Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MALARE MOUNAMAA? - FINAL

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்: 27
கோதையை கோவிந்திற்கு தாரம் வார்த்துக்கொடுக்க சமர்த்தின் தாய் லட்சமியிடம் தான் கேட்டிருந்தார் காயத்ரி. அதில் மிகுந்த மன நிறைவு பெற்றனர் சமர்த்தின் பெற்றவர்கள்.

காயத்ரி கணவனை இழந்தவர் ஆதலால் அவரால் பெண்ணை தாரம் வார்த்துக் கொடுக்க முடியவில்லை. அவரின் கணவருடைய சொந்தங்கள் கோதையை தாரம் வார்த்துக்கொடுக்க முன் வரத்தான் செய்தனர். ஆனால் காயத்ரிக்கு சமர்த்தின் பெற்றவர்கள் மனைக்கு இருப்பதில் தான் விருப்பம்.

பெற்ற ஒரே மகனது திருமணமும் பதிவு திருமணம். அதில் சிறிது மனமுடைந்து இருந்த லட்சுமி மற்றும் சாரதிக்கு, கோதையை கோவிந்திற்கு தாரம் வார்த்துக்கொடுக்க காயத்ரி கேட்டதுமே மனம் மகிழ்ந்தது.

அவர்களின் முறைப்படி இனிதே நடந்த அந்த திருமண நிகழ்ச்சிகளை மனமுவந்து செய்தனர் சமர்த்தின் பெற்றவர்கள்.

ஒரு விதத்தில் எல்லோருக்குமே அவர்களின் மனமகிழ்ச்சி நிறைவை கொடுத்தது.

அந்த நிறைவினுடனே நடந்த திருமண வரவேற்பும் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருந்தது.

சமர்த் கோவைக்கே சமீராவை அழைத்து சென்றான். சில நாட்கள் அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி கண்ணன் காஞ்சீபுரத்திலேயே இருந்துக்கொண்டார்.

அவர்களின் காதல் வாழ்வு அழகிய புது கவிதையாக மலர்ந்திருந்தது. அந்த இன்பமயமான இரவுகளின் மயக்கத்தில் இருந்த சமர்த்திற்கு, சமீரா தனியே பேசிக்கொண்டிருந்தது தெரியவந்தது.

ஓரிரு நாட்கள் அதனை கண்டுக்கொள்ளாமல் இருந்தவன் சமீராவின் புலம்பல்களில் பயம் கொண்டான். மறுநாளே மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றான். அவரின் பரிந்துரைக்கேற்ப அவனின் அன்பை முழுமையாக அவளிடம் காட்டிக்கொண்டிருக்கிறான்.

இதுவரை மருந்துகள் எதையும் பரிந்துரைக்கவில்லை மருத்துவர்கள். சமர்த்தின் காதலே அவளின் மனநிலையை மீட்டுக்கொடுக்குமென்பதால், அவனின் எல்லையில்லா காதலை திகட்ட திகட்ட சமீராவிற்கு கொடுத்துக்கொண்டிருக்கிறான்.

சமீராவும் மௌனமாகவே அவளின் அதீத காதலை சமர்த்திற்கு கொடுத்தாள்!!

இப்பொழுதெல்லாம் இந்த மலரின் மௌனத்தை மிகவும் ரசிக்க தொடங்கியிருந்தான் சமர்த்!!

அவர்களின் திருமணம் முடிந்ததுமே அவள் தேசிய ஊடகத்தில் பணிக்கு சேர்ந்திருந்தாள். பணிக்கென்று தமிழ்நாடு முழுக்க பயணிக்க வேண்டியிருந்தது.

சமர்த்தின் உறுதுணையுடன் இன்றளவும் அவள் சமீராவாகவே இருந்தாள். தொழுகையை செய்ய தவறியதேயில்லை.

