Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mezhugup Poovae 2

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் – 2

அடுத்த நாள் யாருக்கும் காத்திருக்காமல் விடிந்தது, வழக்கம் போலவே… அன்பரசிக்கும் என்ன தான் மண்டை குடைச்சலாக இருந்தாலும், அவளின் வேலைகள் மட்டும் என்னவோ தானாக அதுபாட்டிற்க்கு நடந்துக் கொண்டிருந்தது.

ஆனால், நேற்றைக்கு இன்று எவ்வளவோ பரவாயில்லாமல் இருந்தது, அவளுக்கு. என்ன நடந்தாலும், வினோ கூடவே இருந்து தன்னை பார்த்துக் கொள்வான் என்று அவளை அவளே தேற்றினாள்.

அந்த முடிவு கொடுத்த தெளிவா, இல்லை சிறு வயதிலிருந்தே உடன் பிறந்த தைரியமா தெரியவில்லை. முன்பை விட மனது இப்போது கொஞ்சம் சமன்பட்டது போல இருந்தது அவளுக்கு. மதியம் கப்போர்டை திறந்து வைத்து எந்த புடவையை உடுத்துவது என்று விவாதமே நடத்தினாள்!! அவ்வளவு முன்னேற்றம்.

கடைசியில் ஒரு மெரூன் கலர் சில்க் காட்டன் புடவையை தேர்ந்தெடுத்தாள். அந்த புடவையை கையில் எடுத்ததும், ஒரு குரல் காதுக்குள் ஒலித்தது. “நீ எவ்வளோ தான் கலர் கலரா புடவை கட்டினாலும், உனக்கு மெரூன் கலர் தான்டி சூப்பரா இருக்கு”

அந்த பேச்சு! அந்த ரசனை! எல்லாம் இப்போது அர்த்தமின்றி போனதே… நினைத்ததும் கண்களில் குளம் கட்டியது. பின்பு, அவனை நினைப்பதும் தவறு என்று வெதும்பும் மனதை அடக்கி கொண்டு, வேறு ஒரு புடவையை எடுத்து கட்டினாள்.

பொட்டு வைக்கும் போது, கண்ணாடியில் தன்னையே அளவிட்டன அவள் கண்கள். எப்போதும் மிகவும் ஒல்லியான தேகமே! நீல வாக்கில் இருந்த முகத்திற்கு ஏற்ற வாரு அமைந்த சிறிய கண்கள், மெலிதான ரோஜாப்பூ இதழ்கள்! அவை மிகவும் பேசும் என்பது வினோத்தின் பரவலான குற்றசாட்டு! தனக்கு பிடித்தபடி அவள் வாரியிருந்த குழல், அடங்காமல் முன் நெற்றியில் சிலும்பி இருந்தது… மொத்தத்தில் அழகாக இருந்தாள். மூக்கியமாக அவளின் வயது தெரியவில்லை! இதை எண்ணிய உடனே, ஒரு பெருமூச்சு வந்தது தொடர்ந்து…

மாலையில் நேரத்திலேயே தயாராகி வந்த அவளை பார்த்து, வினோத் புருவம் உயர்த்தினான். அவனுக்கு ஒரு விரிந்த புன்னகையே பதிலாக்கி, வீட்டை பூட்டினாள்.

காரில் செல்லும் போது, வினோத் அன்பரசியின் முகத்தை திரும்பித் திரும்பி பார்த்த வண்ணமே இருந்தான். “என்ன வேணும் உனக்கு? எதுக்கு என்னை பார்த்துட்டே இருக்க?”

அன்பரசி நேரடியாகவே கேக்கவும், வினோத்தும் வண்டியை ஓரமாக நிறுத்தினான்.

வினோத் வண்டியை ஓரம் கட்டுவதிலிருந்தே அன்பு, அவன் முக்கியமாக எதையோ பேசப் போகிறான் என்று அறிந்துக் கொண்டாள். ஒன்றும் பேசாமல், அவன் முகத்தை இவள் நோக்கவும், வினோத்தே பேச்சை துவங்கினான்.

