Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MP 7

Advertisement

Admin

Admin
Member


அத்தியாயம் – 7

வினோத்தை மீண்டும் இப்படி பார்ப்போம் என மலர்விழி நினைக்கவேயில்லை. அவனுக்கு தன் மேல் ஒரு ஈர்ப்பு இருக்கிறதோ என அவள் ஆராய்ந்துக் கொண்டிருக்கையில், திடீரென அவன் முன்னே வந்து நிற்கவும் அவளுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை!

வந்ததுமில்லாமல் ஈஈஈ என இளித்து கொண்டு, “ஹாய்! என்ன இந்த பக்கம்?” என்று கேட்டது தான் அவளின் சந்தேகத் தீயில் ஒரு லிட்டர் பெட்ரோலை ஊற்றியது. ஆனால், பெரிதாக எரிச்சல் எல்லாம் இல்லை அவளுக்கு.

அது ஏன் நமக்கு எரிச்சல் வரவில்லை என்றேல்லாம் அவளின் மூளை யோசிக்கவில்லை! என்னவென்று அறியாமல் மனதின் ஓட்டம் வேகமெடுக்க, கண்களில் சிறு பளபளப்புடன், “நான் என்னோட பிரெண்ட பார்க்க வந்தேன். நீங்க?” என்று வினவினாள்.

அந்த பளபளப்பு கொடுத்த தைரியத்திலும், உற்சாகத்திலும் மேலே பேசலானான் வினோத். “நான் இங்க பசங்கள ட்ராப் பண்ணிட்டு வந்துட்டு இருந்தேன். உன்னை பார்த்ததும், சரி உன்னையும் கூட்டிட்டு போலாம்னு வந்தேன். வா, நான் ட்ராப் பண்றேன்.”

அவளின் முகத்தை பார்த்தே அவளின் மன உணர்வுகளை புரிந்து கொண்டான் வினோத். அவளுக்கு தன்னை பிடித்திருக்கிறது! அதில் எந்தவித சந்தேகமும் இல்லை அவனுக்கு. அதனால், குறுகுறு பார்வையுடன் அவளை கூர்ந்து நோக்கினான்.

அவன் பேசப் பேச, சந்தேகம் எல்லாம் பறந்தோடி ‘அடப்பாவி!!’ என ஆனது மலருக்கு! ‘முதல்லயாவது வாங்க போங்கனு சொல்லிட்டு இருந்தான், இப்போ அதுவும் போய் ‘வா,போ’ன்ற நிலைமைக்கு வந்துட்டானா? கடவுளே!! பையப்புல ஒவ்வொரு ஸ்டெப்பா எடுத்து வைக்கிறான். பார்க்கலாம் என்ன பண்றான்னு…’

ஒரு நொடிக்குள் இத்தனை சிந்தனைகளும் ஃப்ளாஷ் அடித்தது அவள் மனதில். அதற்குப் பின் தான், அவனுக்கு விடை சொல்ல வேண்டும் என்று புரிய, புன்னகையிழையோட “இல்ல நீங்க போங்க நான் போய்கறேன்” என்றாள்.

இந்த பதிலை தான் அவள் கூறுவாள் என முன்னதாகவே எதிர்பார்த்தவன் போல், ஒரு தலையசைப்புடன் அவளின் மறுப்பை இவன் மறுத்தான்.

“கார்ல நிறைய இடமிருக்கு. உனக்கு வேணும்னா பின்னாடி கூட உட்காந்துக்கோபா. எனக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல… பக்கத்துல தான் சிசிடி இருக்கு. ஜஸ்ட் ஒரு காபி… ‘ ‘A lot can happen over a Coffee!’ என்ன ஓகே வா??”

ஆர்வம் கொப்பளிக்க எப்படியாவது தன்னை கூட்டிச் செல்ல வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கும் வினோத்தை பார்க்கும் போது, அவளுக்கு கஷ்டமாக இருந்தது. தனக்கும் அவனை கொஞ்சமே கொஞ்சம் பிடித்திருக்கிறது தான்! அதற்காக அவனுடன் வெளியே எல்லாம் செல்ல முடியாது.

