Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Markazhi Poove..! - 2

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
பூ 2:

அந்த அதிகாலை வேளை அனைவருக்கும் ரம்யமாய் விடிந்திருந்தது. ஆனால் விஷ்வ துளசிக்கோ...ஏன்தான் விடிந்ததோ என்று இருந்தது. முந்தைய நாள் இரவு அவள் செய்த அட்டூழியங்கள் அவள் நினைவடுக்கில் இருந்து கரைந்து போயிருந்தது.

உடல் சோர்வைக் காட்ட, தலையோ பாறாங்கல்லாய் கனத்தது.எதுவும் புரியாமல் தலையை கைகளால் தாங்கியபடி அமர்ந்திருந்தாள். மெதுவாக எழுந்து குளித்து முடித்து வெளியே வந்தாள்.

அறையிலிருந்து லேசாக எட்டிப் பார்க்க, ரத்னவேல் தாத்தா ஹாலில் குறுக்கும் நெருக்குமாக நடந்து கொண்டிருப்பது கண்ணில் பட்டது. அவரை அவஸ்தையுடன் பார்த்தபடி வள்ளியம்மை நிற்க, நீலாவதியோ சமையலைறையில் இருந்தார்.

“என்னாச்சு...? பெருசு காலையிலேயே கண்ணும் கருத்துமா நடந்துகிட்டு இருக்கு...இந்த வள்ளி முகமும் சரியில்லையே...?” என்று யோசித்தபடியே கீழே சென்றாள்.

அங்கு டைனிங் டேபிளில் அருண் சாப்பிட்டுக் கொண்டிருக்க, வித்யா பரிமாறிக் கொண்டிருந்தார். சமையல் வாசனை, துளசியின் நாக்கின் சுவை நரம்புகளைத் தூண்டி விட,

“எனக்கே எனக்கா...! இந்த டேபிளில் இருப்பதெல்லாம் எனக்கே எனக்கா...?” என்றபடி வந்து அமர்ந்தாள்.வித்யா அவளை முறைத்தது எல்லாம் அவள் கண்ணில் படவேயில்லை.

“அடிப்பாவி...! ஒண்ணுமே தெரியாத மாதிரி எப்படி வந்து உட்கார்ந்திருக்கா. அங்க வெடிகுண்டு எப்ப வெடிக்கலாம்ன்னு நேரம் காலம் பார்த்துட்டு இருக்கு...இவ என்னடான்னா இப்படி ஒரு என்ட்ரி குடுக்குறா...?” என்று மனதில் நினைத்த அருண், வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“சீக்கிரம் டிபனை வைங்கம்மா..!” என்று அவள் பரபரக்க, அவரோ அவளை முறைத்துக் கொண்டே நின்றார். அப்போது தான் வித்யாவின் முகத்தைப் பார்த்தாள் விஷ்வ துளசி.

“ஏன் காலையிலேயே எல்லாரும் முகத்தை இப்படி வச்சிருக்கிங்க...? இந்த அருண் ஏதும் பண்ணிட்டானா...? டேய் அருண் என்னடா பண்ணின..?” என்றாள் விடாமல்.

“அடிப்பாவி..!” என்று வாயைப் பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான் அருண்.

“இந்த குடும்பத்துக்குன்னு ஒரு கவுரவம், மரியாதை எல்லாம் இருந்தது. அதெல்லாம் நேத்தோட போய்டுச்சு...” என்றார் ரத்னவேல் கோபமாக.

“அப்படியா தாத்தா...! எங்க போயிருக்கு....? நேத்தோட போச்சா...? இல்லை காத்தோட போச்சா..?அதுவும் என்கிட்டே கூட சொல்லாம...?” என்றாள் சிரிக்காமல்.

“துளசி..! வரவர உனக்கு வாய் கூடிகிட்டே போகுது. பெரியவங்களை எதிர்த்து பேசாதன்னு எத்தனை தடவை சொல்றது...?” என்றார் வித்யா.

“நான் எங்கம்மா அப்படி பேசுனேன்..! எதுக்கு காலையிலேயே வறுக்குறிங்க..?” என்றாள் அசட்டையாக.

“நேத்து நீ எங்க போயிருந்த...?” என்றார்.

“உங்ககிட்ட சொல்லிட்டு தான போயிருந்தேன். பிரண்டோட பிரேக்கப் பார்ட்டிக்கு....!” என்றாள்.

