Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Nee Enai Neengaathae Anbae 2

Advertisement

Admin

Admin
Member


பகுதி – 2

கிழக்கு கடற்காரை சாலை நான்காவது அவென்யுவில் மூன்றாம் எண் வீட்டில் காலை நேரம் ...

“விஜய்... டேய் விஜய் எங்க டா இருக்க? கஞ்சி ஆறுது பாரு சீக்கிரம் வா...”

“அவனை ஏன் இவ்வளவு காலையிலேயே தொந்தரவு பண்ற... நைட் ஹோட்டல்ல இருந்து வரும் போதே மணி ஒன்னு... இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டுமே...”

“நானா அவனைத் தூங்க வேண்டாம்ன்னு சொன்னேன். அவன்தான் சொன்ன பேச்சு கேட்காம சீக்கிரமே எழுந்துகிறான்.” என்று தன் தந்தையும் தாயும் தனக்காக வழக்காடுவதை ரசித்தபடி மாடிப்படியில் இறங்கினான் விஜய்.

தன் தாய் தந்தையின் அருகே வந்து இருவருக்கும் நடுவில் நின்றவன், அவர்கள் இருவரையும் அனைத்து “Good Morning pa… Good Morning ma…” என்று அவர்கள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட....

என்றும் போல் இன்றும் தங்கள் பிள்ளையின் அன்பில் நெகிழ்ந்தவர்கள் முகத்தில் தன் மகனை குறித்துப் பெருமிதமே இருந்தது.

“போதும் உன் மகனை ரசித்தது. அவன் பொண்டாட்டி வர்ற வரைதான் உன்னையும் என்னையும் கொஞ்சுவான். பிறகு நம்மைக் கண்டுக்கவே மாட்டான். நீ வேணா பாரு....” என்று செல்லமாக மகனை வம்புக்கு இழுத்த ஆரோக்கியராஜ் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.

“பேரில் மட்டும் ஆரோக்கியத்தை வச்சிருக்கும் ஆரோக்கியராஜ் அவர்களே... ஏன் இந்தப் பொறாமை உங்களுக்கு?”

“ரெண்டு முத்தம் தர்ற எனக்கு... இன்னும் ஒன்னு சேர்த்துத் தர்றது கஷ்ட்டமா என்ன?... அவளுக்கும் ஒரு முத்தம் தந்து கூல் பண்ணிட்டா போச்சு...” தந்தையின் பேச்சுக்குப் பதில் சொன்ன விஜய் தன் அன்னை அளித்த சத்துமாவு கஞ்சியை ரசித்துக் குடிக்க...

பெற்றோர் இருவரும் அவனை வாஞ்சையுடன் பார்த்திருந்தனர். கப்பை டேபிளில் வைத்த விஜய், தன் அன்னையைச் சோபாவில் உட்கார வைத்து... அவர் மடியில் தலை வைத்து வாகாகப் படுத்துக்கொள்ள...
“உன் பெரிய அண்ணன் US ல இருக்கான். உன் சின்ன அண்ணன் UK ல இருக்கான். நீ மட்டும்தான் இங்க இருக்க?” என்ற தன் தந்தையின் பேச்சின் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட விஜய்.....

“அதுல உங்களுக்கு ரொம்பக் கஷ்டமோ...... என்னையும் நாடு கடத்திட்டா.... நீங்க உங்க பொண்டாட்டியோட ஜாலியா இருக்கலாம்ன்னு பார்க்குறீங்க. ஆனா அது நடக்காது. நான் எங்க அம்மாவை விட்டு போகவே மாட்டேன்” என்றவன், தன் அன்னையின் இடையைக் கட்டிக்கொள்ள....

“அப்படிச் சொல்லுடா... என் ராஜா...” என்று அவனின் அம்மா மகனை ஆசையுடன் அணைத்துக்கொண்டார்.

“ஆமாம் ராஜாதான் உன் பிள்ளை... ஆனா கருப்பு ராஜா...” என்று ஆரோக்கியசாமி கேலி செய்ய.... விஜய் முகத்தில் இருந்த புன்னகை மேலும் பெரிதாக... ஆனால் அவன் அம்மாவின் முகம் வாடிவிட்டது.