தன்னுடைய தந்தைக்கு இதெல்லாம் துளியும் பிடிக்காது என்பது ஒரு புறமிருக்க, தனக்கே அவனை பற்றி எதுவும் முழுதாக தெரியாது! அவனை பார்த்தால் ஏமாற்றுபவன் போல் இல்லை தான்… ஆனாலும் எதுவோ ஒன்று அவளை தடுத்தது! இயல்பாக பெண்களுக்கே உள்ள எச்சரிக்கை உணர்வா, இல்லை தந்தை மேல் உள்ள பாசமா?? இல்லை வேறு எதுவுமா!??

மலர்விழியால் அதன் மேற்கொன்று அங்கே நிற்க முடியவில்லை. முகத்தில் ஒரு வித யோசனை கலந்த சோகம் படற, “இல்ல எனக்கு வேலையிருக்கு. நான் கிளம்பறேன். அன்பரசி அக்காவ கேட்டதா சொல்லுங்க. பை….” என அவசரத்துடன் கூறிவிட்டு கிளம்ப எத்தனித்தாள்.

வினோத்தாவது விடுவதாவது? அவளின் முன் மீண்டும் வந்து வழியை மறித்தபடி அவளை அடுத்த கேள்வியை கேட்டு உறைய வைத்தான்.

“எப்போ வேலை இல்லாம ஃப்ரியா இருப்பன்னு சொல்லுமா. அப்போ பார்க்கலாம்… எத்தனை நாளைக்கு தான் இப்படி ரோட்ல ஆபீஸ்லனு பார்க்குறது.”

அவன் கேட்டதை நினைத்து மலர் ஆச்சரிய முகம் காட்டுவதற்க்கும், அவளின் போன் அடிப்பதற்க்கும் சரியாக இருக்க, போனில் யார் என பார்த்தால் அப்பா!!

போனை உடனே காதுக்கு கொடுத்து, “ஹா சொல்லுங்கப்பா…” என பேசிக் கொண்டே இவனுக்கு கைகளை ஆட்டிவிட்டு நடக்க ஆரம்பித்தாள். வினோத்தின் மனதில் சுறுசுறுவேன கோபம் ஏறியது.

கடைசியில் தன்னிடம் மலர்விழி பதில் சொல்லாமல் போனது அவனை மிகவும் பாதித்தது. நான் அவளுக்கு ஒன்றுமே இல்லையா? சே... என கால்களை ஓங்கி மிதித்துவிட்டு காரில் ஏறி சென்றுவிட்டான்.

வீட்டிற்கு சென்று முதல் வேலையாக அன்பரசியிடம் எல்லாவற்றையும் கொட்டும் வரை அவனின் மனது ஆறவில்லை! கேட்ட அன்புக்கு செம சிரிப்பு… “ஏன்டா நீ கூப்புட்டா உடனே அந்த பொண்ணு வந்துடனுமா? பெரிய சாக்லேட் ஹீரோனு மனசுல நினைப்பு!

அதுவுமில்லாம உன்னை பத்தி அவளுக்கு ஒண்ணுமே தெரியாது. அப்புறம் எப்படிடா வருவா? மண்டையில இருக்குற மண்ணு காது வழியா ஓவர்ஃப்லோ ஆகுது. துடைச்சுக்கோ!”

அன்பரசி கூறியது அத்தனையும் அவனுக்கும் புரிய சிறிது கோபம் அடங்கியது. அவளை முறைத்துவிட்டு டிவி பார்க்க ஆரம்பித்தான். ஆனால், என்ன தான் திசை திருப்பினாலும், ஆறாத மனது அன்று முழுக்க அதே சிந்தனையும் கோபமும் உள்ளுக்குள் கடிகாரம் போல் ஓடியது.

அப்படி அன்று இரவு உறக்கம் வராமல் யோசித்த வேளையில் தான் அவனுக்கு தோன்றியது. ‘கூட காபி ஷாப்புக்கு வரலைனு சொன்னதுக்கே நமக்கு மனசு இப்படி அடிச்சுக்குது.

காலம் முழுக்க பார்த்துப்பான்னு நம்புன ஒருத்தன், “எனக்கு நீ வேணாம்!”னு வாழ்க்கையில மொத்தமா உதறினப்போ, அன்புக்கு எப்படி வலிச்சுருக்கும்?’