“என்னது பிரேக் பார்ட்டியா..?” என்றான் அருண் திறந்த வாயுடன்.

“ஆமா..! வாயை மூடுடா பக்கி..!” என்றாள்.

“போனது சரி...! இப்படித்தான் குடிச்சுட்டு வருவியா..? எத்தனை நாளா இந்த பழக்கம்...? இதுமட்டும் தானா...? இல்லை வேற எதுவும் இருக்கா...?” என்றார் வித்யா மூச்சு விடாமல்.

“குடிச்சேனா...?” என்றாள் அதிர்ந்து.

“எதுக்கு இவ்வளவு ஷாக் ஆகுற..? நீ குடிச்சது கூட பெரிய விஷயம் இல்லை. ஆனா, அதுக்கப்பறம் வீட்ல வந்து குடுத்த பாரு ஒரு பர்பாமான்ஸ்....அட...அட...காணக் கண்கோடி வேண்டும்..!” என்றான் அருண், அவள் காதருகில்.

“என்னடா சொல்ற...? அதான் பெருசு இப்படி வேங்கை மாதிரி நடக்குதா...?” என்றாள்.

“ஏன் உனக்கு நியாபகம் இல்லையா...?” என்றான்.

“இல்லையேடா...? நான் குடிக்கவேயில்லையே....?” என்றாள் யோசனையுடன்.

“அப்ப நாங்க பார்த்தது பொய்யா...?” என்றான்.

“நேத்து என்னத்தைக் குடிச்சோம்...அப்போ அது கூல்ட்ரிங்க்ஸ் இல்லையா...? கடவுளே...சும்மாவே வேங்கை ஆடும்... சலங்கையும் நானே கட்டி விட்டுட்டேனா...?” என்று ஒரு நிமிடம் யோசித்தவள், முகம் பிரகாசமாக, அனைவரையும் ஒரு நமட்டுப் பார்வை பார்த்தவள்,

“ஹ..ஹ...ஹ..ஹா...” என்று விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.

“நான் கேட்டுகிட்டே இருக்கேன்..! நீ சிரிக்கிறியா...?” என்றார் வித்யா.

“ஐயோ அம்மா..! எல்லாருமே நம்பிட்டிங்களா...? சும்மா... லொல்லலாய்க்கு...குடிச்ச மாதிரி நடிச்சேன்...நீங்களும் நம்பிட்டிங்க. அதுலையும் உங்கப்பா குடுத்தாரு பாரு ஒரு ரியாக்சன்...ப்பா...சான்சே இல்லை...” என்றாள்.

“ஏய்..! பொய் சொல்லாதடி..!” என்றார் வித்யா.

“நான் ஏன் பொய் சொல்ல போறேன். என்மேல ஏதாவது ஸ்மெல் வந்ததா... இல்லை வாமிட் பண்ணேனா...இல்லை இதுக்கு முன்னாடி இப்படி பண்ணியிருக்கேனா..?” என்றாள் சீரியசாய்.

அவள் பேசப் பேச...திறந்த வாய் மூடாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அருண்.

“கிராதகி..! நடந்த ஒரு விஷயத்தை, நடக்கவே இல்லைன்னு சாதிக்கிறாளே...!” என்ற வியப்பு தான் அவனுக்கு.

ஆனால் ரத்னவேல் தாத்தா...நம்பிய மாதிரி தெரியவில்லை. வள்ளியம்மையும் தான். அதற்குள் சுரேஷ் அங்கு வரவும், அமைதியாகிவிட்டனர்.

“குட்மார்னிங் டாடி..!” என்றாள் அவரைப் பார்த்தவுடன், முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன்.

“குட்மார்னிங் கண்ணமா...! சாப்பிட்டியாடா...?”

“இன்னும் இல்லை டாடி..!” என்று அவள் சொல்ல,

“எனக்கும், துளசிக்கும் டிபன் வை வித்யா..!” என்றார். அவள் அப்பாவின் அருகில் அமர்ந்து செல்லம் கொஞ்சிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்க, சத்தமின்றி மேலே இருந்து வந்தான் விஜய குமார்.

கிளீன் ஷேவ், கோட்,டை என்று ஆபீஸ் செல்வதற்கான அத்தனை அம்சங்களுடன் வந்து அமர்ந்தான்.

அவனைக் கண்டும் காணாததும் போல் இருந்துவிட்டாள் விஷ்வ துளசி.அப்பாவின் பக்கம் திரும்பியவள் , அவன் இருக்கும் பக்கம் கூட திரும்பிவில்லை.

