Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Nee Enai Neengathae Anbae 4

Advertisement

Admin

Admin
Member
நீயெனை நீங்காதே அன்பே





பகுதி – 4

இரு அண்ணன்களும் வெளிநாட்டில் இருந்து வருவதால்... விஜய்யின் வீடே விழாக்கோலம் கொண்டிருந்தது. ப்ரித்திவி மற்றும் ஜெப்ரியின் பதிவு திருமணம்தான் முதலில் நடப்பதாக இருந்தது. அப்போது தான் அவர்கள் மனைவிக்கு விசா வந்து அவர்களுடன் அழைத்துச் செல்ல சரியாக இருக்கும்.

ப்ரித்வி மற்றும் ஜெப்ரி வருவதற்கு ஒரு நாள் முன்பே பாண்டிச்சேரியில் இருந்து ஜோசப்பின் குடும்பம் ஆரோக்கியராஜின் வீட்டிற்க்கு வந்தனர். ஜோஸப் செல்வராணியின் உடன் பிறந்த சகோதரர். அவருடைய மூத்த மகள் ப்ரின்சியைத்தான் ஜெப்ரிக்குத் திருமணம் செய்ய இருக்கின்றனர்.

ஜோசப்பின் குடும்பத்தை ஆரோக்கியராஜ் செல்வராணி தம்பதியினர் சிறப்பாக வரவேற்றனர். ஏற்கனவே இரு குடும்பமும் உறவு என்பதால்...அவர்களிடையே சம்ப்ரதாயப் பேச்சுக்கள் இன்றி உரிமையாகப் பேசி பழகினர்.

“கல்யாண வேலை எல்லாம் எப்படி நடக்குது அண்ணி” ஜோசப்பின் மனைவி பானு கேட்க...

“பத்திரிகை வைக்கிற வேலை முடிஞ்சது. வீடு பெய்ண்டிங் வேலையும் முடிஞ்சது... ப்ரித்திவி ஜெப்ரியை அங்கிருந்தே அவங்களுக்கு டிரஸ் வாங்கிட்டு வர சொல்லிட்டேன். ரெண்டு மருமகள்களுக்கும் புடவை எடுக்கிற வேலை மட்டும்தான் இருக்கு.” என்றார் செல்வராணி.

ப்ரின்சி அழகாக இருந்தாள். அவளைப் பார்த்து புன்னகைத்த செல்வராணி “நல்லாயிருக்கியா டா... ரொம்பக் களைப்பா தெரியிரியே... சாப்பிடுவோமா...” என்றவர் மற்றவர்களையும் சாப்பிட அழைத்தார்.

எல்லோரும் உணவு மேஜைக்கு வந்து அமர்ந்ததும், உணவு பரிமாறிக்கொண்டே வந்த செல்வராணி ப்ரின்சியின் தங்கை லின்சி அமைதியாக இருப்பதைப் பார்த்து,

“என்ன லின்சி உடம்பு சரியில்லையா... அமைதியா இருக்க” என்று கேட்க....

“ஹப்பா... உங்களுக்கு இப்ப தான் என்னைத் தெரியுதா... உங்க மருமகளை மட்டும் கவனிக்கிறீங்க. என்னைக் கண்டுக்கவேயில்லை... நான் உங்க பேச்சுக் கா...” லின்சி பொய் கோபம் கொண்டு சொல்ல...

அதைக் கண்டு அனைவரும் சிரிக்க... “நீயும் எனக்கு என் அண்ணனோட பொண்ணு தானே டா.... அப்ப நீ மட்டும் என் மருமகள் இல்லையா... நீ எப்பவுமே நல்லா பேசுவ... ப்ரின்சி நாம கேட்டாதான் சொல்லுவா... அதனால் அவளைக்கேட்டேன்.” செல்வராணி சொன்னதும்,

“ஏன் விஜய்யை கல்யாணம் பண்ணிகிட்டா... நீயும் இந்த வீட்ல உரிமையான மருமகள் ஆகிடுவ... ஆனா நீ தானே சொல் பேச்சு கேட்க மாட்டேங்கிற...” ஜோஸப் சமயம் கிடைத்தது என்று தன் மனதின் ஆசையைக் கோடிட்டு காட்ட....

லின்சி அவர் சொன்னது காதில் விழாதது போல் சாப்பிட...