நினைக்கும் போதே நெஞ்சுக் கூடே காலியாகி, கை கால்கள் சில்லிட்டன வினோத்திற்கு. ஒரு புறம் அன்புக்காக பரிதாபப்பட்ட மனது, இன்னோரு புறம் ஜீவாவின் மேல் வெறுப்பையும் வாரி இறைத்தது.

அவனுக்கு நன்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று மனதில் சூலுறைத்த அதே நேரத்தில், ஜீவாவின் பிள்ளைகள் உண்மையிலேயே ஜீவாவிற்க்கு பாடம் கற்பித்தனர்.

இரவு சாப்பாடு ஊட்டிவிட்டு படுக்க செல்லும் வரை நிலேஷும் நிக்கித்தாவும் எந்த வம்பும் பண்ணவில்லை. வழக்கம் போல் அன்றும் குழந்தைகளை கதை சொல்லி தூங்க பண்ணலாம் என்று கதையை ஆரம்பித்தான் ஜீவா.

“ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம்…” அவன் ஆரம்பித்தவுடனேயே பிள்ளைகள் ‘வேண்ணா’ என்றனர் கோரஸாக.

“ஐய்யோ.. ப்பா அதே ராஜா ராணி, பிரின்சஸ் பிரின்ஸ் கதை, அனிமல்ஸ் கதை… நோப்பா! வேற சொல்லு வேற சொல்லு…” நிக்கித்தா இப்படி அலற, ஜீவாவோ வேறு கதைக்கு தான் எங்கே போவது என்று முழி பிதுங்கினான்.

மகள் இப்படி என்றால், மகனோ தகப்பனின் வாயாலேயே அவனை மடக்கினான். “அப்பா…. நீங்க ராஜான்னா அப்போ நான் பிரின்ஸ், நிக்கி பாப்பா பிரின்சஸ் இல்லையாப்பா?”

ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் பதில் வந்தது ஜீவாவிடமிருந்து. பிள்ளைகள் இருவரையும் கட்டிக் கொண்டு, “இதுல என்னடா சந்தேகம்? நீ தான் அப்பாவோட பிரின்ஸ். நிக்கி பாப்பா என்னோட குட்டி பிரின்சஸ்” என்றான்.

“அப்போ ராணி யாருப்பா? அம்மா தான?” நன்றாக தூங்கிக் கொண்டிருந்தவன் முகத்தில், ஓங்கி தண்ணீர் தெளித்தால் எப்படி பதறி அதிர்ந்து போவானோ, அப்படி ஒரு நிலையில் இருந்தான் ஜீவா.

அடுத்து வந்த கேள்வி முன்னதை விட கூர் வாளாக, மனதில் இறங்கியது.

“அம்மா ராணின்னா ஏன்பா நம்ம கூட இல்ல? அம்மா பாவம், அங்க தனியா இருக்காங்க…” இக்கேள்விகளை எப்போதோ வரும் என்று எதிர்பார்த்திருந்தான் ஜீவா.

ஆனால், என்ன பதில் கூறுவது என்பதை இன்று வரை யோசித்துக் கொண்டே தான் இருக்கிறான்!! நிலேஷ் திடீரென்று இப்படி கேட்பான் என கனவிலும் நினைக்கவில்லை…

சிறிது மாதங்களாகவே குழந்தைகள் அன்பரசியை விட்டு வரும் போது முரண்டு பிடிக்கின்றனர் என தன் தந்தை ராகவன் கூறியது இப்போது நினைவு வந்தது. இவன் சிந்திப்பதற்க்கு எல்லாம் டைம் குடுக்காமல் நிலேஷ் அவனை உலுக்கினான்.

“ப்பா சொல்லுப்பா… அம்மா ஏன் நம்ம கூடயில்ல?” நிலேஷ் கூறியதை கேட்டு அம்மாவின் நினைவு வந்து நிக்கித்தாவும் கூட ஒத்து ஊத ஆரம்பித்தாள்.

