Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MALARE MOUNAMAA? - 11

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்: 11
சகாயம் தான் காரணம் என்று சொன்ன விஸ்வநாதனை புரியாமல் பார்த்தாள் சமீரா.
“சார்! அப்பாவுக்கும் அந்த சகாயத்திற்கும் என்ன சம்பந்தம்? என்னோட பேரன்ட்ஸ் அவங்களோட முடிவை இவ்வளவு கொடூரமா இருக்கும் என்று கனவுல கூட நினைச்சுப் பார்த்திருக்க மாட்டாங்க.. எத்தனைப் பேர் உயிர்!! அய்யோ!! அவங்க எல்லோருக்கும் என்ன என்ன கனவுகளோ!!” என்ற சமீராவை கண்களில் பெருகிய நீருடன் அணைத்துக்கொண்டார் விஸ்வநாதன்.
இந்த ஏழு நாட்களில் அரசியல் உலகத்தைப் பற்றி விஸ்வநாதன் அறிந்துக்கொண்டது மிக அதிகம். இப்ராஹீம் கைதானதை தான் முதலில் அறிந்துக்கொண்டார் விஸ்வநாதன்.
முதல் நாளே இப்ராஹீமைப் பார்க்க எவ்வளவோ முயன்றும் முடியாமல் போனது அவரால்.. காவலர்கள் சமீராவைப் பார்ப்பதற்கும் தடை விதித்தனர்.
பேகம் மற்றும் கமலாவின் நிலை என்ன என்றும் அவரால் அறிய முடியவில்லை..
அப்பொழுது அவரின் ஊடக அறிவு முதலில் இப்ராஹீமை எதற்கு கைது செய்தார்கள் என்று கண்டுபிடிக்க அறிவுறுத்த, பிரச்சினையின் ஆணிவேரை தேடி ஓடினார்.
அவரின் பத்திரிகை தேசிய அளவில் அப்பொழுதான் வளர தொடங்கி இருந்ததால், அதற்கு செய்தி சேகரிக்க ஓடினாரா! அல்லது சமீராவின் குடும்பத்திற்கு உதவி செய்ய தன் மனைவியைக் கூட தேடாமல் ஓடினாரா அது அவருக்கே வெளிச்சம்.. நிச்சயமாக பின்னது தான் காரணமாக இருந்திருக்கும். அந்த அளவிற்கு சமீராவை பிடித்திருந்தது அவருக்கு.
அப்படி ஓடி அவர் அறிந்துக்கொண்ட தகவல், இப்ராஹீமிற்கும் சகாயத்திற்கும் இடையே இருக்கும் பகை மற்றும் சகாயத்தின் அரசியல் ஆசை மட்டுமே தான் இத்தனை உயிர்களை பலி வாங்கியிருக்கிறது என்று.
இப்ராஹீம் கோவையின் மிக முக்கிய வீதியில் வாங்கியிருந்த சுமார் ஒரு ஏக்கர் நிலத்தின் மீது சகாயத்தின் பார்வை விழுந்தது தான் இவை எல்லாவற்றுக்கும் காரணம்.
மண். பொன் மற்றும் பெண் ஆசைகள் நிரம்ப பெற்றிருந்த சகாயத்திற்கு இந்த ஒரு ஏக்கர் நிலம் யானைப் பசிக்கு சோளப்பொறி போல தான் இருந்தாலும் அந்த நிலம் இருந்த இடம், இப்ராஹீமிடமிருந்து அந்த நிலத்தை வளைக்க சொன்னது.
தன் சேமிப்பு முழுவதையும் அந்த நிலத்தில் போட்டிருந்த இப்ராஹீம் அந்த நிலத்தை சகாயத்திற்கு தர மறுத்தார். சமீராவிற்காக சேர்த்த சொத்தான அந்த நிலத்தை, சகாயம் விலைக்கு கேட்டிருந்தால் கூட சிறிது யோசித்து முடிவெடுத்திருந்திருப்பார். ஆனால் சகாயமோ தன் அரசியல் அதிகாரத்தால் அபகரிக்கப் பார்த்ததால் இப்ராஹீம் அந்த நிலத்தை சகாயத்திற்கு தர அறவே மறுத்தார்.