மாமியார் லட்சுமி கோவைக்கு வருகை தரும்போது மட்டும் அவள் நெற்றியில் குங்குமம் இருக்கும். அவரின் மனமகிழ்ச்சிக்காக என்று இல்லை!! சமர்த்தின் எல்லையில்லா காதலில் சிலவற்றை விட்டுக்கொடுக்க அவளாகவே முன்வந்ததே அதன் காரணம்.

சமீரா அவர்களின் காதல் வாழ்வில் மகிழ்ந்தாலும், தாய் பேகம் மற்றும் தந்தை இப்ராஹீமின் நினைவு அவ்வப்பொழுது எழுந்துக்கொண்டு தான் இருந்தது. கூடவே விஸ்வநாதனும் நினைவிற்கு வரத்தான் செய்தார்.

அவர்கள் அனைவரின் மரணத்திற்கு காரணமான சகாயம் மற்றும் விக்கியை எதுவுமே செய்ய முயலவில்லை என்ற குற்ற உணர்ச்சி அவளைப் போட்டு பாடாய் படுத்தியது.

மறுபடியும் அவளின் கூட்டிற்குள் செல்ல முயன்றவளை சமர்த்தின் காதல் மாற்றியது.

சமர்த் மீராவின் மனநிலையை புரிந்துக்கொண்டு, சகாயம் மற்றும் விக்கியின் மீதான இருக்கும் குற்றங்களுக்கு ஆதாரம் திரட்ட முயன்றான்.

கோவையில் சமீராவே அவளின் பத்திரிகை நண்பர்கள் மூலம் குண்டு வெடிப்பு வழக்குக்கு ஆதாரங்களை தேட ஆரம்பித்தாள்.

தூத்துக்குடியின் புதிய மாவட்ட ஆட்சியரின் உதவியுடன் சமர்த் விக்கிக்கு எதிரான ஆதாரங்களை தேட ஆரம்பித்தான். தூத்துக்குடி ஆட்சியர் சமர்த்தின் நண்பனாக இருந்ததால் ஆதாரங்கள் இலகுவாகவே கிடைத்தன.

கோவை மாவட்ட ஆட்சியராக சமர்த் பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவுற்ற போது தான் அவனின் திருமணம் நடந்திருந்தது.

அவர்கள் திருமணம் நடந்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில் அவர்களின் கையில், விக்கி மற்றும் சகாயத்திற்கு எதிரான ஆதாரங்கள் அனைத்தும் இருந்தது.

கிடைத்த அனைத்து ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் விக்கி மற்றும் சகாயத்திற்கு எதிராக புகார் அளித்தாள். அந்த புகார் கடிதத்தை ஊடங்களில் தெரிவிக்கவும் அவள் மறக்கவில்லை.

காவல் துறையில் இருக்கும் சில நேர்மையற்ற அதிகாரிகளின் நடவடிக்கையால், மக்களிடம் அந்த துறையின் மீது இருக்கும் நம்பிக்கை குறைந்து போனது வருத்தத்திற்கு உரிய விஷயமே!!

ஆனால், பல நல்ல அதிகாரிகள் அந்த துறையில் இருப்பதால் தான் நாமும் மிக பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதையும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது என்பது தான் உண்மை.

சமர்த்திற்கு இந்த புகார் குறித்த தகவல்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தால், அவர்களுக்கு சீக்கிரமாக தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் தான் சமீராவிடம் அதை வெளியிட வற்புறுத்தியிருந்தான்.

சமீராவும் அதனை ஏற்றுக்கொண்டு, அப்படியே செய்தும் இருந்தாள்.
 
வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே தமிழ்நாடே மிகுந்த பரபரப்பானது. ஆளும் கட்சியின் தொலைக்காட்சியில் வெளியான விக்கி என்ற விநாயகம் எம்.எல்.ஏ வின் பேட்டியை எல்லா ஊடகங்களும் வெளியிட்டது.

சகாயத்தின் நேர் காணலையும் ஒளிப்பரப்பி, மக்களை பரபரப்பாகவே வைத்திருந்தது ஊடகங்கள்.