“ப்பா… அம்மா வேணு… கூட்டிட்டு போப்பா அம்மாட்ட” கை கால்களை உதைத்துக் கொண்டு நிக்கித்தா சிணுங்குவதை பார்த்து, ஜீவாவிற்க்கு ஆச்சரியமோ ஆச்சரியம்! எதற்கெடுத்தாலும் “அப்பா ப்பா” வென இருக்கும் தன் மகளா அம்மா வேண்டும் என அழுவது??

எதையாவது சொல்லி சமாளிக்க வேண்டிய அவசியம் புரிய, “அதெல்லாம் பெரியவங்க விஷயம்… நீங்க கேக்க கூடாது. தூங்குங்க ரெண்டு பேரும்!” என்று முற்று புள்ளி வைக்க பார்த்தான்.

நிக்கித்தா மறுப்பாக தலையசைத்து, “ப்பா அம்மா நல்லா பார்த்துப்பா. எங்கள வெளிய டாட்டா கூட்டிட்டு போவாங்களே! அம்மா இங்கயே இருக்கட்டும்பா.. ப்ளீஸ்..” என்று ஜீவாவின் கழுத்தை கட்டிக் கொண்டு கெஞ்சினாள்.

நிக்கித்தா விட்ட இடத்திலிருந்து நிலேஷ் தொடர்ந்தான். “ஆமாபா… அம்மா, வினு மாமா எங்கள கார்ல டாட்டா கூட்டிட்டு போவாங்க. டுடே கூட ஆஸ்ரம் போனோமே. அங்க அண்ணா அக்கா ரொம்ப பேரு இருந்தாபா. நானு நிக்கி பாப்பா மம்மம் சாப்பிட்டு, எல்லார்க்கும் தண்ணி குடுத்தோமா, அங்க இருக்கிற அங்கிள் என்னை ‘குட் பாய்’ சொன்னாரு.”

“எஸ்பா, என்ன கூட ‘குட் கேர்ல்’ சொன்னாரு அந்த அங்கிள்… வினோ மாமா எனக்கு சாக்கி, பெருசுசுசுசு டெடி பேர் எல்லா வாங்கி கொடுத்தாபா… ப்ளீஸ்பா, அம்மா வினோ மாமா இங்க வரட்டும்பா ப்ளீஸ்…”

பிள்ளைகள் கூறியதை கேட்டு பேரதிர்ச்சி கொண்டான் ஜீவா. திகைத்து அவன் எங்கோ நோக்குவதை கண்டு குழந்தைகள் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. “ப்பா என்னாச்சுபா?” என மீண்டும் நிலேஷ் அவனை உலுக்க சுய நினைவுக்கு வந்தான் ஜீவா.

“ஒண்ணுமில்லடா குட்டிஸ். அப்பாக்கு கொஞ்சம் தல வலிக்குது. ரெண்டு பேரும் தூங்கறீங்களா.. நாம அப்புறமா பேசலாமா?” தந்தையின் குரலிலும், அவன் முகம் போன போக்கை பார்த்தும் பயந்து, பிள்ளைகள் இருவரும் மேலே எதுவும் நோண்டாமல் தூங்கப் போயினர்.

இரண்டே நிமிடங்களில் தூங்கியும் விட்டனர். ஆனால், ஜீவாவிற்க்கு தான் தூக்கம் தொலை தூரத்துக்கு பறந்தோடியது!! போற போக்கை பார்த்தால், தன் ஜீவன்களை அன்பரசியிடம் இழக்க போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றியது.

அவளை போலவே பசங்களையும் வளர்க்கிறாள் போல… சாப்பிடுபவர்களுக்கு தண்ணீர் ஊற்றினார்களாம். வேலை செய்யும் வயதா இவர்களுக்கு? கடவுளே! இதில் ஒன்றும் தெரியாமல், நிக்கி வேறு அவள் நன்றாக பார்த்துக் கொள்வாள் என நம்பிக் கொண்டிருக்கிறாள்.

நிலேஷும் தான் அம்மா ராணி தானப்பா, என கேட்கிறான்…. ராணி!!! ஒரு காலத்தில் வாய் ஓயாமல் தான் அவளை, “ராணிமா” “ராணி” என்று உறுகியது நினைவிற்கு வந்தது. அப்போது தன் இதயராணியாகவே அவளை நினைத்து அப்படி கூப்பிட்டான்.

