Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

POOKAL POOKUM THARUNAM - 18

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம் 18

பரத்தின் அப்பா பேசுவதை அறிந்த நளினா ஒரு நொடி அதிர்ந்து பின் தன்னை சமாளித்துக்கொண்டு, “ம்ம் சொல்லுங்க” என்றாள்.


“நேத்து பரத் கால் செஞ்சு இருந்தப்போ உனக்கு இன்னிக்கு பர்த்டேன்னு சொல்லியிருந்தான், அதான் விஷ் பண்ணலாமேன்னு தான் உன் கிட்ட கொடுக்க சொன்னேன்.. மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் நளினா” என்றார்.


“தேங்க்ஸ் அங்கிள்”.


“நீங்க ரெண்டு பேரும் இப்போ ப்ரீயா இருக்கீங்களா?” என்று கேட்டார் அருணாசலம்.


“இப்போ”... என்று இழுத்து சற்று தள்ளி நின்றிருந்த பரத்தை திரும்பி பார்த்தாள்.


“உன்னோட பேரெண்ட்ஸ் இப்போ தான் பேசினாங்க...அவங்க சொன்னது பற்றியும், அப்புறம் கொஞ்சம் எங்களை பற்றியும் உன் கிட்ட பேசலாம்ன்னு நாங்க நினைக்கிறோம்... அதான் கேட்கறேன்.. நீங்க ரெண்டு பேரும் ப்ரீயா இருக்கும்போது பேசலாம் சரியாம்மா?” என்றார்.


“ம்ம் சரி அங்கிள்”. என்று நளினா சொன்னவுடனே,”சரிம்மா நீங்க அப்புறம் கால் பண்ணுங்க” என்று போனை ஆப் செய்தார் அருணாச்சலம்.


நளினா தொடர்பு துண்டிக்கப்பட்ட போனையே சிறிது நேரம் காதில் வைத்துக்கொண்டே நின்றாள்.


அவள் ஒன்றும் பேசாமல் நின்றிருந்ததை பார்த்த சஹி நளினாவின் தோளை தொட்டு, “என்ன நளின்?” என்றாள்.


சஹி தொட்டதும் தன்னிலை அடைந்த நளினா “ஒன்றுமில்லை” என்பது போல ஜாடைக்காட்டி பரத்தை நோக்கி சென்றாள்.


“பரத், அங்கிள் நம்ம கிட்ட பேசணும்னு சொல்றார்.... என்ன விஷயம்னு தெரியுமா? என்றாள் நளினா.


“ம்ம் எனக்கும் தெரியும்.”


“அப்படின்னா இன்னும் வேற யாருக்கு தெரியும்?”


“அவ்யுக்த்க்கும் தெரியும் நளினா”.


“சரி நாம இப்போ இங்க இருந்து கிளம்பலாம்... ஏதாவது பார்க்ல போய் உட்கார்ந்து பேசலாம்.. “ என்றபடியே சஹி மற்றும் அவ்யுக்தை இங்கே வருமாறு கையை ஆட்டினாள்.


அவர்களிருவரும் அருகே வந்ததும், “இப்போ நாம பார்க் போலாமா? உங்களுக்கு டைம் இருக்கா?” என்றான் பரத்.


பரத்தின் முகத்தை கூர்ந்து கவனித்துக்கொண்டே, “எனக்கு ஓகே, தியா உனக்கு? என்றான் அவ்யுக்த்.


“ம்ம் போலாம் அவ்யுக்த், நான் லேட்டா தான் வருவேன்னு ஏற்கனவே நான் சொல்லிட்டேன்” என்றாள் சஹி.
எல்லோரும் கிளம்பி பார்க்குக்கு சென்றனர்.


அங்கே சென்றதும் நளினா தன் பேச்சை ஆரம்பித்தாள், “சொல்லு பரத் என்ன விஷயம்?” என்று நேராக விஷயத்திற்கே வந்தாள்.


“நான் நேத்து உன் கிட்ட பேசிட்டு போன பிறகு வீட்டுக்கு போய் அவ்யுக்த் கிட்ட பேசிட்டு தான் என் பாமிலி கிட்ட பேசினேன் நளின்” என்று அவ்யுக்திடம் பேசியதை பற்றி எல்லோரிடமும் பகிர்ந்துக்கொண்டான்.


அவ்யுக்த்க்கு பரத் சொல்லுவதை கேட்டுக்கொண்டிருக்கும் போதே நேற்று அவனுடன் உரையாடியது மனக்கண்ணில் வந்தது.