இரவு அவன் மீது மோதி, அவன் தான் அறைக்குள் தள்ளி கதவை சாத்தினான் என்று தெரிந்தால் ருத்ர தாண்டவம் ஆடிவிடுவாள். அதனால் யாரும் அதைப் பற்றி அவளிடம் சொல்லவில்லை. விஜய்யும் அவளைக் கண்டு கொண்டதைப் போல் தெரியவில்லை.வித்யா வைத்த டிபனை வேகமாக சாப்பிட்டவன்,

“வரேன்..!” என்ற பொதுவான வார்த்தையுடன் கிளம்பி விட்டான். செல்லும் அவனையே கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் ரத்னவேலும், வள்ளியம்மையும்.

“ஆபீஸ் கிளம்பலையா துளசி..?” என்றார் சுரேஷ்.

“இன்னைக்கு கொஞ்சம் லேட்டா போறேன் டாட். பீலிங் நாட் வெல்...” என்றாள். அங்கு கிளம்பி வந்த அருணின் காதிலும் அவள் சொன்ன வார்த்தைகள் விழ,

“அப்பறம் வேற எப்படி இருக்கும்..? அடிச்ச சரக்கு அப்படி. நிற்க கூட முடியாம வந்துட்டு, இப்ப பேச்சைப் பாரு..!” என்று மனதில் நினைத்தபடி அவனும் கிளம்பி விட்டான்.

அறைக்கு சென்ற துளசியோ மீண்டும் பொத்தென்று கட்டிலில் விழுந்தாள்.தன்னை கண்டு கொள்ளாமல் சென்ற விஜய்யின் மீதே..அவளின் எண்ணம் எல்லாம் சென்றது.

“நீ அவனை மரியாதைக்கு கூட மதிக்கலை. இப்போ அவன் உன்னைப் பார்க்கலைன்னு கவலைப் படுறியா..?” என்றது மனம்.

“பெரிய இவன்..? போறான். முதல்ல அப்பாகிட்ட சொல்லி, இந்த வீட்டை விட்டுக் கிளம்பனும்...!” என்ற முடிவை மனதிற்குள் எடுத்துக் கொண்டாள்.

விஷ்வ துளசி – வித்யா, சுரேஷின் மகள்.பிரவீன் அவளுடைய அண்ணன். விளையாட்டுத்தனமும் அதே சமயம் நிதானமும் கலந்த படைப்பு அவள். அவளுடைய அழகு இதுவரை அவளுக்கு ஆபத்தை மட்டுமே அளித்திருந்தது. அவளுடைய அப்பாவைப் போல், அவளுக்கு பால் வண்ண நிறம்.உதட்டின் மேல் இருக்கும் மச்சம் தான் அவளுடைய அடையாளம்.அழகு எல்லாமே.

அவளுடைய பொறுப்பில் ஒரு தொழிலை அவள் கைவசம் ஒப்படைத்திருந்தார் சுரேஷ்.பிரவீன் தாத்தாவின் தொழிலில் விஜய்க்குத் துணையாகவும், தந்தையின் தொழிலில் அவருக்குத் தூணாகவும் இருந்தான்.

வித்யாவிற்கு பெற்றோர் மீது பாசம் என்பதைக் காட்டிலும், பெற்றவர்களுக்கு அவர் மீது பாசம். வித்யாவை பிரிவது அவர்களுக்கு இயலாத காரியமாய் இருக்க, அவர்களின் மனநிலை அறிந்து, ஈகோ பார்க்காமல், மனைவிக்காக அங்கு இருந்தார் சுரேஷ்.

சுரேஷின் குடும்பமும் வளமையான குடும்பம் தான். ஆனால் அவரின் பெற்றோர்கள் தவறி ஐந்து வருடங்கள் ஆகிறது. அதனால் வித்யா இங்கேயே வந்துவிட்டார்.

மாமானாரின் தொழில் விஷயங்களில் சுரேஷ் எப்போதும் தலையிட்டது கிடையாது. அதே போல், அவரின் விஷயங்களில் ரத்னவேலோ இல்லை அவரின் மகன்கள் ராஜசேகர் மற்றும் சுந்தர சேகரோ தலையிட்டது கிடையாது.

இவர்களின் இணைப்புப் பாலம் எப்போதும் பிரவீன் மட்டுமே. அனைவரின் மேலும் அக்கறை கொண்டவன். விஜய்யின் மேல் கொஞ்சம் அதிகமாக.