“இல்ல நேத்து அவ்வளோ யோசிச்ச வரதுக்கு… இப்போ சீக்கிரமாவே ரெடியாகி வர? அதான் ஒண்ணும் புரியாம பார்க்கறேன்.”

அவனை பார்த்து, அழகாக பல்வரிசை தெரிய அவள் சிரிக்கவும், இந்த சிரிப்பு எப்போதும் அவள் முகத்தில் இருக்காதா, என்று ஏங்கினான் வினோத். ஆம், அவன் முயல்வதும் அது தான்… அவள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

இதை தான் கடவுளிடமும் அவன் வேண்டுவது. ஆனால், கடவுள் தான் கருணை காட்டவில்லை…! இவன் இப்படியே சந்தித்துக் கொண்டிருக்க, அன்பரசி அவனை முகத்தின் முன் சொடுக்கு போட்டு, நிஜவுலகிற்கு கூட்டி வந்தாள்.

கண்களாலே தன்னை கலாய்க்கும் அன்புவை, தான் கேட்டதற்க்கு முதலில் பதில் சொல்லச் சொன்னான் வினோத். “எனக்கு என்ன நடந்தாலும், நீயும் அங்க கூடவே இருக்கல? அப்புறம் எனக்கு என்ன பயம்? எதுவா இருந்தாலும் நீ பார்த்துக்க மாட்டீயா என்ன?!”

அவளின் பதிலை கேட்டு, புருவம் உயர்த்தி, “இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே, உடம்பை ரணகலம் ஆக்குறாங்கடா வினோ!” என்று சலித்துக் கொண்டான்.

“இப்படி எல்லாம் சொல்லி தப்பிக்க முடியாதுபா. உன்னால முடியும் வினோ. நீ பார்க்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கு, தெரிஞ்சிக்கோ!”

“இல்லையே உன்னோட மொடுலேஷனே சரியில்லையே! நான் நம்ப மாட்டென்… என்னவோ பெரிய ஆப்பா வெச்சுருக்க! அது மட்டும் நல்லா தெரியுது.”

“ஹுஹூம்ம்ம்… போடா” அன்பு முகத்தை வெளிப்புறமாக திருப்பவும், அதை அவன் தன் பக்கம் திருப்பி, அவளின் கண்களில் உற்று நோக்கி, “உனக்கு எதுவும் பிராப்ளம் இல்லையே? ஆர் யூ ஓகேடா?” என்று வினவினான்.

அவனின் பேச்சில் நெஞ்சம் உருகி, கண்களில் இறங்கியது. அதை துடைத்துக் கொண்டே, அவனுக்கு பதிலளித்தாள். “எனக்கு ஒண்ணுமில்லடா. நேத்து நீ சொன்னதை யோசிச்சேன். அதுக்கு அப்புறம் தான் கொஞ்சம் தெளிவானேன். அதுல…. ப்ச்ச்ச்..! வேண்டாம்… இப்போ எதுக்கு தேவையில்லாத விஷயத்தை பேசனும்? வா, நாம பங்ஷன் போலாம். லேட் ஆகுது.”

அவளின் தெளிவை கண்டு உள்ளுக்குள் உவகை பொங்க, காரை எடுத்தான் வினோத். இன்னும் சில மணி நேரத்தில் இந்த உறுதியும் தெளிவும் பறந்தோடயிருப்பது பாவம் அவர்கள் இருவரும் அறியர்.

விழா நடக்கும் இடத்திற்கு, அரை மணி நேரம் முன்பே வந்திறங்கினர், அன்புவும் வினோத்தும். விழாவிற்கான ஏற்பாடுகளில், ஜெயந்தி அக்காவுக்கு உதவிவிட்டு, சிறிது நேரத்தில் வர ஆரம்பித்த விருந்தினர்களிடம் பேச ஆரம்பித்தார்கள், இருவரும். என்ன தான் வேலைகளை செய்தாலும் ஆறு மணியிலிருந்து வாசலை நோக்கி, அன்புவின் கண்கள் பறந்தோடியது, நொடிக்கு ஒரு முறை.