(நேற்று)
தியாவிடம் தன் காதலை எப்படி சொல்லுவது என்று யோசித்துக்கொண்டிருந்தான் அவ்யுக்த். நாளை எப்படி தங்களுக்கு தனிமை ஏற்படுத்திக்கொள்வது என்று முதலில் யோசித்துக்கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டான். திடீரென்று தியாவை நான் தனிமையில் அழைத்து பேச முடியாது என்ன பண்ணலாம் என்று யோசிக்கும்போதே அவனுக்கு பரத்தின் நியாபகம் வந்தது. இந்த பாரத்தை கூப்பிட்டு நளினாவுடன் கொஞ்ச நேரம் தனிமையில் ரொமான்ஸ் பண்ணுடா ன்னு சொல்லிட்டு தியா கூட பேசலாம் என்று நினைத்துக்கொண்டான். உடனே தன் போனை எடுத்து பரத்திற்கு கால் செய்தான் அவ்யுக்த்.


முதல் ரிங்லேயே பரத் போனை எடுத்ததும் ஆச்சர்யமடைந்த அவ்யுக்த், “என்னடா பரத் பர்ஸ்ட் ரிங்லேயே எடுத்துட்ட?” என்றான்.


“இப்போ தான்டா போனை எடுத்து உனக்கு கால் பண்ணலாம்னு போனை எடுத்தேன் அதுக்குள்ள நீயே கால் பண்ணிட்ட” என்றான் பரத்.


பரத்தின் குரலில் இருந்த வருத்தம், தான் சொல்ல வந்ததை பின்னடைய வைத்து, “என்னடா என்ன பிரச்சினை?” என்று பரத்திடம் கேட்க வைத்தது அவ்யுக்த்க்கு.


“அவ்யுக்த், அதுவந்து...” என்று ஆரம்பித்து நளினாவுடன் பேசியதை பகிர்ந்துக்கொண்டான்.


“அவ அப்பா என் பேரெண்ட்ஸ் கூட பேசணுமாம் அதுமட்டுமில்லாம கல்யாணத்தையும் கூடவே இருந்து நடத்திக்கொடுக்கனுமாம் அவ்யுக்த்.”


“இப்போ தான் நளினாவை அவங்க வீட்டுல விட்டுட்டு வரேன், நாளைக்கே அவ அப்பாக்கு எங்க வீட்டோட பேசணுமாம், நானும் இன்னிக்கே அவங்க கிட்ட பேசிடறேன் நீங்க நாளைக்கு அவங்க கூட பேசலாம்னு பெரிய இவன் மாதிரி சொல்லிட்டு வந்துட்டேன்... பட் என்னால தான் என் பாமிலிக்கு கால் செய்ய முடியலை... மைன்ட் ரொம்ப டிஸ்ட்ரப்பா இருக்கு டா, உன் கிட்ட பேசினாலாவது மைன்ட் காம் ஆகுமேன்னு தான் உனக்கு கால் செய்ய போனை எடுக்கும்போது நீயே பண்ணிட்ட டா” என்று சொல்லிமுடித்தான் பரத்.
பரத்தின் மனநிலையை அறிந்த அவ்யுக்த் தன் விஷயத்தை மறந்தான். இப்பொழுது பரத்தின் மனதை மாற்றி அவன் பாமிலி கூட பேச செய்யவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க, “நீ இப்போ இங்க வரியாடா?” என்றான் அவ்யுக்த்.


“இல்லை டா இப்போ தான் வந்தேன் மறுபடியும் கார் ஓட்ட பிடிக்கலை டா... பரவாயில்லை டா நீ போன்லேயே பேசு...நான் கேட்க...” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவன் காதில் கேட்டது அந்த பக்கம் போனை கட் செய்ததற்கான ஒலி. “ம்ம்...” என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே தன்னுடைய போனை ஆப் செய்தான் பரத்.


இரவு நேரம் ட்ராபிக் குறைச்சலாக இருந்ததால் பரத்தின் வீட்டை சீக்கிரமாகவே வந்தடைந்தான் அவ்யுக்த்.


வாசலிலேயே அவனை எதிர் கொண்ட பரத் “உள்ள வாடா” என்று அவ்யுக்த்தை அழைத்தான்.


அவனையே உற்று கவனித்துகொண்டிருந்த அவ்யுக்த், “உள்ள வேண்டாம்... வெளியே மூன்லைட்ல நடந்துட்டு வரலாம் வா,” என்றான்.