ஒரே வீட்டில் இருந்தாலும், அனைவரின் பாதையும் வேறு வேறு. யாரும், யார் விஷயத்திலும் குறுக்கீடு செய்வதில்லை. அதுவும் சில காலமாக. அதற்கு முன்னால் ஒற்றுமையுடன் இருந்த வீடு தான். இடையில் நடந்த சில களேபரங்களினால் இப்போது இப்படி இருக்கிறது.

அருணின் தங்கை பவித்ரா கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவி. கல்லூரியில் இருந்து அந்தமான் சுற்றுலா சென்றிருக்கிறாள்.

காரில் சென்று கொண்டிருந்த விஜய்க்கு மனதில் பல குழப்பங்கள். அவனும் ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என்று தான் நினைக்கிறான். ஆனால் ஏதோ ஒன்று தடுக்கிறது. அந்த ஏதோ ஒன்று என்ன என்று தான் அவனும் தேடிக் கொண்டிருக்கிறான். விடை தான் கிடைத்தபாடில்லை.

வீட்டில் நடந்ததை எண்ணி, மனதிற்குள் சிரித்துக் கொண்டான். இரவு துளசியை அப்படிப் பார்த்தவனுக்கும் அதிர்ச்சிதான். ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

அவளை மேலும் அதே இடத்தில் விட்டால், தாத்தா டென்சன் ஆகிவிடுவார் என்று எண்ணித்தான், அவளை அவளுடைய அறையில் தள்ளி கதவை சாத்தினான். எப்படியும் விடிந்த பிறகு சண்டைக்கு வருவாள் என்று அவன் எண்ணியிருக்க, அவளோ...அவன் யாரென்றே தெரியாத ஒரு பார்வை பார்க்கவும், மனம் வெறுத்துத்தான் போனது.

விஜய்யைக் கண்டாலே விஷ்வ துளசிக்கு ஆவதில்லை. அவன் இருக்கும் நிழலில், அவள் மழைக்குக் கூட ஒதுங்குவதில்லை.காரணம் தெரியாத வெறுப்பு என்று சொல்ல முடியாது. அவளுக்குக் காரணம் உண்டு. ஆனால் விஜய்க்குத் தான் அந்த காரணம் தெரியவில்லை.

பிரவீனிடம் கேட்கலாம் என்று ஒவ்வொரு முறையும் மனதில் தோன்றும்... ஆனால் கேட்க மாட்டான். எந்த நிலையிலும் அவன் யாரிடமும் இறங்கிச் சென்றதாய் சரித்திரமே கிடையாது.
 
அவன் முகத்தைப் பார்த்தால் அவன் யோசிக்கிறான் என்று யாராலும் சொல்ல முடியாது. எதையும் முகத்தில் காட்டாத ஒரு பாவம். இறுகிய முகம். மனமும் இறுகிப் போய்த்தான் கிடந்தது.

அவனுடைய இயல்பு இது கிடையாது.அப்படி மாறிப் போயிருக்கிறான் அவ்வளவே.

பின்னலாடை மற்றும் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தை ராஜசேகரும், சுந்தரசேகரும் பார்த்துக்கொள்ள, மஞ்சள் ஏற்றுமதி நிறுவனமும், விவசாய இயந்திரங்கள் மற்றும் விவசாய வாகனங்கள் தயாரிக்கும் கம்பெனியும் விஜய்யின் பொறுப்பில் இருந்தது. அருண் இப்போது தான் உள்ளே வந்திருக்கிறான்.தொழில் யுக்திகளை கற்ற பிறகு, அவனுக்குத் தனியான நிர்வாகம் என்று பேசி, அவனை விஜய்யுடன் சேர்த்து விட்டிருந்தனர்.

தொழில்கள், சொத்துக்கள் பிரிக்கப்படவில்லை. ஆனால், தொழில் பொறுப்புக்களையும், கம்பெனியையும் பிரித்து நிர்வாகம் செய்து கொண்டிருந்தனர்.

அந்த RRS பாக்டரிக்குள் நுழைந்த பிறகு முற்றிலும் வேறு விஜய்யாகிப் போனான். மெக்கனிக்கல் இஞ்சினியரிங் படித்திருந்த அவனுக்கு, மிஷின்களின் மீது அப்படி ஒரு காதல். அந்த படிப்பையும் மிக விரும்பித்தான் படித்தான். அவனுடைய ஆசைக்கும், ஆர்வத்திற்கும் தீனி போடும் வகையில், ரத்னவேல் இந்த கம்பெனியை அவனின் பொறுப்பில் விட, இஷ்ட்டப்பட்டும், கஷ்ட்டப்பட்டும் உழைத்தான். இப்போதும் உழைக்கிறான்.

