Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MALARE MOUNAMAA? - 21

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்: 21
கோவிந்தின் கைகளில் என்ன இருக்கிறது என்று கூட பார்க்காமல், 'சமீரா!' என்று அழைத்தவனையே அதிர்ச்சியுடன் பார்த்திருந்தாள்.

அவளின் அதிர்ச்சி நிறைந்த முகத்தையே ஒரு நொடி பார்த்தவன், "சோ உன் வரட்டுப்பிடிவாத கோபங்களுக்கு இது தான் ரீசன் இல்லையா?" என்று கேட்டான் கோவிந்த்.
அதற்கும் பதில் அளிக்காமலே நின்றிருந்தாள்.

"இங்க பாரு மீரா இப்போக்கூட உன் மனசுல இருக்கிறதை சொல்லலைன்னா, இந்த விஷயத்துல என்னால உதவவே முடியாது! உன்னோட இந்த வரட்டுப்பிடிவாதம் சமர்த்தை நிலைகுலைய செஞ்சுடும்." என்று நிறுத்தி அவளின் பதிலுக்காக ஒரு நொடி காத்திருந்தான்.

சமீராவிடம் அசைவே இல்லையென்றானதும், "சமர்த்தை நிலைகுலைய நான் ஒரு போதும் விடவே மாட்டேன். நீ இப்போ பேசித்தான் ஆகணும்!" என்றவாறே அவளின் கையைப் பற்றி வேகமாக வெளியே இழுத்துச் சென்றான் கோவிந்த்.

எடிட்டரை சந்தித்த அதே பூங்காவிற்குள் நுழைந்த பின் தான் சமீராவின் கையை விட்டான் கோவிந்த்.

"இப்போ நீ பேசப் போறியா, இல்லையா?"

சமீரா அவளின் கைகளை கூப்பியவாறே "ப்ளீஸ்!!" என்றவள் தலையை 'மாட்டேன்!' என்பதாகவும் ஆட்டினாள்.

"மீரா உனக்கு புரியுதா, இல்லையா? உன்னை பத்தி எங்க குடும்பத்துக்கு தெரிஞ்சா சமர்த்தை கூட ஒதுக்கி வச்சிருவாங்க! ப்ளீஸ் மீரா ஸ்பிக் அவுட்!!" என்று இறைஞ்சினான் கோவிந்த்.

"உங்களுக்கு தெரிந்ததை உங்களுடனேயே வைத்துக்கொள்ளுங்கள். தயவு செய்து யாரிடமும் என்னைப் பற்றி சொல்லவேண்டாம். நாளை காலை வரை என்னைப் பொறுத்துக்கொள்ளுங்கள்! அதன் பிறகு உங்கள் யார் கண்களிலேயும் படவே மாட்டேன். உங்கள் குடும்பத்தின் கோபமோ, சாபமோ எனக்கு வேண்டாம். அவர்களின் பாசப் பிணைப்பை பார்த்தபடியே கண்டிப்பாக நான் வெளியேறிவிடுவேன்!!" என்றவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.

"அப்போ சமர்த்தின் நிலையை நினைச்சு பார்த்தியா மீரா?"

"அவரை மறந்தால் தானே நினைப்பதற்கு!!" என்று தன்னையும் அறியாமல் சொன்னவள், "வேண்டாம் எனக்கு யாரும் வேண்டாம்.! கண்டிப்பா நான் இல்லாம இருந்தா தான் அவரோட வாழ்க்கை நல்லா இருக்கும்!"

"லூசு மாதிரி பேசாத! நீ எங்க இருந்தாலும் சமர்த் உன்னை தேடி வருவான்! அப்போ என்ன செய்வ?"

"நான் இருந்தாத்தானே?" என்ற சமீரா அவளின் இயல்புக்கு திரும்பியிருந்தாள்.