வெளியே இருந்த பூக்களை பார்த்தவுடன் அவ்யுக்த்க்கு தியாவின் நினைவு மனதிலே ஒரு நிமிடம் வந்தது. பேப்பரில் வந்த பூந்தோட்டம் போன்ற அமைப்பில் எழுதியிந்த வாசகங்கள் கண் முன்னே வர, மனதை அதன் போக்கிலே அலைபாய விட்டான். சில நொடிகளில் தன் மனதை கட்டு படுத்தி பரத்திடம் தன் கவனத்தை செலுத்தினான்.


“சொல்லு பரத், இப்போ ஏன் இப்படி இருக்க?” என்றான் அவ்யுக்த்.


“அவ்யுக்த், உனக்கே தெரியும் நானே போன் பண்ணி பேசினது இல்லை...., அவங்க பேசினாலும் என்னால ப்ரீயா பேச முடியாது..., கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி போனை கட் பண்ணிடுவேன், இப்படி இருக்கும் போது நானே எப்படி கால் பண்றதுன்னு இருக்கு டா..,” என்று சிறிது நிறுத்தினான்.


சில நொடிகள் கழித்து பரத்தே தொடர்ந்தான். “எனக்கு நளினாவின் அப்பா சொல்வதை ஏத்துக்கவும் முடியலை..., அதேசமயத்துல என்னால அவங்க சொல்றத மறுக்கவும் முடியலை” என்று சொல்லிவிட்டு ஒரு கையால் தலை முடியை கோதினான் பரத்.


“பரத், உன்னோட நிலை எனக்கு புரியுது டா, பட் நீ கொஞ்சம் நளினாவின் நிலையையும் யோசிச்சு பாரு.”


“புரியுதுடா, நளினா வீட்டுலே எங்க காதலை எதிர்க்கலை பட் எங்க கல்யாணத்துக்கு கண்டிஷன் போடறாங்க... இதுக்கு நளினாவும் சப்போர்ட் பண்றா.. என்னால முடியலை டா.. நான் பேசணும்னு நினைச்சாலே சின்ன வயசுல பட்ட வலிகளை விட என் குடும்பத்துக்காக ஏங்கினது தான் டா கண் முன்னாடி வருது..” என்று சொல்லிக்கொண்டிருந்த பரத்தின் குரல் கம்மியிருந்தது.
அவனை சமாதன படுத்தும் எண்ணத்தில், பரத்தின் தோளை அணைத்து லேசாக தட்டிக்கொடுத்தான் அவ்யுக்த்.


“டேய் அவ்யுக்த் உனக்கே தெரியும் நான் எவ்ளோ முரடனா இருந்தேன்னு.. கௌசிம்மாவும் நீயும் இல்லைன்னா இப்போ இந்த மாதிரி நிலைல நான் இருந்திருக்கவே முடியாது டா... ஒரு ட்ரக் அடிக்ட்டாவோ இல்லன்னா... தேசதுரோகியாகவோ தான் டா இருந்திருப்பேன்....” என்று நிறுத்தி அவ்யுக்த்தை கலங்கும் கண்களுடன் ஏறிட்டான் பரத்.


“டேய் பரத், எங்களாலே மட்டும் நீ இப்படி இருக்கல டா, இயல்பிலேயே உன் குணத்திற்கு எந்த தப்பான காரியத்துக்கும் நீ போயிருக்க மாட்ட டா... சும்மா எதையாவது இப்போ பேசிட்டு இருக்காத.. அடுத்தது என்னன்னு யோசிக்கற வழியை பாரு.” என்றான் அவ்யுக்த்.


“டேய், என் நல்ல குணத்தை வெளில கொண்டு வந்தது நீங்க தான் டா, குடும்பத்தில் இருந்து அன்பு கிடைக்காம எத்தனை பேர் இது மாதிரி ஆகியிருக்காங்கன்னு தான் உனக்கும் தெரியுமே அவ்யுக்த்...”


“நீ ட்ரக்அடிக்ட் கிட்டயும், டெரரிஸ்ட்... இல்லைனா இது மாதிரி ஏதாவது தவறான செயல்கள் புரியும் யார் கிட்டயாவது சர்வே எடுத்து பாரு டா, இவங்கள்ல முக்கால்வாசி பேர் கிட்டேயிருந்து கிடைக்கிற பதில், குடும்பத்தின் புறக்கணிப்பு, அன்பு கிடைக்காதது என்ற இந்த மாதிரி பதில்கள் தான் முடிவுல கிடைக்கும் டா அவ்யுக்த்.. இதை நீ மறுக்க மாட்டன்னு நினைக்கிறேன்.”


“எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே...அது நல்லவராவதும் தீயவராவதும் நல்ல வளர்ப்பினிலே” என்று பாடினான் பரத்.


“அவ்யுக்த் இந்த பாட்டு வரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்டா, எனக்கு உங்களாலே நல்ல வளர்ப்பு கிடைத்தது... எல்லாருக்கும் இந்த அவ்யுக்த் கிடைப்பானா?” என்றபடியே அவனை ஆரத்தழுவிக்கொண்டான் பரத்.


இருவரும் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் நடந்துக்கொண்டிருந்தனர்.


“டேய், பரத் நீ சொல்லறது எல்லாம் சரி டா, பட் இப்போ நீ உன்னை பத்தி மட்டுமே யோசிக்க கூடாது டா, நளினாவை பத்தியும் யோசி டா, கொஞ்ச நேரம் அமைதியா நீயே யோசிச்சு பாரு, உனக்கே புரியும் டா.” என்றான் அவ்யுக்த்.


“பரத், நளினா அப்பாக்கு “குடும்பம்” என்கிற அமைப்பு முக்கியமா படுது டா, அது நியாயமும் கூட... அவர் உங்களுக்குள்ள என்ன பிரச்சினைன்னு தெரிஞ்சிக்க விரும்பலை... அதை அவர் பெரிசாவும் எடுத்துக்கலை... இதுவே எவ்வளவு பெரிய விஷயம்ன்னு உன்னால புரிஞ்சிக்க முடியுதா பரத்..”


“கல்யாணம் பண்ணி போற இடத்துல நம் பெண் சந்தோஷமா இருக்கனும்ன்னு தான் பெண்ணை பெற்ற எல்லாருமே விரும்புவாங்க.... அதே மாதிரி தான் நளினா அப்பாவும் நினைச்சிருக்கார்.. இன்பாக்ட் அவர் உங்க குடும்பத்துல ஏற்கனவே பிரச்சினை இருக்கிறது தெரிஞ்சும் அதை பெரிசு பண்ணாம... என்ன பிரச்சினைன்னு உன்னை போட்டு தோண்டி துருவாம... உன்னை பெற்றவர்களின் ப்லசிங்க்சும் உங்க வாழ்க்கைக்கு வேணும்னு நினைக்கிறார் பரத்... இதுல எனக்கு தப்பு இருக்கிற மாதிரி தெரியல டா.”


“அதே மாதிரி, நான் நளினா மேலயும் தப்பு சொல்லமாட்டேன் டா பரத், நளினா போன்ற பெண்கள் எல்லாம் வளரும் போதே அவர்களுக்கு குடும்பம் என்ற அமைப்பு எப்படிப்பட்டதுன்னு சொல்லி சொல்லியே தான் வளர்க்கப்படுகிறார்கள்... நளினாவும் அப்படி தான் வளர்க்கப்பட்டிருப்பாள். தன்னோட கல்யாணத்துக்கு தன்னை பெற்றவர்களின் ஆசீயோடு உன்னை பெற்றவர்களின் ஆசியையும் அவள் எதிர்ப்பார்ப்பதும் தவறில்லை பரத்.


“இதே நளினா அப்பா உங்க காதலுக்கே எதிர்ப்பு தெரிவித்திருந்தால் நான் அவர்களை எதிர்த்து உங்களுக்கு கல்யாணம் செய்து வைத்திருப்பேன்.. பட் அவர் எதிர்பார்ப்பது உன்னை பெற்றவர்களின் ஆசி தன் பெண்ணுக்கு கிடைக்கவேண்டும் என்பதே.”


“இதை நீ சரியா புரிஞ்சுக்கணும் டா... உன்னை அவங்க ஹர்ட் பண்ணனும்ன்னு நினைக்கலை டா.. இந்த விஷயத்தாலே உனக்கும் நளினாவுக்கும் இடையே எப்போதுமே எந்த பிரச்சினையுமே வரகூடாதுன்னு தான் நான் இதையே திருப்பி திருப்பி சொல்லிட்டு இருக்கேன்.”


“இந்த பக்கம் உன் பாமிலிய எடுத்துக்கோ இன்னும் எவ்ளோ நாளுக்கு தான் நீங்க எல்லாரும் இப்படி இருக்க போறீங்க? ஒருவேளை நளினா சொல்ற மாதிரி அவங்களும் பண்ணின தப்பை பீல் பண்ணிட்டு இருக்கலாம் இல்ல..” என்று அவ்யுக்த் சொல்லிக்கொண்டிருக்கும்போது “ஒன் மினிட் அவ்யுக்த்” என்றான் பரத்.