அதைப்பார்த்தபடி இருந்த சமீராவின் முகத்தில் எரிச்சலுடன் கலந்த கோபம்!!

நல்லப்பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் இருந்தாள் சமீரா. ஆனால் நடந்ததென்னவோ வேறாக இருந்தது.

ஊடகங்களும் ஒரு வாரத்திற்கு மேல் ஆளும் கட்சியை கேள்வி மேல் கேள்வி கேட்டு, விவாதங்கள் பல நடத்தின. மக்களும் ஆளும் கட்சிக்கு எதிராக விமர்சனம் செய்ய தொடங்கிய நேரத்தில் தான், ஊடகங்கள் அடுத்த பரபரப்பு செய்தியை வெளியிட்டது.

அது, இந்திய அளவில் இருக்கும் நடிகை ஒருவரின் மரணம். அந்த மரணம் இயற்கையா, செயற்கையா? என்ற விவாதங்களில் மக்கள் தொலைய ஆரம்பித்த நேரத்தில் அடுத்த பரபரப்பு செய்தி ஊடகங்களுக்கு கிடைத்தது.

பிரபல கிரிக்கெட் வீரரின் கட்டாய ஓய்வு என்ற அந்த செய்தியை தான் ஒட்டு மொத்த இந்தியாவும் பேசிக்கொண்டிருந்தது.

இந்த செய்திகளின் விளைவால் விக்கியையும், சகாயத்தையும் மக்கள் சற்று மறந்து தான் போனார்கள்.

மக்கள் அடுத்த அடுத்த பரபரப்பு செய்திகளில் கவனத்தை செலுத்திக்கொண்டிருக்கும்போது தான் விக்கியும், சகாயமும் முன் ஜாமீன் எடுத்து வைத்தனர்.

அரசியல், சினிமா, கிரிக்கெட் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது தான் போலும். இதில் வரும் முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள்ளவே மக்களும் விரும்புகிறார்கள்.

அரசியல் என்பது சாக்கடை அல்ல, மக்களுக்கு சேவை செய்ய ஒரு நல்ல வழி என்பதை புரிந்துக்கொண்ட படித்த மேன்மக்கள் அரசியலுக்கு வந்தால் மட்டுமே நாடு செழிக்கும். மக்களும் அரசியலை போற்றுவர்.
அதுவரை, விக்கி மற்றும் சகாயம் போன்று இருக்கும் அரசியல்வாதிகள் இல்லையில்லை அரசியல்வியாதிகள் செய்யும் குற்றங்களும் குறைய போவதில்லை. செய்த குற்றங்களுக்கு கிடைக்க இருக்கும் தண்டனையிலிருந்தும் அவர்கள் தப்பித்துக் கொண்டுதானிருப்பார்கள்.
காவல்துறையின் அதி தீவிர நடவடிக்கை இருந்தால் மட்டுமே விக்கி மற்றும் சகாயத்திற்கு தண்டனை கிடைக்கும்.

சமர்த் மற்றும் சமீரா அதற்காக தான் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதுவரை சமர்த் குடும்பத்திற்கு மட்டுமில்லாது பொதுமக்களுக்கும் எந்தவித ஆபத்தும் விக்கி மற்றும் சகாயத்தினால் ஏற்படக் கூடாது என்று எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்தித்துக்கொண்டே அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்று நாமும் காத்திருப்போம்.

காவல்நிலையத்தில் புகார் அளித்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில் சமீரா கருவுற்றாள்.

சமர்த்தும், சமீராவும் குடும்பத்தின் புது வரவை மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர்.