இதெல்லாம் மனதில் வைத்திருந்த சகாயம் தான் அவரை குண்டுவெடிப்புக்கு காரணம் என்று சொல்லி கைது செய்யவைத்தான்.
அதுமட்டுமில்லாமல், தன் சொந்த தொகுதியில் நற்பெயரை(?) இழந்ததால் தேர்தலில் அங்கே போட்டியிட முடியாமல் இருந்த சகாயத்திற்கு கோவையில் இருக்கும் தொகுதியில் இடம் அளித்திருந்தது அவனின் கட்சி.
இந்த தேர்தலில் பரிதாப அலைகளை வீசியோ அல்லது பய அலைகளை வீசியோ வெற்றி பெறுவது உன் சாமர்த்தியம் என்றதுடன் அவன் கட்சி ஒதுங்கி கொண்டது.
சகாயம், கட்சி சொல்லியிருந்த இரண்டாவது அலைகளை வீசித்தான் இந்த தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற முடிவு எடுத்ததினால் தான் இந்த குண்டுவெடிப்பு. அதனால் தான் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் நடந்தேறியது இந்த துயர சம்பவம்.
இதில் இன்னும் என்ன கொடுமை என்றால் இப்ராஹீமின் மதத்தைக் கொண்டு அவர் உலகின் மிகப் பெரிய தீவிரவாத இயக்கத்தை சார்ந்தவர் என்ற தகவலை பொய்யாக புனைந்தது தான்..
அவரை சிறையில் அடைத்ததோடு நில்லாமல் அவரின் வீட்டிற்கு சீல் வைத்தும் அவரின் குடும்பத்தையும் சிதைத்தான்..
இப்ராஹீமின் வீட்டை அரசாங்கம் சீல் வைத்திருந்தாலும் அதன் சாவி என்னவோ சகாயத்திடம் தான் இருந்தது.. இங்கு அவன் தானே அரசாங்கம் அவன் வைத்தது தானே சட்டம்.

என்ன தான் இறைவனும் மற்றும் சாதாரண மக்களும் மதங்களை கருத்தில் கொள்ளாமல் இருந்தாலும், சகாயத்தைப் போன்ற சில அரசியல்வாதிகளால் வேற்று மதத்தை சார்ந்தவர்களிடமிருந்து ஒதுங்கிக் கொள்ள தானே பார்க்கிறார்கள் மக்கள்..
இறைவன் சகாயத்தைப் போன்ற அரசியல்வாதிகளை தண்டிப்பான் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் ஒதுங்குவது ஒன்றும் தவறில்லையே..
அப்படிதான் சமீராவின் வீட்டின் அருகில் இருப்பவர்களும் நடந்துக்கொண்டது.. இது சரியா, தவறா? என்ற விவாதத்திற்கு அப்பாற்பட்டது.

நடுத்தரவர்க்கத்தின் சாப கேடான இந்த பயத்தை வைத்து தான் சகாயத்தைப் போன்ற அரசியல்வாதிகள் அரசியலும், அரசாங்கமும் நடத்துகிறார்கள்.
இதையெல்லாம் சமீரா விஸ்வநாதன் மூலம் இப்ராஹீம் மற்றும் பேகத்தின் இறுதி சடங்குக்குப் பின் அறிந்துக்கொண்டது. ஆனால் அவள் அறிந்துக்கொள்ளாதது விஸ்வநாதனின் அன்றைய நிலை. இன்று அவர் மறைந்தப் பிறகு அவளால் அதைப் பற்றி அறிந்துக்கொள்ள முடியாமலே போனது.
சமீரா மற்றும் இப்ராஹீம் சிறையில் அடைப்பட்ட மூன்று நாட்களுக்குள்ளேயே சகாயத்தைப் பற்றி அறிந்துக்கொண்ட விஸ்வநாதனை சுற்றி வளைத்திருந்தனர் அவனின் ஆட்கள். அவரை சகாயத்திடம் அழைத்து(இழுத்து) சென்றனர்.
