Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MALARE MOUNAMAA? - 18

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்: 18

மருத்துவமனையிலிருந்து சற்றே நலம் பெற்று வீடு திரும்பியிருந்தான் சமர்த்..

ஊன்றுகோலின் உதவியுடன் தான் திரும்பியிருந்தான்.. மருத்துவர் அதை இன்னும் ஒரு மாதம் உபயோகப்படுத்த சொல்லியிருந்தார்.

"சமீர் பார்த்து வா ராஜா!! உடம்பு இப்போ சித்த தேவலையா?" என்று கேட்டது கண்ணன்.

சமீராவின் அப்பா!! இன்னும் தன் பெண்ணை மனதால் தேடிக்கொண்டிருக்கும் அப்பா!!

"மாமா நீங்கெல்லாம் இருக்கறச்ச நேக்கு என்ன மாமா? இப்போ இதைப் பிடிச்சுண்டு நடக்க முடியறது.."

"நான் பயந்துட்டேன் சமீர்!! இப்போ உன்னை பார்த்தோன்ன தான் மனசு கொஞ்சம் தெளிவா இருக்கு.."

"அச்சோ மாமா!! உங்களை படுத்திட்டேனா?"

"அதெல்லாம் இல்லடா கொழந்த!"

"ஐயோ சித்தப்பா!! கல்யாணம் பண்ணி வச்சா அவனே கொழந்த தருவான் போல இருக்கான்! அவனை போய் கொழந்தன்னு கொஞ்சிண்டு இருக்கேளே? உங்களுக்கே அடுக்குமா?" என்று போலியாக சலித்தான் கோவிந்த்.

சமர்த்தைப் பெற்றவர்கள் ஊரிலேயே தான் இருந்தனர்.. அவ்வப்போது அலைபேசியில் அழைத்து அவனின் உடல் நிலையை கேட்டறிந்தனர்.

தந்தை சாரதியின் உடல் நிலை பொருட்டு அவராலும், தாய் லக்ஷ்மியாலும் கோவை வர இயலாமல் போனதை சமர்த் நன்றாகவே அறிவான்.

நெருங்கிய உறவுகள் அருகில் இருப்பதுவும் ஒரு வரம். அதிலும் சண்டை சச்சரவு இல்லாமல் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் உறவுகள் கிடைக்கப் பெற்றவன்(ள்) அதிர்ஷ்ட்டசாலி.

அப்படிப்பட்ட அதிர்ஷ்ட்டகாரன் தான் இந்த சமர்த்!!

அவனுடைய நெருங்கிய சொந்தங்களிடையே நிறைய கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது நிகழ்ந்தாலும், அதை பெரிது படுத்தாமல் இருக்கும் உயரிய குணமும் அவர்களிடையே இருந்ததால், சொந்தங்களிடையே சண்டை சச்சரவில்லாமல், கூடவே ஒரு நெருக்கமும் அதிகரித்து இருந்தது.

கண்ணன் தன் மனைவி பவித்ராவின் தெவசத்தை முடித்துவிட்டு அன்று காலையில் தான் கோவைக்கு வந்திருந்தார்.

"மன்னி!! ஏதாச்சும் வாங்கணுமா?" என்றார் கண்ணன்.

"இல்லை மாப்பிள்ளை!! அதான் என் பொண்ணு இருக்காளோன்னோ கேட்ட எல்லாத்தையும் வாங்கி கொடுத்துட்டா! சமத்து பொண்ணு!" என்று சமீராவின் புகழ் பாடினாள் சுமித்ரா.

"டீ சுமி! சின்ன வயசுல சமீர் வொன் (உன்) பின்னாடி சுத்திண்டு இருக்கிற மாதிரி, இப்போ நீ நம்ம மீரா பின்னாடியே சுத்திண்டு இருக்க!" என்று சொன்ன கிருஷ்ணன்,

"கண்ணன் மீரா வரட்டும் பாருங்கோ! இவ எப்படி அவ பின்னாடியே சுத்திண்டே இருக்கான்னு!!" என்று கண்ணனிடமும் கூறினார்.