சுமித்ரா தன் கணவர் கிருஷ்ணனுடன், கருவுற்றிருக்கும் தங்கை பவித்ராவின் மகளை சீராட்ட காஞ்சீயிலிருந்து கோவை வந்தார்.
இன்னமும் அவள் சமீராவாகவே இருப்பதால் காஞ்சீக்கு அழைத்து செல்ல விரும்பவில்லை அந்த தம்பதியினர்.
அக்கம் பக்கம் இருப்பவர்களின் வம்பான பேச்சுக்கள் மீராவின் கருவை பாதிக்குமோ என்று பயந்ததன் விளைவு தான் அவளை காஞ்சீபுரம் அழைத்து செல்ல விழையாதது.
கோவிந்த்தும் தன் காதல் மனைவி கோதையுடன் தங்கையை சீராட்ட விடுப்பு எடுத்து வந்திருந்தது சமர்த்திற்கும் சமீராவிற்கும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.
கண்ணன் தன் மனைவி பவித்ராவே தங்களின் மகளுக்கு வந்து பிறப்பாள் என்று நினைத்து அகமகிழ்ந்தார்.

கண்ணனின் தங்கை காயத்ரியும் தன் பவி மன்னியை குழந்தையாகப் பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார். பெண் குழந்தையே பிறக்கவேண்டும் என்ற பிரார்த்தனையுடன்.

சமர்த்தின் தாய் லட்சுமிக்கு மீராவின் மேல் வருத்தம் இருந்தாலும் தங்கள் குடும்ப வாரிசை இன்முகமாகவே எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார். சமர்த்தின் தந்தை சாரதிக்கும் மிகுந்த மகிழ்ச்சியே.

கோவிந்தின் அக்கா நப்பின்னை சமீராவை அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தாள்.

"ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே!" என்று கண்ணன் சத்தமாக பெருமாளை சேவித்துக்கொண்டிருந்தது சமீராவின் காதுகளில் விழத்தான் செய்தது.

அவருக்கு தன் பெண் கருவுற்றிருந்தது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் சத்தமாக மேற்கண்ட ஸ்லோகத்தை சேவித்துக் கொண்டிருந்தார்.

சமீரா இன்னமும் மாறவில்லை தான். அவள் மீராவாக மாறுவாளா, இல்லையா? என்ற எதிர்பார்ப்புடன் இருக்கும் மற்ற உறவுகளின் மத்தியில், மாறாவிட்டால் தான் என்ன? என்ற கேள்வியுடன், அவளை அவளாகவே அவளுக்காக மட்டுமே நேசிக்கும் சமர்த்தின் காதல் தான் சமீராவை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

சமீரா மீராவாக மாற வேண்டும் என்று யாரும் அங்கே நிர்பந்திக்கவேயில்லை. அவள் மாறுவாளா என்ற எதிர்ப்பார்ப்பு மட்டுமே!

அந்த எதிர்பார்ப்பு கூட சமர்த்திடம் இல்லை. மெளனமாக இருந்து தன்னிடம் வந்து சேர்ந்த அந்த மலரை கொண்டாடி மகிழ்ந்தான் அவன்.

சமீரா மீராவாக மாறுவாளா? அவளின் மாற்றம் தேவையா? அது அவசியமா?

பதில்கள் காலத்தின் கையில்!!

அந்த காலனே விக்கி மற்றும் சகாயத்திற்கு தக்க தண்டனைக் கொடுத்து அது போன்றிருக்கும் தீய குணம் படைத்த அரசியல்வாதிகளின் பிடியில் மக்கள் சிக்கிக்கொள்ளாமல் காப்பானாக!
 
ஒரு வழியாக கதையை முடித்து விட்டேன் தோழமைகளே!!!
கதையுடன் பயணித்த அனைத்து வாசக தோழமைகளுக்கும் மிக்க நன்றி!!!
நன்றி என்ற சிறு வார்த்தையை தவிர எனக்கு வேறு என்ன கூறுவது என்று தெரியவில்லை. உங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு கதையை படித்து அதற்கு கருத்துக்களையும் , விருப்பங்களையும் பகிர்ந்துக் கொண்டதற்கு எத்தனை முறை நன்றி கூறினாலும் போதாது! போதாது!!

நன்றி தோழமைகளே!!!!!!
 
மிகவும் அருமையான பதிவு,
சத்யா ஸ்ரீராம் டியர்
 
Last edited:
Top