சகாயமோ அவனைப்பற்றி அறிந்த தகவலை வெளியே சொல்லக்கூடாது என்றும் மீறினால் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பை மிகப்பெரிய அளவில் அதாவது தமிழக அளவில் நடத்தப் போவதாக மிரட்டியதோடு நில்லாமல் அவரின் பத்திரிகை உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க போவதாகவும் இரக்கமில்லாமல் கூறினான்.
அவரைக் கொல்லப் போவதாக மிரட்டியிருந்தால் கூட கண்டிப்பாக விஸ்வநாதன் பயந்திருக்க மாட்டார். ஆனால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை நினைத்து அவர் மிகவும் பயந்தார்.
அவரின் மனைவி கமலாவை தேடும் போது பார்த்திருந்த கை மற்றும் கால்கள் வேறு வேறாகவும், சில உடல்களின் தலை மட்டும் தனியே இருந்ததையும், சில கைகளின் விரல்கள் மட்டும் அவரின் காலில் பட்டு அழுந்தியதும் விஸ்வநாதனின் கண் முன்னே தோன்றியதால் அவரின் உடல் முழுவதும் நடுங்கியது. அதனால் அவனைப் பற்றி யாரிடமும் சொல்லாமல் இருப்பதாக வாக்குறுதி அளித்தார் விஸ்வநாதன்.
அவரின் பத்திரிகை அப்பொழுதுதான் தேசிய அளவில் வளர தொடங்கியிருந்தது.. அதற்காக அவர் அவ்வளவு கடுமையாக உழைத்திருந்தார். அந்தப் பத்திரிக்கையின் உரிமத்தை ரத்து செய்யப் போவதாக சகாயம் சொன்னதும் சிறிது அதிர்ந்து தான் போனார். ஆனால் மனதில் சமீராவின் நிலை நினைவிற்கு வந்ததும் ஒரு சில நிபந்தனைகளுன் அதற்கும் ஒத்துக்கொண்டார்.
இப்ராஹீமையும் சமீராவையும் இந்த கேசில் இருந்து முழுவதுமாக விடுவிக்க வேண்டும் என்றும், அந்த தீவிரவாத இயக்கத்திற்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்று நிரூபிக்க வேண்டும் என்ற இரு நிபந்தனைகளுடன் சகாயத்தின் கட்டளைக்கு ஒத்துக்கொண்டார் விஸ்வநாதன்.
சகாயமும் சரியென்று மிக வேகமாக தலை ஆட்டி ஒத்துக்கொள்வதாக நடித்து பின் இப்ராஹீமின் உயிரை எடுத்திருந்தான். விசாரணையின் போது மாரடைப்பு வந்ததால் தான் அவர் இறந்தார் என்றும் கேசை மூடினான் சகாயம்.
அது மட்டுமில்லாமல் விஸ்வநாதனும் இப்ராஹீமிற்கு உடந்தையாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரின் பத்திரிக்கையின் உரிமத்தையும் ரத்து செய்ய வைத்திருந்தான். விஸ்வநாதனையும் வேறு எந்த ஒரு பத்திரிக்கையிலும் வேலையில் சேர முடியாமலும் செய்திருந்தான் அந்த சகாயம்.
இப்ராஹீம் இறந்ததும் இந்த வழக்கை திசை திருப்பி தேர்தலில் வெல்வதற்காகவே விக்கியை ‘அப்துல்’ என்ற பெயரில் சரணடைய செய்தது மற்றும் அவனை அங்கிருந்து தப்பிச் செல்ல வைத்தது என்று அனைத்துக்கும் மூலக்காரணமாக சகாயம் மட்டுமே இருந்தான்.
விஸ்வநாதனோ எதையும் நினைத்து மனதை குழப்பிக்கொள்ளாமல், சமீராவை வெளியே எடுத்து, பெற்றவர்கள் இருவருக்கும் இறுதி சடங்கு செய்ய வைத்து, அதே ஊரிலிருக்க மறுத்தவளை சமாதானப்படுத்தி, கல்லூரியில் தொடர்ந்து அவள் படிப்பதற்கும் ஏற்பாடு செய்திருந்தார்.