"இங்க பாருங்க மிஸ்டர் எதையாவது சொல்லி என்னை இங்கே இருக்க வைக்க முயற்சித்தால் நான் என்னையே அழிச்சுக்குவேன்!" என்றவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

கன்னத்தில் ஒரு கையை வைத்து தயங்கியவாறே, "பை மிஸ்டர்!" என்று லேசாக முறுவலித்தாள் சமீரா.

"ஏய்! இங்கப்பாரு, இந்த சீன் எல்லாம் விடாம நான் சொல்ற பேச்சை கேளு மீரா!"

"இல்லை மிஸ்டர் இதுக்கும் மேல என்னை தொந்தரவு செய்தீங்கன்னா, அம்மா கிட்ட கூட சொல்லாம இன்னிக்கே கிளம்பிடுவேன்."

"ஐயோ மீரா! நீ பெரிய.!" என்று கோபமாக ஆரம்பித்த கோவிந்த் சில நொடிகள் தன்னை ஆசுவாச படுத்திக்கொண்டு, "மீரா வேண்டாம் இது நாம கோபப்படற நேரம் இல்ல. கொஞ்சம் அமைதியா யோசிச்சு பாரு! இன்னும் எவ்வளவு நாள் தான் ஓடிட்டே இருக்க போற? உன் மௌனம் கலைஞ்சா தான் இந்த நிலைக்கு என்னால சொல்யூஷன் சொல்ல முடியும்.!"

"எனக்கு உங்க மேல எந்த கோபமும் இல்லை கோவிந்த், பட் என்னை இப்படியே விட்டுடுங்க!! என்னால உங்க குடும்பத்துல பிரிவினையோ, பிரச்சினையோ வருவதை நான் விரும்பலை. பல நாட்களா பட்டினி கிடந்த ஒருத்தனுக்கு விருந்து சாப்பாடு கிடைச்சா எப்படி சந்தோஷம் அடைவானோ அந்த நிலைல தான் நான் இருக்கேன். எல்லாத்துக்கும் நன்றி!! இதை தவிர என்னிடம் வேறேதையும் எதிர்பார்க்காதீங்க." என்ற சமீரா தொடர்ந்து,

"நான் இப்போ வீட்டுக்கு போறேன் கோவிந்த்! நாளைக்கு கண்டிப்பா இந்த ஊரை விட்டே போய்விடுவேன். ப்ளீஸ் டோன்ட் டிஸ்டர்ப் மீ அகைன்!!" என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தாள்.

சமீராவின் கோரிக்கைகளை நிறைவேற்ற எண்ணாமல், அவளை எப்படி தன் குடும்பத்திற்குள் சேர்ப்பது என்ற யோசனையில் சில நிமிடங்கள் கடந்தது..

அவன் கையிலிருந்த அந்த சிறிய பார்ஸல், 'இதோ நான் இருக்கிறேன்!' என்பதைப்போல அவனின் கண்களில் பட்டது.

சிறிது தூரம் சென்றிருந்த சமீராவிடம் அந்த பார்ஸலை சேர்ப்பிக்க எண்ணி அவளிடம் ஓடினான் கோவிந்த்.

"மீரா நில்லு! இந்தா இது உன்னோடது தானாம். எடிட்டர் சார் உன் கிட்ட கொடுக்க சொன்னார்.!"

அது என்ன என்று பார்த்தவளின் முகம் மிகவும் சோகமாக மாறியது.

"மீரா பிடி இனிமே இது உன் கிட்ட தான் இருக்கணுமாம்! விஸ்வநாதன் சாரோட உத்தரவுன்னு சொல்ல சொல்லி எடிட்டர் கொடுத்தார்."

"இல்லை எனக்கு இது வேண்டாம்.! நீங்களே தூக்கி எறிந்துவிட்டு போங்க!"

"உன்னை எதுல சேர்க்கறதுன்னே தெரில மீரா! உன் அப்பா லெட்டர் இருக்குன்னு எடிட்டர் சொன்னார், அதை கூட உன்னால படிக்க முடியாதா? பெத்தவரோட கடைசி ஆசை கூட அதில எழுதி இருக்கலாம்! தயவு செய்து வாங்கி படிச்சு பாரு!"