“அவளுக்கு வர்ற மாப்பிள்ளை அவளை மாதிரியே நல்லா கலரா... அதோட வெளிநாட்டில இருக்கனும்ன்னு நினைக்கிறா அண்ணி. பிள்ளைங்க மனசுப்படி தான நாம பார்க்க வேண்டியதா இருக்கு.” பானு தன் மகளுக்குப் பரிந்து பேச...

அவர் விஜய்யை மறைமுகமாக மட்டம் தட்டி பேசுவதைக் கேட்ட ஆரோக்கியராஜ் செல்வராணியைப் பார்க்க...

“நீ சொல்றது சரிதான் பானு. விஜய்க்கு யாருக்கு கீழயும் வேலை செய்றது ஒத்து வராது. அதோட விஜய்க்கு வர்ற கோபத்துக்கு அவனுக்கு வர்ற பொண்டாட்டி அமைதியானவளா இருந்தாதான் நல்லது. லின்சி படப் படன்னு பேசுற டைப். நாளைக்கு இவங்க கல்யாணம் செஞ்சுகிட்டாலும்... ஒத்துப் போகறது கஷ்டம்தான்.”

“விஜய் இந்த வயசுலேயே ஒரு நிறுவனத்தை நடத்தி வர்றதை பார்த்து அவனுக்குப் பொண்ணு தர... நிறையப் பேர் விரும்புறாங்க. ஆனா அவனுக்கு இருபத்தி ஆறு வயசுதான் ஆகுது. அதனால நாங்க தான் ரெண்டு வருஷம் கழிச்சு பார்க்கலாம்ன்னு இருக்கோம்.”

பானு தன் மகள் பெரிய உலக அழகி என்று நினைத்து பேசியதற்குச் செல்வராணியும் உன் மகள் என் மகனுக்கு வேண்டாம். அவனுக்குப் பெண் தர நிறையப் பேர் இருக்கிறார்கள் என்று மறைமுகமாகப் பதில் சொல்லிவிட... பானுவின் முகமும், லின்சியின் முகமும் உர்ரென்று இருந்தது.



“விஜய் எங்க மா? சாப்பிட வீட்டுக்கு வர மாட்டான்னா...” ஜோஸப் விசாரிக்க...

“அவன் மதியம் சீக்கிரமே சாப்டிட்டு ஹோட்டல் போய்டுவான் அண்ணா. இனி சாயந்திரம் தான் வருவான்.” பதில் சொன்ன செல்வராணி அவர்கள் சாப்பிட்டதும், அவர்களை விருந்தினர் அறைக்குச் சென்று ஒய்வு எடுக்க அனுப்பி வைத்தார்.

மாலை வந்த விஜய் “புதன் கிழமை ரெஜிஸ்டர் மேரேஜ்க்கு தேவையான எல்லா வேலையும் முடிச்சாச்சு. காலையில பத்து மணிக்கு அங்க போறோம். கையெழுத்து போடுறோம். பிறகு மதியம் சாப்பிட நம்ம ஹோட்டலுக்கு வர்றோம்.”

“பெரிய விருந்துக்கு ஏற்பாடு பண்ணி இருக்கு. சந்தோஷமா மா... “ தன் அன்னையைப் பார்த்து கேட்க...

“நீ இருக்கும் போது எனக்கு என்னப்பா கவலை...”செல்வராணி மகனின் கன்னம் வருட...

“போதும் எதோ சின்னப் பிள்ளைய கொஞ்சுற மாதிரி கொஞ்சுரீங்க. பெரிய எருமை ஆகியாச்சு...” சொன்னபடி அங்கே வந்த லின்சி விஜய்யை பிடித்துத் தள்ளிவிட்டு அவள் செல்வராணியின் அருகே உட்கார...

“ஹாய் ஹன்சிகா... எப்ப வந்த?.... நீங்க ஏன் மா லின்சி வந்ததைச் சொல்லலை...” என்றபடி விஜய் லின்சியின் முகத்தை ஓரக்கண்ணால் பார்க்க... அவன் நினைத்தது போல் அவள் முகம் பெருமையில் பூரிக்க...

“இன்னைக்குத் தான் வீட்டுக்கு அரிசி மூட்ட அனுப்பினேன்... சொல்லியிருந்தா சேர்த்து இன்னும் ரெண்டு மூட்ட அனுப்பியிருப்பேன் இல்ல....பாருங்க இப்ப பத்துமோ இல்லையோ...”

