Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

maaayam seithaayadi---7

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
Aththiyaaya-7

அன்று திருச்சி நேஷனல் காலேஜில் தாமரைக்கு ஒரு பட்டிமன்றம் இருந்தது...ஆகையால்,கல்லூரியில் இருந்தாற்போல அப்படியே திருச்சி சென்றுவிட்டு,வீடு திரும்ப இரவு எட்டு மணி ஆயிற்று...அவள் அம்மா சரஸ்வதி மக்களை எதிர்பார்த்து வாசலிலேயே காத்துகிடந்தாள்….
மகளைக் கண்டதும் பரபரப்பானாள்...

‘’என்னடி...மணி எட்டாயிடுத்து’’

‘’ஆமா..ஏழூ மணிக்கப்புறம் எட்டுமணி ஆகத்தானே செய்யும்’’ என்று நிற்காமல் நடந்து வந்து கொண்டே பதில் சொன்னாள் தாமரை....கைப்பையை அதனிடத்தில் வைத்தாள்....

‘’போடீ....பெரிய காமெடி பண்றாளாம்....லேட்டாயிடுத்தேன்னு பதறிண்டுஇருந்தேன் நான்’’
‘’ஃபோன் பண்ணி விபரம் சொன்னேன்ல’’
‘’சொன்னேடி....இருந்தாலும்,காலம் கிடக்குற கிடப்புல,பயமாயிருக்கில்ல’’ என்றபடி மகளிடம் காபியைத்தந்தாள் சரஸ்வதி....

‘’இப்ப ஏன்மா காபி தரே...? சாப்பிடற நேரம்தான் ஆயிடுத்தே’’
‘’அது வந்து என்னன்னா.....பெரியப்பா நீ வந்ததும் உன்னை அழைச்சுண்டு மாடிக்கு வார சொன்னார்...நம்மாளாண்டை ஏதோ பேசனுமாம்’’
காபியை வாங்கி பருக தொடங்கினாள்..

‘’எதைப் பத்தி பேசனுமாம்..ஏதாவது சொன்னாளா’’

‘’நந்தினியை பொண்ணு பார்த்துட்டு போனாளே ,பிள்ளையாத்துக்காரா ,அவா எதேனும் தகவல் சொல்லி விட்டிருப்பான்னு நினைக்கறேன்’’
‘’ சரி...அது சம்பந்தமா நீங்க பெரியவாளா பேசிக்க வேண்டியதுதானே ...நடுவுல நான் எதுக்கு’’
‘’அதாண்டி தெரியல’’

‘’எதுக்கெடுத்தாலும் தெரியல புரியலன்னு ஒரு பாட்டைப் பாடிடு என்ன’’
அம்மாவிடமிருந்த் பதிலில்லை...அவளைப் பார்க்கவும் பாவமாகத்தான் இருந்தது...அவளுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை அப்படி ஆகி விட்டது...வீட்டில் ஆண் துணை இல்லாததால் ,மச்சினர் குடும்பத்தை சார்ந்தே வாழ்ந்தாகி விட்டது..அதைத்தானே தொடர முடியும்....
காபியை குடித்து முடித்து கிளாசை வைத்தவள்,

‘’சரி...வாம்மா போலாம்’’ என்றாள்....

அம்மாவும் பெண்ணும் படியேறி மாடிக்கு செல்ல அங்கே ‘’கப்’’ பென்று பேச்சு நின்றது...பெரியப்பா,பெரியம்மா,ஹரி,நந்தினி நால்வரும் ஹாலில் அமர்ந்து இருந்தனர்...சூடான வாக்கு வாதங்கள் நடந்து கொண்டிருந்தது போலும்...தாமரை நந்தினியின் அருகில் போய் அமர,அவள் சட்டென்று முகத்தை திருப்பிக்கொண்டாள்...ஏன்? என்னவாக இருக்கும்?கேள்வி எழுந்தது தாமரைக்குள்....சரி அவர்கள் வாயாலயே சொல்லட்டும்...பெரியப்பா ராகவேந்த்ரா வாய் மலர்ந்தார்...