அதைக் கவனித்த விஜய் “செல்வராணி மேடம் எதுக்கு இப்ப டென்ஷன் ஆகுறீங்க? அவர் உண்மைய தான சொன்னார்.” என்றான் இலகுவாக....

“கருப்பா இருந்தாலும் என் பிள்ளை அழகு....” செல்வராணி வாஞ்சையுடன் தன் மகனின் கன்னம் வழிக்க....

“காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு...” விடாமல் ஆரோக்கியராஜ் கேலி செய்தார்.

“அப்பா இதுதான் சாக்குன்னு உங்களைக் காக்கான்னு கேலி செய்றார் மா...எங்க அம்மா எவ்வளவு சிகப்பா அழகா இருக்காங்க. நீங்க எப்படி அப்படிச் சொல்லலாம்.” விஜய் தன் தந்தையிடம் சண்டைக்குச் செல்ல....

மகனின் குறும்பை ரசித்த செல்வராணி “என் மகன் என்னைப் போலப் பிறந்திருந்தா... நல்ல கலராதான் இருந்திருப்பான். ஆனா உங்களை மாதிரி பிறந்திட்டானே... அது ஒன்னுதான் என் மகன்கிட்ட குறை...” என்று தன் கணவரை தாக்கியவர்,

“மத்தபடி என் பையன் அழகுக்கு என்ன குறை... நல்லா உயரமா... ராஜாவாட்டம் இருக்கான்...” என்றார்.

“ஏன் உன் பையன் சிரிச்சா கன்னத்தில குழி விழுமே அதைச் சொல்லலை....” ஆரோக்கியசாமி எடுத்துக்கொடுக்க....
“ஆமாம் இல்ல அதை மறந்திட்டேனே...” செல்வராணி சொல்லும் போதே... அவரின் மடியில் இருந்து எழுந்து நின்ற விஜய் “போதும் நீங்க ரெண்டு பேரும் என்னை வர்ணிச்சது. நீங்க சொன்னாலும் சொல்லலைனாலும் நான் அழகு தான். என்று ஸ்டைலாகத் தன் சிகையைக் கோதியவன்,

“நான் ஜாக்கிங் போயிட்டு வரேன். அம்மா நீங்க போய்ச் சமையல் பண்ணுங்க. அப்பா நீங்க அம்மா பின்னாடியே சுத்தாம... போய்க் கொஞ்சம் நேரம் வெளியே காலாற நடந்திட்டு வாங்க.” என்று விட்டு விஜய் வெளியே செல்ல...

“ஒன்பது மணிக்கு ஜாக்கிங் போறானாம். ஜாக்கிங் போற மாதிரி நேரா ஹோட்டலுக்குத்தான் போவான். அங்க ரௌண்ட்ஸ் முடிச்சிட்டு வருவான் பாரு...” என்று தன் கணவர் சொன்னதற்குத் தலையசைத்தபடி செல்வராணி சமையல் அறைக்குச் சென்றார்.

விஜய் தன் தந்தை நினைத்தபடி தங்கள் ஹோட்டலுக்குத் தான் வந்திருந்தான். வீட்டில் எவ்வளவு விளையாட்டுத் தனமாக இருந்தானோ அதற்கு அப்படியே நேர்மாறாக... முகத்தில் இப்போது தான் ஒரு நிறுவனத்தின் முதலாளி என்ற தோரணை வந்திருந்தது.

சமையல் அறைக்குச் சென்று எல்லாம் சுத்தமாக இருக்கிறதா என்று சரி பார்த்தவன், அங்கிருந்த ஸ்டோர்கீப்பரிடம் தேவையான பொருட்கள் வந்துவிட்டதா என்று கேட்டு தெரிந்து கொண்டான்.

ECR என்று அழைக்கப்படும் கிழக்கு கடற்கரை சாலையின் முக்கியமான இடத்தில் விஜயின் Tulips Family Restaurant அமைந்துள்ளது. அந்த உணவகம் மூன்று பகுதிகளைக் கொண்டது. ஏசி வசதி கொண்ட இன்டோர் ஹால். அடுத்தது அவுட்டோர்... தோட்டத்திற்க்கு நடுவில் தனித் தனிக் குடில்களில் அமர்ந்து உணவு அருந்தலாம். கடைசியாக ரூப் கார்டன். அதாவது மேல் தளத்தில் சற்றுத் தூரத்தில் இருக்கும் கடலை ரசித்தபடி உணவு அருந்தலாம்.