ஒரு வேலையை மேற்பார்வை செய்பவனைக் காட்டிலும், அந்த வேலையின் கஷ்ட்ட நஷ்ட்டங்கள் தெரிந்த ஒருவன் மட்டுமே சிறந்த முதலாளியாக இருக்க முடியும் என்பது, அவன் அனுபவத்தில் உணர்ந்து கொண்ட பாடம்.

அன்று அவன் புதிதாக தயாரித்த ஒரு கருவிக்கு, தரச்சான்றிதல் பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தான். அந்த குழுவிலிருந்து இன்றைக்கு அந்த கருவியை பார்வையிட வருவதாக கூறியிருக்க, அதற்காகத் தான் இவ்வளவு வேகமாய் வந்திருக்கிறான்.

அவன் செல்வதற்கும், ரஞ்சன் அங்கே வரவும் சரியாக இருந்தது. அவனின் ஒரே விசுவாசி. பெர்சனல் அசிஸ்டென்ட்.

எல்லாம் தயாரா இருக்கா ரஞ்சன்..? என்ற படி வந்தான்.

“எல்லாமே தயாரா இருக்கு சார்..!!” என்ற ரஞ்சன் அவனின் வேகத்துக்கு ஈடு கொடுத்து நடந்தான்.

“எல்லாமே சரியா இருக்கணும். அவங்க கேள்வி கேட்குற மாதிரி வச்சுக்கக் கூடாது.அவங்க ட்ரையல் காட்ட சொல்லும் போது, எந்த தப்பும் நடக்க கூடாது. அவங்க இங்க இருந்து கிளம்புற வரைக்கும் எல்லாம் பெர்பெக்ட்டா இருக்கணும். டாக்குமெண்ட்ஸ் எல்லாம் சரியா இருக்கா..?” என்றான் நடந்து கொண்டே.

“அவங்க வரதே கேள்விக் கேட்கத்தான்..! இவர் அவங்க கேள்வி கேட்குற மாதிரி இருக்கக் கூடாதுங்குறார்...”என்று மண்டை காய்ந்தது ரஞ்சனுக்கு.

ரஞ்சன் காட்டிய பைல்களைப் பார்த்து, விஜய் கையெழுத்து போட்டு முடிப்பதற்கும், அந்த அதிகாரிகள் வருவதற்கும் சரியாக இருந்தது. அதற்கு பிறகு விஜய்க்கு நேரம் இறக்கை கட்டிக் கொண்டு பறக்க, அவர்களுக்கு அனைத்தையும் சுற்றிக் காட்டி, இயந்திரந்த்தின் செயல்முறையை விளக்கம் கொடுத்து, அவர்கள் கேட்ட கோப்புகளைக் காண்பித்து, இப்படி அவன் நேரம் முழுவதும் இயந்திரத்தின் கட்டுப்பாட்டிற்கே சென்று விட்டது.

“எல்லாமே ரொம்ப சரியா இருக்கு மிஸ்டர் விஜயகுமார். நாங்க எதிர்பார்த்து வந்ததை விடவும் எல்லாமே பக்காவா தயார் பண்ணியிருக்கிங்க. உங்க தயாரிப்புக்கு தரச்சன்றிதல் கிடைக்கிறது நூறு சதவிகிதம் உறுதி.உங்களை மாதிரி எல்லாருமே இருந்திட்டா...இங்க மேன் பவரே தேவையில்லை. மெசின் பவரே போதும்..!” என்றார் ஒருவர் சிலாகித்து.

“தேங்க்யு...!” என்றவன்,

“நம்ம எவ்வளவு மிஷின்ஸ் கண்டு பிடிச்சாலும், என்னைக்குமே நிரந்தரம் மேன்பவர் தான் சார். அதுக்கு முன்னாடி மிஷின் பவர் எல்லாம் ஒண்ணுமே இல்லை..” என்றான்.

“அதெப்படி சொல்றிங்க மிஸ்டர் விஜயகுமார்..? இந்த மிஷின் மூலமா விவசாயிகளுக்கு எவ்வளவு லாபம் தெரியுமா..?” என்றார் ஒருவர்.