வினோத்தும் இதை கவனிக்க தவறவில்லை. ஆனால், கண்டும் காணாமல் தான் இருந்தான். வேறு வழி? வீட்டில் போய் பேசிக் கொள்ளலாம் என இருந்தான். வினோத் கவனிப்பதை எல்லாம் அன்பு கவனிக்கும் நிலையில் இல்லை.

‘ஏன் இன்னும் வரலை? ஒரு வேளை, வரவே மாட்டானோ? இல்லை வேற யாராவதா இருக்குமோ? சே சே! அப்படி இருக்காது… அது அவன் தான்’

மனது தாறுமாறாக அடித்துக் கொள்ள, அவளின் தவிப்பு வெளியே தெரியாமல் இருக்க பெரும் முயற்சிக் கொண்டாள். முயற்சி எல்லாம் அவனை, அந்த ஜீவாவை நேரில் காணும் வரை தான் ஜெயித்தது.

சரியாக ஆறு முப்பதுக்கு, ஜீவா விழா அரங்கின் உள்ளே நுழைந்தான். அவனை கண்ட அந்த நிமிடம்!! அப்பப்பா… மேனி எங்கும் சிலிர்த்தெடுக்க, கண்கொட்டாமல் அவனையே பார்த்தபடி நின்றாள் அன்பரசி. மூன்று வருடத்திற்கு முன்பிருந்ததை விட, லேசாக சதைப் போட்டிருந்தான். அவனின் ஐந்தே மூக்கால் உயரத்துக்கு, அந்த ப்ளூ ஜீன்ஸும், வெள்ளை சட்டையும் அட்டகாசமாக இருந்ததில், பார்வை அகலாமல் அவனையே பார்த்தாள் அன்பு. சிலிர்ப்பு கூடியதே தவிர குறைந்தபாடாக காணோம்.

ஆனால், சில நிமிடங்களிலேயே சிலிர்ப்பு குழப்பமாக மாறியது. காரணம் ஜீவா! அவளை நன்றாக பார்த்துவிட்டு, ஒன்றும் அறியாதது போல, அவன் முகத்தை திருப்பினான். சரி புறக்கனிக்கிறான் என்று அவளும் விட்டுவிட்டாள்.

ஆனால், சிறிது நேரத்திற்கு பின், தன் அருகில் இருந்த டிரஸ்டின் குழந்தைகளை பார்க்க வந்த போதும், அதே பார்வை பார்த்தான். அவன் பார்த்தது அறிமுகமில்லாத ஒருவரை எப்படி நோக்குவோமோ அப்படி இருந்தது.

அது தான் அன்பரசியை சிந்தனையில் ஆழ்த்தியது. கோபமாக இருந்தால் முறைத்து பார்க்க வேண்டும்.. அல்லது வெறுப்பாக பார்க்க… அட மிஞ்சி மிஞ்சி போனால், உணர்ச்சியற்று கூட பார்க்கட்டும்.

அது என்ன புதிதாக காண்பது போல் பார்ப்பது? அப்படி எல்லாவற்றையும் அவனால் மறக்க முடியுமா என்ன? ஒருவேளை மறந்து தான் விட்டானோ? நினைக்கும் போதே நெஞ்சில் யாரோ கத்தியை இறக்கியது போல வலித்தது.

இத்தனையும் வினோத்தும் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். மனதில் பெரும் பாரம் ஏறியது அவனுக்கு. ஆனாலும், அவர்கள் இருவரையும் கவனிப்பதை நிறுத்தவில்லை.

சிறிது நேரத்தில் விழா, ஆரம்பமாகியது. சிறப்பு விருந்தினராக ஜீவா மேடை ஏறவும், அன்புவின் மனம் தளும்பியது! அனைவரும் பேசி முடித்த பின்னர், விழாவில் டிரஸ்டில் நன்றாக பங்காற்றுவோரை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

அதை ஜீவா தான் எல்லோருக்கும் வழங்கினான் என்பது குறிப்பிடத்தக்கது. அன்புவும் வினோத்தும் டிரஸ்டில் மெம்பராக இல்லை என்றாலும், அங்கே சிறப்பாக உதவுவதால், அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

சரி தூரத்தில் இருந்த போது தான் தப்பித்தான், இப்போது என்ன செய்கிறான் என பார்ப்போம் என்று ஆவலுடன் அன்பு மேடை ஏறினாள். அவள் நெருங்கியதும், அவளின் பரிசை வழங்கி, ஒரு சம்பிரதாய சிரிப்புடன், “கங்கிராட்ஸ்” என கூறினான், ஒரு கைக்குலுக்கலோடு!