அவனுக்கு பதில் அளிக்காமலே அந்த பார்ஸலை ஒரு தடவை பார்த்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக நடக்க ஆரம்பித்தாள்.

"பெருமாளே! இவளோட மௌனம் கலையவே கலையாதோ?" என்று வாய்விட்டு புலம்பியபடியே கோவிந்தும் நடக்க ஆரம்பித்தான்.

கையிலிருந்த பார்ஸல் அவனுக்கு சற்று கனக்க தொடங்கியது!

சமீரா உள்ளே நுழைந்த சில நிமிடங்களில் கோவிந்தும் வீட்டிற்குள் நுழைந்தான்.

"கோவிந்தா! கைல என்னது?" என்று சுமித்ரா கேட்டார்.

"ம்மா! ப்ளீஸ் அப்பறமா பேசறேனே, நேக்கு கொஞ்சம் யோசிக்கணும்." என்றவன் சமர்த்தின் அறைக்குள் நுழைந்தான்.

"இந்த ஆத்துல என்ன நடக்கறதுன்னே நேக்கு புரியல! உன்னை கூட்டிண்டு போய் அவன் அப்படி என்னத்த தான் கேட்டானோ! உன் முகமும் சரியில்லை, அவனோட முகமும் பார்க்க நன்னாவே இல்லை! பெருமாள் தான் எல்லாத்துக்கும் நல்ல வழி விடணும்.!" என்று இறைவனிடம் வேண்டினார்.

அவரிடம் பதில் பேசாமல் லேசாக முறுவலித்தவாறே அவரின் அருகில் சென்று கையைப் பிடித்துக்கொண்டாள் சமீரா.

"நீ வா!! நாம உள்ளே போய் வேலையை பார்க்கலாம். இவன் எப்ப வெளில வந்து என் கேள்விக்கு பதில சொல்றது! " என்ற சுமித்ரா, சமீராவின் கையை விடாமலே சமையலறைக்குள் சென்றார்.

சில நிமிடங்கள் கழித்து சமர்த்தின் "அம்மா!!" என்ற அலறல் சத்தத்தில் சுமித்ராவும், சமீராவும் சமர்த்தின் அறையின் முன் நின்றிருந்தனர்.

கண்ணனும், கிருஷ்ணனும் காலை நடைப்பயிற்சிக்காக வெளியே சென்றிருந்தனர்.

"கோவிந்தா! என்ன ஆச்சுடா? சமீர் கால் ரொம்ப வலிக்கிறதா, ஹாஸ்பிடல் போலாமா? அப்பாக்கு போனை போட்டு வரச்சொல்லு கோவிந்தா!" என்று சொன்னபடியே சமர்த்தின் அறை கதவை திறந்துக்கொண்டு உள்ளே சென்றார்.

சமீராவும் மிகுந்த கவலையுடன் அறையினுள் சென்றாள்.

"அதெல்லாம் வேணாம்மா நான் தான் சமர்த்தை அடிச்சேன்! அதான் இந்த அலறல்." என்று அலட்சியமாக சொன்னான் கோவிந்த்.

"உடம்பு முடியாதவன கை நீட்டுவியா கோவிந்தா? கொழந்தேளா இருக்கறச்ச கூட, இப்படி அடிதடி, சண்டைன்னு போட்டுண்டதே இல்லையேடா!! தெரியாத ஊருல ஏதோ வேலை இருக்குன்னு காலைல கிளம்பின, சித்த நாழி கழிச்சு வந்து இவளையும் தர தரன்னு இழுத்துண்டு போன, சரி என்ன, எதுன்னு நீ வந்தோன்னே பேசிக்கலாம்ன்னு விட்டேன். நீ உள்ளே வந்ததுமே நான் கேட்டதுக்கு எந்த பதிலுமே சொல்லாம இருந்த அப்பவும், சரி உனக்கு என்ன டென்ஷனோ கொஞ்சநாழி கழிச்சு உன்னண்ட பேசிக்கலாம்ன்னு நினைச்சுண்டு இருந்தா, இப்போ இவனை போட்டு அடிச்சுருக்க!! என்னதான்டா ஆச்சு நோக்கு? எங்க இருந்து வந்தது இப்படி கை நீட்டும் பழக்கம்?" என்று பொரிந்தார் சுமித்ரா.