ஆனால் எவ்வளவு முயன்றும் அவரால் சமீராவை தன் கூடவே வந்து இருக்க வைக்க முடியவேயில்லை.. அதற்கு சமீராவின் ஒத்துழைப்பு இல்லாததால் அவரும் அவளை ஓரளவிற்கு வற்புறுத்தவில்லை.
 
இதுமட்டுமில்லாமல், அவளின் மதத்தைக்கொண்டு அவளை ஒதுக்குவதுக் கண்டு மிகவும் நொந்த சமீரா, அந்த மதத்தின் அடையாளத்தை துறந்தாள். தலையை பாய் கட் செய்துக்கொண்டு, எந்த ஒரு அணிகலனும் அணியாமல், உடையையும் பேன்ட், ஷர்ட் என்று தன்னை முழுவதுமாக மாற்றிக்கொண்ட சமீராவை தேற்ற விஸ்வநாதன் ரொம்பவே மெனக்கெட வேண்டியிருந்தது.
என்ன தான் மதத்தின் அடையாளத்தை அவள் துறந்தாலும், இறைவனையும், இறை நம்பிக்கையையும் துறக்காததால், அந்த அந்த வேளைக்கான தொழுகையை செய்ய அவள் மறந்ததேயில்லை இன்றளவும்.
சமீராவின் இதழியல் முதுநிலை படிப்பு முடிந்ததும் அவளை தனக்கு தெரிந்த பத்திரிக்கையான ‘டெய்லி நியூஸ்’ (ஒரு காலத்தில் அவரது பத்திரிக்கையாய் இருந்த) ல் சேர்த்து விட்டார்.
இப்பொழுது இருக்கும் அந்தப் பத்திரிகை ஆசிரியருக்கும் விஸ்வநாதனின் வாழ்க்கையில் நடந்தது தெரியுமாதலால் சமீராவை வேலைக்கு சேர்த்துக்கொண்டார்.
விஸ்வநாதனின் பத்திரிகையில் தான், அவள் வேலை செய்வதாக இன்றளவும் சமீரா நம்பி வருகிறாள்..
விஸ்வநாதன் அங்கு ஆசிரியாராக இல்லாவிட்டாலும் மறைமுகமாக நிறைய தகவல்களை அந்தப் பத்திரிக்கைக்கு தந்துக் கொண்டிருந்தார்.
மனதில் நிறைய குழப்பங்களுடன் தன்னுடைய பத்திரிக்கை வாழ்க்கையை தொடங்கிய சமீராவாலும் விஸ்வநாதனை சந்தேகிக்க முடியாமல் போனது.
சமீராவின் அதிரடியான கேள்விகளாலும் மற்றும் நடவடிக்கைகளாலும் சில பல எதிரிகளை சம்பாதித்து வைத்திருந்தாள் அவள். அதனால் விஸ்வநாதனின் வேண்டுகோளிற்கிணங்க அந்த ஆசிரியர் அவளை லோக்கல் நியூஸ் மட்டுமே கவர் செய்ய பணித்திருந்தார்.
இதையெல்லாம் அவளால் எளிதாக அறிந்துக்கொண்டிருக்க முடியும். ஆனால் அவளுக்கு ஏற்பட்டிருந்த மன நோயால் அவளுக்கு அது முடியாமலே போனது.
தனக்கு மன நோய் இருக்குமென்று இன்று வரை அவள் கண்டு கொண்டதேயில்லை. அவளுக்கும் அவளின் நோய்க்கும் சிகிச்சை அளிக்க சமர்த் ஒருவனால் மட்டுமே முடியும். சமர்த் இதையெல்லாம் எப்பொழுது செய்வான் என்பது இறைவன் மட்டுமே அறிவான்.
சமர்த்தைப் பார்த்த நாளிலேயே அவளைப்பெற்றவர்களைப் பார்க்கவே முடியாமல் போனதால், அவர்களுக்கு பிறகு சமர்த் தான் தன் வாழ்க்கையோ என்று நினைக்க ஆரம்பித்தாள்.