“அது எனக்கு நல்லாவே தெரியும் சார். அதுக்காகத் தானே இந்த இயந்திரத்தை உருவாக்கியிருக்கேன்.! என்னதான் இந்த இயந்திரம் பவரானதா இருந்தாலும், இதைக் கண்டுபிடிச்சது ஒரு மனுஷன் தானே...அதாவது நானும், என்னோட தொழிலாளர்களும் தான். மிஷின் பவரே, மேன் பவர்னால வரதுன்னு சொல்ல வரேன்...!” என்றான் தீர்க்கமாய்.

“வெல்டன் மிஸ்டர் விஜய குமார்..! நீங்க சொல்றது தான் சரி..!” என்று அனைவரும் ஒப்புக் கொள்ள, அன்றைக்கு அவன் நினைத்த காரியம் வெற்றியே.

அனைத்தையும் முடித்துவிட்டு அவர்கள் கிளம்பும் போது, அவர்களில் ஒருவர்,

“உங்களுக்கும், அமைச்சர் கனகவேலுக்கும் ஏதாவது பிரச்சனையா மிஸ்டர் விஜய குமார்..?” என்றார்.

“இல்லையே..? எதுக்காகக் கேட்குறிங்க..?” என்றான் புருவ மத்தியில் விழுந்த முடிச்சுடன்.

“இல்லை.., இந்த மிஷினுக்கு தரச்சான்றிதல் கிடைக்கக் கூடாது அப்படிங்கிற விஷயத்துல அவர் முனைப்பா இருந்தார். அதுக்கான வேலைகளையும் பண்ணினார். பட், நீங்க எல்லாத்தையும் பெர்பக்டா முடிச்சுட்டிங்க. அதான் கேட்டேன். எதுக்கும் கொஞ்சம் கேர்புல்லா இருங்க சார். இந்த தொழில் உலகத்துல, எப்ப யாரைக் கீழ தள்ளலாம்ன்னு யோசிச்சுட்டே இருப்பாங்க..!” என்றார்.

“தேங்க்ஸ் பார் யுவர் இன்பர்மேஷன்..!” என்று சன்னமாய் புன்னகைத்தவன் மனதில், ஆயிரம் கோபங்கள். அதை வெளிபடுத்தும் இடம் அதுவல்லவே.

அதே நேரம் விஷயம் கேள்விப் பட்ட திவ்யாவோ...கொதிநிலையின் உச்சத்தில் இருந்தாள்.

“இது எப்படி நடந்தது...? நான் அவ்வளவு சொல்லியும் எப்படி ஓகே பண்ணினாங்க...?” என்று கத்திக் கொண்டிருந்தாள்.

“கொஞ்சம் பொறுமையா இரு திவ்யா. இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் நமக்குக் கிடைக்காமையா போய்டும்..? அப்ப இருக்கு அவனுக்கு..!” என்று கறுவிக் கொண்டான் விமல்.

“என்ன இருக்கு அவனுக்கு...? அவன் என்ன லேசுப்பட்ட ஆள்ன்னு நினைச்சியா...? பார்க்கத்தான் அமைதியா இருப்பான். ஆனா எந்த நேரத்துல என்ன பண்ணணுமோ, அதை சரியா பண்ணிடுவான்..!” என்றாள் திவ்யா.

“இப்ப அவனோட புகழ் ரொம்ப முக்கியமா..?” என்றான் விமல் கடுப்புடன்.

“முட்டாள்...! எதிரியை எப்பவுமே குறைச்சு எடை போடாதன்னு சொல்றேன்..!” என்றான் திவ்யா. அவள் மூளையில் ஆயிரம் சிந்தனைகள், மனதில் அளவுக்கு அதிகமான பழி உணர்ச்சி.

“நான் சொல்ற மாதிரி செய்..!” என்று சில உத்தரவுகளைப் பிறப்பித்தவள், அடுத்த ஆட்டத்திற்கு தயாராய் இருந்தாள்.

அங்கு விஜய்யோ...ஆட்டத்தில் யார் அந்த எதிரி என்று கண்டுபிடிப்பதில் முனைப்பாய் இருந்தான்.







 
:love::love::love:

விஜய் எதிரா 2 பொண்ணுங்களும் இருக்காங்களே........

துளசி விஜய் FB ஏதோ இருக்கு.......
திவ்யா??? பிசினஸ் மட்டும் தானா??? இல்லை வேறெதுவுமா???
 
Last edited:
Top