இப்போது இருக்கும் அனைத்து ஹோட்டல்களிலும் பார் வசதி உள்ளது. ஆனால் விஜய் தன்னுடைய ஓட்டலில் மதுவை அனுமதிக்கவில்லை என்பதால்... இங்குக் குடும்பத்துடன் வருபவர்களே அதிகம்.

IT கம்பனிகள் சுற்றிலும் நிறைய இருப்பதால்.... மதிய நேரத்தில் ஹோட்டலில் கூட்டம் அலை மோதும். இரவும் ஓரளவு கூட்டம் இருக்கும். வார நாட்களில் இப்படி என்றால்.... வார இறுதியில் காதலர்கள் மற்றும் குடும்பத்துடன் வருபவர்கள் அதிகமாக இருப்பார்கள். அப்போது இரவு ஹோட்டலை மூட பன்னிரண்டு மணிக்கு மேல் கூட ஆகிவிடும்.

சௌத் இந்தியன், நார்த் இந்தியன், சைனீஸ் மற்றும் இட்டாலியன் உணவு வகைகள் இங்குக் கிடைக்கும். சுவையும் தரமும் அதோடு குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட ஏற்ற இடம் என்பதால்... இந்த ஹோட்டலுக்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வர ஆர்வம் காட்டினார்கள். ஹோட்டல் திறந்த இந்த ஒரு வருடத்தில் இது மிகப்பெரிய சாதனை தான்.

சுப்ரவைசரை அழைத்துப் பார்த்துக்கொளும்படி சொல்லிவிட்டு விஜய் வீட்டிற்குக் கிளம்பினான். அவர்கள் வீடு இங்கிருந்து ஓரளவு பக்கம் தான். உயர்தர மக்கள் வசிக்கும் பகுதியில் இவர்கள் ஒரு வில்லாவில் இருக்கிறார்கள்.

நடந்தே வீட்டிற்கு வந்தவன், குளித்து முடித்துச் சாப்பிட அமரும் போது நேரம் காலை பதினோரு மணி. விஜய் மதியம் சாப்பிட மூன்று அல்லது நான்கு மணி ஆகி விடும் என்பதால்... செல்வராணி அவனுக்குக் காலையில் முழுச் சாப்பாடே கொடுத்து விடுவார்.

மாலை மகனுக்காகச் செல்வராணி எதாவது டிபன் செய்து வைத்திருப்பார். இரவு இட்லி அல்லது சப்பாத்தி என்று எளிதான உணவை தான் எடுத்துக்கொள்வான்.

“Dad நீங்க சாயந்தரம் வெயில் குறைஞ்சதும் கிளப் போங்க... Mom நான் பசிச்சா அங்க பிரெஷ் ஜூஸ் குடிசிப்பேன். நீங்க என்னைப் பத்தியே யோசிக்காம மதியம் சாப்பிட்டதும் படுத்து நல்லா ரெஸ்ட் எடுங்க. evening சீக்கிரம் வரேன். bye.” என்று பெற்றோருக்கு அன்பு கட்டளைகள் இட்டு விட்டே விஜய் தன் பைக்கில் கிளம்பி ஹோட்டல் சென்றான்.
வீட்டில் அனைத்து வேலைகளுக்கும் ஆட்கள் இருக்கிறார்கள். செல்வராணி சமைத்தால்தான் அவர் கணவரும் பிள்ளைகளும் விரும்பி சாப்பிடுகிறார்கள் என்று சமையல் மட்டும் அவர் செய்வார்.

மாலை விஜய் வந்ததும், அவனுக்குச் சாண்ட்விச் மற்றும் காபீயை கொடுக்க... அவன் அதைச் சாப்பிடும் போதே... ஞாயிற்றுக் கிழமை என்பதால் அவனுடைய இரு அண்ணன்களும் ஸ்கைபில் வந்தனர்.

ஹாலில் இருக்கும் 80 inches LED டீவியில் இன்டர்நெட் தொடர்பு இருப்பதால்... அதிலேயே பார்த்து பேசிக்கொண்டனர்.
விஜய் சாப்பிட்டு விட்டுச் சோபாவில் வாகாகத் தன் அம்மாவின் மடியில் தலை வைத்தும், அப்பாவின் மடியில் கால் நீட்டியும் படுத்துக்கொள்ள... அந்தப் பக்கம் ப்ரித்வி மற்றும் ஜெப்ரி காதுகளில் இருந்து புகை வந்தது.