யாருக்கும் எந்த வித்தாயசமும் தெரியவில்லை. ஏன், அன்புவுக்கே அவன் தன்னை முற்றிலுமாக மறந்துவிட்டானோ என்று தோன்ற தொடங்கியது. அவ்வளவு இயல்பாக, அன்பரசியை பத்தோடு பதினொன்றாக நடத்தினான்.

கைக்குலுக்கியதும் அவளுக்கு தான் சிலிர்த்தது! அவன் அப்போதும் எந்தவித மாற்றமும் காட்டவில்லை.

கண்களில் கூட எதுவும் தெரியவில்லையே? எப்படி? இங்கே அன்பு குழப்பத்தில் மூழ்க, அங்கே வினோத் ஏற்கனவே மூழ்கிவிட்டு, முத்தை தேடிக் கொண்டிருந்தான். ஜீவா வந்தது முதல் அவனை பார்ப்பதை தான் இவனும் வேலையாக கொண்டிருந்தான்.

ஆனால், ஜீவா இவனை கூட ஒரு தெரிந்த மாதிரியெ காட்டிக் கொள்ளவில்லை… அது தான் வினோத்திற்க்கு மண்டையில் பலமாக இடித்தது. ‘ஒரு வேளை, மண்டையில கிண்டையில, அடி பட்டு எல்லாத்தையும் மறந்து, கஜினி சூர்யா மாதிரி ஆயிட்டானோ?’

இப்படி எக்கு தப்பா யோசிக்க இவனால் மட்டும் தான் முடியும் போல… கடைசியில் விழா முடிந்து எல்லோரும் கிளம்பும் நேரம், அன்றைய நாளின் கடைசி தடவையாக ஜீவாவை பார்க்க ஆசைப்பட்ட மனதை என்ன செய்தும் அடக்க முடியாமல், திண்டாடினாள் அன்பரசி.

உள்ளுக்குள் மனசாட்சி குத்தியது. ‘இப்படி செய்றது ரொம்ப தப்பு அன்பு! என்ன உரிமையில அவனை பார்க்குற? அது மட்டுமில்ல, இது நீ வினோத்துக்கு செய்ற துரோகம் கூட… ஞாபகம் வெச்சுக்கோ!’

மனசாட்சி பேசி முடிப்பதற்க்குள் நம் நாயகியின் தேடல் முடிவிற்க்கு வந்தது. ஜீவா அப்போது குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்தான். அவனுக்கு எப்போதும் குழந்தைகள் என்றால் தனி தான். அப்போது அன்பரசியின் நெஞ்சிலும் இதே எண்ணம் தான்!

நாம் எல்லோருக்கும் குழந்தைகளை பிடிக்கும். ஆனால், அவனுக்கோ வேறு லேவலில் பிடிக்கும்!!

எந்த அளவிற்க்கு என்பதை போகப் போக, நீங்களே புரிந்துக் கொள்வீர்கள்… அனால், இதே குழந்தைகள் மீது இருந்த ஆசை தானே அவர்களின் பிரிவுக்கும் காரணமாகியது??

அதை நினைத்த போதே, நெஞ்சம் அடைத்துக் கொள்ள, அது வரை இருந்த நிலை மாறி, வினோத்திடம் சென்று வீட்டிற்கு செல்லலாம் என கூறினாள். ஒரு அர்த்தம் பொதிந்த பார்வையுடன் தலையசைத்தான் வினோத்.