"ம்மா! நான் கை நீட்டி அடிச்சது மட்டும் தான் வோன்(உன்) கண்ணுக்கு தெரியறதா? இதோ இவ அவனை மனசால அடிச்சுட்டு போகப்போறாளே!! அது நோக்கு படவேயில்லையா?"

"என்னடா சொல்ற? ஏதாவது புரியற மாதிரி சொல்லுடா!!"

"என்னத்த சொல்ல சொல்ற! இவன் அவ கூட பேச தவியா தவிச்சுண்டு இருக்கான், அதை கண்டும் காணாத மாதிரி அவ இருக்கா!! இதுல நம்மாத்துல இவா ரெண்டு பேரோட கல்யாணத்துக்கு சம்மதம் வேற சொல்லியாயிடுத்து. இன்னும் அவனோட காதலை மீரா கிட்ட சொல்லமுடியலையேன்னு இப்போ தான் புலம்பிண்டு இருந்தான்.. நான் தான் இந்த மீரா எல்லாம் நம்ம ஆத்துக்கு செட் ஆக மாட்டா!! அவளை மறந்துட்டு வேற வேலையை பாருன்னு கிளிப்பிள்ளைக்கு சொல்றமாதிரி சொன்னா, இல்ல நேக்கு அவ தான் வேணும்ன்னு திரும்ப திரும்ப அவன் சொன்னோன்னே, நேக்கு கோபம் தலைக்கு ஏறிடுத்து.. அதான் அவனை அடிச்சேன்."

"என்ன பேச்சு பேசிண்டு இருக்க? செட் அது இதுன்னு என்ன பேச்சு!! சமர்த் அவனோட வாழ்க்கையை அவனே டிசைட் பண்ணிப்பான். ஓரளவிற்கு மேல நாம தலையிடறது நல்லதில்லை!! மீராவும், சமர்த்தும் பேசி முடிவு பண்ணிப்பா!! நீ கொஞ்சம் வாயை மூடிண்டு போய் உன் வேலையை கவனி." என்றார் சுமித்ரா.
 
"சமீ!" என்று ஆரம்பித்த கோவிந்த், சிறிது நிறுத்தி "மீராவை நான் வெளில அழைச்சுண்டு போனதே சமர்த் கூட பேச சொல்லித்தான்!! நான் நாளைக்கே கிளம்பிடுவேன். உங்க யார் முகத்திலயும் முழிக்க மாட்டேன். இதுக்கும் மேல என்னை கட்டாயப் படுத்தினா என்னை நானே அழிச்சுக்குவேன்னு அவ சொல்றா!! இந்த கடங்காரனுக்கு புரியவேயில்ல தகுதி இல்லாதவா கிட்ட எல்லாம் அன்பு வைக்க கூடாதுன்னு!!

கோவிந்த் சொன்னதை கேட்டதும் அதிர்ந்து போன சுமித்ராவும், சமர்த்தும் மீராவை அதே அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

"மீரா இப்படி தான் பேசறதா சொல்லு? இப்போ என்ன உனக்கு சமர்த்தை பிடிக்கல அதானே!! இதை நீயே அவன் கிட்ட சொல்லிட்டு கிளம்பி இருக்கலாமே! அம்மா நான் சொல்றேன் இப்போ நீ கேட்டு தான் ஆகணும். இப்போவே சமர்த் கூட பேசு!! அதன் பின்ன உன் மனதிற்கு எது சரின்னு தோணறதோ அப்படியே முடிவெடு!!" என்று சொன்ன சுமித்ரா,

"வாடா கோவிந்தா அவா ரெண்டு பேரும் பேசி முடிவுக்கு வரட்டும். இதுக்கும் மேல அவா விஷயத்துல நீ தலையிடறது நேக்கு சுத்தமா பிடிக்கலை." என்று கோவிந்திடம் பேசியபடியே அவனின் கைகளை பிடித்து வெளிய வந்த சுமித்ரா, அறை கதவை சாத்திவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றார்.