‘’சரசு....மாப்பிள்ளையாத்துக்காரா தகவல் அனுப்பியிருக்கா’’
‘’என்ன..பொண்ணைப் பிடிச்சிருக்காமா?’’
‘’ரொம்பப் பிடிச்சுருக்காம்’’
‘’சந்தோஷம்’’
‘’எனக்கும் சந்தோஷம்தான்....ஆனா அவாளுக்கு எந்தப்பொண்ணைப் பிடிச்சிருக்குன்னு நீ கேக்கலியே சரசு...’’ என்று பொடி வைத்தார் பெரியப்பா...

‘’இதிலே என்னண்ணா கேள்வி....அவ நந்தினியைத்தானே பார்க்க வந்தா?’’
‘’சரிதான்...ஆனா,அவா தாமரையை இல்ல பார்த்திருக்கா’’

‘’அப்பிடியெல்லாம் எதுவுமில்லையே...நம்ப நந்தினி ரெடியாகி கீழே வற்துக்குள்ளே அவாகிட்ட மரியாதை நிமித்தமா,தாமரை சித்த நாழி பேசிந்திருந்தா,,அவ்ளோதான்’’ என்று பதட்டமாய் சரசு தன்னிலை விளக்கம் தர...

‘’அதிலேயே தாமரையை ஆவாளுக்கு பிடிச்சிப் போயிடுத்து...’’
‘’இது கொஞ்சம் கூட நன்னாயில்ல’’ என்று சரசு மனதுக்குள் மகிழ்ச்சியை மறைத்துக் கொண்டு பதற.....

‘’ஏன் நன்னா இல்லேங்கறே சரசு’’
‘’அக்காவைப் பார்க்க வந்துட்டு,தங்கையை பிடிச்சிருக்குன்னு சொல்றது,எந்த வகையில நியாயம்/’’

‘’அதைத்தானே சரசு நீயும் தாமரையும் விரும்பினேள்’’ –அது வரை மச்சினரும்,கொழுந்தியாளும் மட்டுமே பேசிக்கொண்டிருந்த விவாதத்தில் முதன்‌முறையாக ஓர்ப்படி விஜயா வாய் திறந்தாள்...

‘’ஐயோ....அபாண்டம்...அக்கா...இப்பிடி பேசாதேள்....சுருக்குன்னு இருக்கு...நந்தினியும் எம்போண்ணுதான்...அவளுக்கு வந்த வரனை ,தாமரைக்கு வாரிச்சுருட்டிக்கணும்னு நான் ஒரு நாளும் நினைக்கலை ....எனக்கே இது ஆச்சரியம்தான்...’’

‘’அப்டி நினைக்கறவ,மாப்பிளையாத்துக்காராளை உன் வீட்டூல உக்கார்த்தி வச்சு ஏன் காபி டிபன் உபசாரம் பண்ணனும்...மாடியை கை காண்பிச்சுட வேண்டியதுதானே’’என்று காட்டமானாள் விஜயா...

‘’வீட்டுக்குள்ளார படியேறி வந்துட்டா...நான் என்னக்கா செய்யட்டும்...எதையும் நாங்க நடத்தலைக்கா...எல்லாம் தானா நடந்துடுத்து....நம்புங்க அக்கா’’

இப்பொழுது விஜயா சண்டையும் போடமுடியாமல்,சமாதானமும் ஆகாமல், முகத்தை திருப்பிக் கொள்ள,

‘’சித்தி! வந்தவாகிட்ட,நீங்கதானே பேசனும்...தாமரையை ஏன் பேச விட்டேள்?’’ கை மிட்டாய் களவு கொடுத்த குழந்தையாட்டம்,வயது வித்தியாசம் கூடப் பார்க்காமல் எரிந்து விழுந்தாள் நந்தினி...
‘’ம்மா...நந்தினி...நோக்குத்தெரியாதா? உங்க சித்தப்பா போனதுக்கப்புறம்,நான் எந்த நல்ல விஷயத்துக்கும்,முன்னால வந்து நிக்கிறதில்லேன்னு....அதான் உன் தங்கையை அனுப்பினேன்’’
எதிர்க்க முடியாத பதிலால் முகம் தொங்கப்போட்டுக் கொண்டாள் நந்தினி...

