சன்னிலிருந்து வெளியே வந்தான் ராம்.



"ராம் கண்ணா?! என்னடா இப்படி இளைச்சுட்ட! இந்த மாமன மறந்தே போய்ட்டியா? என்னை வந்து பார்க்கணும்னு தோணலையா ராஜா?" வழிந்த கண்ணீரை கைகுட்டையில் துடைத்தார் விஷ்வநாதன்.



"நீங்க தானே மாமா என்னை கொண்டு போய் அந்த காட்டுல விட்டீங்க?" இதை ராம் கேட்பான் என எதிர்பார்க்காத விஷ்வநாதன் சற்றே தடுமாறினார்.



"அது.... அது.... நானா?? இவன் கொஞ்சம் லூசும்மா... இப்படி தான் உளருவான்..." என மைதிலியிடம் சிரித்து வைத்தார் அவர்.



"அவருக்கு எப்படி இந்த மாறி ஆச்சு?" என மைதிலி கேட்கவும் "பேச எவ்வளவோ நல்ல விஷயம் இருக்கப்போ இதெல்லாம் எதுக்கும்மா? நான் இங்கே வந்ததே உங்களை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகத்தான். கடல் மாறி நம்ம வீடு அங்க இருக்கப்போ இது எதுக்கும்மா? நம்ம வீட்டுக்கு போலாம் வாங்க...!" என விஷ்வநாதன் அழைத்ததும், "என்ன ராம்? போலாமா??" என்றாள்.



"ம்ம்.. போலாம்"



"அங்க உன்னை காணாம உன் அத்தை துரும்பா இளச்சுட்டா தெரியுமா!? அப்படி ஒரு கவலை. சீக்கிரமா கிளம்புங்க போலாம்..." என துரிதப்படுத்தினார் விஷ்வநாதன்.



அவர்கள் கிளம்ப எடுத்து கொண்ட 15 நிமிடங்கள் விஷ்வநாதன் தன்னுள் பேசிக்கொண்டார்.



'ரொம்ப நடிச்சு, வசனம் பேசி, அழுது தான் இவங்களை நம்ப வைக்கணும்னு நினைச்சா, இப்படி கூப்பிட உடனே கிளம்புறாங்க? இதுல ஏதும் சதி இருக்குமா? வீட்டை எப்படி கண்டுபுடிசீங்கன்னு கூட கேட்கலை. இந்த பொண்ணு ராமை விட லூசா இருக்கும் போல. எது எப்படியோ! நம்ம காரியம் நடந்தா போதும்' என எண்ணிக்கொண்டார். இதை தாண்டி பல கேள்விகள் மனதில் எழ, அவர்களை அழைத்து கொண்டு தன் வீட்டிற்க்கு சென்றார். (ராம் வீடுதான்)



அங்கே வாசலிலேயே, ஒரு முழம் தங்க கரையிட்ட பட்டு புடவையில் உடல் மறைக்க நகைகளுடன், 'அர்பனுக்கு வாழ்வு வந்தால்...!' என்ற பழமொழிக்கு உதாரணமாய் நின்றிருந்தார் லட்சுமி.



"யய்யா... கண்ணு... வந்துட்டியா?? இந்த அத்தைய பிரிஞ்சு எப்படி தான் நீ இருந்தியோ தெரியலயே.... இந்த அத்தை தான் உன்னை பார்க்கணும்ன்னு உசுர கைல புடிச்சுட்டு இருந்தேன்.......என் கண்ணு.. என் மூக்கு...."



அதற்குமேல் அவர் பேசியதெல்லாம் மைதிலி காதுக்குள் போகவே இல்லை... 'இதுக்கே கண்ணை கட்டுதே' என்ற நிலையில் இருந்தாள் அவர் நடிப்பை பார்த்து.



அப்போது உள்ளே இருந்து ஓடி வந்தான் ரிஷிகேஷ்.



"ப்ரோஓஓ! வந்துட்டியா ப்ரோ.. வந்துட்டியா... ! எங்க போன எங்களை விட்டுட்டு... பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு..." என ராமை கட்டிபிடித்தான் ரிஷி.



அவனை விநோதமாய் பார்த்தபடி தன் மீதிருந்த அவன் கைகளை விளக்கிய ராம், "காலைல தானேடா என்னை பார்த்த?" என கேட்டான்.



ஷாக் அடித்ததை போல் அதிர்ந்து விலகி நின்றான் ரிஷி. கலவரத்தை முகத்தில் தேக்கி மைதிலியை பார்க்க, அவன் அளவுக்கு இல்லை என்றாலும், அவள் முகமும் அதிர்ந்து தான் இருந்தது.



என்ன செய்வதென தெரியாமல் கௌதமை பார்க்க, தன் காலை அடிஅடியாய் பின்னோக்கி வைத்து வெளியேறி கொண்டிருந்தான் கௌதம்.



"ராம் என்ன சொல்றான்?" விஷ்வநாதன் கேட்டே விட்டார்.



'ஐயையோ என்னத்த சொல்லி சமாளிக்குறது!!!'

மூவரும் என்ன சொல்வதென தெரியாமல் 'மாட்டுனோமா?' என நின்றிருந்தனர்.

-தொடரும்...
 
Super Super Super pa semma semma episode... Ha ? ? ? ? ram ? ? ? ketaan பாருங்க oru கேள்வி rishi ah kaalila தானே டா paathom nu. கடவுளே enna aaga pooguthoo.... மூணு num muzhikuthunga ? ? ? ?.... அந்த lawyer semma kedi address varaikum therinji vechi kitu வந்து தான் அந்த ஆளு kita solli அந்த ஆளு vanthutaan... Gowtham avaluku அண்ணன் aaitan.... இனிமேல் என்ன aaga pooguthoo... Mythili eppadi சமாளிக்க poraalo... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
எப்படி டைமிங்ல சிக்க வச்சான் பாரு... அடேய் ரிஷி ராம் பத்தி தெருஞ்சுமா இப்படி ஒரு கேள்வி கேட்டு வைப்ப.. கௌதம் உசாரய்யா உசாரூ...
 
Top