அதுவரை அங்கே என்ன நடக்கிறது என்று புரியாமலே சமர்த் பார்த்திருந்தான். சற்று முன்னர், கோவிந்திடம் தான் பேசிக்கொண்டதை நினைத்துக்கொண்டான்.

கோவிந்த் கையில் ஏதோ பார்ஸலுடன் உள்ளே அவனின் அறைக்குள் வந்தவன், சிறிது நேரம் அங்குமிங்கும் நடந்துகொடுத்தான் தீடீர் என்று,

"சமர்த்தா!! கொஞ்சம் அம்மான்னு வலிக்கிற மாதிரி கத்தேன்.!! என்று சொன்ன கோவிந்தை பார்த்து திகைத்தான் சமர்த்.

"நோக்கு என்ன பைத்தியமா கோவிந்த்!!"

"இப்போ நீ மீராவோட பேசணுமா, வேண்டாமா?"

"கண்டிப்பா பேசணும், அதுக்கும் நான் கத்தறதுக்கும் என்ன சம்பந்தம்?"

"இங்க அவளை உன் ரூமுக்கு வர வைக்க தான் கத்தச்சொல்றேன்!!"

"நான் கத்தினா அவ மட்டுமில்லடா ஆத்துல இருக்கிற எல்லாரும் தான் வருவா!! அப்போ எப்படி டா மீரா கூட தனியா பேச முடியும்?"

"அதெல்லாம் நான் பார்த்துகிறேன்!! இப்போ நீ கத்தப் போறியா, இல்லையா?"

"அதுடா நேக்கு திடீர்ன்னு வலி வந்தமாதிரி கத்த வரல!!"

"சுத்தம்!!" என்ற கோவிந்த், சமர்த்தின் கன்னத்தில் ஓங்கி அடித்தான்.

சமர்த் எதிர்பாரா நேரத்தில் அடிவாங்கியதும் ஏற்பட்ட வலியால்,"அம்மா!" என்று அலறியிருந்தான்.

அந்த அலறலை கேட்டு வந்தவர்களை பார்த்த சமர்த் தனக்குள் சிரித்துக்கொண்டான்.

ஆனால் அதன் பிறகு மீராவின் வார்த்தைகளை கேட்டு மனதொடிந்து போனான்.

சுமித்ராவும், கோவிந்தும் வெளியேறியப் பிறகு, கண்களில் மிகுந்த வலியுடன் மீராவைப் பார்த்தான் சமர்த்.

மீராவிற்கு சமர்த்தின் வலி மிகுந்த பார்வையை தாங்கிக்கொள்ள சக்தி இல்லாமல் போனதால் தலையை குனிந்துக்கொண்டாள்.
அங்கு மௌனம் மட்டுமே குடிக்கொண்டிருந்தது.

சமீராவிற்கு சமர்த்திடம் பேச தைரியம் வரவில்லை. அவளை குறித்த ரகசியங்களை சமர்த்திடம் தெரிவிக்க பயம்!! அதிலும் குறிப்பாக அவளின் மதத்தை சொன்னதும் தன்னை ஒதுக்கிவிடுவானோ என்ற பயமே மேலோங்கியிருந்தது.

ஜாதி, மத, இன, மொழி பேதங்களுக்கு அப்பாற்பட்டது தான் இந்த காதல் என்று பாவம் இந்த சமீராவிற்கு புரியவில்லையோ!!