கண்ணனுக்கு 'மீரா' என்ற பெயர் மனதில் மிகுந்த வலியை கொடுத்தது. சில நிமிடங்கள் அவரின் மனதினுள் அவரும், பவியும் குழந்தை மீராவுடன் வாழ்ந்த வாழ்க்கை வந்து சென்றது.

'எங்க இருந்தாலும் கொழந்தை நன்னா இருக்கணும்!' என்று மனதிற்குள்ளேயே பிரார்த்தித்துக்கொண்டார்.

கிருஷ்ணன் சொன்னது போல் சுமித்ரா, சமீராவின் பின்னால் தான் சுற்றிக்கொண்டிருந்தார். அதற்கு காரணம் நம்ம கோவிந்தை தவிர்த்து வேறு யாராக இருக்க கூடும்.

அன்று 'முடிஞ்சா தடுத்து பாருங்க!' என்று சொன்ன சமீராவை, கிளம்பவிடாமல் சுமித்ராவின் உதவியுடன் தான் தடுத்திருந்தான். அதை சமீரா அறியாமலும் பார்த்துக்கொண்டான்.

அவர்களுக்கிடையே காருக்குள் நடந்த கார சார சண்டையினை உடனடியாகவே தன் அன்னை சுமித்ராவிடம் அலைபேசியில் தெரிவித்து இருந்தான். அதனால் அன்னையை சீக்கிரமே மருத்துவமனைக்கு கிளம்பி வரவும் பணித்திருந்தான்.

சமீரா கோவிந்துடன் சண்டையிட்டு கிளம்ப யத்தனிக்கும் போது சரியாக அந்த அறைக்குள் நுழைந்தார் சுமித்ரா.

"எங்க கிளம்பிட்ட மீரா?" என்றபடியே அவளின் கைகளைப் பற்றிக்கொண்டார் சுமித்ரா.

"அது வந்து. ம்.மா!" என்று தடுமாறினாள் சமீரா.

கோவிந்துடன் சண்டையிட முடிந்த அவளுக்கு, சுமித்ராவிடம் வாய் வார்த்தையாக கூட 'கிளம்புகிறேன்' என்று சொல்ல முடியவில்லை. அவளின் குரலில் அத்தனை தடுமாற்றம்.

சமர்த்தும், கோவிந்தும் அந்த தடுமாற்றத்தை நன்றாகவே உணர்ந்துக்கொண்டனர்.. இருவரும் பார்வையினாலே அதைப்பற்றி பேசிக்கொண்டனர்.

சுமித்ராவிடம் அவள் உரிமையுடன் பழகுவதைக் கண்டே கோவிந்த் அவரை இங்கே உடனடியாக வரவழைத்தான்.. இல்லையென்றால் அவளை தேடி அவன் எங்கெல்லாம் அலைய வேண்டுமோ என்ற கவலையே அதற்கு காரணம்.

"அதான் நான் வந்துட்டேனே இனிமே நீ எங்கயும் போகவேண்டாம்!" என்று அவளின் கையைப் பிடித்து அருகிலிருந்த இருக்கையில் அமர வைத்தார் சுமித்ரா.

சமீராவிற்கு அவரின் உரிமை கலந்த பாசம் பிடித்தாலும், இந்த குடும்பத்தில் தன்னால் எந்தவித பிரச்சினையும் வரக்கூடாதென்ற தெளிவில் இருந்தாள்.

"இல்லம்மா! எனக்கு இன்னிக்கு ஒரு இன்டெர்வியூ இருக்கும்மா.. அதுக்கு நான் பெங்களூர் போகணும். கலெக்டர் சார் கிட்ட சொல்லிட்டு கிளம்ப தான் வந்தேன். இந்த ஊருலேயே நான் இருக்க போறதில்லை, அதனால என்னைப் பத்தி கவலைப்படாம ஆசீர்வதிச்சு அனுப்பி வைங்கம்மா!!" என்று இருக்கையிலிருந்து எழுந்தாள் சமீரா..