அவ்யுக்த் தன் பேச்சை நிறுத்தி “என்ன?” என்பது போல் பரத்தை ஏறிட்டான்.


“நான் பேசியும் அவங்க என்கிட்ட சரியா பேசலன்னா? அப்போ எங்க கல்யாணத்துக்கு வழி என்ன அவ்யுக்த்? நளினா அப்பா இதை ஏத்துப்பார்ன்னு என்ன நிச்சயம்? ஒருவேளை அவர் ஏத்துக்கலைன்னா நான் நளினாவை மறந்துடனும்மா? என்று கேட்கும்போதே பரத்திற்கு தொண்டை அடைத்தது.


“டேய், நிறுத்து டா உங்க வீட்டுலேர்ந்து யாரும் வரலைனாலும் நாங்க இருக்கோம் டா.. உன் கல்யாணத்தை ஜாம் ஜாமென்னு சூப்பரா பண்ணி வைப்போம் டா.. நளினா அப்பாவும் புரிஞ்சுப்பார்ன்னு தோணுது டா.. பட் இது எல்லாமே உன் பாமிலி கிட்ட நீ பேசினதுக்கு அப்புறம் தான் டா.. நீ முதல்ல பேசி பாரு டா.. எனக்கென்னமோ அவங்க ஒத்துப்பாங்கன்னு தான் தோணுது டா.”


“ப்ளீஸ் எங்களுக்காக நீ போன் பண்ணு டா” என்று சொல்லிவிட்டு அவனை லேசாக அணைத்தான் அவ்யுக்த்.


பரத் சிறிது நேரம் அமைதியாகவே இருக்க அந்த மௌனத்தை தனக்கு பதிலாகக்கொண்டு, “சரிடா பரத் நீ பேசிட்டு எனக்கு விஷயம் சொல்லு.. இப்போ நான் வீட்டுக்கு கிளம்பறேன்” என்றவாறே தன் காரை நோக்கி செல்ல ஆயத்தமானான் அவ்யுக்த்.


“ம்ம் இருடா” என்று அவன் கையை பிடித்திழுத்து நிற்க வைத்தான் பரத்.


“நான் இப்பவே உன் கண்ணு முன்னாடியே பேசறேன் அதை நீயும் கேளு” என்றபடியே தன்னுடைய போனில் அப்பா எண்ணிற்கு அழைத்துவிட்டு பின் ஸ்பீக்கரை ஆன் செய்தான் பரத்.


அந்தப்பக்கம் ரிங் போனதுமே பரத்தின் முகம் மாறியது, இதை கவனித்த அவ்யுக்த் ஆறுதலாக பரத்தின் கையை பிடித்து தடவிக்கொடுத்தான்.


சில ரிங் சென்ற பிறகு போனை எடுத்த பரத்தின் அம்மா “பரத், நீயாவே எங்களை கால் பண்ணியா? நம்ப முடியலைப்பா.. உடம்பு சௌக்கியமா இருக்க இல்ல?” என்றாள்.


தன் அம்மா தன்னிடம் இவ்வளவு உரிமையாய் பேசவும் சற்றே அதிர்ந்தான்.

கண்களை மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு பின் அம்மாவிடம் பேச ஆரம்பித்தான்.


“ம்ம் நான் நல்லா தான் இருக்கேன் உங்க கிட்ட முக்கியமான விஷயம் பேசணும் அதான் இப்போ கால் செஞ்சேன்” என்றான் பரத்.


“சரி சொல்லுப்பா என்ன விஷயம்?” என்றாள் தொண்டை அடைக்க.


அம்மாவின் குரலில் இருந்த அழுகை அவன் கண்ணிலும் எட்டிபார்த்தது. “சொல்றேன் வீட்டுல வேற யாரும் இல்லையா?” என்று நிறுத்தினான் பரத்.


“அப்பா இங்க தான் பரத் இருக்கிறார் ஒரு நிமிஷம் அவரிடம் கொடுக்கிறேன்.”


“சொல்லுப்பா பரத் எப்படி இருக்க? ரொம்ப சந்தோஷம் நீயா எங்களுக்கு கால் பண்றது? என்ன விஷயம் பா உன் கல்யாண விஷயமா? என்றார்.