“நீங்க பாட்டுக்கு அரிசி பத்தாதுன்னு ஆக்கி போடாம இருந்துடாதீங்க... நல்லா ஆக்கி போடுங்க வளர்ற பிள்ளை இல்ல....” என்றபடி விஜய் கையால் அவள் குண்டு என்று செய்கையில் காண்பிக்க....
லின்சிக்குக் கோபம் வந்து விட்டது. அவள் அவனை முதுகில் அடிக்க... விஜய் பதிலுக்கு அவளைத் தலையில் குட்ட... அதைப் பார்த்து சிரித்தபடி ப்ரின்சி அங்கே வந்தாள்.
பழக்கதோஷத்தில் அவளைப் பார்த்ததும் “ஹாய் ப்ரின்சி ..” என்று ஆரம்பித்த விஜய், அவன் அம்மா அவனின் தொடையில் நறுக்கென்று கிள்ளியதால்... “ஹாய் சின்ன அண்ணி...” என்றான் வலியில் முகத்தைச் சுருக்கிக் கொண்டு...

செல்வராணிக்கு உடன்பிறந்த சகோதரர்கள் நான்கு பேர் அதில் ஜோஸப் தான் கடைசிச் சகோதரர் என்பதால்... செல்வராணிக்கு மூன்று பிள்ளைகள் பிறந்த பின் தான் அவருக்குத் திருமணம் நடந்தது. அதனால் விஜய்க்கும் ப்ரின்சி இளையவள் தான்.

சிறு வயதில் இருந்தே சேர்ந்தே இருப்பதால்.... வா... போ... என்றே பேசி பழகியதில் அண்ணி என்று அழைக்க விஜய்க்கு வருவதில்லை...



“ஹாய் விஜய் எப்படி இருக்க?...ஏன் முகத்தை ஒரு மாதிரி வச்சிருக்க” ப்ரின்சி கேட்டதற்கு “பின்ன என்ன அண்ணி நீங்க மட்டுமா வர்றீங்க.... வரும் போதே இந்தக் குண்டோதரியையும் கூடிட்டு வந்துடுறீங்க.... இது அடிச்சா தாங்கிற உடம்பா எனக்கு...” விஜய் பரிதாமாக முகத்தை வைத்துக்கொண்டு செல்ல...

“நான் உனக்குக் குண்டா.... நீ தாண்டா காட்டெருமை...” லின்சி கத்த.... “நீ வெள்ளை பன்னி டி...” விஜய் பதிலுக்கு வார.... அது அந்த வீட்டில் வழக்காமாக நடைபெரும் சண்டை என்பதால்... செல்வராணியும், ப்ரின்சியும் கண்டுகொள்ளாமல் அவர்கள் கதையைப் பேச ஆரம்பித்தனர்.

ஜோஸப்பிற்கு இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என்று மூன்று பிள்ளைகள். மகன் கடைசி என்பதால் அவன் இப்போதுதான் பதினோராம் வகுப்பு ஊட்டி கான்வென்டில் படித்துக்கொண்டிருக்கிறான். மகன் ஹாஸ்டலில் இருப்பதால் லின்சிதான் அவர்கள் வீட்டின் செல்ல வாரிசு.

மறுநாள் விடியற்காலையில் முதலில் ஜெப்ரி வரும் விமானமும் அடுத்து ஒரு மணி நேரத்தில் ப்ரித்வி வரும் விமானமும் வருவதால் வீட்டினர் அவர்களை வரவேற்க விமான நிலையம் செல்வதாக இருந்தது.

விமான நிலையத்திற்குச் செல்ல ப்ரின்சி தன்னைப் பார்த்துப் பார்த்து அலங்காரம் செய்து கொண்டு வந்தாள். லின்சி ஒரு குட்டை பாவடையும் டைட் டிஷர்ட்டும் அணிந்து வர... அவளைப் பார்த்து விசிலடித்த விஜய் “நீ இந்த டிரஸ் போட்டுட்டா... வரப்போற...” என்றான் கேலியாக....

“ஆமாம் ஏன் இந்த டிரஸ் நல்லா இல்லையா...” லின்சி கேட்க...

“டிரஸ் நல்லா இருக்கு... ஆனா கொஞ்சம் ஒல்லியா இருக்கிறவங்க போட்டா சூப்பரா இருக்கும்.” விஜய் சொன்னதும்,

லின்சி “அம்மா பாருங்கம்மா எப்ப பாரு இந்த விஜய் என்னைக் குண்டுன்னு கேலி பண்றான்.” என்றாள் அங்கே வந்த பானுவை பார்த்து....