‘’எப்பிடியோ,உங்களுக்கு சாதகமா விஷயம் முடிஞ்சுடுத்து...அதானே நிதர்சனம்’’என்றால் விஜயா பெரு மூச்சுடன்...
‘’ஏன்க்கா....இப்டி பிரிச்சிப் பேசறேள்....மனசு சங்கடப்படறது’’ என்று முக வாடினாள் சரசு...
சிறிது நேரம் மவுனம்.....பெண்கள் அமைதியானதும்,

‘’உங்க மனசுல உள்ளதை எல்லாம் கொட்டி தீர்த்துட்டேளா....அதுக்காகத்தான் வெயிட் பண்ணிண்‌டு இருந்தேன்’’என்றார் ராகவேந்த்ரா...

‘’அக்கா கேட்டதுக்கு நான் விளக்கம் சொல்லிண்டு இருந்தேன்’’-சரசு...

‘’தாமரைக்கு இந்த இடம் அமைஞ்சதுல எனக்கொண்ணும் வருத்தமில்ல...’’ என்றாள் விஜயா...
அவர்கள் இருவரது முகங்களும் பொய் சொல்லிற்று என்பதை உணர்ந்தும் உரைக்கவோ அதை பெரிது படுத்தவோ விரும்பவில்லை ராகவேந்த்ர் ....இருக்கின்ற நிலைமையை விட்டு ,இருக்க வேண்டிய நிலை குறித்து சிந்திப்பவர் அவர்,...ஆகையால் இப்படி சொன்னார்...

‘’நீங்க ரெண்டு பேருஞ்சொன்னது உண்மையோ பொய்யோ நேக்குத் தெரியாது...ஆனா.நான் உண்மைன்னே எடுத்துக்கறேன்....ரெண்டு பேரும்‌ இதே ஸ்டாண்ட்ல இருங்கோ...இப்போ மாப்பிள்ளையாத்துக்காராளுக்கு என்ன பதில் சொல்றது சரசு...?’’
‘’எங்களுக்கு சம்மதமில்லேன்னு நிர்தாட்ச்சண்யமா சொல்லிடுங்கோ’’

‘’காரணத்தை சொல்லு’’
‘’சரிப்பட்டு வரும்னு தோணலை’’
‘’அதுதான் ஏன்மா ...தாமரையும் கல்யாணத்துக்கு நிக்கிற பொண்ணுதானே...இப்போ இல்லேன்னாலும்,அடுத்த வருஷம் அவளுக்கும் வரன்

பார்த்து முடிக்க வேண்டியதுதானே..காலத்தே பயிர் செய்யறதுதானே நல்லது...’’

‘’சரிதான் நீங்க சொல்றது...என்னிக்கிருந்தாலும்,ஒருத்தன் கையில பிடிச்சிக் குடுக்க வேண்டியவதான்..மறுக்கலை....இப்போ,நந்தினிக்கு பார்த்த பையனை தாமரைக்கு எப்பிடிண்ணா கட்டி வைக்கிறது? நாளைக்கு நம்ம பிள்ளைகளுக்குள்ளேயே ஒரு மனஸ்தாபமாயிடுமே ‘’’என்றாள் சரசு குழப்பத்துடன்....அவள் முகத்தில் உண்மையான கவலை இருந்தது....

‘’இங்க பாரும்மா சரசு,,,நீ பின்னால போயி யோசிக்காத...நந்தினி மேட்டரை உன் மைண்ட்லேருந்து தூக்கிப்போடு...மாப்பிள்ளை தாமரையைத்தான் டிக் பண்ணியிருக்கார்...அதை பத்தி பேசு...மனசு ஒத்துப் போகாம , கல்யாணம் பண்ணி வைக்கறது எவ்ளோ பெரிய ரிஸ்க்குன்னு உனக்கு தெரியாதா...நாமா தேடி போகல...தானா வந்திருக்கு...நல்ல பையன்..நமக்கேத்த இடம்...குறை சொல்றதுக்கு ஒண்ணுமில்ல...ஏன் விடணும் ?’’