“ஹாய் big bro & small Bro…” விஜய் காலாட்டிக்கொண்டே கூலாகத் தன் அண்ணன்களை வரவேற்க....

“டேய் ! உன்னால ஒழுங்கா உட்கார்ந்து பேச முடியாதா... “ ஜெப்ரி கடுப்பாகக் கேட்க....

“வேனுண்டே நம்மள வெறுப்பேத்த பண்றான் டா...” என்றான் ப்ரித்வி புன்னகையுடன்...

“உங்களை மட்டும் இல்லை என்னையும் தாண்டா...” ஆரோக்கியசாமி அவரும் தன் இரு மகன்களோடு இணைந்து கொண்டார்.

“நானா பிரதர்ஸ் உங்களை US க்கும் UK வுக்கும் போகச் சொன்னேன். நீங்க ரெண்டு பேரும் உலகம் சுத்த.... நான் சொர்கமே என்றாலும் அது நம் ஊரை போல வருமான்னு... இங்க இருந்தா.... எதோ நான் உங்க ரெண்டு போரையும் கழுத்த பிடிச்சு தள்ளுன்ன மாதிரி பேசுறீங்க....”

“ஏன் பேச மாட்ட நீ... அம்மா அப்பா கூட இருக்கோம்ன்னு திமிரு உனக்கு....” ஜெப்ரி காட்டமாகச் சொல்ல...

“ஏன் நீயும் தான போன வருஷம் அம்மா அப்பாவை உன்னோட கொஞ்ச நாள் UK ல வச்சிருந்த... அண்ணா கூடவும் தான் US ல இருந்திட்டு வந்தாங்க. எதோ என்னோட மட்டும் இருக்கிற மாதிரி சொல்றீங்க.”

“நீ அப்போ ஆஸ்திரேலியால ஹோட்டல் மானேஜ்மெண்ட் படிக்கப் போய் இருந்த... அதனால அவங்க இங்க வந்தாங்க. இல்லைனா வருவாங்களா... இல்லை நீதான் அவங்களை விடுவியா...”

எப்போதும் ஜெப்ரிக்கும், விஜய்க்கும் இடையில் சண்டைதான் நடக்கும். இன்றும் அது தொடர... தன் பிள்ளைகள் சண்டையிடுவதைத் தாங்க முடியாத செல்வராணி “போதும் நிறுத்துங்க, எங்களுக்கு நீங்க மூன்னு பேரும் ஒன்னு தான். விஜய் அவங்க உன் அண்ணனுங்க... இனி அவங்களுக்குக் கல்யாணமாகி உனக்கு அண்ணிகளும் வரப்போறாங்க... இனியும் நீ முன்னாடி மாதிரி அவங்களை மரியாதை இல்லாம பேசக்கூடாது.” என்று தன் இளைய மகனை கண்டித்தவர்...

“அவன்தான் சின்னப் பிள்ளை. அவனிடம் நீ கொஞ்சம் விட்டு கொடுத்து போனா என்ன ஜெப்ரி. விஜய்க்குக் கல்யாணம் பண்ணி வச்சிட்டா.... அப்புறம் வர்ற பொண்டாட்டி அவனைப் பார்த்துப்பா... நானும் உங்க அப்பாவும் உங்க மூன்னு பேர் கூடவும் இருக்கோம் சரிதானா...” என்று தன் நடு மகனை சமாதனம் செய்தார்.

ஜெப்ரி சம்மதமாகத் தலை அசைக்க... தன் அம்மாவின் மடியில் இருந்து வேகமாக எழுந்த விஜய் “பொண்டாட்டி வந்திட்டா... அம்மா அப்பாவை மறக்கிறவன் நான் இல்லை. நீங்க ரெண்டு பேரும் எப்பவும் என் கூடத் தான் இருக்கணும். அவங்களை வேணும்னா இந்தியாவுக்கு வர சொல்லுங்க... ஆனா நீங்க எங்கையும் போகக் கூடாது...” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல...