"ஆசீர்வாதம் தானே அதுக்கென்ன பண்ணிட்டா போச்சு, அப்பாவும் வரட்டும் சேர்ந்தே ஆசீர்வாதம் பண்றோம். ஆனா இன்னும் ஒரு வாரத்துக்கு நீ எங்கயும் போப்ப்டாது.. என் கூட தான் நீ இருந்தாகணும்.. சமர்த்தும் இங்க வந்து படுத்துனுட்டான்! இதோ இந்த தடியன்" என்று கோவிந்தை சுட்டிக்காட்டி

"எனக்கு எந்த ஒத்தாசையும் செய்யமாட்டான், சரியான தடியன். அவனை வைஞ்சே(திட்டியே) எனக்கு நெஞ்சே வலி எடுத்திடும்ன்னா பார்த்துக்கோ!! அவ்வளவு முரடன்!!.. ஒண்ணொத்துக்கும் அவனண்ட கெஞ்சிண்டு நிக்கணும்!!" என்று பெருமூச்சு விட்டு சிறிது நிறுத்தியவர், சற்று லேசாக திரும்பி ஓரக்கண்ணால் கோவிந்தைப் பார்த்தார் சுமித்ரா.

கோவிந்த் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்றிருந்தான். 'இந்த அம்மா நல்லவேளை நடிக்க போகல! இல்லைன்னா ஐம்பது ரூபாய்க்கு நடிங்கன்னு சொன்னா ஐம்பதாயிரத்துக்கு நடிச்சு ஓவர் ஆக்ட் கொடுத்திருப்பா!' என்று மனதினுள் அவரை தாளித்துக் கொண்டிருந்தான்.

சுமித்ராவிற்கு அவனைப் பார்த்து சிரிப்பு வர தான் செய்தது. இருந்தாலும் சமீராவின் முன்னால் சிரிக்காமல் இருக்க முடிவு செய்ததால், முகத்தை அறை வாயிலை நோக்கி திருப்பினார். அங்கே கோவிந்தின் அப்பா கிருஷ்ணன் வந்துக்கொண்டிருந்தார். உடனே மனதிற்குள் சிரித்தபடியே சமீராவிடம் திரும்பினார்.

"இதோ வராரே உன் அப்பா, இவரை எதுல சேர்க்கறதுன்னே இன்னி வரைக்கும் நேக்கு புரிஞ்சதில்லை! பாவம் உங்க அப்பாக்கு அவ்ளோ விவரம் பத்தாது, யாரு எதை சொன்னாலும் நம்பிடுவார்.. அவ்வளவு வெகுளி! நானா இருக்கக்கண்டு இவரோட வாழ்க்கைய ஓட்டிண்டு இருக்கேன்.” என்றார் சுமித்ரா.
அங்கே வந்த கிருஷ்ணனுக்கு சுமித்ரா சொல்வதைக்கேட்டு ஒன்றுமே புரியவில்லை. 'என்னது பேங்க்ல ஒர்க் பண்ணி, டாப் போஸ்ட்ல இருக்கும் போது ரிட்டயர்டு ஆன தனக்கு விவரமில்லையா? நான் என்ன பேக்கா?' என்று திரும்பி சுமித்ராவை முறைக்க முயன்றார் கிருஷ்ணன்.

அதற்குள் சுமித்ரா சமீராவை அவரின் முன் சற்று தள்ளியதால் கிருஷ்ணனால் அவரது முறைப்பை தொடர முடியவில்லை. அவர் சமீராவைப் பார்த்து சிரிக்க முயன்றார்.

முறைப்பையும், சிரிப்பையும் ஒரு சேர காண்பிக்க முயற்சி செய்ததால், அவரின் முகம் அவரை சுத்த விவரமில்லாதவர் போன்றே காண்பித்தது.

அவரைப் பார்த்து தோன்றிய சிரிப்பை வாயில் கை வைத்து மறைத்துக்கொண்டார் சுமித்ரா. சமர்த்தும், கோவிந்தும் கண்களாலேயே சிரித்ததால் அவர்களின் கண்ணில் நீர் வழிய ஆரம்பித்திருந்தது.