எதையுமே நேர்மறையாகவே சிந்திக்கும் திறன் கொண்ட சமீரா, அவனைப் பார்த்த அன்றே பெற்றவர்களை இழந்ததையும் நேர்மறையாகவே நினைக்க ஆரம்பித்தாள்.
பெற்றவர்களின் ஆசியால் தானோ என்னவோ, தான் சமர்த்தைப் பார்க்க நேரிட்டது என்று அடிக்கடி தோண ஆரம்பித்தது அவளுக்கு.
அதனாலேயே தான் தினமும் இரவு பெற்றவர்களுடனேயே மனதில் பேசிக்கொள்ளும் போது, தன் குடும்பத்தில் ஒருவனாகவே நினைத்து சமர்த்திடமும் பேசி வருகிறாள்.
தினமும் பேசும் இந்த பேச்சு தான் அடுத்த நாட்களில் அவள் வேலை செய்வதற்காண ஊக்க மருந்து. கிட்ட தட்ட ஏழு ஆண்டுகளாக இப்படி பேசி வருகிறாள் சமீரா. இப்படி தனியாக, இல்லாத ஒருவரிடம் இரவு உறக்கம் வரும் வரைக்கும் பேசிக்கொண்டிருப்பது ஒரு வித மனநோய் என்பதை கூடிய விரைவில் அறிந்துக்கொள்வாள் என்று நம்புவோம்.
சமீர் என்ற பெயரிலேயே இன்றும் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறாள். சமீர் என்ற பெயர் மனதில் பதிந்த அளவிற்கு கூட அவனின் உருவம் பதியவில்லை போலும்.
கோவை மாவட்ட ஆட்சியராக நாளிதழ்களில் சமர்த்தின் படத்தை அவளால் அடையாளம் காண முடியாமல் போனதற்கு இறைவனை தவிர வேறு எது காரணமாக இருந்திருக்க முடியும்.
அதை முன்பே அறிந்திருந்தால் சமீரா அந்த இடத்திற்கு செல்வதை அறவே தவிர்த்து இருப்பாள் என்று இறைவன் அறிந்திருந்ததால் தான் அப்படத்தை தெளிவாக வரவிடவில்லையோ என்னவோ. யாம் அறியேன் பராபரமே.
கூடிய விரைவில் அவளின் குடும்பத்தோடு அவளை இணைக்க இறைவன் திருவுள்ளம் கொண்டிருக்கும்போது எந்த சக்தியாலேயும் அதை மாற்ற முயுமா, என்ன.?
விஸ்வநாதனையும், தன்னைப் பெற்றவர்களையும் நினைத்து மனதில் பொங்கிய துக்கத்துடன் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்த சமீராவின் அருகே வந்து, “மீரா!” என்று விளித்தான் சமர்த்.
தலைய நிமிர்த்தி பார்த்த சமீராவிற்கு சமர்த் வந்தது மனதிற்கு ஆறுதலாக இருந்தாலும், ‘இவர் ஏன் வந்தார்?’ என்று அச்சமாகவும் இருந்தது.
சமீராவின் அச்சம் சமர்த்தை நினைத்து அல்ல, சகாயம் சமர்த்தையும் ஏதாவது செய்துவிடுவானோ என்று தான் மிகவும் பயந்தாள் அவள்.
“நீங்க என்ன செய்யறீங்க இங்க?” என்று கேட்டவளை அமைதியாகவேப் பார்த்தான்.
மௌனம் காட்ட இது நேரமல்ல என்று உணர கூட இல்லாமல் இருந்தவனின் தோளை தொட்டு தட்டிய கோவிந்த், “சமீர், அவா கேக்கறாளோன்னோ, பதில் சொல்லு..” என்றான்.
அப்பொழுதும் எதுவுமே பேசாமல் அவளையேப் பார்த்திருந்தான். அவளின் சோக மயமான முகம் அந்த அளவிற்கு அவனை தாக்கியிருந்தது.
அதனால் கோவிந்த்தே பேச ஆரம்பித்தான்.