‘’கண் அளக்காததையா கை அளக்கப் போறது...பார்த்தாலே தெரியறது....நல்ல தன்மையான பையன்....பாந்தமான குடும்பம்....அது விஷயமில்ல...கல்யாணத்துக்கு இப்போ நான் தயாரில்லையே...’’
‘’தயார்னு நீ எதை சொல்றே’’

‘’கல்யாணம்னா சும்மாவா...சிம்பிளா பண்றதுனாலும்,ஒரு அஞ்சு லட்சமாவது கையில வேண்டாமா....அவ கையில காதுல கிடக்கறதுதான் தங்கம்...நல்லதா நாலு நகைபண்ணிப் ப்போடனும்....அவாத்துல ஒண்ணும் டிமாண்ட் பண்ணலைதான்...இருந்தாலும்,நம்மாத்துப் பொண்ணை . நாம சும்மா அனுப்பிட முடியுமா’’ என்று பெண்ணைப் பெற்றவளின் இயல்பான உணர்வை சொன்னாள் சரசு..

‘’நியாயம்தான் நீ சொல்றது...அடுத்த வருஷம் அஞ்சு லட்சத்துக்கு என்ன பண்ணுவே’’
‘’தெரியலேண்ணா....கடவுள்தான் வழி விடணும்...’’

‘’அந்த வழியை கடவுள் இப்ப விடுவார்னு நம்பு...ஏதாவது ஏற்பாடு பண்ணுவோம்...மனமிருந்தால் மார்க்கம் உண்டு..நாட்டுல எல்லாரும் கையில ரொக்கம் வச்சிண்டா கல்யாணம் பேசறா....எல்லாம் தானா நடக்கும்...’’
தனது கணவர் போன பின்னாடி,மனைவி மக்களின் பொருமலையும் பொருட்படுத்தாது, தாமரைக்கு ஆதரவாக இருப்பவர் ராகவேந்தர் என்பதை மறுப்பதற்க்கில்லை... ஆகவே அவரது வார்த்தைகளில் ஏற்பட்ட நம்பிக்கையில் வாய் மூடி மவுனமானாள் சரசு....

‘’பெரியப்பா’’என்று தாமரை வாய் திறக்க,..
‘’கண்ணுக்குட்டி,,,,நீ என்ன சொல்லப்போறேன்னு தெரியும்...பெரிப்பா...நான் படிப்பை முடிக்க வேண்டாமான்னெல்லால்லாம் இழுக்காதே...அதையெல்லாம் பேசி முடிவு பண்ணிக்கலாம்...ஒரு அலையன்சுல சிலது நமக்கு சாதகமா அமையும்..சிலதை நாமதான் சாதகமா ஆக்கிக்கனும்...கண்ணம்மா’’

அமைதியானாள் தாமரை....பெரியப்பா சொன்ன காரணங்கள் ஒரு புறம் என்றாலும்,புறம்தாள்ள முடியாத ரவிவர்மாவின் முகமும் ஒரு காரணமாயிற்று...ஒரு வழியாக தாய் மகளை சமாதானம் செய்தாயிற்று....இந்தப்பக்கம் திரும்பினார்....விஜயா,நந்தினியின் முகங்கள் இஞ்சி தின்ற குரங்குகள் போலிருந்தது...

‘’ விஜயா..உனக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லையே’’ என்றார்...
‘’எனக்கென்ன..ஆட்சேபனை வேண்டிக்கிடக்கு......அவளுக்கு மாலை பூத்துருச்சு....அது யாருக்காக காத்திருக்கப்போவுது...’’
‘’தட்ஸ் குட்...அப்பிடியே மெயிண்டைன் பண்ணு...சரசு....கால தாமதம் பண்ணாம,நான் முதல்ல அவாகிட்ட,நம்ம சம்மதத் தை சொல்லிடறேன்...மேற்கொண்டு ஆகவேண்டியதை நிதானமா பேசிக்கலாம்’’ என்றார்..

‘’சரிண்ணா’’ என்று மச்சினரிடம் தலையாட்டி விட்டு,மகளுடன் கீழறங்கினாள் சரசு...

 
Top