அதையெல்லாம் பார்த்த கிருஷ்ணன் தலையில் கையை வைத்துக்கொண்டார்.

தலை முடியை சுருட்டிக்கொண்டே 'ந்.நி.நிலா!' என்று நடிகர் விக்ரம் போல சொல்லாதது தான் பாக்கி.

அதை மட்டும் அவர் செய்திருந்தால் சமீரா அவரை ஒரு மனநிலை பாதித்தவர் என்றே முடிவுக்கு வந்திருப்பாள்.

கிருஷ்ணனைப் பார்த்த சுமித்ராவிற்கு பாவமாக தோன்றியதோ என்னமோ மீண்டும் அவரே பேச்சை ஆரம்பித்தார்.

“இந்த கோவிந்தாவை ஒண்ணொத்துக்கும் கெஞ்சிண்டு நிக்கணும்ன்னா, இவருக்கு ஒண்ணொத்தையும் சொல்லிக்கொடுக்கணும். இவாளோட கத்தி கத்தியே என் தொண்டை தண்ணியே வத்திடுத்து. இந்த சமீர் அங்க இருக்கறவரைக்கும் என்னை ராணி மாதிரி பார்த்துண்டான்.. அவனும் இங்க வந்து இப்படி அடிபட்டு கிடக்கறச்ச நேக்கு தல கால் புரியல..

எப்படி இங்க பொழுத ஓட்டப் போறேனோன்னு நான் கவலைப்பட்டேன். நல்லவேளை நீ இருந்தியோ நான் பொழச்சேன்!! இப்படி இவா கூட என்னை தனியா போராட விட்டுட்டு கிளம்பிடாதடா ராஜாத்தி!! நோக்கு புண்ணியமா போகும்! ஒரு வாரம் என் கூட இருந்துடேன் மீரா!! என்று சொன்னவர், சில நிமிடங்கள் யோசித்துவிட்டு,

"ஆமா நீ அந்த இன்டெர்வியூ அடுத்தவாரம்ன்னு தான சொன்ன? இப்போ என்ன இன்னிக்கே இருக்குன்னு சொல்ற?" என்று சமீராவிடம் கேட்டார் சுமித்ரா.

காலையில் சமையலறையில் அவருடன் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தவள், பேச்சு வாக்கில் அடுத்த வாரம் இருக்கும் இன்டெர்வியூ பத்தியும் சொல்லியிருந்தாள். அதை அவள் மறந்தே போயிருந்தாள்.

அவள் பழைய டெரர் சமீராவாக இருந்திருந்தால் மறதி அவளை அண்டியிருக்காது. இப்பொழுது சமர்த்தின் உறவுகளை பார்த்ததும் மனதில் தோன்றிய தனிமை உணர்வு அவளை தன்னிலை இழக்க வைத்தது.

அதனால் தான் அவள் கோவிந்திடம் அதிகப்படியான கோபத்துடன் நடந்துக்கொண்டது.. என்ன ஒன்று அந்த உணர்வை இன்னும் சமீரா புரிந்துக்கொள்ளவில்லை.

"சொல்லும்மா மீரா! அடுத்த வாரம் தானே சொன்னே?"

"அது அடுத்தவாரம் தான் மா, பட் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கும்மா!"

"அப்ப சரி மீரா, நோக்கு அங்க வேலை இருக்கும்போது உன்னை இங்கயே நிக்க வைக்கறது தப்பு." என்ற சுமித்ராவைப் பார்த்து சற்று அதிர்ந்து தான் போனான் சமர்த்.
 
அவனை ஒரு பொருட்டாகவே கொள்ளாமல், "இவாளாலெல்லாம் வச்சுண்டு எப்படி தான் சமர்த்தை நல்லபடியா ஆத்துக்கு கூட்டிண்டு போகப்போறேனோ? அந்த பெருமாள் தான் நேக்கு வழி விடணும்.. நீ ஒத்தாசைக்கு இருப்பன்னு கொஞ்சம் தைரியமா இருந்தேன்.." என்றபடியே பெருமூச்சுடன்,

"நோக்கு நல்லா தெரிஞ்சவா யாரானும் இருந்தா கூட்டிண்டு வந்து விடறியா மீரா? நேக்கும் ஒத்தாசைக்கு ஆள் இருக்கான்னு சித்த தெம்பா இருக்கும் பாரு அதான் கேட்டேன்.”