அதனால் தானோ என்னவோ, இன்றும் அவளை அந்த இதயத்திலிருந்து தூக்கி எறிய முடியாமல், திண்டாடுகிறான். அவனையும் அறியாமல், அடிமனதிலிருந்து எழுந்த உணர்ச்சி அவன் வாயை ‘ராணிமா’ என பிதற்ற வைத்தது.

கண்களிலிருந்து சூடாக இரு கோடுகள், கன்னத்தில் இறங்கின! நடந்த அனைத்தையும் மறக்க முடியாமல், அன்று இரவு முழுக்க தூங்காமல், பையித்தியக்காரன் போல் உளாவினான்.

அடுத்து புலர்ந்த வேளை, வாரம் துவங்கும் திங்களாக இருக்க, அலுவகத்தை தவிர்க்க முடியவில்லை அவனால். காயும் மண்டையோடு சென்றவனை ஆபீஸில் எல்லோரும் நெருங்கவே அஞ்சினர்!

மலர்விழியும் அப்படியே! மலர்விழி அவனுடைய கட்டுமான அலுவகத்தில், ஒரு சிவில் இஞ்சினியராக பணி புரிந்தாள். மதியம் சாப்பிட போகும் வேளையில் தான் அவளை தாண்டிச் சென்றான் ஜீவா.

உடனே அவளை நேற்று வினோத்துடன் சாலையில் பார்த்தது நினைவுக்கு வந்து தொலைத்தது ஜீவாவுக்கு. லன்ச் முடிந்து மலர்விழி அவளுடைய சீட்டிற்க்கு வந்ததும், ஜீவாவிடமிருந்து அவன் கேபினுக்கு வரும்படி அழைப்பு வந்தது.

என்னவாக இருக்கும் என யோசித்தபடியே செல்ல ஒன்றும் அவளுக்கு அகப்படவில்லை! ஏன்னென்றால் மீட்டிங் தவிர ஜீவாவை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு எப்போதும் அவளுக்கு கிட்டியது இல்லை.

வேலை நிமித்தம் அவள் ரிப்போர்ட் செய்வது சீனியர் இஞ்னியரிடம் தான். அதனால், ஒன்றும் விளங்காமல் தான் அவன் கேபினுக்குள் நுழைந்தாள் மலர்விழி.

அவள் கதவை தட்டி உள்ளே நுழைந்ததும், தன்னுடைய எதிர் சீட்டை காண்பித்து அமரச் சொன்னான் ஜீவா. ஒரு அழுத்தமான பார்வையுடன் அவன் தன் முகத்தை ஆராய்வது போல், தோன்றியது மலருக்கு.

“தென் மலர்விழி, எப்படி இருக்க?”

நார்மலான குரலில் அவன் கேட்கவும், தயக்கம் உடைத்து பதில் அளித்தாள் மலர்.

“நான் நல்லாருக்கேன் சார். நீங்க எப்படி இருக்கீங்க?”

“ஹம்ம்… ஃபைன்” புன்னகைத்து அவன் சொல்ல, இவளின் முகமும் புன்னைகை பூசியது. அடுத்து அவன் கூறியதை கேட்டு அந்த புன்னைகை உறையவும் செய்தது.

“நான் இப்போ பேசறத, உனக்கு ஒரு அண்ணா இருந்தா என்ன பண்ணுவாங்களோ, பேசுவாங்களோ அப்படி நினைச்சுக்கோ மலர். ஓகே?”

“ஓகே சார்”

“குட். இப்போ சொல்லு, உனக்கு வினோத்தை எப்படி தெரியும்?”

தன் காதுகளையே நம்ப முடியாமல், திகைத்து உட்கார்ந்தாள் மலர்விழி. பின்பு, அவன் திரும்ப கேட்கவும் தான், வினோத் தனக்கு அறிமுகம் ஆனதை விளக்கிக் கூறினாள்.

“ஹோ.. அதுக்கப்புறம் எப்படி அவனோட ஃபிரண்டான?”

எதற்கு இப்படி துருவுகிறான், என புரியாமல் வினோத்தை சந்தித்த பொழுதுகளையும் ஒப்பித்தாள். நேற்று நடந்ததை மட்டும், “நேத்து கூட பார்த்தேன். கார்ல டிராப் பண்றேனு சொன்னாரு. நான் வேண்டாம்னு போயிட்டேன்” என முடித்துக் கொண்டாள்.