தன் மகனின் செய்கை செல்வராணிக்கு வருத்தத்தைத் தந்தது. அவர் வருந்துவதைப் பார்த்து “அம்மா உங்களுக்கு விஜய் பத்தி தெரியாதா... எப்படி அவனுக்குச் சீக்கிரம் கோபம் வருதோ... அதே மாதிரி சீக்கிரம் போய்டும். நீங்க வேணா பாருங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் அவனே வருவான்.” என்று மூத்த மகன் ப்ரித்வி சமாதனம் செய்ய...

“சாரி மா என்னால தான். நான்தான் அவனை வம்பு இழுத்தேன்.” என்று ஜெப்ரி மன்னிப்புக் கேட்டான். ஜெப்ரி PHD bio technology முடித்துவிட்டு லண்டனில் இருக்கும் ஒரு பெரிய மருந்து தயாரிக்கும் கம்பெனியில் ஆரா ச்சியளாராகப் பனி புரிகிறான்.

“செல்வி நீ ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகிற? விஜய் ஹோட்டல் தொடங்க லோன் போடறேன்னு சொன்னான். அவன் சொன்னதை மறுத்து அவனுக்கு அவனோட ரெண்டு அண்ணனுங்களும்தான் பணம் கொடுத்தாங்க. நம்ம பிள்ளைங்க சண்டை போட்டாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் எப்பவும் விட்டு கொடுக்க மாட்டங்க.” ஆரோகியராஜின் சமாதனம் ஓரளவு வேலை செய்தது.

செல்வராணியும் தன் கவலையை ஒதுக்கி வைத்து விட்டு, இரு மகன்களையும் நலம் விசாரித்தார். இன்னும் நான்கு மாதத்தில் இருவருக்கும் ஒரு வார இடைவெளியில் திருமணம் நடக்க இருக்கிறது.

இரு திருமணங்கள் நடக்கப் போவதால் வீட்டில் ஏகப்பட்ட வேலைகள் இருந்தது. அது குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.
தன்னுடைய அறைக்கு வந்த விஜய்க்கு சிறிது நேரத்திலேயே தான் தேவையில்லாமல் கோபபட்டுவிட்டோம் என்று புரிந்தது. கோபம் குறைந்ததும் கீழே இறங்கி சென்றான்.
தன் பெற்றோர் இருவருக்கும் நடுவில் சென்று விஜய் அமர... அவனைப் பார்த்ததும் அனைவருக்கும் சிரிப்பு வர... அதை அடக்கிக்கொண்டு கல்யாண வேலைகளைப் பற்றி மேலே பேசினர்.

“நான் பார்த்துகிறேன் எல்லாத்தையும். நீங்க யாரும் டென்ஷன் ஆக வேண்டாம். நீங்க ரெண்டு பேரும் உங்க கல்யாணத்தைப் பத்தி கனவு கண்டுட்டு ஜாலியா இருங்க.” என்று விஜய் தன் அண்ணன்களிடம் சொன்னதைக் கேட்ட பெற்றவர்கள் மகிழ்ந்தனர்.

விஜய் பிஸ்னெஸ் நல்லா போகுதா... இன்னும் பணம் வேணும்னாலும் வாங்கிக்க. இன்னும் ஹோட்டலை பெரிசா டெவலப் பண்ணு.

இரு அண்ணன்களும் இதையே வெவ்வேறு விதங்களில் திரும்பத் திரும்பச் சொல்ல....

“போதும் உங்க அன்புத்தொல்லை தாங்களை... நான் வர்ற லாபத்தை வச்சே டெவலப் பண்ணிக்கிறேன். பணம் வேணும்ன்னா உங்களைக் கேட்காம வேற யாரை கேட்க போறேன்.” விஜய் சொன்னதை இரு அண்ணன்மாரும் ஏற்றுப் புன்னகைக்க... அதன் பிறகு மகிழ்ச்சியுடனே அவரவர் வேலையைப் பார்க்க சென்றனர்.


ராஜேஷ்க்கும், ஜெனிக்கும் நாட்கள் இனிமையாகக் கழிந்தது. கல்லூரியில் இருவரும் வகுப்பு நேரம் தவிர மற்ற நேரம் சேர்ந்தே இருந்தனர். இதனால் கல்லூரியில் ஜெனி, ராஜேஷ் காதல் விஷயம் வெகு வேகமாகப் பரவியது.
 
Top