அவளுக்கு தெரிந்தவர் ஆயிரம் பேர் இருந்தாலும், சமர்த்தின் உறவுகளுக்கு தானே உதவுவதை தான் விரும்பினாள் சமீரா.

அதனால், "எனக்கு தெரிஞ்சவுங்க எல்லாம் என்னை மாதிரியே பத்திரிக்கை துறைல இருக்கிறவங்க தான். அவங்க வருவது கொஞ்சம் கஷ்டம் மா!" என்றாள் சமீரா.

அவளின் போக்கிலேயே விட்டு பிடிக்க எண்ணிய சுமித்ரா, "நீ சொல்றது கரக்ட் தான் மீரா! இவன் கலெக்டர் தானே, அவன் ஆபீஸ்லேர்ந்தே
யாராச்சும் கூட்டிண்டு வான்னு சமீரை சொல்ல சொல்றேன். நீ கிளம்பிக்கோடிம்மா! நேரம் கிடைக்கறச்ச காஞ்சீபுரம் ஆத்துக்கு வா!" என்று தன் பேச்சை முடித்துக்கொண்டார் சுமித்ரா.

சமீராவிற்கு தான் இருப்புக்கொள்ளவில்லை. இன்னும் காவல்துறையிலிருந்து விசாரணைக்கென்று ஒருவரும் வரவில்லை..

கண்டிப்பாக அந்த விக்கியால் சமர்த்திற்கு பிரச்சினை தான் என்று உறுதியாக நம்பினாள்.. அவள் அருகே இருந்தால் சமர்த்திற்கு அதிக கவனம் கொடுத்து கண்காணிக்க முடியுமென்றும் அவளுக்கு தோன்றிற்று.

ஆனாலும் அவர்களுடன் தங்குவதற்கும் தயங்கினாள். அதுவும் கோவிந்தை அந்த பேச்சு பேசிவிட்டு அவனுடனே தங்குவதென்பது அவளுக்கு அசிங்கமாக இருந்தது.

அவள் யோசித்துக்கொண்டிருப்பதைப் பார்த்த சமர்த்,

"மீரா டோன்ட் ஒர்ரி!! போலீஸ் என்கொய்ரி சீக்கிரமே நடக்கும்.. நானும் இனிமே கேர்புல்லா இருக்கேன்.. எனக்கு இதுதானே முதல் அநுபவம். நானும் கொஞ்சம் அதிகாரமா நடந்துக்காம விட்டுட்டேன்.

இதெல்லாம் எனக்கு ஒரு லெசன்.. கண்டிப்பா இனிமே இந்த மாவட்டத்துக்கு நல்ல ஆட்சியரா என்னை நீ பார்க்கலாம்.. அந்த விக்கிக்கும், சகாயத்திற்கும் இனி கஷ்ட காலம் தான். பட் இதுக்கெல்லாம் நீ என் பக்க..." என்று ஏதோ ஆரம்பித்தவன்,

சமீராவின் கூர் பார்வையில் 'டேய் சமர்த்தா லவ் சொல்ல உனக்கு நேரம் காலமே இல்லையாடா? இப்படி தான் உறவுகளை வைத்துக்கொண்டு அவளிடம் உளறி கொட்டுவாயா?' என்று தன்னை தானே நொடியில் திட்டிக்கொண்டவன், 'நீ என் பக்கத்துலேயே இருக்கணும்!' என்று சொல்லவந்ததையும் மாற்றினான்.

"பட் நீ என் பக்கம் இருக்கிற நியாயத்தையும் புரிஞ்சுண்டு, என் மாமிக்கு கொஞ்சம் ஹெல்ப் செய்யணும்.”