எல்லாவற்றையும் கேட்டுவிட்டு ஒரு முடிவுக்கு வந்தான் ஜீவா. கண்டிப்பாக வினோத்துக்கு இவளை பிடித்திருக்கிறது என்பதே அது! பெரு மூச்சை வெளியேற்றியபடி, கண்டிப்பான குரலில் பேசினான்.

“நீ சொல்றத பார்த்தா அவனுக்கு உன்னை பிடிச்சுருக்குனு நினைக்கிறேன். அவன்கிட்ட இருந்து எவ்வளவு விலகி இருக்க முடியுமோ அந்த அளவுக்கு டிஸ்டன்ஸ் மெயின்டேயின் பண்ணுமா. உன்னோட நல்லதுக்கு தான் சொல்றேன். ஜஸ்ட் ஒரு நட்புக்காக பழகுறனா ஓகே.

பட், அதுக்கும் மேலனா வேண்டாம். அவன் கூட உன்னோட லைப் நல்லாயிருக்காது. அதனால தான் சொல்றேன் புரிஞ்சிக்கோ…”

ஜீவா கூறியதை கேட்டு ஒன்றும் விளங்காமல், பேந்த முழி முழித்தாள் மலர்விழி. எதற்காக இப்படி கூறுகிறான், இல்லை இல்லை எச்சரிக்கை விடுகிறான்??

அவனிடமே கேட்டாள் மனதில் இருப்பதை. “சார், அவர் அன்னிக்கு ஆபீஸுக்கு வந்ததுனால, உங்களோட பிரெண்டுனு நினைச்சேன். பட், நீங்க இப்படி சொல்றீங்க?!”

ஒரு புருவ தூக்கலுடன் ஜீவாவின் முகம் பிடித்தமின்மையை அப்பட்டமாக காட்டியது. “அவன் என்னோட பிரெண்டா? நல்ல ஜோக்…”

“எதுக்கு சார் அவரோட சேர்ந்தா லைப் நல்லாயிருக்காதுனு சொல்றீங்க? ப்ளீஸ், சொல்ல முடியாதுனு மட்டும் சொல்லாதீங்க. எனக்கு கண்டிப்பா தெரிஞ்சுக்கணும். அவருக்கு எதாவது கெட்ட பழக்கம் இருக்கா? இல்ல வேற எதாவது…??”

மலர்விழி இழுத்த இழுப்பில், ஜீவா உடனடியாக பதில் கூற வேண்டியதாயிற்று. “சே சே.. அப்படி எல்லாம் இல்ல... அது உனக்கு சொன்னா புரியாது விடு.. ஃபோர்கெட் ஹிம்.”

“இல்ல சார்.. எனக்கு தெரிஞ்சுக்கனும்… சொல்லுங்க. அவர்கிட்ட என்ன பிரச்சனை? இத தெரிஞ்சிக்காம நான் இங்க இருந்து போக மாட்டேன்.”

எங்கிருந்து தான் மலர்விழிக்கு தைரியம் வந்ததோ, இப்படி பேச? அவள் கூறியதை கேட்டு கோபம் கொப்பளித்தது ஜீவாவின் முகத்தில். நாசி துடிக்க, மண்டையில் யாரோ கொட்டுவது போல் வலி எடுக்க, கத்தினான் ஜீவா.

“என்ன தெரிஞ்சுக்கனும் உனக்கு? ஹா… சொல்லு…..”

அடுத்து அவன் பேசிய வாக்கியங்களை கேட்டு மலர்விழியின் மனது திடுக்கிட்டது. அவளிடம் எல்லாவற்றையும் சொல்லவில்லை ஜீவா. ஏன் வினோத்தை மறுக்கிறான் என மட்டும் கோபமாக கூறினான்.

அதை கேட்டே திடுக்கிட்டு போனாள் மலர்விழி. அடுத்த வாரம் அன்பரசியின் வாயிலாக எல்லாவற்றையும் கேட்கும் போது என்னவாக இருக்குமோ அவள் ரியாக்ஷன்???
 
Last edited:
Top