சமர்த் அழைத்ததைப் போன்றே அவனும், “மீரா! போஸ்ட்மார்ட்டம் எல்லாம் முடிஞ்சதா?” என்று கேட்டான்.
சமீரா அவனைப் பார்த்து ‘இல்லை’ என்பதாக தலை அசைத்தாள்.
“இன்னுமா முடியலை?” என்று மௌனத்தை கலைத்தான் சமர்த்.
கோவிந்தும் சமீராவும் மருத்துவமனையில் இருந்த கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தனர். அது இரவு பதினொரு மணியை காட்டிக்கொண்டிருந்தது. அவள் மருத்துமனைக்கு வந்து நான்குமணி நேரம் ஆகியிருந்தன.
“முடிஞ்சிருக்கும்.. டாக்டர்ஸ் இன்னும் வெளில வரல..” என்றாள்.
அப்பொழுது சில காவலர்கள் இரு உடல்களை எடுத்துக்கொண்டு அங்கு வந்து புலம்பிக்கொண்டிருந்தனர். “நம்ம நிலமைய பாருய்யா ஏகாம்பரம், இந்த அர்த்த ராத்திரில பொண்டாட்டியோடு கொஞ்சி பேசிட்டு இருக்காம, இந்த பாடிங்கள கட்டி மேய்ச்சுட்டு இருக்கோம்.. நம்ம தலையெழுத்து..”
“நம்ம பொழப்பு அப்படி..” என்றான் அந்த ஏகாம்பரமாகப்பட்டவன்.
விஸ்வநாதனின் உடலுடன் வெளியே வந்த மருத்துவர் மேலும் இரு உடல்களைப் பார்த்து நொந்தவாறு, “என்னோட டியூட்டிடைம் ஓவர் சார், வேற டாக்டர்ஸ் இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திருவாங்க.” என்று அந்த காவலர்களிடம் சொல்லிவிட்டு விஸ்வநாதன் உடல் கொண்டு வந்த காவலர்களின் தன்னுடைய அறிக்கையையும், விஸ்வநாதனின் உடலையும் ஒப்படைத்து விட்டு அங்கிருந்து அகன்றார்.
சமீரா மருத்துவர் வரும்போதே அவருடனேயே சென்றாள். விஸ்வநாதனின் உடலை எடுத்துச்செல்ல காவலரிடம் அனுமதி வாங்குவதற்காக காத்திருந்த சமீராவை சமர்த்தின் ஓங்கி ஒலித்த குரல் திரும்பி பார்க்கவைத்தது.
“மீ..ர்.ரா.! இங்க பாரு! இவன் உங்க கூட வந்தவன் தானே!” என்று கத்தினான் அங்கிருந்த ஒரு உடலைக் காட்டி.
திரும்பிப் பார்த்த சமீரா, “லோகுண்ணா!!” என்று அலறிவாறே லோகுவின் அருகில் வந்தாள்.
அருகில் இருந்த மற்றொரு உடலைப் பார்த்த சமர்த், விஸ்வநாதனுக்கு உதவிய சேரனின் உடல் என்று அடையாளம் கண்டுக்கொண்டான். அவனின் பெயர் சமர்த்திற்கு தெரியவில்லை.. மரத்தின் மீது இருந்து பார்த்திருக்கும்போது விஸ்வநாதனுக்கு அவன் உதவியது தெரிந்ததால் சமர்த்திற்கு அவனை அடையாளம் நன்கு தெரிந்தது..
“ஏகாம்பரம்! நல்ல வேளை தப்பிச்சோம்ய்யா! இல்லை இதுங்க சொந்தக்காரவுங்களை நாம எங்க போய் தேடறது..” என்று அந்த உடல்களைப் பார்த்து கூறினார் ஒரு காவலர்.
அதோடு, “இந்தாம்மா..!, எங்கயும் போய்டாத இந்த பாடிங்களோட போஸ்ட்மார்ட்டம் முடியறவரைக்கும் இங்கயே இரு..” என்றும் கட்டளையிட்டார்.
 
Top