“ஏன்ப்பா விஜய் அவ என்ன குண்டாவா இருக்கா... கொஞ்சம் பூசினா போல இருக்கா... இப்படி இருந்தா தான் அழகு தெரியுமா...” பானு மகளுக்குப் பரிந்து பேச....

பூசணிக்கா மாதிரி இருந்துட்டுப் பூசினா போலையாம் என்று மனதிற்குள் வியந்த விஜய்... வெளியே ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் புன்னகையுடன் அங்கிருந்து சென்றான்.

விமானநிலையத்தில் ஜெப்ரி வந்ததும் விஜய்யும், லின்சியும் சேர்ந்து அவனுக்கு ஆர்ப்பாட்டமான வரவேற்ப்பு அளித்தனர். சின்ன வயதில் இருந்தே ஜெப்ரியை தெரியும் என்பதால்... ப்ரின்சியும் அவர்களோடு சேர்ந்து கொண்டாள்.

அவர்களுடைய வரவேற்ப்பு முடிந்ததும், ஜெப்ரி தன் பெற்றோரிடம் செல்ல... செல்வராணி மகனை வாஞ்சையுடன் அணைத்து அவன் நெற்றியில் முத்தமிட்டார். சிறிது நேரம் எல்லோருமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

ப்ரித்வி வரும் விமானம் மேலும் ஒரு மணி நேரம் தாமதம் என்பதால்... அவனுக்காக மற்றவர்கள் காத்திருந்தனர். அந்த நேரத்தில் ஜெப்ரியும், ப்ரின்சியும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருன்தனர்.

சிறிது நேரத்தில் ஸ்டீபன் அரக்கபரக்க உள்ளே நுழைந்தார். அவருடன் அவர் மனைவி லீனா மகள்கள் புனிதா மற்றும் ஜெனியும் வந்தனர்.

விஜய் அன்றுதான் தன் முதல் அண்ணியை நேரில் பார்கிறான். இதற்க்கு முன்பு புகைப்படத்தில் பார்த்ததோடு சரி... அதனால் அவன் ஆர்வமாகப் பார்க்க... காட்டன் சுடிதாரில் எளிமையாக வந்திருந்த புனிதா அதிலேயே அழகாக இருந்தாள்.

விஜய்க்கு மிகவும் திருப்தியாக இருந்தது. “அம்மா ரெண்டு அண்ணியும் சூப்பர் இல்லமா... ரெண்டு அண்ணணுமே லக்கி.” என்றான் மனதிலிருந்து...

செல்வராணி மகனை பார்த்து அமோதிப்பாகப் புன்னகைக்க... அப்போது ஸ்டீபன் குடும்பம் அருகில் வந்தது. அவர்கள் நெருங்கி வந்ததும்தான் கடைசியாக வந்த ஜெனியை விஜய் பார்த்தான்.

யாரிந்த தேவதை என்று தான் முதலில் அவனுக்குத் தோன்றியது. புனிதாவை போலவே ஜெனியும் காட்டன் சுடிதார் அணிந்து, அலசியிருந்த கூந்தலை நடுவில் மட்டும் சென்டர் கிளிப் மாட்டி விரித்து விட்டிருந்தாள்.

அலையான கேசம் அவள் மார்பில் தவழ... மையிட்டிருந்த விழிகள் அலைபாயச் சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடி வந்தாள்.

அவர்கள் அருகில் வந்ததும் செல்வராணி எழுந்து நின்று அவர்களை வரவேற்க...

“நல்லா இருக்கீங்களா... கொஞ்சம் லேட் ஆகிடுச்சு...” என்று ஸ்டீபன் தயங்கிக் கொண்டே சொல்ல...

“பரவாயில்லை இதுல என்ன இருக்கு? ப்ரித்வி வர்ற ப்ளைட் லேட்தான். ஒன்னும் அவசரம் இல்லை...” என்றார் ஆரோக்கியசாமி. அவர்களைப் பார்த்ததும் ஜெப்ரியும் ப்ரின்சியும் எழுந்து வந்தனர்.

புனிதா பெரியவர்களுக்கு மரியாதையாக வணக்கம் சொல்ல... அவளைப் பின்பற்றி ஜெனியும் பெரியவர்களை வணங்கினாள். செல்வராணி தன் மூத்த மருமகளைத் தன் அருகில் அமர வைத்துப் பேசிக்கொண்டிருந்தார்.