அவர் எடுத்தவுடனே நேராக விஷயத்திற்கு வந்தது அவரின் அனுபவத்தை பரத்திற்கு புரிய வைத்தது. மனதில் “இவ்வளவு அனுபவம் இருந்து என்ன யூஸ், ஜோசியத்தையும் ஜோசியக்காரனை நம்பி என்னை கைவிட்டாரே” என்று அவரை திட்டிக்கொண்டான்.


“ஆமாம் என் கல்யாணத்தை பத்தி பேசத்தான் இப்போ கால் செஞ்சேன்.. ப்ளீஸ் ஸ்பீக்கரை ஆன் செஞ்சுக்கோங்க அவங்களும் கேட்கட்டும்” என்றான் அம்மா அப்பா என்ற வார்த்தைகளை தவிர்த்தபடி.


பரத்தின் அப்பாவும் அம்மாவும் ஒரே குரலில் “சொல்லுப்பா” என்றனர்.


“நான் நளினாவை காதலிக்கிறேன்” என்று ஆரம்பித்து முழுகதையையும் கூறினான் பரத். நாளை நளினாவுக்கு பிறந்தநாள் நாளையே அவளின் அப்பா உங்களை அழைத்து பேசுவார் என்று சொல்லி நிறுத்தினான் பரத்.


“எனக்கு முழு சம்மதம் பரத், நளினா அப்பாவை பேச சொல்லு.. இல்லன்னா நம்பர் கொடு நானே அவங்க கிட்ட பேசறேன்.”


“இல்லை வேண்டாம் அவங்களே பேசுவாங்க” என்ற பரத்திற்கு விஷயம் சொல்லிவிட்ட பின்பு என்ன பேசுவது என்று தெரியவில்லை அதனால் மீண்டும் மௌனத்தையே துணையாக கொண்டான்.


“பரத், எனக்கு ஒரு டென் மினிட்ஸ் தரியா? நான் கொஞ்சம் பேசணும்.” என்றார் பரத்தின் அப்பா.


“ம்ம் சொல்லுங்க” என்றான் பரத்.


“பாரு உன்னால எங்களை அப்பா அம்மா என்று கூப்பிட கூட முடியலை.. இதுலேர்ந்தே தெரியுதுபா நாங்க உன் கிட்ட எவ்வளவு கேவலமா நடந்திருக்கோம்னு.”


“இப்ப கூட எங்களுக்கு புரிஞ்சிருக்குமோ என்னமோ? இல்ல எங்களுக்கு புரியவைக்கத்தான் அந்த ஆண்டவன் இப்படி எல்லாம் பன்றாரோ என்னமோ.” என்று நிறுத்தினார்.


பரத் அவர் சொல்வது எதுவுமே புரியாமல் போனையே பார்த்திருந்தான்.


அவ்யுக்த்க்கு அவர் சொன்னது ஏதோ புரிந்தும் புரியாமலும் இருக்க பரத்தின் கையை தட்டி “என்ன ஆச்சு?” என்று கேட்குமாறு ஜாடை செய்தான்.


பரத் அப்பொழுதும் ஒன்றும் பேசாமலிருக்க பரத்தின் அப்பாவே மறுபடியும் தொடர்ந்தார்.


“உன் அண்ணா எங்களை ஒதுக்குவதின் மூலமா தான் நாங்கள் உன்னை பற்றி புரிந்துக்கொண்டோம். என்னுடைய சொத்துக்கள் எல்லாமே இப்போ உன் அண்ணி பேர்ல தான் இருக்கு, அதான் என்னால உன் சொந்த பிஸ்னஸ்க்கு கூட ஹெல்ப் செய்ய முடியாம போச்சு.."

"இப்போ நாங்க அமெரிக்கால சம்பளம் இல்லா தொழிலாளி போல தான் உன் அண்ணா விட்டுல இருக்கோம். உன் அண்ணாவும் அவன் மனைவிக்கு தெரியாமல் ஏதோ அவனால முடிஞ்ச ஹெல்ப் செய்யறான் பட் அது எல்லாம் வெறும் கண் துடைப்புன்னு எங்களுக்கு புரிஞ்சுடுச்சு.."