ஜெயந்தியிடம் கூறிக் கொண்டு, விடைப் பெற்றனர் இருவரும். அவர்கள் கிளம்பிய சில நிமிடங்களில் ஜீவாவும் விடைப் பெற்றான். காரில் ஏறி உட்கார்ந்தவனுக்கு, வண்டியை எடுக்கவே தோன்றவில்லை…

ஆயாசமாக இருந்தது. எவ்வளவு நேரம் தான் அவனும் சமாளிப்பான்? பாவம் தானே? அவனுக்கு அன்பரசி, வினோத்தை தெரியாமல் எல்லாம் இல்லை. ஆனால், அவர்களை புறக்கனிக்கவே அவன் வேண்டும் என்றே தெரியாத மாதிரி நடந்துக் கொண்டான்.

அதிலும், மேடை ஏறி வந்த அன்பரசியை பார்த்தது, தன் எண்ணங்களை அவன் அடக்க படாத பாடுப்பட்டான். ‘பாவி என்னமா பார்க்குறா? வினோத்தையும் வேற கூட்டிட்டு வந்துருக்கா.

அப்புறம் ஏன் நம்மளையே பார்த்துட்டு இருந்தா?’ அவனிற்கும் இப்போது குழப்பம். ரொம்ப நாள் கழித்து பார்த்ததில் அவனுமே அதிர்ந்தான் தான். ஆனால், இதை எதிர்பார்த்தே வந்ததால், உடனே சுதாரித்துக் கொண்டான்.

இங்கே தான் அன்பரசி கோட்டை விட்டாள். அவனை பார்த்ததும் முகத்தை திருப்ப வேண்டும் என்று எண்ணி வந்ததெல்லாம் மறந்தே போயிற்று அம்மனிக்கு! எது எப்படியோ! ‘தப்பிச்சோம்’ என்று பெருமூச்சோடு வண்டியை எடுத்தான் ஜீவா.

காரில் போகும் போதும், எண்ணம் மீண்டும் கட்டுக்கடங்காமல் ஓட ஆரம்பித்தது ஜீவாவிற்க்கு… அவன் தப்பித்தான் தான். ஆனால், யாரிடமிருந்து? அன்பரசியிடமிருந்தா அல்லது தன்னையே கேள்வி கேட்டு குத்திக் கொள்ளும் தன் மனசாட்சி இடமிருந்தா?

இந்த கேள்வியை அவளிடம் கேட்டிருந்தால், “அவனுக்கு மனசாட்சினு ஒண்ணு இருக்கா?” என்று எதிர்கேள்வி கேட்டிருப்பாள், எனவும் தோன்றியது. இப்படியே அவளை பற்றி சிந்தித்தவனின் மூளை மெதுவாக தான் தன் வேலையை செய்தது.

“அவள பத்தியே ரொம்ப யோசிக்குறோம் போல.. நல்லது இல்ல ஜீவா! அவளை எண்ணிக்கோ மறக்கனும்னு முடிவு பண்ணிட்ட! தேவையில்லாம யோசிக்காத அவளை பத்தி.”

சிந்தனையை கலைத்தது தொலைப்பேசியின் அழைப்பிசை… வீட்டிலிருந்து என்றவுடன், உடனடியாக காதுக்கு இட்டு சென்றான் அதை. “நான் கிளம்பிட்டேன்பா. இதோ வந்துட்டேன். ஒரு பத்து நிமிஷம் வீட்டுல இருப்பேன்”

பேசிவிட்டு வைத்தவனின் முகத்தில் இலகுத் தன்மை அழையா விருந்தாளியாக ஒட்டிக் கொண்டது. தனக்காகவே வீட்டில் காத்திருக்கும் இரு நெஞ்சங்களை நினைத்து, அவன் காரின் வேகத்தை கூட்டி வீடு நோக்கி பறந்தான்.

அவன் இன்று நன்றாக இருக்கிறான் என்றால், அது அவர்களால் தான்… அவர்கள் இன்றி அவனில்லை…

Loneliness and the feeling of being unwanted is the most terrible poverty. - Mother Teresa

யாருமற்று இருப்பதும், யாருக்கும் தேவைப்படாமல் இருப்பதுமே மிகக் கொடிய வறுமையாகும் – அன்னை தெரெசா.


 
Top