அவளுக்கு புரிந்திருந்தாலும் குடும்ப உறவுகளில் ஏதேனும் கோப தாபங்கள், பிரிவினைகள் நிகழ்ந்துவிடுமோ என்ற பயமும் சேர்ந்தே இருந்ததோ!!

அவளுக்கு சமர்த் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அவனின் குடும்பமும் முக்கியம். இரண்டில் ஏதேனும் ஒன்று என்று முடிவெடுக்க சொன்னால், இரண்டுமே வேண்டாம் என்று சொல்லும் ரகம் தான் இந்த மீரா.

மீராவின் மௌனம் சமர்த்திற்கு கொடுமையாக இருந்தது. அவளாக பேசுவாளோ என்ற எதிர்பார்ப்பும் நிறைய இருந்ததால் சமர்த்தும் பேச முயற்சிக்கவில்லை.

இன்று எப்படியும் தனியாக மீராவிடம் பேசி தன் காதலை அவளிடம் தெரிவிக்க தான் இருந்தான். ஆனால் இப்பொழுது கிடைத்திருக்கும் தனிமையில் இருக்கும் மீராவிடம் சொல்லுவதற்கு தான் அவனுக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை பாவம்!!

அவளிடம் பேசவும் பிடிக்கவில்லை! பேசினால் எங்கு 'தன்னையே அழித்துக்கொள்வேன்!' என்று மறுபடியும் சொல்லிவிடுவாளோ என்ற பயமும் அவனை ஒரு வார்த்தைக் கூட பேசவிடவில்லை.

மௌனம்! மௌனம்! மௌனம் மட்டுமே அங்கிருந்தது..

இப்படியே முப்பது நிமிடங்கள் கடந்திருந்தன.

சமர்த் மீராவைப் பார்க்க, அவளோ தரையை பார்த்திருந்தாள்!!

மேலும் சில நிமிடங்கள் பொறுத்திருந்த சமர்த், தனக்கு அடிப்பட்டதையும் மறந்து, ஊன்றுகோலையும் மறந்து அறையைவிட்டு வெளியே செல்வதற்காக எழுந்து நிற்க முயற்சித்தான்.

அடுத்த நொடி அப்படியே சரிந்து கீழே விழுந்தான்.

அவன் விழுந்த சத்தம் கேட்ட பின்னரே சமீரா நிமிர்ந்து பார்த்தாள்.

"ஐயோ சமீர்!" என்று அலறியபடியே அவனருகே சென்று அவனை தூக்க முயற்சித்தாள்.

"ப்ளீஸ் மீரா கோவிந்தை வர சொல்லிட்டு நீ போ!" என்ற சமர்த்தின் முகத்தில் கீழே விழுந்ததினால் ஏற்பட்ட வலியை விட மீராவின் மௌனத்தினால் விழைந்த வலியே அதிகமிருந்தது.

"நீங்க என் கையை பிடிச்சு எழுந்துக்க ட்ரை பண்ணுங்க!" என்ற மீராவிற்கு "முடியாது!!" என்று தலையை ஆட்டினான் சமர்த்.

ஒரு நொடி அவனை மெளனமாக பார்த்தவள்,

எதையோ முடிவு செய்தவளாக சமர்த்தை கொஞ்சம் தூக்கி பிடித்து கட்டிலில் தலையை சாய்த்தபடியே கீழேயே அமரவைத்தாள். பின் அவன் கால்களையும் நன்றாக நீட்டி அதனடியில் இரண்டு தலையணைகளையும் எடுத்து வைத்தாள். அவளும் அவனருகே சென்று அமர்ந்து அவனின் கைகளை பற்றிக்கொண்டாள்.

இதை அனைத்தையும் மௌனமாகவே பார்த்திருந்தான். அவள் அவனருகே அமர்ந்ததையும், அவனின் கைகளை பற்றிக்கொண்டதையும் நினைத்து மனதிற்குள் சிறு பூஞ்சாரல் வீசத்தான் செய்தது.
 
Top