"இப்போ எங்களுக்கு ஒரே ஒரு ஆசை தான் பரத், உனக்கும் கல்யாணம் பண்ணி உன் கூட ஒரே ஒரு நாள் இருந்துட்டு ஏதாவது ஹோம்ல சேர தான் ஆசை. இதை பற்றி டிடைலா பேசணும் பா ... அப்போ உன் மனைவியும் அருகே இருக்கணும் அதனால நீங்க எப்போ பிரீயோ அப்போ பேசலாம் பரத்” என்று நிறுத்தி இவ்வளவு நாள் இதை பற்றி பேச நினைத்தும் என்னால பேச முடிந்ததில்லை.. எப்பவும் நீ கேட்ட கேள்விக்கு பதில் ன்னு போனை வைப்பதிலேயே குறியா இருப்ப... அதான் நீயா இன்னிக்கு கால் செஞ்ச உடனே கொஞ்சம் பேசிட்டேன் பரத்.. இன்னும் முழுசா பேசலை அதை உன் மனைவியை வைத்துக்கொண்டே பேசலாம்.. இப்போ நான் வச்சிடறேன் பாய் பரத்” என்று போனை ஆப் செய்தார்.


பரத் ஒன்றும் பேசாமல் அமைதியாய் இருப்பதை கவனித்த அவ்யுக்த் அவனை தொட்டு திருப்பி “பரத், உனக்கு இப்போ சந்தோஷம் தானே? அவங்களே உன் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்க... பட் அவங்க ஏதோ கஷ்டத்துல இருக்காங்க போலிருக்கு, டேய் அதை நாம சரி பண்ணிடலாம் இப்போ சந்தோஷமா இரு டா.” என்றான்.


அவனைப்பார்த்து லேசாக புன்னகைத்த பரத், “ நீ சொல்ற மாதிரியே அவங்க கஷ்டத்தை சரி பண்ணிடலாம் டா.. இப்போ எனக்கு மைன்ட் ப்ரீயா இருக்கு பட் சந்தோஷமா இருக்கான்னு கேட்டா என் கிட்ட பதில் இல்லை டா” என்றான் பரத்.


அவன் கண்ணிலிருந்து வழிந்த நீரை துடைத்து விட்டுக்கொண்டே “டேய், பரத் சியர்அப் டா, பாரு எதுவுமே தீர்க்க முடியாத பிரச்சினை இல்லை.. இதுலேர்ந்து கொஞ்சம் வெளில வா டா.... பாரு நம்ம வியுவர்ஸ் எல்லாருக்கும் இந்த பரத் வேண்டாமாம்... எப்பவும் இருக்கும் நாட்டி அண்ட் லூட்டி பரத் தான் வேணுமாம்” என்றபடியே பரத்தை பார்த்தான் அவ்யுக்த்.


பரத்தின் முகத்தில் லேசாக புன்னகை அரும்பியது. இதை கவனித்த அவ்யுக்த் அவனை முழுமையாக சந்தோஷப்படுத்தும் நோக்கத்தில் “இப்போ நான் சொல்லப்போற விஷயத்தை கேட்டா அவ்ளோ தன நீ எழுந்து குதிக்க ஆரம்பிச்சுடுவ... என்னடா சொல்லவா,வேண்டாமா?..”


“சொல்லுடா” என்றான் பரத்.


“ம்ஹும்..! இப்போ சொல்லமாட்டேன், போய் பேஸ்வாஷ் பண்ணிட்டு வா, நான் போய் காபி கலக்கறேன், ரெண்டுபேரும் காபி குடிச்சுக்கிட்டே பேசலாம்...எழுந்திரு டா.” என்றபடியே பரத்தை கையை பிடித்து உள்ளே அழைத்து சென்றான் அவ்யுக்த்.


அவன் சொன்ன படியே செய்துவிட்டு வந்த பரத் கிச்சனில் இருந்து விசில் சத்தம் கேட்டதும் அவன் முகத்தில் அவனயறியாமலே புன்னகை பூ பூத்தது.



“என்னடா விசில் எல்லாம் பலமா இருக்கு? அப்படி என்ன விஷயம் டா? டேய் இப்போ தான் த நினைவு வருது பர்ஸ்ட் நீ தான போன் பண்ணின.. நீ எதுக்கு கால் பண்ணினன்னே கேட்காம நான் பாட்டுக்கு ஏதேதோ பேசிட்டே இருந்துட்டேன்..” என்றபடியே அவனை ஆவல் பொங்க பார்த்தான் பரத்.


“ஹப்பாடா!!!! நம்ம வியுவர்ஸ் தப்பிச்சாங்க டா, பிரண்ட்ஸ் அவர் பரத் இஸ் கமிங் பக்” ஹா..ஹா..ஹா..!” என்று சிரித்தான் அவ்யுக்த்.