"டேய் சமீர், இவளோட ஹெல்ப் ஒண்ணும் நமக்கு தேவையில்லை. கிளம்ப சொல்லுடா! அம்மாவும் நீயும் இவளுக்கு கொடுக்கிற பில்ட்அப் இருக்கே!! ஐய்யையோ முடில சமீர்!!" என்று சமர்த்திடம் பேசிய கோவிந்த் திரும்பி சமீராவிடம்,

"ஹே!! இங்க பாரு!! நீ இங்க இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை.. போ போய்டு. எங்க கண்ணு முன்னாடியே வந்துராத!!" என்றபடியே அவளின் கைகளைப் பற்றி வெளியே தள்ள முயற்சித்தான்.

அவனின் கைகளை வேகமாக தட்டிவிட்டான் சமர்த்.. "கோவிந்த் உன்னோட பிஹேவியர் சரியில்லாம போயிண்ட்ருக்கு!! மாமி இவன் என்னோட கொஞ்சம் பெரியவனா போய்ட்டான்.. இல்லன்னா நான் கை நீட்டியிருப்பேன்..

அவனை மொதல்ல காஞ்சீபுரம் அனுப்புங்கோ! என்னை யாரும் பார்த்துக்கவேண்டாம்.. ஆபீஸ் ஸ்டாஃப் வந்து இருப்பா! முடிஞ்சா நீங்களும் கிளம்புங்கோ." என்று எடுத்ததெரிஞ்சு பேசினான் சமர்த்..

"நன்னா இருக்குடா சமீர்! அவன் நடந்துண்டதுக்கு என்னை போன்னு சொல்லுவியா? கோவிந்தா மீரா கிட்ட மன்னிப்பு கேளுடா!! அதென்னாடா நோக்கு அவ்ளோ கோபம் வரது? பொம்மனாட்டிக் கிட்ட இப்படி தான் நடந்துப்பியா?"

"ம்மா ப்ளீஸ்! சாரி சொல்லணும் அவ்ளோ தானே, சாரி மீரா! பட் வி டோன்ட் வாண்ட் யுவர் ஹெல்ப்!! சோ ப்ளீஸ் கிளம்பு!" என்ற கோவிந்திற்கு எந்தவித பதிலேதும் தராமல்,

"ம்மா! நான் உங்களோட ஒரு வாரம் இருக்கேன்.. அதுக்குமேல என்னை நீங்க வற்புறுத்தக் கூடாது.. என்னை வச்சு உங்களுக்குள்ள பிரச்சினை வருவதையும் நான் விரும்பல.. ப்ளீஸ் எல்லாத்துக்கும் நான் சாரி கேட்டுக்கிறேன்.." என்று கோவிந்திடம் கை கூப்பினாள் சமீரா.

"அச்சோ மீரா!! நீ என் தங்கைம்மா! இதென்ன இப்படி பண்ணிண்டு? விடு இனிமே நானும் உன்னை மரியாதை குறைவா பேசவோ, நடத்தவோ மாட்டேன்.. ரியலி வெரி சாரி மீரா!" என்று கோவிந்தும் மனதார மன்னிப்பு கேட்டாலும் மனதினுள்,

'ஒரு வாரம் என்ன ஒரு வாரம் இனிமே எங்களை விட்டு செல்ல உன்னை விடவே போவதில்லை!! பேசாம அடுத்த முகூர்த்தத்திலேயே ஒரு நாள அம்மாவை பார்க்க சொல்லிறலாம்..' என்று பேசிக்கொண்டான்.

மீராவிடம் காதல் சொல்லாமல் கல்யாணம் செய்ய, சமர்த் ஒரு போதும் சம்மதிக்க மாட்டான் என்று கோவிந்திற்கு புரிந்ததால், அவளைப் பற்றிய உண்மைகளை கண்டறிய உறுதி பூண்டு விட்டே சற்று அமைதியானான் கோவிந்த்..

கோவிந்த் கண்டறிந்த உண்மைகளால் இத்தனை வருடங்களாக பெண்ணை பிரிந்த தந்தை தன் மகளை கொண்டாடி மகிழ்வார்..

அந்த நாளும் இறைவனின் கிருபையால் விரைவிலேயே வரும்..
 
Top