செல்வராணியின் கையை மறுபக்கத்தில் அமர்ந்திருந்த விஜய் சுரண்ட... “என்ன டா...” என்று சலிப்பாக அவர் விஜய்யை பார்க்க...



“உங்க மேல நான் கோபமா இருக்கேன். நீங்க என்னோட பேசாதீங்க.” விஜய் கோபமாக இருப்பது போல் நடிக்க......

“ஏன்?” செல்வராணி புன்னகையுடன் கேட்க...

“புனிதா அண்ணிக்கு இப்படி ஒரு அழகான தங்கை இருக்குன்னு நீங்க சொல்லவே இல்லை...” விஜய் அவர் காதில் கிசுகிசுக்க...


அவனைப் பார்த்துப் பொய்யாக முறைத்த செல்வராணி “அவங்க அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்... புனிதாவை இங்க கூடிட்டு வர மாட்டேன்னுதான் சொன்னார். நான்தான் பேசி வரவச்சேன்.”

“நீ அவர் பெண்ணைச் சைட் அடிக்கிறேன்னு தெரிஞ்சது... இனிமே ஜெனியை உன் கண்ணிலேயே காட்ட மாட்டார் தெரிஞ்சிக்கோ...” என்றதும்,

விஜய் புன்னகையுடன் “நான் பார்க்கணும்ன்னு நினைச்சிட்டா... அதை யாரும் தடுக்க முடியாது.” என்றான்.

“உனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கா... நான் வேணா உனக்கு அந்தப் பெண்ணைக் கேட்கட்டா....” செல்வராணி சொன்னதும்.

“வேண்டாம்...” என்று பட்டென்று சொன்ன விஜய் “கொஞ்சம் அழகா இருக்கிற லின்சியே என்ன ஆட்டம் ஆடுது.... இந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்கு.” என்றான்.

மகன் என்ன நினைக்கிறான் என்று தாய்க்கா புரியாது. அவன் கருப்பு என்பதால் யோசிக்கிறான் என்று புரிந்து கொண்டவர், மகனை வருத்தமாகப் பார்க்க... அவரைப் பார்த்து கண்சிமிட்டி விட்டு விஜய் அங்கிருந்து எழுந்து சென்றான்.

விஜய் சென்று அனைவருக்கும் குளிபானம் வாங்கி வர... அவன் ஒருவனே எடுத்து வருவதைப் பார்த்து... ஜெப்ரி எழுந்து சென்று அவனிடமிருந்து கொஞ்சத்தை வாங்கிக் கொண்டான்.

இருவருமாகச் சேர்ந்து எல்லோருக்கும் கொடுத்தனர். கடைசியாக மீதம் இருந்த இரண்டில் ஒன்றை ஜெனியிடம் விஜய் கொடுக்க... “தேங்க்ஸ் அத்தான்.” என்று ஜெனி வாங்கிக்கொள்ள... விஜய் புன்னகையுடன் அங்கிருந்து சென்றான்.

ப்ரிதிவ்ராஜ் வருவதைப் பார்த்ததும் அனைவரும் எழுந்து நிற்க... தூரத்தில் வரும்போதே ப்ரித்வியின் விழிகள்... தன் மனம் விரும்பிகளைத் தேடி சுழன்றது.


குடும்பத்தின் தலைமகன் என்பதற்கு எடுத்துகாட்டாக வந்ததும் தன் தாயை அணைத்தவன், தன் தந்தையையும் நலம் விசாரிக்க... ஆரோக்கியசாமி மகனை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தார்.
ப்ரித்வி அடுத்து தன் தம்பிகள் இருவரையும் சேர்த்து அணைக்க... மூவரும் ஒருவரை ஒருவர் அனைத்துகொண்டது பெற்றவர்களின் விழிகளைக் கலங்க செய்தது.

“ஏசுவே மூன்னு பேரும் இன்னைக்கு போல என்னைக்கும் ஒத்துமையா இருக்கணும்.” செல்வராணி பிரத்தனை செய்ய...

சகோதரர்களின் பாச பிணைப்பை பார்த்து மற்றவர்கள் நெகிழ்ச்சியுடன் நின்றனர். தன் மகன்கள் மூவரையும் பார்த்த செல்வராணி தன் பார்வையைத் திருப்ப.... அங்கே புனிதா ப்ரின்சியோடு இணைந்து நின்ற ஜெனியையும் பார்த்தவர் இறைவனிடம் அடுத்த வேண்டுதலை வைத்தார்.
 
Top