“அவ்யுக்த், நிறுத்துடா இப்போ சொல்லு என்ன விஷயம்?”


“அது.....” என்று ஆரம்பிக்கும் போதே அவ்யுக்தின் முகத்தில் வெட்கத்தின் சாயல் தெரிந்தது.


அவ்யுக்தின் வெட்கத்தை கவனித்த பரத் இப்பொழுது விசிலடிக்க தொடங்கினான்.
“டேய் யாருடா அது உன் மனம் கவர்ந்த பெண்?”


“உனக்கும் தெரிந்தவள் தான்” என்று ஆரம்பித்து தன் தியாவை பற்றி எல்லாவற்றையும் பகிர்ந்துக்கொண்டான், அவ்யுக்த்.


“டேய், பார்த்தியா நான் தான் அன்னிக்கே சொன்னேனே நளின் பிரண்டு உனக்கு ஏத்தவ மாதிரி இருக்கான்னு பாரு இப்போ பலிச்சுடுச்சு... சரி விடு இப்போ என் கிட்ட சஹி போட்டோ இருக்கு பார்க்கிறியா?” என்றான்.


“இல்லைடா வேண்டாம், நாளைக்கு என் காதலை நேராக சொல்லும்போது பார்த்துக்கிறேன்.”


இப்பொழுது மிகவும் சத்தமாக விசிலடித்த பரத், “உனக்கு காதல் பைத்தியம் முத்திடுச்சு.. சரி விடு நீ நாளைக்கே பார்த்துக்கோ.. பட்” என்று நிறுத்தி விட்டு அவ்யுக்த்தை பார்த்தான் பரத்.


“சொல்லுடா” என்றான் அவ்யுக்த்.


“சாஹித்யா அக்செப்ட் பண்ணிக்கலைன்னா நீ வருத்தப்படக்கூடாது.. உனக்கே தெரியும் உன்னை மாதிரியே அவளுக்கும் பார்க்காமலே லவ் வந்திருக்க வாய்ப்பு குறைச்சல் தான்ன்னு.. சஹிக்கு எந்த லவ் அப்பைரும் இதுவரை இல்லைன்னு எனக்கு தெரியும் அதனால நீ கொஞ்சம் கொஞ்சம்மா அவ மனதை கவர தான் முயற்ச்சி செய்யணுமே தவிர மூட்அவுட் ஆகி உட்கார்ந்துக்கிட்டு இருக்க கூடாது.”


“டேய், இது எதுவுமேவாடா நான் யோசிச்சிருக்க மாட்டேன், கண்டிப்பா நான் வருத்தப்படமாட்டேன் டா.. அடுத்து என்னன்னு தான் யோசிப்பேன்... இது உனக்கும் தெரியும்ங்கறது எனக்கு தெரியும் டா பரத்.”


“டேய் இவ்வளவு நேரம் நீ தான எனக்கு அட்வைஸ் பண்ணின அதனால இப்போ நான் ட்ரை பண்ணினா... ரொம்ப தான் அலட்டிக்கற.. நம்ம ரீடர்ஸ் எல்லாம் பரவயில்லையே இந்த பரத்க்கும் ஒரு கெத்து இருக்கு ன்னு பேசுவாங்கன்னு நினைச்சா உனக்கு அது பொறுக்கலியே... “அன்பார்ந்த வாசக பெருமக்களே இந்த கதையின் ஹீரோ அவ்யுக்த் தான் நான் இல்லை மக்களே”.


“போதும்டா, அரட்டை இப்போ நான் கிளம்பறேன் நாளைக்கு பார்க்கலாம்.”


“சரிடா, தேங்க்ஸ் டா அவ்யுக்த்” என்றபடியே அவனை கட்டிக்கொண்டான் பரத்.


“நீ ஒதை தான் வாங்க போற... இப்போ எதுக்கு டா தேங்க்ஸ்? என் கிட்ட அடி வாங்கி ரொம்ப நாளாச்சு இல்ல அதான் உன் உடம்பு ஒதை கேட்குது” என்றபடியே லேசாக அவன் வயிற்றில் குத்தினான் அவ்யுக்த்.


“ஐயோ! அவ்யுக்த் தேங்க்ஸ் சொன்னது நான் இல்லை டா”


“என்னது?”


“அதான் டா நான் அவன் இல்லை.” என்றபடியே சிரித்தான் பரத்.


பரத்தின் சிரிப்பை பார்த்தவாறே அவ்யுக்த் தன் வீட்டிற்கு கிளம்பினான்.
 
Top